இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...39 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 16-05-2024

Total Views: 25303

இரவு உணவு தயாரித்து முடித்து அனைத்தையும் மேஜையில் அடுக்கி வைத்து அறைக்குள் நுழைந்தாள் பூச்செண்டு. வழக்கம் போன்று பால்கனி சோபாவில் அமர்ந்து தொலைவை வெறித்திருந்தான் தரணி. தயக்கமாய் சில நொடிகள் அவனது முதுகையே பார்த்தவள் “டி..டிபன் ரெடியாயிடுச்சு…” யாருக்கோ சொல்வதுபோல் அதிராத குரலில் சொல்ல சில நொடிகள் அசைவின்றி அமர்ந்திருந்தவன் பின் வெடுக்கென எழுந்து இறுகிய முகத்துடன் அவளை திரும்பியும் பாராது கடந்து சென்றிருந்தான். செல்லும் அவனையே வலி கொண்டு பார்த்தாள் பூச்செண்டு.


தனக்கான உணவை தானே பரிமாறிக் கொண்டு அவன் உண்ண ஆரம்பித்திருக்க ஆயாசமாய் கண்களை மூடியபடி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். கண்களில் கோடாய் கண்ணீர் வடிந்தது… ஒரு வாரமாக இதே நிலைமைதானே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தும் பேசியும் ஒரு வாரம் ஓடிவிட்டதே… முதலாவது திருமணநாள் இப்படி கோலாகலமாக முடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஒவ்வொன்றையும் ஆசையாக கனவோடு எதிர்பார்த்து இருந்தவன் உதிர்ந்து விழுந்த பலமாடி கட்டிடம் போல் மண் மேடாக சரிந்து போனானே… யாரால்…?? அவளால்தானே… எத்தனை வெறுப்பும் வேதனையும் இருந்தால் முகத்தைக் கூட பார்க்காமல் மௌனச் சிலையாய் மாறி இறுகி இருப்பான்.


தவறு தன் பக்கம் என்பதால் அவன் தரும் மௌன தண்டனைகளை தாங்கொணா துயரத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறாள் பூச்செண்டு. இன்னும் என்ன சொல்லி அவனை சமாதானம் செய்ய முடியும்…? இத்தனை வேதனைகளுக்கு நடுவிலும் அவள் செய்து வைத்த வேலையை தன் குடும்பத்தாரிடமோ அவள் குடும்பத்தாரிடமோ ஏன் தன் உயிர் நண்பன் முகிலிடன் ஒரு சிறு பகிர்தலாகக் கூட வெளியிடவில்லையே… ஒவ்வொரு விஷயத்திலும் அவன் தரம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது… தனது தரத்தை தானே தாழ்த்தி விட்டதாக எண்ணி அவள்தான் புழுங்கி தவிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட நாளும் சரி திருமணம் ஆகி ஓராண்டு முடிந்த அந்த முதல் நாளும் சரி அழுகையும் அந்தகாரமும் சூழ்ந்ததாகவே அவளுக்கு அமைந்துபோனது விதியின் கொடுமையோ…?


ஏழரையை தானே இழுத்து விட்டு விதியை நோவதில் என்ன பயன்…? அன்றைய நாள் இதே படுக்கையில் கண்கள் கலங்கி அவன் அமர்ந்திருந்த கோலம் கண்முன் காட்சியாக விரிந்தது. வாழ்க்கையை வெறுத்து ‘இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போயிடுறேன்’ என்று சொல்லும் அளவிற்கு அவன் மனம் எப்படி எல்லாம் துடித்திருக்க வேண்டும். 


