இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 16-05-2024

Total Views: 25317

இதயம் 18

     அன்று விடுமுறை நாள், கூடவே புகழ்பெற்ற சதுரங்க ஆட்டக்காரர் ஒருவரின் பிறந்தநாளும் கூட. அவரால் தமிழகம் அடைந்த பெருமையைப் போற்றும் வகையில், அவர் பிறந்தநாள் அன்று மினியின் கல்லூரிக்கு அருகில் இருக்கும் செஸ் க்ளப் ஒன்று சதுரங்கப் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. அதற்கான அழைப்புகள் பொதுவாக பலருக்கும் சென்று இருந்ததால் தங்கள் கல்லூரியின் சார்பாக மினியோடு சேர்த்து இன்னும் சிலரையும் அழைத்து வந்திருந்தான் சாணக்கியன்.

     “ஹலோ பகீரதன் உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு“ என்ற குரலைக் கேட்டு சாணக்கியனின் கால்கள் பசை போட்டு ஒட்டியது போல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திணறியது. நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தன் இயற்பெயரைக் கேட்டதும் உடல் விறைக்க தன்னால் திரும்பிப் பார்த்தான் சாணக்கியன். அவன் விளையாடிய காலகட்டத்தில் அவனோடு சேர்ந்து விளையாடியவனும், சொந்த வாழ்வில் சாணக்கியன் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்தவனாகிய ஆனந்தன் நின்றிருந்தான்.

     எதிர் நிற்பவன் யாரென்று தெரிந்து கொள்ள முடியாமல் போனால் கூட, அவனைப் பார்த்ததும் சாணக்கியன் கொடுக்கும் முகபாவனைகளைக் கொண்டு அவனோடு பேச இவனுக்கு சற்றும் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்த மினி, “மாஸ்டர் நம்மைக் கூப்பிடுறாங்க“ என்று விழாக்கமிட்டியாளர்கள் பக்கம் அவனை அழைத்துச் சென்றாள்.

     பகீரதன் என்று ஆனந்தன் இரண்டு முறை அழைத்தது எல்லாம் காற்றோடு தான் போனது. எரிமலை வெடித்து வெளிவரும் சூடான லாவாவைப் போல் சாணக்கியனின் மனதில் புதைந்து கிடந்த கடந்தகால கொடூர நினைவுகள் வெளிவரப் பார்க்க, அவன் முகத்தை வைத்தே அகம் கணித்த மினி, “மாஸ்டர் எனக்குக் கொஞ்சம் பதற்றமா இருக்கு, போட்டிக்கு முன்னாடி என்னோட ஒரு முறை விளையாடுறீங்களா“ எனக்கேட்டு தன்னவன் கவனம் மொத்தத்தையும் விளையாட்டில் கொண்டுவரப் பார்த்தாள்.

     “உனக்கா பயம், கொஞ்சம் இடம் கொடுத்தா என்னையே ஏறி மிதிச்சுப் போயிடுவ“ தன்னோடு நினைத்துக்கொண்டவனுக்கும் மனமாற்றம் தேவைப்பட,  தன்னைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மினியோடு விளையாட ஆரம்பித்தான். 

     சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கி முடித்த பின் வெள்ளை காய் சாணக்கியன் வசம் இருந்ததால், முதல் நகர்வாக e4 அவன் சாத்தியப்படுத்த, மினி கருப்பு சிப்பாயை நகர்த்த முற்பட்ட போது அவள் தோளில் ஒரு கரம் மென்மையாய் பதிந்தது. அவளோடு சேர்ந்து சாணக்கியனும் நிமிர்ந்து பார்க்க எதிரே ஆனந்தன் நின்றிருந்தான்.

     “நானும் சாணக்கியனும் விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த விளையாட்டை உங்களுக்குப் பதில் நான் தொடரலாமா?“ வேண்டாம் என்று சொல்ல முடியாத வண்ணம் சுற்றி ஆள்களை வைத்துக்கொண்டு அவன் கேட்ட விதத்தில் வேறு வழியின்றி எழுந்து இடம் கொடுத்தாள் மினி.

