இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 18-05-2024

Total Views: 11527

நிரஞ்சன் வீட்டிற்குள் வந்ததும் அவனை சூழ்ந்த அவனது குடும்பம், அவர்களுக்காக சற்று நேரம் அவர்களோடு செலவிட்டவன், களைப்பாக இருப்பதாகக் கூறி அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

மறுநாள், காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போதே, அவளின் வலது கையில் சுருக்கென்று வலி குத்த, தூக்க கலக்கம் கூட அவளுக்கு இல்லாமல் போனது. தினமும் தூக்கம் கலைந்தாலும், குறைந்தது இருபது நிமிடமாவது  கண் மூடி பாதி தூரம் போன தூக்கத்தை போராடி சமாதானம் செய்து மீண்டும் தன் வசப்படுத்துவது அவளது வழக்கம். மேலும் அரைமணிநேரம் படுக்கையை விட்டு எழுந்து சென்று சோஃபாவில் படுப்பதும் அன்றாடம் நடப்பது. ஆனால் அன்று அவளின் கைவலி வழக்கத்தை மாற்றிப் போட்டது. "அப்பா வலிக்குதே" என்றாள் எழும்பும் போதே!

அவளின் சத்தம் கேட்டு அருகில் வந்த தாயாரிடம், "அம்மா நேத்து நான் கிழே விழுந்துட்டேன் ம்மா. அப்பலிருந்தே கைவலிக்குது ஆனா நேத்து கவனத்தில் இல்ல. இப்ப ரொம்ப வலிக்குது" என்றாள் சிறு பிள்ளையின் பாவனையில்.

ஏன், எப்படி விழுந்தாள் என்று அறிந்துக் கொண்டு முதலில் மருந்து கடையில் கேப்சைசின் பிளாஸ்டர் ஒன்றை வாங்கி அவளுக்கு போட்டார் கோகிலா. "இந்த பிளாஸ்திரிக்கு வலி கேட்கும். சரியா போயிடும்" 

"ம்மா ஒருவேளை என் கை உடைஞ்சிருக்குமோ? போச்சே... என் கை போச்சே..."

"லூசு. கை உடைஞ்சு போயிருந்தா, நீ வீட்டுக்கு வரும் போதே மணல் மூட்டை மாதிரி வீங்கிப் போயிருக்கும்; வீட்டுக்குள்ள ஆத்திரத்தோடப் போட்டிப் போட்டு அவ்வளவு குப்பையைப் போட்டிருக்க முடியாது. எந்திரிச்சு போய் வேலையைப் பாரு"

"போம்மா... உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்ல. கை வலிக்குதுன்னு சொல்றேன்... பதட்டமே இல்லாம பிளாஸ்திரி போட்டு விடற.. என்னை  நிஜமாவே நீ தான் பெத்தியா? ஒருவேளை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி தூக்கிட்டு வந்துட்டியா?" என்று உதட்டில் இடதுக்கையை வைத்து ஆச்சரியம் போல வினவ,

கோகிலா, "என்ன வார்த்தை சொல்லிட்டே.?! உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி எல்லாம் தூக்கிட்டு வரல. வீட்டு பக்கத்துல இருந்த குப்பைத் தொட்டில இருந்து எடுத்துட்டு வந்தேன்" என்றார்.

"அம்மாமாமாமா...."

"எவடி இவ? போய் தூங்கு போ... அதை தான் நீ இந்த நேரத்துக்கு பண்ணுவ... எனக்கு வேலை இருக்கு" என்று பதிலுக்கு பதில் பேசிவிட்டு நகர்ந்தார் கோகிலா. அவரின் பாவனையில் அபி்ராமி முகம் சிரிப்பால் மலர்ந்து விரிந்தது.

அன்றைய நாள் முழுவதும் மனசு சரியில்லாமல், ஒரு நாள் விடுமறைக்கு விண்ணப்பித்து விட்டு வீடே கதி என்று கிடந்தாள். அதுவும் அவளுக்கு சலிப்புத் தட்டியது.

சற்று யோசித்து தன் அம்மாவின் ஃபோனை எடுத்து, "லாவண்யா நான் தான்... அன்னிக்கு சாப்பிட போலாம்னு வெளியே கூப்பிட்டியே. இன்னிக்கு வரியா போலாம்" என்றாள்.

லாவண்யா, "ஓகே சீனியர் நான் ரெடி."

