இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 19) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 22-05-2024

Total Views: 16099

உனக்கென்றே உயிர் கொண்டேன் 19

காலை எழுந்தது முதல் வெண்பாவின் அலைப்பேசி அழைப்பிற்காகக் காத்திருந்தான் தமிழ்.

இரவு அவன் உறங்கினானா என்றால்? இல்லை என்பது தான் பதில்.

தன்னவள் தன் வீட்டிற்கு முதல்முறை வருகிறாள் என்கிற அதீத ஆர்வம். பல மாதங்களுக்குப் பின்னர் அவளை நேரில் காணவிருக்கிறோம் என்கிற உற்சாக மகிழ்வு. தான் பூர்வியின் தம்பி என்று தெரிந்தால் எப்படி மகிழ்வாள் என்கிற சிறு பதட்டம்.

மொத்தத்தில் நிலைகொள்ள முடியாது தத்தளித்தான் என்று தான் சொல்லிட வேண்டும்.

நேற்று பூர்வி அஸ்வினிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தேவராஜ் மற்றும் தனத்திடம், தான் வருவதாக பேசி வைத்த வெண்பா அடுத்த கணம் தமிழுக்குத்தான் அழைத்தாள்.

பூர்வி அஸ்வினிடம் வெண்பா தமிழுக்கு அழைக்கிறாள் என்று சொல்லி பேச்சினை நிறுத்தி தமிழிடம் வந்து அலைபேசியை கொடுத்திட, அவனோ வெளியில் சென்றான்.

வண்டியில் ரயில் நிலையம் வந்தவன், அங்கிருந்த மேடையில் மகேஷ் உட்கார்ந்திருக்க, அவனுடன் சென்று அமர்ந்தான்.

"என்னடா எப்போ பாரு இங்கவே இருக்க?" என்று தமிழ் கேட்டிட...

"வர்ஷினி கோவிலுக்கு வர நேரம்டா. இந்தப்பக்கம் தானே வரணும்" என்றான் மகேஷ். தன் மனம் நண்பனுக்கு தெரிந்துவிட்டது என்ற பிறகு மகேஷுக்கு அவனிடம் மறைக்க எதுவுமில்லை.

"நீயென்ன இந்நேரம் இங்க வந்திருக்க?" என்று வினவினான் மகேஷ்.

"மார்க்கெட் வந்தேன்டா" என்ற தமிழ், வெண்பாவுக்கு அழைத்தான்.

"இதுதான் நீ மார்க்கெட் வந்த காரணமா?" மகேஷ் கேலியாகக் கேட்க,

"வீட்டில் அல்டாப்பு கடுப்பாக்கிருச்சுடா. அந்நேரம் மொழி கால் பண்ணால். அப்படியே வண்டி எடுத்துட்டு வந்துட்டேன். இங்க கொஞ்சம் ஃபிரியா இருக்குமே" என்று தமிழ் சொல்லி முடிக்க, வெண்பா அழைப்பை ஏற்றிருந்தாள்.

"ஹாய் சீனியர்!" வெண்பாவின் குரலில் அப்படியொரு துள்ளல்.

"என்னவாம்...? வாய்ஸ் பளிச்சுன்னு இருக்கு."

"ஆமாம்... நாளைக்கு உங்களை பார்க்கப்போறேன்ல அதான்" என்றாள்.

தமிழின் அதரம் நீண்டு விரிந்தது.

"எங்க மீட் பண்ணலாம்?" தெரிந்துகொண்டே வினவினான்.

"வீட்டுக்கு வந்தால் வேணான்னு சொல்லுவீங்களா பாஸ்?" என்றவள், "மேட்டுப்பாளையம் தான் வரேன். அண்ணியை பார்க்க" என்றாள்.

"ஹோ... பொண்ணு ஓகே ஆகிருச்சா?" 

கேட்ட தமிழை அடப்பாவி என்று வாய் பிளந்து நோக்கினான் மகேஷ்.