     சாணக்கியன் ஆனந்தனின் முகத்தை ஒருமுறை கூடப் பார்க்கவில்லை. கவனம் மொத்தத்தையும் விளையாட்டில் வைத்திருக்க அவனால் நன்றாக விளையாட முடிந்தது. சமபலம் கொண்ட வீரர்கள் விளையாடும் அந்தப் போட்டியை அதிசுவாரசியமாகக் கண்டுகளித்தனர் சாணக்கியனோடு வந்த மாணவர்கள் அனைவரும். 

     “கடைசியா 2019 இல் உங்களோடு விளையாடியது. இத்தனை வருஷம் போனாலும் உங்கிகிட்ட இருக்கும் அந்த விளையாட்டுத் திறன் மாறவே இல்லை சாணக்கியன்“ ஆனந்தன் வேண்டுமென்று சொன்னானோ இல்லை தற்செயலாகச் சொன்னானோ அவன் மட்டுமே அறிவான்.

     அந்த வருடத்தைக் கேட்ட பிறகு சாணக்கியனின் கவனம் அலைபாய ஆரம்பித்ததன் பலன் வேகவேகமாக தன் சொந்தக் காய்களை இழக்க ஆரம்பித்து இருந்தான். மினிக்கு சாணக்கியனை நினைத்து உள்ளுக்குள் பயம் வர ஆரம்பித்தது. அவள் பயம் கொண்டது நியாயமே என்று சொல்லாமல் சொல்வது போல் சாணக்கியனின் கரங்கள் மெல்லமாக நடுங்க ஆரம்பிக்க, அவன் கண்கள் அவனுடைய வெள்ளை ராணியிலே நிலைத்திருந்தது. 

     வாழை நாரில் கட்டப்பட்டிருந்த வைக்கோல் பிரி எத்தனை நேரம் தாக்குப்பிடிக்கும். சாணக்கியன் போட்டு வைத்திருந்த பலவீனமான தடையை உடைத்து அவன் மனம் 2019 காலகட்டத்திற்குச் சென்றது.

     சதுரங்க உலகப்கோப்பை விளையாடுவதற்காக ரஷ்யா சென்றிருந்த நேரத்தில் காதலி நிலாவைத் தனியே அறையில் விட்டுவிட்டு, தன் நண்பர்களுடன் வெளியே சென்றவன் மனம் ஏனோ நிலையில்லாமல் இருக்க திரும்பி அறைக்கு வந்தான்.

     அவன் வரும் போது அந்த ஹோட்டலில் இருந்த அவனைத் தெரிந்த யாவரும் அவனை ஒருமாதிரிப் பார்த்ததோடு தங்களின் அருகே இருக்கும் மற்றவர்களிடம் ஏதோ கிசுகிசுப்பதைக் கவனித்தும் கவனிக்காதது போல் காட்டிக்கொண்டு தன்னறை வந்தவன் கதவைத் திறப்பதற்காக கை வைத்த நேரம், கசப்பான கடந்தகாலத்தில் இருந்து யாரோ அவனை கட்டாயப்படுத்தி நிகழ்காலத்திற்கு இழுத்து வந்ததை உணர்ந்தான்.

     முழு சுயநினைவுக்கு வந்தவன் பார்த்தது சதுரங்கப் பலகையில் மினி போட்டு உடைத்திருந்த கண்ணாடித் தம்ளரைத் தான். “என்ன மினி“ சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்த விளையாட்டு இப்படி பாதியில் கலைக்கப்பட்ட கடுப்பில் மினியின் நண்பன் கத்த, “என்னை மன்னிச்சிடுங்க“ என்று தோள்களைக் குலுக்கியவள் கண்ணாடித் துண்டுகள் யாரின் காலிலும் குத்திவிடாமல் அதை அப்புறப்படுத்த ஆட்களை அழைத்து வரச் சென்றாள்.

