இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 16) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 16-05-2024

Total Views: 19070

உனக்கென்றே உயிர் கொண்டேன் 16

திருமணத்திற்கு குறுகிய காலமே இருக்கிறது என்பதால் இரு தினங்களில் மண்டபம் பார்த்து பதிவு செய்துவிடுமாறு தேவராஜ் கூறியிருக்க... இணையத்தின் வழியாக கோயம்புத்தூரில் இருக்கும் திருமண மண்டபங்களை அலசி ஆராய்ந்து, இறுதியாக நான்கினை தேர்வு செய்து வைத்தான் தமிழ்.

இரவு முழுக்க அதுதான் அவனது வேலையாக இருந்தது.

காலை எழுந்ததும் அஸ்வினுக்கு அழைத்தான்.

"சொல்லு மச்சான். என்ன காலையிலே மாம்ஸ் ஞாபகம்?" அஸ்வின் சிரித்துக்கொண்டே வினவினான்.

"யோவ் மாமா நான் பூர்வி இல்லைன்னு உங்களுக்கு எத்தனை முறை சொல்றது? பூர்விகிட்ட கேட்க வேண்டியதையெல்லாம் எப்போப்பாரு என்கிட்டவே கேட்கிறீங்க?" தமிழ் அஸ்வினை கேலி செய்தான்.

அஸ்வின் சத்தமாக சிரித்திட...

"ம்க்கும்... அக்காவை விட தம்பியை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன ஆளு தானே நீங்க?" எனக்கேட்டு மேலும் அஸ்வினின் சிரிப்பை தமிழ் அதிகரித்தான்.

"உனக்கெப்படி?" என்ற அஸ்வின், "வெண்பா சொன்னாளா?" எனக் கேட்டான்.

தமிழும் புன்னகையுடன் ஆமென்றதோடு,

"மாமா நாலு மண்டபம் செலக்ட் பண்ணியிருக்கேன். இன்னைக்கு நீங்க ஃபிரின்னா நேரில் பார்த்துட்டு சூஸ் பண்ணி அட்வான்ஸ் பே பண்ணிடலாம்" என்றான்.

"ஓகே தமிழ் நான் ஒன் ஹவரில் கிளம்பிடுறேன்" என்ற அஸ்வினிடம், "தாத்தாவையும் கூட்டிட்டு வாங்க. இங்க அப்பாவுக்கு ஏதோ வேலையிருக்கு... நீங்க பார்த்து ஓகே சொன்னா போதும் சொன்னாங்க" என்றான் தமிழ்.

"தாத்தா இல்லையே தமிழ்... வெண்பா ஹாஸ்டல் வெக்கெட் பண்ணி தின்க்ஸ்லாம் கொண்டு வரணும். தனியா ட்ரெயினில் முடியாதுன்னு தாத்தா கூட்டிட்டுவர போயிருக்கார்" என்றான் அஸ்வின்.

"அப்போ நாளைக்கு போகலாமா மாமா?" என்று தமிழ் கேட்டிட, சண்முகத்திடம் கேட்டு சொல்வதாக காலினை கட் செய்தான் அஸ்வின்.

சில நிமிடங்களில் தமிழுக்கு அழைத்தவன், "நாம் பார்த்துக்கலாம் தமிழ். தாத்தா இன்னைக்கு நாள் நல்லா இருக்கு பார்த்து முடிச்சிருங்கன்னு சொன்னார்" என்றான்.

"ஓகே மாம்ஸ்" என்ற தமிழ், இணைப்பை துண்டித்தான்.

கிளம்பி கீழே வந்த தமிழ், உணவு உண்ணும் போதும் அடிக்கடி அலைப்பேசியை எடுத்து பார்த்தவண்ணமாக இருந்தான்.

"சாப்பிடும் போது போன் நோண்டாதன்னு எத்தனை முறை தமிழ் சொல்றது?" என்று அதட்டிய தனத்தினை உணவு உண்டு கொண்டே நிமிர்ந்து பார்த்தவன் அருகில் வாங்க என்பதைப்போல் தலையசைத்தான்.

