இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 16-05-2024

Total Views: 7897

அத்தியாயம் - 13

நந்தியின் ஆலோசனையின் பேரில் விஷ்ணுவை சந்திக்க சித்திரகுப்தன் புறப்பட்டிருக்க ஐராவதத்தின் மீது அமர்ந்து மேலோகத்தினை வலம் வந்துக் கொண்டிருந்த இந்திரன் கண்களில் தட்டுப்பட்டான். 

"சித்திரகுப்தா! எங்கு சென்று கொண்டிருக்கிறாய். அதுவும் இல்லாது என்ன உன் வதனம் வெகுவாக சஞ்சலப்பட்டு இருக்கின்றது. என்ன துயரம் உன்னைப் போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்"

"இந்திரா நான் தற்சமயம் நாராயணனை பார்க்கச் செல்கின்றேன்"

"எமலோகத்தினை விட்டு இங்கும் அங்கும் அசைய மறுப்பவன் அல்லலா நீ. இப்போது பரந்தாமனை பார்க்கும் அளவிற்கு என்ன நேர்ந்தது?"

"முதலில் நான் பெருமாளை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு இதைப்பற்றி நாம் பேசலாம்" அவசரமாக பேசினான் அவன்.

"உன் சிக்கலை இந்திரனிடம் சொல் சித்திரகுப்தா!" நாரதரினின் வருகையால் இருவரும் அவரை வணங்கி நின்றார்கள்.

"நாரதரே! நான் நாராயணனிடம்.." சித்திரகுப்தன் மறுக்க,"அவ்வளவு தூரம் ஏன்? இந்திரன் தேவர்களுக்குத் தலைவன். அவன் சொல்வதை உம் பிரபு ஏற்றுக் கொள்வான்" என்றான் நாரதன்.

"எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை நாரதரே. நான் வைகுண்டம் செல்கின்றேன் என்னை விடுங்கள்"

"நம்பிக்கை இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது இந்திரனை உதாசீனம் செய்வது போலாகிவிட்டது. அதில் சினந்த இந்திரன் "என்னால் இயலாத காரியம் என்ற ஒன்று இல்லை சித்திரகுப்தா. என்ன விடயம் என்று மட்டும் சொல். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" கோபமாக உரைக்க, "அதுதான் இந்திரனே கூறிவிட்டானே. உன் சிக்கல் என்னவென்று உரைப்பாய்" நாரதரும் எடுத்துக் கொடுக்க, "எம் பிரபுவுக்கு ஒரு பெண்ணின் மீது விருப்பம் இந்திரா" என்றான் இவன்.

பெண்ணா! இந்திரன் உடனே கிளர்ந்தான். இம்முறையும் நாரதரின் கண்களில் அதே மர்மப் புன்னகை. அதை சித்திரகுப்தனிடம் காட்டாது மறைத்துக் கொண்டான். 

"ஆம்! இந்திரா.. அவள் மீது அதீத மையல் அவனுக்கு. அவளுக்காகவே அவனும் எமலோகத்தினை விட்டு பூலோகத்தினை இருப்பிடமாக்கியாருக்கிறான்" நாரதனும் அவன் பங்குக்கு எடுத்துச் சொன்னான்.

அப்படியெனில் அந்த பெண் அதிரூப சுந்தரியாக இருப்பாளோ. அதனால்தான் இந்த இயமன் அவள் பின்னே மெய்மறந்து சுற்றித் திரிகிறானோ. நாமும் அந்த சுந்தரியை பார்க்க வேண்டுமே அந்த கணமே அவன் நினைத்துக் கொண்டான்.

சித்திரகுப்தன் இந்திரனின் மனதில் ஓடுவதை அறியாது அவன் பாட்டுக்கு நடந்த நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே செல்ல இந்திரன் முகம் வெகு பிரகாசமானது. என்ன தான் தேவலோகம் முழுக்க அதிரூப சுந்தரிகளாக இருந்தாலும் பூலோகத்தில் வாழும் பெண்ணின் அழகிற்கு முன் தோற்றுத்தான் போய்விடுகிறார்கள். அப்படியென்றால் அந்த பெண்ணினை நாம் சந்திக்க வேண்டும் என்ற முடிவோடு "சித்திரகுப்தா! கவலை வேண்டாம். இயமனை திருத்தி அந்த பெண்ணின் பக்கம் பார்வையைத் திருப்பாது பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இனி என்னது. நீ எமலோகம் சென்று உன் வேலையினை பார். நான் இப்போதே பூலோகம் சென்று பார்க்கிறேன்" அவன் உடனே ஐராவதத்தினை திருப்ப அந்த வெள்ளை யானையும் பூலோகத்தினை நோக்கி தன் பயணத்தினை தொடங்கியது. 

