இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 17) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 17-05-2024

Total Views: 18740

உனக்கென்றே உயிர் கொண்டேன் 17

தேவராஜ் மற்றும் தனம் கோவிலுக்கு சென்று திரும்பினர்.

தெய்வானை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

"அண்ணி பிரசாதம் எடுத்துக்கோங்க!" தனம் தெய்வானையின் முன்பு விபூதி, குங்கம்மத்தை நீட்டினார்.

தெய்வானை ஏதும் சொல்லாது அமைதியாக எடுத்து வைத்துக்கொண்டார்.

'இந்நேரத்துக்கு ஏதும் குத்தல் பேச்சு வந்திருக்கணுமே' என நினைத்த தனம்,

"உடம்பு ஏதும் சரியில்லையா அண்ணி?" எனக் கேட்டார்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. குத்துக்கலாட்டம் உன் முன்னால உட்கார்ந்துதானே இருக்கேன்" என்ற தெய்வானை, "பசி உயிர் போவுது சீக்கிரம் என்னத்தையாவது கிண்டி கெளறி தா" என்றார்.

'ம்ம்ம்... நார்மலாத்தான் இருக்காங்க. இப்படி பேசுனாதானே அது தெய்வானை' என நினைத்து சிறு சிரிப்போடு தனம் பூஜையறை நோக்கி செல்ல... மனைவியின் மன ஓட்டம் புரிந்த தேவராஜ் சிரித்துக்கொண்டார்.

"அம்மா எங்கே?" தேவராஜ் சுவற்றை பார்த்துக்கொண்டு கேட்க, "கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு முடங்கிட்டாங்க" என்ற தெய்வானை, "உன்கிட்ட ஒன்னு கேட்கணும். கேட்கட்டுமா அண்ணா?" என தயக்கத்தோடு கேட்டார்.

'தெய்வானைக்கு தயக்கமா?' தங்கையை ஏறிட்ட தேவராஜ் கேளு எனும் விதமாக விழிகளை கூர்மையாக்கினார்.

"அது வந்து..." என்றவர், "நான் டக்குன்னு விஷயத்துக்கு வரேன்" என்று அவர் சொல்ல வர,

"வந்துட்டிங்களாப்பா?" எனக் கேட்டுக்கொண்டே கீழிறங்கி வந்தான் தமிழ்.

தமிழைக் கண்டதும் தேவராஜ் அவன் பக்கம் திரும்பிக்கொள்ள, தெய்வானையின் பேச்சு தடைபட்டுப்போனது.

"மண்டபம் பிக்ஸ் பண்ணியாச்சுப்பா... இனி அடுத்தடுத்து என்னன்னு பார்க்கலாம்" என்று தமிழ் பேச்சினைத் துவங்க...

பூஜையறையிலிருந்து வெளிவந்த தனம், விரலில் எடுத்து வந்த விபூதியை தமிழின் நெற்றியில் இட்டவராக...

"நைட் என்ன சமைக்கட்டும் தமிழு?" எனக் கேட்டார்.

"சிம்பிளா லைட் ஃபுட்டா ஏதும் செய்ங்கம்மா" என்ற தமிழ், தேவராஜூடன் மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டான்.

"பூர்விக்கு என்னென்ன வாங்கணும், செய்யணும் எல்லாம் லிஸ்ட் போடணும் ப்பா. எதையும் மிஸ் பண்ணக்கூடாது. பூர்விக்கு எல்லாம் செய்யணும்" என்றவன், அடுத்தடுத்து திருமண வேலைகள் பற்றி பேசிட, அவர்களின் பேச்சு பூர்விக்கு வாங்க வேண்டிய நகைகளில் வந்து நின்றது.

அதுவரை அசூயையாகக் கேட்டுக்கொண்டிருந்த தெய்வானை காதை தீட்டிக்கொண்டார்.

"அடுத்தவாரம் ஆந்திராவுக்கு போன கேரட் லோடுக்கான பணம் வரும் ப்பா. கூடவே தேயிலை பணமும். பூர்வி எவ்வளவு கேட்டாலும் வாங்கிடலாம். போதலன்னா பேங்கில் இருக்கும் பணத்தில் எடுத்துக்கலாம்" என்ற தமிழை வாஞ்சையாக பார்த்தார் தேவராஜ்.

