இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 24-05-2024

Total Views: 13547

ஹால் டிக்கெட் மற்றும் இன்னும் சில விவரங்கள் கொண்ட பிளாஸ்டிக் தாளை வாங்கிக் கொண்ட அன்புநாதன், "இது எப்படி உங்க கையில?" என்று நிரஞ்சனிடம் கேள்வி எழுப்பினார்.

"ரோட்ல மிஸ் பண்ணிட்டாங்க. அன்னிக்கே இதை திருப்பி கொடுக்க முயற்சி பண்ணேன். பட் முடியல."

"அப்ப அன்னிக்கு உங்களை தான் திட்டினாளா என் பேத்தி"

"திட்டினாங்களா?"

"அதை விடுப்பா... நீங்க உள்ள வாங்க. காபி தரேன்" என்று கோ பேச்சை திசைத் திருப்ப,

"இல்ல ஆன்ட்டி. எனக்கு டீ காஃபி பழக்கம் இல்ல. நான் வரேன்." என்று கைகூப்பி கிளம்ப முற்பட்டவனை,

"இருங்க. உள்ள வந்து ஒரு வாய் தண்ணியாவது குடிங்க. அப்படியே நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் கோகிலா.

உள்ளே வந்து அவன் அமர்ந்ததும், "நிஜமாகவே என் பொண்ணு அவனை லவ் பண்றாளா?" என்று அவன் கையில் தண்ணி டம்ளரை தந்துவிட்டு சந்தேகமாக வினவினார் கோகிலா.

"உங்ககிட்ட எப்படி சொல்றது? எங்களுக்கு இங்க சென்னையிலேயே ஒரு ஹோட்டல் இருக்கு. அந்த ஹோட்டலுக்கு உங்க பொண்ணு அபிராமி அரவிந்த் கூட வந்து ரூம் புக் பண்ணி..."

"என்னது?" என்று நெஞ்சின் மீது கை வைத்தார் கோகிலா.

"ஆன்ட்டி ரிலாக்ஸ்... நீங்க பயப்படும் அளவுக்கு ஒன்னும் நடக்கல. என் தங்கச்சி ப்ரெண்ட் ஜனனிக்கும் இந்த அரவிந்துக்கும் ஏற்கனவே கல்யாணம் பேசி முடிஞ்சது கூட உங்க பொண்ணுக்கு தெரியும் நினைக்கிறேன். ஜனனி இந்த விஷயம் கேள்விப்பட்டு, அவ அண்ணன் கூட வந்து கையும் களவுமாகப் பிடிச்சாங்க. நானும் அதே இடத்தில் தான் இருந்தேன். நான் தான் ரூம் மாஸ்டர் கீ கொடுத்து திறந்தேன். என்றான் நிரஞ்சன்.

அதே நேரம் அவனின் அலைபேசி தன் இருப்பை உணர்த்த, எடுத்து யாரென்று பார்த்து, "ஆன்ட்டி, நான் கிளம்பறேன். டைம் ஆகிடுச்சு." என்றவன், ஃபோனில், "சொல்லு கமலி. என்ன விஷயம்?" என்று பேசிக் கொண்டே வெளியேறினான். 


அபிராமி வீட்டை விட்டு வெளியே வந்து கார் கதவை திறக்க முயன்றான். ஆனால் லாக் செய்திருக்க, அவனிடம் சாவி இல்லை. சற்று நேரம் ரோட்டிலேயே நின்று வீடு பார்ப்பதுப் பற்றி கமலியிடம் பேசினான். காரின் வலது பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்தவனை, தன் வண்டியில் தெருவுக்குள் நுழைந்து, வீடு நோக்கி வந்தவள் கவனிக்கவில்லை. வாயில் இரும்பு கதவு திறந்திருக்க, நேராக உள்ளே வண்டியை செலுத்தினாள் அபிராமி.

