இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 24-05-2024

Total Views: 7485

காதலொன்று கண்டேன்!

தேடல்  24

அவனுக்காக..


யாதவ்வை கண்டவளின் முகம் பயத்தில் வெளிற அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே பாக்கெட்டில் கையை விட்ட படி நின்றிருந்தவனின் பார்வையில் அர்த்தம் சத்தியமாய் அவளுக்குப் புரியவில்லை.

பேய் முழி முழித்தவளுக்கோ தான் செய்த திருகுதாளங்கள் அவனுக்குத் தெரிந்து விட்டிருக்குமோ என்கின்ற பயம் வேறு.

"ஆமா அன்னிக்கி எதுக்கு நா அவனுக்கு காஃபி ஊத்தும் போது நீ குறுக்க பாஞ்ச..?" அதட்டலாய் கேட்டவனின் விழிகளும் அவளைத் துளைக்க தன்னை ஒருமையில் அழைத்ததற்கு அவன் மேல் கோபமும் எழாமல் இல்லை.

"உன்னத் தான் கேக்கறேன்..எதுக்காக அவனுக்காக நீ வந்த..?" முகத்தில் அறுவறுப்பைக் காட்டி பையனை தரமிறக்க இருந்த பயம் பறந்தோட எகிறியது,இவளுக்கு.

"சும்மா இருந்த மனுஷன் கிட்ட வம்பு பண்ணா அப்டி தான் பண்ணுவாங்க..அவரு பாரு தானும் தன்னோட வேலயும்னு இருக்காரு..அவரப் போய் டார்ச்சர் பண்ற மாதிரி பேசறீங்க..அது தான் குறுக்க வந்தேன்.." மூச்சு வாங்கிக் கொண்டு கத்தியவளின் செயலில் யாதவ் மட்டுமல்ல,அவனின் பின்னூடு வந்திருந்த தோழன் செழியனும் அதிர்ந்து தான் போனான்.

யாதவ்விடம் அவர்களே எகிறிக் கொண்டு வருவதில்லை.ஆனால்,இவள்..?

"ஏய் என்னடி..? விட்டா ரொம்ப எகிறிட்டே வர்ர..நா யாருன்னு தெரிஞ்சி தான் பேசறியா..? அஞ்சு நிமிஷம் போதும் உன்ன இந்த வேலைலை இருந்து தூக்க.." என்ற படி அலைபேசியை எடுக்க அசரவில்லை,அவள்.

நமக்கென்று வரும் போது அடைந்து கொள்ளும் ஆத்திரங்களும் ஆக்ரோஷங்களும் நேசிப்பவர்களுக்கென்று வரும் தருணங்களில் அணை கடப்பது பொதுவான நியதி அல்லவா..?

யாரோ ஒருவருக்காக அதிரடி அடங்கி நிற்பது காதல் என்றால்,அதே போல் யாரோ ஒருவருக்காக அமைதி அடாவடி ஆவதும் காதல் தானே.

எரிமலையின் சீற்றமும் ஆழியில் அடங்குகிறது. ஆழியின் ஆழத்தில் எரிமலை வெடிக்கிறது.
பார்ப்பதற்கு முரணாகத் தோன்றினாலும் இரண்டிலும் கண்ணுக்குத் தெரியாத ஒற்றுமை  இருக்கத் தானே செய்கிறது.
அது போல் தானே இந்தக் காதலால் உணர்வுகளால் ஏற்படும் உருமாற்றங்களும்.

"இங்க பாருங்க..மரியாதயா பேசுங்க..எனக்கும் மரியாத தராம பேச பத்து நிமிஷமும் எடுக்காது..வேலய விட்டுத் தூக்கிருவீங்களா..?பண்ணித் தான் பாருங்களேன்..லீகலா அத ஃபேஸ் பண்ண நானும் ரெடி.." எங்கிருந்த வந்த தைரியமோ அவளை பேச வைத்திருக்க செந்தணல் தேங்கிய விழிகளூடு ஊடுருவி முறைக்க சளைக்காமல் எதிர்ப்பார்வை பார்த்தவளின் விழிகளில் அதை விட அனல்.

கடுப்புடன் வெளியேறியவனோ அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் மொத்த தகவலையும் திரட்டியிருக்க எதிர்பாரா அதிர்வில் தலையில் கை வைக்க வேண்டிய நிலை தான்,யாதவ்வுக்கு.

