இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -40 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-05-2024

Total Views: 17556

வெளியே நந்தன் குடும்பம், நிலா குடும்பம் என மொத்தப் பேரும் நின்றிருந்தனர்.

வேகமாக ஓடி வந்தவள் நந்தன் செய்த செயலில் தலையில் கை வைத்து நின்று விட்டாள்.

பயத்தில் முகம் முத்து முத்தாக வியர்த்திருக்க, ஓடி வந்ததில் மூச்சு வேறு வாங்கியது.

நந்தன் இருந்த கோலமும், நிலா வாங்கிய மூச்சும் மற்றவர்களிடம் தப்பாக காட்டியது என்னவோ உண்மை, ஆனால் குடும்ப நபர்கள் யாரும் அவர்களை தவறாக எண்ணவில்லை, நந்தன் சொல்லும் வரையிலும்.

நேற்று இருவரும் ஒன்றாக இருந்தது ராஜி, யுகி இருவரையும் தவிர்த்து யாருக்குமே தெரியாது.

நிலா குடும்பமே ஆகாது என சுற்றிக் கொண்டிருந்தவன் அவர்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கூட வரவில்லை. அப்படி இருந்தவன் இன்று மேல் சட்டை இல்லாமல் ஒரு வயதுப் பெண் இருக்கும் வீட்டில் நின்றால் வீட்டு ஆட்கள் தான் தன் பிள்ளைகளை நம்புவார்கள் வெளியாட்களுமா நம்புவார்கள்?

வெளியே பேச்சு சத்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர்களும், பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்தவர்கள். “என்ன நிச்சியத்துக்கு துணி எடுத்துட்டீங்களா? எவ்வளவு ஆச்சி, பொண்ணுக்கு சேலை எவ்வளவு, பரவாயில்லையே போனதும் வந்துட்டீங்க.” என கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் வந்து விட்டனர், அப்போது தான் நந்தன் கதவை திறந்தது.

அவனை யாருமே அங்கு எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென்று நந்தனைப் பார்த்ததும், ‘இவன் எப்படி இங்க?’ என்று தான் கேக்கத் தோன்றியது.

“நந்தா இங்க எப்போ வந்த?” என்று சாதாரணமாக கேக்க, அதற்குள் மூச்சு இரைக்க வந்து நின்றாள் நிலா.

பக்கத்து வீட்டினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன கொடுமை ராஜி இது? வயசு புள்ளய இப்படி தனியாவா விட்டுட்டு போவ.. இப்போ பாரு எந்த நிலைமையில வந்து நிற்குதுன்னு, ரெண்டு பேரும் பூட்டுன வீட்டுக்குள்ள தனியா இருந்துருக்காங்க என்ன என்ன நடந்துச்சோ..” என்றவருக்கு  நந்தனைப் பேச பயமாக இருந்தது. ஏதாவது சொல்லி உள்ளே தள்ளிவிட்டால் என்ன செய்வது என்றே அவனுக்கும் சேர்த்தி நிலாவைப் பேசினார்.

நந்தன் எதுமே சொல்லவில்லை. ‘நீ பேசு’ என்பது போல் அவரை பேச விட்டு வேடிக்கைப் பார்த்தான்.

“என்ன வார்த்தை பேசறடி நீ. மாங்கா புளிப்பா புளியங்கா புளிப்பான்னு வாய்க்கு வந்ததைப் பேசற, இவ தகுதி என்ன? என் பேரன் தகுதி என்ன? நந்தனை கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு கோடிஸ்வரப் பொண்ணுங்க லைன்ல நிற்கறாங்க, இந்த பரதேசியைப் போய் என் பேரன் தொடுவானா?” என சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் கிருஷ்ணம்மாள்.

“இன்னும் என்ன தகுதி வேணும்னு சொல்றிங்க அதான் பொண்ணு கொடுக்கப் போறிங்கள, அதான் தொட்டுப் பார்க்கலாம்னு நினைச்சிட்டான் போல..” என ஒருத்தியும்,

“அப்புறம் என்ன உன் பேரன் சட்டையை கழட்டி வெச்சிட்டு கேஸ் பைலை படிச்சானோ, அப்படி படிச்சாக்கூட உங்க வீடு இருக்கும் போது, வயசுப் பொண்ணு தனியா இருக்கற வீட்டுல படிச்சா தான் கேஸ் புரியும்ன்னு இங்க வந்துட்டாங்க போல..” என கழுத்தை தோளோடு வெட்டி திருப்பினாள் இன்னொருத்தி.

நிலாவிற்கு பகிரென்றது.

“நீயே இந்த கேடுகெட்ட சிறுக்கிங்க கிட்ட சொல்லு ராசா அப்போதான் இவள்ங்களோட ஊத்த வாயி மூடும். யாரை யாருக்கூட சேர்த்தி வெச்சிப் பேசறாளுங்க...” என நந்தனின் தோளை  கிருஷ்ணம்மாள் உலுக்கினார்.

அவருக்கு அவர் கவலை, நிலாவை தப்பா பேசுவதைப் பற்றி அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.‘இவளுங்க பேசி பேசியே என்னோட பேரனோட கோத்து விட்டுட்டுப் போய்டுவாளுங்க போலையே.’ என பயமாக இருந்தது.

நந்தனுக்காவது அவர் விருப்பப்பட்ட இடத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று ஆசை அதிலும் மண்ணை அள்ளிப் போடுகிறார்களே.

யுகி வேலை விஷயமாக இரண்டு இடங்களுக்கு போக வேண்டியிருந்ததால் இந்த பிரச்சனை அவனுக்கு தெரியவில்லை, இல்லை என்றால் நந்தனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பான்.

ராஜிக்கோ என்றுமே வீட்டிற்கு வராத நந்தன் இன்று வந்திருக்கிறானே என சந்தோசப்படுவதா? இல்லை தன் மகளின் நிலையை நினைத்து வேதனைப் படுவதா? என தெரியாமல் அழுதார். மணிமேகலை ஆதரவாக ராஜியின் தோளைத் தொட்டார்.

“அவங்க சொல்ற மாதிரி எதுவும் இருக்காது ராஜி பயப்படாத.”

“பயப்படாம எப்படி அண்ணி இருக்கறது இந்த உலகம் என் புள்ளைய வாழ விடுமா... நான் பட்ட கஷ்டத்தை திரும்ப என் மகளும் படனும் போல...” என சொல்லிக் கொண்டிருக்க,

“ஆமா நாங்க தப்பு தான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டு அனைவரின் தலையிலும் இடியை இறக்கி விட்டு சாதாரணமாக நின்றான்.

நந்தனின் வார்த்தைகள் புரியவே  அனைவருக்கும் சிறிது நேரமாகியது. புரிந்ததும் அவனை எதிர்த்து சண்டை போடக் கூடப் பலம் இல்லாமல் நிலா உடைந்து போய் கதறி விட்டாள். கண்களில் கண்ணீர் அருவிப் போல் கொட்டியது. காலை மடக்கி தரையில் அமர்ந்து அழுதாள்.



9 மணிக்கு இன்னொரு ud போடறேன் சீக்கிரம் ஓடி வந்து படிங்க 


Leave a comment


Comments 2

  • A Aathi Sri
  • 1 month ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    டேய் நந்தா என்னடா


    Related Post