இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 17-05-2024

Total Views: 24241

இதயம் 21

     “ஜீவன் அவகிட்ட எதையும் சொல்ல வேண்டாம்“ வதனி சற்றே பதறினாள். “நம்ம மேல எந்தத் தப்பும் இல்லை தானே வதனி. நடந்தது முழுசா அவளுக்குத் தெரிந்தால் தானே சாணக்கியன் வேணுமா வேண்டாமா என்பதில் அவள் ஒரு முடிவுக்கு வர முடியும்“ என்ற கணவனின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை அவளால். 

     நடந்த அனைத்திலும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை  தங்கை புரிந்துகொள்வாளா? இல்லை மற்றவர்களைப் போல் தவறாகப் புரிந்துகொள்வாளா என்ற பயம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

     மச்சினியின் முன்னே வந்து கை கட்டி நின்ற ஜீவன், “சாணக்கியனைப் பத்தி உனக்கு எவ்வளவு தூரம் தெரியும்“ நேரடியாகவே கேட்டான்.

     “அவருக்கு இதுக்கு முன்னாடி ஒரு வாழ்க்கை இருந்தது. நிலான்னு ஒரு பொண்ணு“ தயங்கினாள். அவர்களுக்கு தன்னவனைப் பற்றி எத்தனை தெரியும் என்று தெரியாமல் தானே சொல்லி அவனைச் சங்கடப்படுத்திவிடக்கூடாதே என்கிற எண்ணம் அவளிடத்தில்.

     “சாணக்கியன் வாழ்க்கையில் இருந்தது நிலான்னு ஒரு பொண்ணு தானா“ ஜீவன் இப்படிக் கேட்க மினிக்கு சந்தேகம் வந்தது. எழிலுக்குக் கூட சில விஷயங்கள் தெரியாது என்று அரசன் சொல்லி இருக்க, தன்னவனைப் பற்றி தன் அத்தானுக்கு எப்படி இத்தனை துல்லியமாகத் தெரியும் என்று அவள் யோசிக்கலையிலே பெரிய விஷயம் ஒன்றைச் சொன்னான் ஜீவன்.

     “சாணக்கியன் வாழ்க்கையில் இருந்தது மொத்தம் இரண்டு பொண்ணுங்க. இரண்டு பேரோட பேருமே நிலா தான். ஒருத்தங்க அவன் கூடப்பிறந்த அக்கா. பெத்தெடுத்த அம்மாவை விட அதிகமா அவன் மேல் பாசம் வைத்து கண்ணும் கருத்துமா வளர்த்தவங்க.

     இன்னொருத்தி பருவ வயதில் இருந்து அவன் ஆசைப்பட்ட பொண்ணு, அவளுக்கு அவன் வைச்ச செல்லப்பெயர் நிலா. உண்மையான பெயர்“ என்று சில நொடிகள் தாமதித்தவன் சந்திரவதனி என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

     பூமி இரண்டாகப் பிளந்து அதற்குள் விழுந்தது போல் துடித்த மினியின் கண்கள் தானாக தன் அக்காவைப் பார்க்க, அவளோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.

     கண்கொண்டு பார்த்திடாத சாணக்கியனின் முதல் மனைவியை ஆம் மனைவி தான், கண்மூடித்தனமாக வெறுத்துக்கொண்டிருந்தவள் மினி. இப்போது வந்து அப்படி நீ வெறுத்துக்கொண்டிருப்பது உன் பாசமான அக்காவைத்தான் என்று சொன்னால் அவளால் இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நின்ற இடத்திலேயே மடங்கி அமர்ந்தாள். பலம் இல்லாத உடலைக் கொண்டிருந்தவளால் இத்தனை பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியிவில்லை. ஆனால் அவளுக்கான அதிர்ச்சிகள் அதோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

     கவனம் முழுவதும் எங்கோ இருந்தாலும் தன்னிச்சையாய் வாகனம் ஓடிக்கொண்டிருந்தது சாணக்கியனின் கரங்களில். நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு நிலா என்ற பெயரை அவளுக்காகச் சொல்லிப் பார்த்தான். மனம் முழுவதும் பாறாங்கல்லாய் கனத்துக்கிடந்தது. எத்தனை ஆசையாய் காதலித்தான். அத்தனையும் கொதிநீர் ஊற்று போல் காணாமல் போனது காலத்தோடு சேர்த்து அவள் செய்த கோலத்தில்.

