இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 24-05-2024

Total Views: 14982

இதரம் -10

திருமாறன் தேவமல்லி திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. அதுவும் கடந்து சென்ற இரண்டு வாரங்களில் திருமாறன் தேவமல்லியிடம் நடந்து கொண்ட விதம் அவளை குழப்பமான மனநிலைக்குத் தள்ளியிருந்தது. நாள் முழுவதும் மருத்துவமனையே கதியென்று இருப்பவன், இரவானால் அவளை நாடுகிறான். முதல் நாள் கூடலில் இருந்த பேச்சுக்கள் கூட இப்போது இல்லை. இருவருக்குமான இணக்கம் இரவுப் பொழுதில் மட்டுமே இருந்தது. காலையில் மௌனவிரதம் இருப்பவனைப் போல அமைதியாகத் தான் கடந்து செல்கிறான் அவளை. ஆனாலும் அவள் அனுமதியின்றி எதுவும் நடந்தேறிடுவதில்லை. 


மல்லிக்கு குழப்பமாக இருந்தாலும் அவன்பால் சாய துவங்கி இருந்தது அவளின் மனம்.


ஜெகதீஸ்வரி இருவரையும் கண்காணித்துக் கொண்டு தானிருந்தார். மகனின் நடத்தையில் அத்தனை திருப்தி வேறு அவருக்கு. குழந்தைக்காகத் தான் அவளை சகித்திருக்கிறான் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். இனி இருவரையும் பிரிப்பது எளிது என்று உறுதியாக நம்பினார். 


************

ஜெயராஜ் மல்லியைப் பற்றி சேகரித்த தகவல்கள் அனைத்தும் அவருக்கு சாதகமாகவே இருந்தது. 


இனி எல்லாம் தன் வசப்படும் என நம்பிக்கையாக இருந்தார் அவர். 


இந்நிலையில் திருமாறனுக்கு மணியக்காரர் அழைத்திருந்தார். 


"தம்பி நல்லா இருக்கீங்களா?. மல்லி எப்படி இருக்குது!?" என்று ஆவலாக வினவ 


"நல்லா இருக்கோம், அங்கே எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று கேட்டவனிடம்,' அனைவரும் நலம்'என்று உரைத்தவர் தான் பேச வந்த விஷயத்தை கூறினார். 


"ஒங்களைப் பத்தியும்,மல்லியை பத்தியும் விசாரிக்கவும் கருக்குனு பட்டுச்சு தம்பி. அநேகமா ஒங்க வீட்டு ஆளுகளா தான் இருக்கும். அதான் விஷயத்தை உங்க காதுல போடலாம்னு கூப்டேன்." என்றவர் சற்று அமைதிகாத்து பின்னர் 


"தம்பி!" என்று அழைக்க 


"சொல்லுங்கய்யா...?" 


"மல்லி பத்தி ஒங்களுக்கு தெரியாதது இல்ல..." என்று தயங்க 


"நான் பார்த்துக்கிறேன் அய்யா." என ஒரு வரியில் முடித்து விட்டான். 


"இல்ல ஒங்களை ஏமாத்தி கட்டிக்கிச்சுனு அது மேல வெசனமா இருப்பீங்கனு தெரியும்." 


"நீங்களாவது என் கிட்ட காரணத்தை சொல்லி இருக்கலாமே?" என்றான் வருத்தமாக 


"இல்ல தம்பி, எங்கிட்ட தலையிலடிச்சு சத்தியம் வாங்கிக்கிடுச்சு எதுவும் சொல்லக் கூடாதுன்னு. அந்தப் புள்ளை எது செய்தாலும் ஞாயமா இருக்கும்னு நம்புறேன் நானு. அம்புட்டு பெரிய சபையில உங்களை அப்படி சொல்லி இருக்க கூடாது தான். ஆனா அதுக்கு பின்னால காரணம் இல்லாம இருக்காது." என்றார் உறுதியாக 


"தலைபோற காரணமா இருந்தாலும் என் கிட்ட சொல்லி இருக்கலாமே. அதை விட்டுட்டு ப்ப்ச் சரி விடுங்க, எல்லாம் முடிஞ்சது. இனி எதையும் நடந்ததை மாத்த முடியாது. நான் பார்த்துக்கிறேன்" என்றான் அழுத்தமாக. 


"சரிங்க தம்பி. நேரம் கெடைச்சா மல்லியை கூட்டிக்கிட்டு ஊர்பக்கம் வரணும் நீங்க. ஒறவா அதுக்கு நாங்க எல்லாம் இருக்கிறோம்" என்றவர் இணைப்பைத் துண்டிக்க மாறனுக்கு மனம் இளகிப் போனது அவரது அழைப்பில். 