செல்லும் வழியெங்கும் இந்திரன் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. கடமை தவறாத இயமனே அவள் அழகில் மயங்கி அவள் அருகேயே இருக்கின்றான் என்றால் அவள் எப்படிப்பட்ட பேரழகியாய் இருப்பாள். அடடா இந்திரா! நினைக்கையிலே சோமபானம் அருந்தியதைப் போல பரவசமாக இருக்கின்றதே.. அவனது எண்ண ஓட்டம் நொடியில் எங்கெல்லாமோ பயணித்துவிட்டது. 

ஒருவழியாக திருக்கடையூரும் வந்துவிட அவ்வூரின் மையத்தில் இந்திரன் இறங்கிக் கொள்ள ஐராவதம் அங்கிருந்து மறைந்து போனது. எங்கே அந்த சுந்தரி.. தேடிக் கொண்டே அவ்வூரின் வீதிகளில் வலம் வந்தான் இந்திரன்‌. 

அப்போதுதான் அந்த மருத்துவமனையில் இருந்து அஞ்சனா சிவகாமி லட்சுமியுடன் வெளியேறிக் கொண்டிருந்தாள். இதுதானே அவள்! பார்த்த மறுநிமிடம் இந்திரன் திகைத்து நின்றுவிட்டான்.

அவள் அழகு அவனை ஈர்த்தது. இமைக்காத கண்களைக் கொண்டவன் என்பதால் இன்னும் வசதியாகிப் போனது இந்திரனுக்கு. அடடா! சுந்தரியே தான். இப்படிப்பட்ட அழகி இயமனுக்கா. கூடாது இவள் இனி எனக்குத்தான் சொந்தம். இவளை என்வசமாக்கி கொள்ள வேண்டும். இவள் இருக்க வேண்டிய இடம் எனது தேவலோகம் இந்திரனின் நினைப்பினை

"நினைப்பதெல்லாம் நடக்காது தேவேந்திரா" இயமன் குரல் தடுத்து நிறுத்தியது.

"யாரது?" ரசனை தடைபட்ட எரிச்சலில் திரும்பினான்.

"அடடா என்னை மறந்துவிட்டாயா இந்திரா"

"இயமனா.."

"நினைவு திரும்பி விட்டதா என்ன விஷயம் இந்திரா. வெகுதூரம் வந்திருக்கின்றாய். என்னைத் தேடியா?"

"சித்திரகுப்தன் உன்னைப் பற்றிச் சொன்னான். அதுதான் நீ செய்வது தவறு என்று சொல்லிவிட்டு உன்னை மேலோகம் அழைத்துச் செல்லலாம் என்று வந்தேன்" பேசியவனின் பார்வை மொத்தமும் அஞ்சனா மீதே இருந்தது.

"நான் செய்வது தவறு என்றுவிட்டு நீயும் தவறிழைக்கின்றாயே" உறுமினான் இயமன்.

"நானென்ன தவறிழைத்தேன்"

"என் வாழ்க்கையில் தலை நுழைத்து தவறு செய்கின்றாயே இந்திரா அதைச் சொன்னேன்"

"நமக்கு இருக்கும் பணிச்சுமையில் பெண்கள் பின் செல்வது எல்லாம் சரிவருமா சொல் இயமா"

"அதை யார் சொல்வது என்ற விவஸ்தை வேண்டாம்" இயமன் சிரிக்க இந்திரனுக்கு அவமானமாகிவிட்டது.

"இயமா.. சினப்படுத்திப் பார்க்காதே. இதனால் வரும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்"

"நானென்ன இல்லாததையா சொல்லிவிட்டேன் இந்திரா. உன் வரலாற்றை பார்த்தால்..." இயமன் ஆரம்பிக்கும் முன் "இயமா.." என்று கோபத்தோடு கத்தினான் இந்திரன்.

