இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 20-05-2024

Total Views: 22502

இதயம் 25

     ரஷ்யாவில் நடந்த எதையும் தந்தை மற்றும் தமக்கையிடம் சொல்லவில்லை பகீரதன். தயக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தாள் வதனி. மனைவியின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவன். 

     சதுரங்கத்தின் அடிப்படைக்கல்வி கற்கும் சிறுவன் கூட உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பகீரதன் விளையாடியதை விட நன்றாக விளையாடி இருப்பான் என்று சமூகவலைதளங்களில் அவனுக்கு எதிரான வன்மப் பதிவுகள் அதிகமாக காணக்கிடைக்க அதைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை அவனுக்கு. 

     வதனி விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்கிற யோசனையில் அவன் நடமாட, மகன் மற்றும் மருமகளின் நடவடிக்கையை அரசன் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். ரஷ்யாவில் இருந்து திரும்பி வந்த பிறகு அவர்கள் இருவரும் தனித்தனி அறையில் தங்கி இருப்பதை வைத்தே ஏதோ பெரிய பிரச்சனை என்று தெரிந்தாலும் என்னவென்று விசாரிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அது தன்னால் சபையேறட்டும் என்கிற நினைப்போடு அவர் இருக்க, அதற்கான நாளும் வந்தது.

     அன்று காலையில் வதனி தன் கர்ப்பத்தை உறுதி செய்தாள். அவள் செய்த தவறுக்கான மிகப்பெரிய தண்டனையை கடவுள் கொடுத்திருந்தார். அவள் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தந்தை கணவன், காதலன் இருவரில் யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. தலையில் அடித்து கதறி அழுதுகொண்டே விஷயத்தை  ஜீவனுக்குத் தெரியப்படுத்தினாள். 

     யார் பிள்ளையாக இருந்தாலும் அதை என்பிள்ளையாக நினைத்து நான் வளர்க்கிறேன் என்ற அவனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான் அவளுக்குக் கொஞ்சமாவது நிம்மதியாகிற்று.

     பைத்தியம் பிடித்தது போல்சுற்றிக்கொண்டிருக்கும் தம்பியை நிலாவும் கவனிக்கத்தான் செய்தாள். கணவன் மனைவிக்குள் ஏதோ ஊடல், அதை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்து தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

     ஆரம்பத்தில் வதனிக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்தவள் தான் என்றாலும் நாள் போக்கில் அது அவர்கள் வாழ்க்கை அவர்கள் அதை அவர்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் வாழட்டும். அவர்களின் நன்மைக்காகத் தான் என்றாலும் தான் அவர்களுக்கு குறுக்கே நந்தியாக இருப்பது தனக்குத் தான் அவமானம் எனப் புரிந்து கொண்டு அவர்களின் பாதையை விட்டு ஒதுங்கி விட்டிருந்தாள். அவளுக்கு அவள் கவலையே பெரிய கவலையாக இருந்தது. 

     முதன்முதலாக அவளைப் பெண்பார்க்க வந்து தம்பி பகீரதனால் நின்று போன திருமணத்தை நினைத்து தான் இத்தனை நாள்களாக அவளைப் பார்க்க வந்த வரன்கள் அனைத்தையும் தட்டிவிட்டிருந்தாள். 

     நிச்சயத்திற்கு முன்னரே அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருந்தாலும் சில நாள்கள் பழக்கத்திலேயே அவள் மனதில் இடம் பிடித்திருந்தான் அந்த மாப்பிள்ளை. வரும் வரன்கள் அனைவரிலும் அவள் மனம் என்னவோ அவனைத்தான் நாடியது. மனதளவில் மிகவும் பலவீனமாக இருந்தாள் நிலா. அவளை இன்னும் பலகீனமாக்கி மொத்தமாக அஸ்தமடையச் செய்யும் நாளும் வந்தது.

     அன்று ஜீவன் பகீரதன் வீட்டிற்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தான் பயந்து கொண்டிருந்த நாள் வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாக சுவரில் தன் உடலைச் சாற்றிக்கொண்டு நின்று கொண்டான் பகீரதன். நடக்க இருக்கும் பெரும் பிரளயத்தை சமாளித்து முடிக்கும் வரை அவனுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்பட்டது.

