இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 16-05-2024

Total Views: 6805

அத்தியாயம் 12

"தாங்கள் பிரபுவின் மனதினை மாற்றுவீர்கள் என்று நம்பினேன் சனீஸ்வரா. என்னை ஏமாற்றி விட்டீர்கள். இதுதான் சனீஸ்வரனுக்கு அழகா" தனக்குப் பின்புறத்தில் கேட்ட சித்திரகுப்தனின் குரலில் சாதாரணமாக திரும்பியவன்,

"சித்திரகுப்தா! இயமனது விருப்பு வெறுப்பில் நம்மால் எப்படி தலையிட முடியும். இதில் நாம் சற்று தள்ளியிருத்தலே நலம்" என்றான்.

"இல்லை சனீஸ்வரா. தாங்கள் புரியாமல் பேசுகின்றீர்கள். இதில் பாதிக்கப்படப் போவது பிரபுதான். சாபத்தின் பிடியில் அவர் சிக்குண்டுத் தவிக்கையில் அவரை விட வேதனைப் படப் போவது நான் தான்"

"அவளின் உயிர் பறித்தாலும் பாதிக்கப்படுவது உன் பிரபு தான். இதை உன்னால் மறுக்க முடியுமா"

"சனீஸ்வரா"

"உண்மை சித்திரகுப்தா. அவளில்லை என்றால் அவன் இல்லை"

"தாங்கள் தமையனுக்காக பார்க்கின்றீர்கள். ஆகவே அவரின் செயல்பாடுகளை சரியென்கிறீர்கள்"

"அது சரிதான் சித்திரகுப்தா. மும்மூர்த்திகளும் சரி, தேவலோகத்தில் வாழும் ஏனைய தேவர்களும் சரி அவர்களுக்கான இணையை தேர்ந்தெடுத்து அவர்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிலருக்கு ஏக மனைவிகள் வேறு. இதிலெல்லாம் யாரின் தலையீடாவது இருக்கின்றதா? அதது அவர்களது தனிப்பட்ட விஷயங்கள். அதில் நாம் ஊடே செல்வது சரியெல்ல. கடமை தவறிய இயமனுக்கு ஈசனே எழுந்து வந்து தண்டனை தருவார். அதற்கு முன் எதையும் செய்ய இயமன் நம்மை அனுமதிக்க மாட்டான். இயமன் இங்கு வரும் வரை எமலோகத்தினை பார்த்துக் கொள் சித்திரகுப்தா. நான் வருகிறேன்" சனீஸ்வரன் சென்றுவிட அவனது பார்வை மட்டும் சித்திரகுப்தன் மீது ஆழப் பதிந்து போனது. அதன் விளைவு அவன் அதன்பிறகு நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது.

இதற்கு மேல் பொறுக்க இயலாது என முடிவெடுத்த சித்திரகுப்தன் நேராக கைலாயத்திற்கே சென்றான். வாசலில் நின்றிருந்த நந்தியிடம் "சர்வேஸ்வரனை பார்க்க வேண்டும் நந்திகேஸ்வரா! அனுமதி தாருங்கள்" என்று அவன் வேண்ட,

"எம்பெருமான் தவத்தில் இருக்கிறார் சித்திரகுப்தா. எவருக்கும் அனுமதி இல்லை" நந்தி மறுத்துச் சொன்னான்.

"மிகவும் அவசரம் நந்திகேஸ்வரா"

"தவத்தில் இருக்கும் எம்பெருமானை எழுப்பினால் என்ன நேரும் என்று அறிந்தும் இப்படிக் கூறுகிறாயே! செல் சித்திரகுப்தா.. தற்போது அனுமதி நிச்சயம் இல்லை"

"பிரபு பெரும் தவறு செய்து கொண்டிருக்கின்றார் நந்திதேவா. அதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆதலால் இறைவனிடம் நான் முறையிட வேண்டும்"

"அதை தடுத்து நிறுத்த வேண்டுமென நினைத்து தவத்தினை களைத்தால் பெரும் பிரளயம் நேரும். அறிவாயா!"

