இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 20-05-2024

Total Views: 21996

இதயம் 26

     DNA ரிப்போர்ட் நேரே நீதிமன்றத்திற்கு வந்து சேர அதைப் பிரித்துப் படித்தவருக்கும், அதில் இருக்கும் தகவலைக் கேட்டவர்களுக்கும் சற்றே பெரிய அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். காரணம் வதனியின் இரட்டைப் பிள்ளைகளில் ஒன்று பகீரதனின் பிள்ளையாகவும், இன்னொன்று ஜீவனின் குழந்தையாகவும் இருந்தது. 

     ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டு இணைவுகளால், இரண்டு வெவ்வெறு உயிரணுக்கள் இரண்டு தனித்தனி கருமுட்டையோடு இணைந்து இரண்டு தந்தை மற்றும் ஒரே தாய் கொண்ட வித்தியாசமான இரட்டையர்களாக உருவாகி இருந்தனர் பாரிவேந்தனும், சபரிவேந்தனும். 

     வெளிநாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பதை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்ததால் இந்த விஷயம் பெரிதாக ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் வதனிக்கு கூடுதலாக தலைகுனிவை ஏற்படுத்தி இருந்தது.

     “அவரோட பிள்ளையை அவர்கிட்ட ஒப்படைச்சிடுறேன்“ தீர்ப்பு வந்த அன்று வதனி சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால் பகீரதன் அங்கே மீண்டும் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தான். 

     என் முன்னாள் மனைவிக்கும் எனக்கும் பிறக்க இருக்கும் பிள்ளையின் மீதான அனைத்து உரிமைகளையும் என் மனைவியின் இரண்டாவது கணவனான ஜீவனுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி அனைவைரையும் வியப்பில் ஆழ்த்தினான். 

     “இதற்கு எதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டும்“ என்ற கேள்வி முன்வைக்கப்பட, “என் ஆத்ம திருப்திக்கு“ என்று பதில் சொல்லிவிட்டு வதனிக்கும் அவனுக்கும் இருந்த ஒட்டுமொத்த பந்தத்தையும் முறித்துவிட்டு தன் வீடு வந்தான் பகீரதன்.

     என் இரத்தத்தில் பிறக்கும் பிள்ளை தான் உன்னுடைய நம்பிக்கைத் துரோகத்துக்கு நான் கொடுக்கும் சரியான தண்டனை என்ற ஒற்றை வரியோடு நண்பனைக் கடந்து சென்றிருந்தான் பகீரதன்.

     விவாகரத்து உறுதியானதும் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர் ஜீவன் மற்றும் வதனி இருவரும். புகைப்படங்கள் பிரசுரிக்கப்படவில்லை என்றாலும் அன்றைய நாளில் செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் இவர்கள் வழக்கு தான் பேசுபொருளாக இருந்தது.

     வதனி மொத்தமாக உடைந்து போனாள். அவளைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருமாக ஒன்று சேர்ந்து என்னென்ன பேசுவார்கள், எப்படியெல்லாம் கேலி செய்வார்கள் என்கிற நினைப்பே அவளை மெல்லக்கொல்லும் விஷமாய் மாறி அரித்துக்கொண்டிருந்தது. 

     பகீரதன் மனது வைத்திருந்தால் இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் தங்களுக்குள் முடித்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்று தன்னை ஊர் முன்னால் அவமானப்பட வைத்துவிட்டான் என்று அவன் மீது கொஞ்சம் இருந்த இரக்கத்தையும் அடியோடு குழிதோண்டிப் புதைத்தாள். கூடுதலாக அவன் மீது கண்மூடித்தமான வெறுப்பையும் வளர்த்துக்கொண்டாள். பிறப்பெடுத்தது பெண் பிறவியில் என்பதால் செய்யும் பாவத்தில் கூட சலுகையை எதிர்பார்த்தது அவளின் மனம். 

