இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 16-05-2024

Total Views: 17734

அக்சயா கர்ப்பம் தரித்த தகவலை சந்தியா சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நாளை நடக்க இருக்கும் தொழில்முறை சந்திப்பு குறித்து பேச மோகன்ராம் அழைத்திருக்க அவரிடமும் இந்த நற்செய்தி பகிர்ந்தான் அபிநந்தன்.

அடுத்த நிமிடம் அவர் தன் மனைவியோடு கிளம்பி வந்திருக்க ப்ரதீப் அக்சயா இருவரும் இனம் புரியாத பரவசத்தில் அமர்ந்திருக்க பார்வதி மகளுக்கு குமட்டல் குறைய தேன் எடுத்து வந்து தந்தார். 

அபிலாஷா தன் மகிழ்வை பகிர்ந்தவள் மதிய உணவு பிரியாணியோடு இனிப்பும் செய்கிறேன் என்று அடுக்களையில் புகுந்து கொண்டாள்.

பத்மாவதி மோகன்ராம் தங்கள் வீட்டு வாரிசு வரப்போகும் மகிழ்வில் துள்ளி குதித்தனர். அபிலாஷா சமைத்த உணவை அவளே பரிமாற

“சாப்பிட முடியலை வேண்டாம்” என்று அக்சயா உதட்டை பிதுக்க தாயும் மாமியாரும் சேர்ந்து “இனிமே உன் ஒருத்திக்கு மட்டும் இல்ல இரண்டு உயிருக்கு சாப்பிடனும் ஒழுங்கா சாப்பிடு” என்று அன்பாக தொடங்கி அதட்டலாக முடிக்க அவளோ கட்டியவறையும் தமையனையும் துணைக்கு வருவார்களா என்று பார்த்தாள்.

“அண்ணா வேணாம்…” என்று சிணுங்க

“என்ன அச்சு? இது கரமா ஏதும் இருக்கா? இல்ல வேற ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” என்று அபிநந்தன் வினவ

“சொல்லு அக்ஷூ வேற என்ன வேணும் உனக்கு? சந்தியா அக்ஷூ என்ன மாதிரியான சாப்பாடு எல்லாம் சாப்பிடலாம்?” என்று மருத்துவ உதவியை நாடினான் அவளின் கணவன்.

“டேய் ப்ரதீப் இந்த நேரத்துல வாய் அதிகமா புளிப்பு சுவையை தேடும்னு உன் அம்மா நீ கருவா இருக்கும் போது சொல்லிருக்கா…” என்று முந்திக் கொண்டு சொன்னார் மோகன்ராம்.

“ஐயோ அங்கிள்! இந்த க்ளைமேட்ல மாங்காய் எதுவும் சாப்பிடக் கூடாது சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கு.” என்று சந்தியா மறுக்க அக்சயா முகம் வாடினாள்.

இவர்கள் இப்படி உரையாடல் நிகழ்த்தி கொண்டு இருக்க அபிலாஷாவோ கிச்சனில் இருந்த மாங்காயை கழுவி சுத்தம் செய்து கீற்றாக நறுக்கிய இரண்டு துண்டுகளை கொண்டு வந்து அக்சயா தட்டில் வைத்தவள்

“எதுவுமே அளவா இருந்தா ஆபத்து இல்லனு அம்மா சொல்லுவாங்க சந்தியா… அச்சு நீ இதை கடிச்சிட்டே சாப்பாடு கொஞ்சம் சாப்பிடு. நான் உனக்காக மாங்காய் பச்சடி பண்றேன் அது இனிப்பு புளிப்பு காரம்னு உனக்கு சாப்பிட நல்லா இருக்கும்.” என்று அபிலாஷா சொல்ல

“பாத்தீங்களா சம்பந்தி.. நம்மளை விட அபி சமையல்ல மிஞ்சிட்டா இல்ல?” பார்வதி சிலாகிக்க

“ஆமா பின்ன… உங்க ட்ரைனிங் ஆச்சே பார்வதி… நம்மளை விட அச்சுவை அவளே நல்லா கவனிச்சுப்பா பாருங்க” என்று பத்மாவதி பெருமை கொள்ள

“என்ன ஆன்டி அப்பறம் என் நாத்தனாரை நான்தான் பார்த்துக்கணும்..” அபி சொல்ல மொத்தமாக இவர்கள் அன்பில் மூழ்கி தவித்தாள் அக்சயா.

இத்தனை பேர் சுற்றி இருக்கும் போது தனது அன்பை முழுதாக காட்ட இயலாது தங்கள் அறைக்குள் காட்டிக் கொண்டான் அக்சயாவின் கணவன் ப்ரதீப்.

