இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 24-05-2024

Total Views: 13791

காதலொன்று கண்டேன்!

தேடல்  25

அவளுக்கென..

தன்னை வெகுவாய் ஆற்றுப்படுத்திக் கொண்டு அவள் அழைப்பை ஏற்றிருந்தாலும் காளையவனுக்கு அவளில் உதித்திருக்கும் சிறு மாற்றம் கூட புரிந்திடாமல் போய் விடாது என்று அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

"ஹலோ மித்ரா.."

"சொல்லுங்க ஜீவா சார்.." கேட்டவளின் பாதங்கள் மொட்டை மாடிக்கு விரைந்தன.

"மத்யானம் சாப்டீங்களா..?"அவளின் நிலை புரிந்து முதல் கேள்வியைக் கேட்க எதிர் பாராததால் தன்னை சுதாரித்து பதில் சொல்ல அவளுக்கும் சில நொடிகள் தேவையாயிற்று.

"ஆம்" என்று பொய் சொன்னால் கண்டு பிடித்து விடுவான் என்கின்ற பயம்."இல்லை" என்று உண்மையைக் கூறினால் காரணத்தை கேட்பானே என்கின்ற தயக்கம்.

"சாப்டேன்..இப்போ தான் சாப்டேன்.."

"உங்களுக்கு கரெக்டா பொய் சொல்ல யாரும் கத்து தர்லியா மித்ரா..?" மடக்கும் விதமாய் கேள்வி கேட்டாலும் வார்த்தைகளில் நிதானம்.அவளின் மனநிலையை இதற்கு முன் உணர்ந்திருப்பவனுக்கு அவளை கையாளும் விதம் தெரியாது இருக்குமா என்ன..?

"நா நா பொய் சொல்லல.."என்றவளின் புறங்கை கன்னத்தை தேய்த்து விட்டது.

"இப்போ உங்க கை கன்னத்த தேச்சு விட்டுச்சு தான..?"

"எதே..?" என்றவளோ அவனின் வார்த்தைகளை உள் வாங்கி தன் செயலை கிரகித்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்திட மறுமுனையில் இருந்த காளையவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பொன்று குடை விரித்திருந்தது.

"உங்களுக்கு எப்டி தெர்யும்..?" இயல்பாய் காட்டிக் கொண்டு கேட்க முயன்றாலும் குரலில் உற்சாகம் நிரம்பி வழிவதை தடுக்க முடியவில்லை.அவன் தன்னை துல்லியமாய் கவனிப்பது பெரும் நிறைவை கொடுத்தது,அவளுக்குள்.

"ரீசன் சொல்லித் தான் ஆகனுமா..?"

"ஆமா..இல்லன்னா உங்கள விட மாட்டேன்.."

"அப்போ அப்டியே உங்க கூட பிடிச்சு வச்சீப்பங்கன்னு இன்டைரக்டா சொல்றீங்களா..?"

"எதே..நா எங்க அப்டி சொன்னேன்..?" அவள் பதற ஒற்றைக் கண் அடித்தவனின் விரலோ அருகே இருந்த மரத்தில் இருந்த இலையை பறித்து எறிந்தது.

"விடவே மாட்டேன்னு சொன்னா இது தான அர்த்தம்..?"

"நீங்க எதுக்கும் ஸ்ட்ரெயிட்டா மீனிங் எடுத்துக்க மாட்டீங்களா சார்..?" இடுப்பில் கையை மடக்கி குற்றிய படி கேட்டவளுக்கு எடக்கு மடக்காய் யோசிக்கும் அவனை எண்ணி வியப்பு தான்.

"இதுவும் ஸ்ட்ரெயிட் மீனிங் தான..?"

"இது ஸ்ட்ரெயிட் மீனிங்..உங்களுக்கு மட்டுந்தான் அப்டி தோணும்..இதோட ஸ்ட்ரெயிட் மீனிங் பதில் சொல்லாம உங்கள விடமாட்டேன்னு வரும்..புரிஞ்சுதா..?"

"புரியல..எனக்கு சுத்தமா புரியல..நேர்ல வந்து சொல்லித் தர்ரீங்களா..?"