பிறகு, "ஏன் இப்படி கேட்டை திறந்துப் போட்டிருக்காங்க.!" என்று தனக்குத் தானே சன்னக் குரலில் கேட்டாள். மீண்டும் கேட்டை மூடிவிட்டு, வீட்டுக்குள் செல்லும் போதே, யானைக்கு முன் வரும் மணியோசை போலவே, "அம்மா... ஏன் கேட்டு(gate) திறந்தே இருக்கு? ஒழுங்கா மூடி வைக்கலாம்ல" என்று வினவினாள்.

அதே நேரம், ஃபோன் பேசிவிட்டு கார் சாவி எடுக்க உள்ளே வந்தான் நிரஞ்சன்.

"வயிறு செம்ம ஃபுல். எனக்கு நைட்டு எதுவும் வேண்டாம்மா. டென்ஷன்ல எப்பவும் போல நிறைய சாப்பிட்டு வந்துட்டேன்."

"..."

"என்ன நான் மட்டும் பேசிட்டே இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் உம்முன்னு இருக்கீங்க? என்னாச்சு சண்டையா ரெண்டு பேருக்கும்?!"

ஆன்ட்டி என்று நிரஞ்சன் குரல் கொடுத்தபடி உள்ளே வரவும், அபிராமி கன்னத்தில் பளார் என்று அறை விழவும், நேரம் சரியாக அமைந்தது.

அதிர்ச்சியுற்ற அபிராமி "எதுக்கும்மா இப்ப என்னை அடிச்ச?"

மீண்டும் கை ஓங்கிய கோகிலாவை கண்டு, அபிராமி கழுத்தைத் திருப்பி கண்களை மூட, அன்புநாதன் மற்றும் நிரஞ்சன் கோகிலாவின் கைகளை இருபக்கமும் பிடித்துக் கொண்டார்கள்.

"தோளுக்கு மேலே வளர்ந்த பொண்ணை அடிக்கிறது தப்பு கோகி. நீ அவ பக்கம் விளக்கத்தை இன்னும் கேட்கவே இல்ல. யாரோ சொன்னதை நம்பி உன் பொண்ணு மேல கோபப்படறது தப்பு" என்றார் தாத்தா.

"என்ன ஏதுன்னு இன்னும் விளக்கம் வேற கேட்கணுமா இப்ப? அதான் ஒருத்தருக்கு ரெண்டு பேர் சொன்னாங்களே...."

"இங்க என்ன நடக்குதும்மா. எனக்கு புரியவே இல்ல. ஹே மிஸ்டர் பிளேயர் நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?... நீ எப்படி என் வீட்டுக்கு வந்த? உன்னை யார் உள்ள விட்டது?!" என்று எகிறினாள் 

"திமிரை பாருங்க இவளுக்கு? மரியாதை இல்லாம பேசிட்டு... நீ பண்ண வேலைக்கு உன்னை... கண்டவனோட பழக்கம் வெச்சுகிட்டு என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்க...!" என்று கோகிலா மீண்டும் அவளை அடிக்க முயற்சிக்க, 

"ஆன்ட்டி... பிளீஸ்"

"நீங்க விடுங்க தம்பி. சொல்லுடி அந்த அரவிந்துக்கும் உனக்கும் என்னடி சம்பந்தம்?"

"அரவிந்தா?!!"

"அவன் வந்து என்ன பேச்சு பேசினான் தெரியுமா? இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு, நீ வாழனுமா?"

"அப்படி எதுவுமே இல்லம்மா"

"வாயை மூடு... உனக்கு ஓவர் செல்லமா போச்சு. அதான் ஹோட்டல்ல ரூம் போடற அளவுக்கு போயிருக்க. உன்னை கேள்வி கேட்க ஆளில்லன்னு நினைச்சுட்டியா"

"அம்மா பிளீஸ்..."

"வாயை மூடு... பேசாதேன்னு சொன்னேன்ல... வாய் மேல கையை வை"

"..."

"சொல்லு எதுக்கு அவனோட பழகின? என்ன சகவாசம் இது?"

"..."

