இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 18) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 21-05-2024

Total Views: 15631

உனக்கென்றே உயிர் கொண்டேன் 18

மகேஷ் தமிழை பார்க்க அவனது இல்லம் வந்திருந்தான்.

பூர்வி தான் வீட்டிற்குள் அழைத்து அமர வைத்தாள்.

"வீக்கெண்ட்டுக்கு வந்தீங்களாக்கா?"

"ஆமாம் மகேஷ்" என்ற பூர்வி, "தமிழ் குளிச்சிட்டு இருக்கான்" என்று தகவல் அளித்து, அவனது வேலை குறித்து பேசிக் கொண்டிருக்க, தனம் அவன் பருகிட பானகம் கொண்டு வந்து கொடுத்தார்.

"வீட்டுல சவுக்கியமா கண்ணு?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்கம்மா" என்றவன் தேவராஜ் வரவும் எழும்பிட,

"என்னப்பா ஆளே காணும். இந்த ஊரில் தான் இருக்கியா? வேலை ரொம்ப டைட்டோ?" என்று வினவி, அமருமாறு அவனின் தோளில் தட்டியவராக வெளியேறினார்.

"சாப்பிட்டுதான் போகணும் மகேஷு" என்று தனம் தன்னுடைய ஆஸ்தான இடத்திற்குள் புகுந்துகொண்டார். அதாங்க சமையலறை.

மகேஷின் பார்வை வீட்டை பார்வையால் துழாவியது. அதனை கவனித்த பூர்வி "ம்க்கும்..." தொண்டையை செருமினாள்.

"நீ தேடுற ஆளு வீட்டில் இல்லை."

"அக்கா!" மகேஷ் குடித்துக்கொண்டிருந்த பானகம் புரையேறியது.

"உங்களுக்கு...?" கேள்வியை கேட்க முடியாது இழுத்தான்.

"தமிழ் சொன்னான்."

பூர்வி, தமிழ் என்றதும் மகேஷிடம் உச்சக்கட்ட அதிர்ச்சி.

"அவனுக்குத் தெரியுமா?" விட்டால் மகேஷின் கரு விழிகள் வெளியே குதித்திருக்கும்.

"தெரிந்ததால் தானே என்கிட்ட சொல்லியிருக்கான்."

"அக்கா!" மகேஷ் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

"என்னாச்சு?" பூர்வி அவனின் அதிர்வை கண்டு வெளிவரத் துடித்த சிரிப்பை மறைத்தவளாகக் கேட்டாள்.

"அச்சோ... தமிழ், நான்... அவன்கிட்ட, எப்படி?" ஏதேதோ உலறியவன், "நான் கிளம்புறேன் க்கா" என்று நகர, அடக்கி வைத்திருந்த சிரிப்பினை வெளிவிட்டாள் பூர்வி.

"நீ பயப்படும்படி ஒன்னுமில்லை. தமிழுக்கு எப்பவோ தெரியும். உன்னை திட்டனும், இது கூடாது அப்படின்னா, விஷயம் தெரிந்த அப்போவே உன்கிட்ட இதைப்பற்றி பேசியிருப்பான். ஃபிரியா விடு" என்று மகேஷை ஆசுவாசப்படுத்திய பூர்வி, "இப்போ வந்திடுவாங்க. பக்கத்தில் தான் போயிருக்காங்க... உங்க ஆளு" என்றாள்.

பூர்வி சற்று உரக்க சொல்ல மகேஷ் பதறிவிட்டான்.

"அச்சோ அக்கா... அடி வாங்கி கொடுத்துடாதீங்க. மீ பாவம்" என்று மகேஷ் விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான்.

"அல்டாப்புக்கு பயப்படுறியாக்கும்?"

மகேஷ் தலைக்கு மேல் கரம் உயர்த்தி குவித்து அவள் முன் தரையில் படுத்தே விட்டான்.

"போதும்... இத்தோடு நிறுத்துக்கிங்கோ."

அப்போது அங்கு வந்த தெய்வானை மகேஷை பார்த்து முகம் சுளித்தவராக நகர்ந்திட, மகேஷின் முகம் போனப்போக்கில் பூர்வி இருக்கையில் இரு கால்களையும் தூக்கி வைத்துக் கொண்டவளாக வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

"என்னன்னு சொன்னால் நானும் சிரிப்பேன்." கேட்டபடி தமிழ் மாடியிறங்கி வந்தான்.

