இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 19-05-2024

Total Views: 8135

அத்தியாயம் - 14

இந்திரன் முகம் வெகுபிரகாசமாக மாறிய பின் நாரதர் மேலும், "அதுமட்டும் இல்லை இந்திரா! அவளுக்கு அத்தை மகன் ஒருவன் இருக்கின்றான். அவனுக்கும் அவள் மீது மையல் இருக்கிறது. மணம் புரிந்தால் அவளைத்தான் என்று அவன் உறுதியாக இருக்கின்றான். அதையும் மீறியே தற்போது இயமன் அவள் மனதில் இடம் பிடித்திருக்கின்றான்" இதைச் சொன்னதும் ஏற்கனவே இயமன், இதில் இன்னுமொருவனா.. ம்ம் பார்க்கலாம் என நினைத்த இந்திரன் யோசிக்கலானான். 

இரவின் இனிமையினை அஞ்சனாவின் புகைப்படத்தினை கையில் வைத்தவாறு அனுபவித்துக் கொண்டிருந்தான் திரு. இன்னும் சில நாட்களில் அவளுக்கும் அவனுக்கும் திருமணம். நினைவே அவ்வளவு தித்திப்பாக இருக்கின்றதே அது நிஜமாகும் போது எவ்வளவு தித்திப்பைத் தரும். அதில் சிலிர்த்தவன் புகைப்படத்தில் இருந்த அவளது முகத்தினை வருடினான். 

இன்னும் கூடுதல் சிலிர்ப்பு அவனிடத்தில். சிறுவயதில் இருந்தே நினைவில் கலந்தவள். அவளோடு நிஜமாய் கலக்க வேண்டுமென்ற ஆவலில் இமைகள் கூட தூக்கம் துறந்து கிடக்கின்றது.. அவனது ரசனை எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்க கையில் இருந்த புகைப்படம் தவறி  கீழே விழுந்து உடைந்திருந்தது. அவனை மீறி விழ சாத்தியமே இல்லை. ஆனாலும் விழுந்திருக்கிறது புகைப்படம். அவன் கண்கள் திகிலுடன் அறையையே வலம் வந்தது. மனம் பயத்தில் படபடத்தது. அபசகுணம் என அவனுக்குப் பட்டது. அப்படியென்றால் அம்மா சொன்னது போல இருவரின் உயிருக்கும் ஆபத்தா.. என்ற கேள்வி அவனைப் போட்டுக் குடைந்தது‌‌. 

-------------------

அஞ்சனாவின் வீட்டில், அந்தகன் அவளோடே இருந்தான். அவளது கண்களுக்கு மட்டுமே தென்படும் அவனால் பெரிதாக எந்தவித பிரச்சனையும் இல்லை. அஞ்சனா அவனுடன் பேசுவதிலேயே குறியாக இருந்தாள். அவனும் அப்படியே. காதலர்களுக்கு வேறு என்ன வேலை.. ஆதலால் அவர்கள் காதல் பேச்சிலே வளர்ந்துக் கொண்டே இருந்தது. 

அன்றைய தினம் வேகமாகவே எழுந்து சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள் அஞ்சனா. அவளது முகம் மலர்ச்சியாய் இருந்தது. சிவகாமிக்கு இப்போதுதான் சற்று நிம்மதி. அவள் நினைத்துக் கொண்டாள் திருவுக்காக அஞ்சு மனம் மாறியிருக்கிறாள் என்று. ஆனால் அவளுக்குத்தானே தெரியும் தன் மலர்வுக்கு காரணம் மனங் கவர்ந்தவன் என்று. 

சமையல் அறைக்குள் இருந்து வெளிவரும் வாசத்தினை நுகர்ந்தவாறு இயமன் உள்ளே நுழைந்தான். கூடுதலாக அஞ்சனா என்ற அழைப்போடு. 

"வா அந்தகா"

"என்ன செய்கின்றாய்‌ அஞ்சனா. உன் முகம் வேறு இன்று வெகு பொலிவாய் இருக்கின்றதே. என்ன காரணம்?"

