இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 33 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 23-05-2024

Total Views: 11915

இதுவரை தன்னை அவமதித்த அபிலாஷாவிற்கு அதற்கான தக்க பதிலடி தர வேண்டும் என்று மனதில் கருவிய முகில் ஏற்கனவே அபிநந்தன் வாயிலேயே ‘நானும் லாஷாவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கல’ என்று சொன்னதை கேட்டு உடைந்து போயிருந்தவளை இதழ் கடையில் வன்ம புன்னகை மிளிர பார்த்தான்.


“என்ன அபி! நான் சொல்றதை தான் நம்ப மாட்ட… உன் புருஷன் அவனே பேசின வீடியோ பார்த்தும் நம்ப மாட்டியா? இல்ல இது ஃபேக் வீடியோ மார்பிங் ஏதாவது பண்ணிருக்கேன்னு சொல்லப் போறீயா? ஒருவேளை உனக்கு அப்படி டவுட் இருந்தா இதை உன் நம்பருக்கு அனுப்பி இருக்கேன் நீயே செக் பண்ணிக்கோ…” எகத்தாளமாக பேசினான் முகில்.


அவன் பேசியது கூட அபி மனதை பாதிக்கவில்லை. ஆனால் நந்தன்… ‘தன்னுடைய நந்தனா இப்படி?’ இப்போது தான் அவளே உணர்கிறாள். 


ஆம். நந்தனை பார்த்த நிமிடம் தொட்டு மனதில் தோன்றிய காதலை மறைக்க இயலாது இவளே தான் அவனை தேடிப்போய் காதலை சொன்னாள். ஆனால் அவன் மறுப்பாக ஏதேதோ காரணங்களைச் சொல்ல எல்லாவற்றிற்கும் இவளே ஒவ்வொரு தீர்வினை சொல்லி ‘உனக்காக எத்தனை காலம் வேணும்னாலும் காத்திருப்பேன்.’ என்று இவள் தான் சொன்னாள்.


அதன் பின்னர் தன்னோடு நந்தன் பேசிய போது கூட குடும்பத்தை பற்றி மட்டுமே பொதுவாக பேசுவானே தவிர தன்னை பற்றி தங்களை பற்றி என்று தனிப்பட்ட முறையில் எதுவும் அவனாக பேசியது கிடையாதே… அப்போது எல்லாம் அதை மனதில் எண்ணி அவனின் கண்ணியம் என்று நினைத்து வியந்திருக்கிறாளே… அப்போ அதுவெல்லாம்?


அடுத்து வீட்டில் தன் திருமணம் குறித்து பிரச்சினை என்றபோது கூட ‘நீ என்னை காதலிப்பதை உன் வீட்டில் சொல்…’ என்று கூறினானே நம் காதல் விஷயம் என்று எங்கேயுமே குறிப்பிடவே இல்லையே.. திருமணம் முடிந்தும் கூட ஒவ்வொரு நொடியும் அபிநந்தன் தன்னை ரசித்திருக்கிறான். எப்போதும் இவள் மீது அக்கறையை மழை போல பொழிவித்து இருக்கிறான். ஆனால் காதல் என்ற வார்த்தை அவனிடம் இருந்து வந்ததே இல்லையே…


இவ்வளவு ஏன்… இருவரும் ஈருடல் ஓருயிர் என்று கலந்த தருணங்கள்… இல்லறத்தின் அர்த்தமான தாம்பத்தியத்தில் கூட தன் மனதை திறந்து தன்னை மறந்து இவள் தானே ‘ஐ லவ் யூ நந்து… நந்து ஐ லவ் யூ’ என்று எத்தனையோ முறை புலம்பி இருக்கிறாள். ஆனால் அவன் ஒரு நாள் கூட தன் இதழ் மலர்ந்து இத்தகைய வார்த்தைகளை கூறியதே இல்லையே…


‘எப்படி இது என் மூளைக்கு எட்டாமல் போனது? தொழில் விஷயத்தில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் எதிராளி எப்படிப்பட்டவர் ஆயினும் அவர்கள் விழி அசைவு கண்டே காய் நகர்த்தி இத்தனை காலம் தொழிலில் வெற்றி என்ற சொல்லை மட்டுமே அடைந்த அபிலாஷா எப்படி தன்னோடு வாழ்ந்தவன் தன் உயிரே அவன் தான் என்று இருந்தவன் தன்னை காதலிக்கவில்லை என்று அறியாமல் போனேன்?’ என்று தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டாள். 


“அப்போ நீங்க என்னை உண்மையிலேயே லவ் பண்ணலையா நந்தன்? உங்க ஈகோவை டச் பண்ற மாதிரி என் வீட்ல பேசினதும் என்னை கூட்டிட்டு போய் அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… அது காதல் இல்லையா? உங்க ஈகோ சேட்டிஸ்ஃபேக்ஷன் தானா? 


தாலி கட்டி கல்யாணம் ஆகிடுச்சு… வேற வழி இல்லாம தான் என்னோட வாழ்ந்திட்டு இருக்கீங்களா நந்து?” என்று மனதுக்குள் துடியாய் துடித்தாள் அபிலாஷா. 


