இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 22-05-2024

Total Views: 21156

இதயம் 28

     பால்கனியில் நின்று நிலவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சாணக்கியனை தன் வீட்டில் இருந்து கவனித்த பிரியா, மனம் கேளாமல் தானாக வந்து அவர்கள் வீட்டில் நடந்ததை சொல்லி முடித்திருந்தாள். 

     தெரியாதவர்கள் வீடு என்பதால் அமைதியாகத் தான் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து இருக்கிறார்கள் இளவரசனும், அன்புவும். என்ன பேசினாலும் பிடி கொடுக்காமல் இருந்த மினி, ஒரு கட்டத்தில் சாணக்கியனைப் பற்றி பேச்சு வார்த்தை வந்து, வதனியின் விஷயத்தில் அன்பு அவனைத் தவறாகப் பேச, அதைத் கேட்டுவிட்டு அமைதியாக இருக்க முடியாமல் எதிர்த்து பேசி இருக்கிறாள்.

     அந்தக் கோபத்தில் தான் அன்பு அவளைக் கை நீட்டி இருக்கிறான் என்பது புரிய, ‘உனக்காக ஒரு இலையைக் கூட கிள்ளிப்போடாத எனக்காக, உன்னுடைய சொந்தக் குடும்பத்தை எதுக்காக பகைச்சுக்கிட்ட மினி‘ தவியாய் தவித்தான் சாணக்கியன். கடைசியாய் அவளைப் பார்த்த அலங்கோல நிலை கண் முன் வந்து இம்சித்தது.

     மினியை அழைத்துக்கொண்டு சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இழுத்துக்கொண்டு சொந்த ஊர் சென்றிருந்தனர் இளவரசனும் அன்புவும். அவர்கள் சென்றபின்னர் தன்னிடம் பேச வந்த வதனியைத் தவிர்த்துவிட்டு மகன்களுடன் அறைக்குள் தஞ்சம் அடைந்தான் ஜீவன்.

     யாருக்கும் காத்திருக்காமல் நாள்கள் நகர்ந்து ஒரு வாரம் கடந்து போயிருந்தது. சாணக்கிய னின் கல்மனதைக் கூட பலமாக ஆட்டம் காண வைத்திருந்தாள் மினி. நடந்ததாலும், படுத்தாலும் அவனுக்கு அவள் நினைவு தான். நினைவோடு இருக்கும் போது கண்முன் வந்து அழுதாள். உறங்குகையில் கனவில் வந்து சிரித்தாள். 

     இரவு வானில் நிலாவைப் பார்க்கும் போது, “சந்தோஷமோ துக்கமோ அதை நிலாகிட்ட தான் பகிர்ந்துக்குவேன். என்னவோ அதில் ஒரு ஆத்ம திருப்தி. என்னைப் பார்த்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுது தானே“ என்றோ ஒருநாள் மினி சொல்லி சிரித்தது நினைவு வர குளிர்ச்சியைக் கொடுக்கும் நிலவு கூட வெப்பத்தை தான் வாறி இறைத்து அவனுக்கு.

     சதுரங்கப் பலகையைப் பார்க்கும் போது, “சதுரங்கத்தில் மட்டும் இல்லை நிஜத்தில் கூட ஒரு ராஜாவுக்கு அவனுடைய ராஜ்ஜியத்துக்கு அடுத்து முக்கியமானது ராணி தான். ராணி இல்லாமல் ராஜாவுக்கு பாதுகாப்பும் கிடையாது, மதிப்பும் கிடையாது. 

     ராஜா கொஞ்சம் இடம் கொடுத்தால் கூட ராணி அவர்பக்கம் வருவதற்குத் தயாரா இருக்காங்க. ராஜா ஒத்துப்பாரா?“ அவள் கேட்தும், அதற்குப் பதிலாகத் தான் முறைத்ததும் நினைவு வர, இப்போது அதை நினைத்து புன்னகைக்கத் தோன்றியது சாணக்கியனுக்கு. 