"நீதான் காரணம்"

"நான் காரணமா.. மெய்தானா அஞ்சனா"

"வேணும்னா சொல்லு உண்மைதான்னு உன் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுறேன்"

"சரி இன்றென்ன புதிதாய் இவ்வறைக்குள் நுழைந்திருக்கின்றாய்"

"உனக்காகத்தான் சமைச்சுட்டு இருக்கேன். நீ இப்படி எல்லாம் சாப்பிட்டு இருக்க மாட்ட தானே. அதான் உனக்கு செஞ்சு தரணும்னு தோணுச்சு"

"ஆஹா.. என் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருக்கிறது"

"இங்கு பால் தான் பொங்குது இரு இறக்கி வைக்கிறேன்"

"இதென்ன?" அவன் ஒரு பாத்திரத்தினை கைகாட்டி கேட்க, "இதுவா சாம்பார்" என்றாள்.

"ஓ.. வாசனையே பிரமாதமாக இருக்கின்றது. ஆங் இது"

"ரசம்"

"பிரமாதம் பிரமாதம் இது"

"இரு நானே சொல்லுறேன்.. இது ஊறுகாய்‌‌, இது அப்பளம், இது வடை"

"இவ்வளவும் எனக்கா? அஞ்சனா!"

"இல்லை கொஞ்சம் எனக்கும்.." அதற்குள் உள்ளே வந்த சிவகாமி "இன்னைக்கு உன்னை பார்க்குறப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு அஞ்சும்மா. இப்படி இருக்கணும்னு தான் நானும் ஆசைப்பட்டேன். எங்க நீயும் என்னை விட்டுட்டு போயிடுவயோன்னு ரொம்ப பயந்துட்டேன். இப்போ அந்த பயம் இல்லை. அது மாதிரி நீயும் திருவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா இன்னும் நிம்மதியாகிடுவேன். அதுதானே உன் ஐயாவோட ஆசையும்" என்றிட, அதுவரை இருந்த மலர்வு போய் அவளது முகம் சுருங்கிவிட்டது. கூடவே நின்றிருந்த அந்தகனோ மறுபடியும் இறுகி போய் நின்று விட்டான்.

"அம்மா கல்யாணத்தைப் பத்தின பேச்சு எதுக்கு?"

"இந்த பேச்சு உங்க ஐயா இருந்தப்பவே பேசினதுதானே"

"அதுக்குன்னு உடனே கல்யாணம் பண்ணி போயிடணுமா. கொஞ்சம் பேசாம இருங்க"

"காலையில நீ சமைக்கும் போதே எனக்கு தெரியும் அஞ்சு. இதெல்லாம் திருவுக்காகத்தானே. நீ சொல்லலைன்னாலும் எனக்குத் தெரியும். இதோ திருவே வந்துட்டான் பாரு" என்று சொல்ல அவள் திரும்பி அந்தகனைத்தான் பார்த்தாள்.

அவனோ திருவைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். 

"வா திரு!"

"என்ன அத்தை நம்ம வீட்டுல வரவேற்பு எல்லாம் எதுக்கு. என்ன சமையல் வாசனை வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே ஆளையே தூக்கிடுச்சு"

"நீ வருவன்னு உனக்காகவே சமையல் பண்ணியிருக்கா இவ"

"அஞ்சும்மாவா இன்னைக்கு சமைச்சது.. அதுவும் எனக்காகவா‌. கேக்குறப்பவே அவ்வளவு சந்தோஷமா இருக்கே.. அஞ்சு சீக்கிரமா எடுத்து வை. எனக்கு ரொம்ப பசிக்குது" என அவன் சொல்ல அவளது இடையில் அழுத்தம் கூடியது.

"அந்தகா" அவள் முணங்க அவள் காதருகே "எனக்கென்று சொன்னாய். ஆனால் நடப்பது என்ன அஞ்சனா? இதற்கு மேல் என்னால் பொறுமையாய் இருக்க இயலாது. அந்த திருவை.." அவன் கோபத்தின் பரிணாமம் அவளது அவன்கரத்தின் வழியாய் இடைக்கு கடத்தப்பட்டது.

"என்ன பார்த்துட்டு இருக்க.. எடுத்து வை அஞ்சு" சிவகாமி அதட்ட

"இன்னும் அப்பளம் பொறிக்கல. நான் எடுத்துட்டு வர்றேன். நீங்க இரண்டு பேரும் வெளிய இருங்க" இருவரையும் அனுப்பியவள் அவனது கரத்தினை விடுவிக்க முயல முடியவில்லை.

