இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...40 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 22-05-2024

Total Views: 22764

முகத்தை மூடி முதுகு குலுங்க அழுது கொண்டிருந்தாள் பூச்செண்டு. அவள் அழட்டும் என்பதுபோல் சில நிமிடங்கள் அமைதியாய் அவளை வெறித்திருந்தாள் விசித்ரா. அழுகை விடாது தொடர்ந்தபடி இருக்க அவளை நெருங்கி அமர்ந்து தோளில் கை வைத்தாள். 


“பூச்செண்டு… போதும்… இன்னும் எவ்வளவு நேரம்தான் அழுதுட்டே இருப்ப…” முதுகில் தட்டிக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினாள். அழுது சிவந்திருந்த கண்களை துடைத்து விட்டாள்.


“நான் பண்ணினது பெரிய தப்புதான்க்கா… இல்லைன்னு சொல்லல… இப்போ வரைக்கும் என் முகத்தில்ன முழிக்காம அனுதினமும் எனக்கு தண்டனை கொடுத்துட்டு னதான் இருக்காரு… இப்ப புதுசா கெட்ட பழக்கம் எல்லாம் பழகிட்டு வந்து நிக்கிறாரு… தொடர்ந்து மூணு நாளா தண்ணி போட்டுட்டு வராரு… உடம்புக்கு ஒத்துக்காம வாந்தி தலைவலின்னு இன்னும் கஷ்டத்தையும் தலையில ஏத்திக்கிட்டு என்னை உயிரோடு கொன்னுட்டு இருக்காரு…” அவளது அழுகை மீண்டும் தொடர்ந்தது.


“அந்த ரீனாகூட நீ ரொம்ப க்ளோசா இருக்கிறது ரொம்ப நெருடலா இருக்குன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிட்டேதான் இருந்தான். அவளைப் பத்தி கேள்விப்பட்ட வரைக்கும் குழந்தை குடும்பம் உறவு இதில் எல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லாதவ… தன் அழகு போயிடுமோன்னு மூணு வருஷம் குழந்தையே பெத்துக்காம தள்ளிப்போட்டு வீட்ல பெரிய பிரச்சனை ஆனதுக்கு அப்புறம்தான் குழந்தை பெத்துக்கவே ஒத்துட்டு இருந்திருக்கா… அவ வாழ்ந்து வளர்ந்த முறை வேற… நீ அப்படியா… சொல்லு…” அமைதியான குரலில் விசித்ரா கேட்க கண்களை நிலத்தில் ஊன்றியபடி பதில் பேசாது அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


“உறவுகளோட அருமை தெரிஞ்சு கிராமத்து வாசனை மாறாம வளர்ந்த பொண்ணு நீ… உன் குடும்பம், உன் ஊர், உன் பேச்சு, குறும்பு இப்படி பல விஷயங்கள்தான் தரணிக்கு உன்மேல அவ்வளவு காதலை உருவாக்குச்சு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதில அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்… உயிரையே கொடுக்கிற உறவுகள் எனக்கு நிறைய இருக்காங்கன்னு சொல்லி சந்தோஷப்படுவான்… உன் கேரக்டருக்கு பொருத்தமே இல்லாத ஒருத்திகூட ஃபிரண்ட்ஷிப் வச்சு எவ்வளவு பெரிய தப்பை பண்ணி வச்சிருக்க பாத்தியா… உண்மையை சொல்லு… உனக்கு குழந்தை பெத்துக்க பிடிக்கலையா…? குழந்தை உன் வாழ்க்கைக்கு இடைஞ்சல்னு நினைக்கிறியா…?” கூர்ந்து பார்த்தபடி கேட்டவளை விசுக்கென நிமிர்ந்து வேதனையாய் பார்த்தாள் பூச்செண்டு. 


