இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 16-05-2024

Total Views: 24278

இதயம் 19

     சாணக்கியன் அவனுடைய வசத்தில் இல்லாத நேரத்தில் அவன் கரத்தை சதுரங்கப் பலகையை நோக்கி கொண்டு சென்றவள் வெள்ளை ராணிக்குப் பதில் வெள்ளை ராஜாவை அவன் கரத்தால் எடுக்க வைத்தாள். அவன் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்க தண்டிக்க வேண்டியது உங்க ராணியைக் கைப்பற்றிய எதிராளி ராஜாவை இல்லை. கடமையை மறந்து உங்களைத் தனியா தவிக்க விட்டுப் போன உங்களோட சொந்த ராணியைத் தான்“ என்று சொல்லி சாணக்கியனின் வெள்ளை ராஜாவைக் கொண்டு வெள்ளை ராணியை அடித்து வீழ்த்தினாள்.

     “மினி“ என்றவனுக்கு கோடைகால ஆற்றுநீர் போல, வார்த்தைப் பற்றாக்குறை ஏற்பட்டது. வார்த்தைகளுக்குத் தான் பஞ்சமே தவிர அவனின் உணர்வுகளுக்கு அங்கே பஞ்சமே இல்லாமல் இருந்தது. 

     அதைப் புரிந்து கொண்ட மினி அருகே வந்த மினி அவன் முதுகைத் தட்டிக் கொடுக்க, உணர்வு மிகுதியினாலும் அவனுள் உண்டாகி இருக்கும் சலனத்தாலும் தன் முன் நின்றிருந்தவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் அவன்.

     ஆனந்தமாக அதிர்ந்தாள் மினி. இப்படியொரு நிகழ்வை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால் சாணக்கியன் என்று அழைத்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கியது. 

     முதன்முதலாக உணரும் ஆண்வாசம், அதுவும் அவளுக்குப் பிடித்தவனின் வாசம் என்னும் போது அவளையும் அறியாமல் உடல் தூக்கிப்போட்டது. ஆறுதல் தேடி அவளை அணைத்தவன் தான் இறுதியில் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதாகிப் போயிற்று. 

     “விரட்டி விரட்டி வந்த, நான் ஒரு அடி முன்னால் எடுத்து வைச்சா நாலடி பின்னால் போற“ என்றவன் மென்மையிலும் மென்மையாகப் புன்னகைத்தாள். அதில் மினியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவன் திறமை, முசுட்டுத்தனம், அகங்காரம் என அவனின் நல்லது கெட்டது அனைத்தையும் இரசித்தவளுக்கு முதல்முறை மனதார அவன் புன்னகைக்கும் காட்சி காணக்கிடைக்க அதைப் பொக்கிஷம் போல் தன் மனப்பெட்டகத்தில் பாதுகாத்து வைத்தாள்.

     “நான் இப்ப ஓகே நீ வீட்டுக்குப் போ“ என்றவனை இவ்வளவு நேரம் நல்லா தானேடா இருந்த என்பது போல் பார்த்துவிட்டு தன் இல்லம் கிளம்பினாள். அந்த நாளைத் தொட்டு சாணக்கியனின் நடவடிக்கையில் அதிக மாற்றம் தெரிந்தது. 

     முதலாவதாக அவன் முகத்தில் ஒரு பொலிவு தெரிந்தது. அதன்பிறகு அவன் பலகாலமாக தொலைத்திருந்த உற்றாகம் அவனிடம் திரும்பியிருந்தது. மினியின் மீது அல்லாமல் அவள் தன் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தின் மீது ஆர்வம் வந்தது.

     எந்த விதத்தில் தான் அவளை ஈர்த்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவள் இதைக் கவனித்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளியே ஒன்றும் தெரியாதவள் போல் அமைதியாக இருந்துகொண்டாள்.

     மினி சாணக்கியனை இரசிப்பது அந்தக் கல்லூரி முழுக்கத் தெரியும் என்பதால் சாணக்கியன் அவளைக் கவனிப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் கண்களில் பட்டது. “என்ன மினி ஒரு வழியா ரோபோவுக்கு உயிர் வந்திடுச்சு போல“ என்று அனைவரும் அவளைக் கிண்டல் செய்யத் துவங்கி இருந்தார்கள்.

