இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 22-05-2024

Total Views: 9556

அத்தியாயம் 16

ஜாடி விழுந்து நொறுங்கியதும் "அந்தகன் இங்க இருக்கானா?" என சாரதி கேட்க, அவள் திரும்பிப் பார்த்துவிட்டு இல்லை என்றாள்.

"உன் கண்ணுக்கும் அவன் தெரிய மாட்டானோ" சந்தேகமாக வினவியதும், அவள் இன்னதென்று விளங்கா பாவனையுடன் அவனைப் பார்க்க, இப்போது அவன் வெடிச்சிரிப்பு சிரித்து "ஐயா இறந்ததுல நீ ரொம்ப குழப்பமான மனநிலையில இருந்திருப்ப அஞ்சு. அந்த சமயத்துல உனக்கு உடம்பு வேற சரியில்லாமல் போயிடுச்சு. அதுதான் உன் மனசு என்னென்னமோ கற்பனை பண்ணிக்கிடுச்சு. அந்தகன்னு யாரும் இல்லை. அவன் கற்பனை உருவம். அதுக்கு நீ உயிர் குடுத்துட்டு இருக்க" என்றதும் "என்னை என்ன பையித்தியம்னு நினைச்சுட்டயா சாரதி" என்றாள் கோபமாய்.

"அதுதான் உண்மை. அட பையித்தியமே இதெல்லாம் எங்கயாவது நடக்குமா. ஜாடி விழுந்துச்சேன்னு நீ கேட்கலாம். அது தற்செயலா விழுந்திருக்கும். அதுக்காக அந்தகனோட வேலைன்னு நினைக்காத. இதெல்லாம் உன் மன பிரம்மை. போய் வேற வேலை இருந்தா பாரு. வந்துட்டா. காதலிக்கிறேன்னு சொல்லிட்டு" அவளை எக்கச்சக்கமாய் குழப்பியவன் பின் ஆழமான குரலில் "நிஜமான உண்மை எது தெரியுமா? திரு உன்னை காதலிக்குறது தான். அவனுக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு உனக்கும் நல்லாவே தெரியும். சின்ன வயசுல இருந்து உனக்குத் தெரிஞ்ச உண்மை அதுதான். எனக்கு அந்த உண்மை தெரியும். நீ அவனை கல்யாணம் பண்ணி காதல் பண்ணு. அதுதான் சரியா இருக்கும்" சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

அப்போ அந்த வருடல் தேகத்துல நான் உணர்ந்த இறுக்கம் இதெல்லாம் கூட பொய்யா. அதெப்படி பொய்யா இருக்கும். என் உணர்வுகள் பொய்த்து போக வாய்ப்பில்லையே சோர்ந்து போய் அஞ்சனா அமர்ந்துவிட்டாள்.

 "டேய் ஏதோ பெரிய பிரச்சனை அஞ்சனாவுக்கு இருக்கும் போலடா" சாரதி உடனே திருவைச் சந்தித்துப் பேசினான்.

"என்னடா சொல்லுற? என்ன பிரச்சனை"

 "அவள் காதலிக்குறதா சொன்னது அவளைப் பொறுத்த வரைக்கும் உண்மைதான் டா. ஆனால் அந்த பையன் யாருன்னு கேட்டதுக்குத்தான் நிறைய கதை சொல்லுறா"

"என்னதான் சொல்லுறா"

 "அவளோட காதலன் பேர் அந்தகன். அவன் நம்மளை மாதிரி சாதாரண ஆள் கிடையாது. கந்தவர்வனாம்"

 "கந்தவர்வன் எப்படிடா.. இவளுக்கென்ன கிறுக்கா பிடிச்சுருக்கு"

 "ம்ம் அந்த குழப்பம் தான் எனக்கும். எனக்குத் தெரிஞ்சு அவ ஐயா இறந்துல ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான்னு தோணுது"

"எனக்கும் புரியுது. இப்போ என்னதான் பண்ணுறதுடா"