     ஜீவன் வந்ததை உணர்ந்ததும் தன்னறையில் இருந்து இறங்கி வந்த வதனி நேரே அவன் அருகில் சென்று நின்று கொண்டாள். இந்தக் காட்சியைக் கண்ட பகீரதனின் கண்கள் தன்னால் பூஜை அறையை நோக்கியது. நான் என்ன தவறு செய்தேன் என்பதற்காக எனக்கு இத்தனை பெரிய தண்டனை என்று கடவுளைக் கோபித்தான். 

     அவர்கள் இருவரையும் அரசனும் நிலாவும் புரியாமல் பார்க்க, “அங்கிள் நாங்க“ என்று தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் ஜீவன்.

     “நான் கர்ப்பமா இருக்கேன். ஆனால் அந்தக் குழந்தைக்கு அப்பா இவர் தான்“ வெண்ணைய் தாழியைப் பூனை போட்டு உடைத்தது போல் உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு தலையைக் குனிந்தாள் அவள். ஜீவனை அவர்கள் தவறாக நினைப்பதை விட தன்னைத் தவறாக நினைத்துக்கொள்ளட்டும் என்கிற பெருந்தன்மையான நினைப்பு அவளிடத்தில்.

     முன்னர் இறங்கியதை விட பெரிய இடி ஒன்று நேரடியாக உச்சந்தலையில் இறங்க கதிகலங்கிப்போய் கண்களை மூடினான் பகீரதன். அவன் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் இறங்கியது.

     “என்ன சொல்ற நீ“ நிலா வதனியை நெருங்க, “எனக்கும் பகீரதனுக்கும் ஒத்து வரல நிலா. எனக்கு இவரைத் தான் பிடிச்சிருக்கு“ குழந்தை விஷயத்தைத் தவிர்த்து வேறு எதிலும் தன் மேல் தவறு இல்லை என்று உறுதியாக நம்பியதால் தன்னால் வந்த திமிர் அவளை இப்படிப் பேச வைத்தது.

     “என்னம்மா என்னென்னவோ சொல்ற“ என்றபடி அரசன் அருகே வர முயற்சிக்க, “உங்க பையனுக்கும் இது தெரியும்“ என்று சொல்லி அனைவரின் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பினாள் வதனி.

     “டேய் என்னடா இதெல்லாம். உங்களுக்குள்ள பிரச்சனைன்னு தெரியும். ஆனா அது இந்தளவு இருக்கும் என்று நினைச்சுக்கூடப் பார்க்கலையே. அமைதியா நின்னா என்ன அர்த்தம் வாயைத் திறந்து ஏதாவது பேசுடா“ நிலா தம்பியை உலுக்க, கட்டிக்கொண்டிருந்த கரங்களை பிரித்து தமக்கையை நேர்பார்வை பார்த்தான்.

      “என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும் நிலா. ஏன் நடந்தது, எப்படி நடந்ததுன்னு எதுக்கும் என்கிட்ட பதில் இல்லை. ஆனா நடந்தது இது தான்“ என்றான்.

     “இவ்வளவு அஜாக்கிரதையா பதில் சொல்ற. இது உன்னோட வாழ்க்கை டா“ கேட்ட நிலாவுக்கு கண்ணீர் மழையாக வடிய ஆரம்பித்து இருந்தது.

     “வாழ்க்கை அது என்னைக்கு நான் திட்டம் போட்ட படி நடந்திருக்கு. இருபத்தியோரு வயசில் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன் நீ கேட்கல. வதனிக்கு எந்தக் குறையும் இல்லாமப் பார்த்துக்கோங்கன்னு அப்பாகிட்ட சொன்னேன் அவர் அதைக் கேட்கல. நமக்கே நமக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கலாம் என்று என் பொண்டாட்கிட்ட சொன்னேன், அவளுக்கு அதில் பிடித்தம் இல்லை. 

     இப்படி என்னோட எந்த எதிர்பார்ப்பையும் நீங்க யாரும் பூர்த்தி பண்ணாத போது, என் பொண்டாட்டியை நல்லாப் பார்த்துக்கோன்னு நான் கேட்டுக்கிட்டதை அப்படியே நிறைவேற்றி வைச்சிருக்கான் என்னோட நண்பன்“ என்று நிறுத்தியவன் இல்லை முன்னாள் நண்பன் ஜீவன் என்றுவிட்டு பெருங்குரலெடுத்துச் சிரத்தான். அவனுடைய பேச்சே சொன்னது அவன் சமநிலையில் இல்லை என்பதை. 