     கண் முன் இருக்கும் சாணக்கியனையும், நடக்க இருந்த பெரிய விபரீதத்தைத் தடுத்துவிட்ட திருப்தியில் நெஞ்சில் கரம் வைத்து பெருமூச்சுவிட்டவாறு அவர்களைத் தாண்டிச் செல்லும் மினியையும் கவனித்த ஆனந்தனுக்கு இதழ்களுக்குள் யாரும் கண்டுபிடிக்க முடியாத  சின்னதாய் புன்னகை வந்து போனது.

     அதன் பிறகு மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் ஆரம்பிக்க நேரம் இறக்கை கட்டிப் பறந்தது. மதிய உணவு இடைவெளியில் சாணக்கியனை மீண்டும் சந்தித்தான் ஆனந்தன். 

     “என்ன வேணும் ஆனந்தன்“ எரிச்சலாகக் கேட்டான் ஆனந்தன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் கடந்தகாலம் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை என்னும் கடுப்பை அவனிடமே காட்டினான்.

     அது புரிந்தது போல், “கடந்த காலத்தில் நடந்ததை யாராலும் மாற்ற முடியாது சாணக்கியன். ஆனால் கடக்க முடியும்.  அதுக்கு நீங்க பெரிதா எதுவும் செய்யத் தேவையில்லை. உங்களைத் தேடி வரும் சந்தோஷம் உங்களைச் சேர அனுமதித்தா போதும்“ என்றவனின் பார்வை முழுக்க மினியின் மீதே நிலைத்திருந்தது.

     “ஆனந்தன் ப்ளீஸ் அவ“ என்று ஏதோ சொல்ல வந்த சாணக்கியனைத் தடுத்த ஆனந்தன் தானே தொடர்ந்தான். “எனக்கு உங்க மேலும் உங்க விளையாட்டின் மீதும் அளவுக்கு அதிகமான மரியாதை இருக்கு. அதே சமயத்தில் அன்னைக்கு ரஷ்யாவில் நடந்த சம்பவத்தால் கொஞ்சம் பரிதாபமும் இருக்கு. எத்தனை பெரிய கொடூரனுக்கும் அந்த மாதிரி நடந்திருக்கக் கூடாது“ என்று நிறுத்த உச்சுக்கொட்டியபடி திரும்பினான் சாணக்கியன்.

     “கடவுள் தன் பிள்ளைகள் யாரையும் துணையில்லாமல் படைக்க மாட்டார். மனித ஜென்மம் இருக்கே கடவுளின் படைப்பில் உணர்வு ரீதியில் மிகவும் பலவீனமான பிறவி. அவங்களால் தனியே வாழ முடியாது. அவன் நேசிக்க, அவனால் நேசிக்கப்பட ஒரு உறவு அவனுக்கு கட்டாயம் தேவை. தனிமை மெல்லக் கொல்லும் நஞ்சு மாதிரி. ஆரம்பத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கும், அப்புறம் வெறுமையைக் கொடுக்கும் கடைசியா மனஅழுத்தத்தைக் கொடுக்கும். 

     இப்ப தனியா இருப்பது நல்லா இருக்கலாம். ஆனால் காலங்கள் கடந்து உடம்பில் இருக்கும் இரத்தம் மொத்தமும் சுண்டிப்போகும் நேரம் தனிமை அதன் கொடூரத்தைக் காட்ட ஆரம்பிக்கும். இதையெல்லாம் சொல்வதற்கு நீ யாருன்னு கேட்கலாம். உங்க மேல் மரியாதை வைத்திருக்கும் நபர் என்பதோடு நானுமே கூட உங்க நிலையைக் கடந்து வந்திருக்கேன் என்பதால் என்னைப் போன்ற ஒரு ஜீவன் என்று நானே இந்த உரிமையை எடுத்துக்கிட்டேன்“ என்றவனை அதிர்ந்து போய் பார்த்தான் சாணக்கியன். 