"அட இந்திரனுக்கு சினம் வந்துவிட்டது. போ இந்திரா. இதையெல்லாம் உன் உடன்பிறந்தவர்களிடம் காட்டு. என்னிடம் வேண்டாம்"

"ஆணவத்தில் ஆடாதே இயமா. நான் நினைத்தால் உன்னை இல்லாமல் ஆக்கிவிடுவேன்"

"நினைப்பதற்கே நீ இருக்க மாட்டாய். நீ ஏன் இங்க வந்தாயென அறிவேன் இந்திரா. வேண்டாம். அவ்வெண்ணத்தினை அழித்துவிடு. அவள் மீது உன் பார்வை பட்டால் அப்படியே எரித்து சாம்பலாக்கிவிடுவேன். ஜாக்கிரதை. அமிர்தமே அருந்தியவனாகினும் உன் கழுத்தை நோக்கி நான் பாசக்கயிறு வீசினால் அதன் பிடியில் இருந்து உன்னால் தப்ப இயலாது. அஞ்சனா என்னவள். புரிகிறதா! அழுத்தமாக உன் மனதில் பதிய வைத்துக் கொண்டு வந்தவழியே சென்றுவிடு" அனலாய் அவன் பேசி முடிக்க இந்திரன் சினத்தினை வெகுவாய்க் கட்டுப்படுத்தி அப்படியே அங்கிருந்து புறப்பட்டான்.

"சித்திர குப்தா!" எமலோகமே அந்த குரலில் நடுங்கிப் போய்விட்டது. கையில் வைத்திருந்த பிரம்மசுவடியை தவறவிட்டு "பிரபு" என்று எழுந்து நின்றான் அவன்.

"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில். எல்லோரிடமும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதுதான் உன் வேலையா? உனக்கென இருக்கும் கடமைகளை நிறைவேற்றாமல் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் என் மீது பயம் போய்விட்டதா? இல்லை, நான் தண்டனை தரமாட்டேன் என்ற எண்ணமா? நான் உன்னிடம் பலமுறை என் தரப்பு நியாயத்தை தெளிவாக விளக்கி விட்டேன். ஆயினும் நீ நானும் அவனும் சேரக்கூடாது என்பதில் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய். இதில் இந்திரனிடமே சென்று இதைப்பற்றி உரைத்திருக்கிறாய் என்றால் உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும். அவன் உடனே வந்து அஞ்சனாவை தவறாக பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனைப் பற்றி தெரிந்து இருந்தும் அவனிடம் ஏன் அஞ்சனாவை பற்றி கூறினாய்? சொல். நீ ஈசனிடம் இதுபற்றி கூறியிருந்தால் கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். உரைத்தது அந்த இந்திரனிடம். அவனின் மோகப் பார்வை அவள் மீது படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு‌. அங்கே அவளின் அத்தை மகன் காதலாய் பார்ப்பதையே தாங்கிக் கொள்ள இயலாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். நீ இவனை வேறு அங்க வரவழைத்திருக்கிறாய் உன்னை" என்றவன் பாசக்கயிறு அவன் கழுத்தினை இறுக்கி வீசியதில் அவன் எண்ணெய் கொப்பரையில் சென்று விழுந்தான்.

"பிரபு.. ஐயோ.. எரிகிறது" என்றவன் அலற அலற இயமன் அப்படியே நின்றிருந்தான். அவனிடம் சிறிதும் இளக்கம் இல்லை. இந்திரன் பார்த்த பார்வையில் எரிந்துக் கொண்டிருந்த தேகம் முழுக்க இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது. அவனது எரிச்சல் அடங்கும் வரை சித்திர குப்தன் கொப்பரைக்குள் கிடந்தான். 

வெளியே தூக்கிப் போட்டவனின் கழுத்தில் கால் வைத்தவன் "இனி எனக்கெதிராய் ஏதாவது செய்ய நினைத்தால் எதுவும் மிஞ்சாது சித்திரகுப்தா... இதுவே என் இறுதி எச்சரிக்கை" என்று உரைத்துவிட்டு சென்றுவிட எரிச்சலோடு எழுந்தமர்ந்தான் அவன்.