     பாகு என்ற அழைப்புடன் ஜீவன் நண்பன் அருகே செல்லப்பார்க்க தன்னால் பின்னால் விலகினான் அவன். இனி நண்பன் தனக்கு இல்லை என்பது புரிய அமைதியானான் ஜீவன். ஒன்றை இழந்து தான் இன்னொன்றைப் பெறவேண்டும் என்கிற நிலையில் காதலிக்காக நண்பனை இழக்க முன்வந்தது அவன் மனம்.

     “ஏன்டி இப்படிப் பண்ண. என் தம்பி மாதிரி ஒருத்தனுக்கு இவ்வளவு கொடூரமான துரோகத்தைப் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது. இப்படி ஒரு கேடுகெட்ட காரியம் பண்ணதுக்குப் பதிலா அவனைக் கொன்னு போட்டுட்டு எவன்கூடவும் போய் இருக்கலாமே. குடியைக் கெடுத்த அரக்கி.

     அவனைப் பிடிக்கல என்றால் உண்மையைச் சொல்லிட்டு  போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே. எதுக்காக அவன் கூடவே இருந்து இப்படி கழுத்தை அறுத்த. நீ நல்லா இருப்பியா“ அடுத்தடுத்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தம்பிக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்னும் பயத்தில் நிலா வதனியை அடிக்க கோபம் வந்தது வதனிக்கு.

     “என்மேல் கை வைச்ச மரியாதை கெட்டுப்போயிடும் நிலா. இன்னைக்கு நான் இப்படியொரு நிலையில் இருப்பதற்குக் காரணமே நீதான். ஆரம்ப காலகட்டத்தில் நீ உன்னோட நாத்தனார் புத்தியைக் காட்டப் போய் தான் நான் என்னையும் அறியாம உன்னை விட்டும் இந்தக் குடும்பத்தை விட்டும் விலகிப்போக ஆரம்பிச்சேன். எல்லாம் உன்னால் தான். உன்னால் மட்டும் தான்“ தான் செய்யும் செயலுக்கான பழியை வழக்கம் போல் அடுத்தவர் மேல் போட்டு தப்பிக்கப் பார்த்தாள் வதனி. 

     “அவ பாட்டுக்குப் பேசிட்டு போறா நீ அமைதியா இருக்க. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைச்ச மாதிரி இப்படியொருத்தியை நாம இத்தனை நாளா நடுவீட்டுக்குள்ள தங்க வைச்சிருக்கோம். இதுக்கு மேலும் அமைதியா இருந்தா அவ கள்ளக்காதலன் கூட வாழ்வதற்காக நம்மைக் கொல்லக் கூடத் தயங்கமாட்டா. அடிச்சு விரட்டு அவங்க இரண்டு பேரையும்“ தம்பியைப் போட்டு உலுக்கினாள் நிலா.

     “அவ சொல்றது உண்மை தானேக்கா. எங்க கல்யாணம் நடப்பதற்குக் காரணகர்த்தாவே நீ தானே. நீ மட்டும் அமைதியா இருந்திருந்தா இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்குமா? உள்ளுக்குள்ள எவ்வளவு தூரம் கூனிக்குறுகிப் போய் இருக்கேன்னு உங்க யாருக்கும் புரியாது. சாக்கடையில் விழுந்து எழுந்த மாதிரி அருவருப்போட உச்சத்தில் இருக்கேன்“ அழுது கொண்டே பகீரதன் பேச, 

     “நான் சாக்கடையா? நீங்க என்ன கொடுமை பண்ணாலும் பொறுத்துப்போய் அமைதியா இருந்தா பொண்ணுங்க கங்கை. படிதாண்டிப்போக நினைச்சா சாக்கடையா? நல்லா இருக்கு உங்க நியாயம்“ ஆவேசமான முன்னாள் செல்லப்பார்த்தவளை இழுத்துப்பிடித்தான் ஜீவன்.