“அய்யோ அக்கா… சத்தியமா நான் அப்படி நினைக்கல… எனக்கும் குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்… நம்மளோட கரியர்ல ஒரு குறிப்பிட்ட சக்சஸ் ரீச் பண்ணினதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கிட்டாதான் கரெக்ட்டா பியூச்சரை பிளான் பண்ண முடியும்… திடீர்னு குழந்தை அது சார்ந்த விஷயங்கள்னு போயிட்டா நம்ம திறமை சுத்தமா அழிஞ்சே போயிடும்… இப்படி நிறைய ஃபெயிலியர்ஸை என் லைஃப்ல பார்த்து இருக்கேன்… அவங்க எல்லாம் இப்போ நினைச்சு ஃபீல் பண்றாங்க… நீ அந்த தப்பை பண்ணிடாதே… அப்படி இப்படின்னு அந்த ரீனாதான் சொன்னா… நானும் புத்திகெட்டதனமா அவ சொன்னதை எல்லாம் தலையாட்டி பொம்மை மாதிரி கேட்டுட்டேன்…” குற்ற உணர்வுடன் பேசியபடியே தலை தாழ்ந்து கொண்டாள்.


“தினமும் சாத்தான் வேதம் ஓதுச்சு… உன் மனசும் லூசுத்தனமா யோசிச்சுடுச்சு… அப்படித்தானே…” அவள் நாடியை நிமிர்த்தி கேட்க ஆம் என்று தலையசைத்தாள்.


“உனக்கு ஒன்னு தெரியுமா… உன்னை மாதிரிதான் என்னோட கரியர் எனக்கும் பேஷன்… அவ்வளவு நேசிச்சு என் வேலையை பண்ணுவேன்… கல்யாணத்துக்கு முன்னாலேயே என்னுடைய பார்லரை ரொம்ப சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டுதான் இருந்தேன். கல்யாணம் முடிஞ்சு ரெண்டே மாசத்துல கன்சீவ் ஆயிட்டேன்… எந்த இடத்திலும் அந்த விஷயம் எனக்கு தடையா தோணல… சின்ன சின்ன சிரமங்கள் இருந்தாலும் என் வேலையை செஞ்சுக்கிட்டுதான் இருந்தேன். என் ஹஸ்பண்டும் சப்போர்ட் பண்ணினார். குழந்தைக்காக கொஞ்ச நாள் எல்லாத்தையும் தள்ளி வைக்கத்தான் செய்தேன். அதால எந்த பாதிப்பும் எனக்கு வரலையே.. இதோ இப்போ என் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கிறேன்... என் கரியரும் எந்த வகையிலும் பாதிப்பு அடையல… எல்லாத்தையும் நாம னதான் பேலன்ஸ் பண்ணிக்கணும்… ஒர்க்கிங் வுமன் எல்லாரும் அப்படித்தானே இருக்காங்க… நீ ஏன் வேற மாதிரி யோசிச்ச…?” விசித்ராவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து கொண்டாள் பூச்செண்டு.


“இன்னும் சொல்லப்போனா நீ சின்ன அளவுல பண்ணிட்டு இருந்த வேலையை சாதாரணமா நினைக்காம உன் திறமைக்கு மதிப்பு கொடுத்து உன்னை இந்த அளவுக்கு உருவாக்கினதே தரணிதானே… அவன் உனக்கு சப்போர்ட் பண்ணாம போயிடுவானா… அதை ஏன் நீ யோசிக்கல…?” விசித்ரா பேசப் பேச தன் தவறினை எண்ணி இன்னும் கூனிக் குறுகி உதடு கடித்து அழுதாள் பூச்செண்டு.


“அவன் ரொம்ப உடைஞ்சு போயிட்டான் பூச்செண்டு… உன்மேல அந்த அளவுக்கு காதலும் நம்பிக்கையும் வச்சிருந்தான். உயிர்ல சுமக்கிற ஒருத்தியை வெறுத்து ஒதுக்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல… உன்னை தண்டிக்க முடியாமதான் அவனை அவனே தண்டிச்சுட்டு இருக்கான். நீ இப்போ சொன்ன அத்தனை விஷயங்களும் எனக்கு முன்கூட்டியே தெரியும்…” விசித்ரா கூற அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் பூச்செண்டு. 


“உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்த மறுநாள் அவன் வீட்டுக்கு வந்திருக்க மாட்டானே…”


“ம்… அடுத்த நாள்தான் வந்தார்… எத்தனையோ தடவை போன் பண்ணி மும் எடுக்கல… கோபத்தோட உச்சத்துல இருக்கிறார்னு நானும் அமைதியா இருந்துட்டேன்…”


“அவன் என்னை தேடித்தான் வந்தான்…”


“என்ன…?” ஆச்சரியமாய் பார்த்தாள்.