     எப்போதும் அவனைத் துரத்தும் கடந்தகால நினைவு இப்போதும் அவனைத் தாக்குவதற்காக வந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதைத் துரத்தாமல் விட்டதால் அது கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தன்னுள் இழுத்துக்கொண்டது.

     சந்திரவதனியின் தந்தை செல்வமும், அரசனும் பால்ய சிநேகிதர்கள். செல்வம் கிராமத்தில் உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் முடித்த கையோடு சென்னை வந்தவர் குடியேறியது அரசனின் வீட்டிற்கு அருகில் தான். அன்றைய நாளில் இருந்து அவர்கள் குடும்பம் நல்ல நண்பர்களாகத் தான் பழகி வந்தனர்.

     அரசனுக்கு ஒரு பெண் நிலா அந்த நேரத்தில் ஐந்து வயது நிரம்பியவள். அவள் அன்னை சாணக்கியன் என்னும் பகீதரனை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த தருணம் அது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்த மனைவியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அரசன். 

     வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சொல்வது போல் விதி தன் கொடூர முகத்தைக் காட்ட நினைக்கும் போது அதைத் தடுக்க யாரால் முடியும். நிறைமாத கர்ப்பிணி வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவர்களால் குழந்தையை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது. அன்றில் இருந்து நிலா தான் தம்பி பகீரதனுக்குத் தாய். 

     வதனியின் தாய் உதவியுடன் தம்பியை இமைக்குள் வைத்துப் பாதுகாத்தாள் அந்த சுட்டிப்பெண். பகீரதனுக்கு மூன்று வயது இருக்கும் போது வதனி பிறந்தாள். நாள்கள் இறக்கை கட்டிப்பிறந்தது. நிலா வதனியை விட எட்டு வயது மூத்தவள் என்றாலும் வதனிக்கும் நிலாவுக்கும் இடையில் நல்ல நட்பு ஒன்று உருவாகி இருந்தது. காதலுக்கு மட்டும் அல்ல நட்புக்கு கூட எந்த வரையறையும் கிடையாது தானே.

     சந்திரவதனி என்று பெயர் வைத்தாலும் சந்திரா என்று தான் அழைத்தனர் அவள் பெற்றோர். குழந்தை பகீரதன் அவளையும் நிலா என்று தான் அழைப்பான். சந்திரா என்பதால் நிலா என்று அழைக்கிறான் என அனைவரும் நினைத்திருக்க, அவனோ தன் அக்காவிற்கு அடுத்து தனக்கு மிகவும் பிடித்த பெண் என்பதால் நிலா என்று அழைத்தான். அவனுக்குப் பிடித்த பெண்கள் யாவரும் அவனுக்கு நிலாதான். அது அவன் அக்கா நிலாவைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.

     காலங்கள் உருண்டோட பகீரதன் பதினேழு வயதில் இருக்கும் போது இருபத்திமூன்று வயதில் அடியெடுத்து வைத்த  நிலாவைப் பெண் கேட்டு நல்ல சம்பந்தம் ஒன்று வந்தது. வந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் நிலாவுக்கும் பிடித்தது. 

