இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 24-05-2024

Total Views: 18997

இதயம் 29

     மினி எதை வேண்டித் தவம் இருந்தாளோ அதற்கான வரம் இப்போது அவள் கண்முன். உலகத்தின் ஒட்டுமொத்த வாசனை மலர்களும் மழையாக அவள் மீது விழுவது போன்ற மென்மையான உணர்வு. 

     பூமியில் தன் பாதம் பதிந்திருக்கிறதா இல்லை தான் மிதந்து கொண்டிருக்கிறோமா என்று தெரியாத அளவு, உடலும் மனதும் பஞ்சைப் போல் மென்மையாக இருந்தது அவளிடத்தில். கண்கள் கண்ணீரில் நனைய அதற்கு எதிர்பதமாக முகம் பூரிப்பாய் இருந்தது. 

     தனக்கும் அவளுக்கும் நடுவில் இருக்கும் குறைந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் குறைத்து அருகில் வந்தான். மனதிற்குள் அவள் நுழைந்துவிட்ட பிறகு தயக்கத்துக்கும், தடுமாற்றத்துக்கும் அவனிடம் இடம் இல்லாமல் போய் இருந்தது.

     நடப்பது அனைத்தும் கனவு இல்லை நிஜம் என்று புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள விடாமல் மினியைத் தடுத்தது சில விஷயங்கள். முதல் ஒன்று, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதால் தன்னைச் சபித்த அவள் தந்தை மற்றும் தமையன் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியம். 

     இன்னொன்று, எப்பொழுது பார்த்தாலும் தன் காதலை அறியாப்பிள்ளையின் வேடிக்கை விளையாட்டு என்று சொன்ன தன்னவனுக்கு அதன் ஆழத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். 

     இது இரண்டையும் மீறி தன் மனம் கவர்ந்தவன் தான் என்றாலும் சாணக்கியனுடன் ஒன்றிக்கொள்ள மனம் வரவில்லை மினிக்கு. மனம் அதிகம் நாடிய விஷயம் தான் என்றாலும் சில சூழ்நிலையில் அது இரண்டாம் பட்சமாகித்தான் போகிறது என்பது மினி கற்றுக்கொண்ட புதிய பாடம். அவளின் முன்னால் இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால், தன் மன எண்ணத்தைப் பற்றி சாணக்கியனிடம் சொல்வது. 

     “நானாக இறங்கி வருவதால் பந்தா செய்கிறாயா“ என அவன் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற நியாயமான பயம் அவளுள் இருக்கத்தான் செய்தது.

     மனைவியைப் பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் கணவனைப் போல், தன் காதல் மனதை வெளிப்படுத்திவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் தன்னவனைப் பார்த்ததும், மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது மினிக்கு.

     தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “நான் கட்டாயம் உங்க வீட்டுக்கு வரேன். எப்ப இருந்தாலும் அது தான் நான் வாழப்போற வீடு. ஆனா இப்ப என்னால் அங்கே வர முடியாது“ தேங்காயை இரண்டாக உடைப்பது போல் நேடியாகவே சொன்னாள்.

     சாணக்கியன் தலை கவிழப்பார்க்க அதற்குத் தான் அனுமதிக்க மாட்டேன் என்பதாய் மனதில் நினைத்தவள், “என்னோட படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்த உடனே நான் அங்க வந்திடுறேன்“ வேகமாகச் சொன்னாள்.

     சாணக்கியன் அவளைக் கூர்மையாகப் பார்க்க, அவன் கரங்களை எடுத்துத் தன் கரங்களுள் பொத்திக் கொண்டவள், தன் மன வைராக்கியத்தை எடுத்துச் சொன்னாள். அவனுக்கு அவள் உள்ளம் புரிந்தது. கூடவே அவள் செய்ய நினைப்பது மிகச்சரியானது என்பதும் புரிந்தது.

     ஆளை மயக்கும் மந்தகாசப் புன்னகை ஒன்றைச் சிந்தியவன், “எனக்காக எத்தனையோ செய்திருக்க, உனக்காக இன்னும் இரண்டு வருஷம் நான் காத்திருக்க மாட்டானே என்ன. இந்த ராஜாவோட ராணிக்காக சதுரங்க இல்லத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்“ என்றான்.

     மற்றவர்களைப் போல் தானும் சந்தோஷமாக வாழ வேண்டும், பெண்ணொருத்தியால் அளவுக்கு அதிகமாகக் காதலிக்கப்பட வேண்டும், தன்னைப் போல் குட்டி குட்டியாக உருவம் கொண்ட தன் பிள்ளைகளுடன் விளையாட வேண்டும் என்று தன் மனதின் ஏதோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த பேராசை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்தவள் மினி தான். 