“மன அழுத்தம் தாங்க முடியாம யார்கிட்டயாவது கொட்டி தீர்க்க வேண்டிய கட்டாயம்… முகில்கிட்ட சொன்னா அது உன்னைத்தான் பாதிக்கும்னு அப்பவும் உன்னை பத்திதான் யோசிச்சான்… நேரா என்கிட்டதான் வந்தான்…” சொன்னவள் ஒரு கணம் நிறுத்தி “எப்படி அழுது கதறினான் தெரியுமா…?” சொல்லும்போதே விசித்ராவின் குரல் கரகரத்தது.


“மா..மாமு அ..அழுதாராக்கா…” கேட்கும்போதே பூச்செண்டின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.


“வெடிச்சு அழுதான்… குழந்தை லேட்டாகிறது அவனுக்கு பிரச்சனையே இல்ல… உங்களுக்கும் கல்யாணம் ஆகி பல வருஷம் ஆகிடல… அவன் ஆதங்கம் எல்லாம் அவன்கிட்ட எதையும் சொல்லாம அமுக்குனித்தனமா நீ இருந்தது… அவனை ஏமாத்தினது… இதெல்லாம்தான்… கணவன் மனைவியோட அந்தரங்கத்தில இது ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையாடா… தாம்பத்தியமே பொய்யா போயிட்டதா உடைஞ்சு போயிட்டான்… அவன் கோபத்தில ஏதாவது தப்பு இருக்குன்னு நினைக்கிறியா…” விசித்ராவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பூச்செண்டின் மேல் சவுக்கடியாய் விழுந்தன.


“நானே வலிய வந்து இது விஷயமா உன்கிட்ட பேசினா அதனால இன்னும் உங்களுக்குள்ள பிரச்சனை வந்துடும்னு தான் ஒதுங்கி இருந்தேன். நீயே கூப்பிட்டு எல்லாம் சொன்னதாலதான் உடனே ஓடி வந்தேன்… சொல்லு… இப்ப என்ன செய்யலாம்…?” கேள்வியை அவளிடமே திருப்பி இருந்தாள்.


“என்ன வேணா செய்ங்கக்கா… எனக்கு என் மாமு வேணும்… பழைய மாமுவா வேணும்… அவர் குடிக்கக்கூடாது… அவர் என்ன சொன்னாலும் நான் கேப்பேன்… இந்த கரியரே எனக்கு வேணாம்… அவர் இல்லாம இந்த வேலையை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்… எனக்கு என் மாமு மட்டும் போதும்…” உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தாள் விசித்ரா.


“இப்போ எல்லாத்தையும் சொல்லு… அதுக்காக உன் கரியரை மொத்தமா விடணும்னு அவசியம் எல்லாம் இல்ல… அதை அவனே ஒத்துக்க மாட்டான்… எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணி பழகிக்கோ…”


“என்னதான் படிச்சிருந்தாலும் நான் கிராமத்தில வளர்ந்த பொண்ணுதானே… தெரிஞ்சும் தெரியாம ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணினா பெரிய மனசு பண்ணி அவர் மன்னிக்கக் கூடாதா…? இப்படி மாசக்கணக்கா எனக்கு தண்டனை கொடுக்கலாமா…? தண்டனை அவருக்கும்தானே… அவர்கிட்ட பேசி கொஞ்சம் புரிய வைங்கக்கா… நான் பேச வாய் திறந்தாலே காதை மூடிக்கிட்டு வெடுக்குன்னு வெளியே போயிடறார்… நா..நான் எ..எப்படி இதை சரி பண்றது..?” மீண்டும் விசும்பத் தொடங்கினாள்.


அவள் தோளோடு அணைத்துப் பிடித்து அழுத்தம் கொடுத்தவள் “நான் அவன்கிட்ட பேசுறேன்… நீ ஏன் பார்லருக்கு போகாம பூட்டி வச்சிருக்க…? இதுக்குத்தான் அவன் கஷ்டப்பட்டு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சானா…?”