"சொல்லு சொல்லுன்னு இங்க கரடியா கத்திட்டு இருக்கேன். சொல்றாளா பாருங்க மாமா"

"நீயே அவளை வாயை மூடுன்னு சொல்லிட்டு, பேசுன்னு சொன்னா எப்படி பேசுவா கோகி" இதை கேட்டு நிரஞ்சன் சிரித்து விட, அவனை அபிராமி முறைத்தாள்.

"ம்க்கும்... இந்த நக்கல் நையாண்டிக்கு ஒன்னும் குறைச்சலில்ல."

"அம்மா... எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்னிக்கு ரூம் போட்டது உண்மை தான்... இருங்க... முழுசா கேளுங்க ரெண்டு பேரும்... ஆனா இது எல்லாமே நானும் ஜனனியும் பிளான் போட்டு தான் செஞ்சோம். அந்த அரவிந்த் நல்லவன் இல்ல. இதை சும்மா ஜனனி வீட்டுல சொன்னா ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் அப்படி செஞ்சோம். அவனுக்கு முழு நேர வேலையே பொண்ணுங்களை ஏமாத்துறது தான். அது தெரிஞ்சு தான் இப்படி செஞ்சோம். இதெல்லாம் இதோ வேடிக்கை பார்த்திட்டு இருக்கும் இந்தாளோட தங்கச்சிக்கு கூடத் தெரியும். கண்டிப்பா அவனை நான் லவ் பண்ணல. அம்மா நம்புமா... பிளீஸ்" என கோகிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

"என்னது பிளானா? உண்மையாவே பிளான் தானா அது?" என்று வினவினான் நிரஞ்சன்.

"நீ எதுக்கு இங்க வந்த? சம்மன் இல்லாம ஆஜராகி, இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் நீ தானே மேன்... சரியான ஜகஜால மன்மதன்..."

"ஹே... கொஞ்சம் அடங்கி பேசு. உன் ஹால் டிக்கெட்டை கொடுக்க தான் வந்தேன்... அப்ப அந்த அரவிந்த் இங்க வந்து கத்திட்டு இருந்தான்"

"அடியேய். தம்பி மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா, நீ கொண்டு வந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறதுன்னு புரியாம முழிச்சிருப்போம்."

"போலீசுக்கு ஃபோன் பண்ணிருக்கலாமே"

"ஆமா... அபிராமி வீட்டுல கூப்பிடுவாங்க... நாம ரெடியா இருக்கணும்னு ஊர்ல இருக்கிற போலீஸ்காரன் எல்லாம் காத்துகிட்டு இருக்கான் பாரு.!! அவன் வாங்கி கொடுத்த வாட்ச், பை எல்லாம் எங்க?" கோகிலா கேட்கவும்,

"என்கிட்ட தான் இருக்கு" என்று அவள் குரல் இறங்கிப் போனது.

"மரியாதையா அதை எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு வர... இன்னொரு முறை இந்த மாதிரி யாருக்காவது ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு, யோசனை இல்லாம பிரச்சனையில் மாட்டிகிட்டு வந்து நின்னன்னு வை... உன்னை கொன்னுடுவேன். புரிஞ்சுதா" என்று காதை திருகினார் கோகிலா.

"ஆ. வலிக்குது ம்மா." என்று காதை தேய்த்தாள் அபிராமி.

"இருங்க தம்பி. எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கீங்க! ஏதாவது சாப்பிட்டு தான் போகனும்"

"ஹான்... ஆன்ட்டி... சர்..." அவன் சரி என்று தலையாட்டும் முன்,

"அம்மா... வேணாம்... நாங்க ரெண்டு பேரும் வெளியே போறோம்." என்று நிரஞ்சன் கையைப் பிடித்து தரதரவென இழுத்துப் போனாள்.

"ஏய்... நில்லுடி" என்று கோகிலா குரல் கொடுத்தும், நிற்காமல் கூட்டிச் சென்றாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். காரை எடு மேன்" என்றாள்.