     ஆனால் திருமணம் முடிந்தவுடன் கணவன் மனைவி இருவரும் கனடா செல்லவேண்டும் என்று பேச்சு வர ஆரம்பித்ததும் பகீரதன் விடாப்பிடியாய் நின்று அந்தத்  திருமணத்தை நிறுத்தினான். அவனுக்கு அக்காவைத் தனியே அனுப்புவதிலேயே இஷ்டம் இல்லை என்னும் போது வெளிநாட்டுக்கு அனுப்ப மனம் வந்துவிடுமா என்ன. 

     நிலா என்பவள் பகீரதனின் உயிரோடு கலந்தவள். அவள் வெகுதொலைவு சென்றுவிட்டால் தன்னால் நிம்மதியாக சுவாசிக்க கூட முடியாது என்று கருதி தான் அவன் இத்தனையும் செய்தது. ஆனால் தன் நிம்மதிக்காக அக்காவுக்கு கிடைக்க இருந்த அவளுக்குப் பிடித்த வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொண்ட நேரம் அனைத்தும் கையை மீறிச் சென்றிருந்தது. 

     வதனி பதினேழு வயதில் இருக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு வரும் பருவ நோய் அவளையும் தாக்கியது. கண்ணுக்கு முன் இருபது வயதில் ஆணழகனாய் நடமாடும் பகீரதனைக் ஆசையாய் இரசிக்க ஆரம்பித்தாள். நிலாவின் பார்வையிலும் இது விழுந்தது. ஆனால் கண்டுகொள்ளாமல் இருந்தாள். வதனி தன் தம்பியை மணந்தால் எல்லோருக்குமே அது நல்லது தானே என்று நினைத்து அமைதியானாள். 

     அந்த நேரம் சாணக்கியனுக்கு அவன் அக்கா  நிலாவையும் சதுரங்கத்தையும் தவிர ஒன்றும் தெரியாது. தினம் தினம் வெற்றி, வாரத்துக்கு ஒரு வெளியூர் பயணம் என அவன் வாழ்க்கை நன்றாகவே கழிந்து கொண்டிருந்தது. 

     பகீரதனைப் பிடிப்பதற்கு வதனியிடம் பல காரணங்கள் இருந்தது. அவன் அழகு, திறமை, அன்பு, கடமையுணர்வு, ஓரளவு சொத்து என ஒரு ஆண்மகனுக்குத் தேவையான அனைத்தும் அவனிடம் இருந்தது. அதனாலேயே தன் ஆசைச் செடிக்கு நீர் விட்டு நன்றாகவே  வளர்த்தாள். 

     எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த வேளையில் நடந்தது அந்த துயர சம்பவம். வதனியின் பெற்றோர் இருவரும் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயினர்.

     அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர் வதனியைத் தங்களோடு அழைத்துச் செல்ல நினைத்த அவள் பெரியப்பா, பெரியம்மா அதாவது மினியின் பெற்றோரிடம் வதனியின் முடிவடையாத படிப்பைக் காரணம் காட்டி தயங்கினார் அரசன்.

     வயது வந்த ஆண்மகன் இருக்கும் வீட்டில், அப்பா அம்மா இல்லாத பெண்ணைத் தங்க வைப்பதைப் பற்றி அந்த கிராம வாசிகள் அதிகம் யோசிக்கவே செய்தனர். 

     “என் தம்பிக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் நடந்தா அதுக்குப் பிறகு உங்களுக்கு அவளை இங்கே விடுவதில் எந்தவித சங்கோஜமும் இருக்காது தானே“ பகீரதன் வதனியை இணைத்து முதல் புள்ளியை வைத்தது சாட்சாத் நிலாவே தான்.

     வதனினின் அப்பாவும் தன் தம்பியுமான செல்வம் உயிரோடு இருக்கும் போது இந்தக் குடும்பத்தைப் பற்றி நல்லவிதமாக சொல்லி இருந்ததால் இளவரசனுக்கு அந்த சம்பந்தம் பிடிக்கத் தான் செய்தது. “முப்பது கழிந்ததும் திருமணம் செய்து வைத்துவிடலாமா“ என்க, இத்தனை சீக்கிரத்திலா என்று பயந்தார் அரசன். 