"என்னை டேமேஜ் பண்ணது போதும். பாடி தாங்காது" என்றான் மகேஷ்.

"போதும் போதும் அவனை கலாட்டா பண்ணியது" என்று வந்த தனம், "அப்பாவை கூப்பிடு தமிழு. சாப்பிடுவோம்" என்றவர், அங்கிருந்து ஓடப்பார்த்த மகேஷையும் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தார்.

"வந்த வேலை முடியாமல் கிளம்புற?" தமிழ் பூர்வியை பார்த்து கண்ணடித்தவனாக சொல்ல, "வச்சு செய்யுறிங்கடா" என்றான் மகேஷ். இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவன், அவர்களுக்கு மட்டும் கேட்கும் வகையில்.

சிரிப்பும், பேச்சுமாய் உணவு நேரம் முடிந்தது.

மகேஷ் புறப்பட ஆயத்தமாக வர்ஷினி உள்ளே நுழைந்தாள்.

மகேஷை கண்டு ஒரு நொடி பார்வையில் மின்னலை காட்டினாலும், அடுத்த கணம் முறைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

"சண்டையாடா?"

மகேஷின் இருபுறமும் வந்து நின்று அவனது தோளில் கைபோட்டு நெருக்கியவாறு தமிழும், பூர்வியும் கேட்டிட...

"இதுலாம் நல்லாயில்ல சொல்லிட்டேன். ரொம்பத்தான் ஓட்டுறீங்க" என்ற மகேஷ், "இரு உன்னை அப்பாகிட்ட போட்டு கொடுக்கிறேன்" என்க...

"அப்பா மகேஷ் மொழியைப் பற்றி உங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்" என்று தமிழே மகேஷை கோர்த்துவிட்டான்.

"என்ன மகேஷ்?" தேவராஜ் அவன் அருகில் வர,

"தெரியுமாடா?" எனக் கேட்டான் மகேஷ்.

"ம்ம்ம்." சாதாரணமாக தோள்களை உயர்த்தி கீழிறக்கினான் தமிழ்.

இப்போது தேவராஜுக்கு என்ன சொல்வதென்று மகேஷ் திருதிருக்க...

"உன் விஷயமும் தமிழு சொன்னான். நேரம் வரட்டும் நான் பேசுறேன்" என்று அவனின் தலையில் குண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார் தேவராஜ்.

"அடேய்!" நெஞ்சில் கை வைத்த மகேஷ், "இதுக்குமேல தாங்காதுடா" என்று ஓடியேவிட்டான். அக்கா, தம்பியின் சிரிப்பு சத்தம் அவனை துரத்தியது.

"இதுக்கே பயப்படுறான். இவன் எப்படி அல்டாப்பை சமாளிப்பான் தெரியல?" என்ற பூர்வி, தோட்டத்தில் இருக்கும் தந்தைக்கு அன்னை மோர் எடுத்து செல்வதை கண்டு, "ஒன்னு பேசணும் தமிழ். நீயும் வா" என்று அவனையும் அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்.

மதிய நேரமாக இருந்தாலும் தோட்டத்தில் மரத்திற்கு கீழே அத்தனை குளுமையாக இருந்தது.

"என்னப்பா ரொமான்ஸா?" 

பெற்றோர் இருவரையும் பார்த்து கேட்டபடி பூர்வி தேவராஜ் அமர்ந்திருந்த கல்மேடையில் அவருக்கு அருகில் அமர்ந்தாள்.

"வாலு" என்று செல்லமாக மகளின் கன்னம் கிள்ளினார் தந்தை.

தமிழ் தாழ்வாக இருந்த மரக்கிளையில் குதித்து அமர, கணவருக்கு மோரினை கொடுத்துவிட்டு செல்ல நினைத்த தனம், அவர்களுக்கு முன்னிருந்த மேடையில் அமர்ந்தார்.

"என்னடா ஏதும் சொல்லணுமா?" தேவராஜ் கேட்டிட ஆமென்று தலையசைத்த பூர்வி,

"பேப்பர் போட்டுடலாம் நினைக்கிறேன் ப்பா. மேரேஜ்க்கு முன்னாடி பேப்பர் பீரியட் முடிஞ்சிடும். நீங்க என்னப்பா சொல்றீங்க?" எனக் கேட்டு தமிழையும் ஒரு பார்வை பார்த்தாள்.

