இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...41 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 24-05-2024

Total Views: 21822

 தரணி வீட்டிற்குள் நுழைந்தபோது வழக்கம் போல் சமைத்த உணவு பதார்த்தங்களை உணவு மேஜையில் எடுத்து வந்து வைத்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. இருவருக்கும் பேச்சுவார்த்தை தடைப்பட்ட பின் மற்ற விஷயங்கள் வேண்டுமானால் நேர்த்தியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. காலை எழுந்து அவன் அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம் தொடங்கி இரவு வீடு வந்து சேரும் நேரம் உணவருந்தும் நேரம் தனிமையாக சென்று படுக்கையில் விழும் நேரம் என்று அவற்றில் நேர்த்தி கடைபிடிக்கப்பட்டது. பொம்மை போன்று இருவரும் அவரவர் பணிகளில் ஈடுபட்டிருப்பர்.


அவன் இரவு வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு உணவை தயாரித்து எடுத்து வைத்து கூடுமானவரை அறைக்குள் நுழைந்து கொள்வாள் அல்லது பக்கத்து ஃபிளாட் சுந்தரியும் வேல்மனனணியும் காரிடாரில் நாற்காலி போட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி இருப்பர்… அவர்களுடன் சென்று இணைந்து கொள்வாள். அவள் தரணியில் கண்ணில் தட்டுப்படுவது போல் சுற்றித் திரிந்தால் உணவு உண்ண மாட்டான்… நேராக படுக்கையில் சென்று விழுந்து விடுவான். அதற்காகவே கூடுமானவரை வெளியேறி விடுவாள்.


“தரணி வந்தாச்சு… நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்கே…” சுந்தரி சந்தேகமாய் கேட்கும் போதெல்லாம் ஏதேனும் சொல்லி சமாளித்து விடுவாள். குறைந்தது ஒரு மணி நேரம் இங்கும் அங்கும் உலாத்தி அதன் பின்பே வீட்டிற்குள் நுழைவாள். அவன் வழக்கம்போல் பால்கனி சோபாவில் படுத்திருப்பான்… வலி நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்து நீண்ட பெருமூச்சுடன் மெத்தைக்கு கீழே ஒரு படுக்கை விரிப்பைப் போட்டு அவள் கீழே படுத்துக் கொள்வாள்.


அந்த மெத்தை எனக்கு முள் படுக்கை என்று சொல்லி அவன் ஒதுங்கிக் கொண்ட பிறகு அவளுக்கும் அது முள்ளாய் தோன்ற ‘உங்களை நீங்களே அவ்வளவு கஷ்டப்படுத்திக்கிட்டு அந்த சோபாவுல சுருட்டி முடக்கி படுக்கும்போது எனக்கு மட்டும் பஞ்சு மெத்தை கேட்குமா… எனக்கும் இந்த கட்டில் மெத்தை தேவையில்ல…’ தனக்குள் கூறிக்கொண்டு அன்று முதல் கீழேதான் படுத்துக் கொள்கிறாள்ஹ அதனை அவன் கவனித்தாலும் அது பற்றி எந்த லட்சியமும் இல்லை… மனதளவில் மரித்துப் போனவனுக்கு அவளது எந்த செயல்களிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.


இன்றும் அதே போல்தான் அவன் உள்ளே நுழைந்தபோது இரவு உணவு வேலைகளை முடித்தவள் அவன் குளித்து வருவதற்குள் சிங்க்கிள் கிடந்த சிற்சில பாத்திரங்களை கழுவி வைத்து அவன் உண்பதற்கு தேவையான தட்டு தண்ணீர் வரை மேஜையில் எடுத்து வைத்து வெளியேறி இருந்தாலள் தங்களது வீட்டின் முன் காரிடாரில் அமர்ந்திருந்த வேல்மணி சுந்தரியுடன் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்களும் சிறிது நேரத்தில் உள்ளே சென்றுவிட மார்புவரை உயரம் இருந்த கார்டாரின் சுவரில் கை வைத்து நின்றபடி வெளியே வேடிக்க பார்க்கத் தொடங்கினாள்.


