இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 18-05-2024

Total Views: 23519

இதயம் 22

     ஹலோ என்று இரண்டு மூன்று முறை கத்திப் பார்த்த அரசன் அழைப்பு துண்டிக்கப்பட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, அவர் முன் காளிங்கன் நாகத்தைப் போல் கோபத்துடன் நின்றிருந்தான் சாணக்கியன். 

     “அப்ப மினி யாருன்னு உங்களுக்குத் தெரியும் அப்படித்தானே“ என்க, ஆமாம் என்று துணிச்சலாகவே சொன்னார் அரசன்.

     “உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலப்பா“ என்றுவிட்டு அவன் அறைக்குள் செல்லப்பார்க்க, “என்னைக்கு உனக்கும் அந்த வதனிக்கும் நடுவில் இருக்கும் உறவு உடைந்ததோ அன்னைக்கே அவ யாரோ நாம யாரோ தானேப்பா. மினியை மினியா மட்டும் பாரு. அவளோட சித்தப்பா பொண்ணு யாரா இருந்தா நமக்கு என்ன“ நிதானமாகக் கேள்வி கேட்டார்.

     “சாத்தானோட நிழலில் இருக்கும் பொண்ணு மட்டும் தேவதையாவா இருக்கப் போறா. என்னை விட்டுடுங்க பா, ஒருமுறை பட்ட மரணகாயம் வாழ்க்கை முழுதுக்கும் போதும். இனிமேல் என்னால் எதையும் தாங்க முடியாது“ சொல்லிவிட்டு கண்ணீருடன் அறைக்குள் சென்றான் சாணக்கியன்.

     கேள்விப்பட்ட செய்தியை ஜீரணிக்க முடியவில்லை மினியால். தன்அக்காவும் அத்தானுமா இப்படி. யாரைப் போல் தனக்கு ஒரு மணவாழ்வு வேண்டும் என்று நினைத்தாளோ, அவர்களின் மணவாழ்வே ஒரு நல்ல மனிதனின் மனதைக் கொன்று அதற்கு மேல் அமைக்கப்பட்டது தானா? 

     பல மனைவி கட்டியவன் அவர்களில் தனக்குப் பிடித்த ஒற்றை மனைவிக்காக காதல் மாளிகை கட்டினானாம். அதைப் போல் கட்டிய கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு, அவனோடு பந்தத்தில் இருக்கும் போதே இன்னொருவனுடன் தகாத உறவில் இருக்கும் அளவு தவறானவளா தன் தமக்கை.

     தான் பார்த்து வியந்த மனிதர், இந்த சுயநல உலகத்தில் யாரைப் போல் ஒருவராலும் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தாளோ அந்த ஜீவன் அத்தான், உயிராகப் பழகிய நண்பனின் மனைவியை கொள்ளையிட்டவனா? அவளால் நம்ப முடியவில்லை.

     அரசன் மூலமாக கேள்விப்பட்ட கதையை நினைக்கையில் அருவருப்பும் கோபமும் வந்தது உண்மை. அதே சமயத்தில் வதனி, ஜீவனையும் பல வருடங்களாகத் தெரியும் என்பதால் அவர்கள் பக்கமும் ஏதாவது சரியான காரணம் இருக்குமோ என்கிற எண்ணம் வந்தது. எந்தப் பக்கம் போனாலும் பாதிப்பு அவளுக்கே வரும் என்பது போன்ற இருதலைக்கொள்ளியாக நின்றிருந்தாள். 

     நிஜத்துக்கும் நிழலுக்கும் நடுவில் அல்லாடும் குழந்தையைப் போல் மனதின் நம்பிக்கைக்கும், காணும் நிஜத்திற்கும் இடையில் அல்லாடினாள் மினி. அவள் அறிந்த அவளுடைய அக்காவும், அத்தானும் இப்படியானவர்கள் இல்லையே. 

     மனக்குழப்பங்கள் அனைத்தையும் மனதிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டாம். பேசித் தீர்த்து விடலாம் என்ற முனைப்புடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

     உணவு மேஜையில் வைத்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள் வதனி. அவள் அருகே அமைதியாக அமர்ந்திருந்தான் ஜீவன். சாணக்கியன் வந்து போன நொடியில் இருந்து வதனி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனும் அவள் பின்னால் சுற்றாமல் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

     உடல் முக்கால்வாசி சரியாகிப் போனாலும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பக்கத்தில் போகவேண்டாம் என்று சற்றே தள்ளி அமர்ந்தவாறு, “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அக்கா“ என்றாள் மென்மையிலும் மென்மையாக.