"ஹ்ம்ம்... அல்ரெடி சொன்னனே" என்ற வெண்பா, "மார்னிங் ட்ரெயின் ஏறிட்டு சொல்றேன். பிக்கப் பண்ண வந்திடுங்க" என்றாள்.

"நான் வந்து டிராப் பண்ணால் ஏதும் சொல்லமாட்டாங்களா?"

"உலகமகா நடிப்புடா சாமி இது!" மகேஷ் மெல்ல முணுமுணுக்க, அவனின் விலாவிலே இடித்தான் தமிழ்.

"ஹோ" என்ற வெண்பா, "அப்போ அங்க போயிட்டு ரிட்டர்ன் ஆகும்போது மீட் பண்ணலாம். ஓகேவா உங்களுக்கு" எனக் கேட்டாள்.

"ஓகே... ஓகே..." என்று புன்னகையோடு சொல்லி காலினை கட் செய்தான்.

"நாளைக்கு இருக்குடா உனக்கு!" மகேஷ் சிரித்திட...

"மொழி மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை மச்சான். ஷீ இஸ் டிப்ஃபரெண்ட் அண்ட் மோர் ஸ்பெஷல் டூ மீ. நாளைக்கு நான் பூர்வியோட தம்பின்னு தெரிந்தால் கூட, அவளுக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்ன்னு சொல்லாமல் இருந்தேன்னு நான் விளக்கம் கொடுக்காமலே புரிந்துகொள்வாள். என்னை புரியும் அவளுக்கு" என்றான். முழு காதலாய்.

தூரத்தில் வர்ஷினி வருவதை பார்த்த தமிழ்,

"வர்ஷி வருகிறாள். நான் மார்க்கெட் போகணும்" என்றதோடு, "அவளை அந்த ரெண்டு பேப்பர்ஸ் க்ளியர் பண்ண சொல்லுடா" என்று சென்றிருந்தான்.

'ம்க்கும் இதை சொல்லித்தான் அவள் என்கிட்ட பேசாமல் இருக்கிறாள். திரும்பவும் சொல்லி சண்டை பிடிக்கவா' என்று நினைத்த மகேஷ், வர்ஷினி அருகில் வந்ததும் அவளிடம் தன் கவனத்தை திருப்பினான்.

மூன்று வருடங்களாக காதலிக்கின்றனர். ஒரே ஊர். தமிழின் நண்பன் என்கிற முறையில் மகேஷ் அடிக்கடி அவனின் வீட்டிற்கு செல்ல, மகேஷின் ஜாலியான பேச்சில் ஈர்க்கப்பட்டு காதல் கொண்டு அவனிடம் சொல்ல, தமிழை மனதில் வைத்து மறுக்கவே செய்தான்.

வர்ஷினி விடாது காதல் செய்திட, மகேஷும் ஒரு நிலையில் அவளின் காதலில் கரையத் தொடங்கி ஏற்றிருந்தான்.

"கோபம் போயிடுச்சா?"

"அதெல்லாம் இன்னும் இருக்கு" என்ற வர்ஷினி, கையிலிருந்த கோவில் பிரசாதத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டாள்.

"எப்போ உங்க வீட்டில் சொல்லப்போறீங்க?"

"இப்போ என்ன அவசரம் வர்ஷு?"

"அம்மா டார்ச்சர் தாங்க முடியல. அத்தான் கிட்ட இப்படி பேசு, அப்படி பேசுன்னு ஒரே இம்சை. கோவம் கோவமா வருது. அவங்க சொல்றதையெல்லாம் கேட்கலன்னு திட்ட செய்றாங்க" என்று புலம்பினாள்.

"நிச்சயம் உங்க அம்மா எண்ணம் பலிக்காது. ஃபிரியா விடு" என்று தமிழின் காதலை மனதில் வைத்து மகேஷ் அவளுக்கு தைரியம் கொடுத்திட்டான். 