மனம் முழுக்க வெறுமை… விசித்ராவுடன் பேசியதால் மனம் சற்று அமைதி அடைந்திருந்தாலும் தான் செய்த தவறால் கணவனின் அன்பும் காதலும் குறும்பும் சில்மிஷமும் கிடைக்காமல் தனித்து விடப்பட்ட நிலையை எண்ணி அழுகைதான் வந்தது. அனைத்தும் தானே தேடிக் கொண்டதுதானே… தனிமையான பொழுதுகளில் எல்லாம் அவனை சந்தித்த முதல்நாள் முதல் அவர்களுக்குள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அசைபோட்டு சில நேரங்களில் சிரித்து சில நேரங்களில் அழுது சில நேரங்களில் வெட்கத்தில் சிவந்து சில நேரங்களில் சிலிர்த்து இப்படி தன் கணவனை மொத்தமாய் புரிந்து உள்வாங்கி இருக்கிறாள். சண்டைக்கோழிகளாக அடித்துப் புரண்டு அதிலும் காதலை வெளிப்படுத்திக் கொண்ட நாட்கள்தான் அவள் எண்ணங்களில் அதிகமாய் இனிமையை சேர்த்து கவலையை மறக்கச் செய்கின்றன. அதெல்லாம் மீண்டும் தன் வாழ்க்கையில் நடக்காதா என்ற ஏக்கமும் எழுகிறது.


சமீப நாட்களாக அவன் குடித்துவிட்டு வருவதுதான் அவளை மொத்தமாக நிலைகுலையச் செய்தது. இன்று குடிக்காமல் தெளிவாக வீட்டிற்குள் நுழைந்தது பெரும் நிம்மதியை கொடுத்தது… விசித்ராவின் அறிவுரையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள். என்ன ஒரு அருமையான பெண்…? என்ன ஒரு அழகான நட்பு… புரிதல்… அவர் வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட மனிதர்கள் அனைவருமே மகத்துவம் வாய்ந்தவர்கள்தான்… அவரைப் போலவே… ஆனால் நான்…? மனம் குத்திக் கிழித்தது. சமீப நாட்களாக தன் மீதே நிறைய வெறுப்பு… ஏதேதோ எண்ணங்களுடன் நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தாள். இந்நேரம் உண்டு முடித்து அவன் படுக்கச் சென்றிருப்பான் என்று கருதியவளாய் தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.


திரும்பியவளுக்கு அதிர்ச்சி… பேரதிசயமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அவள் மணாளன். மனம் மயக்கும் இரவு நேர இளையராஜா பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன… தொலைக்காட்சி என்ற சாதனத்தை இருவரும் மறந்து வாரங்கள் பல கடந்துவிட்டனவே… அவன் முதுகையே ஆச்சரியமாய் பார்த்தபடி பசியில்லை என்றாலும் பெயருக்கு ஏதாவது கொறித்தாவது படுக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் ஹாட்பாக்சை திறக்க செய்து வைத்த சப்பாத்தியும் பனீர் கிரேவியும் தொடாமல் அப்படியே கிடந்தன.


இப்பொழுதெல்லாம் உண்டு முடித்து தனது தட்டினை தானே கழுவி வைத்து சென்று விடுகிறான். எடுத்து வைத்த தட்டு தண்ணீர் என்று அனைத்தும் தொடப்படாமல் அப்படியே இருக்க வேதனையாய் அவனை திரும்பிப் பார்த்தாள். இந்த ஒற்றை உரிமையைத்தானே அழுது போராடி வாங்கி இருந்தாள். இன்றும் கூடுதல் வெறுப்பில் சாப்பிடப் பிடிக்காமல் அமர்ந்து விட்டாரா…? தளுக்கென கண்களில் கண்ணீர் நிறைந்தது… அவன் உண்ணாமல் பட்டினி கிடப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை.


