இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 18-05-2024

Total Views: 24050

இதயம் 23

     இங்கே தமக்கை நிலாவின் புகைப்படத்தை மார்போடு அணைத்துக்கொண்டு, “ஏன் நிலா என்னைப் பொத்தி பொத்தி வளர்த்த. ஏன் இரண்டும் கெட்டான் வயதில் கல்யாணம் பண்ணி வைச்ச. ஒரே நேரத்தில் நீ, அவ, என்னோட விளையாட்டுன்னு இத்தனை விஷயங்களை என்னால் சமாளிக்க முடியலேயே. 

     நானும் சின்னப்பையன் தானே அப்ப. அவளோட உணர்வுகள் எனக்குப் புரியல. நீ இருக்க, அப்பா இருக்கார் காலேஜில் அவளோட தோழிகள் இருக்காங்க. எல்லோருமா சேர்ந்து அவளை நல்லாப் பார்த்துப்பாங்கன்னு தானே நான் அமைதியா இருந்தேன். அவளோட நான் செலவழித்த நேரங்கள் கம்மியா இருக்கலாம். ஆனால் அந்த நேரம் முழுக்க நான் அவளுக்கு மட்டுமே சொந்தமானவனா இருந்தேன். அது அவளுக்குப் புரியவே இல்லையே. 

     அவள் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் அது உண்மை தான். ஆனா அவ மட்டுமே என் வாழ்க்கையாகிட முடியாதே. அவளுக்குன்னு சில கனவுகள் இருக்கிற மாதிரி எனக்கும் சில கனவுகள் இருந்தது. அவளுக்கு உறவுகள் இல்லை. ஆனால் எனக்கு நீ இருந்த அப்பா இருந்தார். உங்களையும் நான் தானே பார்த்துக்கணும். என்னளவில் நான் சரியா இருந்த மாதிரி தான் இப்ப வரை தெரியுது. ஆனா அவளோட பார்வையில் எந்த இடத்தில் தோற்றுப்போனேன்னு இப்ப வரைக்குமே எனக்குப் புரியல. எல்லோருமே வேணும் என்று நான் நினைத்தது தான் தப்பா போயிடுச்சு. 

     கோச் அவளோட ராசியால் தான் நான் வரிசையா தோற்றுப்போறேன்னு சொல்லும் போது அவரைக் கண்டிச்சேனே தவிர, அவளுக்குள்ளும் இப்படி ஒரு நினைப்பு இருக்க வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சு அதை நிவர்த்தி பண்ணாம போயிட்டேன். ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை முடிந்த பின்னால் தான் பல விஷயங்கள் என் கண்ணில் பட்டது.

      பொண்ணுங்களுக்குத் தனிகுணம் உண்டு. அவங்க வாயைத் திறந்து சொல்லாமல் விட்டதைக் கூட நாம புரிஞ்சுக்கிட்டு நிறைவேற்றி வைக்க ஆசைப்படுவாங்கன்னு எனக்குப் புரிய வைச்சான் என்னோட நண்பன் ஜீவன்“ என்று நிறுத்தினான் சாணக்கியன்.

     இங்கே தங்கையிடம் தன் கதையைத் தொடர்ந்தாள் மினி. “கல்யாணம் ஆகி ஒருவருஷம் ஓடிப்போச்சு. வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் போய்க்கிட்டு இருந்தது. விடாமல் நான் புலம்பின புலம்பலுக்கு விடை கிடைத்த மாதிரி அவருக்கு என்மேல் விருப்பம் வந்தது. மத்த கணவன் மனைவி மாதிரி நாங்களும் வாழ ஆரம்பிச்சோம். ஆனா அதுக்கு அப்புறம் தான் அவரோட நடவடிக்கையில் நான் மாற்றங்களை உணர்ந்தேன்.

     அவர் நாலு இடம் போறவர், பல கலாச்சாரம் பார்த்தவர். அதுக்கு ஏத்த மாதிரி அவரோட நடை, உடை, பாவனை எல்லாம் இருந்தது. ஆனால் நான் பெரிதா எதுவும் தெரியாத பொண்ணு. நானும் அவருக்கு இணையா இருக்கணும் என்பதற்காக என்னை வலுக்கட்டாயப்படுத்தி பியூட்டிபார்லர் கூட்டிட்டு போனார். 