அன்று இரவில் தமிழ் தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டது வேறு யாருமல்ல. வர்ஷினி தான். அன்று அவள் கொண்ட நிம்மதிக்கு காரணம், தெய்வானை தமிழுக்கு தன்னை கட்டிக்கொடுத்திட நினைக்கிறார் என்கிற அவரின் ஆசையால், மகேஷை இழக்க நேரிடுமோ என வருந்தியிருந்தவளுக்கு தமிழின் காதல் அத்தனை ஆசுவாசமாக அமைந்தது. இன்றும் அதனை மனதில் கொண்டே தன் காதல் ஈடேறுமென்று நம்பிக்கை கொண்டாள்.

நண்பனின் விஷயம் இது. அவன் அறியாது, தன் காதலியேயானாலும் சொல்லிடக் கூடாது என்று மகேஷ் வர்ஷினியிடம் சொல்லவில்லை. அத்தோடு வர்ஷினி மூலமாக தமிழின் காதல் தெய்வானைக்கு தெரிந்துவிட்டால், அவர் தமிழுக்கு வர்ஷினியை மணம் முடிக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் தமிழின் காதலுக்கு எதிராக என்னவும் செய்திட வாய்ப்பிருக்கு என்று தனக்குள்ளே வைத்துக்கொண்டான்.

"உங்க அம்மா பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணலயா வர்ஷி?"

"தோணுதுதான். அவங்களை மீறி பேசிட முடியாதே" என்றவளை ஆழ்ந்து பார்த்த மகேஷ்...

"நம்ம விஷயத்திலும், இப்படி இருந்திடாதே! பேச வேண்டிய நேரத்தில் கண்டிப்பா நீ பேசணும்" என்றான். அழுத்தமாக.

அவனுக்கு சரியென தலையை ஆட்டினாலும், அவளுக்கு இப்போதே அந்த கணங்களை நினைத்து பயம் எழுந்தது.

மகேஷிடம் விடைபெற்று சந்தை பகுதிக்கு வந்த தமிழ், சிலவற்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.

சமையலறைக்குள் சென்று வாங்கி வந்த பையிலிருந்து ஒன்றை எடுத்து பிரிட்ஜில் அவன் வைத்திட...

"வெண்பாவுக்காடா?" என்று பின்னால் ஒலித்த பூர்வியின் குரலில்...

"பார்த்துட்டிங்களா?" என்று திரும்பியவன், "ஆமாம்" என்றான்.

"இதிலென்ன?" அவனிடமிருந்த பையினை பறித்து பூர்வி ஆராய்ந்தாள்.

அதில் இரண்டு தர்பூசணி பழங்கள், குடைமிளகாய், காளான், பன்னீர் இருந்திட...

"ரொம்ப பிடிக்குமோ?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்... மஷ்ரூம் பிரியாணி, கேப்ஸிகம் பன்னீர் ப்ரை'ன்னா கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சாப்பிடுவாள். பிரியாணி நீங்க நல்லா செய்வீங்களே! நாளைக்கு செய்திடுங்க" என்றான்.

"நானும் ஏதோ கொஞ்சம் நல்லா செய்வேன். செய்யலாமா?" என்று கேட்டுக்கொண்டே தனம் வர, அவர் ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

"ம்ம்ம்... செய்யுங்களேன். உங்க மருமகளுக்கு நீங்க செய்யாமல் வேற யார் செய்வாங்களாம்?" என்று தமிழ் கேட்ட பாவனையில், பூர்வி சிரித்திட தனம் மகனை ஆதுரமாக பார்த்தார்.

"இவ்வளவு நாள் இம்புட்டு ஆசையை எப்படி தமிழு மறைச்சு வச்சிருந்த?"

"மொழிக்கு படிப்பு முடியட்டும் வெயிட் பண்ணேன் ம்மா. அத்தோடு சொல்வதற்கு சரியான சந்தர்ப்பம் அமையல. மறைக்கக்கூடாதுன்னு ஒன்னுமில்லை" என்றான்.