"கையை எடு அந்தகா"

"முடியாது"

"திரு வருவான்னு எனக்குத் தெரியாது. அவங்களா நினைச்சு பேசிட்டு போறதுக்கு நானென்ன பண்ணுறது"

"அவனை உன்னோடு சேர்த்து வைத்துப் பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை அஞ்சனா. என் நிலையை புரிந்துக் கொள்"

"புரியுது. நான் இன்னைக்கு திருகிட்ட பேசிடுவேன்"

"முடியாது என அவன் மறுப்பானே. என்ன செய்வதாய் உத்தேசம்"

"நான் செத்துடு..."

இடையில் பதிந்திருந்த கரம் இப்போது அவளது கன்னத்தில் பதிந்தது.

"அந்தகா!" கண்ணீர் ததும்ப அவள் அழைக்க "ஏற்கனவே ஒரு முறை கூறியிருந்தேன்.. இது போன்று பேசாதே என்று. கேட்க மாட்டாயா நீ. நீ இறந்து போனால் நானும் இறந்து விடுவேன்" அவன் சொல்ல அவள் தாங்கமாட்டாமல் அவனை அணைத்துக் கொண்டு "இனி இப்படிப் பேச மாட்டேன். அதுக்காக நீ ஏன் அப்படிச் சொல்லுற.. பேச்சுக்கு கூட நீ இப்படிச் சொல்லாத. என்னால தாங்க முடியாது அந்தகா" என்ற சொன்னவளின் முகத்தினை பிடித்துத் தன் மார்போடு இன்னும் அழுத்திக் கொண்டான்.

"எனக்கென்று சமைத்திருக்கிறாய். நான் தான் முதலில் சாப்பிடுவேன். உன் அத்தை மகனுக்கு அதன்பிறகு கொடு"‌ எனச் சொன்னவன் அவளை ஊட்டச் சொல்லி உண்ணத் தொடங்கினான்.

அவளது விரல் தனது வாய்க்குள் சென்று வரும் போது அவனுக்குள் பல உணர்வுகள் தடம் புரள தொடங்கியது. அதன் விளைவு அவளின் விரல்களில் அவனது இதழ்கள் விளையாடத் தொடங்கியது.

"அந்தகா! ஒழுங்கா சாப்பிடு"

"உண்டுகொண்டு தான் இருக்கின்றேன் எனக்கான உணவை"

அவர்கள் இருவரும் வேறு உலகிற்கு பயணப்பட ஆரம்பிக்க, "அஞ்சனா! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க. சாப்பாடு எடுத்துட்டு வா" என்று வெளியில் இருந்து குரல் கேட்டது.

"அய்யோ அம்மா கூப்பிடுறாங்க"

"அங்கே அவனிருப்பான் அஞ்சனா. உன் மனம் புண்படும் படி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் ஆனால் அவனைப் பார்த்துவிட்டாலே என் மனம் சொல் பேச்சுக் கேட்கமாட்டேன் என்கிறது‌. ஏதாவது சொன்னால் நான் உறவுகளுக்கு கட்டுப்பட்டவள் என்பாய்.. எதற்கு? நீ சென்று உணவு பரிமாறி விட்டு வா. நான் வெளியே காத்திருக்கின்றேன்" இயமன் சென்றுவிட்டான்.

சமையலை ஒருவன் ருசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தான். ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவன் அஞ்சனாவை புகழ்ந்துக் கொண்டிருக்க அவளோ கடனே என்று அவனுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கவும் திரு "அத்தை அஞ்சனா இவ்வளவு பண்ணும் போது பதிலுக்கு நான் எதுவுமே பண்ணாதது நல்லா இருக்காதே. அதனால நான் அவளுக்குன்னு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். அதை குடுத்துடுறேன்" அத்தையிடம் சொன்னவன் அவளிடம் அதை நீட்டியிருந்தான்.

"என்னது இது"

"வாங்கி பிரிச்சுப் பார் அஞ்சும்மா. உனக்குப் பிடிக்கும்னு நினைக்குறேன்"

வாங்கி பிரித்துப் பார்க்க அதிலிருந்தது புடவை. 

"இது கல்யாணத்துக்கான புடவை அஞ்சும்மா" என்றிட வெளியே இருந்த இயமன் நெஞ்சம் கொதித்துப் போனது.

அடேய் என்று அவன் கத்த அந்த சப்தத்தில் உள்ளே ஒருத்தி தூக்கி வாரிப்போட புடவையைப் பார்த்தாள்.

"என்ன இவ்வளவு அதிர்ச்சி ஆகுற?"