தெய்வானைக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"இப்போ புதுசா வாங்கிய தோட்டத்தை பூர்விக்கு கொடுத்திடலாம் ப்பா. எழுதும்போதே அக்கா பெயரில் எழுத சொன்னேன். இப்போ எழுதிடலாம்" என்றான்.

கூட பிறந்தவர்களுக்கு கொடுக்கும் மனம் வருவது எளிதல்லவே! தமிழின் முன்னுச்சி முடியை கோதி விட்டார் தேவராஜ். புன்னகையுடன்.

தன் பிள்ளைகளின் பாசம் அறிந்தவர் தான். இன்று தமிழின் பேச்சு... தன் காலத்திற்கு பிறகு, பூர்வியின் கடைசி காலம் வரைகூட தன் மகன் தமக்கைக்காக செய்வான் என்று பெருமிதம் கொண்டார்.

"எல்லாத்தையும் அவளுக்கே கொடுத்திட்டால் உனக்குன்னு எதுவும் வேணாமா தமிழு?"

எங்கே தமிழை கட்டிக்கப்போகும் தன் மகளுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் கேட்டார் தெய்வானை.

அவரை விவரிக்க முடியாத பாவனையில் ஏறிட்ட தமிழ்...

"இந்த ஒரு தோட்டம் மட்டும் தான் இருக்கா என்ன?" எனக் கேட்டான்.

"நகை, பணம், தோட்டம், பாத்திர பண்டமுன்னு நீ அடுக்கிறதை பார்த்தாக்கா பேங்கில் இருக்கும் மொத்தத்தையும் பூர்வி கல்யாணத்துக்கே காலி பண்ணிடுவ போலிருக்கே!" என்றார் தெய்வானை.

தேவராஜ் ஆயாசமாக பார்த்தார். எதற்கு இந்த கேள்விகள் என்று.

"நான் சம்பாதிக்கிறதே என் அக்காவுக்காகத்தான்னு வச்சிக்கோங்களேன்!" ஒரே வரியில் அவரின் வாயினை அடைக்கச் செய்தான் தமிழ்.

தான் பார்த்து பிறந்து வளர்ந்தவன் முன் அடங்கிப்போவதா என்று நினைத்த தெய்வானை அப்பேச்சினை மேலும் வளர்த்தார். உடன் தமிழின் கோபத்தையும்.

"நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வருவாள். உனக்கும் குடும்பமாகும். அப்பவும் இதை சொல்லுவியா? இல்லை உன்னைக் கட்டிக்கிறவள் சொல்லவிட்டுடுவாளா? நிச்சயம் சொல்லமாட்டாள்." 

வர்ஷினியை மனதில் வைத்து தெய்வானை கேட்டார். தன் மகள் தன் பேச்சை தட்டமாட்டாள் எனும் எண்ணத்தில். பாவம் அவருக்கே அவரது மகளைப் பற்றி முழுதாக தெரியவில்லை.

"எனக்குன்னு வருகிறவள் நிச்சயம் என்னை மட்டுமே விரும்புகிறவளாகத்தான் இருக்கும். அவளுக்கு இந்த பணம், சொத்தெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. அவள் எனக்கும் மேல் பூர்வியை பார்த்துக் கொள்கிறவளாகத்தான் இருப்பாள்" என்றான். மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவனாக. அவனின் மொழியை மனதில் வைத்து.

தேவராஜிற்கு மகனின் மனம் புரிந்தது.

சமையல் செய்து கொண்டிருந்தாலும், தனத்திற்கு வெளிப்பேச்சு நன்கு கேட்கத்தான் செய்தது. தமிழின் வார்த்தைகளில் மனதில் அத்தனை நிறைவை உணர்ந்தார்.

அவன் யாரை வைத்துக் கூறுகிறான் என்பது அறிந்தவருக்கு... தன்னுடைய மகனே அவளை இத்தனை உயர்த்தி எண்ணும் போது தன் மருமகள் நிச்சயம் குணத்தாலும், பண்பாலும் உயர்ந்தவளாகத்தான் இருக்குமென்று பார்த்தே இராத வெண்பாவின் மீது நல்லெண்ணம் தோன்றியது.

'அந்தப்பொண்ணை பார்க்காமலே புடிக்க வச்சிடுவான் போலயே!' வாணலியில் தாளிப்பை சேர்த்துக்கொண்டே முகத்தில் புன்னகையையும் சேர்த்துக் கொண்டார் தனம்.