"நான் எதுக்கு என் கார்ல உன்னை கூட்டிட்டுப் போனும்"

இடுப்பில் கைவைத்து முறைத்தாள். "என் கூட வருவியா மாட்டியா"

"சரி வா" என்று கார் கதவை திறந்து விட்டான்.

காரை கிளப்பியதும், "எங்க போகனும்?" கேட்டான் நிரஞ்சன்.

"சரக்கு அடிப்பியா?" என்று வினவினாள்.

அவள் கேள்வியில் திகைத்த நிரஞ்சன், அவளை திரும்பிப் பார்த்தான். பின்பு, காதைக் குடைந்து, "நீ எதாவது இப்ப கேட்டியா?"

"சரக்கு... போதை... தண்ணி அடிப்பியான்னு கேட்டேன்" அவன் எல்லா பக்கமும் தலையை ஆட்டவும்,

"இல்லயா?!... அப்ப சரி... போ சொல்றேன்"

சிறிது தூரம் சென்றதும், "அங்கே தெரியுதே சூப்பர் மார்க்கெட். அங்க நிறுத்து" என்றாள்.

அவனும் காரை நிறுத்தி விட்டு கூடவே இறங்கினான். இங்கே எதுக்கு செல்கிறாள் என்று ஆர்வத்துடன் நோட்டம் விட்டான்.

அபிராமி, இரண்டு பொட்டலம் புளிப்பு மிட்டாய், இன்னட்டுகள், தகட்டப்பம்(wafer) என்று இனிப்பாக வாங்கினாள். இதை கண்ட நிரஞ்சன், 'சரிதான் சுவீட்டஹாலிக்(தித்திப்பு பிரியை) போலயே' என்று இதழில் புன்னகையுடன் எண்ணினான். ஆனால் அவள் பின்னாலேயே சென்றவன், கடைசியில் அவள் எடுத்தப் பொருளைக் கண்டு குழம்பினான்.

அது சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் போதை சதவிகிதத்தை சாராத தேறல் (non alcoholic wine).

பில்லிங் கவுண்டரில் பொருட்களை வைத்தவள், தொகை எவ்வளவு என்று கேட்டுவிட்டு நிரஞ்சனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் சற்று தொலைவில் நின்று அவளை அவதானிப்பதை அறிந்து, கைதட்டி அழைத்தாள்.

தன்னை தான் அழைக்கிறாள் என்று உணர்ந்து அருகில் வந்தவனிடம், "பணம் கொடுத்துட்டு வா... இவரு தருவாரு வாங்கிக்கோங்க" என்றுவிட்டு பொருட்களை கையில் எடுத்துக் கொண்டாள்.

அவள் கையை பிடித்து நிறுத்தி, "ஹலோ நான் ஏன் தரணும்? என்னால தர முடியாது. உன்கிட்ட காசு இருந்தா நீ கட்டி வாங்கு இல்லன்னா பொருளை வெச்சிட்டு போ..." என்றான் நிரஞ்சன்.

"உன்னால தான் என் அம்மா என்னை அடிச்சாங்க. நீ மட்டும் ரூம் மேட்டர் சொல்லாம இருந்தா எனக்கு பிரச்சனை இல்லாம இருந்திருக்கும். அதோட என்னோட எக்சாம் எழுத முடியாம போனதுக்கும் நான் உன்னை நம்பினது தான் காரணம். இதுக்கெல்லாம் நீ கைமாறு செஞ்சு தான் ஆகனும்"

"லூசு மாதிரி உளறாத... நானா உன்னை ஹால் டிக்கெட்டை மிஸ் பண்ண சொன்னேன்.? நீயா தொலைச்ச; பாவம் பார்த்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். ஆனா அதையும் நீ மதிக்கல. அதே மாதிரி நான் அந்த அரவிந்த் பத்தி உன் வீட்டுல சொல்றதுக்கு முன்னாடியே அரவிந்த் உன் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். நான் தான் காப்பாத்தினேன்."

