இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 16-05-2024

Total Views: 24418

இதயம் 20

     கதவு திறக்கப்பட்டதும் ஒளிமயமான எதிர்காலம் தெரியும் என்று எதிர்பார்த்த சாணக்கியனுக்குத் தெரிந்தது என்னவோ இருளான அவனின் கடந்தகாலம் தான்.

     நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு வதனியை இத்தனை அருகில் பார்த்ததால் தன்னால் உடல் தூக்கிப்போட்டது சாணக்கியனுக்கு. ஆபத்தான இடத்தில் இருந்து அவனைக்  காப்பாற்றும் பொருட்டு கால்கள் தன்னால் நான்கடி பின்னால் அழைத்து வந்தது அவனை. 

     வாழ்வில் யாரின் நிழலைக் கூடத் தொடக்கூடாது என்று வதனி எதிர்பார்த்தாளோ அவனையே தன் வீட்டு வாசலில் பார்த்ததில் அவளுக்கும் அதீத அதிர்ச்சியே. துடிக்கும் நெஞ்சில் கை வைத்து தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டே, “எதுக்கு இங்க வந்தீங்க“ தடுமாற்றத்துடன் கேட்டாள். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. அதைத் திறமையாக மறைத்துக்கொண்டாள் பெண்.

     வதனி இப்படிக் கேட்ட பிறகு தான் சாணக்கியனுக்குக் கூட எதற்காக இங்கே வந்தோம் என்பது நினைவு வர, ஏமாற்றப்பட்டோமோ என்கிற ஆத்திரத்தில், “மினி“ என்றான் பற்களைக் கடித்தபடி. 

     தன் கடந்தகாலம் தெரிந்தவளுக்கு அதோடு சம்பந்தப்பட்டவர்கள் யாரென்று தெரியாமல் இருந்திருக்குமா என்ற சந்தேகம் சாணக்கியனுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு உரம் இடுவது போல், “மினி என்னோட தங்கச்சி. என் வீட்டில் தங்கி தான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கா. ஆனா அவளை எதுக்காக நீங்க பார்க்கணும்“ கேட்ட வதனிக்கு ஒருமாதிரி அசௌகர்ய உணர்வு. தங்கையைத் தேன்மொழியின் வீட்டில் இருந்து அழைத்து வந்த போது தன்னையும் அறியாமல் உதித்த பயம் நிறைவேறப் போகிறதோ என்னும் அச்சம் வந்தது அவளுள்.

     “என் தங்கை“ என்ற வதனியின் வார்த்தையில் சாணக்கியனின் உலகம் நின்றது போல் இருந்தது. தினம்தினம் பார்க்கும் பலரில் மினி ஏன் பரீட்சையமானவளாகத் தோன்றினாள் என்பதற்கான அர்த்தம் இப்போது புரிய தலை முடியைக் கோதிக்கொடுத்து, கண்களை அழுந்த மூடித்திறந்து கோபத்தை அடக்கினான்.

     “அவளை எதுக்காக நீங்க பார்க்கணும்“ மீண்டும் ஒருமுறை கேட்ட வதனியின் குரலில் இம்முறை கோபம் எட்டிப் பார்த்தது. “இனி அவளைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவளும் என்னைப் பார்க்காமல் இருப்பது நல்லதுன்னு அவகிட்ட சொல்லிடுங்க“ என்றவன் திரும்பி நடக்கப் பார்க்க, “யார் வதனி வந்திருப்பது“ என்றபடி வந்து நின்றான் ஜீவன்.

     வெளியே நின்றிருந்த சாணக்கியனைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்டவனாக, மனைவி பக்கம் திரும்பாமல், “உள்ளே வா பாகு“ நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் வண்ணம் பகீதரன் என்ற இயற்பெயரைச் சுருக்கி அழைத்தான் ஜீவன்.