"என்ன தமிழு?"

"கிட்ட வாங்கம்மா" என்றவன், அவர் அவன் பக்கம் முகத்தை கொண்டு வந்ததும், "உங்க மருமகள் நேத்துல இருந்து போன் பண்ணவே இல்லையா... அதான்!" என்று சோகம் போல அவரின் காதில் கிசுகிசுத்தான்.

"ஆத்தீ..." என்று தனம் நெஞ்சில் கை வைத்திட... தமிழ் கண் சிமிட்டினான்.

"பொய் சொல்றியா தங்கம்?"

"என்னை பார்த்தால் பொய் சொல்ற மாதிரியா தெரியுது?" எனக் கேட்டவன், அப்போது அங்கே வந்த தேவராஜை காட்டி, "அப்பாவுக்கு தெரியுமே! கேட்டுப்பாரு லட்சு..." என்று அவரின் கன்னத்தை பிடித்து ஆட்டியவனாக எழுந்து சென்று கை கழுவி வந்தான்.

"மாமா கோயம்புத்தூர் வந்துடுறேன் சொன்னாங்கப்பா. ஆன்லைனில் கொஞ்சம் மண்டபம் பார்த்து வச்சிருக்கேன். நேரில் போய் பார்த்துட்டு சொல்றேன்" என்று தேவராஜிடம் தகவல் அளித்த தமிழ் புறப்பட...

"பூர்விகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க தமிழு" என்றார்.

"சரிங்கப்பா" என்று தமிழ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவன் சொல்லிச் சென்றதில் உண்டான அதிர்விலிருந்து மீளாது நின்றிருந்தார் தனம்.

"லட்சுமி... அவன் போயி ரொம்ப நேரமாவுது. என்ன யோசனை?" என்று தேவராஜ் கேட்ட பின்னரே சுயம் மீண்டார் தனம்.

"இந்த தம்பி பையன் என்னம்மோ சொல்லிட்டு போறா(ன்)ங்க. நிஜமா?" எனக் கேட்டார்.

"என்ன சொன்னான்? சொன்னதானே தெரியும்!"

"அவன் ஏதோ" என்று தமிழ் சற்று நேரத்திற்கு முன்னர் கூறியதை சொல்லியவர், "உங்களுக்கும் தெரியுமாம்?" என்றார். முகத்தை உம்மென்று வைத்து.

"ம்ம்ம்... பொண்ணு பார்க்க வந்தன்னைக்குத்தான் தெரியும்" என்றவர் பெண் யாரென்பதை சொல்ல, "ஃபிரண்டு... கூட படிச்சப் பொண்ணுன்னு சொன்னானேங்க. பூர்வி கல்யாணத்தில் ஏதும் இதனால் சிக்கல் வந்திடாதே?" எனக் கேட்டார் தனம். கவலையாக.

"அஸ்வின் பூர்வியை பார்க்க வருவதற்கு முன்பே தமிழுக்கு அந்தப்பொண்ணு நல்ல பழக்கம் லட்சுமி. நீ தேவையில்லாம மனசை உழப்பிக்காதே" என்றவர், "தமிழ் முகத்தில் கொஞ்ச நாளா சந்தோஷம் கூடியிருக்கு கவனிச்சியா?" எனக் கேட்டார்.

தனம் பதில் சொல்லாதிருக்க...

"என்னாச்சு லட்சுமி? உன்னால ஏத்துக்க முடியலையா?" என்று வினவினார் தேவராஜ்.

"பசங்க விருப்பம் தாங்க முக்கியம். ஆனால் மாப்பிள்ளைக்கு (அஸ்வின்) தெரிஞ்சா என்ன நடக்குமோ?"