“ஏன் சாப்பிடாம உக்காந்து இருக்கீங்க…? நான் பரிமாறினா உங்களுக்கு பிடிக்காது… பக்கத்துல இருந்தா சாப்பிட மாட்டீங்கன்னுதான் தினமும் வாசலை காத்துட்டு போய் நிக்கிறேன்… இன்னும் நான் என்ன பண்ணனும்…? திரும்பவும் இப்படி பட்டினி கிடந்து என்னை கொல்லணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…?” 


ஆற்றாமையும் அழுகையுமாய் அவள் கூற படக்கென எழுந்து தொலைக்காட்சியை அணைத்து வாஷ்பேஸின்னில் கை கழுவி வந்து அமர்ந்து இரண்டு தட்டுகளை எடுத்து அருகருகே வைத்து தனது தட்டில் இரண்டு சப்பாத்தியும் மற்றொன்றில் இரண்டும் வைத்து அவள் நின்றிருந்தபுறம் நகர்த்தி வைத்து உண்ணாமல் மேஜையில் விரல்களால் மெல்ல தட்டியபடி அமர்ந்திருக்க அவளோ அவனையே விழிகள் விரித்து ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் கண்கள் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை… தலை தாழ்ந்துதான் இருந்தது… ஆனால் உடன் அமர்ந்து உணவு உண்ணும்படி சூசகமாய் தெரிவித்தது அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. இதயத்திற்குள் இன்பச் சாரல்… வேதனையில் கலங்கி இருந்த கண்கள் இப்போது மகிழ்ச்சியில் கலங்கின… அவனது இந்த சிறு செய்கையே அவளுக்கு மலை போன்ற மகிழ்ச்சியைக் கொடுக்க வழிந்த கண்ணீரை துடைத்தபடி அவனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள்.


தேவையான கிரேவியை தனக்கு வைத்துக்கொண்டு பாத்திரத்தை அவள் புறம் நகர்த்தினான். அவனைப் பார்த்தபடியே தானும் பரிமாறிக் கொண்டாள். உண்ணாமல் அவனையே பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க உஃப் என உதடு குவித்து மூச்சுவிட்டவன் “இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி சாப்பிடறது…? சாப்பிடும்போது கவனம் சாப்பாட்ல இருக்கணும்…” வேறு எங்கோ பார்த்தபடி கூற அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை. கண்களை தாழ்த்தி உண்ணத் தொடங்கினாள். அவள் உண்பதை கீழ்கண்ணால் பார்த்துக் கொண்டவன் தானும் உண்ணத் தொடங்கினான்… மகிழ்ச்சியில் அவளுக்கு உணவே இறங்கவில்லை… எங்கே அரைகுறையாக தான் எழுந்து கொண்டால் அவனும் எழுந்து விடுவானோ என்று அஞ்சி வலுக்கட்டாயமாக இன்னொரு சப்பாத்தியை எடுத்து வைத்து மெல்ல மெல்ல உள்ளே தள்ளினாள்.


அவன் நிறைவாக உண்டான்… முகத்தில் இறுக்கம் இல்லை… அதே நேரம் சிரிப்பில் விரிந்திருக்கவும் இல்லை… ஏதோ ஒரு அமைதி… இது போதுமே… பாறை போன்று கடினமாகிக் கிடந்த அந்த எழில் முகத்தில் இந்த அமைதி இருந்தால்கூட போதுமே… இதுவே போதுமானதாய் தோன்றியது அவளுக்கு. அவன் உண்டு முடித்து கை கழுவி அறைக்குள் நுழைந்து கொள்ள அவளோ பாத்திரங்களை எடுத்து ஒதுங்க வைத்து பத்து நிமிடங்கள் கழித்து உள்ளே நுழைந்தாள். பால்கனியில் உள்ள மர கைப்பிடியின் அருகே கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி தொலைவை பார்த்த நிலையில் நின்றிருந்தான் தரணி.