      அப்படி என்ன பொல்லாத தவறு செய்துவிட்டேன். எத்தனையோ ஆண்கள் மனைவியை விட்டு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில்லையா? அவர்களையெல்லாம் இப்படியா ஓடஓட விரட்டியது இந்த சமுதாயம். எல்லாவற்றிலும் பாவப்பட்ட பெண் இனம் தான் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்று தன்னோடு நினைத்துக்கொண்டாள்.

     ஆதி காலத்தில் இருந்து ஆண்கள் செய்து கொண்டிருந்த ஓரவஞ்சனைகளை ஆதிக்கம் என்று புரிந்து எதிர்த்து நின்ற அதே பெண் இனம், இன்றைய நாளில் இத்தனை நாள் ஆண்கள் செய்தார்கள் இப்போது நாங்கள் செய்கிறோம் என்பதாய், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ அதையே செய்யத் துவங்கி இருக்கிறார்கள்.

     ஆண்கள் செய்யும் போது பெரும் பாவமாகக் கருதப்பட்ட அதே விஷயங்கள், இப்போது பெண்கள் செய்யும் போது சூழ்நிலைக் காரணகிகளாக மாறிவிடுகிறது. இங்கே பலரின் பிரச்சனைக்குக் காரணமே இந்தப் பொல்லா  ஓரவஞ்சனை தான். அதை வதனி புரிந்துகொள்ளவே இல்லை.

     இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் வதனியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டது ஜீவன் மட்டுமே. அவளை அவளுடைய அன்பு, காதல், கோபம், வெறுப்பு, பிடிவாதம், பொறாமை போன்ற எல்லா குணங்களுடன் ஏற்றுக்கொண்டிருந்தவனுக்கு அவள் செய்யும் தவறுகள் யாவும் மன்னிக்கப்படக்கூடியவையே என்று தான் தோன்றியது. விளைவு அவளைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்கும் ராஜாவைப் போல் தாங்கினான். 

     தங்களின் கசப்பான கடந்த காலத்தை அறியாத மக்கள் வாழும் வெளிமாநிலம் ஒன்றில் வேலையைத் தேடிக்கொண்டு மனைவியையும் கையோடு அழைத்துச் சென்றுவிட்டான். 

     மனதளவில் பலவீனமாக இருந்தவள், இரட்டைப் பிள்ளைகளைப் பெற்று உடலளவிலும் பலவீனமாக மாறினாள். கணவன் ஜீவன் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் அவள் எப்போதோ இல்லாமல் போய் இருப்பாள்.

     குழந்தை பிறந்த நேரம் பகீரதன் பிள்ளை யார் ஜீவன் பிள்ளை யார் என்ற கேள்விக்கே அர்த்தம் இல்லாது போயிற்று. காரணம் வதனி பெற்றெடுத்த முதல் பிள்ளையான பாரிவேந்தன் உருவத்தில் அப்படியே பகீரதனின் அப்பா அரசனை உரித்துக்கொண்டு பிறந்திருந்தான். இரண்டாவது பிள்ளை சபரி வேந்தன் ஜீவனைக் கொண்டு பிறந்திருந்தான்.

     நண்பனின் நினைவாக நண்பன் மகனுக்குப் பாரி என்று பெயர் வைத்திருந்தான் ஜீவன். பாரியைத் தத்துக்கொடுத்துவிடலாமா என்று வதனி கேட்ட போது தான் முதன்முதலாக அவர்களுக்குள் சண்டை வந்தது. 

     கொஞ்ச நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஜீவன் தான் சென்று மனைவியைச் சமாதானப்படுத்தினான். பாரி மற்றும் சபரி இருவருமே ஜீவனின் மகனாக வளர்ந்தனர். பாரியைப் பார்க்கும் பலநேரங்களில் அவன் தந்தை நினைவு வருவதை வதனியால் தடுக்க முடியாது. ஆனால் குழந்தை அவன் என்ன செய்வான் என்கிற நினைப்போடு அதைக் கடந்து செல்லப் பழகிக்கொண்டாள். 