'இப்படியும் மனிதர்கள் இருப்பதால் தான் மனிதம் மாண்டு போகாமல் இருக்கிறது' என்று எண்ணிக் கொண்டான். 


************

"மணியக்காரரே அவ எங்க இருக்கான்னு உங்களுக்கு நெசமாத் தெரியாதா?" என அவரைப் போட்டு உலுக்கிக் கொண்டிருந்தாள் மல்லியின் மூன்றாவது அக்கா தமிழ்மணி. 


"இந்தாரு தமிழு, எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் மறுபடி மறுபடி வந்து கேட்டா நான் என்ன சொல்றது?" என்று அலுப்பாய் பதிலிறுத்தார் அவரும். 


"ஒங்க கிட்ட சொல்லாம அவ எங்கேயும் போவ மாட்டா. நான் அவ மேல அக்கறை வச்சுத்தான் கேட்குறேன் மணியக்காரே. வயசுப்புள்ள எங்கன கெடந்து அல்லாடுதாளோ அதான் கேட்கிறேன் ஒங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிடுங்க" என்று விடாமல் அவள் கேட்க


'ரொம்பத்தான் அது மேல அக்கறை. சரசாதேவி நடிப்பு நடிக்குதுக கழுதைக'என மனதில் திட்டியவர்," தெரியவே தெரியாது "என்று சாதித்தார். 



"எங்க கெடந்து சீப்படுறாளோ தெரியலையே, எல்லாம் அந்த நடுச்சிறுக்கியால வந்தது." என்று மூக்கை சிந்தி முந்தானையில் துடைத்துக் கொண்டு புலம்பியபடி  நடந்த தமிழ்மணி, ஓரக் கண்ணால் மணியக்காரரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள். 



மணியக்காரரோ ஒரு படி மேலே சென்று, "ஏத்தா தமிழு, பேசாம போலீஸ்ல புகாரு குடுத்தா என்ன?" என்று அவள் நம்பும்படியாக கேட்க, தமிழுக்கே ஒரு நொடி,' இவருக்குத் தெரியாது போல' எனத் தோன்றியது. 



மணியக்காரரும் அந்தரீதியில் தான் பேசினார். எத்தனை அனுபவம் வாய்ந்த மனிதர் இவளிடமா ஏமாந்து போவார். லாவகமாக பேசினார் அவளிடத்தில். 


"பொம்பளைப்பிள்ளை வெவகாரம் மணியக்கார்ரே!, நாளைய பின்ன அவளுக்கு கெட்டப் பேரா போயிரும். அதெல்லாம் வேணாம் அதுமட்டுமில்லாம என்னையால போலீசு அது இதுனு அலைய முடியாது." என்று பட்டுக் கத்தரித்தாற் போல நறுக்கென்று சொல்லி விட்டான் தமிழ்மணியின் கணவன் பரதன். 


"ஒங்க விருப்பம் தம்பி. ஏதுக்கும் நான் குடுத்து வைக்கிறேன் புகார, என்ன இருந்தாலும் எங்க ஊரு புள்ள. கட்டிக் குடுத்த எடம் வேறன்னாலும் அவக முயற்சி பண்ணல நானாவது செய்றேன்." என்று அமர்த்தலாய் கூறிவிட்டுச் செல்ல தமிழும், பரதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் கேள்வியாக 




"ஏன்டி இவருக்கு எதுவும் தெரியாது போலவே?" என்று மனைவியிடம் கேட்க

"அப்படித்தான் நினைக்கிறேன் மாமா. இந்த பாவிமக இப்புடியா போவா?!" என நொடித்தபடி நடக்க, அவளது மூத்த அக்காவிடமிருந்து அழைப்பு வந்தது. 



"சொல்லுக்கா... ம்ஹூம் ஒரு சேதியும் தெரியல எங்கன போய் கமுக்கமா இருக்காளோ தெரியல."என்று எடுத்தவுடனேயே பொரிய 


"இருடி இருடி நீ வேற..." என்ற பரதன் கைபேசியை வாங்கினான். 


"அண்ணி நிதானமா தான் விசாரிக்கணும், இங்க இருக்கிற யாருக்கும் அந்த புள்ள இருக்கிற இடம் தெரியல.அவங்களே போலீஸ்'ல கம்ப்ளேண்ட் தரலாம்னு சொல்றாங்க. எனக்கென்னவோ மல்லி எங்கேயோ பாதுகாப்பா இருக்குன்னு தான் தோணுது." என்றவன் 


"ஆமா அந்த டாக்டர் எந்த ஊரு?" என்று யோசித்தவண்ணம் கேட்க


"யாரு, மல்லி சோறாக்கி குடுத்தாளே அந்த டாக்டரா?" என வினவியவள் பின்," மெட்ராசுல இருந்து வந்ததா சொன்னாங்க. ஒரு வேளை அங்க ஏதும் போயிருப்பாளோ...?!" என்று சந்தேகத்துடன் கேட்க 



"இருந்தாலும் இருக்கும் கா. கல்யாணத்துல பாத்த தான. பத்து பவுனு போட்டாரு அவரு!?" என ஆச்சரியத்துடன் தமிழும் ஒப்புக் கொள்ள, பரதனுக்குமே அதே சந்தேகம் தான். 