     “நான் ஒன்னும்“ என்று சூடாக அவன் ஏதோ சொல்ல வர, “அவர் எதுக்கு நம்ம வீட்டுக்குள்ள வரணும்“ படபடப்பாய் கேட்டாள் வதனி. அதில் சாணக்கியனின் கோபம் தூண்டப்பட, “நான் ஒன்னும் உங்களையோ இல்லை உங்க ஆசைப் புருஷனையோ பார்க்க வரல மிஸஸ் சந்திரவதனி“ என்பதில் அந்த சந்திரா என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னவன் தொடர்ந்தான்.

     “மினிக்கும் எனக்கும் நடுவில் ஒரு கணக்கு இருக்கு. அது துவக்கக் கோட்டிலே நிற்பது தான் நல்லதுன்னு நினைச்சேன். அதுக்காக அவளைப் பார்க்க அவ இருக்கும் வீட்டுக்கு வர நினைச்சேன். 

     அவளைப் பார்க்க அவ இருக்கும் வீட்டுக்குத் தானே போக முடியும். அது உங்க வீடா இருந்தாலும் சரிதான் அம்பானி வீடா இருந்தாலும் சரிதான். சோ ப்ளீஸ் கொஞ்சம் வழிவிடுங்க. தெரியாத் தனமா உங்க மேல என்னோட நிழல் விழுந்திடப் போகுது“ என்றவனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் நூறு சதவிகிதம் நக்கலாக மட்டுமே இருந்தது.

     “பாரி உள்ளே போ“ மகனைப் பார்த்து வதனி கட்டளையிட, “பையன் பயந்திடுவான் வதனி“ என்றான் ஜீவன். இதெல்லாம் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் சாணக்கியன்.

     மேல் மாடியில் ஒரு அறை வாசலில் மட்டும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்க, மினிக்கு என்னவாயிற்று என்பது புரிந்தது அவனுக்கு. பெருமூச்சு ஒன்றை விட்டவன் எதுவும் சொல்லாமல் திரும்பிச் செல்ல முயற்சிக்கையில், “அவளுக்கு இரண்டு தண்ணீர் ஊற்றியாச்சு, தாராளமாப் பேசலாம்“ என்ற ஜீவன் மினி என குரல் கொடுக்க, “வரேன் அத்தான்“ என்று பதில் குரல் கொடுத்தாள் அவள். 

     அவள் குரல் கேட்ட மாத்திரத்தில் கோபம் கோபமாக வர கையை இறுக்கிக்கொண்டான் சாணக்கியன். அதைக் கவனித்து, “எங்களுக்கும் உனக்கும் இருக்கும் சம்பந்தம் எதுவும் மினிக்குத் தெரியாது. அவ பாவம், அவளோட அன்பு ரொம்பத் தூய்மையானது. 

     இதுவரை நடந்த எதிலும் உன்னோட தப்பு பெரிதா கிடையாது தான். ஆனால் எங்க மேல் இருக்கும் கோபத்தை அவ மேல் காட்டினா மன்னிக்கவே முடியாத பெரிய தப்பு பண்ணவனா ஆகிடுவ“ என்றான் ஜீவன். இதைக் கேட்டும் கேட்காதவன் போல் நின்று கொண்டான் சாணக்கியன்.

     கிராமப்புறங்களில் அம்மை வார்த்தால் அதற்கென்று கட்டுப்பாடுகள் நிறையவே உண்டு. அதற்கு ஏற்ப கம்மல், செயின் ஆரம்பித்து கொலுசு என எந்த நகையும் இல்லாமல், அம்மை இறங்கும் வரை தலையில் சீப்பு படக்கூடாது என மினியின் தாய் திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்ததால் கைகளால் சிக்கெடுத்து கொண்டை போட்டு, அழைத்தது அத்தான் என்பதால் அணிந்திருந்த காட்டன் நைட்டியோடு அலங்காரம் இல்லாத அம்மன் சிலையாக வந்த மினி தன் வீட்டில் நின்று கொண்டிருந்த சாணக்கியனைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து சாணக்கியன் என்ற அழைப்போடு அவனை நெருங்க, அவன் ஒரு பக்கம் விலகினான் என்றால் இன்னொரு பக்கம் வதனி அவளைத் தன்பக்கம் இழுக்க முயற்சித்தாள். அக்கா என்று அவள் அழைக்க, அந்த அழைப்பு நாராசமாக விழுந்தது சாணக்கியனின் காதுகளில். 