"உன்னோட இந்த சிரிப்புக்கே வெண்பாவை சீக்கிரம் வீட்டுக்கு கூட்டுவந்திடணும் தோணுது தமிழு" என்ற தனம், "நாளைக்கு என் பெர்ஃபார்மென்ஸை பாரு" என்றார்.

"என்ன பெர்ஃபார்மென்ஸ்?" தமிழும், பூர்வியும் புரியாது ஒன்றாகக் கேட்டனர்.

"முதல் சந்திப்பு அழகா அமையனும் தானே! அதுவும் நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போகும் பொண்ணு. நல்லா கவனிக்க வேண்டாமா?" எனக் கேட்டார்.

"நீங்க கொடுக்கிற பில்டப்பில்... வேணான்னு அவளை ஓட வச்சிடாதீங்கம்மா" என்று பூர்வி சிரிக்க, தாயும், மகனும் அவளை முறைத்து வைத்தனர்.

"என்னை விட்டுட்டு என்ன ஜாலியா இருக்கீங்க?"

சிறிது நேரத்தில் தேவராஜ்ஜும் அவர்களின் பேச்சில் கலந்துகொள்ள, சமையலறை அவர்களின் உலகமாக மாறியிருந்தது.

அவர்கள் பேசுவது என்னவென்று கேட்காவிட்டாலும், அதில் இயல்பாய் தன்னால் பொருந்திட முடியவில்லையே என்று எட்ட நின்று பார்த்திருந்த அகிலாண்டம் வருத்தம் கொண்டார்.

தன்னுடைய மகள் தெய்வானை இழந்தது என்னவென்று புரிந்தது. இப்படியொரு நாளும் தெய்வானை மணியுடன், வர்ஷினியுடன் நேரம் செலவழித்து பேசி அவர் பார்த்ததில்லை.

'அதற்கு முதலில் உன் மகள் புருஷனோடு வாழனும்' என்று அவரின் மனசாட்சியே அவரை கொட்டியது.

சிலவற்றை புரிந்துகொள்ள காலம் கடந்திருக்க வேண்டும் போல. தவறை உணர்த்திட காலத்தை போல் சிறந்த ஆசான் வேறில்லை.

"வெண்பா எப்போ வரேன்னு ஏதும் சொன்னாளா?" தனம் கேட்டிட,

"எட்டு மணிக்கு மேல கிளம்புவான்னு நினைக்கிறேன். நாளைக்கு நானே ஸ்டேஷன் போய் பிக்கப் பண்ணிக்கிறேன் ப்பா" என்று தமிழ் சொன்னான்.

"நானும் என் தம்பி ஸ்டேஷன் வருவான்னு வெண்பாகிட்ட சொல்லிட்டேன் ப்பா" என்றாள் பூர்வி.

தேவராஜ் எதுவும் சொல்லாதிருக்க...

பிள்ளைகளின் முகம் பார்த்து தனம் "என்னங்க!" என்றார்.

"வெண்பா வரன்னு சொன்னதுக்கே உன் அத்தை எப்படி பேசினாள். இதில் நீ போய் கூட்டிட்டு வரன்னு தெரிந்தால்?" என்று தேவராஜ் முடிக்கவில்லை...

"அவர்களுக்காக என்னால் வாழ முடியாதுப்பா. அவங்க நாட்டாமை தனத்தை உங்களோடு வச்சிக்கோங்க. ஒவ்வொரு விஷயத்திலும் அவங்களுக்காக ஏன் பார்க்கணும். அவங்க நமக்காகன்னு ஏதும் யோசிச்சாவது பேசுறாங்களா? பேச்சில் கூட அடக்கத்தானே பார்க்கிறாங்க" என்று கோபமாக எழுந்து சென்றுவிட்டான்.

"ஏன்'ப்பா?" பூர்வி தமிழின் கோபத்தில் வருத்தம் கொண்டாள் தேவராஜ்ஜின் மீது.