     மூத்த பிள்ளை அதுவும் பெண்பிள்ளை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க மகனுக்கு இருபத்தியோரு வயதில் திருமணம் செய்து வைப்பதா எனப் பயங்கரமாகத் திணறினார் அரசன். 

     இளவரசன் சொன்னது ஒரே விஷயம் தான், “ஒன்று எங்கள் மகளை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வையுங்கள். இல்லை அவளை எங்களோடு எங்கள் கிராமத்துக்கு அனுப்பி வையுங்கள். அங்கே எங்கள் சக்திக்கு ஏற்ப படிக்க வைத்து நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்“ என்று சொல்ல, பகீரதனைப் பிரிய நேரிடுமோ என்னும் பயத்தில் பருவ வயதைக் கூடத் தாண்டாமல் திருமணத்திற்கு தயாரானாள் வதனி.

     அரசனை தனியே அழைத்து வந்த நிலா, “திருமணம் என்பது பெயருக்குத் தான் அப்பா. மற்றபடி இருவரும்அவர்களுடைய படிப்பை நல்லபடியாகத் தொடரட்டும். மற்ற அனைத்தையும் காலப்போக்கில் பார்த்துக்கொள்ளலாம்“ என்க, அரைகுறை மனதுடன் சரி என்று சொன்னார் அரசன். 

     பகீரதனிடமும் நிலா அவனுக்கு ஏற்றபடி பேச, அக்கா சொல்லே வேதவாக்கு என்பவன் வேறு எதைப் பற்றியும் யோசனை இல்லாது சரியென்று தலையாட்டினான்.

     சொன்னது போலவே வதனியின் பெற்றோர் இறந்து முப்பது நாள் கழிந்த பிறகான ஒரு நல்லநாளில் பகீரதன் மற்றும் சந்திரவதனியின் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது. சின்னப்பிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது போல் வதனி, பகீரதன் இருவருக்கும் நடந்த சிறுவயதுக்கல்யாணம் பல பிரச்சனைகளைக் கொண்டதாகவே இருந்தது.

     நினைவுகளில் இருந்து கலைந்த சாணக்கியன் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது அவனுக்கே தெரியாத இரகசியம் தான். அரசனை முறைத்து விட்டுப் போக, “கொஞ்ச நாளா நல்லா தானே இருந்தான், திரும்ப என்னாச்சு அவனுக்கு“ என்கிற யோசனையில் வருங்கால மருமகளுக்கு அழைக்க, அதை ஏற்றது என்னவோ கடந்தகால மருமகள் தான்.

     “மருமகளே“ அரசனின் உரிமையான அழைப்பு அவள் காதில ஈயத்தைக் காற்றி ஊற்றியது போல் இருக்க, “உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா? ஒரு சின்னப்பொண்ணை ஏமாற்றி உங்க பையனுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறீங்களே. உங்க குடும்பத்தால் நான் பட்ட வேதனை போதாதுன்னு இப்ப என் தங்கச்சியை வேற உள்ளே இழுக்க நினைக்கிறீங்களே. உங்க பொண்ணா இருந்தா இப்படிப் பண்ணுவீங்களா?“ எண்ணையில் இட்ட கடுகாகப் பொரிந்தாள் வதனி.

     வதனி என்று அழைத்தவர் சில நொடி தாமதித்துவிட்டு, “என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் நீ என்ன இழந்தன்னு எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் என் பையன் அவனையே இழந்துட்டான். அவனை பழையபடி உயிர்ப்போட நடமாட வைக்கும் சக்தி உன் தங்கச்சி கையில் தான் இருக்கு“ என்றார்.