     “அந்த பகீரதனை மறந்திடுறேன்னு சொல்லு நடந்த எல்லாத்தையும்  சொல்றேன்“ அவள் என்ன கேட்க இருக்கிறாள் என்பதை யூகித்தவளாகச் சொன்னாள் வதனி. அக்காவின் அந்தக் கேள்விக்கு மினியால் பதில் சொல்ல முடியிவில்லை.

     “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு மினி“ அழுத்தமாகக் கேட்டாள் வதனி. “என்னால் அவரை மறக்க முடியும் என்று தோணலக்கா“ சொன்ன தங்கையைக் கொன்று போடும் அளவு கோபம் வந்தது அவளுக்கு. எச்சிக்கையை உதறிக்கொண்டு எழுந்தவள் அங்கிருந்து செல்லப்பார்க்க, குழந்தைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான் ஜீவன்.

     “கையை விடு மினி, நான் பயங்கர கோபத்தில் இருக்கேன். அடிச்சிடப் போறேன். இதுக்கு மேல் உன்கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை. பெரியப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்றேன். நீ அவர் கூட ஊருக்கு கிளம்பு“ என்றாள் எங்கோ பார்த்தபடி.

     “அப்ப என் படிப்பு“ என்க, “ஆமா பெரிய படிப்பு. காலேஜ் பாடம் படிக்க அனுப்பினா காதல் பாடம் இல்லை படிச்சுட்டு வந்து இருக்க. இதுக்கு மேலும் உன்னை வெளியே அனுப்பினா அந்த பகீரதன் கூட ஓடிப்போனாலும் போயிடுவ“ விஷமாய் கொட்ட, “அக்கா ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க, எனக்குக் கஷ்டமா இருக்கு“ என்றாள் மினி. இதைச் சொல்லும் போது கண்கள் கொஞ்சம் கலங்கிப் போய் இருந்தது.

     “இதையெல்லாம் இப்பவே கேட்டுப் பழகிக்கோ. கடைசியில் அந்த பகீரதனைத் தான் கல்யாணம் பண்ணிக்க போற என்றால் இதை விட மோசமான வார்த்தைகளைத் தினம்தினம் கேட்க வேண்டியது இருக்கும்“ பொடி வைத்துப் பேசினாள்.

     “அவர் அவ்வளவு மோசமானவர் இல்லக்கா. கோபக்காரர் தானே குணக்கேடானவர் இல்லை“ அழுத்தமாகச் சொன்னார். அவளின் அவன் மீதான ஆழமான நம்பிக்கையைப் பார்த்து எரிச்சல் வர, “அப்படி என்னடி காதல். இப்ப நீ அவரை நேசிப்பதை விட அதிகமா ஒரு காலத்தில் அவரை நேசிச்சவ நான். அவர் தான் எல்லாமேன்னு நினைச்சு நாய்க்குட்டி மாதிரி அவரையே சுத்தி சுத்தி வந்தேன். கடைசியில் நாய்க்குட்டிக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு அவர்கிட்ட இருந்து கிடைக்கல.

     அவர்கிட்ட இருந்து கிடைக்கிற கொஞ்ச நஞ்ச காதலை விட என்னோட சுயமரியாதை முக்கியம் என்று தான் கடைசியில் நான் அவரை விட்டு வந்தது“ என்க, மினிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியல.

     “பழைய கதைகளை எல்லாம் விடு மினி. நீ பக்கத்தில் இருக்கும் போது சாணக்கியன் எப்படி நடந்துக்கிட்டான் என்பதை மற்றும் யோசி“ என்றபடி திரும்பி வந்தான் ஜீவன். வதனி அவனை முறைக்க ஜீவன் அதைக் கண்டுகொண்டான் இல்லை. 

     “சாணக்கியன் நல்லவர் இல்லையா அத்தான்“ ஏக்கமாகக் கேட்டாள் மினி. நடந்து கொண்டிருப்பது கொடூரமான கனவு, விழித்துக்கொள் என்று சொல்லி யாரும் அவளை எழுப்பி விடமாட்டார்களா என கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் அவள் எதிர்பார்க்கிறாள். ஆனால் அது சாத்தியம் இல்லாத ஒன்றாகிற்றே.

     “சாணக்கியனுக்கும் வதனிக்கும் 2015 இல் கல்யாணம் ஆச்சு. 2017 இல் இருந்து எனக்கும் வதனிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2020 இல் அவங்களுக்கு விவாகரத்து ஆகி அடுத்த சில நாள்களில் எனக்கும் வதனிக்கும் கல்யாணம் ஆச்சு. 