     ஏற்கனவே சாணக்கியனிடம் தெரியும் மாற்றங்களிலே மலர்ந்த பூவாக புன்னகை வாசம் வீசிக்கொண்டிருந்தவள் இப்போது நண்பர்கள் ஏற்றிவிட்டதன் காரணமாக, நிஜத்தில் சாணக்கியனின் மாணவியாக இருந்தவள் கனவுலகில் அவனின் மனைவியாக வாழ ஆரம்பித்து இருந்தாள். 

     அதன் விளைவு முன்னெப்போதும் இல்லாத அளவு அவனைப் பார்க்கும் போது அவளின் தடுமாற்றம் அதிகம் ஆகியது. அந்தத் தடுமாற்றம் அவளுடைய ஆட்டத்திறனைப் பாதிக்கும் நாளும் வந்தது.

     தன் பலவீனத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மினியுடன் சதுரங்கம் விளையாடுவது வழக்கம். அப்படி ஒருநாள் அவனாகச் சென்று அவளை அழைக்க, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி என ஆனந்தமாக வந்து அமர்ந்தாள் அவனுக்கு எதிரே. 

     சாணக்கியனின் கவனம் முழுவதும் சதுரங்கக் காய்களின் மீதே நிலைத்திருக்க அவள் கவனம் முழுக்க முழுக்க அவன் மீது மட்டுமே நிலைத்திருந்தது. விளைவு காய் நகர்த்துதலில் ஒரு திட்டம் இல்லாமல் தன் போக்கில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

     ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணான அவள் விளையாட்டை, தன்னைக் குழப்பிவிட்டு ஏதோ புது வியூகம் அமைக்க நினைக்கிறாள் போல என நினைத்தவனுக்கு அதன்பிறகு தான் அவள் கவனம் விளையாட்டில் இல்லை என்பது தெரியவந்தது.

     “மினி என்ன பண்ற, உன் கவனம் எங்க இருக்கு“ என்க, “உங்க மேல தான் இருக்கு“ பட்டென்று சொல்லிவிட்டாள் அவள். “ஏய் என்ன நேரடியா பேசுற அளவு வந்தாச்சா?“ எகிறினான்.

     “ஆமா இதுக்கு அப்புறமும் எதுக்காக அமைதியாக இருக்கணும்“ தோளைக் குலுக்கினாள் அவள். “எதுக்கு அப்புறமும்“ அவளைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே கேட்க, “அட என்ன பாஸ் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலன்னு சாதிக்கிறீங்க. நீங்க தலைகீழா மாறிப்போன அதிசயம் இந்த காலேஜ் முழுக்க தெரிஞ்சு போச்சே“ என்க, வந்த கோபத்தில் முன்னால் இருந்த சதுரங்கப் பலகையை தூக்கி எறிந்திருந்தான் சாணக்கியன்.

     “சாணக்கியன்“ என்ற அழைப்புடன் அவள் புரியாமல் பார்க்க, “உன் திறமைக்கு மதிப்பு கொடுத்து நீ பண்ற கோமாளித்தனம் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டுப் போனேன். அதுக்காக இவ்வளவு தூரம் வருவன்னு நினைக்கல“ என்றான்.

     “என்ன சொல்றீங்க“ என்றவளுக்கு ஏதோ ஒன்று அவளை விட்டுப் போகும் உணர்வு வர, கண்ணுக்குத் தெரியாத அதைத் தன்னிடம் தக்க வைக்கும் முயற்சியில் துப்பட்டாவை கைகளில் சுற்றிக்கொண்டிருந்தாள்.

     “நான் உன்னைக் கவனிச்சேன் தான். ஆனால் அது நீ நினைக்கிற மாதிரி ஆர்வமான பார்வை இல்லை. ஆராயும் பார்வை உனக்கு சதுரங்கத்தின் மேல எவ்வளவு தூரம் ஆர்வம் இருக்கு. அடுத்தடுத்த நிலைக்கு நீ சரியா வருவியா என்கிற ஆராயும் பார்வை அது“ உண்மை பாதி பொய் மீதியும் கலந்து அவன் சொல்ல, மினிக்கு அழுகை பாதி, கோபம் மீதி என கலவையான உணர்வுகள் வந்தது.

     அவன் தனக்குக் கிடைப்பானா கிடைக்க மாட்டானா என்கிற நிலை தொடர்ந்த வரை எதிர்பார்ப்பு என்பது அதிகம் இல்லாமல் இருந்தது அவளிடத்தில். ஆனால் அவனின் பார்வை தன் மீது விழுந்ததும், சூரிய ஒளிக்கு ஏற்ப அதிக வளர்ச்சி காட்டும் சூரியகாந்தியாய் காதல், ஆசை, எதிர்பார்ப்பு அனைத்தையும் ஒரு சில நாள்களில் வானளவு வளர்த்திருந்தாள் பெண். 