"இவரு பெரிய ஹீரோ காப்பாத்திட்டாரு! ஏன் அவார்ட் கேளேன்?"

"ஆமா... நான் ஹீரோ தான். ஆனா உன்கிட்ட அவார்ட் வாங்கி என்னை நானே கேவலப்படுத்திக்க மாட்டேன்."

"ரெண்டு பேரும் உங்க சண்டையை வெளியே போய் வெச்சுக்கோங்க. பணம் இல்லன்னா பொருளை வெச்சிட்டு போங்கம்மா. கடைக்குள்ள வந்து குடும்ப சண்டையை போட்டுகிட்டு.! புருஷன் பொண்டாட்டி இப்படி வீதியில் சண்டைப் போட்டா குடும்பம் உருப்புடுமா?" என்று பெரியவர் கேஷ் கவுண்டர் முன் நின்று பேச,

"யாருக்கு யார் புருஷன்? இவனா? ச்சீ ச்சீ... மிஸ்டர் பிளேயர் இப்ப பணம் தர முடியுமா? முடியுமா?"

"ஆமா நான் மட்டும் என்ன உன்னை பொண்டாட்டியாக்க காத்துக்கிட்டா இருக்கேன்! அதென்ன முடியுமா முடியுமான்னு ரெண்டு தடவை கேட்கிற?"

"முடியாது என்கிற பதிலைக் கேட்க எனக்கு பிடிக்காது..."

"ஓஹோ... இவ அப்படியே இந்த அண்ட சராசரத்துகே ராணி. முடியாதுன்னு யாராவது சொன்னா, பஸ்பமாக்கிடுவாங்க... சரியான இம்சை..."

அதற்குள் அவன் ஃபோனை பிடுங்கி அவன் முகத்துக்கு நேராக நீட்டி, "மானம் போகுது... காசு கட்டு, நான் என் ஃபோனை கூட எடுத்துட்டு வரல. அதான் உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்... அக்கவுண்ட்டில் வெச்சுக்கோ... நான் திருப்பி தரேன்" என்றாள் அவன் காதருகில் சென்று.

"இந்த பிளீஸ், சாரி, தேங்க்ஸ் வார்த்தைகள் எல்லாம் உன் அகராதிலேயே இல்லையா?" என்று கேட்டவன், அவளுக்காக பணம் காட்டி பொருட்களை அவள் கையில் திணித்தான். 

பிறகு வண்டியில் ஏறிய அபிராமி, "இங்கிருந்து காரை நான் சொல்ற வரைக்கும் ஓட்டு... புரியுதா?!" என்றவளை,

"இல்ல எனக்கு புரியல... ஓசி வண்டியில ஏறிட்டு, வண்டியோட சொந்தக்காரன் கிட்ட, எவ்வளோ திமிரா, எகத்தாளமா பேசற... இதையெல்லாம் கேட்டு நானும் உன்னை வண்டியில ஏத்திகிட்டு திரியறேன் பாரு, என்னை...."

"வண்டி ஓட்டிட்டே அடிச்சுக்காத... ஓரமா நிறுத்திட்டு டங்கு டங்குன்னு அடிச்சுக்கோ... உன் செருப்புலேயே அடிச்சுக்க... அதான் பெட்டர்."

"ஏய்... மரியாதையா வண்டியை விட்டு இறங்குடி..." என்றான் ஆத்திரத்தில்.

"டி போட்டு பேசின... அவ்வளவு தான்... காவலன் செயலி வெச்சிருக்கேன். தட்டினேன்னு வை, உன்னை அலேக்கா தூக்கிட்டுப் போயிடுவாங்க. ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன் பழக்கம் தானே" என்றவள், தேறல் குடுவையை பற்களால் கடித்து திறந்தாள். பிறகு கடகடவென குடித்தாள்... சில நொடிகளில், அரை பாட்டில் தேறலை காலி செய்தாள். தகட்டப்பத்தை பிரித்து நிரஞ்சனிடம் நீட்டி, "இந்தா இது உனக்கு தான். சாப்பிடு..." என்றாள்.