அன்றையநாள் காலையில் விரைவில் வேலையை முடித்து நாள் முழுக்க தன்னவளுடன் கழிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாகத்தான் அலுவலகம் கிளம்பி ஓடி இருந்தான் தரணி. தனது குழுவில் தனக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு ஒரு புது ப்ராஜெக்ட் சம்பந்தமாக சில கீ பாய்ண்ட்ஸ் கொடுக்க வேண்டிய வேலை மட்டுமே அன்றைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே வேலை முடிந்திருக்க நேராக பூச்செண்டின் அழகு நிலையத்திற்கு வண்டியை செலுத்தினான். தனது வேலையை முடித்து அங்கு வந்து அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கும் பெண்ணிற்கு குறிப்புகள் கொடுத்துவிட்டுத்தான் கிளம்புவாள் என்று கருதியவன் அவளை தானே அழைத்துச் சென்று விடலாம் என்று பார்லருக்குள் நுழைந்தான்.


அவன் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே “அக்கா இல்லையா…?” என்றபடி 18 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான்.


“அக்கா மேக்கப் பண்ண வெளியே போயிட்டாங்க… அண்ணா வேணா உள்ளே இருக்கார்…” வேலை செய்யும் பெண் கூறியது அறையின் தடுப்பிற்கு உள்ளே இருந்த மற்றொரு அறையில் அமர்ந்து அங்கிருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவன் காதில் விழ தலையை நீட்டி எட்டிப் பார்த்தவன் “என்னப்பா…? என்ன வேணும்…?” என்றபடியே உள்ளே அழைக்க அவனும் உள்ளே நுழைந்தான்.


தன் கையில் இருந்த ஒரு சிறு பேப்பர் கவரை தரணியிடம் நீட்டிய அந்த இளைஞன் “இதை அக்காகிட்ட கொடுத்துடுங்கண்ணா… இதுல 30 இருக்குன்னு சொல்லிடுங்க…” என்றபடியே மீதி சில்லறைப் பணத்தையும் அவனிடம் நீட்டினான்.


“என்னது இது…?” புருவம் சுருக்கியபடியே கவருக்குள் கைவிட்டுப் பார்க்க அனைத்தும் மாத்திரை அட்டைகள். 


குழப்பமாய் ஒன்றும் புரியாது அந்த இளைஞனிடம் நிமிர்ந்தவன் “இது யாருக்கு கொடுக்கணும்…? நீ ஆள் மாத்தி கொண்டு வந்துட்டியா…” மாத்திரை அட்டையையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடி கேட்டான்.


“பூச்செண்டு அக்காவோட ஹஸ்பண்ட் தானே நீங்க…”


“ஆமா…”


“இது அந்த அக்காவுக்குதான்… மாசா மாசம் நான்தான் இந்த மாத்திரை எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன்… நான் பக்கத்து கட்டிடத்துல ஒர்க் ஷாப்பில் வேலை செய்றேன்… நேத்து நைட்டே வாங்கி வச்சிட்டேன்.. ஆனா ஒரு வேலையா வெளியே போயிட்டேன். வர லேட்டாயிடுச்சு… அதுக்குள்ள அக்கா கிளம்பிட்டாங்க…” அவன் நீண்ட விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க தரணிக்கு தலையே சுற்றுவதுபோல் இருந்தது.‌ மாதாமாதம் மாத்திரை வாங்கி நாள் தவறாமல் சாப்பிடுகிறாளா…? எதற்கு..? என்ன பிரச்சனை…? என்னிடம் சொன்னதே இல்லையே.


“இ..இது எ..என்ன மாத்திரை…?” நீர் வற்றிய குரலுடன் கேட்டான்.


“ஏதோ சத்து மாத்திரைன்னு சொன்னாங்க… ரீனா அக்காவுக்கு தெரிஞ்சவங்களோட மருந்துக் கடையாம்… நான் போனாலே கரெக்ட்டா எடுத்து வச்சு கொடுத்துடுவாங்க…”


“எ..எவ்வளவு நா..நாளா இ..இதை வா..வாங்கி கொடுக்கிற…?” முழுதாக புரிந்து கொள்ள முடியாத தவிப்பும் குழப்புமுமாய் கேட்டான்.


