இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 22-05-2024

Total Views: 20283

இதயம் 27

     அவனுக்காக ஜெனித்திருந்த உடலின் பாரத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவன், அவனுக்காகத் துடிக்கும் மனதின் பாரத்தையும் தாங்கட்டும் என நினைத்தாள் போலும், தனக்குக் கீழே கிடக்கும் சாணக்கியனைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு சன்னமாய் விசும்பினாள் மினி. 

     ஒரு கணம் என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்தவன் நடப்பிற்கு வந்து அவளைத் தன் மீதிருந்து பிரித்தெடுக்க முயற்சிக்க அதற்கு மறுத்து இன்னமும் தான் அட்டையாய் ஒட்டினாள் அவனோடு.

     அடக்க முடியாத வேதனையில் இருக்கிறாள் என்பது புரிய ஈஸி… ஈஸி என்று அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தவன் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்க, இப்போது அவன் முயற்சி கொஞ்சம் வேலை செய்தது. 

     அம்மை முழுதாக இறங்காத நிலையில், உடலும் மனதும் சோர்ந்து போய் நின்றிருந்தவளைப் பார்த்து பெருமூச்சுவிட்டவன் தன்மேல் இல்லாத தூசியைத் தட்டிவிட்டபடி, “இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்“ கட்டளையிடும் தொணியில் சொன்னான். 

     “சரின்னு நான் ஏத்துக்கிட்டா எதிர்காலத்தில் உங்களுக்குத் தான் சங்கடம் பரவாயில்லையா?“ எங்கிருந்து தைரியம் வந்ததோ சற்று சத்தமாகவே சொன்னாள் மினி. 

     அழுகையும் சிரிப்பும் கலந்து வெளிவந்த அவள் குரலின் பேதத்தை வைத்து அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொண்டவன் நன்றாக முறைத்து வைத்தான்.

     “என் அக்கா பண்ண வேலையால் கோபப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடாதீங்க“ ஏதோதோ பேச நினைத்தவளால் கடைசியில் இதைத்தான் சொல்ல முடிந்தது.

     “எல்லாம் தெரிஞ்ச அப்புறமும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா? என்ன மடத்தனம் இது“ நிஜமாகவே புரியவில்லை தான்.

     “உங்களைக் காதலிக்கிறதும் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறதும் மடத்தனம் என்றால் என்னோட எல்லாப் பிறவியிலும் இந்த மடத்தனத்தை முழு விருப்பத்தோட செய்வேன்“ சாதாரணமாகச் சொல்லிவிட்டு தோள்களைக் குலுக்கினாள்.

     இவளிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் வீட்டிற்குள் செல்ல முயற்சிக்க, வேகமாக அவன் முன்னால் போய் நின்றவள், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க ப்ளீஸ்“ கையெடுத்து கும்பிட்டாள். 

     ஏதோதோ பேச வேண்டும், சமாதான வார்த்தைகளும் நம்பிக்கை வார்த்தைகளும் சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் வந்திருந்தவளின் திருவாய் மொழிந்தது என்னவோ இவற்றைத் தான். 

     அவள் கூப்பிய கரங்களைத் தட்டிவிட்டவன், “உன் அக்கா பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ண நினைக்கிறியா இல்லை உன் அத்தான் அந்த ஜீவன் எனக்காக எதுவும் பேசினானா. எதுக்காக இந்தக் கல்யாணம்“ அத்தனை நக்கல் இருந்தது அவன் வார்த்தைகளில்.

     “மத்த யாருக்காவும் இல்லை. எனக்காக, உங்களுக்காக, நமக்காக“ கொஞ்சம் கூட பிசிறே இல்லாமல் பேசினாள்.

     “இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றியா“ கோபமாகக் கேட்டான். “இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வருவதற்கு முன்னாடியே உங்களை விரும்பியவ நான். உங்க கடந்த காலம் தெரிய வந்த பொல்லாத நேரத்தில் கூட உங்களுக்காக வருத்தப்பட்டேனே தவிர, என் காதலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்குள்ள ஒரு நொடி கூட வரல. புதுசாத் தெரிய வந்த விஷயம் உங்க வாழ்க்கையின் வில்லி என் அக்கா என்பது மட்டும் தான். என் காதலைத் தூக்கிப் போட்டுட்டு போகும் அளவு இந்த விஷயம் ஒன்னும் அவ்வளவு பெருசுன்னு எனக்கத் தோணல. நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன் சாணக்கியன். எனக்கு அப்பவும், இப்பவும், எப்பவும் நீங்க வேணும் தான்“ உறுதியாகச் சொன்னாள்.