கதவோரம் நின்றபடி அவன் முதுகையே சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தாள் பூச்செண்டு. அவனிடம் பேச மனம் ஏங்கியது… ஆனால் ஏதாவது பேசின ஆரம்பித்து மீண்டும் வெறுப்பாக தன்னுடன் பேசிவிட்டால் சற்றுமுன் கிடைத்த சின்ன மகிழ்ச்சியும் வடிந்து விடுமே என்று எண்ணியவளாய் அதே நேரம் அவனிடம் தெரிந்த மாற்றத்தில் தன் முகம் பார்த்து ஒரு வார்த்தை பேச மாட்டானா என்ற ஏக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தாள். தனக்குப் பின்னே நின்று தன்னையே பார்த்தபடி அவள் இருப்பதை அவனது உள்ளுணர்வும் உணர்த்தாமல் இல்லை.


விசித்ரா பேசியதால் மட்டும் அவன் மனதிற்குள் மாற்றம் நிகழ்ந்தது என்று கூறிவிட முடியாது. தன்னவளின் கதறலை… அவள் பேசிய வார்த்தைகளை… உணர்ந்து யாசித்த மன்னிப்பை… தவறு செய்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தவித்த தவிப்பை விசித்திராவிடம் அவள் பேசிய வார்த்தைகளில் அவன் முழுமையாக உணர்ந்து கொண்டான். அவன் எப்படி நடைபிணமாக மாறினானோ அவளும் அன்றிலிருந்து அதே நிலையில் சுற்றித் திரிவதை அவனும் அறிந்து கொள்ளாமல் இல்லை. அவனை ஏக்கமாய் பார்ப்பதையும் வேதனையில் புழுங்குவதையும் அடிக்கடி வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்வதையும் அவனது லேசர் விழிகள் நோட்டமிட்டு கொண்டுதான் இருந்தன. தவறு என்று உணர்ந்ததால்தானே இத்தனை தவிப்பு அவளுக்கும்.


“ஆமா… பண்ணினேன்… இப்போ என்ன…? உன்னால முடிஞ்சதை பண்ணு… திமிரா திரிஞ்சா திரி… எனக்கு என்ன…?” இது போன்றெல்லாம் நினைப்பவளாக இருந்திருந்தால் அவனைப் போன்றே அவளும் உதாசீனமாக அவள் வேலையை பார்த்திருப்பாளே. ஆனால் அவளோ அவன் பார்வை தன் மேல் படாதா என்று ஏங்கித்தானே கிடக்கிறாள். தேவையானால் அடித்து உதைத்து திட்டி தீர்த்துக்கொள்… ஆனால் நீ எனக்கு வேண்டும்… என்னை விலக்கிவிடாதே என்றல்லவா ஏங்கிக் கிடக்கிறாள். அனைத்தும் அவனுக்கும் புரிந்தது. ஆனால் அவள் செய்த அந்த பிழையை எளிதாக கடந்து வர முடியவில்லை. நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் ரணமாய் சுட்டது. இன்று விசித்திரா வந்து சென்றபின் காயத்திற்கு மருந்திட்டது போல் மனதிற்கு அத்தனை ஒரு அமைதி.


நீண்ட பெருமூச்சுடன் திரும்பி நடந்தான்… பால்கனி கதவை கடந்து அறைக்குள் நுழைகையில் அங்கு நின்று தன்னையே துளைக்கும் பார்வை பார்த்தவளை ஒரு சில நொடிகள் நின்று ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து உள்ளே நுழைந்து கொண்டான். அந்த ஒற்றைப் பார்வைக்கே அவளுக்குள் 100 பூக்கள் பூத்தன… சலனமற்ற பார்வைதான்… ஆனால் பார்த்தானே… அவள் முகத்தை அவன் நிமிர்ந்து பார்த்து எத்தனை நாட்கள் கடந்திருந்தன… துடிக்கும் இதயத்துடன் மீண்டும் அவனையே வெறித்தபடி அங்கேயே நின்றாள். மெல்ல நடந்து சென்றவன் மெத்தையில் அமர அடுத்த இன்ப அதிர்ச்சி.