     இதுக்கு அர்த்தம் வதனி சாணக்கியனோட மனைவியா இருந்த போதே எனக்கும் அவளுக்கும் மூன்று வருட பழக்கம் இருந்தது. எல்லாத்தையும் விட பெரிய விஷயம் எங்களுக்குக் கல்யாணம் ஆகி நான்கு மாதத்தில் பாரியும், சபரியும் பிறந்துட்டாங்க. இத்தனை சம்பவங்களைப் பார்த்த பிறகே தெரிந்திருக்கும் யார் மேல அதிக தப்பு என்பது“ மினிக்கு நெஞ்சம் துடித்தது. 

     “அவன் இடத்தில் நான் இருந்து என் இடத்தில் அவன் இருந்திருந்தா நான் அவனை நிம்மதியா வாழ விட்டிருப்பேனா என்பது சந்தேகம் தான்“ ஜீவன் சொல்லி முடிக்கவும் கோபமாக முன்வந்தாள் வதனி.

     “அப்ப நீங்களும் புருஷன் கூடவே இருந்துக்கிட்டு அவனுக்கே துரோகம் பண்ண நடத்தை கெட்டவளாத் தான் என்னை  நினைக்கிறீங்க அப்படித்தானே“ ஆவேசமாகக் கேட்க,

     “உன்கூட சேர்ந்து நானும் நடத்தை கெட்டவன் என்பதைச் சொல்றேன்“ மறைமுகமாக அவள் சொன்னது சரிதான் என்று சொல்லிவிட நொருங்கிப்போனாள் வதனி.

     “நீங்க என்னை இப்படிக் கேவலமா நினைப்பீங்கன்னு நான் கனவில் கூட நினைக்கல ஜீவன்“ அழாத குறையாகச் சொன்னாள். “அத்தான் அவர் பக்கத்தைச் சொல்லிட்டார். இப்ப நீங்க உங்களோட கருத்தைச் சொல்லுங்கக்கா“ முன்னே வந்தாள் மினி.

     “அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற. அது தான் உன்னோட அருமை அத்தான் அவரோட முன்னாள் நண்பன்“ வேகமாக பேசியவள் இந்த இடத்தில் நிறுத்தினாள். “எந்நாளும் இவர் அந்த பகீரதனோட நண்பனாத் தான் இருந்திருக்கார். நான் தான் புரிஞ்சுக்காம இருந்திட்டேன் போல“ விரக்தியின் உச்சத்தில் பேசினாள்.

     “இப்ப இருக்கும் சூழ்நிலையில் நீங்க, அத்தான் சாணக்கியன் மூன்று பேருமே குற்றவாளிகள் தான். உங்க மூன்று பேருக்கும் நடுநிலையா இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. 

     நடந்த விஷயம் கண்ணாடி மாதிரி தெளிவா இருக்கு. எனக்கு இப்ப தேவைப்படுவது எல்லாம் அவரவர் பக்கம் இருக்கும் நியாயம் மட்டும் தான். அத்தான் அவர்பக்கம் எந்த நியாயமும் இல்லை என்று சொல்லிட்டார். அடுத்து உங்களோட முறை“ மினி நிறுத்த, “அப்ப என்கிட்ட கேட்ட அப்புறம் அந்த பகீரதன் கிட்ட பேசப்போறியா?“ என்க, “கண்டிப்பா“ அழுத்தமாகச் சொன்னாள் மினி. சூழ்ந்திருக்கும் கவலைகளையும் குழப்பங்களையும் தாண்டி திடமான முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்ததை உணர்ந்தவள் அதற்கான பணியில் ஈடுபட்டாள்.

     “சொல்றேன், நடந்த எல்லாத்தையும் சொல்றேன். என் மனசு ஆம்பிளைங்களுக்குத் தான் புரியல. உனக்காவது புரியுதா பார்க்கலாம்“ என்ற வதனி தன் கடந்தகாலத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.

     “பகீரதனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் சந்தோஷமா அந்த வீட்டுக்குப் போனதுக்கு முக்கியமான காரணம் இரண்டு. ஒன்று என்னோட நிலா இன்னொன்று பகீரதன். ஆனா நான் அங்க போன நாளில் இருந்து என்னோட தோழி நிலா சராசரி நாத்தனாரா அவளோட அதிகாரங்களை என்மேல் நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சா. 

     எங்களுக்கு நடந்த கல்யாணத்தைப் பத்தி என் காலேஜில் யாருக்கும் சொல்லக்கூடாது. வீட்டில் அவரோட ஒரே அறையில் தங்கக் கூடாது. அநாவசியமாக வெளியே சுற்றக்கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டளைகள். ஏன்னு கேட்டா என்னோட நல்லதுக்காகன்னு சொன்னா. அவரும் அக்கா பேச்சு தான் மந்திரம் என்று என்னைக் கொஞ்சமும் கண்டுக்கல“ என்க, “சாணக்கியன் ஒன்னுமே செய்யலையா?“ சங்கடமாகக் கேட்டாள் மினி.