"என்னது..?நேர்லயா..? இப்போ சித்தி பாத்தா திட்டுவாங்க..அவங்க வெளில போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.." பதட்டமாய் பிதற்றியவளுக்கு உளறிக் கொட்டுவது உரைக்க நிறுத்திக் கொண்டாலும் காளையவனின் சீண்டலுக்கு இந்த வார்த்தைகள் தாராளம் என்று புரியாதா அவளுக்கு..?

"ஐயையோ.." விழி சுருக்கிய படி தலையில் கை வைக்க அவளின் செய்கை உணர்ந்தவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் துளிர்த்தது,மனதோரம்.

"பர்ஸ்ட்டு தலைல இருந்து கைய கீழ எறக்குங்க..ஆமா அப்போ சித்தி சரின்னு சொல்லி இருந்தா வந்திருப்பீங்களா..? அவ்ளோ ஆசயா என்ன பாக்க..?"

"யா..யாரு அப்டி சொன்னா..அப்டி ஆச அதுவும் இல்ல.."

"உண்மயத்தான் சொல்றீங்களா..?" காளையவன் ஆழ்ந்த குரலில் கேட்க படக்கென்று அழைப்பைத் துண்டித்திருந்தாள்,பெண்ணவள்.

               ●●●●●●●●

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்து இருந்தவனின்  இதழ்களோ ஐயர் கூறும் மந்திரங்களை மொழிந்திட நெகிழ்வான மனதுடன் தோழனைப் பார்த்தவாறு நின்றிருந்தான்,கிருஷ்ணா.தோழனின் வாழ்வு என்னவாகும் என மனதில் மண்டிக்கொண்டிருந்த பயம் முழுதும் விடை பெற்றிருந்தது.

தன்னையே நோக்கிக் கொண்டிருந்த தோழனிடம் வினவிட மறுப்பாய் தலையசைத்தவனின் பார்வை அவனருகே நின்றிருந்த ஜெயகிருஷ்ணனின் மீது தாவ அவரின் விழிகளில் இருந்த நிறைவு கண்டு இனம் புரியா உணர்வு காளையவனின்,மனதில்.

பெண்ணவளை அழைத்து வந்து அவனருகே அமர வைக்க அவளோ குனிந்த தலை நிமிரவில்லை.பலநூறு நினைவுகள் அவள் மனதில் ஓடி அலைக்கழித்து கொண்டிருந்தன.

நேராய் பார்த்த படி அமர்ந்திருந்த காளையவனுக்கோ அவளின் நெருக்கத்தில் இதயத் துடிப்பு இரு மடங்காகி இம்சித்துக் கொண்டிருந்தது.

"ரிலாக்ஸ் ஜீவா..ரிலாக்ஸ்.." என்ற படி தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு அத்தனை பேர் மத்தியிலும் தன் நெஞ்சை அழுத்தமாய் நீவிட விட முடியாத நிலை.

"அவனவன் லவ் ஓவர் ஃப்லோல இதான் சான்ஸ்னு பொண்ணு கிட்ட சின்ன சின்ன ரொமான்ஸ் பண்ணுவான்..நீ என்னடா பயந்து போய் உக்காந்து கிட்டு இருக்க..?" தோழனின் தடுமாற்றம் யோசனையைத் தர மாலையை சரி செய்வது போல் குனிந்து அவனின் காதுகளில் கிசுகிசுக்க இதழ் குவித்து ஊதிய படி உறுத்து விழித்தான்,காளையவன்.

"இந்த கல்யாணத்துல பொண்ணு சீண்டி ரொமான்ஸ் பண்ணா தான் உண்டு.."அழுத்தமான முக பாவத்துடன் சொன்னாலும் அவனின் விழிகளில் அப்பட்டமான தடுமாற்றம்.மித்ராவின் குடும்பத்தின் இளசுகள் கலாய்த்ததில் செவி மடல் வேறு சிவந்து போயிற்று.

"என்னடா பொண்ணுக்கு பதிலா நீ வெக்கப்பட்டு கிட்டு இருக்க..?" தோழனின் நிலையைக் கண்டு எழுந்த புன்னகையை அடக்கிய படி நக்கலுடன் கேட்க ஆயாசமாய் இருந்தது,காளையவனுக்கு.

