இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 31 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 19-05-2024

Total Views: 14829

அன்று அலுவலகத்தில் இருந்து தாமதமாக தான் வந்தான் அபிநந்தன். வந்த உடனேயே அபிலாஷாவும் பார்வதியும் எதையோ மறைத்து வலுக்கட்டாயமாக முகத்தை இயல்பாக வைத்திருப்பது போல தோன்ற அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தான் அபிநந்தன்.

அவனை சாப்பிட அழைத்த அபிலாஷா எப்போதும் அச்சுவிற்கு ஃபோன் செய்து பேசினாலே அத்தனை ஆர்வமாக அதை உணவுண்ணும் நேரம் கணவனோடு பகிர்பவள் இன்று அச்சுவை வீட்டிற்கே சென்று பார்த்து வந்தும் அமைதியாக இருக்க அவள் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று ஆராய்ந்தவன் ஒன்றும் புரியாமல் அன்னையை அழைத்தான்.

“அம்மா! இங்க வாங்களேன் கொஞ்சம்… உட்காருங்க லாஷா நீயும் உட்காரு…” என்றிட அவர்களும் அமைதியாக அமர

“என்னாச்சு லாஷா எப்பவும் நான் சாப்பிட உட்கார்ந்தாலே அச்சுக்கு இன்னைக்கு இந்த டிஷ் சாப்பிட தோணுச்சாம் அதான் அவளுக்காக பண்ணி ப்ரதீப் கிட்ட கொடுத்து விட்டேன். அச்சு ஃபோன் பண்ணினா இப்படி சொன்னா அப்படி சொன்னா னு கதைகதையா அடுக்கிட்டே தானே பரிமாறுவ… இன்னைக்கு ஏன் இந்த அமைதி? அதுவும் அச்சுவை நீ அவ வீட்டுக்கே போய் பார்த்தும்?” என்று சரியாக அவன் கணித்து கேட்க

“அது… அதெல்லாம் ஒன்னும் இல்ல நந்து…” நீங்க சாப்பிடுங்க முகத்தை இயல்பாக்க முயன்றாள் அபிலாஷா. 

“அம்மா நீங்க சொல்லுங்க…” என்று தாயிடம் கேட்க

“நீ முதல்ல சாப்பிடு நந்தா…” என்று சொல்ல

“அப்போ ஏதோ பிரச்சினை நடந்திருக்கு கண்டிப்பா நீங்களும் அதுக்கப்புறம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க நீங்களும் என்கூட உட்கார்ந்து சாப்பிடுங்க அப்போ தான் நான் சாப்பிடுவேன்.” அபிநந்தன் சொல்ல

“ஆமா அம்மா நீங்களும் சாப்பிடுங்க நான் எடுத்து வைக்கிறேன்.” என்று அபிலாஷா எழப்போக

“லாஷா உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று சற்றே அதட்ட அமைதியாக அவளுக்கும் பார்வதிக்கும் பரிமாறிய அபிலாஷா உணவை பெயருக்கு கொறித்தாள்.

சாப்பிட்டு முடிக்க “ம்ம்… இப்போ சொல்லுங்க என்ன நடந்தது இன்னைக்கு?” தாயையும் தாரத்தையும் அழுத்தமாக பார்த்து கேட்க

“அது… ஒன்னும் இல்ல நந்து…” என்று அபிலாஷா தயங்க

“டேய் நந்தா… அச்சு வீட்டுக்கு போனப்போ சம்மந்தி அம்மா சொந்தக்காரங்க வந்திருந்தாங்க டா.. அவங்க ஏற்கனவே அச்சு மனசு கஷ்டப்படுற மாதிரி பேசியிருப்பாங்க போல நம்ம அச்சு தான் நாம வருந்துவோம்னு சொல்லாம விட்டுட்டா..‌ ஆனா இன்னைக்கு வந்தப்போ இன்னும் கொஞ்சம் அதிகமா பேசி ரொம்ப சங்கட படுத்திட்டாங்க…” என்று தயக்கத்தோடே நடந்த எல்லாம் பார்வதி சொல்ல அபிநந்தன் கோபம் கொண்டு தான் கை முஷ்டியை மடக்கி தன் தொடையில் குத்தி கோபத்தை தணிக்க முயன்றான்.

‘தனக்கே இப்படி வலிக்கிறதே… லாஷா.. எதுவும் தெரியாமல் குழந்தை ஆசையை மனதில் தேக்கி வைத்து ஒவ்வொரு நாளும் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறாளே… அவளுக்கு எத்தனை வேதனை தந்திருக்கும்?’ என்று அவள் முகத்தை காண

ஆம் என்பது போல கண்கள் கலங்க நின்றிருந்தாள் அபிலாஷா.