"இப்போ எதுக்கு இதெல்லாம்"

"கல்யாணம் பண்ண முடிவு எடுத்தாச்சு. எல்லாத்தையும் சரியா செய்யணும் இல்லையா. அதான் நான் போய் வாங்கிட்டு வந்தேன். உனக்கு பிடிச்சுருக்கா. இல்லைன்னா நாம வேற வாங்கிக்கலாம்"

"அழகா இருக்கு திரு.‌ அஞ்சு உனக்கு எடுப்பா இருக்கும்" அம்மா அவள் பங்கிற்குச் சொல்ல அவளோ "திரு உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றாள்.

"சொல்லு அஞ்சு என்ன பேசணும்" அவளறையில் அமர்ந்துக் கொண்டு அவன் கேட்க "இந்த கல்யாணம் வேண்டாம் திரு" என்றாள் அவள்.

"என்ன சொல்லுற உனக்கென்ன பையித்தியமா? நான் உன்கிட்ட கல்யாணத்தைப் பத்தி கேட்டேன் தானே. இப்போ வந்து இப்படிச் சொல்லுற. எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற?"

"எனக்குப் பிடிக்கலை திரு"

"காரணம் கேட்டேன் அஞ்சு"

"நான் வேறொருத்தரை விரும்புறேன் திரு. கல்யாணம் பண்ணா அவங்களைத்தான் பண்ணிப்பேன். என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அம்மாகிட்ட சொல்லி நீதான் கல்யாணத்தை நிறுத்தணும்"

"பொய் சொல்லாத"

"சத்தியமா எனக்கு அவனை பிடிச்சுருக்கு. அவன் இல்லாமல் என்னால இருக்க முடியாது திரு. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ"

"புரிஞ்சு போச்சு"

"அப்போ கல்யாணம் நடக்காதுன்னு அம்மாகிட்ட சொல்லிடுவதானே"

"நீ ஏன் இப்படிப் பேசுறன்னு புரிஞ்சு போச்சு.. எங்க அம்மா உன்கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துன்னு சொன்னாங்களா?"

"திரு.." அவள் திருதிருக்க,

"சொன்னாங்க தானே. எனக்குத் தெரியும். அவங்க ஜாதகம் பார்த்தேன் இரண்டு பேரும் செத்து போயிடுவீங்க கல்யாணம் வேண்டாம். நீதான் ஏதாவது பேசி திரு மனசை மாத்தணும்னு சொல்லி உன் மனசை மாத்திவிட்டுருப்பாங்க. சரியா அஞ்சு" என்றான் மிகச்சரியாக.

"சொன்னாங்க. ஆனால் அதுக்காக நான் சொல்லலை திரு. நிஜமாவே என் மனசுல.."

"சும்மா அதையே சொல்லாத அஞ்சு.. அவங்கதான் ஜாதகத்தை நம்புறாங்கன்னா நீயுமா.. உனக்கு என் மனசு தெரியாதா.. இந்த கல்யாணம் நடக்கணும் அஞ்சு"

"நடக்க வேண்டாம்"

"பயப்படாத அஞ்சும்மா.. என்ன பரிகாரம்னு ஜோசியர்கிட்ட கேட்டுட்டு நாம அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சனை வராது" அவளை சமாளிக்கத்தான் முற்பட்டானே தவிர அவன் அவள் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளவே இல்லை.

"நான் சொல்லுறது உனக்கு புரியவே இல்லையா. நான்தான் உன் மேல இஷ்டம் இல்லை. வேறொருத்தனை காதலிக்கிறேன்னு சொல்லுறேன். மறுபடியும் மறுபடியும் நீ சொன்னதையே சொல்லிட்டு இருக்க. இந்த கல்யாணம் நடக்க கூடாது. நடக்கவும் நடக்காது‌. இந்த புடவையை கொடுக்க வேண்டியது என்கிட்ட இல்லை. அதுக்கேத்த பொண்ணு உன்னைத் தேடி வருவா. அவகிட்ட கொடு" என அவனது கையில் புடவையை கொடுத்துவிட்டு அவள் வெளியேற 

அம்மா என்று பற்கள் நெறிபட திரு முழங்கினான்‌. அவனுக்கு அம்மாவால் தான் இவள் இப்படி எல்லாம் பேசுகிறாள் என்ற எண்ணம். அதனாலேயே அவள் காதலிப்பதாய் சொன்னதை பொய் என்றே நினைத்தான். அது மெய் என்று தெரிய வரும் போது...

காதலாசை யாரை விட்டது...




Leave a comment


Comments


Related Post