"கல்யாணம் பண்ணு. அதுதான் சிறந்த வழிடா. உன்னோட காதல் கண்டிப்பா அவளை எல்லா குழப்பங்கள்ல இருந்தும் வெளிய கொண்டு வரும்"

 'எப்படியோ ஒருத்தனை தயார் பண்ணி இரண்டு பேர் ஜாதகமும் நல்லா இருக்கு. பொருத்தம் இருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கலாம். உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லைன்னு சொல்ல வச்சுட்டேன் டா. அம்மா இப்போ வரைக்கும் நம்பாமல்தான் சுத்திட்டு இருக்காங்க. இவவேற இப்படி இருக்கான்னு எனக்கு பக்ன்னு இருக்கு. இவளை நான் எப்படி சரி பண்ண. நீ சொல்லுறதை வச்சுப் பார்க்குறப்போ நான் நிறைய போராட வேண்டியிருக்கும் போலயே"

 "அதெல்லாம் அவ சரியாகிடுவா திரு. நான் பேசியிருக்கேன். அதான் கோவிலுக்குக் போறீங்களே அங்க வச்சு உன்னோட திட்டத்தை வெற்றிகரமா நடத்தி முடிச்சுடு"

 "கண்டிப்பா டா. நீயும் வந்துடு அன்னைக்கு"

 "வருவேன் நான் இல்லாமல் அஞ்சு கல்யாணமா. அதுவும் இல்லாமல் அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அவகிட்ட இன்னும் உன்னைப் பத்தி எடுத்துச் சொல்லணும்"

 "நீ அவளுக்கு சிநேகிதன்.‌ அப்படித்தான் நம்ம பழக்கம் ஆரம்பிச்சது. இப்போ நீ எனக்காக எவ்வளவு பெரிய விஷயம் பண்ணுற தெரியுமா? நான் உண்மையிலே உன்னை மறக்க மாட்டேன் டா சாரதி"


 "அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணும். அதான் டா. நான் உனக்கு உதவிகரமா இருக்கேன். ஏன்னா நீ நல்லவன் டா. சரி வரட்டுமா?" என்று அவன் கிளம்பிவிட திருமணல்மேடு செல்லும் அன்று என்ன செய்ய வேண்டுமென்று அவன் மீண்டும் ஒரு முறை மனதுக்குள் கொண்டு வந்து சரி பார்த்துக் கொண்டான்.

---------------------

உடலெல்லாம் அதீத எரிச்சல். அதை விட சித்திரகுப்தனின் மனம் எரிந்தது. அந்த எரிச்சலின் உச்சத்தில், "பிரபு பிரபு என்று  பின்னாலே சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த தண்டனை தந்துவிட்டீர். இது சரியே இல்லை. எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்ளும் நிலையில் தாங்கள் இல்லை. காதல் கிறக்கத்தில் தாங்கள் எல்லாவற்றையும் மறந்து திரிகிறீர்கள். அதோடு என்னையும் தண்டித்து விட்டீர். இனி பிரபு என்ற பேச்சுக்கு இடமில்லை. நான் எமலோகத்தின் சித்திரகுப்தன். எல்லோரது உயிருக்கும் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவன். இன்று எனது கரங்களால் தங்களது பாவக்கணக்கினையும் சேர்த்து எழுதுகிறேன். உங்களது காதல் உங்களது தனிப்பட்ட விஷயம் தான். ஆனால் அதில் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த எமலோகம். இந்த எமலோகத்தின் நன்மை எனக்கு முக்கியம். ஆகவே நான் தங்களின் காதலை பாவத்தின் கணக்கில் எழுதி வைக்கிறேன். அந்த பாவத்திற்கான பலனை நீங்கள் இனி அனுபவிப்பீர்கள். எம் தேகத்திற்கு எரிச்சலை பரிசாக தந்தீர்கள் அல்லவா. அதுபோல் விரைவில் உமது தேகமும் அகமும் பற்றி எரியும். அந்த நெருப்பில் நான் குளிர்காய்வேன். என்னை உதாசீனம் செய்துவிட்டீர்கள் இயமனே. இதற்கான தக்க தண்டனை உமக்கு உண்டு. எந்த காதலால் எவரையும் மதிக்காது திமிராய் திரிந்தீர்களோ அந்த காதல் உங்களது கைவிட்டு போகும். அந்த காதலால் தாங்கள் அடையப்போவது எக்கச்சக்கமான சாபமும் காயங்களும் மட்டுமே. வரும்.. அந்த நாள் விரைவில் வரும். அன்று தங்களுக்கென இருக்கும் கர்வம் எல்லாம் அழிந்து போகும். தங்களின் பதவி பறிபோகும். தங்களது எல்லாமே பறி போகும். அவளது உயிரை நான் எடுக்க வேண்டாம் என்றுதானே இவ்வளவும் செய்தீர்கள். இனி அவள் உங்களது உயிரை எடுப்பாள். அணுஅணுவாய் எடுப்பாள்..." கண்கள் சிவக்க வெறியில் பேசிய சித்திரகுப்தனிடம் இருந்து விசுவாசமும் பாசமும் அவனைவிட்டு அகன்றுவிட இப்போது முற்றிலும் வேறொருவனாய் மாறி நின்றான். இதுதான் சமயமென்று இந்திரன் அவன் முன்னே பிரசன்னமானான். 