“என் மாமுவுக்கு பிடிக்காத விஷயத்தை இனி நான் செய்யறதா இல்ல…”


“லூஸு… நீ செஞ்ச அந்த ஒரு விஷயம்தான் அவனோட கோபத்தை தூண்டி விட்டுடுச்சு… உன் வேலையை பார்க்கக்கூடாதுன்னு அவன் சொல்லவே இல்லையே…”


“முதல்ல எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை சரியாகட்டும்… அதுக்கப்புறம் தான் என்னால எதிலேயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியும்…”


“அதுக்காக பார்லரை மூடி வைக்கக் கூடாது. நீ அப்பப்போ போனாலும் பரவாயில்ல… உன் அசிஸ்டன்ட்டை வந்து திறந்து வைக்க சொல்லு… ஒரு தொழிலை ஆரம்பிச்சு சக்சஸ்ஃபுல்லா போகும்போது இப்படி திடீர்னு நிறுத்தி வைக்கக் கூடாது… அதுவும் தப்புதான்… வச்சா குடுமி மழிச்சா மொட்டைன்னு இருக்கிறதும் தப்பான டெசிஷன்தான்…” சொன்னபடியே சிரித்தாள் விசித்ரா.


“நீங்க ரொம்ப நல்லவங்கக்கா.. எவ்வளவு அழகா பேசுறீங்க… நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாம நான்தான் பைத்தியக்காரி மாதிரி அந்த சாத்தான் கையில சிக்கிட்டேன்… இனி ரொம்ப கவனமா இருப்பேன்க்கா... அப்பாவித்தனமாய் பேசியவளின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளினாள் விசித்ரா.


“உனக்கே உனக்குன்னு சில தனித்துவம் இருக்கு பூச்செண்டு… உன் புருஷன் விரும்பற மாதிரியான விஷயங்கள்… அதை எப்பவும் மாத்திக்காதே… புரியுதா…”


“மாமு கூட ஒரு முறை அப்படித்தான் சொன்னாரு… இனி நான் நானாவே இருக்கேன்… மாமாவும் அவருடைய தனித்தன்மையை இழந்துடக் கூடாதுல்லக்கா… அவரையும் பழைய மாதிரியே இருக்க சொல்லுங்க… என்னை நாலு அடி அடிச்சுட சொல்லுங்க… என் மனசும் ஆறும்… அவர் கோபமும் குறையும்…” மூக்கை உறிஞ்சிக் கொண்டே முகத்தை துடைத்துக் கொண்டாள். அதன்பின் பூச்செண்டினை சமாதானம் செய்து தரணியிடம் இது விஷயமாக பேசுவதாகக் கூறி அவளிடம் விடைபெற்று கிளம்பினாள் விசித்ரா.


தரணியும் விசித்ராவும் அந்த பார்க்கில் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்திருந்தனர். எங்கோ தொலைவை வெறித்தபடி உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தான் தரணி.


சில வினாடிகள் அவன் முகத்தையே பார்த்திருந்தவள் “என்னடா… இன்னும் என்னதான் யோசனை…?” அவன் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்தபடி கேட்க நீண்ட பெருமூச்சுடன் அவளிடம் திரும்பினான் தரணி.


“நாங்க பேசின அத்தனையும் கேட்டேதானே… அவ கதறி அழுததுகூட உனக்கு கேட்டிருக்குமே… பாவம்டா… சின்னப்பொண்ணு… விபரம் தெரியாம பண்ணிட்டா… அந்த ரீனா பெரிய படிப்பாளி எல்லாம் தெரிஞ்சவ அவ சொன்னா சரியா இருக்கும்னு தப்பா கால்குலேட் பண்ணிட்டா… அந்த அளவுக்கு அவ மனசை குழப்பியிருக்கா அந்த ராட்சஸி… சொல்புத்தியில தெரியாம பண்ணிட்டாடா… செஞ்ச தப்புக்கு உன் காலில் விழவும் தயாராயிருக்கா… தப்புன்னு உணர்ந்த பிள்ளையை திரும்ப திரும்ப தண்டிக்கிறது தப்பில்லையா…?”


அக்கறையாய் பேசியவளிடம் பதில் பேசாது அமைதியாய் அமர்ந்திருந்தான் தரணி. பூச்செண்டின் அழைப்பை ஏற்று விசித்ரா அவளது வீட்டிற்கு செல்லும் முன்பே தான் அங்கு செல்லபா போவது குறித்து தரணிக்கு விபரம் தெரிவித்து வீட்டடிற்குள் நுழையும்போதே தனது போனில் அவனுக்கு அழைத்து அமைதியாய் மேஜை மீது வைத்து அனைத்தையும் நேரடி ஒலிபரப்பு செய்திருந்தாள் விசித்ரா. இருவரும் பேசிக்கொண்ட விபரங்கள் அனைத்தையும் தெளிவாய் கேட்டபடிதான் அமர்ந்திருந்தான் தரணி.