     “இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம், இவர் எதுக்காக உன்னைப் பார்க்க இங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கார்“ தங்கையின் கையில் தன் கரத்தால் அழுத்தம் கொடுத்தபடி கேட்டாள் வதனி.

     “இவர் சாணக்கியன் என்னோட கோச்“ என்ற மினி அடுத்த வார்த்தை சொல்லத் தடுமாறினாள். “அவ்வளவு தானா?“ இதைக் கேட்டது சாட்சாத் சாணக்கியனே. அவன் கேட்ட தொணியே வேண்டுமென்றே கேட்கிறான் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூறியது.

     “என… எனக்கு இவரைப் பிடிக்கும் அக்கா“ தடுமாறினாலும் சொல்லிவிட்டாள் மினி. தங்கையின் வார்தைகளில் தடுமாறி நின்றவளை திமிராக ஒரு பார்வை பார்த்தான் சாணக்கியன். அதில் தான் ஆயிரம் அர்த்தங்கள். 

     “பிடிக்கும் என்றால் எவ்வளவு பிடிக்கும்“ இதுவும் சாணக்கியனிடம் இருந்து தான் வந்தது.  சாதாரணமாக இவன் இப்படியெல்லாம் பேச மாட்டானே என்கிற யோசனையில் மினி அவனைப் பார்க்க, “உங்க அக்காவுக்கு உன்னோட மனசில் இருக்கும் ஆசையோட அளவை உணர்த்தனும் இல்லையா? அதுக்குத்தான்“ என்றவனை உற்றுக் கவனித்த வதனி, “வேண்டாம் சாணக்கியன் அவ சின்னப்பொண்ணு. நமக்குள்ள நடந்ததுக்காக அவளை வைச்சு விளையாட நினைக்காதீங்க“ என்றாள் எங்கோ பார்த்தபடி.

     “உன்னால் அரைஉயிராய் போன என் மீதி உயிரை எடுக்க நீ அவளை என்கூட பழக விட்டன்னு நானும் உன்னைச் சந்தேகப்படலாம் இல்லையா?“ விடாமல் கேட்டான் சாணக்கியன்.

     “நமக்குள்ள இருந்த தொடர்பு விட்டுப்போய் நாலு வருஷம் ஆச்சு. அதுக்கு முந்தைய ஒரு ஆறு வருஷம் என் வாழ்க்கையில் அழிந்து போயிடாதான்னு நான் ஏங்காத நாளே இல்லை. அப்படி இருக்க நானே தேரை இழுத்து தெருவில் விடுவேனா?“ தான் சொல்லும் இந்த வார்த்தைகள் எதிரில் இருப்பவனை எந்த அளவு பாதிக்கும் என்று தெரிந்தும் வேண்டுமென்றே சொன்னாள் வதனி.

     “அந்த ஆறு வருஷம் இல்ல, இந்த மினியை எனக்குத் தெரிந்த இரண்டு வருஷமும் கூட என் வாழ்க்கையில் வராமல் இருந்திருக்கலாம்“ என்றுவிட்டு சாணக்கியன் விலகப்பார்க்க, அவன் கரம் பிடித்துத் தடுத்தாள் மினி.

     அவன் பேசிய எதையும் அவள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. என்று இவன் தன்னிடம் ஆசையாகப் பேசி இருக்கிறான் இன்று பேச என நினைத்துக் கடந்தாளோ அது அவளுக்கே வெளிச்சம். “என்னைப் பார்க்க வந்துட்டு, பேசாம போறீங்க“ அத்தனை ஆசையாகக் கேட்டாள். 

