இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 20-05-2024

Total Views: 22139

இதயம் 24

     பகீரதன் என்ற சாணக்கியனுக்கு பள்ளி கால நண்பன் ஜீவன் என்றால் கல்லூரி கால நண்பன் எழில். கல்லூரி படிப்பிற்காக டெல்லி சென்றிருந்த ஜீவன் படிப்பு முடிந்ததும் வேலைதேடி சென்னை வந்திருக்க நண்பன் சாணக்கியனின் அபார வளர்ச்சி தெரிய வந்தது. அதில் அவனுக்கு சொல்ல முடியாத அளவு ஆனந்தம். 

     வேலை தேடுகிறேன் என்று தன் வீட்டில் காட்டிக்கொண்டு முக்கால் வாசி நேரம் நண்பனுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்குத் திருமணம் ஆன விஷயமே தெரிய வந்தது. நண்பன் மனைவியைப் பார்க்க வந்த ஜீவனுக்கு அவள் முகமே காட்டிக்கொடுத்தது அவளுக்குத் திருமண வாழ்வில் திருப்தி இல்லை என்பதை.

     நண்பனை அது குறித்து கடுமையாகக் கண்டித்ததோடு, பெண்கள், அவர்கள் மனது, கணவனிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்பு எனப் பலவற்றைப் பற்றி வகுப்பு எடுத்தான். பகீரதன் அது வரை செய்து கொண்டிருந்த சின்னச்சின்னத் தவறுகளைப் புரியவைத்தான்.

     சொந்த நலனுக்காகத் தான் என்றாலும் விருப்பமில்லாத விஷயங்களைச் செய்யச் சொல்லும் யாரையும் பெண்களுக்குப் பிடிப்பதில்லை என்ற உண்மையை பகீரதனுக்குப் புரிய வைத்தது சாட்சாத் ஜீவன் தான்.

     விளைவு பகீரதன், வதனி எதிர்பார்ப்பின் படி நடந்து கொள்ள ஆரம்பித்தான். ஆனால் முழுவதுமாக வற்றிப்போன கிணற்றில் எங்கிருந்து மீண்டும் ஊற்று உற்பத்தியாகும்.

     கணவனின் மீதான தன்னுடைய எதிர்பார்ப்பு ஒவ்வொரு முறையும் பொய்த்துப்போனதன் விளைவு, அவன் மேல் தான் கொண்டிருந்த காதல் அனைத்தும் காற்றில் கலைந்து காணாமல் போய்விட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தவளால் அவன் தன் மேல் காட்டும் அன்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     அவளுக்கு ஒன்று புரியவில்லை. கிணற்றில் உற்பத்தியாகும் ஊற்றுநீர் கோடை காலத்தில் தற்காலிகமாக வற்றுமே தவிர மொத்தமாகக் காணாமல் போகும் கொடூரம் நிகழாது. அப்படி ஒருவேளை ஊற்று மொத்தமும் காணாமல் போனால், அங்கே இருந்தது தற்காலிக ஊற்று தான். அதை நம்பி கிணறு வெட்ட நினைத்தது தவறான முடிவு என்று அர்த்தமாகிறது.

     காதலும் அது போல் தான். காதலிக்கும் நபரின் மீது வருத்தம், கோபம், எரிச்சல் எல்லாம் வருமே தவிர காதல் என்றும் காணாமல் போகாது. அப்படிக் காணாமல் போனால் அது காதலே கிடையாது. 

     சந்தர்ப்ப சூழ்நிலையினாலோ இல்லை வீண் பிடிவாதத்தாலோ பிரிந்த காதலலும் காதலர்களும் ஏராளம். ஆனால், அவர்களிடம் இருக்கும் கோபம், பிடிவாதத்தைத் தாண்டியும் காதல் ஒரு மூலையில் காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். வதனி அதனை எல்லாம் எப்போதோ கடந்துவந்துவிட்டாள். பகீரதன் காட்டும் அன்பு கூட அவளுக்கு நெருஞ்சி முள்ளைப் போல் குத்தத்தான் செய்தது. கணவன் கொடுக்கும் அமிர்தம் கூட நஞ்சு போலத்தான் தெரிந்தது அவள் கண்களுக்கு.