     “அவர் தானே, ஏதாவது செய்வார். அவரோட அருகாமைக்காக நான் ஏங்கும் நேரம் எல்லாம் தனியாத் தவிக்க விட்டுட்டு அவருக்கு வசதியான நேரத்தில் கோவில், பீச், சினிமா, ஹோட்டல் என்று எங்கேயாவது கூட்டிட்டு போவார். என்னைச் சந்தோஷமா வைச்சிக்க முயற்சி பண்ணுவார். ஆனால் என்னால் அதெல்லாம் இரசிக்கவே முடியாது. 

     காரணம் சில நேரம் எங்களோட நிலாவும் வருவா. அவருக்கு வசதியான நாள்களில் கூட பாதி நாள் தான் எங்களுக்கான தனிமை கிடைக்கும். மற்ற நேரம் நந்தி மாதிரி நிலா கூட இருப்பா. 

     இப்படியே நாள்கள் போச்சு. அவர் பாட்டுக்கு அவரோட படிப்பு, விளையாட்டுன்னு ரொம்ப பிஸியா இருந்தார். நிலா என்னையும் அவரையும் தான் நெருங்க விடலையே தவிர மத்தபடி எந்த விதத்திலும் என்னைத் தொந்தரவு செய்யல. சொல்லப்போனால் என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டா. 

     சாப்பாடு, துணிமணியில் ஆரம்பிச்சு எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தமானதை செய்து கொடுத்தா. இதுவரை பார்க்காத ஒரு உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினா. நமக்குப் பிடித்த நல்ல விஷயங்களை யாருக்கும் பயப்படாம செய்யலாம் என்னும் நம்பிக்கையை எனக்குள் விதைச்சது அவ தான். தேவையான விஷயத்திற்கும் பிடித்தமான விஷயத்திற்கும் நடுவில் இருக்கும் வித்தியாசத்தை புரியவைச்சா. உலகத்தை நோக்கிய என்னோட பார்வையை மாற்றினா. எனக்கே தெரியாமல் எனக்குள்ள இருந்த இலட்சியத்தையும் அதற்கான திறமையையும் அவ தான் தட்டி எழுப்பினா.

     அப்பா அம்மா நினைவில் நான் வருத்தப்படும் போதெல்லாம் என் கூட இருந்து, முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானம் செய்து என்னை அவ்வளவு அக்கறையோடு பார்த்துக்கிட்டா. ஆனா என்ன பண்ணி என்ன பிரயோஜனம் என்னை என் புருஷனோட அதிக நேரம் செலவிட விடல. 

     நாம வருத்தத்தில் இருக்கும் போது எத்தனை பேர் நம்மைச் சுற்றி இருந்தாலும் நம்ம மனசு என்னவோ நமக்குப் பிடித்தவரைத் தான் தேடும். அந்த மாதிரி என் மனசும் பகீரதனைத் தான் தேடுச்சு.

     அதை அவர் புரிஞ்சுக்கவும் இல்லை, புரிஞ்சுக்கிட்ட நிலா என் ஏக்கத்தை தீர்த்து வைக்கவும் இல்லை. ஒருகட்டத்தில் எனக்கு நிலா மேல் கோபம் வந்தது. அவ யார் நான் எது செய்யணும் எது செய்யக்கூடாதுன்னு தீர்மானிக்கிறதுக்குன்னு எனக்கும் பகீரதனுக்கும் கல்யாணம் ஆனதை என்னோட காலேஜில் சொன்னேன். 

     அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வாங்கினப்ப வந்த செய்தித்தாளைக் காட்டி சந்தோஷப்பட்டேன். என்னோட படிக்கிறவங்க எல்லோரும் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டாங்க. சிலர் அவரைப் பார்க்க ஆசைப்பட்டாங்க.

     ஒருநாள் என்னைக் கூப்பிடுவதற்காக காலேஜிற்கு வரச்சொன்னப்ப கொஞ்சம் கூட என் மனசைப் பத்தி யோசிக்காம, “எதுக்காக நமக்கு கல்யாணம் ஆனதைப் பத்தி சொன்ன, இந்தச் சின்ன வயதில் கல்யாணம் ஆகிடுச்சுன்னு வெளியே தெரிஞ்சா, எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு“ சொல்லிட்டு போனை வைச்சிட்டார். 