'பத்து பவுனு என்ன வெலை இருக்கும், அந்த டாக்டரு அம்புட்டு காசுக்காரனா என்ன?, நம்மளையால ஒத்த கிராமு நகர்த்த முடியல' என மனதில் பொறுமியவன் ,"அந்த அளவுக்கு இந்த சின்னவ என்ன செஞ்சிருப்பா அவனுக்கு ?"என்று தான் மனதில் ஓடியது அவனுக்கு. 



"ஏ மாமா பேசிக்கிட்டே இருக்கேன் என்ன ரோசனை ஒங்களுக்கு "என்ற தமிழின் அதட்டலில் சுயம் வந்தான். 



"ஒன்னுமில்லை வாடி !"என்று மனைவியை அழைத்துச் செல்ல, மணியக்காரர் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 


"என்ன சித்தப்பூ போயிட்டாகளா?" என்றபடி வந்து நின்றாள் வெண்ணிலா. 


"போயிட்டாக வெண்ணி. எம்புட்டு வஞ்சகம் பாரேன்.காட்டு பத்தரம் மட்டும் நம்மகிட்ட இல்லாம இருந்துச்சு மல்லியைத் தேடுங்களா இதுங்க.? அதுக்குத்தான் கடவுளா பாத்து வச்சிருக்கான் ஆப்பு. ஒடன் பெறந்தவ மேல கொஞ்சங் கூட பாசமில்லாத கழுதைக." என்று எரிச்சல் பட்டார் அவர். 


"அட போ சித்தப்பூ. இதுங்க பாசத்துல மவுந்துட்டாலும்..."என்று நொடித்த வெண்ணிலா," டாக்டர் கிட்ட பேசுனீங்களா மல்லி எப்படி இருக்காளாம் அவ கிட்ட பேசுனீங்களா?" என படபடக்க 


"இல்ல வெண்ணி டாக்டர் வெளியே இருந்துருப்பாரு போல அதான் விஷயத்தை சுருக்கா சொல்லிட்டு வச்சுட்டேன்" என்றார். 


இங்கே ஜெஆர்எம் பேலஸில் மல்லியைத் தேடி வந்தார் ஜெயராஜ். துணைக்கு ஜெகதீஸ்வரி, வைஷ்ணவி ,வைஷாலி, மூவரும் 


ஒரு மணி நேரம் பேசினார் ஜெயராஜ். இடையிடையே கோபப்பட்ட ஜெகதீஸ்வரியை அடக்கியும், ஆதங்கமாக பேசியும் அவளை பேச விடாமல் செய்த ஜெயராஜ் இறுதியாக ஜெகதீஸ்வரியை பேச அனுமதிக்க 


அவரோ,"மரியாதையா இங்கிருந்து போயிடு. இல்ல உன்னைக் கொல்லக் கூட தயங்கமாட்டேன்" என்று கத்த மல்லி அசராது அவரைப் பார்த்தவள்," உங்க கிட்ட தனியா பேசணும்" என்றாள் அழுத்தமாக ஜெகதீஸ்வரியைப் பார்த்தபடி 


"என் கிட்ட பேச என்ன இருக்கு? அதெல்லாம் தேவையில்லை." என்று மறுக்க ஜெயராஜும் அதே போல கூறி பேசவிடாமல் தடுக்க,முயற்சி செய்ய அவளோ," தனியா பேச வந்தா நான் இங்க இருந்து போறேன். இல்லாட்டி டாக்டர் சார் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போவேன் உங்களுக்கு சரின்னா சரிதான்" என்றாள் அமர்த்தலாய். 


ஜெகதீஸ்வரி யோசனையினூடே நின்றவர்," சரி வா" என்று அழைத்தார் சில நிமிடங்களுக்குப் பிறகு. 


இருவரும் பேசிவிட்டு வந்தவர்கள் அமைதியாக விலக 


"எப்போ கிளம்புற?"என ஜெயராஜ் முறைப்பாய் கேட்க


"நான் ஏன் கிளம்பணும்?" என்று கேட்டவள் மறுநாள் விடியலில் ஜெஆர்எம் பேலஸில் அவள் இல்லை. 


.....தொடரும் 

























Leave a comment


Comments


Related Post