"நீயும் கல்யாணப் பண்ணிப்பல..அப்போ பாத்துக்குறேன்.."

"இப்டி ஹஸ்கி வாய்ஸ்ல பொண்ணு கிட்ட தான் பேசனும் மச்சீ.." விடாமல் வாரிட நறுக்கென்று கிள்ளினான்,அவனின் கையில்.

எழுந்து நின்ற கிருஷ்ணாவோ விழிகளால் நக்கலாய் பார்த்திட கண்டும் காணாதது போல் கடந்திருந்தான்,காளையவன்.

ஐயரோ மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க "பேசாம தாலிய எடுத்து கட்டிர்லாமா..?" ஒரு கணம் யோசிக்கத் தான் செய்தது.தோளுரச இருவரும் அமர்ந்திருந்த அவளைப் பாதித்ததா என்று தெரியாது.அவனை படுத்தி எடுத்துக் கொண்டிருந்ததே.

சில நிமிடங்கள் கழிய தாலியை கையில் வாங்கி கட்டி மேளம் கொட்ட அர்ச்சதை தூவல்களின் நடுவே அவளின் விழி பார்த்த படி மூன்று முடிச்சிட்டு தன் சரி பாதியாக்கிக் கொண்டான்,ஜீவானந்தம்.

ஒரு மாதத்திற்கு பிறகு,

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் பாதங்கள் சோபாவுக்கு வெளியே கொஞ்சமாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க போர்வையோ பாதங்களை கொஞ்சமாய் தழுவி இருந்தது.

கையை மடித்து கண்களை மறைத்தவாறு சயன நிலையில் தரித்திருந்தவனை எழுப்பி விட ஒலித்த அலாரம் செவ்வனே தன் வேலையை செய்ய பக்கமாய் திரும்பி விழிகளை திறந்தவன் முதலில் கண்டது கட்டிலில் கழுத்து வரை போர்த்திக் கொண்டு உறங்குபவளின் முகத்தை தான்.

தானாக கடையிதழில் வந்து முறுவலொன்று சேர்ந்து கொள்ள கை மறைவில் கொட்டாவி விட்ட படி அலாரத்தை அணைத்தவனின் விழிகள் அவள் முகத்தைத் தான் சில நொடிகள் ஆராய்ந்து கொண்டிருந்தன.

உள்ளூர காதல் அடைத்துக் கிடந்தாலும் இருவரும் சொல்லிக் கொள்ளாதிருக்க வாழ்க்கையை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.அதன் போக்கில் நகரட்டும் என்கின்ற மனநிலை தான் இருவருக்கும்.

குளியலறைக்குள் நுழைந்து குளித்துக் கொண்டு தலையை துவட்டிய படி வந்தவனோ சமயலறைக்குள் நுழையும் வரை அவளுக்கு உறக்கம் கலையவில்லை.காளையவன் வந்து எழுப்பி விடுவது வாடிக்கையாகி இருந்தது,இந்த நாட்களில்.

இருவருக்குமாய் காபி போட்டு விட்டு அவளை எழுப்ப வர போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தவளின் கூந்தல் கலைந்து கிடந்தது.

கட்டிலின் அருகே வந்து நின்று "மித்ரா.." என பேசிய படி அவன் எழுப்ப அலார ஒலிக்கே அசராதவள் காளையவனின் சத்தத்திற்கு எழுந்தமருவாளா என்ன..?

"மித்ரா.."

"ம்ம்ம்ம்ம்ம்.."

"டைமாகிடுச்சு.."

"ம்ம்ம்ம்ம்ம்.."

"எந்திரிங்க.."

"ம்ம்ம்ம்ம்ம்.." என்ற படி அடுத்த பக்கம் புரண்டு படுத்து போர்வைக்குள்  சுருண்டு கொள்ள ஐயோவென்றானது,ஜீவாவுக்கு.

இதற்கு மேலும் அழைத்துப் பயனில்லை.தட்டித்தான் எழுப்ப வேண்டும் என்று புரிந்தவனுக்கு இதயம் படபடத்தது.