     “என்கூட இருந்ததை நினைத்து உங்களுக்கு எப்படி அருவருப்பா இருந்ததோ அதே மாதிரி என்மேல் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் பல்லைக் கடிச்சுக்கிட்டு நீங்க என்கூட இருந்ததை நினைத்தால் எனக்கும் அப்படித்தான் இருக்கு“ நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்ல வதனிக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

     “போயிடுங்க. இங்க இருந்து மொத்தமா போயிடுங்க. உங்களை இனி ஆயுளுக்கும் பார்க்க நான் விருப்பப்படல“ முகத்தை திருப்பிக்கொண்டு பகீரதன் சொன்ன நொடி வதனிக்கு அத்தனை கவலையிலும் ஒரு பெரிய நிம்மதி. 

     அரசன் மற்றும் நிலாவின் நிம்மதி மொத்தமாக பறிக்கப்பட்டு இருந்தது. அதிலும் நிலாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே மனதளவில் பலகீனமாக இருந்தவள் தம்பி வாழ்க்கை கெடுவதற்கு தானே காரணம் என்று நினைத்து இன்னமும் தான் மனஉளைச்சலுக்கு ஆளானாள்.

     வதனி தன்னுடைய பொருள்கள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, சற்று நேரத்தில் பகீரதனும் கிளம்பினான். மனநிம்மதி தேடி கடவுளின் தேசமான கேரளாவிற்கு வந்தவன் அங்கே ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி பத்து நாள்கள் வரை அறைக்குள்ளேயை தன்னைச் சிறை வைத்துக்கொண்டான்.  

     சதுரங்கம், கிரிக்கெட் அளவுக்கு பாப்புலரான விளையாட்டு இல்லை தான் என்றாலும் யார் வாழ்வில் என்ன நடக்கும் அதை வைத்து தான் சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் பல செய்திநிறுவனங்கள் இருப்பார்கள். அவர்களிடம் இது சிக்கினால் ஒரு மாதம் வரை தன்னைத் தான் அவர்களின் கோரப்பசிக்கு இரையாக்கிக்கொள்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு பயம் தாங்கவில்லை தான்.  

     அவன் நினைத்ததற்கு மாறாக கடந்து போன இத்தனை நாள்களில் அரசனோ, நிலாவோ அவனைச் சற்றும் தொந்தரவு செய்யவில்லை. அதற்கான காரணம் வெளியே வந்த பிறகு  தான் அவனுக்குப் புரிந்தது.

     தம்பியின் வாழ்வைக் கெடுத்துவிட்டோம் என்கிற குற்றவுணர்ச்சியில் இருந்த நிலா இனிமேல் தம்பியின் முகத்தைப் பார்த்துக்கொண்டு வாழ முடியாது என்னும் முடிவுக்கு வந்தவளாக தனக்குப் பிடித்த வாழ்வைத் தேடி வெளிநாடு கிளம்பிச் சென்றிருந்தாள். 

     அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஏற்கனவே அவளுக்கு கொடுத்திருந்த வாய்ப்பு தான் என்றாலும் தந்தை மற்றும் தம்பியை விட்டு செல்வதா என்ற யோசனையில் இருந்தவள் தலைவெடிக்கும் இந்தக் குழப்பமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சென்றே விட்டாள்.

     அடித்துப் பிடித்து அவளின் கம்பெனி எண்ணைக் கண்டுபிடித்து பல சிரமங்களுக்கு நடுவில் அரசன் அவளை அழைக்க, அவன் ஒருவனுக்காக தான் எனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்று வரை வருந்திக் கொண்டிருக்கிறேன். அது புரியாமல் அவன் என்னைக் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறான். எல்லாம் போதும் இனி அவரவர் வாழ்வை அவரவர் வாழ்ந்தால் போதுமானது. நான் இங்கே எனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறேன் நீங்கள் அங்கே உங்களுக்கான வாழ்வை வாழ்ந்து கொள்ளுங்கள். 

     இனிமேல் எந்தக் காரணத்துக்காகவும் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள். அதையும் மீறி முயற்சித்தால் இங்கிருந்து அடுத்த நாடு செல்வேனோ இல்லை மொத்தமா மேல் உலகம் செல்வேனோ அது தெரியாது என தந்தையைக் கடுமையாகப் பேசி போனை அணைத்து விட்டாள்.