தமிழின் பேச்சினைக் கேட்டு உதடு சுளித்த தெய்வானை...

'உன் எண்ணம் ரொம்ப தப்பு தமிழு. வர்ஷினியை உன் அளவுக்கு ஏமாளியாக நான் வளர்க்கவில்லை. அவளை நீ சொல்லுவதைப்போல் செய்யவும் விடமாட்டேன்' என்று மனதில் அழுக்காய் எண்ணிக்கொண்டார்.

சொந்தங்களை அரவணைத்து உடன் பிறந்தோருக்கு செய்வது ஏமாளித்தனமா என்ன? தெய்வானையின் கருத்துக்கள் மாறுபட்டவை தானே! இல்லையென்றால் இத்தனை வருடங்களாக கணவனை விலக்கி வைத்திருப்பாரா என்ன?

திடீரென அகிலாண்டம் தனக்கு எதிராக திரும்புவது அதிர்ச்சியாக இருந்தாலும், காலம் கடந்து அவரால் சொல்லப்படும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள தெய்வானை தயாரில்லையே!

இன்று போல் அகிலாண்டம் இன்னும் இருமுறை பேசினால் தாயென்றும் பாராது, அவரையும் ஒதுக்கி வைத்திடுவார் தெய்வானை.

உறவுகள் சூழ அன்பாய் வாழும் வாழ்வு எத்தனை இனிமையானது என்று அவருக்கு இத்தனை வயதாகியும் தெரிந்திருக்கவில்லை.

தமிழ் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டது சொல்லியது தெய்வானையின் கோபத்தை அதிகரித்தது.

"என்ன தமிழு ஏற்கனவே பொண்ணை பார்த்து வச்சிட்டதாட்டாம் பேசுற?" எனக் கேட்டார்.

சற்று முன்னர் தேவராஜிடம் பூர்வி திருமணம் முடிந்ததும், தமிழ், வர்ஷி கல்யாணத்தைப் பற்றி பேசத்தான் வாய் எடுத்தார். தற்போதைய நிலையில் அவரால் அகிலாண்டத்தையும் எந்தளவிற்கு நம்புவதென்று தெரியவில்லை. வர்ஷினி நடந்துகொள்ளும் முறையை வைத்து அவளும் எந்தளவிற்கு ஒத்துழைப்பு அளிப்பாள் என்பது தெரியாததால், தானே களத்தில் இறங்கிட முடிவு செய்துவிட்டார். இந்த கேள்வியின் மூலமாக தன் எண்ணத்தை சொல்லிட முடிவு செய்து கேட்டவரின் சகலத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தான் தமிழ். தன் ஒற்றை வார்த்தை பதிலால்.

"ஆமாம்..."

தமிழ் ஆமென்று சொல்லியதில் தெய்வானைக்கு மூளையும், மனமும் செயல்படாது நின்றிருந்தது.

அவரை அழுத்தமாக பார்த்தவன் மேலேறி சென்றுவிட்டான்.

எத்தனை நேரம் நகர்ந்ததோ...

தனம் வந்து சாப்பிட அழைத்ததும் தான் தெய்வானை நிகழ் மீண்டார்.

"உன் பையன் சொல்லிட்டு போறதை பார்த்தியாண்ணா? ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டேன்னு சொல்றான். நீயும் அமைதியா இருக்க?" என்று குறைப்பட்டார் தெய்வானை.

"அவன் கல்யாணம். அவன் முடிவு தானே!" தனத்தை பார்த்துக்கொண்டு சொல்லிய தேவராஜ், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டவராக எழுந்துச் சென்றார்.

தெய்வானைக்கு எல்லா பக்கமும் இருண்டது. 

'தான் நினைப்பது நடக்காதோ?'

என்னென்னவோ யோசித்தார். யாவும் அத்தனை நல்லாதாக இல்லை. 

'பூர்வி கல்யாணம் முடியட்டும். பார்த்துக்கிறேன்' என நினைத்தவர், தமிழ் தன்னை வாய் மூட வைப்பதற்காக ஆமென்று பொய் சொன்னதாகவே எண்ணினார்.

அவன் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் என்பது அறிய நேரிடும் போது என்ன எண்ணம் கொள்வாரோ?