இப்போது இருந்த மனநிலைக்கு வெடித்து கத்தி அழுது கதற வேண்டும் என்று இருந்தது அவளுக்கு. ஆனால் அலுவலகத்தில் இருக்கிறோம் என்பதை விட தன்னை இவ்வளவு தானா நீ? என்னும் விதமாக இளக்காரமாக பார்த்துக் கொண்டு இருந்த முகில் முன்பு தன் பலவீனமான கண்ணீரை காட்ட விருப்பம் இல்லை அபிலாஷாவிற்கு.


முயன்று முகத்தை அமைதியாக வைத்து கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் நக்கலாக சிரித்தவன், “என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டு பொண்ணு அபி… அந்த அக்கறையில சொல்றேன். உன் புருஷனை கைக்குள்ள வைச்சு வாழ்க்கையை காப்பாத்திக்க முயற்சி பண்ணு. ஏன் சொல்றேன்னா உன் புருஷன் உன்னை இதுவரை காதலிக்கவே இல்லனு உன்கிட்ட சொன்னா கூட பரவாயில்லை. ஆனா அவனோட ஆசைநாயகி அந்த டாக்டர் பொண்ணு அவ பெயர் என்ன? அவகிட்ட சொல்லிட்டு இருக்கான் பாரு.


எனக்கு என்னவோ அந்த டாக்டர் பொண்ணுக்கும் உன் புருஷனுக்கும் ஏற்கனவே ஏதாவது சம்திங் சம்திங் இருந்திருக்கும் போல… அதான் அவளுக்குனு ஏற்படுத்தி கொடுத்த வாழ்க்கையை வாழ முடியாம பிச்சு பிடுங்கிட்டு ஓடி வந்திருக்கா… இப்போ வந்து விட்ட குறை தொட்ட குறை னு உன் வாழ்க்கையை நாசம் பண்ணிட போறாங்க ரெண்டு பேரும் சேர்ந்து… பார்த்து இருந்துக்கோ அபி…” 


என்று எரியும் தீயில் எண்ணெய் வார்த்த திருப்தியில் அகன்றான் முகில். எச்சரிக்கையாக அவன் சொன்ன வார்த்தைகளில் அக்கறை துளியும் இல்லை.


அவன் சென்ற பிறகு உணர்வுகளை அடக்க கை விரல்களை மடக்கி தன்னை கட்டுப்படுத்த முயன்றாள் முடியவில்லை. தான் எப்படி தன் வாழ்வில் இப்படி ஒரு அஜாக்கிரதையாக இருந்தோம் என்று நினைக்க நினைக்க உள்ளம் கொதிகலன் போல் கொதிக்க அதன் விளைவாக கண்ணீர் வழிந்தது.


“ஏன் நந்து இப்படி பண்ணீங்க? உங்களுக்கு என் மேல விருப்பம் இல்லையா? அதை என்கிட்ட கூட சொல்லாம சந்தியாகிட்ட சொல்லிட்டு இருந்திருக்கீங்க..‌ அப்போ நான் அவ்வளவு தானா உங்களுக்கு?” என்று செல்ஃபோன் திரையில் அழகாய் சிரித்துக் கொண்டு நின்றவனை பார்த்து கேட்டாள். 


எல்லாம் சில நிமிடங்கள் தான்… மனதை அழுத்திய சோகம் கண்ணீராக கரைய ‘ஒரு வேளை முகில் சொன்னது எந்த அளவுக்கு உண்மையா இருக்கும்? நந்து இந்தளவுக்கு என்னை ஏமாத்துற ஆளா… இல்ல இதுல வேற ஏதாவது விஷயம் இருக்கலாம்.’ என்று அவன் மீது காதல் கொண்ட மனது அவனுக்காக பரிந்துரை செய்திட


‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ? பேசாம இதை நாம ப்ரதீப்கிட்ட சொல்லலாம்… அவன் நமக்கு இதுல இருந்து தெளிய உதவுவான்.’ என்று அலைபேசியை எடுத்தவள்


‘இல்ல வேண்டாம்… ப்ரதீப் இப்போ அச்சு கூட இருக்கான். அவனுக்கு தெரிஞ்சா அவளுக்கு தெரிய வாய்ப்பு இருக்கு. அச்சுவை அது பாதிக்கும். நாமளே இதை பத்தி யோசிக்கலாம். தேவைப்பட்டா ப்ரதீப்கிட்ட நேர்ல சொல்லலாம்.’ என்று முடிவு செய்து கொண்டாள்.


தன் நண்பனிடம் இது குறித்து பேசி நினைத்தவள் துளி கூட தன்னவனிடம் இதை பற்றி பேசி சரியான விளக்கம் கேட்டு பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கவே இல்லை‌. அது எத்தகைய தவறு என்று அவளும் உணரவே இல்லை.


தன் மனதை மாற்ற வேலையில் கவனத்தை செலுத்த முயல துளிகூட முடியாமல் போனது அவளால். வீட்டிற்கு செல்ல பார்வதி எப்போதும் போல அன்பான முகத்துடன் வரவேற்றார். அதில் இவள் இத்தனை நேரம் அடக்கிய உணர்வுகள் உடைபட சட்டென்று பார்வதியை கட்டிக் கொண்டு அழவே துவங்கி விட்டாள் அபிலாஷா.