"இப்போது என்னதான் செய்வது நந்திதேவா"

"காத்தலுக்கென இருக்கும் தெய்வம் பரந்தாமனை நேரில் சந்தித்து உன் சிக்கலை தெரிவி சித்திரகுப்தா" என்று சொல்லவும் வைகுண்டம் நோக்கி அவன் செல்லத் தொடங்கினான். 

---------------------------

அந்த சாளரத்தின் அருகே சென்று இயமன் தொண்டையை செறும, "அந்தகா" என்றாள் அவள்.

"உன் அத்தை மகனுடன் எப்போது திருமணம். அழைப்பு எமக்கு உண்டா?" என்ன முயன்றும் அவனால் சினத்தினை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அது அவனது வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"அந்தகா! ஏன் இப்படி பேசுற?"

"வேறெவ்வாறு பேசுவது மனதினை என்னிடம் தந்துவிட்டு அவனை மணம் புரிய யோசித்தவளுடன்"

"யோசிச்சேன் உண்மை தான். அதுக்காக உடனே அவனை கல்யாணம் பண்ணிட்டாங்களா?"

"உன் அத்தை வந்து கூறவில்லை என்றால் திருமணம் நடந்திருக்கும். இல்லை என்று மறுத்துப் பொய் கூறாதே அதெனக்குப் பிடிக்காது" பொய் பேசினால் பிடிக்காது என்று கூறியவன் அவளிடம் தானும் அதையேத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தே போனான்.

"கோபப்பட்டு பேசாதே அந்தகா"

"சினத்தை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு தான் பேசிக் கொண்டிருக்கிறேன் அஞ்சனா"

"அந்தகா! யார் நீ?" திடுமென அவள் கேட்ட கேள்வியில் புருவங்கள் சுருங்க, என்ன? என்ன கேட்கிறாய்?" என்றான்.

"கேட்ட கேள்வி புரியலையா. இல்லை புரியாதமாதிரி திரும்பக் கேட்குறயா?"

"யார் நீ என்று கேட்பதன் அர்த்தம் தெரிந்துதான் நீ கேட்கிறாயா?"

"ஆமா, பதில் சொல்லு"

"நான் ஏற்கனவே பதில் சொல்லவிட்டேன்"

"கந்தர்வன்னு சொன்ன"

"ஆம். அதுவே உண்மை"

"கந்தர்வன். அப்படின்னா நீ மனுஷன் இல்லை. சரிதானா"

"அதையும் நான் தெளிவாக சொன்னதாகத்தான் நினைக்கிறேன். இதையெல்லாம் பற்றிய விசாரிப்புகள் தற்சமயம் ஏன்? விளங்கவில்லை எனக்கு"

"எனக்கும் தான் எதுவுமே புரிய மாட்டேங்குது" அவள் சோர்வுடன் சொல்ல இயமன் மனதுக்குள் அபாய மணி ஒலித்தது.

"என்ன சொல்ல விழைகிறாய் அஞ்சனா"

"கந்தவர்னு சொல்லுற. அந்தகன்னு சொன்ன. என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லுற. இது சரிவருமா?"

"சரி வரக் கூடாதென்பது உன் விருப்பம் போல் தெரிகிறது அஞ்சனா"

"இப்படி பேசிட்டு இருந்தா எனக்கும் கோபம் வரும் அந்தகா"

"எதற்கு நான் மெய் சொல்வதாலா. ம்ம் வரத்தான் செய்யும்"

"எனக்கு உன்னைப் பத்தி என்னத் தெரியும். சொல்லு. நீ எங்களை மாதிரி கிடையாது. உன்னோட உலகம் வேற. எங்களோடது வேற. அப்படி இருக்கும் போது நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற. இதுக்கு உண்மையை சொல்லு. மத்ததை அப்பறமா பேசிக்கலாம்"

"இவ்வினாக்கள் எல்லாம் நான் சம்மதமா என்று கேட்ட மறுகணம் கேட்டிருக்க வேண்டும். இப்போது கேட்கிறாய்"