     அவளுக்காக அவனை மீறி வெளிவந்த உணர்வுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அவள் தலையில் கை வைத்து வருடினான் மென்மையிலும் மென்மையாக வருடினான் சாணக்கியன். 

     வெளியில் இருந்து பார்க்கும் மற்றவர்களுக்கு அது அப்படித்தான் தெரியும். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரைப் பொறுத்தவரை அது சாணக்கியன் கொடுத்த அன்பான முத்தம். உயிரை உருக்கி அவன் கொடுக்க, வாங்கிக்கொண்டவளின் உயிரும் தன்னால் உருகத்தான் செய்தது.

     நாம் ஒருவர் மீது உண்மை நேசம் கொண்டிருந்தோம் என்றால் இந்த ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர்ந்து அந்த நபரை நம்மை நோக்கி இழுத்து வரும் என்று சொல்வார்கள். அப்படி சாணக்கியன் மீது மினி கொண்டிருந்த உண்மை நேசம் அவனை அவளுக்குப் பெற்றுக்கொடுத்தது. 

     காதலில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் கட்டாயம் தேவை. நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே எல்லாம் நடக்க வேண்டும் என்று யார் நினைத்தாலும் அது சாத்தியம் இல்லாத ஒன்று தான். 

     தன் துணை தனக்குக் கொடுக்கும் காதல் முழுவதையும் பெற்றுக்கொண்டு, அதில் முழுத் திருப்தியடைந்து தான் மகிழ்ந்த அளவு தன் துணையும் மகிழ வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒருவர் கொடுக்க ஆரம்பிக்கும் காதலின் இன்பம் சொர்க்கத்தின் அரம்பையர்கள் ஆட்டத்திலும் கிடைக்காது. அப்படியொரு இன்பத்தில் தான் இப்போது மகிழ்ந்து கொண்டிருந்தாள் மினி.

     அவள் கொடுத்த அன்பில் நனைந்து, முழுத் திருப்தியுற்று இப்போது அதைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்து இருந்தான் சாணக்கியன்.

     “அப்ப இனிமேல் காலேஜில் செஸ் விளையாட வரமாட்டியா?“ ஆசையாகக் கேட்டான். “இல்ல சாணக்கியன், இத்தனை நாள் வேண்டா வெறுப்பா தான் இன்ஜினியரிங் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா என்னோட அப்பா சொன்ன வார்த்தை என் காதுக்குள் கேட்டுக்கிட்டே இருக்கு. 

     என்னைப் பெத்து வளர்த்துப் படிக்க வைச்சதில் அவருக்கு இலட்சக்கணக்கில் நஷ்டம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தார். அப்படி எதுவும் நஷ்டம் இல்லைன்னு நான் அவருக்கு நிரூபிக்கணும். 

     நான் செஸ் கத்துக்கிட்டது என்னோட அத்தான் ஜீவன்“ பேச்சை ஆரம்பித்தவள் அவன் என்ன நினைப்பானோ என்று நிறுத்தினாள். “எனக்குப் பிடிச்சாலும், பிடிக்காமப் போனாலும் அவன் உன்னோட அத்தான் தான். எனக்காக நீ அவன்கிட்ட பேசாம இருக்க வேண்டிய அவசியம் இல்லை“ என்றான்.

     சந்தோஷமாய் புன்னகைத்தவள், “அவரை ஜெயிக்க தான் செஸ் கத்துக்கிட்டேன். அப்புறம் உங்க மனசை ஜெயிக்க அதைத் தொடர்ந்து விளையாடினேன். எனக்கு அது ஒரு பொழுது போக்கு தான். உங்களை மாதிரி உயிர் இல்லை“ என்க, புரிந்ததாய் தலையசைத்தாள். 

     “நான் விளையாடலன்னா என்ன, அது தான் நீங்க இருக்கீங்களே. ஒரு வீட்டில் ஒரு கிராண்ட்மாஸ்டர் இருந்தாப் போதும்“ தோள்களைக் குலுக்க, “கிராண்ட்மாஸ்டர் இல்லை உலகநாயகன்“ என அவள் கூற்றைத் திருத்தினான்.

    “நீங்க சொல்ல வருவது“ ஆர்வம் மேலோங்கக் கேட்டாள். “உன் மேல் நம்பிக்கை வந்து இனி நீ தான் என்னோட எதிர்காலம் என்று முடிவு பண்ண அடுத்த நொடி என்னோட கடந்தகாலக் கசப்பு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன். என் ராணி நீ இருக்க, வேற எந்த ராணியைப் பார்த்து நான் பயப்படணும் சொல்லு“ சிரிப்புடன் சொன்னான். 