"கூடவே ஜனனியும் வர சொல்லு" என்றவள் இடம் நேரம் என முடிவு செய்து வீட்டிலிருந்து கிளம்பினாள்.

மூவரும் உணவுக்கு ஆர்டர் செய்ய மெனு கார்டை பார்த்து லாவண்யா மற்றும் ஜனனி ஒன்றிரண்டு உணவுகளை அவளிடமும் கேட்டு பரிசாரகனிடம் கூற, மெனு கார்டை வெடுக்கென்று பிடுங்கிய அபிராமி, "இது என்ன இவ்வளவு கொஞ்சமா ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க. இதெல்லாம் எந்த மூலைக்கு பத்தும்?" 

"சீனியர் ரெண்டு வகை பிரியாணி, பெப்பர் ஃப்ரை ஸ்டார்டர், நம்ம மூணு பேருக்கு போதுமே. ஏன்? வேற யாரையும் கூப்பிட்டு இருக்கீங்களா?" என்று லாவண்யா கேட்கவும்,

"நீங்க ஆர்டர் பண்ணிருக்கும் டிஷ் என் ஒருத்திக்கே பத்தாது. நீங்க ரெண்டு பேரும் வேடிக்கை பார்க்கவா வந்தீங்க. விடுங்க உங்களுக்கும் சேர்த்து நானே சொல்றேன்" என்றவள் கடையில் முக்கால்வாசி ஐட்டங்களை ஆர்டர் செய்தாள். அவளின் தோழிகள் இருவரும் அதிசயமாக பார்த்தார்கள். 

உணவு வருகைக்காக காத்திருக்கும் நேரம், "சீனியர் எப்படியும் நீங்க எக்ஸாம் பாஸ் பண்ணிடுவீங்க. அதுக்கும் சேர்த்து இப்பவே எங்களுக்கு விருந்து வெச்சு முடிக்க பார்க்கறீங்களா...? என்ன முழிக்கறீங்க? அடுத்து உங்களோட upsc தேர்வோட ரிசல்ட் வந்ததும் கண்டிப்பா ட்ரீட் வெக்கனும்." என்று ஜனனி கூறியதும், லாவண்யா அவள் காலை மிதிக்க, ஆ என்று கத்தினாள்.

உதட்டின் மேல் ஆட்காட்டி விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி வலியுறுத்தினாள் லாவண்யா.

"சாரி சீனியர்... அவ தெரியாம சொல்லிட்டா"

"நிஜமாவே அந்த ஜகஜ்ஜால மன்மதன் உன் அண்ணன் தானா?"

"வாட்?"

"சரியான நேரத்துல என்னை பழி வாங்கிட்டான் உன் அண்ணன். எவ்வளவு நேரம் அவனுக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா? அவன் மட்டும் என் கையில் சிக்கினான்னு வை. சத்தியமா சட்னி ஆக்கிடுவேன்" என்று மேஜையில் கையை முஷ்டியாக்கி குத்தினாள் அபிராமி.

"அண்ணா நீங்க தான் வரலைன்னு சொல்றாங்க. ரொம்ப நேரம் வெயிட் பண்ணதாகவும், உள்ளே வர விடலைன்னும் சொன்னாங்க. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா என் அண்ணா பொய் சொல்ல மாட்டான். வரேன்னு சொன்னா கண்டிப்பா வந்திருப்பான்." என்றாள் லாவண்யா.

"உங்க அண்ணா பேச்சு எனக்கு வேணாம். அவனை பத்தி பேசி டென்ஷனாக நான் இங்க உன்னை கூப்பிடல. நம்ம நேரத்தை என்ஜாய் பண்ணலாம். உங்க ரெண்டு பேரோட பிரெண்ட்ஷிப் எனக்கு முக்கியம்" அபிராமி இவ்வாறு கூறியதும் பேச்சு வேறு திசைக்கு மாறியது. கல்லூரி கதைகள், படிப்பு, தேர்வு என்று தடம் மாறியது.

"இன்னும் ஒரு மாசத்துல செமஸ்டர் தேர்வு இருக்கு. அது முடிஞ்சதும் நாங்களும் கல்லூரி வாழ்க்கையை விட்டு வெளிய வந்திருவோம். அதை நினைச்சு தான் கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கு சீனியர்!"