     கணவன் தன் மீது கொண்டிருக்கும் அன்பைக் காட்டும் வழி கூட தனக்குப் பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகமான வதனிக்கு, அவள் வேண்டாம் என்று சொல்லும் நேரம் கிடைக்கும் அன்பு தொல்லையாகவே தெரிந்தது. பகீரதன் காட்டும் அன்பைத் தவிர்க்கவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திண்டாடினாள். அதனால் இன்னும் இன்னும் அவள் முகம் சோபை இழந்தது.

     அதைக் கவனித்த ஜீவன் அவள் மனநிலையைத் தெரிந்துகொள்வதற்காகப் பேச்சுக்கொடுத்தான். அந்தப் பேச்சுவார்த்தை நல்ல நட்பை அவர்களுக்கு இடையில் உருவாக்கிக்கொடுத்து. 

     மனிதர்கள் பலவிதம். தான் மட்டுமே எல்லாம். தனக்கு, தான் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்துடன் மற்றவர்களும் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது முதல் ரகம். 

     கண்ணாடியைப் போல் தனக்கு கிடைப்பதை அப்படியே எதிரொளிப்பது இரண்டாம் ரகம். தன்னைப் போல் தான் மற்றவர்களும், சம்பவம் ஒன்று நிகழும் போது அவர்கள் இடத்தில் தன்னை வைத்து நினைத்துப் பார்த்து அதன் பின்னர் ரியாக்ட் செய்வது சாலச்சிறந்தது என்று நினைப்பது மூன்றாம் ரகம். 

     தன்னால் அடுத்தவர்களுக்குப் பிரச்சனை வரக்கூடாது அதற்காகத் தான் சிலவற்றைப் பொறுத்துப்போவதால் தான் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை என்று நினைப்பது நான்காம் ரகம்.

     இதில் வதனி முதல் ரகம், பகீரதன் இரண்டாம் ரகம், ஜீவன் நான்காம் ரகம். வதனியின் சந்தோஷம் தான் நண்பனின் சந்தோஷம் என்பது புரிய, அவளைச் சிரிக்க வைத்து மகிழ வைத்தான் ஜீவன். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளுக்காக இறங்கி வந்தான். நண்பனுக்காக என்று ஆரம்பித்த பழக்கம், அவளுக்காக, தனக்காக என்று எப்போது மாறியதோ அவன் அறியான்.

     கணவன் பகீரதன் தன்னுடன் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று வதனி நினைத்திருந்தாளோ அதே மாதிரி நடந்துகொண்ட ஜீவனிடம் தன்னால் விழுந்தாள் அவள். 

     ஜீவன் அவளிடம் விழுவதற்கு அதிக நாள்கள் பிடித்தது. ஆனாலும் எப்படியோ விழுந்துவிட்டான். மனதால் நெருங்கிய அவர்கள் இருவரும் ஏதோதோ காரணம் சொல்லி பகீரதனிடம் தங்கள் மனதை வெளிப்படுத்தாமல் இருந்து, காலத்தின் ஓட்டத்தில் உடலளவிலும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். 

     நண்பனின் முகத்துக்கு நேரே இந்த விஷயத்தைச் சொல்வதற்குத் தடுமாறி இன்று, நாளை என்று நாள்களைக் கடத்திக்கொண்டிருந்தான் ஜீவன். சொல்வதாகச் சொன்ன வதனியையும் சொல்லவிடாமல் செய்து கொண்டிருந்தான். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. 

     நண்பன் கவலைப்படுவான் என்கிற நினைப்பில் அவன் மறைத்து வைக்கும் விஷயம் மிகத்தவறான நேரத்தில் வெளிப்பட்டு அவனை மொத்தமாகக் கொன்று போடப்போகிறது என்பது தெரிந்திருந்தால் கண்டிப்பாக ஆரம்ப காலத்திலேயே சொல்லி இருப்பான் ஜீவன். 

     மனைவி என்ற நினைப்பில் பகீரதன் தன்னை நெருங்கும் போதெல்லாம் அவன் தொடுகையைத் தாங்கிக்கொள்ள முடியாத வதனி ஜீவனிடம் வந்து தான் கதறுவாள். அவளை வார்த்தைகளாலே அமைதிப்படுத்துவான் ஜீவன். 

     இப்படியே இரண்டு நீண்ட வருடங்கள் கடந்து போய் இருந்தது. அதற்கு மேலும் நடப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத வதனி தானே பகீரதனிடம் உண்மையைச் சொல்லப்போவதாக ஜீவனிடம் உறுதியாக நின்றாள். 