“லாஷா…” என்று அவள் அருகில் வர

“எனக்கு தூக்கம் வருது நான் ரூம்க்கு போறேன்…” என்று தலையை குனிந்த படியே சொல்லி விட்டு அவள் உள்ளே சென்று விட தாயை பார்த்தான்.

“நீ போய் அவளை பாரு நந்தா… அவங்க சொன்ன மாதிரி எதுவும் இருக்காது நீங்க ரெண்டு பேரும் மனசை போட்டு குழப்பிக்காம இருங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார் பார்வதி.

உள்ளே வந்த நந்தனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றிருந்தாள் லாஷா. அவள் அமைதியாக தெரிந்தாலும் விழியை கடந்து கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை அறிந்து கொண்டான் ஆணவன்.

“லாஷா யாரோ ஏதோ சொன்னாங்க னு நீ ஏன் இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க?” என்று பின்னிருந்து தோள் தொட்டு கேட்க 

“இல்ல நந்து” என்று எதையோ சொல்ல வந்தவள் பின்னர் “சரி விடுங்க நந்து. ஆனா அச்சுக்கு இன்னைக்கு வந்தது பாருங்க ஒரு கோபம்… அவளுக்கு இவ்வளவு சத்தமா பேச தெரியும் னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்.” அபிலாஷா பேச்சை மாற்ற முயலுகிறாள் என்று புரிந்து கொண்டான் அபிநந்தன்.

அவனும் லேசாக புன்னகைத்து “இருக்காதா பின்னே? நீ என்ன சாதாரண ஆளா? முன்னாடி அவளோட அண்ணி மட்டும் தான் இப்போ அவ ஹஸ்பண்டோட பெஸ்ட் ஃப்ரண்ட் அப்பறம் அவளுக்குமே நீதான் பெஸ்ட் ஃப்ரண்ட் இப்போ.. என்கிட்ட அம்மாகிட்ட பேசுறதை விட பல சீக்ரெட்ஸ் உன்கிட்ட தானே பேசுறா..” செல்லமாக பொறாமை கொண்டது போல அவன் பேச அவளுமே இயல்பானாள்.

“போங்க நந்து… உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான்..” என்று அவள் சிணுங்க திடீரென்று பின்னால் இருந்து அணைத்தான் நந்தன். அவள் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்திட ஒரு நொடி அதிர்ந்து தெளிந்து

“நந்தூ…” என்று தன் வெட்கத்தை மறைத்து சிணுங்கலாக காட்டிட அவளை அணைத்தவாறு கட்டிலில் அமர்ந்த நந்தன் அபியை தன் மடியில் இருத்திக் கொண்டான்.

“ச்சூ… என்ன பண்றீங்க நந்து?” மிதமிஞ்சிய வெட்கத்தில் அவள் எழ முயல முடியவே இல்லை அவளால்.. அவள் தோள் வளைவில் தன் தாடை பதித்து இன்னும் தன்னோடு இறுக்கிக் கொள்ள உயிர் சிலிர்த்தாள் பெண்ணவள்.

“லாஷா… ஏன்டா? என்னாச்சு உனக்கு நான் உன்னை சரியா பார்த்துக்காம விட்டேனா?” வருத்தம் தோய்ந்த மெல்லிய குரலில் கேட்க

“என்ன நந்து ஏன் இப்படி கேட்குறீங்க?” அவள் அதிர்ந்து போய் அவன் பக்கம் திரும்பி கேட்க

“ச்ச்… யாரோ ஏதோ சொன்னாங்கனு நீ ஏன் அவ்வளவு ஃபீல் பண்ற லாஷா? ஏன் நாம சந்தோஷமா இருக்கோம் உனக்கு தெரியலையா?” என்றிட

“ஐயோ அப்படி எதுவும் இல்லை நந்து… என் அம்மா அப்பா போன அப்பறம் நான் மனசார சிரிச்சதே உங்க கூட இருக்கும் போது தானே… நீங்க அம்மா அச்சு எல்லாரும் எனக்காக எவ்வளவு யோசிக்கிறீங்க ஒரு குழந்தை மாதிரி என்னை பார்த்துக்கறீங்க… எனக்கு இது புரியாதா நந்து?