அவர்கள் மூவரும் கலகலப்பாக பேசி சிரித்தபடி உணவை சாப்பிட, அவர்களுக்கு சற்று தள்ளி, எதிர்பக்க மேஜையில், ஒரு ஜோடி உட்கார்ந்திருந்தார்கள். அது அரவிந்த் மற்றும் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்ணில் காதல் மையல் கொண்டிருக்க, அவனோ கணக்கீடு செய்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக சிரிப்பொலி வந்த திசைக்கு பார்வையை ஓட்டியவனுக்கு ஆச்சரியமும், திகைப்பும் பிரதிபலித்தது. இந்த மூன்று பெண்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது? என்ற சிந்தனையில், கூட வந்த பெண் அவன் எண்ணத்தில் இல்லாமல் போனாள்.

முதலில் அவனின் முகபாவனையை கவனிக்காத அந்த பெண்ணோ, போகப் போக அவனின் கவனம் தன் பேச்சில் இல்லையென்று அறிந்ததும், அவன் பார்வை சென்ற திசையை தன் கண்களால் துழாவினாள். அவனின் பார்வை அவளுக்கு பரிச்சயம் இல்லாத மூன்று பெண்கள் அமர்ந்திருக்கும் மேஜையை சுற்றுவது தெரிந்ததும், அதுவரை மையல் குடிக் கொண்டிருந்த பார்வையில், கணல் வந்து சேர்ந்தது.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியவள், சட்டென மேஜையில் பரிசாரகன் கொண்டு வந்து வைத்த தண்ணீர் குடுவையை எடுத்து, அவன் முகத்தில் வீசினாள். திடீரென கிடைத்த தண்ணீர் அபிஷேகத்தை உணர்ந்து திகைத்தான் அரவிந்த்.

"வாட் த...?" என்றவனை, "ச்சீ நிறுத்துடா... நான் பக்கத்துல இருக்கும் போதே, உனக்கு ஒன்னு பத்தாம மூணு பொண்ணு கேட்குதா?... என் ஸ்டேடசுக்கு உன் கூட பழகறதே பெரிய விஷயம்" என்றவள் எழுந்து, "இன்னொரு தடவை என் பக்கம் வந்த... என் செருப்பு தான் பதில் சொல்லும்" வெளியேறினாள்.

"ஹே நில்லு... நீ நினைக்கிற மாதிரி இல்ல..." என்று அரவிந்த் அவள் பின்னாடியே ஓடினான்.

அங்கே நடந்தவற்றை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கைப் பார்க்க, கூச்சல் வந்த திசையை தோழிகள் மூவரும் எட்டிப் பார்க்க, அதற்குள் யாரென்று முகத்தை பார்க்கும் முன், அரவிந்த் வெளியேறினான்.

"நீங்க இவ்வளவு சாப்பிட்டும் எப்படி ஒல்லியாக இருக்கீங்க சீனியர்? உங்க சீக்ரெட் டிப்ஸ் எனக்கும் சொல்லுங்க சீனியர்" என்றாள் ஜனனி ஹோட்டலை விட்டு வெளியே நடந்தபடி.. 

"நான் எப்பவும் இப்படி சாப்பிட மாட்டேன் ஜனனி. மனசு கஷ்டமா இருந்தா அதிகமா சாப்பிடுவேன். என் எமோஷன்ஸ் எல்லாத்தையும் என் பல்லுக்கும் வாய்க்கும் சாப்பாடா கொடுத்து, அரைச்சு வயித்துக்குள்ள தள்ளினா, ரிலாக்ஸ் ஆகிடுவேன். அப்புறம் தெம்பா பிரச்சனையை சரி செய்ய யோசிப்பேன்."

"என்னமா மேனாமினுக்கி... என்னை ஏமாத்திட்டு இன்னும் அடுத்த டார்கெட்டை முடிவு பண்ண திட்டம் தீட்ட ஒன்னு கூடி இருக்கீங்களா? நீங்க மூணு பேரும் கூட்டு களவானிங்க தானே? அன்னிக்கே யோசிச்சேன். உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு. இன்னிக்கு அவ சீனியர்ன்னு கூப்பிட்டதும் தான் எல்லாம் ஸ்ட்ரைக் ஆச்சு. எப்படி என்னை ஏமாத்தி இருக்கீங்க?" அரவிந்த் அவர்கள் முன்னால் நின்று அபிராமியையும், ஜனனியையும் பார்த்து பேச,

"ஏய்.. ச்சீ போடா. இவரு அப்படியே உத்தம புத்திரன்... ஏமாத்தி பாவம் பண்ணிட்டோம்... வந்து குதிக்கிறாரு. நீயே ஒரு களவானி. உனக்கு புரியர பாஷையில் புரிய வைச்சோம். தட்ஸ் ஆல். டீலிங் முடிஞ்சுது." என்று கூறி அவனை தாண்டி ஜனனி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் அபிராமி.