     காரணம் அன்றைய நாளில் தான் தங்களுடைய  குழந்தையைப் பற்றி பேசி இருந்தான் பகீரதன். குழந்தை என்ற ஒன்று உருவாகி விட்டால் அதன்பிறகு அவனை விட்டு விலகுவது என்பது அசாத்தியம் ஆகிவிடும் என்பது புரிய பயம் வந்தது அவளுக்கு.

     “உலகக்கோப்பையில் வெல்ல வேண்டும் என்பது அவன் வாழ்நாள் இலட்சியம். அது நல்லபடியாக நடந்து முடியவும் சொல்லிவிடலாம் என்று அவளைத் தேற்றி வைத்திருந்தான் ஜீவன். 

     அந்த நேரத்தில் தான் அவர்கள் இருவரும் எதிர்பாராத திருப்பம் ஒன்றை நிகழ்த்தி இருந்தான் பகீரதன். “நீ என்கூட வெளிநாடு வர ரொம்ப ஆசைப்படுவியே இந்த முறை உலகக்கோப்பை போட்டியை நேரில் பார்க்க என் கூட ரஷ்யா வரீயா?“ அத்தனை ஆசையாகக் கேட்டான்.

     அவன் மீதிருந்த காதல் யாவும் காணாமல் போனதன் விளைவு, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்ற ஒரே காரணத்துக்காக சதுரங்கம் இப்போது அவளுக்கு பிடித்தமில்லாத ஒன்றாக மாறிப்போயிற்று என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

     “நான் எதுக்கு அங்கெல்லாம். நீங்க உங்க கோச் கூட போவீங்க. நான் வந்தா உங்களோட கவனம் என்னோட பாதுகாப்பைப் பத்தி மட்டும் தான் யோசிக்கும். ஆட்டத்தில் கவனம் குறையும். அப்புறம் அதுக்கும் என்னைத் தான் பழி சொல்லுவீங்க“ அவன் சொன்ன வார்த்தைகளை அவனை நோக்கி அப்படியே திருப்பியடித்தாள் வதனி. அறியா வயதில் செய்த கர்மா திருப்பி அடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன் தன்னைத் தானே நிதானித்துக் கொண்டு தொடர்ந்தான். 

     “இந்த முறை அதைப் பத்தின பயம் இல்லை. ஜீவனும் நம்ம கூட வரான். நான் பிஸியா இருக்கும் நேரம் அவன் உனக்கு அந்த நாட்டைச் சுத்திக் காட்டுவான். எனக்கு  நேரம் கிடைக்கும் போது நானும் உங்ககூட வரேன். இல்ல நாம தனியாப் போகணும் என்று உனக்கு ஆசை இருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கலாம். அவன் உன்கூட இருப்பதால் உன்னோட பாதுகாப்பைப் பத்தின பயம் இல்லாம நானும் என்னோட ஒட்டுமொத்த கவனத்தையும் விளையாட்டில் காட்டுவேன் இல்லையா?“ என்க, வதனியின் கண்கள் ஆசையில் மிளிர்ந்தது.

     வெளிநாடு செல்லப்போகிறோம் என்பதற்காகவும் ஜீவன் உடன் இருப்பான் என்பதற்காகவும் தானே தவிர பகீரதனுடன்நேரம் செலவளிப்பதற்காக இல்லை. இது புரியாமல் நண்பன் என்னும் பதவியில் உடன் இருக்கும் துரோகியை தன் சொந்த செலவில் ரஷ்யா அழைத்து வந்தான் பகீரதன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பது இது தான் என அப்போது புரியவில்லை அவனுக்கு.

     இறுதிப் போட்டிக்கு இன்னும் நான்கு நாள்கள் இருக்க ஜீவன், பகீரதன், வதனி மூவருமே நன்றாக ஊர் சுற்றினார்கள். வதனி ஜீவனோடு தான் ஒட்டிக்கொண்டு திரிந்தாள். “அவன் கூட கொஞ்ச நேரம் இருடி“ ஜீவனே சொல்லும் அளவு தான் இருந்தது அவள் நடவடிக்கை.

     “என்னால் முடியாது“ என்று அவனுடனே சுற்றினாள் வதனி. பகீரதன் அதைக் கூட நல்ல கண்ணோட்டத்தோடு தான் பார்த்தான் என்பது தான் அங்கே கொடுமை.