"டேய் என்னடா ஆச்சு..? அந்த பொண்ண வேலய விட்டு தூக்கனும்னு தான டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ண..இப்போ எதுக்குடா தலைல கை வக்கிற..?"

"நா சொல்லுவேன்ல..ஸ்கூல் டைம்ல எங்க கணக்கு வாத்தியார் ஒருத்தர் ரொம்ப நல்ல மனுஷன்..இன்னும் என் கூட பேசிட்டு தான் இருக்காருன்னு.."

"ஆ..ஆமா அன்னிக்கி கூட பார்க்ல வச்சி மீட் பண்ணதா சொன்னியே..அவரு தான.."

"அ..ஆமா அவரு தான்..அவரு பொண்ணு தான் டா இந்த அராத்து..அன்னிக்கி தான் அவரு பொண்ணுக்கு வேல கெடச்சி இருக்குன்னு சாதாரணமா சொன்னாரு..பொண்ணுன்னு நானும் மேற் கொண்டு எதுவும் விசாரிக்கல..பாத்தா இந்த அராத்து தான் அவரு பொண்ணா இருக்கு.."

"டேய் விட்டா அறஞ்சிருப்பங்குற மாதிரி கோவத்துல வந்த..இப்போ என்னன்னா இப்டி சைலன்ட் ஆகிட்ட..?"

"ம்ம்ம்ம்..என்ன பண்ண..?நாங்க ரொம்ப கஷ்டப்பட்றப்போ எனக்கு ஹெல்ப் பண்ணது அவரு தான்..நெறய தடவ டியூஷன் பீஸ் எல்லாம் அவரு தான் கட்டினாரு..அவரோட டியூஷன் போனப்போ ஒரு வாட்டியும் ஃபீஸ் எடுத்தது இல்ல..நல்ல மனுஷன் டா..அதுவும் இந்த அராத்து சின்ன வயசுலயே எனக்கு திட்டியிருக்கா.."

"டேய் என்னடா சொல்ற..?"

"ஆமாடா..அப்போ நா சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட்..இதுக்கு அஞ்சு வயசு..ஒரு மூணு தடவ சார் வீட்டுக்கு படிக்க போயிருக்கேன்..அப்போலாம் ஏதாவது பண்ணி சார் கிட்ட திட்டு வாங்குவா..அவ பண்ற சேட்டைல எனக்கும் சிரிப்பு வருமா..சிரிச்சா திட்டு திட்டுன்னு திட்டுவா..சாருக்குத் தெரியாம.." அன்றைய நினைவுகளில் அவனிதழ்களில் மென்முறுவல்.

"ஆனா ஆளே மாறி இருக்கா அராத்து..பாத்தாலும் அடையாளம் காண முடியல.." என்றவனுக்கு அவள் மீதிருந்த கோபம் மொத்தமும் இறங்கிய உணர்வு தான்.

முழுதான நல்லவன் இல்லை.அதற்கென நெருங்கியவர்களையும் ஆபத்தில் உடன் நின்றவர்களையும் தண்டிக்கும் அளவு கெட்டவனும் இல்லை.

அதே நேரம்,

"நீ பண்றது ரொம்ப ஓவரா இருக்குடி..? யார் கிட்ட வம்பு வளத்துட்டு வந்துருக்கன்னு தெரியுமா..?அந்த ஆளுக்கு ஆபிஸ்ல சலுக இருக்குன்னு உனக்கே தெரியும்..அப்றம் எதுக்குடி வாயடிச்ச..? வேலய விட்டு தூக்குனா என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா..?"

"வேலய விட்டு தூக்குனா கார்த்திக் சார பாக்க முடியாதுல்ல.." முக வாட்டத்துடன் சொன்னவளுக்கு மனதில் தோன்றிய ஒற்றை எண்ணம் அதுவாகத்தான் இருந்தது.அவளுக்கு அவள் பிரச்சினை தானே முதன்மையானது.

"வாட்ட்ட்ட்..?" தோழி தான் விக்கித்துப் போனாள்.இப்படி ஒரு பதிலை அவளிடம் இருந்து சொற்பமாய் கூட எதிர்ப்பார்த்து இருக்கவில்லை என்பதை பறைசாற்றி நின்றதே அவள் விழிகள்.