"கேட்டதுக்கு பதில் சொல்லு அந்தகா. உனக்கும் எனக்கும் எப்படி சரி வரும். நீ மரணமில்லாத வாழ்வு வாழ்றவன். நான் அப்படி இல்லை"

"நான் சாதாரண மானுடனாகத்தானே இருக்கின்றேன். இனியும் அவ்வாறேதான் இருப்பேன் அஞ்சனா. என் மீதான ஐயம் தேவையே இல்லை. மரணமில்லா பெருவாழ்வு எனக்கானது என்றால் அவ்வாழ்வில் நீயும் தான் உடன் இருப்பாய். உன்னை நீங்கி நான் ஒரு கணமும் இருக்க மாட்டேன். இருவரது ஆயுட் காலமும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டது"

"சத்தியமாகவா"

"நான் வணங்கும் ஈசன் மீது சத்தியம்" சத்தியம் செய்து விட்டான் இயமன். அதுவும் ஈசனின் மீதே. இனி அவன் முடிவினை எவராலும் மாற்ற இயலாது. அவன் நிச்சயம் அஞ்சனாவை மனம் செய்வான். ஆனால் அதற்காக அவன் அனைத்தையும் இழக்க வேண்டுமே.. அதை எங்கனம் தாங்குவான்.

"இதெப்படி சாத்தியம்" இன்னும் நம்பிக்கை வரவில்லை போல அஞ்சனாவிற்கு.

"இந்த அந்தகனுக்கு அனைத்தும் சாத்தியமே. நான் நினைத்தால் அதை செய்து முடிக்காமல் விட மாட்டேன் அஞ்சனா. அப்படியே பழக்கப்பட்டவன் நான்"

"உன் பேச்சுல இருக்குற திடத்தை விட உன் கண்ணுல தெரியுற அந்த காதலை நான் நம்புறேன்"

"நம்புவது இருக்கட்டும். நீ திருமணத்திற்கு சம்மதம் சொல்லுவது போல் மௌனமாக இருந்தாயே. அதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் நீ பேச்சின் போக்கினை திசை மாற்றிவிட்டாய்"

"அந்தகா! எங்களோட வாழ்க்கை முறை ரொம்ப வித்தியாசமானது. இங்க பாசம் பந்தம் இதுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்கையே. என் ஐயாவோட ஆசை திருவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. இப்போ அவர் இல்லை. இருந்திருந்தால் கல்யாண விஷயம் பேசப் போகும் போது என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருப்பார்தான். அப்பக் கூட நான் அவரோட பேச்சை மீறி வேண்டாம்னு சொல்லப் போறதில்லை. இதுதான் நான். அப்படியிருக்கும் போது இப்போ ஐயா இல்லை. ஆனால் ஆசை இன்னும் அப்படியே தான் இருக்கு அந்தகா. அந்த ஆசையை ஐயா பேரைச் சொல்லி முன் வச்சா என்னால தட்ட முடியாது. அதான் அமைதியாய் இருந்தேன்"

"எனில் அந்தகனின் நிலை?"

"என் அமைதியை நீ சரியா புரிஞ்சிருந்தால் இந்த கேள்விகளும் கோபமும் உனக்கு வந்திருக்கவே வந்திருக்காது"

"அப்படி என்றால் என்னைத் தவிர உம்மால் வேறு எவரையும் திருமணம் செய்துக் கொள்ள இயலாது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா?"

அவளிடம் மீண்டும் அமைதி..

"இம்மௌனத்தினையும் நான் சம்மதமாக சரியாக மொழி பெயர்த்துக் கொள்கிறேன் அஞ்சனா"

"திருகிட்ட பேசணும் அந்தகா"

"அவன் நிச்சயம் ஏக குளறுபடி செய்வான்"

"இல்ல, நான் சொன்னா கேட்பாங்க"

"நீ என்ன சொன்னாலும் கேட்பான். இந்த விஷயத்தினை யார் சொன்னாலும் கேட்க மாட்டான்"

"அவங்க உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதுக்கு அப்பறமும் எப்படி கல்யாணம் பண்ண சரின்னு சொல்லுறாங்க"

வேறெதுக்கு எனக்கு இடையே நந்தியாய் குறுக்கிடுவதற்கு தான் மனதுக்குள்ளயே நினைத்தவன் வெளியே சொல்லவில்லை. 