     “உனக்கு என்னவோ ஏதோ என்று பசங்க பேசிக்கிட்டாங்க. இனி விளையாட வருவியா இல்லை உனக்குப் பதில் யாரையும் தேர்வு செய்யணுமா என்று கேட்பதற்காகத் தான் இங்கே வந்தேன். வந்த இடத்தில் உங்க அக்காவைப் பார்த்த நேரமே என்னோட கேள்விக்கான பதில் கிடைச்சுப் போச்சு. இனி இங்கே எனக்கு என்ன வேலை. 

     நான் கிளம்பினதும் வீட்டைச் சுத்தமா துடைக்கிற வேலை இருக்கும். வீடு வேற பெருசா இருக்கு, இப்பக் கிளம்பினா தான் உங்களுக்கு வசதியான இருக்கும்“ எதையோ மறைத்துப் பேசிவிட்டு வேகமாக நகர்ந்தவன் பின்னால் ஓடினாள் மினி.

     “சாணக்கியன்“ என்று அவன் கரம்பிடிக்க, “இதுவே கடைசி முறையா இருக்கட்டும். இனி கனவில் கூட என் கையைப் பிடிக்க ஆசைப்படாதே. நீ ஆசைப்படும் எதுவும் நடக்காது. சீக்கிரமா வீட்டுக்குள்ள போ, நிறைய கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டியது இருக்கும். அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்க வேண்டியது இருக்கும். அது எல்லாத்தையும் தொடர்ந்து ஒரு பெரிய முடிவுக்கு வர வேண்டியது இருக்கும். அத்தனை விஷயங்களையும் எப்படிச் சமாளிக்கப் போறன்னு எனக்கு வருத்தமா இருக்கு. என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்“ புதிர் போட்டுவிட்டு மொத்தமாக வெளியேறினான் சாணக்கியன்.

     “அக்கா அவரை உங்களுக்கு“ கேட்டுக்கொண்டே வந்த பெண்ணை உடல்நிலை சரியில்லாதவள் என்று கூடப் பாராமல் இழுத்து ஒரு அறைவிட்டாள் வதனி. வலித்த கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அதிர்வாகப் பார்த்தவளை கோபமாக முறைத்தவள், “என்னடி காதலா? படிக்கிற வயசில் படிப்பை விட அப்படி என்ன பெருசா காதல் வேண்டி கிடக்கு. அதுவும் போயும் போயும் அந்த ஆளைக் காதலிச்சு இருக்க“ என்க, ஒரே நேரத்தில் அக்கா, வதனி என இருவேறு குரல்கள் ஓங்கி ஒலித்தது அங்கே.

     “அவரை மரியாதையா பேசுங்க அக்கா“ என்க, மரியாதை என்று பற்களைக் கடித்தபடி மீண்டும் அறையப் போனாள் வதனி. “வயசுப்பொண்ணு, அதுவும் உடம்பு சரியில்லாத பொண்ணு சும்மா சும்மா கை நீட்டாத வதனி“ ஜீவன் சப்போட்டிற்கு வந்தான்.

     “ஆமா எய்தவன் எங்கோ இருக்கோ அம்பை எதுக்கு நொந்து கொள்வானேன். இந்த ஒட்டு மொத்த நாடகத்துக்கும் நீங்க தானே சூத்திரதாரி. படிக்கிற பொண்ணு மனசில் நஞ்சை விதைச்சு, அது தான் அமிர்தம் என்று அவளையும் நம்ப வைச்சு ஒரு ராஜநாகம் கிட்ட அனுப்பி வைச்சிருக்கீங்க இல்ல. 