     அன்றைய இரவு நாளில் வெளியே இருக்கும் காலநிலைக்கு ஏற்ற வகையில் அறைக்குள் இருந்தவர்களிடமும் மாற்றம் வந்திருந்தது. வதனிக்கு அன்றை இரவு முழுவதும் துக்கத்தில் கழிந்திருக்க மனைவியை சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்னும் நினைப்பில் சந்தோஷமாக உறங்க ஆரம்பித்தான் பகீரதன்.

     அதிகாலை வரை இழுத்துப்பிடித்த பொறுமையை வைத்துக்கொண்டு இருந்த வதனி உறக்கத்தில் மீண்டும் பகீரதன் தன்னை நெருங்கவும் அடித்துப் பிடித்து எழுந்தவள் வேகமாக ஜீவன் இருக்கும் அறைக்குச் சென்றாள். அது அங்கிருந்த பலரின் கண்களில் விழுந்தது.

     அவளை அணைத்து அமைதிப்படுத்திய ஜீவன் சமாதானப்படுத்தி அறைக்கு அனுப்பி வைத்தான். அதிகாலை நேரம் அவளை மட்டும் தன்னோடு வெளியே அழைத்துச் சென்ற பகீரதன் ஆசையாய் பேச, நெருப்பாற்றில் நீந்துவது போல் இருந்தது அவளுக்கு. 

     உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, ஜீவனைத் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்று நேரடியாக சொல்வதற்கு தைரியம் இல்லாத கோழையாக இருக்கிறோமே என்று தன்னை நினைத்து அவள் அழுத கணங்கள் ஏராளம். அது கொடுத்த அழுத்தத்தில் பகீரதனை எடுத்தெறிந்தெறிந்து பேசிக்கொண்டே இருந்தாள்.

     அவனுக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துப்போனான். அந்த அளவு பொறுமை அவனுக்கு எப்படி வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளம் ஒன்றில் புகைப்படம் எடுக்கும் போது தன்னை முத்தமிட வந்த கணவனைக் கண்டு முகம் சுழித்தாள். தலைவலி என்ற காரணம் சொல்லி தனியே ஹோட்டலிற்கு வந்து சேர்ந்தவள் நேரே சென்றது என்னவோ ஜீவனின் அறைக்குத் தான். அதுவும் பலரின் கண்களில் படத்தான் செய்தது.

     மனைவியை அனுப்பி வைத்துவிட்டு அக்கா மற்றும் அப்பாவுக்காக சில பொருள்கள் வாங்குவதற்காக கடைகடையாக அலைந்தவன் திரும்பி வர நெடுநேரம் பிடித்தது. அப்படி அவன் திரும்ப ஹோட்டலுக்கு வரும் போது அவனைப் பார்த்து பலரும் கிசுகிசுக்க என்னவென்று புரியாததால் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் மனைவி இந்நேரம் எப்படியும் நண்பனின் அறையில் அவனோடு தான் பேசிக்கொண்டிருப்பாள் என்று புரிந்து அங்கே சென்றான். அங்கே அவர்கள் இல்லை எனவும் தன்அறை வந்தவனுக்கு அவன் உடல் உறுதி அனைத்தையும் உலுக்கும் அளவான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. 

     அந்த மிகப்பெரிய அறையின் நடுவில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டிலில் உத்திரத்தில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த வலை போன்ற அமைப்பிற்கு நடுவில் அவனின் சரிபாதியான மனைவி சந்திரவதனியும், நண்பன் ஜீவனும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தவாறு படுத்திருந்தனர். 

     அவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அதன்பிறகு தான் அவனுக்கு அவர்கள் இருவரும் செய்த துரோகம் புரிய அந்த இடத்திலேயே மனதளவில் மரித்துப்போனவனாக மடங்கி அமர்ந்தான்.

     தங்களுக்குப் பின்னால் ஒருவன் உயிரோடு மரணித்துக்கொண்டிருப்பது தெரியாத காதலர்கள் இருவரும் தங்கள் உலகத்தில் இருந்தனர். “நாம பண்றது ரொம்பத் தப்பு வதனி. ஏற்கனவே அவனுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்கு மேல் இது. 