"நானே சொல்லணும் இருந்தேன். வேலையை கல்யாணத்துக்கு முன்னாடி விட்டுடு பூர்வி" என்றார் தனம்.

மனைவியை அதிருப்தியாக பார்த்த தேவராஜ்,

"ரொம்ப தூரம்... ஹாஸ்டலில் இருக்கணும் யோசிக்கிறியா பாப்பா?" எனக் கேட்டார்.

"அதுதான் ரீசன். ஆனால்" என்று பூர்வி சொல்லத் தயங்கிட,

"படித்து முடித்ததும் வேலைக்கு போயிட்டாங்க தானேப்பா. கொஞ்சநாள் லைஃப் என்ஜாய் பண்ணட்டும். குட்டி பிரேக் மாதிரி. கொஞ்சம் ஸ்பேஸ் எடுத்துட்டு திரும்ப விருப்பட்டால் வேலைக்கு போகட்டும் ப்பா. அதானேக்கா?" என்றிருந்தான் தமிழ்.

பூர்வியின் எண்ணமும் அதுதான். தன் மனதை சரியாகக் கணித்து சொல்லிய தம்பியை ஆதுரமாக நோக்கினாள் பூர்வி. அவள் தான் மூத்தவள், ஆனால் அவன் தான் அண்ணனாக நடந்து கொள்கிறான்.

"ஹ்ம்ம்" என்றவள், "ஒரு எக்ஸ்பீரியன்ஸுக்கு தான்'ப்பா வேலைக்கு போனேன். கொஞ்சநாள் தமிழ் சொன்ன மாதிரி ரிலாக்ஸ்டா இருக்கணும் தோணுதுப்பா. அதோட கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹாஸ்டல்ல இருக்கிறது சரிவராது தோணுது. இதுவரை பார்த்துக்க ஆளில்லாமல் இருந்துட்டாங்க. அவங்களை நல்லா பார்த்துக்கணும் தோணுதுப்பா. பூர்விகிட்ட பேசும்போது தான் குடும்ப சூழலை எவ்ளோ மிஸ் பண்ணியிருக்காங்கன்னு தெரியுது. அதையெல்லாம் கொடுக்கணும். தாத்தாவையும் அவருடைய கடைசி வாழ்க்கையை ஓய்வா பார்த்துக்கணும் ப்பா" என்றாள். தன் மனதை மறைக்காது. இதனை வெளிப்படையாக சொல்ல முடியாதுதான் தயங்கினாள். தமிழும் அதனை புரிந்து அவளுக்காக பேசிட, தயக்கம் உடைத்து சொல்லிவிட்டாள்.

தான் செல்லும் புகுந்த வீட்டை கண்ணாய் பார்த்துக்கொள்ள வேண்டுமென நினைக்கும் மகளை நினைத்து பெற்றோராய் அகம் மகிழ்ந்து போயினர். தேவராஜூம், தனமும்.

குறுகிய காலத்திலேயே தன் குடும்பமாக நினைக்க வைத்துவிட்டார்கள் என்றால் மூவரும் தங்களின் மகளின் மீது எத்தனை அன்பாய் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு பூர்வியின் மண வாழ்வு சிறப்பாய் அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டனர்.

அவ்வவ்போது சண்முகமும் பூர்வியிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். பேசத் துவங்கி இரண்டு நாள் தான் ஆகிறது என்றாலும், வெண்பா அத்தனை எளிதாக பூர்வியிடம் ஒட்டிக்கொண்டாள்.

வெண்பா முதலில் பேசும்போதே அண்ணி என்று தான் விளித்திருந்தாள்.

குடும்ப சூழலில் தாய், தந்தை அரவணைப்பில் வளர்ந்த பூர்விக்கு அவர்கள் இழந்திருப்பது புரிந்தது. அதனாலே இம்முடிவு.

"உன் விருப்பம் டா பாப்பா" என்று தேவராஜ் எழுந்து சென்றிட, "உன்னை நினைக்கும்போது பெருமையா இருக்குடாம்மா" என்று கன்னம் வழித்து முத்தம் வைத்தவராக சென்றார் தனம்.