     இந்த நிமிடம் அவனை விட அவன் மாற்றத்தை அதிகம் ரசித்தவள், அதன்பிறகே அவன் வார்த்தைகளின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொண்டவளாக, “அப்ப நீங்க மறுபடி விளையாடப் போறீங்களா?“ நின்ற இடத்திலே குதித்தாள். பொதுவெளியாக இல்லாமல் போய் இருந்தால் ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டிருப்பாள். அத்தனை பூரிப்போடு அவளுள்.

     “ஆமா, கொஞ்சம் தாமதமாகும் தான். ஆனால் எங்கே வைத்து நான் அவமானப்பட்டேனோ அதே இடத்தில் நான் மறுபடியும் ஜெயிப்பேன்“ ஆணித்தரமாகச் சொன்னான். 

     தன்னை விட தன்னை அதிகம் விரும்பும் மினியின் கரத்தை அவன் பிடித்த நேரத்தில் வெற்றிக்கான தேவி நிரந்தரமாக அவனோடு வாசம் செய்ய வந்துவிட்டாள். இலட்சியத்திற்குத் துணை நிற்கும் உற்ற துணை கிடைத்த சந்தோஷத்தில் அசுர பலம் வந்திருந்தது அவனுக்கு. இனிமேல் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் வெற்றி தான். 

     “நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் சாணக்கியனா ஜெயிப்பதை விட பகீரதான ஜெயிக்க ஆசைப்படுறேன்“ தன் மனவிருப்பதைச் சொன்னான்.

     “இது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயமாச்சே. இன்னும் எத்தனை ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தான் எனக்குக் கொடுக்கப்போறீங்க“ தலைகால் புரியவில்லை அவளுக்கு.

     “எனக்கு நீங்க சாணக்கியனாத் தான் அறிமுகம் ஆனீங்க. ஆனா நான் ஈர்க்கப்பட்டது பகீரதன்கிட்ட தான்“ என்க, நீ இருக்கியே என்று சிரித்தான் சாணக்கியன் என்கிற பகீரதன். அவரவருக்கான பாதையை வெற்றியோடு கடந்து மீண்டும் ஒன்றாகச் சந்தித்துக்கொள்வோம் என்கிற முடிவோடு விடைபெற்றனர் புதுக்காதலர்கள் இருவரும்.

     மகனிடம் தெரியும் தலைகீழ் மாற்றத்தில் துள்ளித்திரிந்தார் அரசன். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவில் சற்றே வருத்தம் தான். மகனுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறதே என்ற சராசரி தகப்பனின் வேதனை அது.

     தாமதமாக ஆரம்பித்தாலும் தரமாக வாழ்வேன் அப்பா என்று சொல்லி அவர் மனதைக் குளிர்வித்து இருந்தான் சாணக்கியன். ஜீவன் கூட இந்த விஷயம் தெரிந்து ஆச்சர்யப்பட்ட அளவு சந்தோஷமும் அடைந்தான். அவன் மனதை அரித்துக்கொண்டிருந்த குற்றவுணர்ச்சி ஒன்றில் இருந்து நிரந்தர விடுதலை கிடைத்திருந்தது. 

     அந்த மகிழ்ச்சியில் மனைவியிடம் பழையபடி அவன் பேசத் துவங்கினான். வதனிக்குத் தான் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “உங்களோட நண்பனுக்கு எதிரா நான் காய் நகர்த்தும் போது என்னைத் திட்டினீங்க, பேசாம இருந்து தண்டிச்சீங்க. இப்ப அவர் வாழ்க்கைக்கு ஒரு பதில் கிடைச்சதும் என்கிட்ட வரீங்க. அப்ப உங்களுக்கு என்னை விட அவர் தான் முக்கியம் இல்லையா?“ சித்திரை வெயிலை விட மோசமாகக் காய்ந்தாள்.

     “இத்தனை வருஷத்தில் என்னை ஒரு துளி கூட நீ புரிஞ்சுக்கல என்பது இதன் மூலமா நல்லாத் தெரியுது. நான் உன் மேல் கோச்சுக்கிட்டதும் சரி, பேசாமல் இருந்ததும் சரி, சாணக்கியனுக்கு எதிரா நீ நடந்துக்கிட்டதுக்காக இல்லை. மாறா மினியோட வாழ்கையை உன் இஷ்டப்படி வளைக்க நினைச்சதுக்காக“ இதுவரை வதனி பார்த்தே இராத கோபத் தோரணையுடன் பேசினான் ஜீவன்.

     “மினி சின்னப்பொண்ணு, அவளுக்கு நல்லது நினைச்சு தான் அவளோட வாழ்க்கையில் தலையிட்டேன்“ வழக்கமான பல்லவியை அவள் பாட, “இதே விஷயத்தை தான் நிலா உனக்குச் செய்தா. அப்ப பெரிய பாவமாத் தெரிஞ்ச விஷயம் நீ செய்யும் போது மட்டும் எப்படி தர்மமாச்சு“ என்க சாட்டையால் அடித்தது போல் உணர்ந்தாள் வதனி.