     “எனக்குப் பச்சைக்கலர் ரொம்பப் பிடிக்கும், கடவுள் ராமர் பிடிக்கும், கோழிக்குஞ்சு பிடிக்கும்“ பல நேரங்களில் பலவிதத்தில் அவள் சொன்னது நினைவு வந்து சாணக்கியனை நிம்மதியாக உறங்கவிடாமல் பார்த்துக்கொண்டது. 

     பார்க்கும் எதிலும் அவனுக்கு அவள் நினைவு தான். சுருக்கமாகச் சொல்லப்போனால் சாணக்கியனை உள்ளும் புறமும் நன்றாக ஆட்டி வைத்தாள். அவள் நினைவுகள் கொடுக்கும் தொல்லை போதாது என்று அவளைப் பற்றி பேசுவதற்காக அவளின் அத்தான் ஜீவன் ஒரு அமைதியான மாலை நேரம் தைரியமாக சதுரங்க இல்லம் வந்திருந்தான். 

      வழக்கம் போல் வளர்ப்பு பிள்ளைகளாக தான் கருதும் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொட்டிருந்தான் சாணக்கியன். முன்பானால் வீடு தேடி வந்த விரோதியைக் கண்டும் காணாமல் தன் வேலையைப் பார்த்து போயிருப்பான். இப்போது மினியைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்கிற ஆர்வத்தோடு ஜீவனை வீட்டிற்குள் வருமாறு தலையசைத்தான்.

     ஆசையாய் உள்ளே வந்தான் ஜீவன். அவன் கண்கள் நண்பன் பார்த்து பார்த்துக் கட்டி இருக்கும் கனவு இல்லத்தை ஆசையாய் வருடியது. சின்னதாய் செருமி அவன் கவனத்தை தன்பக்கம் கொண்டு வந்த சாணக்கியன் வந்த விஷயத்தை ஜீவன் சொல்வதற்காக காத்திருந்தான்.

     “மினிக்கு இன்னும் நாலு நாளில் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க. படிக்கிற பொண்ணு படிப்பை நிப்பாட்டி அடிச்சு இழுத்துட்டுப் போனதையே என்னால் தாங்கிக்க முடியல. இந்த அழகில் அவங்க பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பார்த்தால் வாயில் நல்லா வருது. 

     கல்யாணத்துக்கு அப்புறம் மினியைப் படிக்க வைக்கக் கேட்டு வதனி எவ்வளவோ பேசிப்பார்த்தா. யாரும் கண்டுக்கல, பிள்ளையைப் பெத்துப்போட்டு அதுகளை வளர்க்க இந்தப் படிப்பு போதும் னு சொல்லிட்டான் அந்தக் காட்டான்.

     அவன் இருக்கும் இருப்புக்கு மினி கேட்கிது அவனுக்கு. இங்க இருந்து போனதுக்கு அப்புறம் மினி ஒரு வாய் கூடசாப்பிடல. எவ்வளவோ கட்டாயப்படுத்தி பார்த்து இருக்காங்க, கேட்கல. இரண்டு நாளா ஹாஸ்பிடலில் இருக்கா“ கரையானை விட மோசமாக தன் மனதை அரித்த நடப்பு நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லிவிட்டு சாணக்கியனின் முகத்தைப் பார்த்தான் ஜீவன்.

     அவன் நினைத்தது போலவே எதிர்நின்றவன் முகத்தில் மாற்றம் வந்தது. அந்த உணர்வுக்குப் பெயர் கோபமா, பரிதாபமா, காதலா என்று தெரியாமல் போனாலும் ஏதோ ஒரு வகையில் மினி நண்பனைப் பாதித்து இருக்கிறாள் என்பது புரிந்தது ஜீவனுக்கு. அந்த வகையில் அவனுக்குப் பேரானந்தம் தான்.     

     “மினியோட கல்யாணத்தை நிறுத்தணும்“ பரிதவிப்புடன் சொன்னான் ஜீவன். “அதை அவளே செய்வா“ அழுத்தமாகச் சொன்ன சாணக்கியன் வேலையைத் தொடர்ந்தான்.