"இனிமேலாவது திருந்த பாரு" லாவண்யா தன் பங்கிற்கு கூறிச் சென்றாள். ஆனால் அரவிந்த் உள்ளே கறுவினான்.

அலுவலகத்தில், நிரஞ்சன், அபிராமியின் ஹால் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, சிந்தனை வயப்பட்டிருந்தான். தன்னால் வாக்கை நிறைவேத்த முடியவில்லையே என்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தான்.

மீண்டும் ஹால் டிக்கெட்டை பார்த்தவனுக்கு, அவளின் அப்பா பெயர் கண்ணில் பட்டது. அபிராமி கவியரசன்!!

'கவியரசன்!!! இந்த பேரை எங்கோ கேட்டிருக்கேன்... ஆனா எங்கன்னு ஞாபகம் இல்லையே.' என்று நெற்றிப் பொட்டில் ஆட்காட்டி விரலை அழுத்தினான்.

பிறகு, தனது உதவியாளர் மூலமாக, அபிராமியின் ஹால் டிக்கெட் வைத்து, முகவரியை சரி பார்த்தவன், உடனே கிளம்பிவிட்டான்.

அது ஒரு தனி வீடு. எதிர்பக்கமும், பக்கத்திலும் அடுக்குமாடி குடியிருப்பு இருந்தாலும், அவளின் வீடு தனியாக, அழகாக தெரிந்தது. முன் பக்கம் இரும்பு கேட்டின் பக்கத்தில் மருதாணி, சீத்தாப்பழம் மரம் இருக்க, நடுவில் இருபது அடி நீள நடைபாதை. இருபக்கமும் டேபிள் ரோஸ், ரோஜா, கனகாம்பரம் செடிகள் நட்டு வைக்கப்பட்டிருந்தது. 

ரோட்டில் நின்று வீட்டை ரசித்தவனுக்கு, வீட்டினுள் யாரோ கத்துவது அபஸ்வரமாக காதில் விழுந்தது.

கதவை திறந்து நடைபாதையில் நடக்கும் போதே, வார்த்தைகள் செவியில் நன்றாகவே விழுந்தது.

"யார் வீட்டுக்கு வந்து யாரை மிரட்டப் பார்க்கிற! மரியாதையா வெளியே போடா பொறுக்கி ராஸ்கல். இல்ல போலீஸை கூப்பிடுவேன்." 

"எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தா நான் ஏன் இங்க நிக்கப் போறேன். திட்டம் போட்டு ஏமாத்தி பிழைக்கிற பொண்ணை பெத்து வச்சுகிட்டு, என்னை போலீசில் பிடிச்சு கொடுக்கப் போறீங்களா? வாங்க போவோம். உங்க பொண்ணு மேல நான் கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்."

"நீங்க யாரு தம்பி? நீங்க பாட்டுக்கு உள்ளே வந்தீங்க? உங்களை என் பேத்தி ஏமாத்தி நிறைய பொருள் வாங்கினதா சொல்றீங்க! உங்களை நான் எப்படி நம்ப முடியும். எங்க வீட்டு பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு இல்ல."

"என்னை லவ் பண்றதா சொல்லி, என்கிட்ட இருந்து காஸ்ட்லியான வாட்ச், கைப்பை எல்லாம் வாங்கிட்டு, இப்ப லவ் பண்ணவே இல்லன்னு சொன்னா எப்படி நம்ப முடியும்.? அந்த பொருளை வித்து காசுப் பார்த்துட்டாளோ என்னவோ? ஒன்னு அவளை எனக்கு கட்டி வைங்க. இல்ல நான் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்க?!"

"கட்டி வைக்கிறதா? உன்னை மாதிரி ஆளுக்கு என் பொண்ணை கொடுக்க முடியாது. வெளியே போடா அயோக்கிய ராஸ்கல்." என்றார் கோகிலா 

"ஒருவேளை இப்படி ஒவ்வொரு பையனையா லவ் பண்ணி பணம் சம்பாதிக்கிறது தான் உங்களோட குடும்பத் தொழிலா?!!..."

உச்சஸ்தாயில் மூவரும் வீட்டினுள் மாறி மாறி கத்த, அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

"நீயா?" என்று நிரஞ்சன் கேட்க,

"நீ லாவண்யா அண்ணா தானே? நீ இங்க என்ன பண்ற?" குரல் வந்த திசையை திரும்பி பார்த்த அரவிந்த் நிரஞ்சனை அடையாளம் கண்டுக் கொண்டான்.