"எல்லாம் தமிழ் பார்த்துப்பான்" என்று தேவராஜ்ஜே தன்னுடைய சம்மதத்தை முழுமனதாக தெரிவித்திட தனத்திற்கு மறுக்க என்ன காரணம் இருந்திடப்போகிறது.

அவர்கள் உலகமே தமிழ் எனும்போது அவனது ஆசைக்கு தடையாக நின்றிடுவார்களா? பாசமிகு பெற்றோர்.

அதுவரை இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை தற்செயலாக கேட்க நேர்ந்த செவிகளுக்கு சொந்தக்காரர் ஒருவித ஆசுவாசமான நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

"பொண்ணை நீங்க பார்த்திருக்கீங்களா?" வெண்பா தான் தன் வீட்டு மருமகள் என்று உறுதியாக தெரிந்து மனம் ஏற்கத் துவங்கியதும் தமிழுக்கு அன்னையாக வரப்போகிற மருமகளை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார் தனம்.

"நேத்து அங்க போனோமே நீ பார்க்கலையா? சுவற்றில் போட்டோ மாட்டியிருந்துச்சே" என்ற தேவராஜ், "தமிழ் பக்கத்துல நிக்கிற மாதிரி நெனச்சதும் பொருத்தம் கண்ணை நிறைச்சிடுச்சு தனம்" என்றார்.

"நேத்து அண்ணி பேசின பேச்சில் எனக்கெங்க அதெல்லாம் கவனிக்கத் தோணுச்சு" என்ற தனம், "நான் பார்க்கணுமேங்க. தமிழிக்கு போனு போட்டு ஒரு போட்டோ அனுப்ப சொல்லட்டுமா?" என்று உற்சாகமாக வினவினார்.

"தெய்வானை என்ன பேசினாள்?"

பேச்சுவாக்கில் தன்னைப்போல் சொல்லிவிட்டார். ஆனால் இப்போது தேவராஜ் கேட்கவும், தேவையில்லாத பிரச்சினை உண்டாகிடுமோ என்று பயந்து மறைக்க நினைத்தார்.

"அதை விடுங்க. மொத தமிழுக்கு போனை போடுங்க" என்றார் தனம்.

"அதான் இந்த வாரம் பூர்வியை பார்க்க நேரிலே வரதா மாப்பிள்ளை சொன்னாரே! அப்போ பார்த்துக்கோ. இப்போ நான் கேட்டதை சொல்லு" என்று பிடிவாதமாக தனத்தை பார்த்திருந்தார்.

தனம் நடந்ததை சொல்லிட...

தேவராஜ்ஜுக்கு முற்றிலும் மனம் வெறுத்துவிட்டது. 

'தன் மீது தங்கையென்ற பாசம் இருப்பதால் தானே இத்தனை வருடம் கணவனுடன் வீம்புக்கென சேர்ந்து வாழாத போதும் தன் அண்ணன் பார்த்துக்கொள்கிறார் என்று கொஞ்சமும் யோசிக்கவில்லையா? மனதில் பாசத்தை கொண்டிருப்பவர்களுக்குத்தானே பிறரின் பாசத்தை உணர்ந்துகொள்ளும் மனம் இருக்கும்.'

விரக்தியை உணர்ந்தவருக்கு இதனை கேட்டு ஒரு விவாதம் செய்ய விருப்பமில்லை.

அமைதியாக எழுந்து மணியின் எஸ்டேட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தேயிலை சாகுபடி நடப்பதால் மேற்பார்வைக்கு மணி அழைத்திருந்தார்.

ஏற்கனவே தன் தங்கையை கட்டிக்கொடுத்து காலத்துக்கும் தீராத வருத்தத்தை கொடுத்துவிட்டதாக வருந்தும் தேவராஜ், தன் முகவாட்டம் கண்டு மணி என்னவென்று கேட்டபோதும் ஒன்றுமில்லையென சொல்லி சமாளித்துவிட்டார்.