     “அவளோட அப்பா அண்ணனைப் பற்றி உனக்குத் தெரியாது. மிரட்டியாவது அவளைக் கல்யாணம் பண்ணிக்க வைச்சிடுவாங்க“ ஜீவனின் குரலில் பயம் எட்டிப்பார்த்தது.

     “இது அவளோட வாழ்க்கை. அவளுக்குப் பிடிச்சது வேண்டும் என்றால் அவ தான் போராடணும்“ எங்கோ பார்த்தபடி சொன்னான். 

     “உனக்குப் பிடிச்சதுக்காக நீ போராட மாட்டியா சாணக்கியா“ ஆதங்கமாக வந்தது ஜீவனின் வார்த்தைகள்.

     “உனக்குப் பிடிச்சவங்களுக்காக நீ எத்தனை செய்த. தினம் தினம் எத்தனை அவமானங்களை சகிச்சுக்கட்ட. அதையெல்லாம் மினிக்காக செய்யணும் என்று எனக்குத் தோணலையே. மினி மேல் எனக்கு அன்பு இருக்கு, அக்கறை இருக்கு. காதல் இருக்கான்னு கேட்டா கஷ்டம் தான். எனக்குள்ள காதல் வரணும் என்று எதிர்பார்ப்பது செத்தபிணத்துக்கு உயிர் கொடுப்பது மாதிரி, உன் மச்சினிக்கு நல்லதை எடுத்துச் சொல்லி, அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடு“ மனதில் வந்த சலனத்தை திறமையாக மறைத்துவிட்டான்.

     “உன்னை விட நல்ல வரனுக்கு நான் எங்க போவேன் பாகு. கட்டாயப்படுத்துறேன்னு நினைக்காம கடைசி முறையா நான் சொல்வதைக் கேளு. காதல் காலத்துக்கும் ஒரு வழிப்பாதையா மட்டுமே இருப்பதில்லை. கரடு முரடான காட்டில் கூட தனக்கென்று நல்ல வழியை ஏற்படுத்திக்கொள்ளும் திறன் காதலுக்கு இருக்கு. 

     மினியோட காதலை நீ ஏத்துக்கோ. அவளோட காதல் உனக்குள்ளும் காதலை உண்டாக்கும். காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்“ சொன்னது ஜீவன்.

     “ஒருவேளை எதுவும் சரியாகலன்னா“ சந்தேகம் தீரவில்லை அடிபட்டவனுக்கு. “மருந்து குடிச்சா நோய் சரியாகிடும் என்பது காலாகாலமா இருக்கும் நம்பிக்கை. அதை நம்பாமல் சந்தேகத்தோடு பார்த்துக்கிட்டு மட்டும் இருப்பதால் எதுவும் மாறப் போறதில்லை. குடிச்சுப் பார்த்தா தானே தெரியும். நல்லதா கெட்டதான்னு“ இலைமறையாய் ஜீவன் பேச, “உடம்பில் இருக்கும் நோயோட அளவைப் பொறுத்து தானே மருந்தால் அதை சரிசெய்ய முடியுமா முடியாதான்னு தெரியும். ஆறாத ரணமா இருந்தா மருந்து கொடுப்பதும் வீண் தானே. 

     அந்த மருந்தை தேவைப்படும் வேற யாருக்காவது கொடுத்தால் அந்த நபருக்கு நல்லது நடக்கும். மருந்துக்கும் கௌரவம் கிடைக்கும்“ தானும் இலைமறையாகவே பதில் சொன்னான் சாணக்கியன்.

     “என்னால் முடிந்த அளவு போராடிட்டேன். நிஜமாவே இதுக்கு மேல் என்ன செய்யுறதுன்னு எனக்குத் தெரியல. இனி மினியோட தலைவிதி எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும்“ என்றுவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த மினியின் திருமணப் பத்திரிக்கையை அங்கே வைத்துவிட்டுச் சென்றான் ஜீவன்.  