கைகள் இரண்டையும் கோர்த்து தொடையில் பதித்து தலை கவிழ்ந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். அவள் விழிகளோ அவனை விட்டு விலகவே இல்லை… மெல்ல தலை நிமிர்த்தியவன் ஏக்கம் கொண்ட அந்த கண்களை ஆழ்ந்து பார்த்தான்.


“அந்த பால்கனி கதவை சாத்திடு…” சீரான குரலில் கூற துள்ளும் மனதுடன் உடனடியாக தாழிட்டாள். அவளிடம் பேசி விட்டானே.. அடுத்து என்ன என்பதுபோல் அவனையே பார்த்தபடி நிற்க இங்கு வா என்று கண்களை மூடித் திறந்தான். வேகமாய் ஓடி வந்து அவன் மண்டியிட்டு அமர்ந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து நோக்கினர்.


‘என்னை துடிக்க வைத்தாயே…’ என்ற வலியுடன் அவன் பார்க்க ‘என்னை மன்னிச்சுடுங்களேன்…’ என்ற யாசிப்புடன் அவள் பார்த்தாள்.


“ஏ..ஏன்டி அப்படி பண்ணின…?” குரல் கமற இதயத்தைப் பிழிவதுபோல் ஆற்றாமையுடன் வெளிவந்த அவன் வார்த்தைகளில் மொத்தமாய் உடைந்தவள் “ம..மன்னிச்சுடுங்க மாமு…” சத்தமிட்ட குரலுடன் முகத்தை மூடி பெரும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அவளது அழுகையில் அவனுக்கும்தான் இதயம் வலித்தது… கண்களும் தானாக கலங்கி நின்றன… துடித்துக் கதறுபவளை தொடர்ந்து கண் கொண்டு பார்க்க முடியவில்லை… மெல்ல தன் கை உயர்த்தி அவன் தலையில் வைத்து வருட அவன் ஸ்பரிசம் பட்டதை உணர்ந்தவள் பாய்ந்து அவனை இடையோடு இறுக்கி அவன் வயிற்றில் முகம் புதைத்து இன்னும் கூடுதலாக அழுதாள்.


“த..தப்பு பண்ணிட்டேன் மாமு… தெரியாம பண்ணிட்டேன்… சத்தியமா தெரிஞ்சு எதுவும் பண்ணல… சொல்பேச்சு கேட்டு புத்தி இல்லாம பண்ணிட்டேன்‌… ஆனா குழந்தையை நான் வெறுக்கிறவ இல்ல மாமு… எனக்கும் குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்… பட்டிக்காட்டு ஜென்மம்… புத்தி இல்லாம நடந்துக்கிட்டேன்… உங்க கோபத்தை எல்லாம் அடிச்சு தீர்த்துக்கிடுங்க மாமு... ஆனா என்னை வெறுத்து மட்டும் ஒதுக்கிடாதீங்க… செத்துடலாம் போல இருக்கு…” 


மனதில் தேங்கியிருந்த வலிகளை எல்லாம் கொட்டி தீர்த்தபடி அவன் வயிற்றுப் பகுதியை தன் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள். அவனது தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்டதுபோல் வேதனை. இரண்டு சொட்டுக் கண்ணீர் உருண்டு வந்து அவள் முதுகில் விழுந்தது… அவள் முதுகோடு அணைத்துப் பிடித்து குனிந்த நிலையில் அவள் பின்னங்கழுத்தில் முகம் சாய்த்தான்.


“உன்னை அடிச்சு கொடுமைப்படுத்தவெல்லாம் என்னால முடியாதுடி… உன்மேல மலையளவு கோபம் இருந்தாலும் கடலளவு காதல் இருக்கு… நான் எதிர்பார்க்காத ஏமாற்றத்தையும் துரோகத்தையும் பண்ணிட்டியேன்னுதான் என்னோட கோபம் அவ்வளவு அழுத்தமா நின்னு போயிடுச்சு… நான் மொத்தமா நொறுங்கிப் போயிட்டேன்டி…” அவளை முதுகோடு வருடியபடி கூற முகம் முழுக்க கண்ணீர் ஈரத்துடன் நிமிர்ந்தவள் அவன் முகத்தை இரு கைகளால் தாங்கினாள்.