********

அன்று வெளியில் சென்றுவிட்டதால், கேரட் தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களின் அன்றைய கணக்குகளை மடிக்கணினியில் சரி பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்.

பூர்வியிடமிருந்து அழைப்பு.

நேரத்தை பார்த்தான். பத்தை தொட்டிருந்தது.

'இந்த வீக் நைட் ஷிஃப்ட் ஆச்சே! இந்நேரம் ஆபிஸில் இருந்துட்டு கால் பன்றாங்க' என நினைத்தபடி அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

"பூர்வி..."

"என்னடா தம்பி பன்ற?"

"ஹான்... என்னவோ? குரலில் உற்சாகம் வழியுது. மாமா கால் பண்ணாங்களா?" சிரித்துக்கொண்டே பார்வையை கணினி திரையில் பதித்தபடியே வினவினான்.

"இல்லை என் நாத்தனார் பேசினாங்க!"

பூர்வி தமிழை வெறுப்பேற்றவென்று சொல்ல... அவனோ மகிழ்வாய்,

"பாருடா... என்ன பேசினாங்களாம்?" என்றான்.

"ஈவ்வினிங்கே வெண்பா உன் நெம்பர் கேட்கிறாள். கொடுக்கவான்னு அஸ்வின் டெக்ஸ்ட் பண்ணினார் டா. நான் தூங்கிட்டு இருந்தேன். ஆபீஸ் கிளம்பிட்டு தான் ரிப்பிளை பண்ணேன். அடுத்த பைவ் செக்கில் மேடம் வாட்ஸப் பண்ணாங்க" என்றவள்,

"என்னடா தம்பி இன்னைக்கு பாப்ஸிகல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டியாக்கும்?" என்று ஒரு மாதிரி கேலியாக இழுத்துக் கேட்டாள்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டவன், "மாம்ஸ் சொன்னாரா?" என்றும் கேட்டான்.

"ம்ஹூம்" என்ற பூர்வி, "வெண்பா வாட்ஸப் டிபி" என்றாள்.

"வாட்!" என்று ஆச்சரியமாகிய தமிழ், "மேடத்துக்கு அந்தளவுக்கு தைரியம் வந்திருக்காதே!" என்றவனாக புலனத்தில் வெண்பாவின் கணக்கை திறந்து பார்க்க...

காலை அவன் தன் கையில் ஐஸ்க்ரீம் இருப்பதைப்போல் அனுப்பிய புகைப்படத்தில், ஐஸுடன் சேர்ந்த அவனது கையை மட்டும் க்ராப் செய்து முகப்பு படத்தில் வைத்திருந்தாள்.

'அதானே... மேடமுக்கு ஏதுடா இவ்வளவு தைரியமுன்னு' என மனதோடு நினைத்து...

"அச்சோ அக்கா... அவள் தர்பூசணி பைத்தியம். அதை வாங்கிக் கொடுத்திட்டால் போதும். ஈஸியா யாரா இருந்தாலும் ஒட்டிப்பாள்" என்று புன்னகையுடன் கூறியவன், "சில சமயம் அந்த ப்ரூட் மேல ஒரே ஜெலஸ் ஆகும் பூர்வி" என்றான் மெல்லிய ஒலியில்.

பூர்வி அலுவலகத்தில் இருப்பதையும் மறந்து தமிழ் சொல்லிய பாவனையில் சத்தமிட்டு சிரித்தாள்.

"உனக்கு வில்லன் தர்பூசணி தான் போல?" என்றும் சிரித்தாள்.

"ம்க்கும்... இப்போ சம்மர் டைம் வேறா... ப்ரூட் சீசன் டைம், டெய்லி கேண்டினில் வாட்டர்மெலன் ஜூஸ் குடிக்கிற மாதிரி ஸ்டேட்டஸ். அதான் இன்னைக்கு நான் வெறுப்பேத்தலான்னு அனுப்பினேன்" என்றான்.

"டேய்... நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை விட்டு ஒரு பழத்தை வச்சிக்கிட்டு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க" என்ற பூர்வியின் சிரிப்பு அளவில்லாது நீண்டது.

"விடுங்க... விடுங்க... இந்த சொல்லாத லவ்வும் நல்லாதான் இருக்கு" என்றவன் "இன்னைக்கு அனுப்பினேன் எப்படித் தெரிந்தது?" எனக் கேட்டான்.