     “இதெல்லாம் ஒத்து வராது மினி. உன் அக்கா வேண்டுமானால் நடந்த விஷயங்களில் இருந்து வெளிவந்திருக்கலாம். நான் இன்னும் வரல, வர முடியுமான்னும் தெரியல. எப்ப எதுக்கு கோபம் வரும் என்று எனக்கே தெரியாது. அந்த நேரத்தில் என் முன்னால் யார் இருந்தாலும் கத்திவிட்டுடுவேன். 

     எழிலுக்கும் அப்பாவுக்கும் என்னை சகிச்சுக்கிட்டு இருக்கணும் என்பது தலைவிதி. உனக்கு எதுக்கு அது. நீ சின்னப்பொண்ணு, சின்னதா ஏதாவது சொன்னாக் கூட உன்னால் தாங்கிக்க முடியாது. 

     இதில் நீ வதனியோட தங்கச்சி வேற. என்னைக்காவது அவ மேல் இருக்கும் கோபத்தை உன்மேல் காட்டிட்டா அது உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் . எல்லாத்துக்கும் மேல“ என்றவன் அடுத்த வார்தை சொல்ல முடியாமல் தடுமாறினான்.

     மினி அவனைக் கூர்மையாய் பார்க்க, “என்னால் இனி குடும்ப வாழ்க்கை வாழ முடியும் என்று தோணல. சாதாரணமா சதுரங்கப் பலகையில் ராஜாவையும் ராணியையும் பார்த்தாலே மனசு ரஷ்யாவுக்குப் போயிடுது. இந்த அழகில் மத்தது எல்லாம் கஷ்டம்“ சங்கடத்துடன் சொன்னான் சாணக்கியன்.

     அவன் சொன்னது புரிய பெருமூச்சு விட்டு தன்னை நிதானித்தாள் மினி. “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் சாணக்கியன். உங்ககிட்ட இது  பிடிக்கும் இது பிடிக்காதுன்னு எதுவும் கிடையாது. அந்த வகையில் உங்க கோபமும் எனக்குப் பிடிக்கும்“ மினி தன் வார்த்தைகளை முடிக்கக் கூட இல்லை.

     “பைத்தியம் தான் பிடிச்சிருக்கு உனக்கு. நான் கோபப்பட்டு உன்னைக் கண்டபடி திட்டும் போது, நீ அதை இரசிச்சுக்கிட்டு இருப்பியா“ கத்தினான் அவன்.

     “நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியல தான். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு. தங்கு தடையில்லாமல் எதிரே இருக்கும் யாரையும் வார்த்தை என்னும் கொடூரமான ஆயுதத்தால் அடித்துப் போட்டுட்டு போகும் உங்க கோபம், ஒருநாள் இல்ல ஒருநாள் எனக்காக கட்டுப்படும், நீங்க கட்டுப்படுத்துவீங்க. 

     கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் என்று சிலது இருக்கு. அதில் முதன்மையானது கோபம். அப்படியான கோபத்தையும் ஒருத்தர் கட்டுப்படுத்துறாங்க என்றால் அவங்களுக்கு எதிரே நிற்கும் நபர் மேல் அதிகம் விருப்பம் என்று அர்த்தம். அப்படி உங்களுக்கு அதிக விருப்பமான நபரா நான் மாறும் வரை காத்திருக்கும் வலிமை எனக்கு இருக்கு“ என்றாள்.

     “சினிமாத்தனமா இருக்கு. சின்னப்பிள்ளை என்பது சரியாப் போச்சு. உன்னோடது பேராசை, கண்டிப்பா அது நடக்காது“ என்றான்.

     பெருமூச்சு ஒன்றை பதிலாகக் கொடுத்தவள், “கடைசிவரை நான் நினைச்சது நடக்காமல் போனால் கூட உங்களோட மிகப்பெரிய பலவீனமாக அதை நினைச்சு கடந்து போக முயற்சிப்பேனே தவிர விட்டுட்டுப் போக நினைக்க மாட்டடேன்“ என்றவளை விசித்திரமாகப் பார்த்தாள் அவன்.