தவறுதலாய் அவள் அருகில் வந்தாலே அவனுக்கு இதயம் தாளம் தப்பும்.இதில் தானாக நெருங்குகையில்..?

போதாததற்கு அன்று ஒரு முறை பக்கத்தில் அமர்ந்து தட்டி எழுப்பியவனின் மடியில் தலை வைத்து இடுப்பைக் கட்டிக் கொண்டு அவள் உறங்கிட எச்சில் விழுங்கிக் கொண்டவனின் நிலையை சொல்லவும் வேண்டுமா..?

அவளுக்கு நினைவில் இல்லையென்றாலும் அதை நினைக்கும் போது காளையவனுக்கு தான் நெஞ்சு படபடக்கும்.அதன் பின்னே சுதாரித்து விலகி நின்று தான் அவளை எழுப்புவதே.

"மித்ரா எந்திரிங்க.." என்ற படி அவளின் கன்னத்தை தட்ட அப்போதும் அசைவில்லை.

"அடியேய் எந்திரிடி..படுத்தாத.." பாவமாய் கூறிட மூடிய விழிகளுக்குள் கருமணி அசையவே நிம்மதியானது,காளையவனின் மனது.

"அப்பாடா..எந்திரிச்சிட்டா.." இதழ்கள் முணுமுணுக்க தனக்கான காபியை எடுத்துக் கொண்டு கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஐக்கியமாக பத்து நிமிடங்களில் குளித்து விட்டு வந்தவளோ தன் காபியை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தாள்,அவனுக்கு நேரேதிரே.

எத்தனையோ தடவை அவனுக்கு முன்பே எழுந்து விட முயன்றிருக்க ஒரு போதும் வெற்றி கண்டதில்லை.சலிப்புடன் காபியை பருகினாலும் விழிகள் முன்னே இருந்தவனை அதீத காதலுடன் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது.அனுதினமும் புதுவிதமாய் தெரிந்து இன்னும் காதலைக் காட்டி அவளை வதைத்துத் தான் தொலைக்கிறான்,விடாமல்.

"இங்க பாருங்க மித்ரா..நாம ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க தான்..ஆனா அதுக்குன்னு என்னோட கேரக்டர நீங்களும் உங்களோட கேரக்டர நானும் புரிஞ்சுக்கிற அளவு நமக்கு டைம் இருக்கல..அந்தளவு நாம நெருங்கியும் பழகல..வாழ்க்க ரொம்ப தூரம்..ஸோ நாம புரிஞ்சிக்க டைம் எடுத்துகிட்டு அப்றம் வாழ்க்கய பத்தி யோசிக்கலாம்.." திருமணமான அன்று தாழ்ந்த குரலில் அவன் மொழிந்த வார்த்தைகள் நினைவில் வருகையில் எல்லாம் அவன் மீதான காதல் பெருக்கெடுத்து ஓடுவது மறுக்கக் கூடியதல்லை.

உரைக்கத்தான் இல்லை.ஆனால்,ஒவ்வொரு செயலிலும் அவனின் காதலை உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறான்.

அவளுக்குத் தெரியாமல் அவன் பார்த்திடும் பார்வை..
அவளைக் கண்டவுடன் அவனின் இதழ்களில் குடியேறும் புன்னகை..
அவளிடம் கூட அவளை விட்டுக் கொடுக்காத அவனின் மரியாதையான அழைப்பு..
அவனின் கண்பார்வையிலேயே அவளை வைத்துக் கொள்ள அவன் செய்யும் செயல்கள்..
இவற்றை தாண்டி அவன் காதலை அழகாய் எடுத்துக்காட்ட வேறென்ன வேண்டும்..?

சொற்கள் எனும் வர்ணங்களை விட செயல்கள் எனும் வானவில் அழகு தானே.

ஆதிக்கம் செலுத்திடவில்லை.அடக்கு முறைகள் கொண்டு அவளை அடக்க முயலவுமில்லை.கட்டியவள் என்றாலும் அவளுக்கான இடைவெளியை கொடுத்து தள்ளி நின்று காதல் செய்திட ஏனோ அந்த இடைவெளி தான் அவனின் காதலின் ஆழத்தை உணர வைக்கிறது போலும்.