     உங்க மனசில் இருக்கும் குற்றவுணர்ச்சி போறதுக்காக இப்படி ஒரு கேவலமான வேலையை நீங்க பார்த்து தான் ஆகணுமா ஜீவன். ஊர் உலகத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு எது வேண்டுமானாலும் செய்யும் எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது மினி மாதிரி ஒரு சின்னப்பொண்ணு வாழ்க்கையை தெரிந்தே கெடுக்கிறோமே என்கிற நினைப்பு கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு“ கண்டபடிக் கத்தினாள் வதனி. அவள் வார்த்தைகளில் மனம் வலித்தது ஜீவனுக்கு. ஆண்களிலும் மோப்பக் குழையும் அனிச்சமாக யாரேனும் இருக்கத் தானே செய்வார்கள்.

     “அக்கா என்னாச்சு உங்களுக்கு எதுக்காக அத்தானைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுறீங்க. எனக்கு சாணக்கியனைப் பிடிப்பதற்கும் அத்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்“ நிஜமாகவே மினிக்கு நடக்கும் எதுவும் புரியவில்லை தான். 

     “எப்படி சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இவர் தானே உன்னை அந்த பகீரதன் கூட பழக வைச்சது. தனியாக் கிடக்கும் அவருக்கு உன்னை செட் பண்ணி வைச்சு பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ணப் பார்க்கிறார்“ ஆத்திரத்தில் அறிவிழந்து பேசிக்கொண்டே போனாள் வதனி.

     “அக்கா என் விருப்பம் என்னோடது. சாணக்கியன் தான் என்னோட காதல் என்ற முடிவு யாரோட வற்புறுத்தலும் இல்லாமல் நான் எடுத்தது. அதுவும் ஏதோ முதல் நாள் பார்த்து அடுத்த நாள் எடுத்த முடிவு இல்லை. பல மாதம் யோசித்து எடுத்த முடிவு தான். என் முடிவுக்காக அத்தானைக் குற்றம் சொல்லாதீங்க. கூடவே என்னோட காதலையும் குறைவாப் பேசாதீங்க“ உரிமைப் போராட்டம் நடத்தியவளை கோபமாகப் பார்த்தாள் வதனி. 

     “உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு, யாரு என்னன்னு தெரியாம அப்படி என்ன அவன் மேல காதல். உன் அப்பா அம்மா உன்னை இங்க படிக்க அனுப்பினாங்களா? இல்ல லவ் பண்ண அனுப்பினாங்களா?“ அடித்தொண்டையில் இருந்து கத்தினாள். 

     எப்போதோ சாப்பிட்ட கசப்பு தொண்டை வழியாக மேலேறி அவள் வாய் முழுவதையும் கசக்க வைத்தது. அவள் வார்த்தைகள் அதைவிட கசப்பாக இருக்கிறது என்பதைப்புரிந்துகொள்ளாமல் தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

     “படிக்க வந்த இடத்தில் காதல் வந்தா அதில் எங்க தப்பு என்ன இருக்கு. இந்த வயதில் தான் காதலும் வரும். அதுக்கு யார் என்ன பண்ண முடியும். 

     அன்னைக்கு நீங்க தானே சொன்னீங்க காதல் எப்ப வரும், யார் மேல வரும் எவ்வளவு வரும் என்று யாருக்கும் தெரியாது. காதல் வந்த அப்புறம் அந்தக் காதலைத் தவிர வேற எதுவும் பெருசாத் தெரியாதுன்னு. 

     அதே மாதிரி தான், எனக்குள்ள அவர் எப்ப வந்தார் எப்படி வந்தாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா இப்ப என் மனசு முழுக்க அவர் மட்டும் தான் இருக்கார்“ அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் மின்மினி.

     “உனக்கு என்ன சொல்லி நான் புரியவைப்பேன். அந்த பகீரதன் உனக்கு வேண்டாம் மினி. அவன் கூட உன்னால் சந்தோஷமா வாழ முடியாது“ அடுத்த வார்த்தை பேச தொண்டை அடைத்தது வதனிக்கு.