"ஏய் என்னடி சொல்ற..?"

"வேல போனா போகுது..அத தேடிக்கலாம்..ஆனா கார்த்திக் சார்..அவர பாக்க முடியாதுல.." உதடு பிதுக்கி கூறியவளுக்குள் அத்தனை ஆழமாய் பையன் தடம் பதித்திருந்தான் என்பதை அவள் உணர்ந்திடவில்லை என்பதே நிதர்சனம்.

"பீ சீரியஸ் யாழினி..நா என்ன சொல்றேன்..நீ என்னன்னா அவர பாக்க முடியாதுன்னு பினாத்திகிட்டு இருக்க.."

"நெஜமா தான் டி சொல்றேன்..எனக்கு வேல போனா பரவால...ஆனா அவர பாக்க முடியாதுங்குறது தான் மனசுல ஓடிகிட்டே இருக்கு.." என்றவளின் விழிகளில் வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கான பயம் கொஞ்சமுமே இல்லாததை கண்டு கொண்ட தோழியின் மனதில் பலவித கேள்விகள்.

"வேலயில்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணுவாங்கங்குற பயம் கொஞ்சம் கூட இல்ல உன்கிட்ட..நீ ஏதோ ஒரு தைரியத்துல தா இருக்க..என்ன விஷயத்த என் கிட்ட இருந்து மறக்கிற யாழினி..?" கூர்மையாய் கேட்டவளுக்கு பதில் சொல்லத் திணறியவளின் தலை தாழ்ந்தது.

"உண்மய சொல்லு யாழினி.."

"அ..அது ஒன்னுல்ல டி.."

"உனக்கு பிடிக்கலனா சொல்ல வேணா யாழினி.." வெடுக்கென திரும்பப் பார்த்தவளின் கரத்தை பற்றி தன் புறம் திருப்பினாள்,பெண்ணவள்.

"நா சொல்றத கேட்டு நீ கோவப் பட மாட்டல்ல.."

"கோவப்பட மாட்டேன்..விஷயத்த சொல்லு.."

"அது..ஏ கே டெக்னாலஜி.."

"ஆமா..இங்க பக்கத்துல ஒரு ப்ரான்ச் இருக்கு அதான.."

"ஆமா இங்க வர்ரதுக்கு முன்னாடி அந்த கம்பனில இன்டர்வ்யூ அட்டன்ட் பண்ணி இருந்தேன்..இப்போ ரெண்டு நாளக்கி முன்னாடி தான் கால் லெட்டர் வந்துச்சு.."

"இரு இரு இரு..நேத்து கர்ணன் வந்து உன் கிட்ட கேட்டானே..எம் டி அக்ரிமண்ட கேன்சல் பண்றேன்னு சொன்னாலும் நீங்க போகல..ஏன்னு கேட்டானே..அது இது தானா..?" என்க ஆமோதிப்பாய் அசைந்தது,அவள் சிரசு.

"எம் டி யே அக்ரிமண்ட் கேன்சல் பண்ணி உன்ன அங்க போக சொல்லிருக்காருன்னா நல்ல கம்பனின்னு தான அர்த்தம்..நீ எதுக்கு போகாம இருக்க..ஏதாச்சும் ப்ராப்ளமா..?"

"இல்ல கார்த்திக் சார பாக்க முடியாதுல்ல..அதான்.." மெல்லமாய் மொழிந்தவளின் வார்த்தைகளில் பொதிந்திருந்த ஆழத்தை அவள் உணராவிடினும் தோழி உணர்ந்திருந்தாள்,தெளிவாக.

"நீ என்ன பேசறன்னு உனக்கு புரியுதா யாழினி..?"

"ஆமாடி..கார்த்திக் சார பாக்க முடியாது..அப்றம் உன் கூட பழக முடியாது..அங்க ரூல்ஸும் அதிகம் தானாம்..அது தான் போகல..அதான் வேல போனாலும் இன்னொரு வேல தேடிக்கலாமுங்குற கான்பிடன்ஸ்" புரிந்தும் புரியாமல் பதில் சொல்ல தோழி தான் குழம்பிப் போனாள்.