இடைவெளிகள் எப்பொழுதும் விலக்கி நிறுத்துவது இல்லை.சில சமயங்களில் எண்ணிட முடியா அளவு நெருங்கி நிற்கச் செய்யும்.அதைத் தானோ அவனும் செய்து கொண்டிருந்தான்..?

நெருங்கி நின்று திணிப்பதை விட தள்ளி நின்று அவளின் உணர்வுகளை திறந்திட வைக்கும் காதல் தான் இது.காதல் என்பதை திணித்திருந்தால் அவளுக்குள் காதல் வந்திருக்கக் கூடும்.ஆனால்,மென்மையாய் ஊடுருவி மனதை தட்டி திறந்தெடுக்கும் காதல் தானே அவளின் உயிர்த்தொடும்.

அதை நினைத்து முகத்தில் சின்னப் புன்னகையொன்றுடன் தலையாட்டி சிரித்தவளின் பார்வையை உணர்ந்தாலும் விழி நிமிர்த்தாது இருந்தவனுக்கு தன்னை இயல்பாய் காட்டிக் கொள்வது பெரும் பாடாய் இருந்தது.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து கதைத்த படி மதியத்துக்கும் சேர்த்து உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு கிளம்ப அவளை அவள் பணி புரியும் பள்ளியில் இறக்கி விட்டு தன் அலுவலகத்துக்கு சென்றான்,காளையவன்.

அதே நேரம்,
தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாது குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்,அகிலன்.

நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரிக்கப்பட்டு தம்பியவனுக்கு சில வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அன்று காளையவனுடன் பேசி விட்டு வந்த பிறகும் பலமுறை பேச முயன்றிருக்க அதை பொருட்படுத்தாது உதறி விட்டிருந்தான்,ஜீவா.

இதில் தம்பிக்கு தண்டனை வழங்கப்பட்டதை தாள முடியாது தந்தையும் நோய்வாய்ப்பட்டிருக்க ஏனோ ஒட்டு மொத்தத்துக்கும் காரணம் ஜீவா என்பதாய் அவனின் மனதில் ஒரு விம்பம்.

தன் தவறு உரைக்காத பட்சத்தில் அடுத்தவரின் தரப்பில் இருக்கும் நியாயம் எங்கனம் புரிந்திடும்..?

தலையைக் கலைத்த படி  ஆக்ரோஷமாய் கத்தியவனுக்கு தொழில் ஏற்பட்ட நஷ்டமும் பெருத்த அடியாய்.

அறைக் கதவை இலேசாய் திறந்து கணவனின் நிலையைக் கண்ட ரேகாவுக்குஅவன் மீது கொஞ்சமும் இரக்கம் வரவில்லை.

கணவர்,மைத்துனர் உட்பட மாமனாரின் வண்டவாளங்கள் அறிந்தவளுக்கு ஆத்தரிம் தான் வந்தது.அவளுக்கும் சுயமாய் தொழில் ஒன்று இருந்திருந்தால் நிச்சயம் இவனை விட்டுச் சென்றிருப்பாள்.

தாய் தந்தையும் இல்லை.சொந்தமென்று ஆட்கள் இருந்தாலும் அவள் பாரத்தை சுமக்க அவர்கள் தயாராய் இருக்க வேண்டுமே..?
பெண் குழந்தையை வைத்துக் கொண்டு வெளியில் சென்று அல்லாடுவதை விட எதையும் காட்டிக் கொள்ளாமல் இந்த வீட்டில் இருப்பதே உசிதம் என தோன்றிற்று,அந்த தாய் மனதுக்கு.

தனக்கென்று யோசித்து தனக்காக முடிவெடுக்கும் வரம் இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.கிடைத்தாலும் அநேகமாய் நிலைப்பதில்லை.

யோசித்துப் பார்க்கையில் மனதுக்குத் தோன்றிய முடிவை எடுப்பது கூட வரம் தான்,இன்றைய கால கட்டத்தில்.

தேடல் நீளும்.

2024.05.01


Leave a comment


Comments


Related Post