"உன் வாட்ச். அதிலிருக்கும் டேட்" என்றாள்.

"ஹ்ம்ம்..."

"நீ வாட்ச் லெப்ட் ஹேண்டில் தான் கட்டுவ. பூர்வி வாட்ச் பிரசன்ட் பண்ண அப்புறம் தான் ரைட் ஹேண்ட். ரீசன் நிறைய டைம் கேட்டுட்டேன். இப்போவாவது சொல்லு தமிழ்" என அடமாகக் கேட்டாள்.

"நீங்க மொழி என்ன பேசினான்னு இன்னும் சொல்லல!"

நீ கேட்பதற்கு பதில் சொல்ல முடியாதென வேறு கேள்வி கேட்டிருந்தான்.

"மார்னிங் வொர்க் முடிந்ததும், ஆபிஸிலிருந்து நேரே கிளம்புறேன். ஸ்டேஷன் வந்திடு" என்ற பூர்வியும் அவனது கேள்விக்கு பதில் சொல்லாது வைத்துவிட்டாள்.

"ரொம்பத்தான்" என்று தமக்கைக்கு தகவல் அனுப்பியவன், வெண்பாவின் புலனம் பக்கத்தை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வெண்பா ஆன்லைனில் இருப்பதாகக் காட்டியது.

சட்டென்று அவளது முகப்பு படத்தைச் சுற்றி பச்சை வர்ணம் ஒளிர,

'ஸ்டேட்டஸ் அப்டேட்டா' என திறந்து பார்த்தான்.

நேற்று இறுதிநாள் என்பதால்  நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வைத்து கேப்ஷனில் சிவப்பு நிற இதயம் வைத்திருந்தாள்.

பத்து பேர் இருந்த குழுவில் இவள் மட்டுமே பெண். அவளது வகுப்பில் அவள் மட்டும் தானே! பல ஆண்களுக்கு நடுவில் தனித்து தெரிந்தாள். கேக் வெட்டியிருப்பார்கள் போலும், அனைவரின் முகத்திலும் கேக்கின் பிரதிபலிப்பு. தன்னவளை மிகைப்படுத்தி பார்த்தவன், கடைசியாகத்தான் இதயத்தை பார்த்தான்.

என்ன உணர்ந்தானோ... அவள் சாதாரணமாக நண்பர்கள் எனும் முறையில் வைத்திருக்கிறாள் என்பது புரிகிறது. ஆனால் மனதால் அதனை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்களிடம் பேசக்கூடாது பழக்கூடாது எனும் ரகமில்லை அவன். ஏனோ இந்த சிறு விஷயம் அவனின் மனதை அலைப்புற வைத்தது. இதயத்தை தவிர்த்து வேறெதுவும் வைத்திருந்தால் இத்தனை அவஸ்தை கொண்டிருக்கமாட்டானோ?

உடனே வெண்பாவுக்கு அழைத்து விட்டான்.

அவளோ அஸ்வினிடம் பேசிக்கொண்டிருக்க...

"கால் யூ லேட்டர் பாஸ்" என்று தகவல் அனுப்பி வைத்தாள்.

தகவலை பார்த்ததும் அலைபேசியை மெத்தையில் தூக்கி எரிந்தவன், மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.

'அதெப்படி அவள் இதயத்தை வைக்கலாம்' என்கிற கோபம்.

தமிழ் உறக்கத்தை தழுவிய கணம் வெண்பாவிடமிருந்து அழைப்பு. அரை கண்கள் திறந்தவன், அழைப்பைத் துண்டித்தான்.

முழு அழைப்பும் முடிந்திருந்தால், உறங்கிவிட்டான் என நினைத்து விட்டிருப்பாள். இரண்டு ரிங்கிலே அவன் துண்டித்தது மனதிற்கு என்னவோ போலிருக்க மீண்டும் முயற்சித்தாள்.

அவன் ஒரு போதும் இப்படி செய்தது இல்லையே! பதறிப்போனாள். சட்டென்று இதயத்தில் வருத்தம் சேர்ந்தது.

இம்முறை ஏற்றிருந்தான்.

அவனாலும் அதற்கு மேல் அவளை தவிர்க்க முடியவில்லை. முடியாது.

"சொல்லுங்க மேடம்?"