     “என்ன பொண்ணு நீ, உனக்கு இப்படியெல்லாம் யோசிக்க யார் சொல்லிக்கொடுத்தது. விக்கிரமாதித்தனைக் கட்டிக்கிட்டு தொங்கும் வேதாளம் மாதிரி என்னைப் பிடிச்சுத் தொங்குவதால் உனக்கு என்ன சந்தோஷம் கிடைச்சிட போகுது. 

     இரட்டைக் காளைமாடுகள் இழுக்கும் வண்டி மாதிரியானது கல்யாணவாழ்க்கை. ஆசையோ, விருப்பமோ, காதலோ, காமமோ இரண்டு பக்கமும் சம அளவில் இருக்கணும். ஒருபக்கம் அதிகமாகவும் இன்னொரு பக்கம் குறைவாகவும் இருந்தா அது சரியா வராது. 

     பொண்ணுங்க மனசைப் புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க எனக்குத் தெரியாது. என்னைக் கட்டிக்கிட்டா நீ ரொம்பக் கஷ்டப்படுவ“ சின்னப்பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னான்.

     “என் வீட்டு ஆளுங்களுக்கு சொன்னதைத் தான் உங்களுக்கும் சொல்றேன். என்னோட சந்தோஷம் எனக்கு நீங்க என்ன கொடுக்கிறீங்க, எனக்காக எதையெல்லாம் செய்யுறீங்க என்று பார்ப்பதில் இல்லை. நான் உங்களுக்கு என்ன செய்யப்போகிறேன் அதனால் நீங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கப் போறீங்க என்று பார்ப்பதில் தான் இருக்கு“ இப்படி சுயநலம் என்ற பெயருக்கு கூட இடம் கொடுக்காமல் அன்பைக் கொட்டும் இவளை என்ன செய்வது என்று மலைப்பாய் இருந்தது அவனுக்கு.

     சற்று நேரம் நீடித்த அமைதியில் ஒரு கணத்தைக் கூட வீணடிக்க விரும்பாமல் கண்இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “இதெல்லாம் உன்னோட வயசுக்கோளாறு மினி. படிப்பு முடிந்து வேலைக்குப் போகும் போது நானெல்லாம் உன் மனசோட மூலையில் கூட இருக்க மாட்டேன். 

     இரண்டும் கெட்டான் வயதில் எந்தப் பெரிய முடிவையும் எடுக்காதே. எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ“ தன் கடந்த காலத்தைப் பார்த்து உன் எதிர்காலத்திற்கான பாடத்தைக் கற்றுக்கொள் என்று மறைமுகமாகச் சொன்னான் சாணக்கியன்.

     அதையே சவாலாக ஏற்றுக்கொண்டாள் மினி. எப்படியாவது சாணக்கியனை தன்னை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இருந்தது அவளிடத்தில். அதற்காக எந்த விதமான பரீட்சைக்கும் தயாராக இருந்தாள்.

     “ஒருவேளை இன்னும் இரண்டு வருஷம் கழிந்த பிறகும் உங்க மேல் எனக்கு இப்ப இருக்கும் அன்பு துளியும் குறையாமல் இருந்தால், அப்ப என்னை ஏத்துப்பீங்களா?“ சவால் விடும் தோரணையில் கேட்டாள் பெண்.

     அப்போதைக்கு அவளைச் சமாதனாப்படுத்தும் வகையில் சரி என்று அவன் தலையசைத்து வைக்க, சந்தோஷமாக சவாலை ஏற்றுக்கொண்டாள் மினி. “இரண்டு வருஷம் இல்லை இருபது வருஷம் ஆனாலும் நான் உங்களை மறக்க மாட்டேன். ஆனால் நீங்க என்னை மறந்திடக்கூடாது இல்லையா?“ என்றவள் அவன் சுதாரிக்கும் முன்பு கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு சிட்டாய் பறந்து போனாள்.

     இந்த நொடி சந்தோஷ அலையில் துள்ளி விளையாடும் சின்னச்சிட்டு நாளை இந்நேரம் கொடூர மனம் படைத்த இருவரிடம் சிக்கி சின்னாபின்னமாகப்போகிறாள் என்று அவளுக்கோ, அவள் மனதில் நம்பிக்கை விதையை விதைத்துவிட்டிருந்த சாணக்கியனுக்கோ தெரியவில்லை தான்.

     அடுத்த நாள் மாலை நேரம், வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க பால்கனி வழியே பார்த்த சாணக்கியனுக்கு வாழ்நாள் முழுக்க அவன் மறக்க முடியாத அளவிலான காட்சி ஒன்று காணக்கிடைத்தது.