“போதும் உன் கோபம்… இதுக்கு மேலயும் வீம்பு பிடிக்காதே… அதென்ன தண்ணி போடுற பழக்கம்…? அவ தெரியாம தப்பு பண்ணினா… நீ தெரிஞ்சே தப்பு பண்றியா… விஷயம் தெரிஞ்சா அப்பா அம்மா எவ்வளவு வேதனைப்படுவாங்க… நீ அடிச்சாலும் உன் பொண்டாட்டி சந்தோஷமா வாங்கிக்க தயாராதான் இருக்கா… உன் கோபத்தை அப்படி காட்டு… இந்த காலத்துல அடிங்க புருஷா வாங்கிக்கிறேன்னு எந்த பொண்டாட்டி முதுகை குனிஞ்சு காட்டுறா… உனக்கு அமைப்பு இருக்கு… அனுபவிச்சுக்கோடா…” சிரித்தபடியே கூறியவளை தன்னை மீறி தோன்றிய புன்னகையுடன் பார்த்தான் தரணி.


“ஆமாடா… இதுதான் சந்தர்ப்பம்… என் புருஷன் எல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு ஒரு தடவையாவது கிடைக்காதான்னு ஏங்கி கிடக்கிறார்…” உதட்டை மடக்கி சிரித்தபடியே கூற “அந்த ஏக்கத்தை நீதான் தீர்த்து வைக்கிறது…” இறுக்கத்தில் இருந்த அவனது முகம் சற்று இளகி குரலும் சகஜமாகி இருந்தது.


“ம்ஹூம்… அது நடக்காது.. வலிய போய் முதுகை திருப்பி காட்டினாலும் தெறிச்சு ஓடிடுவார்… அடிக்க மாட்டார்…”


“ஏன்…?”


“ஒரு தடவை செல்லமா அடிக்கிறேன்னு வலிக்கிற மாதிரி அடிச்சிட்டார்… நானும் செல்லமாதான் கையை பிடிச்சு முறுக்கினேன்… பிஞ்சு உடம்பு போல… பொடக்குன்னு எலும்பு முறிஞ்சு 15 நாள் மாவுக்கட்டு போட்டு சுத்திட்டு இருந்தார்…”


ஹாஹாஹா… தன்னை மறந்து வெடித்து சிரித்தான் தரணி. 


“நீ பல்க் மட்டும் இல்லடி… ஹல்க்கும் கூட… பாவம் அந்த மனுஷன்…” தொடையில் தட்டிக் கொண்டு தன்னை மறந்து சிரித்தவனை நிறைவாய் பார்த்துக் கொண்டிருந்தாள் விசித்ரா.


“இந்த சந்தோஷத்தோடவே வீட்டுக்கு போ… உன் சிரிச்ச மூஞ்சியை பார்த்தா உன் பொண்டாட்டி நிறைஞ்சு போய்டுவா… அவ கூட சந்தோஷமா திரும்பவும் ஒரு வாழ்க்கையை தொடங்கு… குடும்ப வாழ்க்கையில தவறுகளும் பிரச்சனைகளும் வர்றது சகஜம்தான்… அதுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு ஓடிட முடியாது… நம்மளை நாமளே செதுக்கறதுக்கும் சரிப்படுத்தறதுக்கும் பிரச்சினைகள்கூட நமக்கு தேவையான ஒரு அம்சம்தான்… பிரச்சனைக்கு அப்புறம் வர்ற புரிதல் வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்… உன் பொக்கேவை இன்னும் கஷ்டப்படுத்தாம வாழ்க்கையை சந்தோஷமா மூவ் ஆன் பண்ணு…”


தன் தோழியின் பேச்சுக்களில் தரணியின் மனதிற்கு நிறைய ஆறுதல்… அழுத்தமாய் இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாறையை நகர்த்தி வைத்ததுபோல் அவன் மனமும் லேசானது… அவளை ஊருக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்து வீட்டை நோக்கி கிளம்பி இருந்தான்.




Leave a comment


Comments


Related Post