தாய், தந்தை இருவரும் சென்றதும், கிளையிலிருந்து குதித்து இறங்கி பூர்வியின் அருகில் வந்தமர்ந்த தமிழ், அவளின் தோளில் கைபோட்டு,

"மாமாவையும், தாத்தாவையும் மட்டும் நீங்க பார்த்துகிட்டால் போதும். மொழியை பார்த்துக்க நானிருக்கேன்" என்றான். அவனது முகத்தில் அவளுக்கு அனைத்தும் நான் தான் எனும் தீவிரம் தெரிந்தது.

"என்னவோ நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கப்போற மாதிரி சொல்ற?" தம்பியை வேண்டுமென்றே சீண்டினாள்.

"உங்களுக்கு முடிஞ்சதும். நெக்ஸ்ட் என்னோடதுதான!" அவன் சொல்லிய தோரணையில்,

"எப்படான்னு இருக்க நீ?" என்றாள் பூர்வி.

"இப்போவேன்னாலும் ஓகே தான்" என்றவனை வாய் பிளந்து பார்த்தாள் பூர்வி.

"ரொம்ப ஸ்பீடுதான்!"

"இதுவே ஸ்லோவ் பூர்வி'க்கா." தமிழிடம் அப்படியொரு குறும்பு. ஒற்றை கண்ணடித்து சிரித்தவனை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள் பூர்வி.

"நீ இது மாதிரி எப்பவும் சிரிப்போடு சந்தோஷமா இருக்கணும் தமிழு" என்ற பூர்வி தன்னிரு கைககளையும் விரித்திட, நின்று கொண்டிருந்தவன் தமக்கையின் அணைப்பில் பாந்தமாக பொருந்தினான்.

"நீயில்லாமல் இருந்திடுவேனா தமிழு?" பூர்வியின் கண்கள் சட்டென்று துளிர்த்திருந்தது.

"ச்சூ... பூர்விஈஈ... ஜஸ்ட் டூ ஹவர்ஸ் டிஸ்டென்ஸ். பார்க்கணும் தோணுச்சுன்னா கால் பண்ணுங்க உடனே வந்துடுறேன்" என்றவன் அவளின் பின்னந்தலையில் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்தான்.

"அப்போ உனக்கு என்னை பார்க்கணும் தோணாதா?" முகம் சுருக்கிக் கேட்டாள்.

பூர்வியின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே அவளின் கண்களை துடைத்தவன், அழுத்தமாக ஆதுரமாய் அணைத்துக் கொண்டான்.

அந்நிலையிலே அஸ்வினுக்கு அழைத்தவன்,

"மாமா அக்காவை கட்டிக்கிட்டால் தம்பி ஃபிரியா வருவான். உங்களால் பார்த்துக்க முடியுமா?" என்று கேட்டிட...

பூர்வி சிறு முறைப்போடு தம்பியின் கைகளிலே மாற்றி, மாற்றி அடிக்க...

"அச்சோ பூர்வி... கண்ணெல்லாம் கசக்குனியேன்னு ஒரு சொல்யூஷன் ஃபவுண்ட் பண்ணி கேட்டால் அடிக்கிறீங்க நீங்க" என்றான் அவளின் அடிகளை ஏற்று சிரிப்போடு.

தமிழ் கேட்டதிலேயே பூர்விக்கு தமிழை விட்டு பிரிய வேண்டுமென்கிற பயம் வந்திருக்கிறதென புரிந்துகொண்ட அஸ்வின்...

"ஃப்ரியா ஒரு மச்சான் கிடைக்கும்போது நான் ஏன் வேணாம் சொல்லப்போறேன்" என்று பதில் கொடுத்தான்.

"அப்போ நீங்க டவுரி நிறைய கொடுக்க வேண்டியதிருக்குமே மாம்ஸ்... ஓகேவா?" எனக் கேட்டான் அதே குறும்பு புன்னகையுடன்.

"கொடுத்திடலாமே! உரிமையா கேட்கும்போது இன்னும் நிறையவே செய்யலாம்" என்றான் அஸ்வின்.

"காமெடி பண்ணால் இப்படி செண்டிமெண்ட் சீனாக்குறிங்களே மாமா" என்று தமிழ் சிரிக்க...

"அச்சோ நீங்க வையுங்க. நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்னு சும்மா வம்பு பண்ணிட்டு இருக்கான்" என்று பூர்வி வேகமாக சொல்லிக்கொண்டிருக்க, "யாரண்ணா ஃபோனில்? நீங்க சிரிக்கிறது உள்ள வரை கேட்குது" என அருகில் வந்தாள் வெண்பா.

"எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவங்க தான்" என்ற அஸ்வின், வெண்பாவிடம் அலைபேசியை கொடுத்திருந்தான்.

"ஹலோ!"

வெண்பா யாரெனக் கேட்கும் போதே அவளின் குரலை உள்வாங்கியிருந்த தமிழ் அடுத்து அஸ்வின் பேசியதில் பூர்வியின் கையில் அலைபேசியை வேகமாகத் திணித்திருந்தான்.

"என்னடா?" என்ற பூர்வி, வெண்பாவின் குரலில் சுதாரித்தவளாக...

"சொல்லுடா!" என்றிருந்தாள்.

"அண்ணி நீங்களா? நான் யாரோன்னு நினைத்தேன்" என்ற வெண்பா அடுத்து கலகலத்து பேசத் தொடங்கிட, பூர்வியும் அவளோடு பேச்சில் ஐயக்கியமாகிவிட்டாள்.

தான் ஆசைப்பட்டது போல தன் தங்கையும், தனக்கு மனைவியாக வரப்போற பெண்ணும் நெருக்கமாகியதில் சிறு சிரிப்போடு அஸ்வின் பார்த்திருக்க... தமிழுக்கோ காதில் புகை வந்தது.

"போதும் போதும் பேசியது" என்று பலமுறை மெதுவாக சொல்லிவிட்டான்.

தம்பியை வெறுப்பேற்ற என்றே பூர்வி மேலும் பேசிக்கொண்டே இருந்தாள்.

"ஃபோன் என்னோடது!" தமிழ் முறைத்துக்கொண்டு கூறினான்.

"இருக்கட்டும்." அடக்கப்பட்ட சிரிப்புடன் மொழிந்த பூர்வி வெண்பாவுடன் பேசுவதை நிறுத்தவில்லை.

இறுதியாக இருவரின் பேச்சும், என்று வெண்பா பூர்வியை பார்க்க வீட்டிற்கு வருகிறாள் என்பதில் வந்து நின்றது.

"நாளைக்கு சண்டே! மண்டே மார்னிங் ஆபீஸ் கிளம்பிட்டால், நெக்ஸ்ட் வீக்கெண்ட் தான்" என்று பூர்வி சொல்ல...

"அப்போ நாளைக்கே வரட்டுமா அண்ணி?" எனக் கேட்ட வெண்பா, "மாமா நெம்பர் ஷேர் பண்ணுங்க" என்றிருந்தாள்.

"மாமா...?" என கேள்வியாக பூர்வி தமிழை பார்த்துக்கொண்டே இழுத்திட...

"உங்க அப்பா அண்ணி" என்றாள் வெண்பா.

"எதுக்குடா?"

"நீங்க அனுப்புங்க" என்ற வெண்பா, "தாத்தா கூப்பிடுறாங்க அண்ணி. நீங்க உங்க ரொமான்ஸ் கன்ட்னியூ பண்ணுங்க" என்று அஸ்வினிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.

அதன் பின்பு பூர்வியும், அஸ்வினும் பேசிட... தமிழ் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

பூர்வி தமிழுடைய அலைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பதால், தன்னுடையதிலிருந்து தேவராஜ்ஜின் எண்ணை வெண்பாவுக்கு அனுப்பி வைத்தாள்.

"என்ன தமிழு... ஒரே கொண்டாட்டமா தெரிஞ்சுது. போன்ல யாரு?"

கூடத்தில் அமர்ந்திருந்த தெய்வானை கேட்டிட...

"எல்லாம் நம்ம சொந்தக்காரங்க தான் அத்தை" என்று அத்தையில் அதிக அழுத்தம் கொடுத்து மாடிப்படிகளில் ஏறினான்.

"திமிரு..." அவர் வாய் முணுமுணுத்தது.

"அதுதான் அவனுக்கு அழகே!" என்று வந்த அகிலாண்டாத்தை முறைத்த தேய்வானை...

"இப்படி உடனே கட்சி மாறிட்டியேம்மா?" என்றார்.

"கட்சி மாறல. சரி எதுன்னு இப்போ தான் புத்திக்கு புரியுது" என்றார் அகிலாண்டம்.

முகத்தை வெட்டி உதடு சுளித்த தெய்வானை, 'இப்போது ஏதும் பேசி இவரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது' என மௌனமாக இருந்தார்.