     அதைக் கண்டுகொள்ளாமல், “இன்னைக்கு இந்த இடத்துக்கு நீங்க வரப்போறீங்கன்னு கேள்விப்பட்டு வைத்திலிங்கம் சார் கிட்ட இருந்து உங்க நம்பரை வாங்கி நேத்து கூப்பிட்டேன். உங்களுக்குப் பதில் உங்க அப்பா பேசினார். 

     நலம் விசாரிப்பிற்குப் பிறகு உங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விசாரித்தேன். அப்ப தான் அவர் மினியைப் பற்றியும் அவரோட ஏக்கங்களைப் பற்றியும் சொன்னார். அவரோட மனத்தாங்கலுக்காக தான் உங்ககிட்ட பேச நினைச்சேன். ஆனால் மினியைப் பார்த்த பிறகு அந்தப் பொண்ணு உங்கமேல் வைச்சிருக்கும் மரியாதை மற்றும் அன்புக்காக இப்ப பேசிக்கிட்டு இருக்கேன்.

     இரண்டாம் காதலா இப்படி ஒரு துணை கிடைப்பது எல்லாம் கடவுள் நேரே வந்து கொடுக்கும் வரத்தை விட மேலானது. மினியை நீங்க தொலைச்சீங்க என்றால் உங்களை விட துரதிஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. பார்த்து கொஞ்சம் நல்ல முடிவா எடுங்க“ என்றுவிட்டு கிளம்பினான் ஆனந்தன். 

     மதியம் ஆரம்பித்து மாலை வரை சாணக்கியனின் கண்கன் மினியைத் தவிர வேறு யாரையும் எதையும் கவனிக்கவில்லை. ஆனால் மினியின் துரதிஷ்டம் அவள் அவனின் பார்வையைக் கவனிக்காமல் முழுக்க முழுக்க அவள் மற்றும் நண்பர்களில் விளையாட்டில் கவனமாக இருந்துவிட்டாள்.

     சாணக்கியனின் பார்வையில் இருந்தது ஈர்ப்போ, விருப்பமோ, காதலோ இல்லை காமமோ அல்ல, வெறும் ஆர்வம் மட்டுமே. தன்னை விட பத்து வயதுக்கும் மேல் சின்னவள். வயதிற்கு ஏற்ற அழகுடன், வயதை மீறிய பக்குவம் மற்றும் அறிவைக் கொண்டிருப்பவள். 

     அவள் எப்படி அவளுக்கானவனாகத் தன்னைத் தேர்ந்தெடுத்தாள். அந்த அளவு தான் உயர்வானவனா, இல்லை அதிமேதாவிகள் ஏதாவது ஒரு விஷயத்தில் அதிமுட்டாள் தனமான முடிவை எடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே. அதைப் போல் மினியின் முட்டாள் தனமான தேர்வாக தான் அமைந்து போனோமா? 

     அவளுக்கு அப்படி என்னிடம் என்ன பிடித்திருக்கும் என்று பலவிதமாக யோசித்தான். அந்த யோசனை அன்று போட்டிகள் எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகும் கூடத் தொடர்ந்தது. 

     இரவு நேரத்தில் வந்த பிரியா அவன் கவனம் விளையாட்டில் இல்லாததைக் கவனித்து, “என்ன ஆச்சு சார்“ என்று இரண்டு முறை  கேட்டு மூன்றாம் முறையாக அவன் கரத்தை தொட அதன்பிறகே அவனுக்கு சுயஉணர்வு வந்தது. ஒரு சின்னப்பெண்ணின் நினைவில் தன்னைத் தொலைத்ததற்காக தன்னையே கடிந்துகொண்டவன் அதன் பிறகு சுதாரிப்பாக நடந்துகொண்டான். 