"தமிழு மண்டபம் பார்க்க போயிருக்கானா? போன் பண்ணான்" என்ற மணி வேலையில் கவனம் வைத்திட, தேவராஜ்ஜும் நடப்பது எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என மனதை தேற்றிக்கொண்டு வேலையில் ஈடுபட்டார்.

கோயம்புத்தூர் சென்றடைந்த தமிழ் அஸ்வினுக்கு அழைத்து அவன் இருக்குமிடம் அறிந்து அங்கு சென்றான்.

"சாரி தமிழ். இங்க ஒரு கஸ்டமர் பார்க்கிற மீட்டிங். சடன் பிளான். சேன்ஜ் பண்ண முடியல. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா?"

அது ஒரு மாலில் இருக்கும் காஃபி ஷாப்.

தமிழ் வந்ததும், தான் பேசிக்கொண்டிருந்த நபரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தே அழைத்துச்சென்றான் அஸ்வின்.

"நீ வரதுக்குள்ள முடிச்சிடலாம் பார்த்தேன்" என்றான். சிறு தடுமாற்றமாக.

"இட்ஸ் ஓகே மாமா. நான் வெயிட் பன்றேன். வெயிட் பண்ண வைக்கிறதை கில்ட்டா பீல் பண்ணிங்கன்னா... எனக்கு நீங்க காஃபி வாங்கிக்கொடுங்க. சரியாகிடும்" என்ற தமிழ் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர,

"ஹேய் தமிழ்... அங்கு நாங்கிருக்கும் டேபில்க்கே வா" என்றழைத்தான் அஸ்வின்.

"அது சரி வராது மாமா. உங்களுக்கு ஓகே! பட் அவர் யாருன்னு தெரியாத என் முன்னாடி பிஸ்னெஸ் டீல் பேச தயங்கலாம். நீங்க முடிச்சிட்டு வாங்க. நான் வெயிட் பன்றேன்" என்றான்.

எங்கு அவன் தனியாக இருப்பானோ என்று நினைத்த அஸ்வின் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை. இப்போது தமிழ் சொல்லியதும், அவனின் தொழில் மூளை அஸ்வினுக்கு தமிழ் மீதான மதிப்பை மேலும் கூட்டியது.

அஸ்வின் வெயிட்டரை அழைக்க...

"நீங்க போங்க. நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்" என்ற தமிழ் அங்கிருந்த மெனு கார்டினை எடுத்து பார்வையிட்டு நிமிர, எதிரே ஐஸ்க்ரீம் பார்லர் தெரிந்தது. முன் வைத்திருந்த படங்களில் தர்பூசணி பாப்சிகல் தெரிய, சட்டென்று முகத்தில் பூத்த புன்னகையோடு அங்கு எழுந்து சென்றான்.

அஸ்வின் தன்னுடைய வாடிக்கையாளரிடம் பேசி முடித்து அவரை அனுப்பி வைத்துவிட்டு... தமிழ் அங்கில்லாது வெளியில்வர, கண்ணாடியிலான சுற்றுச் சுவரில் கைகளை ஊன்றி கீழே வேடிக்கை பார்த்தவனாக தர்பூசணி பாப்சிகல் சுவைத்தபடி நின்றிருந்த தமிழின் அருகில் சென்று அவனது முதுகில் கை போட்டான்.

"முடிஞ்சிருச்சா மாமா... போகலாமா?" எனத் திரும்பிய தமிழ் தன்னையும் தன் கையிலிருக்கும் ஐஸ்க்ரீமியை மாற்றி மாற்றி பார்த்த அஸ்வினிடம்,

"அடிக்கிற வெயிலுக்கு காபி குடிச்சா என்னவோ மாதிரி இருக்கும்" என்றான்.

தமிழ் சமாளிக்கின்றான் என்பது அஸ்வினுக்கு புரிந்தது. தர்பூசணி வெண்பாவுக்கு எத்தனை பிடித்தமென்று சகோதரனான அவனுக்குத் தெரியாதா என்ன?