     இங்கே பகீரதன் மற்றவர்கள் கேட்கும் கேள்வியில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறினான். வதனிக்கு ஜீவனின் துணை இருந்தது அதனால் அனைத்தையும் நல்லபடியாகக் கடந்தாள். ஆனால் இவனுக்கு அப்படி எதுவும் இல்லை என்பதால் தடுமாறினான். பதுங்கு குழிக்குள் பதுங்கி தன்னைத் தானே காத்துக்கொள்ளும் முயல் போல் மற்றவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சதுரங்க இல்லத்தைக் கட்டி அதற்குள் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டான். 

     யாராவது தன்னை பகீரதன் என்று அழைக்கும் போது வதனியோ இல்லை ஜீவனோ அழைப்பது போல் தோன்ற அதனால் தான் மறக்க நினைக்கும் அனைத்தும் நினைவு வரும் என்பதால் சாணக்கியன் என்று தனக்குத் தானே பெயரிட்டு இரண்டாம் முறை பிறந்தான். 

     தமக்கை நிலாவைத் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவள் சிறிதும் மனம் வைக்கவில்லை. அப்பா, நல்ல நண்பன் எழில் என அவனுக்காக சிலர் இருந்த போதும் யாரும் வேண்டாம் என்கிற தோரணையில் தான் வாழ்ந்தான். மற்ற யாரும் அவனை நெருங்காமல் இருக்க கோபம் என்னும் முகமூடியைப் போட்டுக்கொண்டான்.

     உலகம் வேண்டாம், உறவுகள் வேண்டாம், இன்பம் துன்பம் எதுவும் வேண்டாம் என ஜென் நிலையில் இருந்தவனைக் கட்டாயப்படுத்தி வெளியே வரவைத்தது எழில் தான். சதுரங்கத்தில் அ, ஆ கூட தெரியாத அவன் சதுரங்கத்திற்கென தனியாக அகாடெமி வைத்து நண்பனை அதில் குருவாக்கி தானே முதல் மாணவனாகச் சேர்ந்தான். சரியான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவனுக்கு இது பிடித்தம் ஆகிப்போக நல்லபடியாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறான். 

     நான்கு வருடங்கள் கடந்து போய் இருந்தது. நான்கு வருடங்கள் தான் போனதா என்று கேட்டால், சாணக்கியனைப் பொறுத்தவரை கடந்து போன காலங்கள் நாற்பது ஆண்டுகளுக்குச் சமம். 

     பெண் குழந்தை பிறந்ததும் மூன்று வருடம் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர் ஜீவன், வதனி தம்பதியர். காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பது அவர்கள் விஷயத்தில் தான் எத்தனை உண்மை. வதனியை யாரும் தரக்குறைவாகப் பேசவில்லை. அவள் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாள் என்றால் அவள் பக்கமும் ஏதாவது காரணம் இருக்கும் என அவளுக்கும் சில ஆதரவுக்கரங்கள் கிடைத்து. 

     இந்த ஒட்டு மொத்த விஷயத்திலும் தான் செய்தது சரி என்று நியாயப்படுத்தாத ஒரே ஜீவன், ஜீவன் தான். ஏனெனில் அவனுக்கு நன்றாகத் தெரியும் அவன் செய்தது எத்தனை பெரிய தவறு என்பது. 

     அரசன் தான் என்ன செய்வது, பெற்ற இரண்டு பிள்ளைகளில் யாரைப் பார்ப்பது, எப்படி அவர்களின் வாழ்வைச் சரிசெய்வது என்று புரியாமல் சுற்றிக்கொண்டிருந்தார். 