அங்கு டீபாயின் மீதிருந்த தேவராஜ்ஜின் அலைபேசி ஒலிக்க...

"ராஜூ உன் போன் அடிக்குது பாரு" என்ற அகிலாண்டத்தின் குரலுக்கு அறைக்குள்ளிருந்து வந்தார் தேவராஜ்.

புது எண்ணாக இருக்க சிறு யோசனையோடே எடுக்க...

"வணக்கம் மாமா. நான் வெண்பா" என்று அவள் மென் குரலில் தன்னை அறிமுகம் செய்திட, "சொல்லும்மா? நல்லாயிருக்கியாடா?" எனக் கேட்டார் தேவராஜ்.

தன் மகனின் வருங்காலம், அஸ்வினின் தங்கை என்பது போதுமாக இருந்தது அவருக்கு. வெண்பாவுடன் முதல் பேச்சே இயல்பாக இருந்திட.

"நல்லாயிருக்கேன் மாமா. நீங்க, அத்தை எப்படியிருக்கீங்க?" எனக் கேட்டு, அவரின் பதிலுக்கு பின் தான் அழைத்தற்கான காரணத்திற்கு வந்தாள்.

"அண்ணியை பார்க்க நாளை வீட்டுக்கு வரட்டுமா மாமா?" 

வெண்பாவின் குரலில் தன் குடும்பம் என்கிற உரிமை. அதனை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அது அவருக்கு பிடிக்கவும் செய்தது.

"கேட்கணுமாம்ம? வாங்க..." என்று தேவராஜ் சொல்ல, வெண்பா சிறு தயக்கத்தோடு... "நான் மட்டும் தான் வருகிறேன். ஃபேக்ட்ரி ஆடிட்டிங் நாளைக்கு. தாத்தா, அண்ணா உடன் வர முடியாது. நான் மட்டும் வருவதில் பிரச்சினை இல்லையே?" எனக் கேட்டாள்.

வெண்பா எதற்காக கேட்கிறாள் என்பது விளங்கியது. தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற அவளின் எண்ணம். அனைத்தையும் யோசித்து பார்க்கும் அவளின் குணத்தை எடுத்துக்காட்டியது.

"இதுவும் உன் வீடு தான். எப்போ வேணாலும் வரலாம். எதையும் யோசிக்க வேணாம்" என்று தேவராஜ் சொல்ல...

"அப்போ அங்கவே தங்கிக்கவா மாமா?" என்று அவள் சிரிப்போடு கேட்க, "தாராளமா!" என்று அவரும் புன்னகைத்தார். 

இருவரிடமும் வயது மீறி இதமான உரையாடல். தேவ்ராஜ்ஜுக்கு வெண்பா இன்னொரு பூர்வி என்றே மனதில் தோன்றியது.

"தேன்க்ஸ் மாமா" என்றவள், "அத்தைகிட்ட பேசட்டுமா மாமா? நாளைக்கு முதல் முறை நேரில் பார்க்கும்போது புதுசா யாரையோ பார்க்கிறோம் அப்படிங்கிற பீல் வராமல் இருக்கும்" என்றாள்.

உள்ளுக்குள்ளே மெச்சிக்கொண்டவர், தனம் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.

"என்னவாம்? உங்க மகன் சிரிச்சிலாம் பேசுறாரு. யாரா இருக்கும்?" அதுவரை அவர் பேசிக் கொண்டிருப்பதையே பார்த்த தெய்வானை அகிலாண்டத்திடம் கேட்க, அவரோ தெரியாதென்றார்.

வெண்பா பேச்சிலே தனத்துடன் ஒட்டிக்கொண்டாள்.

"பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி தோணுதுங்க" என்று பேசி முடித்து அலைபேசியை தேவராஜ்ஜிடம் கொடுத்தபடி தனம் கூறிட...

தேவராஜ்ஜும் மென் புன்னகையோடு ஆமென்று தலையசைத்தார்.

"எனக்கு பூர்விகிட்ட பேசுற மாதிரி தான் தோணுச்சுங்க" என்று தனம் சொல்ல...

"யாரு? எந்தப்பொண்ணைப் பற்றி பேசுறிங்க" என்று கேட்டார் தெய்வானை. அகிலாண்டத்தின் பார்வையிலும் அவ்வினா தொக்கி நின்றது.