இந்திரலோகத்தில்,

கடுங்கோபத்துடன் இந்திரன் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் முன்னே இருந்த அவனது சகோதரர்கள் அனைவரும் இந்திரனின் சினத்திற்கான காரணம் புரியாமல் வாட்டத்துடன் நின்றிருக்க நாரத முனி அப்போது அங்கு வர அதன்பின்னரே இந்திரன் கொபம் மறந்து எழுந்து நின்றான்‌.

"என்ன இந்திரா போன வேலை என்ன ஆனது. இயமன் நீ சொன்னதும் கேட்டுக் கொண்டானா? எமலோகம் திரும்பி விட்டானா"

"நாரதரே! சினத்தினை அதிகப்படுத்தும் வேலையை செய்ய வேண்டியே தாங்கள் இவ்விடம் வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். ஆக என்னை சோதிக்காது சென்றுவிடுங்கள்"

"இயமன் கண் தெரியாது காதல் மயக்கத்தில் ஆடுகிறான். யார் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. இதன் பலனை மேலோகம் முழுவதும் அனுபவிக்க வேண்டும் இந்திரா. இதனை உன்னால் தடுத்து நிறுத்த முடியும் என்றுதான் உன்னிடம் சித்திர குப்தனை சொல்லச் சொன்னேன். ஆனால் நீயோ இயமனுக்குப் பயந்து ஓடி வந்துவிட்டாயே"

"என்ன? எனக்குப் பயமா. அதுவும் இயமனிடமா.. நான் தேவர்களின் தலைவன்"

"அவன் மரணத்திற்கே தலைவன்"

"நாரதரே! அவனுடன் என்னை ஒப்பிட்டு கலகம் மூட்டவா இங்கு வந்தீர்கள்"

"கலகம் மூட்ட வரவில்லை. நிதர்சனத்தினை சொல்ல வந்தேன் அவ்வளவுதான். இயமன் காதலின் வலிமை தெரியாமல் நீ அவனோடு மோதினால் தோற்றுப் போவாய்"

"அவ்வளவு வலிமை வாய்ந்ததா இயமனின் காதல். எனில் நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்"

"அது உன் விருப்பம். எச்சரிக்கை செய்வது என் கடமை"

"தங்களின் கடமை முடிந்தது நாரதரே. செல்லலாம்"

"உனக்கொரு ஆலோசனை வழங்கலாம் என்று வந்தேன். நீ என்னவென்றால் என்னை இப்படி விரட்டுகிறாயே"

"என்ன ஆலோசனை"

"இயமன் அந்த பொண்ணை விட்டு விலக நீ அவனோடு மோதத் தேவையில்லை. வேறு ஒரு வழி இருக்கின்றது"

"என்ன வழி" அவனிடம் தென்பட்டது அதீத ஆர்வம்.

'இயமன் விரும்பும் பெண்ணிற்கு இயமன் மீது பயங்கர வெறுப்பு அவளது தந்தை இறந்ததற்கு காரணம் இயமன் என்பதால். இயமன் அதைப் பற்றி தெரிந்தே அவளிடம் கந்தர்வன் என்று சொல்லி அறிமுகம் ஆகியிருக்கின்றான். அந்த அஞ்சனாவிற்கு நிதர்சனம் எதுவென்று தெளிவாக விளக்கிவிட்டால் அவளே இயமனை வெறுத்து ஒதுக்கிவிடுவாள். இயமனும் எமலோகம் திரும்பிவிடுவான்"

"உண்மையாகவா நாரதரே"

"உண்மைதான். என்ன அவளை காதல் மயக்கம் பிடித்திருக்கிறது. அந்த மயக்கத்தினை மீறி அவள் உண்மையை உணர்ந்து கொள்வாளா என்பது சந்தேகம்தான்"

"அதை உணர வைப்பது என் வேலை நாரதரே. தங்களின் ஆலோசனைக்கு நன்றி" இவ்வளவு நேரமும் இருந்த வாட்டம், சினம் அதெல்லாம் மாறி இந்திரன் பெயருக்கு ஏற்றார்போல் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கிவிட்டான்.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post