சாதரணமாக தமிழ் எனக்கு பிடிக்குமென்று சொல்லியிருந்தால் அஸ்வினின் மனம் ஆராய்ந்திருக்காது. அவம் காரணம் சொல்லவே ஊன்றி கவனித்தான்.

"வெண்பாவுக்கு பிடிக்கும்... அதனால் உனக்கும் பிடிக்குமா?" மனதில் தோன்றியதை உள்ளுக்குள்ளே வைத்துக்கொள்ளாது கேட்டுவிட்டான்.

அஸ்வினின் விழிகளில் தெரியும் ஆராய்வை கண்டுகொண்ட தமிழ், 

"மொழி தான் பழக்கப்படுத்தினாள் அப்படின்னு சொல்லலாம்" என்றான். தமிழ்.

'இதென்ன பதில்.' அஸ்வினால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழும் வெண்பாவைப்போல் காதல் கொண்டுள்ளானா என்பதை அவனின் சிறு வார்த்தையில் இருந்தாவது கண்டுகொள்வோம் என நினைத்து அஸ்வின் கொக்கி போட, அவனது பிடியில் லாவகமாக நழுவியிருந்தான் தமிழ்.

"உங்களுக்கு வேணுமா?"

இடவலமாக தலையசைத்த அஸ்வின், 

"இந்த மீட்டிங் ரொம்ப நாளா தள்ளிப்போச்சு. இன்னைக்கு கால் பண்ணார். பெர்சனல் வொர்க்... கோயம்புத்தூர் போறேன் சொன்னேன். இங்கவே மீட் பண்ணலான்னு வந்துட்டார். அவாய்ட் பண்ண முடியல" என்று அஸ்வின் பேசிட இருவரும் மாலினை விட்டு வெளியில் வந்திருந்தனர்.

"இட்ஸ் ஓகே மாமா" என்ற தமிழ், "காரிலா வந்தீங்க?" எனக் கேட்டான்.

"ம்ம்ம்..."

"நான் பைக்."

"அப்போ கார் இங்கவே நிக்கட்டும். நாம் வேலையை முடிச்சிட்டு வந்து எடுத்துப்போம்" என்ற அஸ்வின் தமிழுடன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் நோக்கிச் சென்றனர்.

தமிழ் வண்டியினை உயிர்பித்து அஸ்வினை ஏறிட, அஸ்வின் தமிழின் பின்னால் அமர்ந்து அவனின் தோளின் இரு பக்கமும் கைகள் பதித்தான்.

வண்டி சாலையில் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அக்கணம் இருவரும் உறவுகள் கடந்து நன்பர்களாக இணைந்தனர். மனதால்.

காலை வெயில் சுள்ளென்று கண்களை கூச செய்திட, முகம் மோதிய இளஞ்சூட்டு காற்று மனதிற்கு நிறைவாக இருந்தது.

"இன்னும் ஸ்பீடா போடா மச்சான்!"

கண்ணாடி ஊடே சொல்லிய அஸ்வினை பார்த்த தமிழ், அவனின் முகத்தில் தெரிந்த மகிழ்வில் வேகத்தை மேலும் கூட்டினான்.

சிறு வயதிலிருந்து பெற்றோரற்று பொறுப்புடன் வளர்ந்த அஸ்வினுக்கு இதுபோன்ற தருணங்கள் எல்லாம் கிடைக்கப்பெறாதவை. அரிதானவை.

அஸ்வின் தமிழுடனான நேரத்தை ஆழ்ந்து அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்கு மண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டனர். பூர்விக்கு காணொளி அழைப்பில் சுற்றிக் காட்டிட, அஸ்வினும் பூர்வியும் சேர்ந்து ஒரு மண்டபத்தை தேர்வு செய்து முடிய மதிய உணவு நேரம் கடந்திருந்தது.