     நாம கல்யாணம் பண்ணிக்கிற வரை இதெல்லாம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்றேன். நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிற. அவனைத் தவிக்க முடியாம அவனுக்கு ஒத்துக்கிட்டு அதைத் தாங்கிக்க முடியாம எங்கிட்ட வந்துன்னு நீ பண்றது எதுவும் சரியில்லை வதனி. இது நம்ம மூன்று பேருக்குமே அசிங்கம்“ தாங்க முடியாத குற்றவுணர்ச்சியில் பேசினான் ஜீவன்.

     “அப்ப பேசாம நான் செத்துப்போயிடட்டுமா ஜீவன்“ என்க, ப்ச் என்ற சத்தத்தோடு திரும்பிய ஜீவனின் கண்களில் விழுந்தான் விரக்தியின் உச்சியில் தரையில் அமர்ந்திருந்த நண்பன். 

     “பிடிக்காத ஒருத்தர் கூட வாழ்வது ஆம்பிளைங்க உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனா பொண்ணுங்களுக்கு அது நரகத்தை விடக் கொடுமையானது. அந்த பகீரதன் என்னை ஒவ்வொரு முறை தொடும் போது நெருப்பில் குளிக்கிற மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் அருவருப்பின் உச்சமா ஓணான் ஊர்வது மாதிரி இருக்கும். 

     என்னோட உணர்வுகளை கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருந்தா நடக்கும் எதிலும் எனக்குச் சம்மதம் இல்லைன்னு அந்த மனுஷனுக்குப் புரிஞ்சிருக்கும். ஆனா அவருக்கு அவரோட அந்த அல்ப சந்தோஷம் தான் முக்கியம்.

     அதுக்காக என்னை ஏதோ பொம்மை மாதிரி கையாள்வதை நினைச்சு எத்தனையோ நாள் சாக நினைச்சிருக்கேன். என்னைக்காவது ஒருநாள் எனக்குப் பிடிக்காத அந்த வாழ்க்கையை தூக்கி எறிஞ்சுட்டு என் கழுத்தைச் சுத்தின பாம்பு மாதிரி கிடக்கிற இந்தத் தாலியைக் கழட்டி அவர் கையில் கொடுத்துட்டு பெரிய கும்பிடாப் போட்டு மொத்தமா வெளியே வந்திடலாம் என்கிற நப்பாசையில் தான் என்னோட உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு காத்திருக்கேன்“ அழுகையோடு அவள் சொல்வதைக் கேட்டு மனது மொத்தமும் செத்துப்போயிருந்த பகீரதன் வந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து சென்றிருந்தான்.

     நடக்கக்கூடாத ஒன்று நடந்து போன குற்றவுணர்ச்சியில் ஜீவன் வதனியிடம் நடந்ததைச் சொல்ல அவளுக்கு அதீத அதிர்ச்சியோடு சற்றே நிம்மதியும். கடந்து போன இத்தனை நாள்களில் எப்படியாவது விஷயத்தை பகீரதனிடம் சொல்லிவிட வேண்டும் என்று பலமுறை முயற்சித்து இருக்கிறாள். இப்போது அந்தப் பிரச்சனைக்கு முடிவுக்கு தெரிந்த நிம்மதி. கூடுதலாக இப்படியொரு நேரத்தில் அவனாகத் தெரிந்துகொண்டானே என்கிற வருத்தமும் அவளிடம் இருக்கத் தான் செய்தது.

     அவர்களாகச் சொல்வதற்கும் தானாக அவனே தெரிந்துகொள்வதற்கும் நடுவில் இருக்கும் வித்தியாசம் தெரியாதவள் அல்ல அவள். நடந்தது நடந்துபோயிற்று இனி என்ன செய்யலாம் என்று யோசித்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

     ரஷ்யாவில் இருந்த மீதி நாள்கள் முழுக்க பித்துப்பிடித்தவன் போல் தான் இருந்தான் பகீரதன். ஜீவனால் அவன் அருகே கூட செல்ல முடியவில்லை. ஒருகணவன் காணக்கூடாத காட்சியைக் கண்ட கணத்திலேயே அவன் மனம் நின்று போனது. விளைவு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் படுதோல்வி. அவன் கனவோடு சேர்த்து பலரின் கனவையும் சுக்குநூறாக்கி விட்டு நடைபிணமாக தாயகம் திரும்பினான்.


Leave a comment


Comments


Related Post