     அவரோட விருப்பத்துக்கு ஏற்ப உடை அணிய வைத்தார். பொது விழாக்களுக்குப் போகும் போது அவர் சொல்லிக்கொடுத்த மாதிரி தான் நடந்துக்கணும் என்று என்னைக் கட்டாயப்படுத்தினார்.

     முன்னாடியாவது உயிர்ப்பு இல்லாத வாழ்க்கை தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். ஆனால் கழுதை தேய்ந்த கட்டெறும்பு ஆன கதையா அவரோட பெயரும் புகழும் கூடக்கூட என்னை அவருக்கு ஏத்த மாதிரியான கைப்பாவையா மாத்தினார். 

     நான் நானாவே இல்லை. அவருக்குப் பிடித்த உடை, அவருக்குப் பிடித்த வாசனைத் திரவியம், அவருக்குப் பொருத்தமான நடவடிக்கைன்னு மொத்தமா அவருக்குப் பிடித்தமான வகையில் நான் இருக்கணும் என்று நினைத்து என்னோட சுயத்தை என்கிட்ட இருந்து பறிச்சார். என்ன பண்றதுன்னு புரியாம சந்திரவதனியா இல்லாம பகீரனோட மனைவியா உயிர் இல்லாத உடல் மாதிரி நடமாடிக்கிட்டு இருந்தேன்.

     அதெல்லாம் பார்க்கும் போது போங்கடா நீங்களும் உங்க பணக்கார வழக்கமும் என்று எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ஓடிடலாம் போல இருந்தது. ஆனா செய்ய முடியல. இத்தனை களேபரங்களுக்கு நடுவில் அவர் மேல் எனக்கு இருந்த காதல் எல்லாம் காணாமலே போயிடுச்சு“ என்று நிறுத்த இங்கே சாணக்கியனும் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தான்.

     “ரோமனுக்குப் போனால் ரோமானியர்களா மாறிடனும் னு சொல்வாங்க. அந்த வகையில் என் பொண்டாட்டி எனக்கு ஏத்த மாதிரி இருக்கணும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு பெரிய தப்பா நிலா. 

     நான் பண்ணது எல்லாம் என்னோட மரியாதைக்காகன்னு நினைச்சு என்னை வெறுத்தா அவ. ஆனால் நான் பண்ணது முழுக்க முழுக்க அவளோட சுயமரியாதைக்காகத் தான்னு அவளுக்குப் புரியல.

     போட்டு இருக்கிற உடைக்கும், பேசுற பேச்சுக்கும் நடந்துக்கிற முறைக்கும் தான் மரியாதை கிடைக்கும் என்றால் அந்த மரியாதை எனக்குத் தேவையில்லைன்னு அவ சொல்லலாம். ஆனால் நடப்பு அப்படித்தானே இருக்கு.

     அவளோட கொள்கைகள் எல்லாம் சரிதான். ஆனால் அதைப் பின்பற்றும் போது ஏற்படும் விளைவுகளைத் தாங்கிக்கும் அளவுக்கு அவளுக்கு மனப்பக்குவம் இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இல்லை. அவ மனசு ஒரு பூஞ்சைன்னு எனக்குத் தெரியும். 

     நாலு பேர் முன்னிலையில் அவ மட்டும் தனியாத் தெரிஞ்சு அதனால் அவ சங்கடப்படக்கூடாதுன்னு நினைச்சேன். அவளை யாரும் வித்தியாசமாப் பார்க்கக்கூடாதுன்னு நினைச்சு தான் இந்த விஷயங்களில் அவகிட்ட கொஞ்சம் கண்டிப்பு காட்டினேன். ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விடும் என்று எனக்குத் தெரியாது. 

     என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் அவளோட சுயம் போச்சுன்னு அடிக்கடி சொல்லுவா. அதுக்கு அர்த்தம் என்னை விட அவளோட சுயம் தான் அவளுக்கு முக்கியம். அவளைப் பொறுத்தவரையில் அது சரியாவே இருந்துட்டுப் போகட்டுமே.

     அவ விஷயத்தில் இப்படி யோசிக்கிறவ என்னோட விஷயத்தில், என் அப்பா, அக்கா, நான் நேசிக்கும் விளையாட்டு எல்லாவற்றையும் விட அவ தான் எனக்கு முதன்மையானவளா இருக்கணும் என்று எதிர்பார்ப்பா.