“அபி… என்னடா என்ன ஆச்சு ஏன்மா அழற?” பதறிப் போய் பார்வதி விசாரிக்க அவர் தோளில் சாய்ந்தபடியே ஒன்றும் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்.


“அபி… ஏன்டா அழற… ஆஃபிஸ்ல எதுவும் பிரச்சனையா உடம்பு எதுவும் முடியலையா ம்மா? நான் நந்தாவை வரச்சொல்லவா?” என்று அவர் கேட்ட நொடி சட்டென்று அவரிடம் இருந்து விலகினாள் அபி.


“ஒ… ஒன்னும் இல்ல ம்மா… கொஞ்சம் வொர்க் ப்ரஷர் மனசு என்னவோ பாரமா இருந்தது. நீங்க அன்பா பேசவும் சட்டுனு அழுகை வந்திடுச்சு அவ்வளவு தான்.” என்று சமாளிக்க


“ம்ம்… இதுக்கு போய் இப்படி அழுதியா? என்ன பொண்ணுமா நீ? அது ஒன்னும் இல்ல… இன்னும் கொஞ்ச நாள்ல அச்சு வளைகாப்பு முடிஞ்சு இங்க வந்திடுவா அதுவரை அவ கூடவே இருங்கன்னு மாப்பிள்ளைக்கு நீ லீவ் கொடுத்திட்டு அவரோட வேலையையும் சேர்த்து நீ பார்க்குற இல்ல.. அதான் போல. மாப்பிள்ளையும் ஆஃபிஸ் வந்திட்டா உனக்கு கொஞ்சம் வேலை குறையும். சரி நீ போய் ப்ரஷ் ஆகுமா நான் உனக்கு டீ போட்டு தரேன். வீட்ல நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் சரியா..” என்று அவள் தலை கோதியபடி கூறி அனுப்பி வைத்தார் பார்வதி.


வேலை முடிந்து வந்த நந்தன் கிச்சனில் அன்னை மட்டும் இருப்பதை கவனித்து “எங்கம்மா உங்க செல்ல மருமகளை காணோம்? வீட்டுக்கு வந்தா உங்களை தொத்திக்கிட்டே இருப்பா இன்னைக்கு நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?” என்று கேலி செய்ய


“ம்ம்… ஒரு வீட்ல ஒத்துமையா இருக்கிற மாமியார் மருமகள் அமையிறது அந்த வீட்டோட வரம். ஆனா, இங்க அண்ணனும் தங்கையும் மாத்தி மாத்தி என்னையும் அபியையும் கண்ணு வைங்கடா… உங்க கண்ணுதான் அபிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு” என்று பார்வதி சொல்ல


“லாஷாக்கு என்னாச்சு ம்மா?” பதறினான் நந்தன்.


“ரூம்ல இருக்கா போய் பாரு..” என்று சொல்லி முடிக்கும் முன்பே அறை வாசலை எட்டி இருந்தான் அபிநந்தன்.


வந்தவனுக்கு முதுகு மட்டும் தெரியும் படி ஒருக்களித்து படுத்து இருக்க “லாஷா…” மொத்த காதலையும் குரலில் தேக்கி அழைத்தான் அபிநந்தன்.


ஏற்கனவே வந்த கண்ணீரை அவன் வரும் அரவம் கேட்டு துடைக்க முயன்றவளுக்கு அவனின் குரல் இன்னும் அழுகை வர வைத்தது.


“லாஷா என்னாச்சு மா உடம்பு சரியில்லை னு அம்மா சொன்னாங்க..” என்று அவளுக்கு முன்பு போய் முழங்காலிட்டு கேட்க வேகமாக எழுந்து அமர்ந்தவள்


“ஒன்னும் இல்ல நந்தன். வொர்க் டென்ஷன். தலைவலி அவ்வளவு தான்..” எங்கோ பார்த்து சொல்ல


“ம்ம்… நான் தைலம் தேச்சுவிடுறேன்.” என்றிட


“இல்ல இப்போ தான் தேய்ச்சேன். பரவாயில்ல நந்தன்.” பட்டும் படாமல் பதில் சொல்ல புரியாமல் பார்த்தான் அபிநந்தன்.


‘சரி உடம்பு சரியில்லை அதனால் தான் போல’ என்று நினைத்து, “ம்ம் சரி மா..” என்றவன் தன் தோள் பையை கழட்டி வைக்கும் போது அதிலிருந்து வழக்கம் போல வாங்கி வந்திருந்த பூவை எடுத்து நீட்ட வாங்காமல் அமர்ந்திருந்தவள்


“ஃப்ரிட்ஜில வைச்சிடுங்க நந்தன்.. முடிஞ்சா நாளைக்கு வைச்சுக்கிறேன். தலை பாரமா இருக்கு.” என்றவளை கண் சுருக்கி உறுத்து விழித்தான் அபிநந்தன்.



  • தொடரும்…



Leave a comment


Comments


Related Post