“அஞ்சாறு மாசமா வாங்கி கொடுக்கிறேன்… உங்களுக்கு தெரியாதாண்ணா… அக்கா சொன்னதில்லையா…?” அந்த இளைஞன் கேள்வியாய் பார்க்க “இ..இல்ல ச..சத்து மாத்திரைதானே… இ..இடைல கொஞ்சநாள் சாப்பிடாம இருந்தா… அ..அதான்…” படக்கென சமளித்தவன் அதனை பெற்றுக் கொண்டு அவனை அனுப்பி வைத்தான். நெற்றியை கீறியபடியே அந்த மாத்திரை அட்டையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பின் ஏதோ தோன்றியவனாய் தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்தான்.


“தனுஷ்… நான் இப்போ உன் வாட்ஸ்ஆப்க்கு ஒரு போட்டோ அனுப்புறேன்… என்ன பிராப்ளத்துக்காக சாப்பிடுற மாத்திரைன்னு பார்த்து சொல்லு…” என்றவன் உடனடியாக அதனை தனுஷிற்கு whatsapp அனுப்பினான். தனுஷ் சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன். அடுத்த ஒரே நிமிடத்தில் அழைத்து இருந்தான் தனுஷ்.


“தரணி… நீ அனுப்பிவச்சது கருத்தடை மாத்திரைடா…” அவன் சொன்ன அடுத்த நொடி வானமே இடிந்து தலையில் விழுந்ததுபோல் மொத்தமாய் சிதைந்து போனான் தரணி.


“குழந்தை வேணான்னு தள்ளி போடுறதுக்காக பெண்கள் எடுத்துக்குற மாத்திரை… நியாயமா இதை டாக்டரோட பிரிஸ்கிரிப்ஷனோடதான் சாப்பிடணும்… இது உடம்புக்கு ஒத்துக்காம போயிட்டா வேற சைட் எஃபெக்ட்ஸ் வந்துடும்… ஆமா நீ எதுக்கு கேட்கிற…? குழந்தையை தள்ளிப் போடற பிளான் இருக்கா…? இதெல்லாம் வேணாம்டா… இயற்கைக்கு எப்பவும் தடை போடாதே… அப்புறம் உருகி உருகி எதிர்பார்க்கும்போது கிடைக்காம கூட போயிடும்… இதையெல்லாம் என் சர்வீஸ்ல நிறைய பார்த்திருக்கேன்…” தன் நண்பன்மேல் உள்ள அக்கறையில் அவன் பேசிக்கொண்டே போக சருகாய் உதிர்ந்து விழுந்த நிலையிலும் தன்னை சமாளித்து “இ..இல்லடா… அ..அப்படியெல்லாம் இல்ல… சு..சும்மா தெரிஞ்சுக்கத்தான்… எ..என் பிரண்டு ஒருத்தன் கேட்க சொன்னான்…” உடையும் தருவாயில் இருந்த குரலைச் செருமி சரிசெய்தபடியே பதில் அளித்தான்.


“அவனுக்கும் வேணான்னு சொல்லிடு… இதெல்லாம் தப்பு…” என்றவன் போனை வைத்திருக்க நிலைகுத்திய விழிகளுடன் வெறித்த நிலையில் வெகுநேரம் அமர்ந்திருந்தான் தரணி.


‘எத்தனை பெரிய துரோகம்… நம்பிக்கை துரோகம்… இனிக்க‌ இனிக்க பேசி கொஞ்சி கலவி புரிந்து மகிழ்ந்து மகிழ்ச்சியை கொடுத்து முத்தாடி அவளுள் மூழ்கும் நேரங்களில் எல்லாம் இறுக்கி அணைத்து ஆசையாய் கூடி மாமு என்று ஆர்ப்பரித்து… இப்படி அனைத்திற்கும் பின்னால் இருப்பது இதுதானா…? ஆரம்பம் முதலே குழந்தை வேண்டாம் என்பதில் இவள் திடமாகத்தான் இருந்திருக்கிறாள்… தடுப்பு நடவடிக்கைக்கு நான் உடன்பட மறுத்ததால் அதற்கான வேலையில் இவள் இறங்கி இருக்கிறாள்… இத்தனை மாதங்களாக கரு தங்காமல் போனதற்கு காரணம் இறைவனா இயற்கையோ அல்ல..‌ இவளே… இவள் மட்டுமே… மாதக்கணக்காய் மாத்திரையை எடுத்து என்னிடம் எத்தனை பெரிய ஏமாற்று வேலை செய்திருக்கிறாள்… என் காதலை அன்பை உறவை உணர்வை ஏன் ஆண்மையை கூட ஆழமாய் குழி தோண்டி புதைத்துவிட்டாளே…’