     நிலா அமெரிக்காவில் உடன்பணிபுரியும் இந்தியரைத் திருமணம் செய்து கொண்டாள் என்கிற விஷயம் கேள்விப்பட்டு இன்னமும் தான் மனதுடைந்து போனார்கள் தந்தையும், மகனும். 

     வீட்டின் ஒரே மாகலட்சுமி அவளின் திருமணத்தைக் கூட நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்கிற ஏக்கம் அவர்களுக்கு. சாணக்கியன் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக ஒருவழியாக நிலாவின் கணவன் வினீத்தை நண்பனாக்கிக்கொண்டான்.

     மனைவிக்குத் தெரியாமல் மச்சினனுடன் நல்ல உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தான் வினீத். அவர்களுக்குள் பேசிக்கொள்ள பொதுவாக என்ன இருந்துவிடப்போகிறது நிலாவைத் தவிர.

     வினீத் தான் நிலாவுக்குப் பிறந்த குழந்தையைப் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தான். அச்சு அசல் தாய்மாமனைக் கொண்டு பிறந்திருந்தான் நிலாவின் மகன். பெற்ற பிள்ளையைப் பார்த்த மாத்திரத்தில் பெறாத மகனான தம்பி நினைவு வந்தான் நிலாவுக்கு. தாயைப் பறிகொடுத்த பிள்ளையை முதன்முதலாக கையில் ஏந்தியதே அவள் தான் அல்லவா.

     தம்பியைப் பார்க்கச் செல்லலாம் என்று அவள் நினைக்கும் நேரமெல்லாம் தன்னால், தன் அவசர முடிவால் அவன் பட்ட துன்பங்கள் நினைவு வர தாங்கமுடியவில்லை அவளால். கூடவே சாணக்கியன் மாமன் கடமை ஆற்ற வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. அதனால் உடல்நிலை சரியானதும் நேரே இந்தியா செல்ல வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தாள். அவள் வரும் நேரம் இங்கே சூழ்நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரும் அறியார்.

     இவற்றையெல்லாம் ஜீவனிடம் இருந்து கேள்விப்பட்ட மினிக்கு, திக்குத் தெரியாத காட்டில் கண்ணை மறைக்கும் அந்தகாரத்தில் மூழ்கியது போல் ஆனது. குழந்தைகள் விஷயத்தில் வதனி பெரும் பாதகியாகத் தெரிந்தாள் அவளின் கண்களுக்கு. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு ஆண்களிள் பிள்ளைகள் என்றால் விவரம் புரியாமல் இருப்பதற்கு அவள் ஒன்றும் குழந்தை இல்லையே. 

     இத்தனை அவமானங்களையும் ஒற்றை ஆளாகத் தன்னவன் எப்படித் தாங்கிக்கொண்டான் என்பதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை அவளால். எதற்காக அவன் வீட்டில் ராணிக்கு இடம் இல்லை, இரண்டு ராஜாவுக்கு இடையில் ஒரு ராணி இருக்கும் போது அவன் ஏன் பதற்றமடைகிறான் என்பது இன்னும் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. 

     கணவன் மனைவியாக இருந்த இருவர் பிரிந்திருக்க, அதில் ஒருவர் நலமாக இருந்து இன்னொருவருக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம். என்னைக் கொஞ்ச காலம் முன்னாலே அவரைப் பார்க்க வைத்திருக்கக் கூடாதா? அக்காவை அத்தான் பார்த்துக்கொண்டது போல் நான் அவரைப் பார்த்துக்கொண்டிருப்பேனே என்று கடவுளிடம் சண்டைக்கு நின்றாள்.

     பிறக்காத பிள்ளைக்கு பெயர் வைக்க சண்டை போட்ட கதையாக, சம்பந்தப்பட்டவனே இன்னும் ஏற்றுக்கொள்ளாத காதலுக்காக கண்டபடி கற்பனை செய்தாள் மினி. என்ன யோசித்தாலும், எப்படி யோசித்தாலும் சாணக்கியன் தான் வேண்டும் என்று தான் நின்றது அவளின் மனம்.