சித்திரகுப்தனின் இந்த மாற்றம் அவனுக்கு பலவிதங்களில் உபகாரமாக இருக்கும் என்பதால் அவனுடன் கூட்டு சேர்வது நல்லது என்று நினைத்து "சித்திரகுப்தா" என அழைத்தான்.

 "என்ன இந்திரா?"

 "உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதா. எரிச்சல் எல்லாம் மட்டுப்பட்டதா?"

 "எள்ளி நகையாட வேண்டுமென்றே வந்திருக்கிறாய் போல இந்திரா. நான் பதில் பேசும் மனநிலையில் எல்லாம் இல்லை"

 "உன்னை எள்ளி நகையாட நான் வரவில்லை. உதவி செய்யவே வந்தேன்"

 "உன் உதவி எனக்குத் தேவையில்லை இந்திரா"

 "சற்றுப் பொறு சித்திரகுப்தா. இயமன் சாதாரணமானவன் அல்ல"

 "இதை சொல்லவா இந்திரலோகம் விட்டு இயமலோகம் வந்தாய். எரிச்சலை கிளப்பாமல் சென்றுவிடு"

 "சித்திரகுப்தா நாம் தந்திரமாகத்தான் இயமனை வெல்ல முடியும்"

 "அதில் நீ சிறந்த கைகாரன் என்று எமக்குத் தெரியும். ஆனாலும் எனக்குன் உதவி தேவையில்லை "

 "பொறுமை இந்த தருணத்தில் மிகவும் அவசியம் சித்திரகுப்தா. அந்த அழகு சுந்தரியின் மீதான மயக்கத்தில் தானே அவன் நம்மை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவன் விருப்பத்திற்கு ஆடுகிறான். அந்த சுந்தரியே அவனை வெறுத்து ஒதுக்கும் படி செய்துவிட்டால்"

 "ஒன்றும் விளங்கவில்லையே"

 "விளக்கிக் கூறுகிறேன்.. அந்த மானிடப்பெண்ணிற்கு இயமன் மீது அப்பட்டமான வெறுப்பு தந்தையின் மரணத்திற்கு காரணமானவன் அவன் என்பதால். அதனாலேயே உன் பிரபு தான் இயமன் என்பதையே மறைத்து அவளுடன் பழகிக் கொண்டிருக்கிறான். இவன் இயமன் என்பதை அவள் அறிந்துக் கொண்டாள். தன்னாலேயே அவள் வெறுத்து ஒதுக்கிவிடுவாள்"