"சாப்பிட்டு போலாம் தமிழ். எப்படியும் வீட்டுக்கு போக ஒன்றரை மணி நேரமாகுமே!" என்று அஸ்வின் சொல்ல, இருவரும் உணவினை முடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் விடைபெற இருந்த நொடி வெண்பாவிடமிருந்து அஸ்வினுக்கு அழைப்பு வந்தது.

"வெண்பா தான்" என்று தமிழிடம் சொல்லிய அஸ்வின், "ஹலோ அம்மு" என்க...

தமிழிடம் சிறு பொறாமை. இருப்பினும் அவனுக்கு மொழி என்கிற விளிப்பில் அலாதி சுகம்.

பேசிவிட்டு வைத்த அஸ்வின்,

"உன் ஃபிரண்ட் வந்தாச்சு" என்றான். ஃபிரண்டில் அதிக அழுத்தம் கொடுத்து.

"வீட்டுக்கு வாயேன் தமிழ். வெண்பாவை பார்த்திட்டு போகலாம்."

"மாம்ஸ்" என்ற தமிழ், "பூர்வியை பார்க்க வருவாள் தானே!" என்றான்.

அடுத்து தமிழுக்கு வெண்பாவிடமிருந்து காணொளி அழைப்பு வந்தது.

பற்கள் தெரியாது சிரித்தவன், முன்னுச்சி கேசத்தை கோதியவாறு அழைப்பை ஏற்றான்.

"ஹாய் சீனியர்" என்று உற்சாகமாக சொல்லியவள், தமிழின் சுற்றுப்புறம் அறிந்து, "வெளியில் இருக்கீங்களா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்... வீட்டுக்கு வந்தாச்சா?"

"உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் சொல்லவே இல்லையே!"

"முகத்தில் பல்ப் எரியுதே. தென் உன்னோட பேக்கிரவுண்ட்" என்றான். எதிரே இருந்த அஸ்வின், "அடப்பாவி" என சத்தமின்றி உதடசைக்க, தமிழ் ஒற்றை கண்ணடித்தான்.

"ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வெறுப்பேத்துறீங்களா?" என்று வெண்பா முறைத்திட...

"ஜஸ்ட் ஃபன்" என்ற தமிழ், "வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்" என வைத்துவிட்டான்.

காலை ஐஸ்க்ரீம் சாப்பிட்டதை வெண்பாவுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறான் என்பதை புரிந்துகொண்ட அஸ்வின் ஒற்றை புருவம் உயர்த்திட...

"பிரண்ட்ஷிப்பில் இதெல்லாம் சாதாரணம் மாம்ஸ்" என்று சிரித்தான்.

"என்னவோ இருக்கு... ஆனால் மாட்டமாட்டேங்குது. நீயே சொல்லுவ" என்றான் அஸ்வின்.

தமிழின் சிரிப்பு அதிகரித்தது.

"நிச்சயம் உங்களுக்குத் தெரியாமலா!" என்ற தமிழ் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.

வீடு சென்ற தகவலை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ் வீட்டிற்குள் நுழைய அகிலாண்டம்  கூடத்தில் அமர்ந்திருந்தார்.

"போன விஷயம் என்னாச்சு தமிழு?"

"பிக்ஸ் பண்ணியாச்சு பாட்டி" என்றவன் வீட்டை பார்வையால் அலசி தாய், தந்தை இல்லையென கண்டுகொண்டவனாக விறுவிறுவென மேலேறிவிட்டான்.

"பார்த்தியாம்மா அவனுக்கிருக்கும் திமிரை. ஏன் நீ கேட்டால் அவனால் நின்னு பதில் சொல்ல முடியாதாமா?" என்று வந்தார் தெய்வானை.

"நாள் முழுக்க அலைஞ்சது களைப்பா இருந்திருக்கும். ஓய்வெடுக்கலான்னு போறான்" என்று அகிலாண்டம் தமிழுக்கு தோதாக பேசிட, "நல்லாவே சமாளிக்கிறம்மா" என்று முகவாயினை தோளில் இடித்தார் தெய்வானை.