     ஆனால், இரவின் தனிமையில் ஆனந்தனின் வார்த்தைகள் அவனுக்குள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. இத்தனை வருடங்கள் வீம்பு பிடித்து தனியாக வாழ்ந்ததில் அப்படி என்ன சந்தோஷத்தை அடைந்துவிட்டோம். குறைந்தபட்சம் நிம்மதியாகவாவது இருக்க முடிந்ததா? இல்லையே என்று யோசிக்க ஆரம்பித்தான். 

     இத்தனை வருடங்கள் தன் வீடு, எழிலும் அவனும் சேர்ந்து நடத்தும் அகாடெமி என்று கூண்டுக்கிளி போல் வாழ்ந்து விட்டவன் வெளி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் கண்முன் மற்றவர்கள் வாழும் சந்தோஷமான வாழ்க்கையைப் பார்த்து அவனுக்குள்ளும் ஏக்கம் வர ஆரம்பித்தது.

     அவன் ஒன்றும் அன்பை வெளிக்காட்டத் தெரியாத அரக்கன் இல்லையே. ஒரு காலகட்டம் வரை நிலாவின் மீது அன்பை அடைமழையாகப் பொழிந்தவன் தானே அவன். கடலுக்கு அடியில் பத்திரமாய் பதுங்கி இருக்கும் பொக்கிஷங்களைப் போல் அவனுக்குள் மறைந்து இருக்கும் அன்பைக் கொட்டுவதற்கும், ஊற்று நீர் ஊற ஊற சந்தோஷமாக சேமித்து வைக்கும் கிணற்றைப் போல் தன் மீது காட்டப்படும் அன்பை தன் மனம் என்னும் கேணியில் சேமித்து வைக்கவும் தனக்கென்று ஒருவர் வந்தால் நன்றாக இருக்குமே என்னும் எண்ணம் அன்று இரவு அவனை உறக்கத்தைப் பறித்தது.

     சாணக்கியனின் மனதில் சலனம் ஏற்பட்ட காரணத்தால் அடுத்தடுத்த நாள்களில் கல்லூரியில் வைத்து மினி பார்க்கும் இரசனைப் பார்வை அவனைப் பாதித்தது. இத்தனை வருடங்களாக அவன் தனக்குத் தானே போட்டுக்கொண்ட வலுவான தடைகள் யாவும் அவனுள் முளைத்த சின்ன சலனத்தின் விளைவால் பலமில்லாததாக மாறிப்போனது.

     ஆரோக்கியமான உடலில் நுழைந்த ஒற்றைக் கிருமி பல்கிப்பெருகி உடல் மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போல், சாணக்கியனுள் ஏற்பட்ட சலனம் அவனை ஆட்டிப்படைத்தது. எதெல்லாம் வேண்டாம் என்று பலகாலமாக ஓடி ஒளிந்து கொண்டிருந்தானோ அது எல்லாம் வேண்டும் என்று இப்போது அவன் மனம் அலைபாய ஆரம்பித்தது.

     இப்படியே போனால் தான் நிச்சயமாக மினியின் வசம் விழுந்துவிடுவோம். இப்போது வயதுக் கோளாறு காரணமாக காதல் அது இது என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அவள் முற்றும் முழுதாக தன்னோடு உறவுக்குள் வரும் போது, அவளால் தன்னைச் சமாளிக்க முடியாது என்றே தோன்றியது சாணக்கியனுக்கு. 

     குடும்ப உறவுக்கு தான் இலாயக்கு இல்லாதவன் என்னும் தாழ்வு மனப்பான்மை அவனிடம் அதிகமாக இருந்தது. அதை அவனுள் ஆழமாக விதித்துச் சென்றவள் சாட்சாத் அவனின் நிலா தான். அந்த எண்ணத்தை மீறி மினியை நெருங்க அல்ல நெருங்கலாமா என்று யோசிக்க கூட பயமாக இருந்தது. அலைபாயும் மனதை மறந்து அடுத்தவர்களிடம் இருந்து மறைத்து தன்போக்கில் நாள்களை நகர்த்திக்கொண்டிருந்தான். 

     ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம் பெரும் குறையாகத் தெரியும் அவன் குணங்கள் யாவும் அவனை உண்மையாக நேசிப்பவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     அன்றைய நாள் பாடவேளை முடிந்து, வழக்கம் போல் சாணக்கியனைத் தேடி வந்த மினி அவன் மட்டும் தனியே சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்கும் அழகை இரசித்துக்கொண்டு அந்த அறையின் கதவில் சாய்ந்தவண்ணம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

     வெள்ளை நிற காய்கள் அருகே அமர்ந்திருந்தவன் கருப்பு நிற காய்களைக் கொண்டு தன் சொந்தக் காய்களை அடுத்தடுத்து வெட்டிக்கொண்டிருந்தான். நான்கு சிப்பாய்கள், ஒரு குதிரை, இரண்டு யானை, ஒரு மந்திரி என அவன் பக்கத்தில் இருக்கும் காய்கள் குறைந்து கொண்டே வர எதிர்பக்கம் இருந்த கருப்பு காய்கள் ஒரு சிப்பாயை கூட இழக்காமல் அப்படியே இருந்தன.

     வெள்ளை ராஜா, ராணி, மந்திரி, இரண்டு சிப்பாய்கள் மட்டுமே மிச்சம் இருந்த நேரம் காத்திருந்த வேளை வந்ததாய் கருப்பு காய்களை அவனே எடுத்து வெளியே வைத்தான். 

     ஒரு கட்டத்தில் வெள்ளை ராஜா, கருப்பு ராஜா என இரண்டு ராஜாக்களிடையே வெள்ளை ராணி மட்டும் இருக்க மற்ற காய்கள் அனைத்தையும் அவனே நீக்கியிருந்தான். 

     என்ன செய்கிறான் இவன் என மினி பார்த்துக்கொண்டிருந்த வேளையில், சாணக்கியனின் கரங்கள் போதை மருந்துக்கு அடிமையானவனைப் போல் நடுங்கத் துவங்கியது. 

     கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட அவனின் நினைவுகள் மூளை நரம்புகளை வலிக்க வைக்க, தலையைப் பிடித்து கத்தினான். அதைப் பார்த்த மினிக்கு இதயத்தில் ஊசி குத்தியது போன்ற மெல்லிய வலி. 

     நடுங்கும் வலது கரத்தை இடது கரத்தால் பிடித்துக்கொண்டு தனக்குச் சொந்தமான வெள்ளை ராணியைக் கொண்டு எதிராளியான கருப்பு ராஜாவைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது அவன் உத்தேசம். ஆனால் அவனால் வெள்ளை ராணியை தொடக்கூட முடியவில்லை. கையை அதை நோக்கிக் கொண்டு செல்வதும் திரும்ப எடுப்பதுமாக இருந்தான். 

     எத்தனை நாள் ஓடி ஒளிவது, எப்படியாவது தன் பலவீனத்தைத் தான் வென்றாக வேண்டும் என்பதற்காக ஒருகட்டத்தில் சிரமப்பட்டு வெள்ளை ராணியைத் தொட்டுவிட்டான். ஆனால் அடுத்த நொடி அவன் நினைவுகள் அவனை கனவுலகில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. 

     காதலியைத் தேடி தங்கள் அறைக்குச் சென்றவன் அங்கே  அறைக் கதவைத் திறந்த நேரம், ஷாக் அடித்தது போல் இங்கே நிஜ உலகில் நினைவுக்கு வந்தான். அவனால் அந்த நினைவைத் தொடரவும் முடியவில்லை, முற்றும் முழுதுமாக மறந்து போகவும் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் அவன் பலவீனத்தை வெல்லவும் முடியவில்லை. 

     இயலாமையினால் முளைத்த கோபத்தில் எதிரே இருந்த மரப்பலகையில் கரத்தை அடிக்கப் போக, யாரோ அதைத் பிடித்து தடுத்தார்கள். திரும்பிப் பார்க்க அங்கே மினி நின்றிருந்தாள்.

     


Leave a comment


Comments


Related Post