மேலும் விடுமுறை முடியும் வரை ‘மகளும் மருமகனும் இங்கேயே தங்கட்டும்’ என்று பார்வதியும் நந்தனும் கேட்டுக் கொள்ள “அதுக்கென்ன தாராளமா தங்கட்டும். அச்சுக்கும் இந்த மாதிரி நேரத்துல அம்மா கூட இருக்க தோணும்ல..” என்று பத்மாவதி ஆமோதித்தார்.

ஏற்கனவே தனக்கு திருமணம் முடிந்து ஓராண்டு நெருங்கும் தருவாயில் தங்கள் காதலின் சின்னமாக தன் மணி வயிற்றில் தன்னவனின் சிசு உயிர் கொள்ளாதா என்று ஆழ்மனதில் ஓர் ஏக்கத்தை சுமந்து கொண்டு தான் இருந்தாள் அபிலாஷா.

அக்சயா கருவுற்றது மகிழ்ச்சி என்றாலும் பார்வதியை போலவே உளமார தாயன்போடு அவளை கவனித்துக் கொண்டாலும் அனுதினமும் மெருகேறும் அக்சயாவின் தாய்மையின் சோபை கூட ஒப்பனையற்ற ஒப்பற்ற அழகாகிக் கொண்டு போக தானும் இப்படி ஒரு இன்பத்தில் திளைத்து தன்னவனையும் தன்னவனனை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்ற ஆவல் அபிலாஷா மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.

அபிநந்தனுக்கு கூட இதே எண்ணம் இவளை விட அதிகமாக இருந்தாலும் ஒரு கருவை தாங்க அபிக்கு சக்தி இல்லை என்று சந்தியா சொன்னது நினைவில் வந்து வாட்ட யாரிடமும் அதை பகிர இயலாது மருகிக் கொண்டான் மனதோடு..

காலையில் எழுந்தது முதல் அக்சயாவிற்கு என்ன வேண்டும் அதை எப்படி சமைக்க வேண்டும் என்று பார்வதி வழிகாட்டலோடு பார்த்து பார்த்து சுவையாக சமைப்பாள் அபிலாஷா. 

அக்சயா இங்கு இருந்தவரை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாள் அபிலாஷா. தமையனும் கணவனும் அவளுக்காக பழங்கள் முதல் அவளுக்கு பிடித்த திண்பண்டங்கள் வரை அடுக்கிட தினமும் மாமனாரும் மாமியாரும் வந்து பார்த்து செல்வர்.

அக்சயா விடுமுறை முடிய கல்லூரி இவர்கள் வீட்டை விட ப்ரதீப் வீட்டில் இருந்து அருகில் இருப்பதாலும் அத்தோடு தினமும் அவளை காலையில் அழைத்து சென்று விட்டு மீண்டும் மாலை அழைத்து வர தானே நேரடியாக செல்ல முடிவெடுத்தான் ப்ரதீப். 

ஆனால் அக்சயாவிற்கு அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க இயலாது அத்தோடு அடிக்கடி வாந்தி எடுக்க “காலேஜ் போக வேண்டாம் ப்ரதீப்… வீட்ல இருந்து படிச்சிட்டு வேணும்னா எக்ஸாம் மட்டும் எழுதட்டும்.” என்று பத்மாவதி சொல்ல அதுவே அவனுக்கும் சரியென தோன்ற அதற்கான நடைமுறைகளை கவனித்தான்.

அன்று அக்சயா கருவுற்றிருப்பது அறிந்து கொடைக்கானல் சென்ற போது இவர்கள் விருந்துக்கு சென்ற உறவினர்கள் நால்வர் அவளை காண வந்திருக்க அவர்களை வரவேற்று மகிழ்வாக பேசிக் கொண்டு இருந்தனர் பத்மாவதியும் அக்சயாவும்…

அந்த நேரம் அபிலாஷாவும் பார்வதியும் அக்சயாவை காண இவர்கள் வீட்டிற்கு வர இவர்கள் இடையே பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தார் பத்மாவதி.

வந்தவர்களும் இவர்களும் பேசிக் கொண்டு இருக்க “ஏன் மா உனக்கும் அக்சயாவோட அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி ஒன்னு ரெண்டு வருஷம் இருக்குமா?” சாதாரணமாக கேட்டார் வந்த பெண்மணி

“இல்ல ஆன்டி… லெவன் மந்த்ஸ் தான் ஆகுது..” என்று அபிலாஷா சொல்ல

“ஓ… அப்போ உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லையோ?” இதுவரை இருந்த குரல் கொஞ்சம் மாற சற்றே இழுவையாக கேட்டார் அவர்.