"தமிழு ஒரு விசயத்துக்காக இவ்வளவு ஆர்வமா, தன்னோட சந்தோஷத்தை பிறர் அறியும்படி வெளிப்படையா காண்பித்து நான் பார்த்ததே இல்லைங்க. வெண்பா வரான்னு தெரிந்ததிலிருந்து அவனை அறியாமலே அவன்கிட்ட ஒரு துள்ளல். தன்னையறியாமலே அவள் தனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு நமக்கு காட்டுறா(ன்)ங்க" என்ற தனம், "என்னைவிடவே உங்களுக்குத்தானே அவனை நல்லா தெரியும்?" என்றார்.

"வெண்பா வந்துட்டு போகும்வரை தெய்வானை ஏதும் பிரச்சினை செய்திடக்கூடாதேன்னு யோசித்தேன்" என்ற தேவராஜ் அப்போதே மகனை தேடிச்சென்று தன்னுடைய எண்ணத்தை தெரிவிக்க, "புரியுதுப்பா. நீங்க எங்க விஷயத்திலும் அத்தையை முன்னிறுத்தி பார்க்குறிங்களேன்னு கோபப்பட்டுட்டேன். சாரிப்பா" என்றிருந்தான் தமிழ்.

அவற்றை நினைத்தபடி அமர்ந்திருந்த தமிழ்,

"உன்னை என் அப்பாவிடம் கூட விட்டுக்கொடுக்க முடியாத அளவுக்கு பித்து பிடிக்க வச்சிட்ட மொழி" என்று பிதற்றினான்.

வெண்பாவின் அழைப்பிற்காக அவன் எதிர்நோக்கி இருக்க... அஸ்வினிடமிருந்து வெண்பாவை "ரயில் ஏற்றிவிட்டேன்" என்று புலனம் தகவல் வந்தது.

மறுநொடி அவனவளிடமிருந்து அழைப்பு.

"இப்போ தான் ட்ரெயின் மூவ் ஆகுது சீனியர். அண்ணியோட தம்பி பிக்கப் பண்ண வராங்களாம். நான் அங்கிருந்து ரிட்டன் கிளம்பும் போது கால் பன்றேன்" என்றாள்.

"சாப்பிட்டியாடா?"

"ம்ம்ம்... சாப்பிட்டு தான் கிளம்பினேன்" என்றவள் "அங்குவர எவ்வளவு நேரமாகும்?" எனக் கேட்டாள்.

"மேக்சிமம் டூ ஹவர்ஸ். நடுவுல சிக்னல் விழாமல் இருந்தால், முன்னவே வந்திடலாம். லெவன்'க்கு ட்ரெயின் ரீச் ஆகிடும்" என்றவன், "லேடிஸ் காம்பார்ட்மெண்ட் தானே?" எனக் கேட்டான்.

எப்போதும் போல் இப்போதும் அவனின் அக்கறையில் சுகமாக கரைந்தாள்.

"ஆமாம் பாஸ்" என்றவள், அலைபேசியை வைத்திடாது அவனுடன் பேசிக்கொண்டே தான் வந்தாள். தமிழும் வையென்று சொல்லவில்லை, வைத்திடவும் இல்லை.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும் போது வெண்பா தெரிவித்திட, அவள் அருகில் வந்துவிட்டால் என்பதை மேட்டுப்பாளையத்திற்கு முன்னதாக அவள் குறிப்பிட்டதில் தெரிந்து கொண்டவன், அவளுடன் பேசிக்கொண்டே அறையிலிருந்து வெளியில் வந்தான்.

"ஸ்டேஷன் போயிட்டு வரேன்" என்று எதிர்ப்பட்ட பூர்வியிடம் வாயசைத்துவிட்டு புறப்பட்டு வந்திருந்தான்.

"எதுக்கு இந்த ஓட்டம் ஓடுறான்?"

தெய்வானை கேட்டிட தனம் என்ன சொல்வதென்று விழித்திட...