அகிலாண்டம் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

"எங்க உன் மவனும் மருமகளும்?"

"கோவிலுக்கு போயிருக்காங்க."

"ம்ம்ம்" என்று இழுத்த தெய்வானை மாடிப்படிகளில் ஒரு கண் வைத்தவராக,

"நேத்து உன் மருமவளுக்கு சப்போர்ட் பண்ணியாட்டுக்கு" என்று ஒரு மாதிரி குரலை இழுத்தார்.

"பூர்வி என் பேத்திடி. அவளுக்காக பேசினேன்" என்ற அகிலாண்டத்துக்கு, தமிழ் பேசிய வார்த்தைகள் முள்ளாய் உள்ளத்தை தைத்துக் கொண்டிருக்க, "அவளுக்கு சப்போர்ட் பண்ணதாவே இருக்கட்டுமே. அதிலேன்ன?" எனக் கேட்டார்.

தெய்வானை முகம் அதிர்ச்சியோடு கலந்த கோபத்தை பிரதிபலித்தது.

"இது சரியில்லைம்மா!"

"எது தெய்வா? இருபது வருசத்துக்கு மேலாகியும் புருஷன் வீட்டுக்கு போவமாட்டேன்னு வீம்பா உட்கார்ந்திருக்க உனக்கு சப்போர்ட் பண்றனே! அதா சரியில்லை?"

வீடு நிசப்தமாக இருந்ததாலும், அறையின் கதவினை தமிழ் சாற்றிட மறந்திருந்ததாலும் கீழே அவர்கள் பேசியது ஓரளவிற்கு தமிழின் செவி நுழைந்தது.

தெய்வானையும், அகிலாண்டமும் முதல் முறையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொள்கின்றனர் என்று காதினை கூர்மையாக்கிய தமிழுக்கு அகிலாண்டத்தின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.

'இவங்களா இப்படி பேசுறது!'

"என்னம்மா புதுசா என்கிட்ட தப்பு கண்டுபிடிக்கிறியோ?"

"இதுக்கு மேற்பட்டாவது தப்பை சரி செய்யலான்னு பார்க்கிறேன் தெய்வா" என்று குரலை இறக்கி பேசிய அகிலாண்டம், "நாளைக்கு வர்ஷினிக்கு நல்லதுன்னு ஒன்னு செய்யும்போது அப்பாவா மணி உடன் நிக்க வேணாமா?" எனக் கேட்டார்.

தமிழ் அவரை பார்த்து கேட்டது சிறியதாக இருந்தாலும், அகிலாண்டத்திற்கு அதன் பொருள் அத்தனை வலியை கொடுத்தது.

தமிழின் தாத்தா வர்ஷினிக்கு பத்து வயது இருக்கும்போது இறந்து போனார்.

கடைசி நொடியில் மனைவியின் கையினை பிடித்துக்கொண்டு,

"நான் சொன்னதை உன் மவ(ள்) தான் கேட்கல. நீயாவது கேளு அகிலாண்டம். எப்படியாவது அவளை மணியோட சேர்த்து வச்சிடு" என்று கூறியதன் அர்த்தம் அன்று அகிலாண்டத்திற்கு மெத்தனமாக இருந்திருக்கலாம். இன்று பேரன் கேட்ட கேள்வி சவுக்கடிக்கு நிகராக வலி கொடுத்து அவர் மனதை கனக்க வைத்தது.

தன் மூச்சு அடங்குவதற்குள் கணவனின் வார்த்தைக்காக மட்டுமில்லாது, மகளின் இறுதி வாழ்வுக்காக அவளை மணியுடன் சேர்த்து வைத்திட வேண்டுமென காலங்கள் சென்று தீவிரமாக நினைத்தார்.

அகிலாண்டம் நினைத்தால் போதுமா? தெய்வானை நினைக்க வேண்டமா? எளிதில் வருந்தி மாற்றம் பெற்றிடுவாரா தெய்வானை?







    


Leave a comment


Comments


Related Post