     எனக்காக அவளுக்குப் பிடிக்காத விஷயங்களை செய்யும் போது சுயம் போவதாக நினைக்கும் அவளே தான், அவளுக்காக எனக்குப் பிடிக்காத விஷயங்களை என்னை செய்யச் சொல்லிக் கேட்பா. நான் முடியாதுன்னு சொல்லும் போது என்னோடது காதலே இல்லன்னு சொல்லுவா. 

     எப்போதும் அவளுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் தான். அவளைப் பொறுத்த வரையில் காதல் என்பது அவளுக்குப் பிடித்த எல்லாத்தையும் நான் செய்யணும் அதே சமயம் அவளுக்குப் பிடிக்காத எதையும் நான் எதிர்பார்க்கக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்குன்னு எனக்கு இப்ப வரை புரிஞ்சுக்க முடியல. அவ என்னோட இருந்த கடைசி நொடி வரை முன்னுக்குப் பின் முரணா தான் இருந்தா“ என்றவன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டான்.  

     விட்ட இடத்தில் இருந்து துவங்கினாள் வதனி. “வாழ்க்கை வெறுத்துப்போயிடுச்சு எனக்கு. அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச ஆசை கூட வற்றிப்போன தருணங்கள் அவை. நானா அவரோட அருகாமைக்கு காத்திருந்த காலத்தில் வயதைக் காரணம் காட்டி என்னை விட்டு விலகி இருந்தவர் அவருக்கு தோன்றும் போதெல்லாம் என்கிட்ட வந்தார். 

     என்னால் அதை இரசிக்க முடியல. எல்லா விஷயத்துக்கும் கட்டுப்படுத்துற மாதிரி தான் இருந்தது. அன்பான தாம்பத்யம் கூட அமிலமா எரிந்தது“ என்று சிறிதும் தடுமாற்றம் இல்லாது உரைத்தாள் வதனி. 

     அந்த அமிலம் மினியின் நெஞ்சிலே விழுந்தது போல் எரிந்தது அவளுக்கு. திருமணம் முடிந்துவிட்டது என்று தெரிந்தாலே இதெல்லாம் சாத்தியம் தான் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாலும், சம்பந்தப்பட்டவள் மூலமாக கேட்பதற்கு புண் பட்ட மனம் மேலும் புண்பட்டது.

     தங்கையின் முகமாற்றங்களை அக்காவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் ஆறுதல் எதுவும் சொல்லவில்லை. அவளுக்காக நடந்ததைக் குறைத்தும் சொல்லவில்லை. கசக்க கசக்க மருந்து கொடுத்தால் தான் நோய் குணமாகும் என்றால் பல்லைக்கடித்துக்கொண்டு கொடுத்துவிட வேண்டியது தான் என்னும் நிலையில் இருந்தாள். 

     வதனியைப் பொறுத்தவரையில் பகீரதன் என்னும் சாணக்கியனை மணந்தால் தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அதனால் என்ன செய்தாகினும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடக் கூடாது என்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.

     “நாள்கள் போச்சு எதுவும் மாறல. எனக்கு அந்த பகீரதனைப் பிடிக்கல, அவரைப் பார்த்தாலே எரிச்சல் தான் வந்தது. அந்த நேரம் படிச்சு முடிச்சு ஒரு கம்பெனியில் வேலை செய்துகிட்டு இருந்ததால் பணத்துக்காக கூட அந்தக் குடும்பத்தோட உதவி எனக்குத் தேவைப்படல. தைரியமா விட்டுட்டுப் போயிடலாம் என்று பார்த்தால் நிலா, அரசன் அங்கிள், சமுதாயம் அது இதுன்னு ஏராளமான தடைகள். அந்த நேரம் தான் எனக்கு உங்க அத்தானோட பழக்கம் ஏற்பட்டது“ என்க மினி ஜீவனைத் திரும்பிப் பார்த்தாள். குற்றவுணர்ச்சியில் அவன் தலை தன்னால் குனிந்தது.

     “அவரோட நான் பேசும் போதும், பழகும் போதும் ஒருவித அமைதியான மனநிலை எனக்குக் கிடைக்கும். சிரிக்க சிரிக்க பேசுவார், மனசுவிட்டு சிரிப்பேன். பகீதரனோட இருந்த இரண்டு வருஷத்தில் ஒருமுறை கூட இப்படியான உணர்வை நான் அனுபவிச்சதில்லை. நான் வாழ்ந்த என்னோட கஷ்டமான வாழ்க்கைக்கு ஜீவனோட பேசும் கொஞ்ச நேரம் தான் ஆறுதலைக் கொடுக்கும். 