ஆனா, எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். அதோட உங்களோட அன்புல உருவான ஒரு உயிரை சுமக்க எனக்கு அவ்வளவு ஆசை தெரியுமா? அதுவும் அச்சு ப்ரகணன்சி பத்தி தெரியவும் எனக்கும் சீக்கிரம் தாயாகனும். அணு அணுவா ஒரு உயிர் எனக்குள்ள வளருவதை உணரனும்னு ஆசை வந்தது. ஆனா வந்தவங்க எல்லாம் அப்படி பேசவும் ஒரு வேளை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோ அதனால தான் எனக்கு குழந்தை பிறக்க லேட் ஆகுதோனு தோணுச்சு. அதான் லைட்டா கண் கலங்கிடுச்சு…” என்றிட

“ஒரு வேளை ஒரு குழந்தைக்கு தகப்பனாகுற சக்தி எனக்கு இல்லனு சொன்னா என்ன பண்ணுவ லாஷா?” அவன் சாதாரணமாக கேட்டு விட அவனை அதிர்ச்சியாக எதுவும் புரியாமல் பார்த்தாள் அபிலாஷா.

“சொல்லு லாஷா…” அவன் மீண்டும் கேட்க

“ஏன் நந்தன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” விட்டால் அழுது விடுவாள் போல குரல் கரகரப்பாக இருந்தது.

“ச்ச்… சும்மா ஒரு பேச்சுக்கு தான் லாஷா… இதையே தானே நீயும் கேட்குற… அதான் ஒருவேளை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருந்து அதனால்தான் நமக்கு குழந்தை பிறக்காம போகுதுன்னு தெரிஞ்சா…?” என்று முடிக்கவில்லை அவன்… அவன் வார்த்தைகள் தந்த தன் மன காயத்திற்காக அவன் இதழ்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.

அபிலாஷா எண்ணவோட்டம் புரிய தனக்குள் சிரித்துக் கொண்டான் அபிநந்தன். தண்டனை என்று இதழ் யுத்தத்தை துவங்கியது மட்டும் தான் அபிலாஷா… ஆனால் மெல்ல மெல்ல அவளின் கோபம் அழுகையாக மாற யுத்தத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்ட நந்தன் மென்மையாக அவள் இதழ்களிலேயே சமாதான பத்திரம் எழுதி அவளுக்கு தன்னை மொத்தமாக அடிமையாக்கி கொண்டான்.

முத்த யுத்தம் நொடிகள் தாண்டி நிமிடங்கள் கடந்து இருவருக்கும் மூச்சு வாங்க இதழுக்கு மட்டும் இடைவெளி விட்டு நெற்றியோடு நெற்றி முட்டி ஒருவர் விழியில் ஒருவர் கலக்க சில நொடிகளில் அவன் பார்வை வீச்சு தாளாமல் அவன் மார்பில் தன்னை மறைக்க முயன்றாள் பாவையவள் வெட்கங்கொண்டு…

அபிலாஷா கன்னங்களில் இதழூர்வலம் நடத்திய நந்தன் விரல்கள் அவள் மேனியில் கோலமிட தன் வெட்கத்தை வண்ணமாக பூசிக் கொண்டாள் அபிலாஷா.

அபிலாஷாவிற்கான ஆறுதலாக தான் துவங்கியது இந்த காதல் யுத்தம்… ஆனால் மனதளவில் அபிநந்தனுக்குமே இந்த ஆறுதல் வேண்டுமாக இருக்க வாய் வார்த்தைக்கு விடுப்பு தந்து இரு மனங்களும் இரு உயிரும் இரு உடலும் ஒன்றென இணைந்து பேசிக் கொள்ளும் தாம்பத்தியம் என்ற அழகிய நிகழ்வு நிகழ்ந்திருந்தது அங்கே…

அதன் பின்னான நாட்கள் அபிலாஷா மனம் தெளிய மகிழ்வாக வலம் வர பார்வதி அக்சயா பத்மாவதி என்று அனைவரும் மகிழ்ந்தனர்.

அன்று ஒரு நாள் திடீரென்று சந்தியாவின் மருத்துவமனைக்கு வந்திருந்தான் அபிநந்தன்.

அதே சமயம் தன் தோழன் ஒருவனுக்கு விபத்தாகி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க அவனை காண வந்திருந்தான் முகில்.

அபிநந்தனை பார்த்தவன் அதுவும் அவன் முகத்தில் இருந்த குழப்பம் பயம் அனைத்தும் அவனை பின்தொடர செய்திருந்தது அபிநந்தன் அறியாமல்…


தொடரும்…





Leave a comment


Comments


Related Post