தலையசைப்புடன் திரும்பினாலும் மீள மீள தோழியின் வார்த்தைகள் காதில் வந்து உரச மறக்கவில்லை.

               ●●●●●●●●
இருள் சூழ்ந்திருந்த வானில் நட்சத்திரங்கள் மட்டுமே.வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை வெறித்து கொண்டிருந்த பையனுக்கு உள்ளிருந்து வந்த சமையல் மணம் பசியை கிளப்பி விட்டு ஓய நேரத்தைப் பார்த்தவனுக்கு தற்சமயம் உள்ளே செல்லும் எண்ணமில்லை.

செவியில் அலைமோதிய வண்டி சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க அஜய் தான் வந்திருந்தான்,பையனின் வீட்டுக்கு.

முன்பு அடிக்கடி வருவான் என்றாலும் குடும்பம் என்று வந்தவுடன் அவனுக்கும் நேரம் இல்லையே.

"வாடா..என்னடா இன்னிக்கு ஷாக்கா இருக்கு..ஐயாவுக்கு இப்போ தான் நம்ம வீட்டுக்கு வர்ர வழி தெரிஞ்சு இருக்கு போல.."

"டேய் நீ வேற..நானே அங்க வீட்ல மல்லுகட்டிட்டி முடியாம வந்துருக்கேன்..நீயும் இது தான் சாக்குன்னு கலாய்க்கிற.." போலியாய் திட்டிய படி உள் நுழைய சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்த சத்யமூர்த்தியின் முகத்தில் சந்தோஷத் தாண்டவம்.

அவரே அஜய்யை சந்திக்கச் செல்லும் எண்ணத்துடன் சுற்றிக் கொண்டிருக்க அவனே வந்து விட்டானே அதனாலோ என்னவோ..?

எப்போதும் போல் சமயலறையில் அரட்டைக் கச்சேரி அரங்கேற அடிக்கடி விழிகளால் அஜய்யிடம் சைகை செய்ய முயன்று டையனவனின் கூர்ப்பார்வையில் சிக்கித் தோற்றுப்போனார்,சத்யமூர்த்தி.

இரவுணவை முடித்து விட்டு அஜய் அங்கேயே தங்கிக் கொள்வதாக சொல்ல இருவரின் மனதிலும் மகிழ்ச்சி தான்.

நேரம் மணி பத்தை தாண்டியிருக்கும்.மூவரும் கூடத்தில் அமர்ந்து கதையளந்த படி இருக்க முக்கியமான அழைப்பொன்று வந்தது,பையனுக்கு.

பையனின் முகத்தில் எரிச்சலின் சாயலும் தாயுமானவரின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயலும் ஒருசேரத் தோன்றிட புரியாது விழித்தது,அஜய் தான்.

"முக்கியமான கால்..ஒரு டென் மினிட்ஸ்ல வந்துர்ரேன்.." என்று பையன் அகன்றது தான் தாமதம்,படக்கென எழுந்து அஜய்யின் அருகில் வந்தமர்ந்தார்,மனிதர்.

"என்னப்பா..எதுக்கு இப்டி பக்கத்துல வர்ரீங்க..?"

"ப்ச்..கொஞ்சம் பேசாம நா சொல்றத கேளு..உங்க ஆபிஸ்ல யாழினின்னு ஒரு பொண்ணு இருக்காமே..பொண்ணு எப்டி..? நல்ல பொண்ணா..? பாப்புக்குட்டிய நல்லா பாத்துக்குமா..?"

"என்னப்பா திடீர்னு இப்டி கேக்கறீங்க..?"

"டேய் பாப்புக்குட்டி வர்ரதுக்கு முன்னாடி பதில சொல்லுடா.."

"என்னாச்சு..?"

"டேய்ய்ய்ய்ய்.."

"சரி சரி..ரொம்ப நல்ல பொண்ணு பா..தங்கமான பொண்ணு..நம்ம கார்த்திக்கு பொருத்தமா இருப்பா..சின்னப்புள்ள மாதிரி நடந்துகிட்டாலும் பாக்க தெளிவான பொண்ணு மாதிரி தான் தோணுது.."