     நான் நானா இருக்கும் போதும் அழகு தான் என்று என்னை நம்ப வைத்தது ஜீவன். என்னை சௌகர்யமா உணர வைச்சது ஜீவன். அவர் பக்கத்தில் இருக்கும் போது நான் ரொம்ப சந்தோஷமாவும், பாதுகாப்பாவும் உணர்ந்தேன். 

     இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் பகீரதனோட இந்த உணர்வுகள் வருவது சாத்தியம் இல்லை என்று தான் தோணுச்சு. அந்த நிமிஷமே முடிவு பண்ணேன் எனக்கான சரியான துணை பகீரதன் கிடையாது, ஜீவன் தான்னு.

     அவருக்கும் என்மேல் விருப்பம் இருந்தது. சமுதாயத்தைப் பத்தி கூட பயப்படாதவர் அவரோட நட்புக்கு முன்னாடியும் நண்பனுக்கு முன்னாடியும் தைரியமான முடிவெடுக்க முடியாத கோழையா நின்றார்“ என்று வதனி நிறுத்த, மினியின் கண்கள் முழுக்க ஜீவனின் மேல் தான் இருந்தது.

     “பேசிப் பேசி நான் தான் ஜீவனோட மனசைக் கரைச்சேன். அவரும் ஒரு கட்டத்தில் என் காதலை ஏத்துக்கிட்டார். அடுத்து எங்ககிட்ட இருந்த மிகப்பெரிய பொறுப்பு பகீரதன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்வது தான். ஆனால் எங்க இரண்டு பேரிடமும் அதுக்கான தைரியம் இல்லை.

     காரணம் அவர்கிட்ட தெரிந்த அதிகப்படியான மாற்றம். அந்தக் காலகட்டத்தில் என்ன பேய் பிடிச்சதோ தெரியல  என்மேல் ரொம்ப அன்பா இருந்தார். என்னால் தான் அந்த அன்பை ஏத்துக்க முடியல. ஏன்னா என்மீதான அவருடைய காதலைக் காட்டுவதற்கு நான் அவருக்குக் கொடுத்திருந்த காலஅவகாசம் முடிந்து போயிருந்தது. 

     காலம் கடந்த மருந்தால் உடலுக்குக் கெடுதி என்றால், காலம் கடந்த காதலால் மனதுக்கு கெடுதி. அவரோட அன்பை என்னால் ஏத்துக்க முடியலையே தவிர அந்த அன்பை நான் மதித்தேன். அதனாலேயே என்னால் அவர் முகத்துக்கு நேரா ஜீவனுக்கும் எனக்கும் நடுவில் இருக்கும் காதலைப் பத்தி சொல்ல முடியல. 

     ஜீவனை மனசு முழுக்க நிறைச்சு வைச்சிருக்கும் போது பகீரதனோட மனதையோ உடலையோ என்னால் பகிர்ந்துக்க முடியல. நான் முடியாதுன்னு சொல்லும் முக்கால்வாசி நேரம் அமைதியா போனாலும் சில நேரம் என்னைக் கன்வின்ஸ் பண்ணி அவர் நினைச்சதை சாதிச்சுப்பார் தான். அப்பெல்லாம் எனக்கு எவ்வளவு அருவருப்பா இருக்கும் தெரியுமா?“ வதனி கேட்ட கேள்வியில் மினியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அது தனக்காகவோ இல்லை தன் அக்காவுக்காகவோ இல்லை முழுக்க முழுக்க தன் காதலனுக்காக. அவன் பட்ட மனவேதனைக்காக. 

     இதே வார்த்தைகளை அக்கா அவனிடமும் சொல்லி இருப்பாள் தானே. அதைக் கேட்ட நேரம் அவன் மனம் எப்படித் துடித்திருக்கும். ஒரு ஆண்மகனுக்கு இதை விட பெரிய அவமானம் இருந்துவிட முடியுமா என்ன. பாவம் என்னவன் எப்படி துடியாய் துடித்திருப்பான் என தன்னவனுக்காகத் துடித்தாள் பெண்.