     மினியின் தந்தை மற்றும் தமையன் இருவரும் தேன்மொழியின் வீட்டில் இருந்து அடித்து இழுத்துச்சென்று கொண்டிருந்தனர். நான் இனி என்னோட அக்காவீட்டில் தங்கப் போவதில்லை. நடந்த விஷயங்களால் நான் அவளை ஒதுக்கிட்டேனான்னு கேட்டா கட்டாயம் இல்லை. அவ அப்படி ஒரு காரியம் பண்ணதால் தானே எனக்கு நீங்க கிடைக்கப் போறீங்க. 

     அந்த ஒரு காரணத்துக்காக அவளை மன்னிக்க முயற்சி பண்றேன். ஆனா இனிமேலும் என்னால் அங்க இருக்க முடியாது. ஹாஸ்டலில் இடம் கேட்டு இருக்கேன். ரெடியானதும் அங்க போயிடுவேன்“ போட்டிருந்த நீளமான பின்னல் துள்ளிவிழ அங்கிருந்து சென்றிருந்தாள்.

     அவளிடம் அவன் வியந்து பார்க்கும் அந்த நீளமான பின்னல் கலைந்து தலைமுடிகள் கன்னாபின்னாவென்று கிடக்க, உடையெல்லாம் கசங்கி, தகப்பன் இழுத்த இழுப்பிற்கு அவர்கள் பின்னே சென்று கொண்டிருந்தாள் மினி.  

     தொலைவில் இருந்து பார்க்கும் போது தெரியவில்லை என்றாலும், அவள் தோற்றத்தை வைத்து அவளை அடித்து இழுத்துச் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான், மனது வலித்தது. என்ன நடந்திருக்கும் என்பதை யூகிப்பதற்கு பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லையே.

     மினியின் பிடிவாதத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வதனி தன் பெரியப்பாவிடம் வற்றி வைத்திருப்பாள். அதைப் பிடித்துக்கொண்டு வந்த கிராமத்து காட்டான் பூப்போன்ற பெண்ணவளை அடித்து இழுத்துச் செல்கிறார் என்பது புரிந்தது. 

     எந்தத் தகப்பனுக்கும் தன் பெண்ணை அவளை விட பத்து வயது அதிகமான ஒருவனுக்கு அதுவும் இரண்டாம் தாரமாக கொடுக்க மனம் வராது. இந்த அழகில் வதனிக்கும் இவனுக்கும் இருக்கும் விட்டகுறை தொட்ட குறை உறவைப் பற்றியும் தெரிந்த அவருக்கு, மகளின் காதலை ஆதரிக்க முடியாது தான். அதற்காக இத்தனை தூரம் காயப்படுத்த வேண்டுமா என்று கோபம் வந்தது.

     கீழிறங்கிச் சென்று மினியைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றினாலும், பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டால் மினியின் மனதில் தன்னைப் பற்றி தவறான மதிப்பு வர வாய்ப்பிருக்கிறது. அது அவளுக்கும் அவளுடைய நல்ல எதிர்காலத்திற்கும் நல்லது என்று பால்கனி சுவரில் கரங்களை வைத்து தன் கோபம் மொத்தத்தையும் அழுத்தமான பிடியில் காண்பித்தான்.

     இளவரசனும், அன்பும் மினியை ஜீவனின் இல்லம் தான் அழைத்து வந்திருந்தனர். அன்றைய இரவில் மினியையும் அழைத்துக்கொண்டு இரயில் மூலம் ஊர் திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     யானைக் காலிடை சிக்கிய மலராக வந்திருந்த மினியைப் பார்த்ததும் ஜீவனின் கண்கள் மனைவியைக் கோபமாக முறைத்தது. அவளும் இப்படி ஒரு நிலை வரும் என்று நினைத்திருக்கவில்லை தான்.

     “என்ன பெரியப்பா இது“ என்றபடி மினி அருகே அவள் செல்ல, முகத்தைத் திருப்பிக்கொண்டு பாரியைத் தூக்கியபடி அறைக்குள் சென்றாள் அவள்.

     “எகத்தாளத்தைப் பார்த்தியா கழுதைக்கு. எட்டி மிதிச்சா ஏன்னு கேட்க ஆள் இல்லாத கழுதை அடுத்த வீட்டில் இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுதாங்க. இன்னும் நாலு போடு சேர்த்து போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். வீட்டுக்குப் போனதும் இருக்கு அவளுக்கு“ என்றபடி சொம்பு நிறைய தண்ணீர் குடித்து தன் கோபத்தை ஆற்றினார் இளவரசன்.