"பூர்வி மாப்பிள்ளையோட தங்கச்சி அண்ணி. நாளைக்கு வரட்டுமான்னு கேட்டு பேசினாள்" என்று தனம் முகம் முழுக்க சிரிப்போடு சொல்ல...

தெய்வானைக்கு எரிச்சலாக வந்தது.

"ஒரு பேச்சிலே அவளோட குணம் தெரிஞ்சிடுச்சாக்கும். இதென்ன பழக்கம்? வயசுப் பொண்ணை, வயசுப் பையன் இருக்க வீட்டுக்கு அனுப்புறது?" என்று வேறொரு அர்த்தத்தில் தெய்வானை பேசிட...

தேவராஜ் ஒரே பார்வை தான் பார்த்தார். அத்தனை கோபத்தோடு. தெய்வானை வேறு புறம் திரும்பிக் கொண்டார்.

"அஸ்வினுக்கு எல்லாம் பெரியவரும், அவர் தங்கச்சியும் தான். உன் பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா, நீ போயி பார்க்கமாட்டியா? அந்த மாதிரி தான்" என்று சுவற்றை பார்த்துக்கொண்டு கூறிய தேவராஜ், "எல்லாரையும் அழுக்கோடவே பார்க்கக்கூடாது" என்று வார்த்தையால் கொட்டு வைத்து நகர்ந்தார்.

"பார்த்தியாம்மா உன் மகன் பேசிட்டு போறதை?" தெய்வானை போலி வருத்தத்தோடு கேட்டார்.

"அப்பா சொன்னதில் என்ன தப்பு?" என்று வந்தான் தமிழ்.

'அப்பப்போ இவன் இருக்கிறதையே மறந்திடுறேன்' என்று மனதில் நினைத்தபடி ஈ என்று முகத்தை காட்டிய தெய்வானை, "நம்ம வர்ஷினியை நாம இப்படி அனுப்புவோமா? காலம் கெட்டுக் கிடக்கேன்னு சொன்னேன்" என்றார். நீட்டி முழக்கி.

"அவங்க நம்ம வீட்டுக்கு வராங்க. இப்போ நீங்க சொல்ற அர்த்தம், நம்ம குடும்பத்தை தவறா காட்டுது. அதுவும் முக்கியமா என்னை. அதைதான் நீங்க சொல்றீங்களா?" மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவன் கேட்ட தோரணையில் தெய்வானை பதில் சொல்ல முடியாது திணறினார்.

"அது வந்து தமிழ்..."

"உங்க பொண்ணை பற்றியே உங்களுக்கு முழுசா எதுவும் தெரியாது. இதில் அடுத்த பெண்ணைப்பற்றி பேச உரிமையே கிடையாது" என்றான்.

"நான் எதுவும் பேசலப்பா. விடு" என்று தெய்வானை வாதத்தை முடித்துக்கொண்டார்.

'இவன் கிட்டவே முட்டிக்க வேண்டியதா இருக்கு.' மனதில் சலித்துக் கொண்டார்.

அப்போது அஸ்வினுடன் பேசி முடித்து உள்ளே வந்த பூர்வி, "விடுடா சிலரை எப்பவும் மாத்த முடியாது. அவங்களே மாறனும் நினைத்தாலும் மாறிக்க முடியதாது" என்றவளாக, "உன் ஜூனியர்'கிட்டேர்ந்து கால் வந்துச்சு" என்று ஒற்றை கண்ணடித்து தமிழிடம் அலைபேசியை கொடுத்தாள்.

தமிழும் சட்டென்று முகத்தில் தோன்றிய புன்னகையை வழக்கம்போல் இதழின் ஓரத்தில் மறைத்தவனாக, வெளியில் சென்று வருவதாக சொல்லிச் சென்றிருந்தான்.

தெய்வானை பேசிய பேச்சுக்களில் இறுக்கமாக நின்றிருந்த மகனின் முகத்தில் சட்டென்று தோன்றிய இளக்கம், பூர்வி சொல்லிய ஜூனியர் வெண்பா என்று காட்டிட... தனம் தன் மகனின் காதல் கைகூடிட வேண்டுமென்றே மனதார எண்ணினார்.

நினைப்பதெல்லாம் எளிதில் நடந்துவிடுமா என்ன?


    


Leave a comment


Comments


Related Post