     அது எதுவுமே இனி இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “அப்ப என்னை கடைசி வரை ஏத்துக்கவே மாட்டீங்களா சாணக்கியன். என்னோட காதல் உங்களுக்குப் புரியவேபுரியாதா?“ கண்கலங்கக் கேட்டாள்.

     இதே வார்த்தைகளை அச்சுப்பிசகாமல் நிலா கேட்ட நினைவு வர கோபஅலைகள் பொங்கியது அவனுள். ஆனால் தனக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் குழந்தை மனமும் முகமும் கொண்ட மினியை கோபத்தீயில் பொசுக்க விருப்பம் இல்லாதவனாய், 

     “இதையெல்லாம் நீ பேசல, உன்னோட வயசு பேசுது. இந்த வயசில் இந்த மாதிரியான உணர்வுகள் வந்தால் தான் நீ ஆரோக்கியமா இருக்கன்னு அர்த்தம். இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகிடும். சரியான வயதில் சரியான நபரைப் பார்க்கும் போது உனக்குள் வரும் உணர்வுகள் தான் சரியானதா இருக்கும். வீணா மனசில் கற்பனை ஆசைகளை வளர்த்துக்காதே. அது உனக்கும் நல்லது இல்லை, நீ யார் மேல் ஆசை வைக்கிறியோ அவங்களுக்கும் நல்லது இல்லை“ என்றவன் கிளம்ப நினைக்கையில் அவன் கரம்பற்றித் தடுத்தாள் பெண்.

     “என்ன“ என்று கேட்டுக்கொண்டே தன் கரத்தை விடுவிக்க அவன் முயற்சிக்க அதற்கு அவள் விடவில்லை. சின்னப்பெண்ணின் உடலில் எங்கிருந்து இத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று யோசித்தவனுக்கு அது அவளின் காதலின் பிடிவாதம் என்பது புரியாமல் போனது.

     “மினி விடு, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க“ என்க, பதில் சொல்லாமல் அவனை முறைத்தபடி கலங்கிய கண்களுடன் நின்று இருந்தாள்.  

     அவள் அழுவது பிடிக்காமல், “மினி“ என்று மென்மையாக அழைத்தான். “என்னை ஏன் உங்களுக்குப் பிடிக்கல“ கேட்டவளின் குரலில் ஆதங்கத்தோடு கூடிய ஆத்திரம் இருந்தது. 

     “எனக்கு உன்னை மட்டும் இல்லை யாரையும் என்னைக்கும் பிடிக்காது“ என்றான் தெள்ளத்தெளிவாக. “எதுக்காக இப்படி அடம்பிடிச்சுத் தொலைக்கிற. எனக்கு நீ வேணும் என்பதை விட உனக்கு நான் வேணும் என்பது தான் நிஜம்.  

     என்னைத் தவிர யாராலும் உன்னை உனக்காக காதலிக்க முடியாது. என்னை வேண்டாம் என்று சொன்னா இழப்பு உனக்கு மட்டும் தான். உன்னோட சந்தோஷத்தை முதன்மையா நினைக்கும் என்னை விட்டுட்டா உலகத்தில் உன்னை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. 

     என்னைப் பத்தி யோசிக்காம நாளும் பொழுதும் உன்னை மட்டுமே நினைச்சு, பைத்தியக்காரி மாதிரி உன்னைச் சுத்தி சுத்தி வருவதால் என்னை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்ட இல்ல. நான் இல்லாமப் போனால் ரொம்பக் கஷ்டப்படுவ“ கோபத்தில் மரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுப் பேசியவளை வெறித்துப் பார்த்தான் சாணக்கியன். 

     இந்தச் சம்பவம் நடந்து பத்து நாள்கள் கடந்து போய் இருந்தது. அன்று அழுதுகொண்டே சென்றவள் தான் அதன் பிறகு மினியை அவன் பார்க்கவே இல்லை. முதல் இரண்டு நாள்கள் மினி விளையாடுவதற்கு மட்டும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்தடுத்த நாள்களில் தான் அவள் கல்லூரிக்கு கூட வரவில்லை என்பது புரிந்தது.