     “இன்னமும் உனக்குச் சாணக்கியன் வேணும் என்று தோணுதா மினி“ ஆர்வத்தோடு கேட்டான் ஜீவன். “இப்ப தான் அவர் வேணும் என்று அதிகமா தோணுது அத்தான். அவரோட ஆறாத பச்சை இரணத்தில் இப்ப கத்தி வைச்சி திருகிவிட்டாச்சு. ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லாமல் தனியே இருப்பார். நான் போறேன் அவர்கிட்ட“ என்றபடி எழுந்து நிற்க, அவள் முன்னால் வந்து நின்றாள் வதனி. 

     “உன்னோட ஆறுதலைக் கேட்பதற்காக அங்கே யாரும் வரிசை கட்டி நிற்கல. அரசன் அங்கிள் இருக்காரு, இன்னொருத்தன் வால் மாதிரி அவரோடவே இருப்பானே, அவங்க இரண்டு பேரும் பார்த்துப்பாங்க. நீ ஒன்னும் போகத் தேவையில்லை“ அழுத்தமாகச் சொன்னாள்.

     “இல்ல நான் போவேன். உங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆன பின்னாடி, காரணமே இல்லாமல் என்னைக் கட்டாயப்படுத்தி எந்தப் பிரயோஜனமும் இல்லை“ அக்கா முகம் பார்த்து பேச முடியாமல் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.

     “என் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத அளவு ஆகிடுச்சு இல்ல, சரிதான். போறேன் போறேன்னு துடிக்கிறியே. இப்ப நீ போனா அங்க என்ன நடக்கும் தெரியுமா? நீ யாரு என்னன்னு இந்நேரம் அவருக்குத் தெரிஞ்சிருக்கும். தேள்கொடுக்கு நாக்கால கண்டபடி பேசுவார். அத்தனையும் தாங்கிக்கிட்டு அவரோட இருக்கப்போறியா. அப்படி என்ன அவசியம் வந்திருக்கு உனக்கு“ ஆவேசமாகக் கேட்டாள்.

     “என்னைப் புரிஞ்சுக்காம, என் மனசு ஆசையைப் பத்தி தெரிஞ்சுக்காம, என் காதல் மேல் சந்தேகப்பட்டு என்னை அவர் திட்டுவதற்கு வாய்ப்பு இருக்கே தவிர, நீங்க பண்ணதுக்காக என்னை அவர் திட்ட மாட்டார். அப்படியே திட்டினாக் கூட திரும்ப சண்டை போடுவேனே தவிர அவரை விட்டு வர மாட்டேன்“ உறுதியாகச் சொன்னாள் மினி.

     “இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் உறவு என்பது இரண்டு பக்கமும் சமஅளவில் ஈடுபாடு, அன்பு, காதல் எல்லாம் கலந்து இருக்க வேண்டியது மினி. உன் விஷயத்தில் அந்த பகீரதனால் உனக்கான அன்பை இருபது சதவிகிதம் கூட கொடுக்க முடியாது. 

     உங்களுக்கு நடுவில் உறவு உண்டானால் அதைக் காப்பாற்றுவதற்கான முழுப்பொறுப்பும் உன் தலையில் தான் வந்து விழும். ஒரு கை மட்டுமே தட்டினால் என்னைக்கும் சத்தம் வராது. உன்னால் அவரைத் தாங்கிக்க முடியாது. அக்கா உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன். 

     உன் அத்தான் மாதிரி உனக்குப் புருஷன் கிடைக்க ஆசைப்பட்ட தானே. அப்படியொரு வாழ்க்கையை நான் அமைச்சுக் கொடுக்கிறேன் டா. இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்காக வாழனுமே தவிர அடுத்தவங்களுக்காக வாழக்கூடாது. அந்த பகீரதனை மறந்திடு“ தங்கையை சரியான வழிக்கு திருப்ப முயன்றாள் வதனி.