"நீங்க மதிய சாப்பாட்டுக்கு முன்ன தூங்கும் நேரமாச்சே இது? அதிசயமா இன்னும் இங்கு உட்கார்ந்திருக்கீங்க?" எனக் கேட்டாள் பூர்வி.

"என்னை எதுக்கோ துரத்தி விடுறாப்புல தெரியுது!" தெய்வானை கண்டு கொண்டவராகக் கேட்டிட...

"இப்போ மாமா வருவாரே! அவரை பார்த்ததும் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு எழுந்து போவீங்களே அதுக்குதான் முன்னவே கிளப்புறேன்" என்றாள் பூர்வி.

"ம்க்கும்." நொடித்து காண்பித்தவராக தெய்வானை எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டார்.

"யாரு அண்ணி வறாங்க?" வர்ஷினி அவர்களின் பேச்சினை கவனித்தவளாக பூர்வியிடம் கேட்க,

"நீ உங்க அம்மா மாதிரி இல்லை. கொஞ்சம் புத்திசாலி தான்" என்ற பூர்வி, வர்ஷினியின் முகம் காட்டிய பாவனையில் சிரித்தபடி, "அஸ்வினோட சிஸ்டர்" என்றாள்.

"ஹ்ம்ம்" என்ற வர்ஷினி, "அத்தானோட ஆளுன்னு சொல்லுங்க" என்று கண்ணடித்தாள்.

"மகேஷ் சொன்னானா?"

வர்ஷினி பூர்வியை அதிர வைக்கலாமென்று நினைத்து சொல்ல, பூர்வி கேட்டதில் வர்ஷினி தான் அதிர்ந்து பார்த்தாள்.

அவளின் அதிர்வே மகேஷ் சொல்லவில்லை என்பதை கணித்த பூர்வி,

"வேறெப்படித் தெரியும்?" எனக் கேட்டாள்.

"ஒருநாள் நைட் அத்தை, மாமாவிடம் அத்தான் பேசிட்டு இருந்ததை கேட்டேன்" என்ற வர்ஷினி, பூர்வியின் பார்வையில்... "ஒட்டெல்லாம் கேட்கல அண்ணி. தற்செயலாகக் கேட்டேன்" என்று வேகமாகக் கூறினாள்.

"ம்ம்ம்" என்ற பூர்வி நகர, அவளின் கைப்பிடித்து நிறுத்திய வர்ஷினி...

"அம்மாகிட்ட மகேஷ் பற்றி சொல்லிடாதீங்க அண்ணி" எனக் கேட்டுக்கொண்டாள்.

அவளின் பயம் பூர்விக்கு விளங்கியது. அவள் இதே பயத்துடன் இருந்தால், இறுதியில் வலியை சுமப்பது மகேஷாகத்தான் இருக்குமென சிந்தித்த பூர்வி தனக்கு அவசியமற்றதென ஒதுக்கி வைத்த சிலவற்றை வர்ஷினியிடம் பேசினாள்.

"சொல்லணும் நினைத்திருந்தால் எப்பவோ சொல்லியிருப்பேன்" என்ற பூர்வி, "உனக்காக தீர்க்கமாக ஒரு முடிவெடுக்கவும், திடமாக அதில் நிற்கவும்... உன் அம்மாவாகவே இருந்தாலும் அவர்கள் செய்வது சரியா, தப்பான்னு புரிஞ்சிக்கவும் மட்டுமில்லை வர்ஷி, நீ சொல்றதை மத்தவங்க காது கொடுத்து கேட்கவே படிப்பு ரொம்ப முக்கியம். படிச்சவன் சொன்னா மட்டுமே கெட்டதையும் நல்லதுன்னு கேட்டுக்கிற உலகம் இது. உனக்காக மட்டுமே சொல்றேன்... அந்த ரெண்டு பேப்பரையும் க்ளியர் பண்ணு. உன் சொந்த காலில் நிக்கணும் ஆசையே வரலையா வர்ஷி?" என்றாள்.