"அமைதியாய் இருக்காத அந்தகா"

"எனக்கும் மனம் உண்டு"

"ம்ம் வயிறும் இருக்குன்னு எற்கனவே சொன்னயே"

"அப்படிச் சொல்லியும் நீ என்னை விட்டுவிலக தயாராக இருக்கின்றாய். இதில் நான் என்ன சொல்ல"

"கோச்சுக்காத அந்தகா. ஐயாவைப் பத்தியே திரு சொன்னதும் நான் கொஞ்சம் தடுமாறிட்டேன்"

இப்போது இயமன், திருவின் மீது அவளுக்கு காதல் இல்லை. ஆனால் அவளின் தந்தையின் மீது அதீத பாசம் இருக்கிறது. அந்த பாசத்தினை குறுக்கே கொண்டு வந்து நிறுத்தினால் அவள் சம்மதம் சொல்வாள் என்பது திருவின் எண்ணம். அது நடக்கவும் செய்யும். அதைப் போல் அவளுக்கு இயமன் மீது அதீத வெறுப்பிருக்கிறது. தான் இயமன் என்பதை அறிந்தால் அவள் நிச்சயம் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாள். அதற்குள் அவளை மனம் செய்து கொள்ள வேண்டும். திருமணல்மேடு கோவிலுக்கு அவளை அழைத்துச் செல்வதாக அவளின் அத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அக்கோவில் வைத்து அவளை என்னுடனே இருக்குமாறு செய்து விடுகின்றேன் என்று பலவிதமாக யோசித்துக் கொண்டிருக்க, "அந்தகா! என்ன யோசனை" என்றாள் அவள். 

"ஒன்றும் இல்லை"

"அந்தகா! எனக்கு ஓர் ஆசை"

"எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி வைக்க சித்தமாக இருக்கின்றேன் அஞ்சனா"

"நீ என்ன நடந்தாலும் என்கூடவே இருக்கணும் எப்பவும். விட்டுட்டு போயிட மாட்டயே"

இதென்னடா.. இவள் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறாள் என்ற சிந்தனை வந்த போதும் அவனும் "நான் எப்போதும் உன்னை விட்டு விலகவே மாட்டேன் அஞ்சனா. நீயும் அதுபோல் நடந்துக் கொள்வயா?" என்றான்.

"நிச்சயமா என் உயிர் இருக்குற வரைக்கும் நான் உன்கூடவே தான் இருப்பேன்"

"இது போதும் அஞ்சனா. மனதிற்கு நிறைவாக இருக்கிறது. வெளியே பனிக்காற்று வீசுகிறது. சாளரத்தின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொள்"

"வேண்டாம் பேசலாம்"

"நானும் உள்ளே வருகிறேன்"

"அப்போச் சரி" என்று அவள் கதவுகளை மூடிக் கொள்ள அவன் உள்ளே வந்திருந்தான்.

இயமன் என்ற பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்கியவள் அவன் மீதே காதல் கொண்டிருக்கிறாள்‌ அவன் என்று அறியாமலே. கந்தர்வன் என்று சொன்னவன் மீது காதல் அவளுக்கு எப்படி சாத்தியம்.. அது இயமன் கொண்ட உண்மைக் காதலால் சாத்தியமானது. அவன் மனிதர்களை போல் சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்தும் அவள் அவன் கண்களின் வசீயத்தால் விழுந்தாள். அந்தளவிற்கு அவனது கண்களில் அவள் மீதான மையல் தெரிந்தது. இப்போதும் இந்த பந்தம் எதை நோக்கின பயணம் என்பது அவளுக்குத் தெரியாது. தெரிந்தவனோ எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் இருக்கின்றான். இவர்களை நிச்சயம் பிரித்தே ஆவேன் என்ற எண்ணத்தில் சித்திரகுப்தன் இருக்கின்றான். எவரின் எண்ணம் ஈடேறும் என்பது ஈசன் மட்டுமே அறிந்த ஒன்று. 

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post