     “அவரோட நிஜப்பெயரைச் சொல்லி கூப்பிடுறீங்கன்னா அவரோட கடந்தகாலத்தில் நடந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அதுக்காக தான் அவர் வேண்டாம் என்று நினைக்கிறீங்க என்றால் அது தப்பு அக்கா. நடந்த எதிலும் அவர் பக்கம் எந்தத் தப்பும் கிடையாது. எல்லாம் அந்த நிலாவைச் சொல்லணும். அவ பண்ண தப்புக்கு என் சாணக்கியன் எல்லோரிடமும் அவப்பெயர் வாங்குறார்“ அத்தனை உறுதியாகச் சொன்னாள். 

     தங்கையின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் உலகத்தின் கடைந்தெடுத்த கெட்டவார்த்தை போல் தோன்ற, காதுகளைப் பொத்திக்கொண்டாள் வதனி.

     “நீ ரொம்ப அவசரப்படுற மினி. பாலும் வெள்ளை தான் கள்ளும் வெள்ளை தான். ஆனால் இரண்டோட அடிப்படை குணமே வேற வேற. அப்படித்தான் அந்த பகீரதன். வெளித்தோற்றத்தை வைச்சு அவனை எடைபோடாதே, அவன் உள்ள இருப்பது அத்தனையும் விஷம் மட்டும் தான்“ தன்போக்கில் பேசிக்கொண்டே போகும் மனைவியைக் கட்டுப்படுத்த முடியாமல் வழக்கம் போல் அமைதியாய் நின்றிருந்தான் ஜீவன்.

     மீண்டும் மீண்டும் தன்னவனை அக்கா குறை சொல்வது பொறுக்காமல், “ஏன் அவருக்கு என்ன குறை. நல்ல படிச்சு இருக்கார், நல்லா சம்பாதிக்கிறார். எல்லாத்துக்கும் மேல எனக்கு அவரை ரொம்பப் புடிச்சிருக்கு. 

     எல்லோருக்கும் தெரியும் அவரோட குணம் வேற, அவரோட உண்மையான குணம் வேற. அவர் யார் எப்படிப்பட்டவர், அவரோட பலம் என்ன பலவீனம் என்ன. அவருக்கு என்ன வேணும் என்பதெல்லாம் அவரோட அப்பாவுக்கு அப்புறம் எனக்கு மட்டும் தான் தெரியும். 

     அவரோட வாழ்க்கையில் அனுபவிக்க கூடாத கஷ்டம் எல்லாம் அனுபவிச்சிட்டார். சந்தோஷமா வாழ வேண்டிய வயதில் தனியாக் கிடந்து கஷ்டப்படுறார். அவர் கஷ்டப்பட்டா எனக்கு வலிக்கிது, அந்த வலியை என்னால தாங்கிக்க முடியல. கண்ணை மூடினா அவர் அழுகிற மாதிரி கற்பனை வந்து கொல்லாமல் கொல்லுது. என்னோட அப்பா அம்மாகிட்ட பேசி என்னை அவருக்கே கொடுத்திடுங்க அத்தான்“ சிறுபிள்ளை அவளின் காதலும் சிறுபிள்ளைத் தனமாகத் தான் தெரிந்தது ஜீவனுக்கு. ஆனால் வதனிக்கும் அப்படித்தான் தெரிய வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் இல்லையே.

     “இங்க பார் மினி, இதெல்லாம் அந்த ஆள் மேல உனக்கு வந்த அக்கறையும் பரிதாபமும் மட்டும் தான். இதைக் காதல் என்று நினைச்சு உன் எதிர்காலத்தை வீணாக்கிக்காத. அக்கா சொல்வதைக் கேளு அவன் உனக்கு வேண்டாம்“ என்று தங்கையின் நாடியைப் பிடித்து தன்னை நோக்கித் திருப்பினாள் வதனி.

     “அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை அக்கா“கேட்ட தங்கைக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்க, அந்த இடத்தில் தான் முன்வந்தான் ஜீவன்.

 


Leave a comment


Comments


Related Post