     அவன் செல்வதற்காகவே காத்திருந்தது போல் பத்திரிக்கையைக் கையில் எடுத்தவன் அதில் இருந்த மினியின் பெயரை மயிலிறகிலும் மென்மையாக வருடிப் பார்த்தான். 

     தனக்காக அவள் தன் சொந்தக் குடும்பத்தையே எதிர்த்து நின்ற நேரத்திலேயே சாணக்கியனின் மனம் அவள் காலடியில் மண்டியிட்டுவிட்டது. கடந்த கால கசடுகள் எல்லாவற்றையும் மறந்து, இனி மினி தான் எல்லாம் என்று சம்சார சாகரத்தில் இறங்கி முத்துக்குளிப்பதற்கு அவனுக்கு மினியின் மீது தங்குதடையற்ற நம்பிக்கை தேவைப்பட்டது. அப்படியான நம்பிக்கை உருவாக சின்னப் பிடிப்பு வேண்டுமே. அந்தப் பிடிப்பாக அவன் நினைப்பது இந்தத் திருமண ஏற்பாட்டைத் தான்.

     “இப்ப நீ கஷ்டமான நிலையில் இருக்கன்னு புரியுது. அங்க இருந்து நீ எனக்கே எனக்காக போராடி வந்திட்டா, உன்னோட காதல் என்னோட கடைசி காலம் வரை எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கும் என்று நம்பி கண்டிப்பா உன்னை ஏத்துக்கிறேன்.

     உன்மேல் காதல் வருமா தெரியாது. ஆனால் உன்னோட காதல் நானாகிப் போனதில் நீ வருத்தப்படுற அளவு கண்டிப்பா நடந்துக்க மாட்டேன். இனி முடிவு உன் கையில்“ தன்னோடு நினைத்துக்கொண்டான் சாணக்கியன்.     

     இங்கே மினியின் இல்லத்தில் முந்தைய நாள் இரவு தந்தை விஷபாட்டில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததை நினைத்துப் பார்த்தாள் அவள். அப்பா எப்படியும் தற்கொலை செய்து கொள்ளும் ரகம் அல்ல என்று உறுதியாகத் தெரிந்தாலும் இந்த திருமணத்தை மறுத்தால் இனி ஜென்மத்துக்கும் பிறந்தவீடு என்ற ஒன்று தனக்கு இல்லாமலே போய்விடுமே என்பது தான் அவளின் தயக்கமாக இருந்தது.

     “சாணக்கியன் இப்ப வரை உன்னோட காதலை ஏத்துக்கல, இனியும் ஏத்துப்பாரா தெரியாது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையா உன் மேல் கொஞ்சமும் அக்கறை இல்லாத மனிதனை நம்பி உன் அப்பா அண்ணனைப் பகைத்துக்கொள்ளாதே“ தாய் மணிமேகலை மற்றும் தமக்கை வதனி கொடுத்த அறிவுரைகள் அவள் தலையைச் சுற்றி வந்தது. கொஞ்சம் தடுமாறினாலும் தன் காதல் தோற்றுப்போய்விடும் என்பதால் அலைபாயும் மனதை இழுத்துப் பிடித்து தன்னோடு கட்டிக்கொண்டு, நன்றாக யோசித்துப் பார்த்தாள்.

     அந்த நிமிடத்தில் அவள் இளவரசனின் மகளாகவோ, சாணக்கியனின் காதலியாகவோ இல்லாமல் ஒரு பெண்ணாக யோசித்தாள். பெற்றெடுத்தவர் என்பதால் கட்டாயப்படுத்தி தன்னை ஒருவனிடம் ஒப்படைக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. 

     என் காதலை நிராகரிக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அதற்காக இப்படி அவசர அவசரமாக என் வாழ்வை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. இப்போது நான் அவருக்கு கட்டுப்பட்டால் வாழ்க்கை முழுக்க கட்டுப்பட நேரிடலாம். 