     கல்யாணம் ஆனதைப் பத்தி நான் சொன்னேனே, என்னை யாரும் கிண்டல் பண்ணலையே. அவரை மட்டும் எப்படிக் கிண்டல் பண்ணுவாங்க. அப்படியே கிண்டல் பண்ணால் தான் என்னன்னு என்னால் நினைக்காம இருக்க முடியல. அவர் எனக்குச் சொந்தமானவர் என்பதை அடுத்தவர்களுக்கு சொல்லக்கூட அவருக்கு மனசு இல்லைன்னா என்ன காதல் கல்யாணம் எல்லாம் என்ற விரக்தியான மனநிலை தான் என்கிட்ட.

     நான் கூப்பிட்டப்ப முடியாதுன்னு சொன்னாலும் அன்னைக்கு அவர் தான் என்னைக் கூப்பிட வந்தார். ஆசையாக் கேட்ட போது மறுப்பு சொல்லாம வந்திருந்தா அது இனிச்சிருக்கும். ஏதோ கட்டாயத்தில் வந்தது போல் இருக்க, அந்தக் கடுப்பில் என்னோட தோழிகளை சந்திக்கப் போகலாம் என்று அவர் சொன்ன போது வேண்டாம் என்று தடுத்துட்டேன். அவரும் அதைப் பெருசுபடுத்தல.

     கல்யாணம் ஆகி மூன்று மாதத்தில் அடுத்தடுத்த போட்டிகளுக்காக வெளிமாநிலம், வெளிநாடு என்று கிளம்பினார். எனக்கும் அங்கெல்லாம் போக ஆசையா இருந்தது. அப்படிச் சொல்வதை விட அவரோட நேரம் செலவிட ஆசையா இருந்தது. வாயைத் திறந்து நானே அவர்கிட்ட இதைப் பத்தி பேசினேன்.

      “நான் என் கோச் கூடப் போறேன். இப்ப உன்னைக் கூட்டிட்டு போனா கல்யாணம் ஆனதைப் பத்தி சொல்ல வேண்டியது வரும். அதோட நீ அங்க வந்தா உன்னைப் பத்தியும் உன்னோட பாதுகாப்பைப் பத்தியும் தான் என்னோட மூளை யோசிக்க ஆரம்பிக்கும். அதனால் என்னோட விளையாட்டுத் திறன் பாதிக்கப்படும். நமக்கு காலம் நீண்டு கிடக்கு, இன்னைக்கு இல்லாமப் போனால் இன்னொரு நாள் நீ பார்க்க ஆசைப்படும் இடங்களுக்கு எல்லாம் உன்னை அழைச்சுட்டு போறேன்று சொல்லிட்டுப் போயிட்டார்.

     பசியில் இருக்கும் போது பழையசோறும் அமிர்தமா இருக்கும். அதுவே பசியில்லாத நேரத்தில் அமிர்தம் கூட வேண்டாத விஷயமா தான் தெரியும். அது அவருக்குப் புரியல. எனக்கும் புரியவைக்கத் தெரியல. 

     அவர் நடந்துக்கிற முறையைப் பார்த்து, அவருக்கு என்னைப் பிடிக்கவே இல்லையோ நிலாவுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி தான் அவரோட நடவடிக்கைகளும் இருந்தது.

     காலேஜில் பொண்ணுங்க பேசிய அந்தரங்கங்கள் எதுவும் எனக்கும் அவருக்கும் நடுவில் நடக்கல. என்கிட்ட கேள்வி கேட்கும் தோழிகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியல. இடைப்பட்ட காலத்தில் நானும் அவரும் ஒரே அறையில் நேரம் செலவு பண்ண ஆரம்பிச்சோம். அப்பக் கூட அவர் என்னைப் பெருசாக் கண்டுக்கல. 

     அவரோட கவனம் எதனால் திசைமாறியதோ, தோல்வியே காணாத மனிதருக்கு அடுத்தடுத்து தோல்விகள் வந்தது. வீட்டில் நிலாவைப் பெண் பார்க்க வந்த அத்தனை பேரும் சொல்லி வைச்ச மாதிரி கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. எல்லாத்துக்கும் காரணம் நான் அவரோட மனைவியா வந்த நேரம் தான்னு அவர் கோச் சொன்னாராம். அது உண்மையா இருக்குமான்னு அரசன் அங்கிள்கிட்ட பேசிக்கிட்டு இருந்தார். எனக்கு அவர் மேல் இருந்த பிடிப்பு மொத்தமும் அப்பவே காணாமல் போயிடுச்சு“  நிறுத்தினாள் வதனி.


Leave a comment


Comments


Related Post