“தெரியும் மாமு… உங்களைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கிட்டேன்… என்னை மன்னிப்பீங்களா…? உங்க பொக்கேவை திரும்பவும் அதே மாதிரி காதலிப்பீங்களா…?” உதடு துடிக்க கேட்டவளின் முகத்தை தானும் தாங்கி விரல்கள் கொண்டு அவள் கண்கள் துடைத்து பல நாட்கள் அவளிடம் இறுகிக் கிடந்த இதழ்களை பிரித்து மெல்ல புன்னகைத்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.


“எத்தனை கோபம் இருந்தாலும் என் பொக்கேவை அதே அளவுதான் இப்பவும் காதலிக்கிறேன்… எப்பவும் காதலிப்பேன்… உணவோடு கலந்து போன சுவையை எப்படி பிரிக்க முடியாதோ அதே மாதிரி என் உணர்வோடு ரத்தத்தோடு கலந்து போனவடி நீ… உன்னை என்னால தூக்கி எறிஞ்சிட முடியுமா…?” 


அவள் கண் பார்த்தபடியே கூற அவனை கழுத்தோடு இறுக்கமாய் கட்டி அவன் முகம் முழுக்க ஆவேச முத்தங்களை பதிக்கத் தொடங்கினாள். மூச்சு முட்ட வாரி இறைக்கப்பட்ட முத்தங்கள்… அதில் வெளிப்பட்ட அழுத்தமும் சத்தமும் தேங்கிக் கிடந்த அவளது காதலின் வெளிப்பாடுகள்.. ஏக்கத்தின் மாற்று வடிவங்கள்… சிறு இடைவெளிகூட இல்லாது அவன் முகம் முழுக்க அவள் இதழ்கள் பவனி வந்து கொண்டிருக்க தன்னை மொத்தமாய் அவளிடம் ஒப்புவித்து அவளை இடுப்போடு அள்ளித் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான் தரணி.


அவள் முத்தங்களை நிறுத்தவே இல்லை… ஆர்ப்பரித்து வெளிவந்த மனைவியின் ஆவேச முத்தங்களில் கண்மூடி லயித்துப் போனான்… வாரக்கணக்காய் தேங்கியிருந்த வலிகள் அனைத்தும் மருத்துவ முத்தங்களால் புனரமைப்பு செய்யப்பட்டன… அவளுக்கு இதழ்கள் நோகவில்லை… அவனுக்கு முகம் நோகுமோ என்றுதான் மெல்ல விலகினாள். மாநிற முகம் அவள் தந்த முத்தங்களால் தகதகவென மின்னி சிவந்திருந்தது. சிவக்க முத்தமிட்டவள் இப்போது அவன் முக வடிவைப் பார்த்து வெட்கத்தில் தான் சிவந்து போனாள்.


“ஐ லவ் யூ மாமு…” கண்களோடு கண்கள் கலந்து காதலுடன் கூறியவள் பைனல் டச்சாக அவன் இதழ்களில் இதழ் பதிக்க இரும்பை ஈர்த்துக் கொண்ட காந்தமாய் அவள் இதழ்களை தன் இதழ்களுக்குள் மொத்தமாய் இழுத்து ஈர்த்திருந்தான் அவள் மாமு.


கொடுத்து ஓய்ந்தவளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் முனைப்பில் அவன்… இதழ் அணைப்பும் இடை அணைப்புமாய் இரவு முழுக்க முத்தமழைதான்… காதலுடன் தொடங்கி மெல்ல மெல்ல காமத்தில் கரைந்து கலவியாய் நீட்சி அடைந்து மீட்சி அடைந்து நின்றது அவர்களின் இனிய தாம்பத்தியம்.


Leave a comment


Comments


Related Post