இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 19-05-2024

Total Views: 11749

அத்தியாயம் 15

அஞ்சனாவின் பயத்தினை தெளிய வைக்க வேண்டுமென நினைத்து அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு திரு ஒரு சோதிடர் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். 

"விடு திரு நான் வரலை. உனக்கு நான் சொல்லுறது புரியவே இல்லையா?" திமிறினாள் இவள்.

"எல்லாம் புரியுது. நீ கம்முன்னு வா. இல்லைன்னா கோபத்துல இங்கேயே தாலி கட்டிட போறேன். என்ன பார்க்குற. என்கிட்ட தாலியும் கைவசம் இருக்கு" வெகு சாதாரணமாக அவன் சொல்ல, "நீயென்ன இப்படி நடந்துக்கிற?" அதிர்ச்சியோடு கேட்டாள்.

"இந்த ஆசையை விதைச்சது உங்க ஐயா‌‌.. அதுக்கு அடிக்கடி தண்ணீ ஊத்துனது எங்க அம்மா. இப்போ வலிக்க வலிக்க புடுங்கி எறிஞ்சுட்டு வலியோட நான் இருக்கணும்னு சொன்னா எந்த விதத்துல நியாயம். என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. சாகுறதா இருந்தால் இரண்டு பேரும் சேர்ந்தே சாகலாம். புரிஞ்சதா"

"நான்தான் உண்மை என்னென்னனு சொல்லிட்டேன்ல"

"அது உண்மையே இல்லைன்னு நான் சொல்லிட்டேனே. இங்க பாரு பேசாமல் வா. உன்னை பேச விட்டா இப்படியேதான் பண்ணுவ" இரு என்றவன் தன் சட்டைப் பையினுள் கைவிட்டு தாலியை எடுக்க அவளோ திடுக்கிட்டு விழித்தாள்.

"எனக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். எல்லா நேரமும் நல்ல நேரம்தான் இங்க இப்பவே இதை உன் கழுத்துல கட்டிட்டுப் போயிட்டே இருப்பேன் எப்படி வசதி" அதன்பிறகு அவள் பேசவே இல்லை. எப்படிப் பேசுவாள். 

"அது.. இந்த அமைதி ரொம்ப நல்லா இருக்கு" அவளோடு இணைந்து அவன் உள்ளே சென்றான்.

சோதிடரின் முன் அமர்ந்து தங்களைப் பற்றி சொன்னவன் தங்களிருவரின் ஜாதகத்தினையும் முன் வைத்தான். அதை எடுத்து மாறி மாறி பார்த்த சோசியர்

"இரண்டு ஜாதகமும் அமோகமா பொருந்தியிருக்கு. கல்யாணம் பண்ணுறதுல ஒரு பிரச்சனையும் இல்லை. யாரு சொன்னா இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு"

"கேட்டீயா அஞ்சு.. இப்போ என்ன சொல்லுற?" புன்னகையோடு அவன் அவளிடம் பேச,

"நான்தான் வேறொருத்தனை காதலிக்கிறேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்" என்றாள் அவளும்.

"அதையே சொல்லாத. அது எங்க அம்மாவுக்காக நீ சொன்ன பொய்"

"இல்லைன்னு எந்த கோவில்ல வந்து சத்தியம் பண்ணனும் திரு"

சற்று யோசித்தவன், "திருமணல்மேடு போறோம்ல அங்க வச்சு நாம ஒரு முடிவுக்கு வரலாம்" என்றிட, "சரி திரு. அதுவரைக்கும் என்னை பார்க்க வர்றேன்னு வந்துடாத.." எனச் சொல்லி அவள் சென்றாள். இப்போது அவளுக்கு கோபம் அந்தகனின் மீது பாய்ந்தது.

கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு இப்போ ஒரு வாரமா ஆளவே காணோம் என்ன நினைச்சுட்டு இருக்கான். ஒருவேளை நம்மளை மறந்துட்டானோ.. நாமதான் அவனை நினைச்சு மனசை பறிகொடுத்துட்டோமோ இப்படியொரு நினைப்பு வந்ததும் அவள் உள்ளம் வெடவெட வென நடுங்கத் தொடங்கியது. 

அந்தகா! பலவீனமாய் அவளது அழைப்பு இருந்தது. அந்த அழைப்பிற்கு பதில் அழைப்பு வரவே இல்லை. அவளது மனம் கொஞ்சம் கொஞ்சமாய் சஞ்சலமடைய தொடங்கியது. தன்னை சுற்றி நடப்பது என்ன? எது நிஜம் என்ற குழப்பம் வேறு.. எதையும் அஞ்சனாவால் தாங்க முடியவில்லை. அந்தகனை அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்ததுதான் மிச்சம். அன்று அவள் கையால் உணவு வாங்கிக் கொண்டதோடு சரி அவனைக் காணவே இல்லை. திருவின் நடவடிக்கையால் தான் கோபமாக இருக்கின்றான் வந்துவிடுவான் என்று பார்த்தால் அவனை காணவே இல்லை. இப்போது அவன் வருவானா மாட்டானா என்ற சந்தேகம் வேறு பேய் போல் அவளைப் பிடித்துக் கொண்டது.