     என்னவோ ஏதோ என்று அவன் மனம் படபடத்தது. அவள் இல்லாமல் போவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாளே ஒருவேளை தவறான முடிவு எதுவும் எடுத்து இருப்பாளோ என்கிற பயம் வந்தது. 

     எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தப்பும் தவறுமாக ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருந்தான். இடையில் விளையாடுவதற்காக பிரியாவோடு வெளிமாநிலம் செல்ல வேண்டிய நிர்பந்தம் வந்தது. ஆனால் தான் இருக்கும் நிலைக்கு அவ்வளவு தொலைவு எல்லாம் செல்ல முடியாது என்று அவள் பெற்றோரை உடன் அனுப்பி வைத்தான். அவன் அவனாகவே இல்லை. அவனை உள்ளும் புறமும் ஆட்டிப் படைத்தாள் மினி. 

     தனக்கு என்ன ஆனது என்பதை அவனாக வாயைத் திறந்து கேட்கும் வரை யாரும் சொல்லக்கூடாது என்று மினி சொல்லியிருக்க அதன்படியே அமைதி காத்தனர் அவளின் நண்பர்கள் அனைவரும்.

     பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் மினியின் எண்ணிற்கு தந்தையின் செல்லில் இருந்து அழைத்துப் பார்த்தான். அழைப்பு ஏற்கப்படவில்லை என்கவும் இன்னமும் தான் பயம் அதிகரித்தது அவனுக்கு. 

     பன்னிரண்டாம் நாள் மினி எங்கே என்று அவளின் நண்பர்களிடமே கேட்டுவிட சொல்ல வந்த நண்பனைத் தடுத்த ஒரு பெண், “தெரியாது சார். ஆனால் ஏதோ பெரிய பிரச்சனை என்று தோணுது. கடைசியா அவளைப் பார்த்த அன்னைக்கு அவ முகத்தில் உயிர்ப்பே இல்லை“ வாய் கூசாமல் பொய் சொன்னாள்.

     “எதுக்குடி பொய் சொன்ன“ மினியின் நெருங்கி நண்பன் கோபம் கொள்ள, “இதெல்லாம்  பொண்ணுங்க சைக்காலஜி, இனி பாரு சாணக்கியன் என்கிற வண்டி நேரா மினியோட வீட்டில் போய் தான் நிற்கும்“ என்று சிரித்தாள்.

     அவள் சொன்னது நடந்தது, மினிக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இருக்கும் வரை தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்பதற்காக காலேஜில் இருந்து அவளின் கார்டியன் எண்ணை வாங்கி அழைத்தான்.

     தன் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜீவன் புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் எடுத்தான். “ஹலோ“ என்ற ஒற்றை வார்த்தையில் நண்பனை அடையாளம் கண்டுகொண்டவனுக்கு உடல் முழுவதும் துடித்தது என்று சொல்லலாம்.

    “நான் மினியோட மாஸ்டர் பேசுறேன்“ என்க, அழைப்பு தன் மச்சினிக்காக என்பதைப் புரிந்துகொண்டவன் சமயோஜிதமாகச் செயல்பட்டு தன் மகன் பாரியைப் பேச வைத்தான்.

     “சித்திக்கு உடம்பு சரியில்லை. அவங்க ரூமை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறாங்க“ பிள்ளை மொழி பேசினான் குழந்தை. வதனி வருவது போல் இருக்க பிள்ளையிடம் இருந்து செல்போனை பிடுங்கி அழைப்பைத் துண்டித்து வைத்தான் ஜீவன்.

     அறையை விட்டு வெளியே வர முடியாத அளவு என்ன பிரச்சனையாக இருக்கும் என்கிற யோசனையிலே இரவு உறக்கத்தைத் தொலைத்தான் சாணக்கியன். மினி நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டால் தான் தன்னால் அடுத்த வேலை நிம்மதியாகச் செய்ய முடியும் என்பது உறுதியானது அவனக்கு. 

     விடிந்தவுடன் அவளை நேரில் போய் பார்த்து இந்த மனப் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற முடிவு எடுத்த பிறகு சற்றே நிம்மதியாக உறங்கினான். 

     அடுத்த நாள் விடுமுறை தினம் என்பதால் சற்றே தாமதமாகக்  கிளம்பியவன், கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த ஜீவனின் விலாசத்திற்கு மினியைத் தேடி வந்தான். சற்று நேர தயக்கத்திற்குப் பிறகு அவன் அடித்த காலிங்பெல் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள் வதனி.

 

 


Leave a comment


Comments


Related Post