"அப்டியா..அப்போ நம்ம பாப்புக்குட்டிக்கி பொருத்தமா இருப்பா..உனக்கொரு விஷயம் தெர்யுமா..? பாப்பா பாப்பான்னு பாப்புக்குட்டி அந்தப் பொண்ண பத்தி தான் அடிக்கடி பேசுவான்..அவன் சொல்லி சொல்லியே எனக்கு அந்த பொண்ண பாக்கனும்னு ஆச.."

"பாப்பான்னு செல்லப் பேர் வச்சிட்டு சுத்துறான்னு தெரியும்..ஆனா இப்டி பாப்பா புராணம் பாடுவான்னு தெரிலியே..ஷாக்கா இருக்கு.."

"டேய் எப்டி சரி அந்தப் பொண்ண பாப்புக்குட்டிக்கி கட்டி வக்க ஹெல்ப் பண்ணுடா..அவன் வாழ்க்க சந்தோஷமா இருக்கும்.."

"சரி..நா அவன வாட்ச் பண்ணி சொல்றேன்..ஆமா எங்க எம் டி உங்க கிட்ட என்ன பேசுனாருப்பா..? அன்னிக்கி அவரு உங்க கூட பேசனும்னு என் கிட்ட தான் சொல்லி நம்பர் வாங்குனாரு..கார்த்தி கிட்ட கூட நீங்க சொல்லி இருக்கல.."

"பாப்புக்குட்டி கி விஷயத்த சொல்லாதடா..அவங்க பொண்ணுக்கு பாப்புக்குட்டிய கேட்டாங்க.."

"எதே.."

"ஆமாடா..அன்னிக்கு இவன் அவரு பொண்ண ரௌடிங்க கிட்ட இருந்து காப்பாத்தியிருக்கான்..அந்த பொண்ணுக்கும் இவன் மேல சாப்ட் கார்னர் இருக்காம்..அதான்.."என்க சடுதியாய் தீக்ஷிதாவின் நினைவு வர அஜய்யின் முகத்தில் மெல்லிய மாற்றம்.

"நீங்க என்னப்பா சொன்னீங்க..?"

"எனக்குன்னா புடிக்கல டா..இந்த சம்பந்தம் ஒத்து வராதுன்னு தோணுது..அதுவும் பாப்புக்குட்டிய ஃபாரின் ட்ரீட்மண்ட்கு அனுப்பி சரி பண்ணுன அப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் சொல்றாங்க..சரி அதுக்கப்றம் தப்பித் தவறி பாப்புக்குட்டிக்கி அந்த வியாதி வந்தா என்ன பண்ணுவாங்க..என்னால ஒத்துக்க முடில டா..எனக்கு அந்த பாப்பா தான் பாப்புக்குட்டிக்கி ஏத்த பொண்ணுன்னு தோணுது..என்ன உன்ன மாதிரி தான் அந்த பொண்ணு பாப்புக்குட்டிய பாத்துருக்கு..அதனால வேணாம்னு சொல்லிட்டேன்.." என்க அஜய்யின் முகத்தில் பலவிதமான யோசனைகள்.

பையனும் அலைபேசியை அணைத்து விட்டு வர அத்துடன் நின்றது,அவர்களின் பேச்சு.

மறுநாள் காலையில் அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே அவ்விடத்தில் ஒரு பரபரப்பு நிலவுவதை கூர்ந்து பார்த்தவாறு தன்னிடத்திற்கு வந்த யாழினிக்கு சத்தியமாய் காரணம் தெரியாது.

வழமைக்கு மாறாய் கர்ணன் நேரத்துடன் வந்திருக்க அதிர்வில் விரிந்தன,யாழினியின் விழிகள்.

"குட் மார்னிங்"

"குட் மார்னிங் கர்ணன்..என்ன இன்னிக்கி சீக்கிரமா வந்திருக்கீங்க.."

"அது சும்மா தான்..உங்களுக்கு ஒன்னு தெர்யுமா..?"

"என்ன..? ஆபிஸே பரபரப்பா இருக்குறதுக்கான காரணமா..?"

"ம்ம்..ஆமா..நம்ம எம் டி பொண்ணு தீக்ஷிதா இன்னைல இருந்து ஆபிஸ் வரப்போறாங்களாம்." என்க தோளைக் குலுக்கிக் கொண்டவளுக்கு சில விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தேடல் நீளும்.

2024.04.27


Leave a comment


Comments


Related Post