அந்த ஆட்டத்தில் அவள் தன்னை மறந்து போயிருந்தாள். அவன் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் கானல் நீராய் மாறியது. அவளது உடல் நலிவதை கண்ட சிவகாமிக்கு பெருத்த வருத்தம். இப்போ கொஞ்ச நாளாத்தான் இவ நல்லா இருந்தா. மறுபடியும் இப்போ உடைஞ்சுட்டே போறாளே என்ன பிரச்சனைன்னு தெரியலையே அவள் புலம்பிக் கொண்டிருக்க உள்ளே வந்த லட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தாள்.

"வா லட்சுமி‌. உன் மருமகளைப் பார்த்தியா"

"இதுக்குத்தான் சொன்னேன் மதினி. கல்யாணம் வேண்டாம்னு. ஆனால் உன் மருமகன் பேச்சைக் கேட்டு நீயும் ஆடிட்டு இருக்க"

"இதுங்க இரண்டையும் சேர்த்து வைக்கணும்னு உங்க அண்ணன் நினைச்சார்"

"கடவுள் அப்படி நினைக்கலையே மதினி. நாம என்ன பண்ண முடியும். இப்போ பார்த்தியா நல்லா சுத்திட்டு இருந்தவளை இப்படி படுக்க வச்சுட்டீங்க. இவன் வேற என்ன சொன்னாலும் காதுல வாங்க மாட்டுறான். கேட்டா வேற சோசியர்கிட்ட காட்டி பேசியாச்சு. அவர் பொருத்தம் நல்லா இருக்குன்னு சொல்லுறாருன்னு சொல்லி என் வாயை அடைக்குறான். என்னதான் பண்ணுறதுன்னு தெரியல. நான் போய் அஞ்சுவைப் பார்த்துட்டு வர்றேன்" உள்ளே சென்றவளின் பார்வை வட்டத்தில் கருத்து மெலிந்து கிடந்த அஞ்சனா விழுந்தாள். அதுவும் சாளரம் வழியே வெறிச்சுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அஞ்சனா! என்னடி இது இப்படி இருக்க" அத்தை பேசியதும் திரும்பி பார்த்தவள் மீண்டும் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

"உன்னைத்தான் கேக்குறேன்"

"எப்படி இருக்கேன். நல்லாத்தானே இருக்கேன்"

"அடியே உண்மையை சொல்லு நீ நல்லாவா இருக்க. யாருடி அவன்?"

"எது யாரு?"

"திருகிட்ட வேற ஒரு பையனை விரும்புறேன்னு சொன்னயாமே யாரு அவன்"

"அது நான் அவனை ஏமாத்துறதுக்காக சொன்னதுன்னு அதையும் சேர்த்து சொல்லியிருப்பானே. பிறகெதுக்கு அத்தை கேள்வி கேக்குற?"

"அது பொய்யா இருந்தால் நான் கேள்வி கேட்டுருக்கவே மாட்டேன். சொல்லு யாரு அவன்"

"அப்படிலாம் யாரும் இல்லை"

"உன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது. நீ சொல்லுறது பொய்னு. உன் அப்பன் செத்தப்போ கூட நீ அழலை. அதுக்கப்பறம் அந்த துக்கத்தை மனசுலயே போட்டு உடைஞ்சு போய்தான் நின்னயே தவிர உன் முகத்துல விரக்தியை நான் பார்த்ததே இல்லை. இன்னைக்கு பார்க்குறேன். அதுக்கு காரணமானவன் யாரு? எவ்வளவு நாள் பழக்கம் சொல்லுடி"

"அத்தை நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத. யாரும் இல்லை"

"யாரும் இல்லைன்னு உன் ஐயா மேல சத்தியம் பண்ணிச் சொல்லு"

"சத்தியம் எல்லாம் எதுக்கு"

"பண்ணுடி"

"அவன் பேரு அந்தகன்"

"எந்த ஊர்"

"பக்கத்து ஊரு அப்பா அம்மான்னு யாரும் இல்லை. அங்க ஆஸ்பத்திரியில வச்சுத்தான் தெரியும். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சுருக்கு அத்தை. அதுதான் நான் உன் மகன்கிட்ட சொன்னேன். ஆனால் அவன் கேட்கவே இல்லை. இப்போ சொல்லு. நான் என்ன பண்ணுறது"

"அவனை வீட்டுல வந்து பேசச் சொல்லுடி"

"அவனை நான் உன் மகன் கல்யாணச் சேலை குடுக்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு பார்த்தது அதுக்கப்பறம் பார்க்கவே இல்லை"

"அதுதான் இப்படி வேதனைப்பட்டுட்டு இருக்கயா. ஏன் அவன் வரலை? உண்மையிலே உன் மேல அவனுக்கு விருப்பம் இருந்ததா? இல்லை சும்மா பழகுனானா"

"அத்தை அவன் காதல் பொய்யின்னு சொல்லாத.. என்னால ஏத்துக்க முடியாது. அவனுக்கு ஏதாவது வேலை இருந்துருக்கும்"

"அவன் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?"