 "இந்திரா உனக்கு பிரபுவைப் பற்றி தெரியவில்லை போலும். நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிப்பவர் அவர். அவர் நினைத்தால் அது நடக்கும். நடத்திக் கொள்ளுவார்"

 "எண்ணெய் குளியல் நடந்தபிறகு உனக்கு வந்த ஞானோதயமா சித்திரகுப்தா. ஆனால் நீ வரிசையாய் அவனுக்கு சாபம் வழங்கிக் கொண்டிருந்தாயே"

 "நான் சாபம் வழங்கியது உண்மை. அந்த சாபம் அவரை அலைக்கழிக்கப் போவதும் உண்மை. அதற்காக உன்னோடு கூட்டுச் சேர வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை"

 "பின்னால் இதை நினைத்து வருந்துவாய்"

 "நீயும் வருந்தப் போகிறாய். சென்றுவிடு இந்திரா. நீ எதற்காக இவ்வளவு இணக்கமாக பேசுகிறாய் என்பதை அறிந்தும் உன்னோடு அமைதியாய் பேசுகிறேன் என்றால் அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு அப்படியே நகன்றுவிடு" சித்திர குப்தன் முகத்தில் அறைந்ததைப் போல் பேசிவிட

 'முதலில் இயமன் அவமானப்படுத்தினான். இன்று இவன்.. இதற்கெல்லாம் நான் திருப்பி பதில் தராது போவதில்லை' என்று வன்மமாய் நினைத்துக் கொண்டு இந்திரன் அவ்விடத்தினை விட்டு நகர்ந்தான்.

-------------------------------

சாரதி அஞ்சனாவின் நலம் மட்டுமே நாடுபவன். அவன் இதெல்லாம் பிரம்மை என்று கூறியதில் இருந்து அவள் நொடிக்கொரு முறை அந்தகா அந்தகா என்னும் பெயரை மட்டுமே உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறாள். நீ எப்படி அழைத்தாலும் நான் உன் முன்னே வரமாட்டேன் என ஒருவன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் அந்தகனின் மீது வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது. எது கற்பனை எது நிதர்சனம் என்று புரியாத நிலையில் அவளிருந்தாள். பலவீனமான நிலையில் நானே உருவாக்கிய கதாபாத்திரமா அந்தகன்.. இருக்காது.. அவனை நான் கற்பனையாய் காணவில்லையே. அவன் என் மெய்கலந்தவன். இவர்களிடம் இதுபற்றி சொன்னாலே நான் பையித்தியக்காரி என்று பட்டம் குடுத்து விடுகிறார்கள். இருக்கட்டும் என நினைத்தவள் இப்போது சத்தமாய் "அந்தகா.. நீ கண்டிப்பா கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்கிறேன். இனி நான் உன்னைப் பத்தி எதுவும் பேசப் போறது இல்லை. என்னைச் சுத்தி நடக்குறதை தடுக்கப் போறதும் இல்லை. திரு என்னைக் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறதுக்கு என் பக்கத்துல இருந்து மறுப்பு வராது. நான் எல்லாத்தையும் அமைதியாய் ஏத்துக்கப் போறேன். நம்ம இரண்டு பேருக்கும் இடையில காதல் இருக்குன்னு நான் நம்புறேன். அது உண்மையானதா இருந்தால் கண்டிப்பா நீ என்னை உன்னோட சொந்தமாக்கிக்குவ. அதை நடத்திக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. ஏதோ ஒரு காரணத்துக்காக நீ விலகி இருக்குறதா எனக்குத் தோணுது. என்ன செய்யுறன்னு புரியல. என்னைத் தவிக்க விடணும்னு தான் இவ்வளவும் பண்ணுறயா. அப்படின்னா நீ அந்த முயற்சியில ஜெயிச்சுட்ட அந்தகா. நான் ரொம்பவே தவிச்சுப் போயிட்டேன். நீயில்லாமல் என்னால முடியல. கண்ணு முன்னாடி வா அந்தகா.." அவள் குரல் அறை முழுக்க எதிரொலித்து அடங்கியது.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post