“ஏன்டி…? ஏன் இப்படி பண்ணின…? உன் வேலைக்கு கொடுக்கிற மரியாதைல ஒரு சதவீதம் என்னோட உணர்ச்சிக்கு கொடுத்திருக்கலாமே… காதலை கொட்டி கொட்டி கொடுத்ததுக்கு இதுதான் நீ எனக்கு கொடுத்த பரிசா…? ஒவ்வொரு மாசமும் எதிர்பார்ப்போட இருந்து ஏமாற்றம் வந்தாலும் உன்மேல ஒரு துளி சந்தேகம் வரலையே… உன்னை நம்பினதுக்கு நீ எனக்கு கொடுத்த பரிசு இதுதானா… டாக்டர்கிட்ட செக்கப் கூட்டிட்டு போனேனே அப்பவாவது வாயை திறந்தியா… என் மேல தப்பு இருக்கிற மாதிரி பேசினியே… அழுத்தமாவே இருந்து இந்த உலகத்துக்கு என்னை ஆண்மை இல்லாதவனா காட்ட துணிஞ்சிட்டியே… தவசிபுரத்தில நான் பார்த்து ஆசைப்பட்ட துறுதுறு பூச்செண்டு இப்படி இருக்க மாட்டா… அவளுக்கு இப்படியெல்லாம் யோசிக்கக்கூட தெரியாது… இப்படி ஒரு ஐடியாவை உனக்கு கொடுத்தது யாரு…? சொல்லு… சொல்லுடி…”


தன் மனக்குமுறல் அனைத்தையும் அவளிடம் வெளிப்படுத்தி ஆங்காரமாய் எழுந்து நின்றவனைப் பார்த்து விதிர் விதிர்த்துப் போனாள் பூச்செண்டு.


“மா..மா..மாமு… நா..நான் அ..அந்த…”


“அய்யோ..‌” தன் காதுகளை அழுத்தமாய் மூடிக்கொண்டான். 


“அப்படி கூப்பிடாதடி… இனிமே என்னை மாமுன்னு கூப்பிடாதே… இந்த வார்த்தை என்கூட நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே நாடகம்தான்… என்னைவிட நம்ம வாழ்க்கையைவிட உன்னோட கரியர் உனக்கு ரொம்ப பெருசா போயிடுச்சு இல்லையா… நீ சம்பாதிச்சு யாருக்குடி சேர்த்தப் போற…? உனக்கும் எனக்கும் என்ன இல்லாம போயிடுச்சு… நீ பணத்தை நோக்கி ஓடல… ஆனா ஏதோ ஒரு போதை… உன்னை உயரத்தில வச்சுக்கணுங்கிற போதை… யாரோ தூண்டிவிட்டதால தலையில ஏறி உட்கார்ந்த போதை… சரிதானே…” அவளை நெருங்கி நின்று ஆக்ரோஷமாய் கேட்க அமைதியாய் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“இந்த ஐடியா கொடுத்தது ரீனாதானே…” அவள் முகத்தை வெடுக்கென நிமிர்த்திக் கேட்க அலைப்புற்ற விழிகளுடன் கண்ணீர் மல்க அவனைப் பார்த்தவள் ஆம் என்று தலையாட்ட சப்பென அறையே அதிரும்படி அவள் கன்னத்தில் இடி என கையை இறக்கி இருந்தான்.