     இந்தத் திருமணம் நின்றாக வேண்டும், என் காதலுக்காக அல்ல, எனக்காக, என் மரியாதைக்காக நான் இதை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் மணமேடைக்கு அழைத்து வரும் போது, சொந்த பந்தம் அத்தனை பேர் மத்தியில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதைப் போட்டு உடைத்தாள்.

     அவள் நினைத்தது தான் நடந்தது. அப்பா அடித்தார், அண்ணன் உதைத்தான். மாப்பிள்ளை வீட்டார்கள் அவள் நடத்தையைத் தரக்குறைவாகப் பேசினார்கள். வசவுகள், அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு கல்லைப் போல் நின்றாள். 

     கசையடிக்குப் பின்னர் கிடைக்கும் பொற்காசுகளைப் போல், இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவள் ஆசைப்பட்டது போல் திருமணம் நின்றது. அவளுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என இளவரசன் பந்தத்தை உடைக்க, அதற்கும் அசையாமல் நின்றவள் திருமணத்திற்காக அவர் போட்ட நகைகள் அனைத்தையும் கழட்டி தன் தாயின் கையில் வைத்துவிட்டு, “நான் கண்டிப்பா நல்லா இருப்பேன்“ என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டு நகரப்பார்த்தாள்.

     “நாங்க இல்லாமல் நீ பிச்சை தான் எடுக்கணும்“ கத்தினான் அன்பே இல்லாத அண்ணன் அன்பு.

     “பிச்சை எடுத்தாவது என்னோட படிப்பைத் தொடருவேன். அதுக்குப் பிறகு அந்தப் படிப்பு என்னைக் காப்பாற்றும்“ என்றவள் அந்த மண்டபத்தை விட்டு வெளியேற அவளுக்காக அங்கே காத்திருந்தான் ஒருவன்.

     “அத்தான்“ என்கிற அழைப்போடு தன் முன் நின்றிருந்த ஜீவனை மினி ஆராய்ச்சியாகப் பார்க்க, மச்சினியின் கண்களில் பழைய மரியாதை திரும்பி இருப்பதைப் பார்த்தவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது.

      தன் மனதைப் புரிந்து கொண்டு தனக்குப் பிடிக்காத திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளைவீடு வரை சென்று பேசிப்பார்த்த அத்தான் மீது இருந்த பழைய கசப்புகளை எல்லாம் தூக்கி எறிந்திருந்தாள் மினி. 

     சாணக்கியனே அனைத்தையும் மறந்து கடந்து வந்த பின்னால், தான் கோபத்தைப் பிடித்துக்கொண்டு இருப்பதில் என்ன பிரயோஜனம் என்று புரிந்து கொண்டிருந்தாள்.

     “நான் இருக்கும் போது உன்னோட படிப்புக்காக நீ பிச்சை எடுக்க வேண்டியது இல்லை. உன்னை நான் படிக்க வைக்கிறேன்“ என்றான். 

     அவள் புரியாமல் பார்க்க, “என் மனைவியோட தங்கை என்கிற முறையிலோ இல்லை என் நண்பனோட வருங்கால மனைவி என்கிற முறையிலோ இல்லாம. முழுக்க முழுக்க மினி என்கிற இந்த சின்னப்பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் இந்த முடிவு எடுத்தேன். என்னை நம்பி என்கூட வாடா“ என்று கார் கதவைத் திறந்துவிட்டான்.

     தன் நல்ல எதிர்காலத்திற்கான முதல் படியை எடுத்து வைத்தாள் மினி. நடந்த விஷயங்கள் அரசன் மூலம் சாணக்கியனுக்கு வந்து சேர்ந்த கணத்தில் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாத சின்னப்புன்னகை ஒன்று அவன் இதழ்களுக்குள் உதயமானது.

     மினியை எப்படியும் எங்கள் வீட்டிற்குத் தான் ஜீவன் அழைத்துச் சென்றிருப்பான். அவள் நல்ல மனநிலையில் இருக்கும் போது அவளுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லி அவளை நம் வழிக்குக் கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி இல்லம் திரும்பிய வதனிக்கு பெரிய ஏமாற்றம் தான். 