அவன் வேண்டாம் என்று தலையாட்டினான்.

அதை கண்டு அவள் மீண்டும் தேறலை சற்று உள்ளே தள்ளியதும், அவளின் அலப்பறை ஆரம்பமாகியது.

"இந்தா... வாயை திறடா... உனக்கு தான்..."

"எனக்கு வேணாம்"

"எங்க ஆ காமி. ஆ... வாயை திறக்கப் போறியா இல்லையா....  தின்னு... தின்னு" என்று அவனின் வாயருகே கொண்டு சென்று பின் அவன் வாய்க்குள்ளேயே திணித்தாள். பாதி தகட்டப்பம் அவன் வாயை சுற்றியும், ஆடைகளிலும் தூள் தூளாகி விழுந்தது.

அடுத்து புளிப்பு மிட்டாய் பொட்டலத்தை பிரித்து கிழே சிதற, அவன் காரில் பாதி கொட்டியது. கிழே விழுந்த புளிப்பு மிட்டாயை எடுத்து மீண்டும் அவன் வாய்க்கு கொண்டுப் போகவும் அவன் பதறிப் போனான். வாயை இறுக்கமாக மூடிக் கொண்டவன் புஜத்தில் பட்டென்று அடித்தாள்.

ஒயின் பாட்டிலை தன் கால்களுக்கு இடையில் வைத்துவிட்டு, அவன் பக்கம் திரும்பி, அவன் வாயை குவிக்க வைத்து கிழே விழுந்த புளிப்பு மிட்டாயை எடுத்து போட்டாள்.

உடனே அவள் கையை தட்டி விட்டு, வண்டியை ஓரமாக நிறுத்தி, கார் கதவை படாரென்று திறந்து ஓடிச் சென்று, அவன் வாயில் இருந்த புளிப்பு மிட்டாயை துப்பினான்.

"இந்த ஒயின் போதை தருமா? இல்லையே சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் ஒயின் 0-0.5% தானே இருக்கும்?! ஆனா இவ பண்ற அலப்பறை வேற மாதிரி இருக்கே." என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் திரும்பி அவளிடம், "ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க? எங்க அந்த பாட்டிலை கொடு" என்று கையில் ஒயின் பாட்டிலோடு காரிலிருந்து இறங்கி வந்த அபிராமியிடம் கேட்க, "ஹான் நான் தர மாட்டேன். இது என்னோடது..." என்று அடம் பிடித்தாள்.

"பார்த்திட்டு தரேன் கொடு" என்று அவன் பிடுங்க, "திருடன்... திருடன்... யாராவது பிடிங்க" என்று அவள் கூச்சல் போட, நிரஞ்சன் பதறினான். அந்த பதட்டத்தில் அவன் அவளை தள்ளி விட, அவள் வேண்டுமென்றே சற்று தள்ளி போய் விழுந்தாள். அப்போதும் பாட்டிலை கெட்டியாக பிடித்துக் கொண்டு, "என்... என்னை தள்ளி விட்டுட்டாங்க. காப்பாத்துங்க. எனக்கு அம்மா வேணும்... நான் அம்மாகிட்ட போகனும்..." என்று சின்ன குழந்தை போல அழுது ஆர்பாட்டம் செய்தாள்..

அவள் செய்யும் அலப்பறை கண்டு அவன் திகைத்து, பதட்டம் அடைந்து, கூடவே ஆத்திரம், கோபம் எல்லாம் அவனுள் படர ஆரம்பித்தது. என்ன தான் அவர்கள் காரை நிறுத்தியிருந்த இடம், ஆள் நடமாட்டம் சற்றே குறைவாக காணப்பட்ட சாலை என்றாலும், ஆங்காங்கே வாகனங்கள் சென்றுக் கொண்டிருக்க, அவ்வப்போது ஓரிருவர் நிறுத்தி அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றார்கள். நிரஞ்சன் அவமானமாக உணர்ந்தான்.


Leave a comment


Comments


Related Post