லேசாக புன்னகை செய்த அபிலாஷா “இல்ல ஆன்டி… இதுவரை பேபி பத்தி நாங்க யோசிச்சது இல்லை..” அபிலாஷா சொல்ல 

“என்னது? யோசிக்கலையா?” அதிர்வது போல இன்னொரு பெண்மணி கேட்க

“ஐயோ அப்படி எதுவும் இல்லை ஆன்டி… பட், அச்சு ப்ரெக்னன்ட் ஆன அப்பறம் எனக்கும் கூட அந்த ஆசை எல்லாம் உருவாகுது.. அச்சு டெலிவரி முடியட்டும்…” இயல்பாகவே கூறினாள் அபிலாஷா.

“பத்மா அக்கா.. கல்யாணம் ஆகி அஞ்சாறு மாசத்துல உங்க மருமக கர்ப்பமாகிட்டா… அவளோட நாத்தனார் இன்னும் கரு தரிக்கலை னு சொல்றாளே… எதுவும் பிரச்சினை எதுவும் இருக்கா? எதுக்கும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பார்க்க சொல்லுங்க..” ரகசியம் பேசும் பாவத்தில் சத்தமாகவே பேசினார் வந்தவர்களில் ஒருவர்.

பார்வதி பத்மாவதிக்கு சங்கடத்தை தர ‘ஒருவேளை தனக்கு ஏதாவது குறை இருக்குமோ?’ என்று அபிலாஷா மனதில் சுருக் என்று தைக்க அக்சயாவிற்கு கோபம் வந்தது.

“இதோ பாருங்க… நீங்க பார்க்க வந்தது என் மருமக கரு தரிச்சது தெரிஞ்சு பார்க்க வந்தீங்க சந்தோஷம்… அதுக்காக அபி பத்தி எதுவும் பேசாதீங்க அவ எனக்கு பொண்ணு மாதிரி.. நல்ல வேளை ப்ரதீப்போ அவங்க அப்பாவோ இங்க இல்ல..” என்று பத்மாவதி அதட்ட

“ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் எதுவுமே இல்லையா? அன்னைக்கு எங்களை விருந்துக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டு ‘எங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருந்தது அவளை ப்ரதீப் கல்யாணம் பண்ணிக்க முடியாது னு சொன்னாரு’ னு என்கிட்டயே‌ முகத்துல அடிச்ச மாதிரி பேசுனீங்க… இன்னைக்கு எங்க அண்ணியை குறை சொல்லி பேசுறீங்க…

உங்களுக்கு தெரியுமா எங்க அண்ணிக்கு குறை இருக்குனு நீங்க என்ன டாக்டரா? என் அண்ணாவும் அண்ணியும் இதுவரை எனக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து எல்லாமே பண்ணுவாங்க… அவங்களுக்கு கல்யாணம் ஆனாலும் இதுவரை எங்களை பத்தி மட்டும் தான் யோசிச்சாங்களே தவிர அவங்க வாழ்க்கை னு எதையும் பார்த்துட்டு போகலை…

ஏதோ அன்னைக்கு என் மனசு கஷ்டப் படுற மாதிரி பேசுனாலும் அத்தைக்கு நீங்க நெருங்கின சொந்தம்னு தான் இவ்வளவு நேரம் பொறுமையா பேசிட்டு இருந்தா என் அண்ணியை நீங்க எப்படி அப்படி பேசலாம்?” என்று அக்சயா குரலுயர்த்த

“அச்சு… இந்த நேரத்துல இப்படி கத்தி பேசக்கூடாது.. எமோஷனல் ஆகாதே” என்று அடக்கியது அபிலாஷா தான்..

பத்மாவதி கூட ஊருக்கு சென்ற போது இவர்கள் பேசியது எதையுமே அக்சயா சொல்லாமல் விட்டிருக்க அவர்களை கோபமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

“இதோ பாருங்க இனிமே என் அண்ணா அண்ணியை ஏதாவது பேசினா நான் என் அத்தைக்காக கூட அமைதியா இருக்க மாட்டேன்.” என்று இன்னுமே கோபம் குறையாமல் அக்சயா பேச வந்தவர்கள் அப்படியே கிளம்பி விட

“ஏன் அச்சு இப்படி கோப படுற… அவங்க சொன்னா அது உண்மையாகிடுமா? அபியும் கூட கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவா… அமைதியா இரு இந்த மாதிரி நேரத்துல நீ சத்தமா பேசுனா குழந்தையை அது பாதிக்கும்.” என்று பார்வதி கோபமாக இருந்த மகளையும் குழப்பமாக இருந்த மருமகளையும் ஒரே நேரத்தில் அமைதி படுத்தினார்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post