சுருண்டு மெத்தையில் விழுந்தவளின் தோளை வலிக்கப் பிடித்து தூக்கி நிறுத்தியவன் “எவளோ ஒருத்தி பேச்சுக்கு கொடுத்த மரியாதையை கட்டின புருஷனோட உணர்ச்சிக்கு நீ கொடுக்கவே இல்ல பார்த்தியா…” ஆதங்கமாய் கேட்டவனின் குரல் தழுதழுத்து உருண்டு நின்ற இரு சொட்டு கண்ணீர் அவன் கன்னங்களில் வடிந்து தரையில் தெறித்தது.


வலியில் கன்னம் திகுதிகுவென எரிந்தாலும் அவன் கண்ணீரில் கலக்கம் கொண்டு “மா..மாமுஉஉ…” வேதனையுடன் அவன் கன்னத்தின் அருகில் கை கொண்டு சென்றவளை வேகமாய் விலக்கித் தள்ளி எட்டி நின்றான் தரணி.


“என்னை மொத்தமா கொன்னுட்ட… ஒரு வருஷமா நான் உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை பொய்யாக்கிட்ட… என் காதலை அசிங்கப்படுத்திட்ட… என் ஆண்மையை கேவலப்படுத்திட்ட… இந்த நிமிஷம் உன்னை வெளியே இழுத்துட்டுப் போய் நம்ம குடும்பத்து ஆளுங்ககிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும் அதுக்கு அப்புறம் நீ வாழற வாழ்க்கை நரகம்தான். ஆனா நான் உன்னை மாதிரி கேவலமான பிறவி கிடையாது… இப்போ சொல்றேன்… இந்த நிமிஷத்திலிருந்து உன் மாமு செத்துட்டான்… நீ பண்ணின துரோகத்துக்கு உன்னை மொத்தமா துரத்தி அடிக்க முடியும்… ஆனா அதனால பாதிக்கப்படப் போறது என் நண்பனோட குடும்பமும் என் குடும்பமும்தான்… அவங்களோட நிம்மதியை கெடுக்க நான் விரும்பல… நீ எனக்கு ஏதாவது உபகாரம் செய்யணும்னு நினைச்சேனா இனி என் மூஞ்சிலேயே முழிக்காத… இனி இந்த வீட்ல நீ யாரோ நான் யாரோ… திரும்பவும் மாமுன்னு பொய் வேஷம் போட்டு உன் நாடகத்தை நடத்தணும்னு நினைச்சேனா அதுக்கப்புறம் என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது…”


அழுத்தமாய் சொன்னவன் ஆண் மகனையே அழ வைத்தவளை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து பால்கனிக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டான். பெரியவர்கள் அனைவரும் மறுநாளே ஊருக்கு கிளம்பி இருக்க தனது வேதனைகள் அனைத்தையும் மறைத்து வெறுமையாய் சிரித்து அனைவரையும் அனுப்பி வைத்தான். அதன்பின் மூன்று நாட்கள் பச்சை தண்ணீர்கூட வீட்டில் பருகாமல் பட்டினியாய் கிடந்து தன்னைத்தானே வருத்திக் கொண்டவனைப் பார்த்த பூச்செண்டு அழுது புலம்பி அவன் காலில் விழுந்து கதறியும் கற்சிலையாய் இறுகிப்போனவன் கனியவே இல்லை. சிறிதும் அவளிடம் இளகவில்லை… தன்னை தொந்தரவு செய்தால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகவே மிரட்டினான்.


“என்கூட பேச வேணாம்… என்னை பார்க்க வேணாம்… தயவுசெஞ்சு வீட்ல சாப்பிடுங்க… இப்படி பட்டினி கிடக்காதீங்க… நான் தப்பு பண்ணிட்டேன்… தெரியாம பண்ணிட்டேன்… அந்த ரீனா பேச்சை கேட்டது பெரிய தப்பு… யோசிக்காம பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சு ஏத்துக்க சொல்லல மாமு… நான் சமைக்கிறதை சாப்பிடுங்க போதும்‌.. பட்டினியா கிடக்காதீங்க… சத்தியமா தாங்க முடியல… செத்துடலாம் போல இருக்கு…” பைத்தியக்காரி போல் தலையில் மடீர் மடீர் என அடித்துக்கொண்டு அழுது புரண்டவளின் கோலம் சிறிது மனதை கரைத்ததோ என்னவோ அவள் சமைக்கும் உணவை மட்டும் எடுத்துக் கொண்டான்.