வர்ஷினி தலை கவிழ...

"இது புரிந்திருந்தால்... ஏன் நம்ம அப்பா, அம்மா பிரிந்திருக்காங்க, அவங்களை சேர்த்து வைக்க என்ன பண்ணலாம் யோசித்திருப்பாய்!" என்ற பூர்வி, "பொண்ணுன்னா தலை கவிழ்ந்து இருக்கணும் அவசியமில்லை. படிப்பு ஒரு அனுபவம். அது கொடுக்கும் நிமிர்வை வேறெதுவும் கொடுக்காது. ரெண்டு பேப்பர் கோட்டை விட்டதில் உன்னுடைய நாலு வருஷ உழைப்பு வீணாப்போகிடுச்சேன்னு தோணவே இல்லையா?" எனக் கேட்டு "வாழ்க்கையை கொஞ்சம் சீரியஸா வாழப்பழகு" எனக்கூறி நகர்ந்தாள்.

இறுதியில் பூர்வி பேசிய அறிவுரை வாக்கியங்களை மட்டும் அகிலாண்டத்தால் கேட்க நேர்ந்தது. 

இப்படியொரு நாளும் தெய்வானை வர்ஷினிக்கு அவளின் நலன் மீது அக்கறை கொண்டு பேசி அவர் பார்த்ததில்லை.

'தான் கூட தெய்வானைக்கு எடுத்து சொல்லியதில்லை. சொல்லியிருந்தால் தெய்வானையும் மணியுடன் நிறைவாக வாழ்ந்திருப்பாரோ?' அகிலாண்டத்தால் வருந்தி நினையாது இருக்க முடியவில்லை.

'தெய்வானை இப்படியிருக்க தானும் முக்கிய காரணமாகிவிட்டோம்' என மனதால் நொந்துபோனார்.

தெய்வானையை இனியாவது மணியுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டுமென்று நினைக்கிறார். பாதை தெரியவில்லை.

'முன்பு தேவராஜ் பலவகையில் எடுத்து சொல்லியும் கேட்காதவளா இந்த வயதில் தான் சொல்லி கேட்டுவிடப் போகிறாள்!' என்று ஆயாசாமாக நினைத்தார்.

பெரு மூச்சு அவரிடம். 

இந்த வயதிற்கு மேல் மகளின் வாழ்வு நல்லாயிருந்திட வேண்டுமென வருந்தக் காரணம்... முந்தைய காலத்தில் மகளின் வாழ்வை முனைப்புடன் பார்க்காததன் விளைவு.

பூர்வி சொல்லிச் சென்றதில் வர்ஷினி அசையாது நிற்க...

"இனியாவது வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிக்க பாரு வர்ஷி. உன் அம்மா சொல்ல வேண்டியதை, பூர்வி சொல்லிட்டுப்போகிறாள். அவள் சொல்றது தான் நிதர்சனம்" என்று அவளின் தலை கோதி கொடுத்தார் அகிலாண்டம்.

அந்நேரம் மணி அங்கு வந்தார்.

தனக்குள் பூர்வி சொல்லியவற்றை சிந்தித்துக் கொண்டிருந்த வர்ஷிக்கு அனைத்தும் உடனடியாக நடத்திட முடியாது என்று தெரிந்தாலும், முன்பு போல் மணி வந்தால் அமைதியாக சென்றிடாது,

என்றும் இல்லாத அதிசயமாக வர்ஷினி அவரின் கரம் பற்றியவளாக "வாங்கப்பா" என்று அழைத்தாள். முதல் முயற்சி. அப்பா என்று இயல்பாகவே வந்தது. 

மணியின் முகத்தில் கண்ட மகிழ்வில், 'இதை எப்போதோ செய்திருக்க வேண்டும்' என வருந்தினாள்.

அதனை நம்ப முடியாது மருதன், தனம் மற்றும் அகிலாண்டம் பார்த்திருந்தனர்.


Leave a comment


Comments


Related Post