"தெரிஞ்சுருந்தா நானே போயிருப்பேன்ல"

"வர்ற கோபத்துக்கு உன்னை கழுத்தை நெறிச்சுக் கொள்ளலாம்னு வருது டி. அறிவு கெட்டவளே என்ன காரியம் டி பண்ணி வச்சுருக்க"

"எனக்கும் மனசு இருக்கு அத்தை"

"மனசு.. மண்ணாங்கட்டின்னு கண்டமானிக்கு பேசாத டி. கம்முன்னு இரு. அடுத்த வாரம் திருமணல்மேடு கோவிலுக்கு போகணும். அதுவரைக்கும் கொஞ்சப் பொறுமையா இரு. அவனை அடுத்துப் பார்த்தா அவனை நான் பார்க்கணும்னு சொல்லி வீடு எங்க இருக்குன்னு கேட்டு வை சரியா.."

"சரி அத்தை.." சோர்வாய் அவளும் சொல்ல அஞ்சு என்ற குரல் அவள் வீட்டில் கேட்டது. அந்த குரல் அதில் வழிந்த பாசம் இவ்வளவு நேரமாய் விரக்தியின் உச்சத்தில் இருந்தவளை நொடியில் மாற்றியது.. 

"சாரதி" என்று கீழே வேகமாய் ஓடினாள். "டேய் சாரதி.." கண்கள் கலங்க அவள் அழைக்க அவனும் அதே நிலையில் இருந்தான்.

"எனக்கு இப்போத்தான் தெரியும்" குரல் கமற அவன் பேச, அவள் தந்தையின் நினைவில் அழத் தயாரானாள். பின் அவளே மனதை சமன் செய்து "சாரதி ஐயா போகணும்னு இருந்துருக்குடா போயிட்டாரு. என்ன பண்ணுறது. நீ அழாதடா.. அதுசரி எப்போ ஊர்ல இருந்து வந்த?" என்றாள்.

"இன்னைக்கு காலையில தான். அம்மா அஞ்சனா வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு அப்பறம்தான் நடந்த விஷயத்தையே சொன்னாங்க. அதான் ஓடி வந்தேன்‌. ச்சே நான் அந்த சமயத்துல உன்கூட இல்லாமல் போயிட்டேன் அஞ்சு"

"இருந்திருந்தால் கூட அவளுக்கு தெரிஞ்சுருக்காது டா சாரதி. அவ அப்போ பித்துப் பிடிச்சவ மாதிரி இருந்தா. ஆஸ்பத்திரி கூட்டி போய் இப்போத்தான் சரியாகியிருக்கா டா. ஐயாவைப் பத்திப் பேசாமல் வேற பேசுங்கடா" என லட்சுமி சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்துவிட சாரதியுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

இருவரும் நண்பர்கள். வேலைக்குச் சென்றதால் மட்டுமே இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி வந்தது.

"திருவுக்கும் உனக்கும் கல்யாணம்னு அம்மா சொன்னாங்க. திரு உனக்கு ஏத்தவன்தான்"

"ப்ச் வேற பேசலாம்"

"ஏன்? அவனை உனக்குப் பிடிக்கலையா"

"கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பிடிக்கலை சாரதி"

"அப்படின்னா உனக்கு வேற யாரையோ பிடிச்சுருக்கு அப்படித்தானே"

"ஆமா" என்று சொன்னவள் அந்தகனைப் பற்றிச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த சாரதிக்கு தலை பயங்கரமாக சுற்ற ஆரம்பித்தது.

உண்மையிலே இவளுக்கு பையித்தியம் பிடிச்சுருச்சோ சந்தேகமாய் பார்க்க வேறு செய்தான் அவன்.

"என்னடா ஒரு மாதிரி பார்க்குற"

"ஏய் உண்மையைச் சொல்லு. எந்த கதைபுக்ல வர்ற நிகழ்வு இதெல்லாம்"

"கதையா.. நான் சொன்னது எல்லாம் உனக்கு கதையில இருந்து எடுத்துச் சொல்லுற மாதிரியா இருக்கு"

"பின்ன.. கந்தர்வனாம்.. காதல் சொன்னானாம் இவங்களும் சரின்னு சொன்னாங்களாம். அவரு இவ கண்ணுக்கு மட்டும்தான் தெரிவாராம் வேற யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாராம். இப்படிலாம் சொன்னா இதை கதைன்னு சொல்லாமல் என்னென்னு சொல்லுறது"

"நம்புடா. நான் சொல்லுறது உண்மை"

"உண்மையா.. சரி நம்புறேன்‌. இப்போ அவன் இங்க இருக்கானா?" கண்களை சுழல விட்டவள் "இல்லை" என்றாள்.

"நீ கூப்பிட்டா வருவான்னு சொன்னயே.. கூப்பிடு வருவானான்னு பார்க்குறேன்"

"வந்தாலும் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டான்"

"இங்க வந்த உடனே என் கண்ணு முன்னாடி இருக்க இந்த ஜாடியை தட்டி விடச் சொல்லு நான் நம்புறேன்" அடுத்த விநாடி அந்த ஜாடி விழுந்து நொறுங்கியிருந்தது.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post