     “அந்த ஆளைப் பார்த்தேன் வதனி, நல்லா வாட்டசாட்டமா தான் இருக்கான். அதனால் தான் இவ புத்தி ஊர் மேயப் போய் இருக்கு. இன்னைக்கு சாத்தின சாத்துக்கு பொன்னம்போல் வீட்டுக்குள்ள அடங்கிக் கிடப்பா. காலாகாலத்தில் கைக்கு அடக்கமான எவனையாவது பாத்து கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டா கழுதை ஒளியும்“ சொந்தத் தகப்பன் தன்னை விடுத்து தங்கைக்கு கொடுக்கும் மதிப்பினைத் தாங்கிக்கொள்ள முடியாத கடுப்பை இப்படித் தீர்த்துக்கொண்டான் மினியின் அண்ணன் அன்பு.

     “என்னப்பா இப்படிச் சொல்ற அவளோட படிப்பு என்ன ஆவது“ ஜீவனுக்கு மனது கேட்கவில்லை. “ஆமா படிச்சுக்கிழிச்சு ஜில்லாவுக்கு கலெக்ட்டராவா ஆகப்போறா. மெத்தப் படிச்ச மேதாவி மாதிரி ஓவரா வாய் பேசுவா. அவளுக்கு ஆப்பு வைக்க சரியான நேரம் பார்த்து காத்துக்கிடந்தேன். 

     அக்கா மூலமா அதுக்கான வாய்ப்பு கிடைச்சது. இனிமேல் அப்பாவுக்கும் எனக்கும் அடங்கி அவ பாட்டுக்கு கிடப்பா. அது தான் எல்லோருக்கும் நல்லது“ வீராப்பாய் பேசினான் அந்த கிராமத்து ஆண்மகன்.

     இதற்கும் சேர்த்து ஜீவன் மனைவியை தான் முறைத்து வைத்தான். பாரியைப் பிடுங்காத குறையாக வாங்கி வந்து வதனியிடம் கொடுத்த அன்பு, அருமைத் தங்கையை உணவு கூட உண்ணவிடவில்லை. மினி மட்டும் அல்ல சாணக்கியனுக்குக் கூட உணவு இறங்கவில்லை.

     “அந்தப் பொண்ணு பாவம் டா. உன்மேல் ஆசை வைச்ச பாவத்துக்கு இன்னும் என்னென்ன அனுபவிக்கப்போறாளோ தெரியல“ ஆரம்பித்த தந்தையைக் கண்டுகொள்ளாமல் செல்லப் பார்த்தவனைத் தடுத்தது அரசனின் குரல். 

     “சதாசர்வ காலமும் சிவபெருமானைக் கும்பிடும் பரமபக்தன் ஒருத்தன் அந்த வருஷம் விவசாயம் பொய்த்துப் போனதால் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டானாம். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு கூட சாப்பாடு கொடுத்த சிவபெருமானின் மனதை தன் பக்தியால் குளிர்வித்த பக்தன் சிரமப்படுவதை தாங்கிக்க முடியாத பார்வதி தேவி வழக்கமா அவன் போற பாதையில் ஒரு பொன் மூட்டையைப் போட்டாங்களாம். அன்னைக்குன்னு பார்த்து வழக்கமாகத் தான் போகும் அந்தப் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு நடந்தால் என்னன்னு தோணுச்சாம் அந்த மனுஷனுக்கு. 

     அது மாதிரி தான் டா உன்னோட நிலை. கடவுள் உன்மேல் இரக்கப்பட்டு உனக்காக கொடுத்த பொக்கிஷம் தான் மினி. அவளை இழந்துட்ட, உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது“ என்றுவிட்டு தன் அறைக்குள் சென்றார்.

      சாணக்கியனுக்கும் மினியின் அருமை புரியத்தான் செய்தது. மனதில் பச்சை இரணமாக இருக்கும் வடுவை மீறி அவளை நோக்கிச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். கடவுளின் கருணைப் பார்வை அவன் மேல் விழுந்ததோ இல்லை மினியின் மீது விழுந்ததோ, சாணக்கியனின் தவிப்புகள் யாவும் முற்றுப்பெரும் நாளும் வந்து சேர்ந்தது.

 

 


Leave a comment


Comments


Related Post