"அது உனக்கு தேவையில்லாத விஷயம். அபாண்டமா ஒரு பொண்ணு மேல பழி சொல்லிட்டு அவங்க வீட்டுல பிரச்சனை பண்ணிட்டு இருக்க? உனக்கு வெட்கமா இல்ல? வெளியே போடா!"

"அதை கேள்வி கேட்க நீ யாருடா? நானும் அபிராமியும் லவ் பண்றோம்" என்றான் அரவிந்த்.

"ஹா ஹா... லவ்வா? அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?! ஜனனி கூட நிச்சயதார்த்தம் முடிச்சிட்டு, இன்னொரு பொண்ணு கூட ஹோட்டல் ரூமில் ஆட்டம் போட இருந்தவனுக்கும் லவ்வுக்கும் சம்பந்தமே இல்லையே"

"ஜனனி யாரு?"

"ஆன்ட்டி. நான் நிரஞ்சன். ஜனனி என் தங்கச்சி ஃப்ரெண்ட். அவளோட நிச்சயம் பண்ணிட்டு உங்க பொண்ணு கூட லவ் பண்றதா சொல்லி சுத்திட்டு இருந்தான். உங்க பொண்ணு அபிராமி இவனை லவ் பண்றா." என்றான் நிரஞ்சன்.

"அடப்பாவி. என்னது என் பொண்ணு இவனை லவ் பண்றாளா!?" என்று அதிர்ச்சியானார்கள் கோகிலா மற்றும் அன்புநாதன்.

"உனக்கு என் பொண்ணு கிடையாது. வெளியே போடா?"

"அப்ப இவனுக்கு கட்டி வைப்பீங்களா?"

"மரியாதையா வெளியே போயிடு அரவிந்த்."

"உனக்கும் அபிராமிக்கும் என்னடா சம்பந்தம்? நீ எதுக்கு டா இங்க வந்த? ஓஹோ உன்னையும் ஏமாத்திட்டாளா அந்த அபிராமி" என்று வினவினான் அரவிந்த்.

அவன் கேள்வியில் கோபம் கொண்ட நிரஞ்சன், அவன் சட்டை காலரைப் பிடித்து வெளியே இழுத்துப் போனான். 

"டேய் விடுடா..." தன் காலரில் இருந்து அவனது கையை தட்டி விட்ட அரவிந்த்,

"பெரிய இடத்து பையன்-னா என்ன வேணாலும் பண்ணலாமா? ஆமா எப்படி டா அவளை உஷார் பண்ண? முக்கியமா கசமுசா நடந்துருச்சா? பீஸ் எப்படி?" என்று கண்ணடித்துக் கேட்கவும், நிரஞ்சன் ஓங்கி அறைந்தான்.

"பொண்ணுங்களை தப்பா பேசற உனக்கு இனிமே வாயே இருக்கக் கூடாது. இன்னொரு தடவை அபிராமியை நெருங்கக் கூட நீ யோசிக்கக் கூடாது" என்று நிரஞ்சன் மேலும் அவனை கன்னத்தை பழுக்க வைத்தான். 

வீட்டின் நடைபாதையில் இருந்த செங்கல் ஒன்றை எடுத்து அவன் மேல் போட ஓங்கும் போது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அரவிந்த் வெளியே ஓடினான். "டேய் இதையும் கேட்டுட்டு போ. அடுத்த தடவை பிரச்சனை பண்ணா, போலீஸ் ஸ்டேஷன் தான் கதி உனக்கு" என்றான் நிரஞ்சன்.

செங்களை தூர எரிந்தவன் இரு கைகளையும் தட்டிவிட்டு கோகிலா பக்கம் திரும்பினான்.

"சாரி ஆன்ட்டி. அநாவசிய பிரச்சனை ஆகிடுச்சு உங்களுக்கு. இனிமேலாவது இந்த மாதிரி ஆட்களோட பழக வேணாம்னு உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் இதமா சொல்லி வைங்க ஆன்ட்டி."

"தம்பி நீங்க யாரு? உங்களுக்கு எப்படி என் பெண்ணை தெரியும்?"

"அது... நான் வந்த வேலையை மறந்துட்டேன். இந்தாங்க உங்க பொண்ணோட ஹால் டிக்கெட்" பாண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.


Leave a comment


Comments


Related Post