     “அவ ஒன்னும் உங்க பையனை சரிபண்ணுவதற்காகப் பிறந்தவள் கிடையாது. அவ ஒரு தனிப்பிறவி, அவளுக்குன்னு தனிப்பட்ட ஆசை, கனவு, இலட்சியம் எல்லாம் இருக்கு. அதை நோக்கிய பயணத்தில் தான் அவ முன்னேறணும்“ சொன்னவள் வதனி.

     “அவளுக்கு என்ன வேணும், என்ன வேண்டாம் என்பதை அவ தான் தீர்மானிக்கணும், நீயில்லை. அவளோட கனவா அவ நினைப்பது என் பையனோட வாழும் சந்தோஷமான வாழ்க்கையைத் தான்“ அழுத்தமாகச் சொன்னார் அரசன்.

     “அவ சின்னப்பொண்ணு, என்னோட இந்த வயதில் எப்படி நான் தப்பான முடிவை எடுத்தேனோ அதே மாதிரி தான் அவளும் பண்றா. அவளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுப்பது என்னோட கடமை தானே“ என்றாள் வதனி.

     “நீ என்ன பண்றன்னு உனக்குத் தெரியுதா வதனி. மினியோட முடிவை நீயே எடுக்கிற, கேட்டா அவளோட நல்லதுக்குன்னு சொல்ற“ எதையோ மனதில் வைத்து சொன்னவரை வெறித்துப் பார்த்தாள் வதனி. 

     “மினி உன்னை மாதிரி இல்லை வதனி. அவ என் பையனை உண்மையாக் காதலிக்கிறா. அவளோட காதல் அவளை என் பையனோட சந்தோஷமா வாழ வைக்கும்“ என்க, அத்தனை கோபம் வந்தது வதனிக்கு.

     “உங்க பையன் மேல் நான் வைத்திருந்த காதலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நான் அவரை உண்மையாத் தான் காதலிச்சேன். அந்தக் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியாத முட்டாள் அவர்“ சூடாகப் பேசினாள்.

     “என் பையனோட பொண்டாட்டியா அவனோட இருக்கும் போது இன்னொருத்தன் கூட பழகி அவன் மூலமா கர்ப்பமா இருப்பதா என்பையன் கிட்டேயே சொன்னியே அது தான் உன்னோட பாஷையில் காதலா வதனி“ என்க செருப்பால் அடித்த உணர்வு வதனிக்கு.

     “ஒரு காதலோ கல்யாணமோ பிரிவைச் சந்தித்தால் அங்க அதிகம் பாதிக்கப்படுவது பெண் தான். உங்க பையனால் நான் பட்ட மனக்கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. 

     அவர் என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் காதலிக்கிற ஒரே காரணத்துக்காக, எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு அவரோடவே இருக்க நான் ஒன்னும் பைத்தியக்காரி இல்லை. எனக்கு நான் தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் மற்ற எல்லோரும்“ சரியாகப் பேசுவதாகத் தான் நினைத்தாள் அவள்.

     “உனக்கு நீ தான் முதலில் முக்கியம். ஆனா என் பையனுக்கு மட்டும் அவனை பெத்த அம்மாவை விடவும் அதிக அக்கறையாக வளர்த்த அக்காவை விட, அவன் உயிருக்கு உயிரா நேசிச்ச விளையாட்டை விட நீ முக்கியமா இருக்கணுமா. 

     நீ உனக்குப் பிடிக்காததை யாருக்காவும் செய்ய மாட்ட, ஆனால் உனக்குப் பிடிக்கும் என்பதற்காக அவனுக்குப் பிடிக்காததை என் பையன் செய்யணும் என்று எதிர்பார்ப்ப. உன்னோட அகராதியில் இது தான் காதல் என்றால் எங்களோட அகராதியில் இதுக்குப் பெயர் பச்சை சுயநலம்“ அழுத்தம் திருத்தமாகச் சொல்ல கடுப்பில் போனை அணைத்துப் போட்டாள் வதனி.

 

 


Leave a comment


Comments


Related Post