     விஷயம் கேள்விப்பட்டு பகீரதனும் தொடர்புகொள்ள முயற்சிக்க அவனுக்கும் நன்றாக மண்டகப்படி கிடைத்தது. என் வாழ்க்கையை நீ ஒன்றும் இல்லாததாக மாற்றினாய். உன் வாழ்க்கையை நான் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டேன். அதற்கும் இதற்கும் சரியாகிப் போயிற்று என்னைத் தொந்தரவு செய்யாதே என்றுவிட்டு அழைப்பைச் சரியாகத் துண்டிக்காமல் போனைப் போட்டுவிட்டு ஓவென்று கத்தி அழ அது இவன் காதிலும் விழத்தான் செய்தது.

     தனிமை இருவருக்கும் சற்றே அமைதி கொடுக்கும் என்று நினைத்த பகீரதன் அடைந்து கிடைப்பதால் ஒன்றும் சரியாகப் போவதில்லையே என்று புரிந்து தன்னில் பல மாற்றங்களைக்கொண்டு வந்தான். முதலாவதாக வதனிக்கு சட்டப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான்.

     முன்னாள் கணவன் நல்லவன் அதனால் மனமொத்துப் பிரிவதற்கான ஏற்பாடை தான் செய்வான் என்று வதனி நினைத்திருக்க அவள் கனவிலும் நினையாத ஒரு விஷயத்தைச் செய்தான் பகீரதன்.

     வதனியின் தவறான நடத்தையை மேற்க்கோள் காட்டி தனக்கு அவளிடம் இருந்து விவாகரத்து வேண்டும். கூடுதலாக அவள் வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டிருந்தான். இவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பாராத வதனி கலங்கிப்போனாள். 

     அவனுடைய சொந்த வீட்டில் வைத்து ஒரு வார்த்தை கூட அவதூறாகப் பேசாதவன், பலர் முன்னிலையில் தன்னை திட்டமிட்டு அவமதித்துவிட்டான் என்றே நினைத்தாள். அந்த வன்மம் தான் இப்போது வரை தொடர்கிறது.

     அவர்கள் செய்ததைவிட ஒரு படி கூடவோ குறைச்சலாகவோ அவன் எதுவும் சொல்லவில்லை. நடந்ததை அப்படியே சொல்லியிருக்கிறான் என்பது ஜீவனுக்கு மட்டும் தான் புரிந்தது. ஆனால், அவன் காதலித்த வதனிக்காகவாவது இத்தனை உண்மைகளை வெளிப்படையாக பகீரதன் சொல்லியிருக்க வேண்டாம் என்று தான் நினைத்தான் ஜீவன்.

     பெண்களுக்கு மான உணர்வு அதிகம், அவர்கள் தவறே செய்தாலும் அது நான்கு பேருக்கு நடுவில் சபையேறுவதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் மென்மையானவர்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் உடனுக்குடன் மன்னிக்கப்பட வேண்டும் என்பது தான் வதனி மற்றும் ஜீவனின் எண்ணம். ஆனால், அவர்கள் இருவரும் நினைக்கிறார்கள் என்பதற்காக அது சரியாகிவிடும் என்பதில்லையே.

     சாணக்கியன் போட்ட விவாகரத்து வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஐந்தாவது மாதத் துவக்கத்தில் இருந்த வதனியின் வயிற்றுக்குள் இருந்த குழந்தைகளுக்கான டிஎன்ஏ பரிசோதனை (Non-Invasive Prenatal Paternity Testing) செய்ய உத்தரவிட்டது.

     சாதாரணமாக இந்த மாதிரியான வழக்குகளுக்கு தீர்ப்பு கொடுக்க நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளும் நீதிமன்றம் பகீரதன் செலிபிரிட்டி என்பதால் வேகம் காட்டியது.

     டிஎன்ஏ பரிசோதனை முடிவு வரும் நாள். தன் குழந்தையாக இருக்கவேண்டும் என்பது பகீரதனின் விருப்பம், ஜீவனின் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது வதனியின் விருப்பம். யாருடைய இரத்தத்தில் உருவாகி இருந்தாலும் இரண்டும் தன் பிள்ளைகள் என்று நினைத்திருந்தான் ஜீவன். ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தேறியது அவ்விடத்தில்.


Leave a comment


Comments


Related Post