     தங்கையின் மனநிலை புரியாமல் தொடர்ந்தாள் தமக்கை. “பகீரதனோட தொடுகையை ஏத்துக்க முடியாம உங்க அத்தான்கிட்ட நெருங்கிப் பழகினேன்“ வதனி சொல்ல, போதும் அக்கா என்று கத்திய மினி வேகமாக தன்னறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

     அவளுக்குத் தேவையான அனைத்தையும் தெரிந்து கொண்டாகிவிட்டது. எப்படி யோசித்தாலும் அவளால் தன் அக்கா செய்ததை சரி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பகீரதன் என்னும் அவன் நல்லவனா கெட்டவனா அவன் வதனிக்கு செய்தது சரியா தவறா என்ற வாக்குவாதத்திற்கு எல்லாம் அவள் வரவில்லை. 

     தான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக பிடிக்காத கணவன் இல்லை காதலனுடன் ஒரு பெண் சகித்துக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்று நினைக்கும் ரகம் இல்லை அவள்.  அதற்காக கணவன் சரியில்லை என்ற காரணத்தை சொல்லிக்கொண்டு அவனுடைய வீட்டில் அவன் பாதுகாப்பில் இருந்து கொண்டே இன்னொரு ஆண்மகனிடம் நெருங்கிப் பழகுவதை சரி என்று செத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள் மினி.

     வதனி என்பவள் அவள் கணவன் அவளுக்குச் செய்த கொடுமைகளாக அவள் நினைத்த அனைத்திற்கும் சேர்த்து, தன் ஒற்றைச் செயலால் அவனுக்கான நியாயமான தண்டனையை விட அதிகம் கொடுத்திருக்கிறாள் என்று தான் நினைக்கத் தோன்றியது மினிக்கு. 

     சாணக்கியன் மீது அவள் கொண்டிருந்த அதீத அன்பினாலோ இல்லை அவன் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று அவள் மனம் அடித்து சொன்னதாலோ சாணக்கியன் பக்கம் தான் நிற்க முடிவெடுத்தாள் மினி.

     தான் பேசிக்கொண்டிருக்கும் போதே ஓடிச்சென்ற ஆசைத் தங்கையின் அறையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் வதனி. ஜீவன் அவள் அருகே வர, “மினியும் என்னைத் தான் தப்பா நினைக்கிறாளா ஜீவன். என் மனசு யாருக்கும் புரியாதா?“ ஏக்கமாகக் கேட்டாள்.

     “நம்ம செயலுக்கு நாம யாரிடமும் விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லை வதனி. இந்த உலகத்தில் எல்லோருக்கும் சுயநலம் இருக்கும், நமக்கு கொஞ்சம் அதிகமா இருந்திருக்கு அவ்வளவு தான். 

     நான் உன்னைக் காதலிக்கிறேன் நீ என்னைக் காதலிக்கிற. நம்ம பசங்க நம்ம இரண்டு பேரையும் காதலிப்பாங்க, அது போதும் நமக்கு. வெளியே இருக்கும் யாரும் நம்மைப் பற்றி என்ன சொன்னால் என்ன“ என்க, வதனிக்கு அழுகை அதிகமாய் வந்தது.

     “நான் பண்ணது தப்பில்லைன்னு நான் நம்புறேன் ஜீவன். என்னைத் தெரிந்த எல்லோரும் என்மேல் தப்பு இல்லைன்னு நம்பணும் என்று நினைக்கிறேன். அதில் தப்பு இல்லையே“ அழுகையுடனே சொன்னவளை ஆழமாய் பார்த்தவன்  ஒற்றைக் கேள்வி தான் கேட்டான்.

     “நடந்த எந்த சம்பவத்துக்கும் நீ காரண காரியம் சொல்லிட முடியும். ஆனால் பாரி, சபரியை கொஞ்சம் யோசித்துப் பாரு“ என்க, சூடுபட்டது போல் கணவனின் மார்பில் இருந்து எழுந்தாள் வதனி.

     அதே சமயம் தன்னை ஒரேயடியாக சாய்த்துப் போட்டு, தனக்குள் இருந்த மொத்த நம்பிக்கையையும் உடைத்துப்போட்ட அந்த கொடூர நிகழ்வுக்கு பயணப்பட்டான் சாணக்கியன்.

 

 

 

 

 


Leave a comment


Comments


Related Post