     மினியை அவள் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்ட ஜீவன் அவள் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கையையும் சரியாகச் செய்திருந்தான். இளவரசன், அன்பு மட்டும் இல்லை வதனியால் கூட அவளைப் பார்க்க முடியாதபடி ஏற்பாடு பலமாக இருந்தது. 

     நாயகன் நாயகியைப் பார்க்க முடிவெடுத்துவிட்டால் எதிரே இருக்கும் தடைகள் யாவும் எடையில்லாத காதிகம் போல தானே. மினி கல்லூரிக்கு வர ஆரம்பித்த இரண்டாம் நாள் அவளைப் பார்ப்பதற்காக விடுதியின் வரவேற்பில் காத்திருந்தான் சாணக்கியன்.

     எதிர்பாராதவனை எதிர்பாரா இடத்தில் எதிர்பாரா நேரம் கண்டதில் மினியின் புருவங்கள் வில்லாய் வளைய, சாணக்கியன் அவளைப் பார்த்து நிறைவாய் புன்னகைத்தான். தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கைகளில் கிள்ளிப் பார்த்தாள் மினி. கற்பனையில் மட்டுமே நடக்கும் விஷயங்கள் யாவும் நிஜத்தில் நடக்கவும் சிறு பெண்ணளவால் நம்ப முடியவில்லை.

     மினி நின்ற இடத்தில் அப்படியே நிற்க, தான் அவளை நோக்கி காலடி எடுத்து வைத்து நடந்தான் சாணக்கியன். நொடிக்கு நொடி ஆச்சர்யத்தை அள்ளித் தெளித்துக்கொண்டே இருந்தது அவன் நடவடிக்கை யாவும்.

     “என்ன இங்க“ மினியின் குரல் அவள் தொண்டையை விட்டு வெளியே வரவில்லை. “உன்னைப் பார்க்கத் தான்“ வார்த்தைகளால் அவள் உயிர் வரை பூப்பூக்க வைத்தான்.

     உடலெங்கும் பாயும் இன்ப அதிர்வு தாங்க முடியாமல் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள் அவள். அவளால் உண்டான இடைவெளியை தன் கால்களால் சமன் செய்தவன் முத்து முரல்கள் மின்ன புன்னகைக்க மினிக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

     “சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து இருக்க. அதுக்காக உனக்கு வாழ்த்து சொல்லிட்டுப் போக வந்தேன்“ இதழ்கள் நிறைந்த புன்னகையோடு சொன்னான்.

     கருவறையில் சர்வ அலங்காரத்தோடு தெய்வீகத்தின் உச்சத்தில் இருக்கும் அம்மனை மெய்மறந்து இரசிக்கும் பக்தனைப் போல் மெய்யுருகி சாணக்கியனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மினி.

     “ஹாஸ்டல் எல்லாம் வசதியா இருக்கா“ பேச்சை மாற்றினான். அதில் நடப்பிற்கு வந்தவள், “சின்னச்சின்ன குறைகள் இருக்கத் தான் செய்யுது. ஆனால், பொண்ணுங்க கூட இருக்கும் போது அது பெருசாத் தெரியுறது இல்லை“ தங்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் தோழிளைப் பார்த்தபடி சொன்னாள் மினி.

     “கஷ்டமா இருந்தா இங்க இருந்து சதுரங்க இல்லம் வந்திடலாம். உனக்காக அது எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்“ உள்ளுக்குள் தோன்றும் வெட்கம் மொத்தத்தையும் வார்த்தைகளில் வடித்துக் காட்டும் வித்தையை சாணக்கியனிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

     அவன் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் புரிந்தது அவளுக்கு. கனிவு என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாத கருங்கல் என்று ஊரார் சொன்ன கரடுமுரடான பலாப்பழம் ஒன்று கனிந்து, தனக்கே தனக்காய் தேனாய் தித்தித்தபடி நிற்க, மனமும் உடலும் லேசாகி பறவையாய் வானில் பறப்பது போன்ற பிரம்மை அவளுக்கு.

 



Leave a comment


Comments


Related Post