"கோபமா இருக்கீங்களா?"

தமிழின் குரல் பேதத்தில் கண்டுகொண்டவளாகக் கேட்டிருந்தாள்.

"இல்லையே!"

"கால் எடுக்கலன்னு கோபமா? அண்ணாகிட்ட பேசிட்டு இருந்தேன்." அவனது பற்றற்ற பேச்சில் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டிருந்தது. தமிழின் இம்மாதிரியான விலகல் பேச்சு இதுவே முதல் முறை.

தமிழிடம் மௌனம்.

"சீனியர்..." மெல்ல விளித்தாள்.

"கோபம் வர எனக்கென்ன உரிமை இருக்கு?"

"தமிழ் ப்ளீஸ்..." தழுதழுப்பாக ஒலித்தது அவளின் குரல். அவன் பெயரை அவள் உச்சரித்துக் கேட்கிறான். இது இரண்டாம் முறை. அன்று அவள் சொல்லியதைக் காட்டிலும், இன்று அவளின் அழுகையில் தோய்ந்து வெளிவந்த அந்த விளிப்பு அவனுள் ஆயிரம் மின்னலை ஒருசேர ஒரே பாய்ச்சலில் உட்புகுத்தியதைப் போல் உணர்ந்தான்.

அழுகிறாள். அவனின் சிறு கோபமும் அவளை வதைக்கிறது. தன் மீதான அவளின் காதலை உணர்கிறான். எப்படி இருக்கிறதாம்?

அந்நொடியே காதலை சொல்லிட படபடத்தை நெஞ்சத்தை நீவிக்கொண்டான்.

இருவரும் சொல்லிக்கொள்ளாமலே ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்ளும் இந்த காதல் இன்பம் அவனுக்கு அதீதாய் பிடித்தது.

சொல்லத்துடித்த மனதை அடக்கிக்கொண்டான்.

அவளின் குரலே அவனின் கோபத்தை போக்கிட போதுமானதாக இருந்தது.

இருப்பினும் இழுத்துப் பிடித்த பொய் கோபத்துடன்,

"ஹார்ட் எதுக்கு வைத்தாய்?" எனக் கேட்டான்.

வெண்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹார்ட்டா? நான் எங்கே வைத்தேன்?"

"நல்லா யோசி!"

"என்ன ஹார்ட் சீனியர்?"

'தமிழ் சீனியர் ஆகியாச்சு.' மனதோடு குறைப்பட்டுக் கொண்டான்.

"பொஸஸிவ் ஆகுது மொழி!" கரகரத்து ஒலித்த அவனது குரலில் மேனி சிலிர்க்க உறைந்து போனாள்.

"என்ன சொல்ல? எப்படி சொல்ல? ஒன்னும் தெரியல?" என்றவன், "புரியுதா உனக்கு?" எனக் கேட்டிருந்தான்.

கட்டி வைத்தாலும் அவனது காதல் மனம் பீறிட்டு வெளிவந்தது. அவனது வார்த்தைகளாக.

"சீ... சீனியர்... என்...ன்... என்ன சொல்றீங்க?" அவனது பேச்சும் குரலும், அதில் தெரியும் இனம் புரியா ஒன்றும் அவளை படபடக்கச் செய்தது. இதயம் சில்லிப்பாய் நனைய வைத்தது.

"நத்திங்" என்றவன், "கோபமெல்லாம் இல்லை. தூங்குடா. குட் நைட்" என்று வைத்துவிட்டான்.

குழம்பி தவித்தாள்.

'என்னாச்சு?' அவனது பேச்சுக்களை அசை போட்டுக் கொண்டிருந்தவளுக்கு தூக்கம் தூரம் சென்றது.

புரண்டு புரண்டு படுத்தவளின் காதில்,

"பொஸஸிவ் ஆகுது மொழி" என்று ஒலித்த அந்த குரலே மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

"என்னவோ சொல்றாங்க. புரியலையே!" என தலையை பிடித்துக்கொண்டவள், "இது வேலைக்கு ஆவதில்லை" என்று எழுந்து அமர்ந்து அவனுக்கு அழைப்பு விடுக்க அலைபேசியை எடுக்க, அவளின் வகுப்புத் தோழன் அவள் ஸ்டேட்டஸில் வைத்திருக்கும் புகைப்படம் அனுப்புமாறு கேட்டு அனுப்பியிருந்த தகவல் திரையின் மேலே ஒளிர, தமிழ் எதற்கு வைத்தாய் எனக் கேட்டது புரிந்தது.