இப்போதைக்கு இது போதும் என்பது போல் அவளும் அவனிடம் வலியச் சென்று பேசி இன்னும் காயத்தை பெரிதாக்க விரும்பாது ஒதுங்கியே இருந்தாள். பத்து நாட்கள் கடந்து ஓடியே போயின. அவர்களின் உறவில் மாற்றம் இல்லை. அவனது பிடிவாதம் குறையவே இல்லை. 


இரவில் பால்கனி சோபாவில்தான் சென்று படுத்துக் கொள்கிறான். உள்ளே அழைத்து கெஞ்சியபோது “அந்த கட்டில்ல படுத்தா என் உடம்பெல்லாம் கூசுது… ஒவ்வொரு நாளும் பொய்யான தாம்பத்தியம்தானே அங்கே நடந்திருக்கு… என்னை ஏமாத்திட்டேதானே ஒவ்வொரு நாளும் என்கூட இணைஞ்சிருக்க… உடம்பு சுகம் மட்டும் உனக்கு போதுமானதா போயிடுச்சு… என் உணர்வுகளை தீ வச்சு எரிச்சிட்ட… திரும்பவும் அங்கே படுத்தா நான் எரிஞ்சு சாம்பல் ஆனதுக்கு சமம்…” வார்த்தை என்னும் சாட்டை கொண்டு அவளை சொடுக்கிட்டு வதைத்தான்.


செய்த தவறு மிகப்பெரியது… காயப்பட்டவன் கதறுகிறான்… எதிர்த்து பேச தன்புறம் நியாயமான காரணங்களே இல்லை… அமைதியாய் அழுதபடி உள்ளே நுழைந்து கொண்டாள் பூச்செண்டு. “என் காதல் பொய்யானது இல்ல மாமு…” தனிமையில் சத்தமிட்டு கதறினாள்.


நாட்கள் வாரங்களாகி மாதங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க அவர்களது வாழ்க்கை மட்டும் அன்றைய நாள் அடித்து பெய்த மழையால் சின்னாபின்னமாகி போன சோலைவனமாய் மாறிப்போனது. ஆறப் போட்டால் கோபம் தணியும்… ஆனால் தரணியின் கோபமோ குறையாத ஜுரத்தை உச்சத்தில் காட்டும் வெப்பமானியாய் அதே இடத்தில் நின்று போனது. இன்னும் சில வாரங்களில் முகிலனும் மீராவும் குழந்தையோடு அங்கு வந்து சேர்ந்து விடுவர் என்ற சூழலும் உருவாகி இருந்தது. தங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் பனிப்போர் இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் தொடரும் இந்த யுத்தம் ஒரு நாள் தெரிந்துதானே தீரும்.


ரீனாவிடம் முற்றிலும் பேச்சு வார்த்தைகளை நிறுத்தி அவளது உறவையே மொத்தமாய் வெட்டி இருந்தாள் பூச்செண்டு. ஆனால் உயிரில் கலந்த தனது உறவானவன் தன்னை மொத்தமாய் வெட்டி விலகி நிற்கிறானே… அழுகையும் வேதனையுமாய் அவள் நாட்கள்… அன்று இரவு வீட்டிற்கு வந்தவன் மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்திருந்தான். புதுப்பழக்கம்… துடித்துப் போனாள்… அவனிடம் பேசினால் பலன் வலிதான்… நிறைய யோசித்து ஒரு முடிவுடன் விசித்திராவிற்கு அழைத்தாள்.




Leave a comment


Comments


Related Post