     “நான் அத்தான் மாதிரி வாழ்க்கைத் துணை வேண்டும் என்று ஆசைப்பட்டேன் தான். ஆனால் சாணக்கியன் விஷயத்தைப்  பொறுத்தவரை சாட்சாத் அவரே வேணும் என்பது தான் என்னோட ஆசை. என்னால் அந்த ஆசையை மாத்திக்க முடியாது அக்கா. 

     அவரை நேசித்த மனதில் வேற யாரையும் நினைக்க முடியும் என்று தோணல. எனக்கு என்னவோ இதெல்லாம் கடவுளோட எண்ணமா தான் தெரியுது. எனக்கு அவர் முக்கியம், நான் அவரைத் தேடிப் போறேன். இஷ்டமோ கஷ்டமோ அவரோட தான் எனக்கு“ என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் காதலனைத் தேடிக் கிளம்பினாள் மினி.

     “அவளைத் தடுத்து நிறுத்துங்க ஜீவன். உங்க ப்ரண்டு எப்படின்னு உங்களுக்குத் தெரியும் தானே, சொல்லுங்க“ கத்திய மனைவியைக் கண்டுகொள்ளாமல், “அவன் ரொம்ப நல்லவன் வதனி. அவன் மினியை நல்லாப் பார்த்துப்பான்“ உறுதியாகச் சொன்னான். 

     தங்கையின் விஷயத்தில் கடைசி நம்பிக்கையும் பறிபோன விரக்தியில் அனைத்திற்கும் விதை போட்டு வைத்த கணவனை விழிகளால் எரித்தவள் தன் அறைக்குச் சென்று செய்த முதல் காரியம் பெரியப்பா இளவரசனுக்கு அழைத்தது தான்.

     ஆட்டோவில் வரும் வழியெங்கும் அழுது கொண்டே தான் வந்தாள் மினி. சதுரங்க இல்லத்தின் காவலர்களான தன்னை விட உயர்ந்த கேட் இரண்டையும் உந்தி தள்ளியவள் வீர நடை போட்டு நடக்க, சத்தம் கேட்டுத் திரும்பினான் தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த சாணக்கியன். 

     கடந்த காலக் கசடுகளை நினைத்துக்கொண்டே இருந்தால் எதுவும் சரியாகிவிடாது என்று புரிந்து தானே அதில் இருந்து வெளியே வந்தவன், அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்து இருந்தான். பணிகளுக்கு நடுவில் மினியின் நினைவு வந்தது அவனுக்கு. 

     இதற்குப் பிறகு கண்டிப்பாக காதல் அது, இது என்று தன்பின்னால் வரமாட்டாள் என்று நினைத்து முடிப்பதற்கு முன்னால், அவன் நினைப்பைப் பொய்யாக்கி அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள் மினி.

     கண் முன் ஆலமரம் போல் நின்றிருந்த தன்னவன் மீது இருக்கும் கட்டுக்கடங்காத ஆசை, ஆர்வம், மரியாதை, பரிதாபம் போன்ற அனைத்து உணர்வுகளும் ஒற்றைப்புள்ளியில் வந்து குவிய, புள்ளிமானாய் அவனை நோக்கி ஓடி வந்தவள், சற்றும் எதிர்பாராத வகையில் பாய்ந்து கட்டிக்கொண்டாள் அவனை. 

     அவள் ஓடி வந்த வேகத்தோடு அவளுக்குள் இருக்கும் காதலின் வேகமும் சேர்ந்துகொள்ள, பூந்தென்றலாய் தன்மேல் மோதியவளின் பாரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தரையில் விழுந்தவன் மீது தானும் மலர்மாலையாக பொத்தென்று விழுந்து வைத்தாள் மினி.


Leave a comment


Comments


Related Post