"அச்சோ" என்று அலைபேசியாலே நெற்றியில் முட்டிக்கொண்டவள், உடனடியாக புலனத்தில் பதிவேற்றியிருந்த இதயத்துடன் கூடிய புகைப்படத்தை நீக்கியிருந்தாள். இதயமற்று பதிவேற்றம் செய்தாள்.

'மொழியோட இதயம் தமிழுக்குத்தான்னு தெரியாதா?' அருகில் இல்லாதவனிடம் கேள்வி கேட்டாள்.

'பொஸஸிவ் ஆகுதாமே!' சன்னமாக சிரித்துக்கொண்டாள்.

'எப்போல இருந்து சீனியர்?' உள்ளுக்குள் அவனின் காதலை உள் வாங்கியவளாக இதம் உணர்ந்தாள்.

உடனடியாக புலனத்தில் தமிழுக்கு ஒற்றை இதயத்தை அனுப்பி வைத்தவள்,

"சொன்னா தான் தெரியுமா சீனியர்? உங்களுக்குதான்னு தெரியாதா?" என்று அதன் கீழே அனுப்பி, நொடியில் அழித்தும் இருந்தாள்.

காதலிக்க இருக்கும் தைரியம், அவனுக்காக அவனைத்தேடி ஊர் தாண்டி செல்லும்போது இருந்த தைரியம், காதலை அவனிடம் உரைப்பதில் அவளுக்கில்லை.

சட்டென்று சில்லிட்ட உள்ளங்கையை வேகமாக துடைத்துக்கொண்டாள்.

வெண்பாவிடம் பேசிவிட்டு வைத்தவன், 'அழ வைத்துவிட்டோமோ?' என்ற யோசனையில் உறங்காது அமர்ந்திருக்க, அவள் இதயத்தை அனுப்பியதும் நோட்டிபிக்கேஷன் பாரில் பார்த்துவிட்டான்.

"கண்டுபிடிச்சிட்டாள்." 

தான் சொல்லாமலே தன் மனம் தன்னவளுக்கு புரிகிறது என்பதில் பேருவகை அடைந்தான்.

அடுத்து அவள் அனுப்பிய வரியையும் அவ்வாறே அவன் பார்த்திருக்க, அவன் புலனம் வரவில்லையென எண்ணி அவள் அழித்திருந்தாள்.

"சொல்லிட்டாள்" என்று அவன் ஆர்ப்பரிக்கும் முன் வடிய வைத்திருந்தாள்.

"படுத்தி வைக்கிறாள்" என்று முணுமுணுத்தவன் உள்ளே சென்று, "என்ன டெலிட் பண்ண?" என வேண்டுமென்றே பார்க்காததைப்போல் கேட்டான்.

அப்போதுதான் அவன் பார்க்கவில்லை என்று முழுதாக ஆசுவாசம் கொண்டாள்.

"டைப்போ மிஸ்டேக் பாஸ்" என்றவள், "ஹார்ட் ரிமூவ் பண்ணிட்டேன்" என்றாள்.

'கேடி.' உள்ளுக்குள் செல்லமாக வைதான் அவளை.

"எதுக்கு ஹார்ட்?" வேண்டுமென்றே சீண்டினான்.

"ரிமூவ்ட் சொல்லத்தான்." பொய் சொல்ல வராது தினறிப்போனாள்.

அவன் மேற்கொண்டு ஏதும் கேட்பானோ என நினைத்தவள்,

"தூக்கம் வருது பாஸ். குட்நைட்" என்று அனுப்பி வைத்து வேகமாக ஆன்லைனிலிருந்து வெளியேறியிருந்தாள்.

அவளின் தற்போதைய நிலை என்னவாக இருக்குமென்று அவள் அருகில் இல்லாமலே உணர்ந்து கொண்டவன்...

"எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்கிறேன்" என்றவனாக, மேசை மீதிருந்த புகைப்படத்தை எட்டி எடுத்து அவளின் கன்னம் கிள்ளியவனாக, அவள் தந்த மகிழ்வோடு உறங்கிப்போனான்.



Leave a comment


Comments


Related Post