     “அது… நிலா பண்ணது தப்பு“ சமாளிப்பதற்காகச் சொன்னாள். “அப்ப இருந்த மனநிலை இல்லாமல் இப்ப இருக்கிற மனநிலையோடு யோசித்துப் பார். நிலா செய்தது தப்பா சரியான்னு புரியும். அடுத்தவங்க மேல் பெரிய பழியைத் தூக்கிப் போடும் முன்னாடி நாம எல்லாவிதத்திலும் ஒழுங்கான்னு யோசித்துப் பார்க்கணும்“ என்க, வதனிக்கு அழுகை வந்துவிட்டது. 

     எப்படியென்றாலும் அவளுக்கென இந்த உலகத்தில் இப்போது மிச்சம் இருப்பது ஜீவன் மட்டும் தான். அவன் எப்பொழுதும் தன் பக்கம் நிற்க வேண்டும். தான் நினைப்பது எதுவாயினும் எதிர்த்து பேசாமல் உடன் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது அவளின் விருப்பம். 

     தான் யோசிப்பது, செய்வது அனைத்தும் சரி என்று ஆதிக்க குணம் கொண்டவள் அவள். அருகில் இருந்து பார்ப்பவர்களால் அன்றி மற்றவர்களால் அதை அவ்வளவு சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. 

     இத்தனை வருடங்களாய் அவள் மீது இருக்கும் காதலால் ஜீவன் அவளுக்கு ஏற்றது போல் நடந்து கொண்டான். அவனையும், அவளையும் தனித்தனியாக நிற்க வைக்கும் ஒரே விஷயம் சாணக்கியன் மட்டுமே. 

     வதனி மட்டும் அல்ல, உலகில் முக்கால்வாசி நபர்களுக்கு தன்னைப் பெற்றவர்களில் ஆரம்பித்து நண்பர்கள், கணவன் மனைவி வரை தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்கிற நினைப்பு உண்டு. நேர்மையான மனம் கொண்ட யாராலும் அவ்வளவு எளிதில் மறுக்க முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் முதலாளித்துவத்தின் அடையாளம் அது. சிலர் அதை வெளியே காட்டிக்கொள்வார்கள் சிலர் தங்களுக்குள் மறைத்துக்கொள்வார்கள். வதனி இரண்டாம் ரகம்.

     அழுது கொண்டே அறைக்குள் செல்ல முயன்றவள் கரத்தைப் பற்றியவன், “குறையில்லாத மனிதர்கள் என்று யாரும் கிடையாது. அடுத்தவங்களோட குறைகள் தெரியும் அளவு நமக்கு நம்ம சொந்தக் குறைகள் தெரிவதில்லை. அதனால் நாம என்னவோ பெரிய நியாயவாதிகள் மாதிரியும் மற்றவர்கள் எல்லோரும் குற்றவாளி மாதிரியும் நினைக்கிறோம். 

     உன்கிட்ட இருக்கிற குறைகளைத் தாண்டித் தான் நான் உன்னைக் காதலிச்சேன், காதலிக்கிறேன் என் உயிர் இருக்கும் வரை உன்னே இதே அளவு காதலிப்பேன். மினி சாணக்கியனைக் காதலிப்பது மாதிரி“ என்றான்.

     பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் வதனி. “சாணக்கியனும் நீயும் தவறா இணை சேர்ந்தவங்க. உங்களில் யார் காதல் உண்மை, யாரோடது தவறு என்கிற விவாதத்துக்கு நான் வரல. அவனுக்காக சில விஷயங்களைப் பொறுத்துப்போக உனக்கு வரல. உன் மனசைப் புரிஞ்சுக்கிட்டு உனக்கு ஏத்த மாதிரி நடந்துக்க அவனுக்கு வரல. தப்பை இரண்டு பேர் மேல் வைச்சுக்கிட்டு நீ முழுக்க முழுக்க சரி, அவன் முழுக்க முழுக்க தப்புன்னு சொன்னா அது அநியாயம் இல்லையா?“ என்க, தலை கவிழ்ந்தாள் அவள்.

     “இப்ப நான் இதைப் பத்தி பேசினது உன்னைக் குத்திக் காட்டுறதுக்காக இல்லை வதனி, இனிமேலாவது சாணக்கியன் மேல் தப்பு இல்லன்னு நீ புரிஞ்சுக்கணும். அவனுக்கும் மினிக்குமான பாதையில் தலையிடாமல் இருக்கணும்“ என்க, முழுதாக அவன் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் கூட, ஜீவன் உடனுடான தன் வாழ்க்கை நல்லபடியாகச் செல்வதற்கு தான் அமைதி காக்க வேண்டியது அவசியம் என்பது புரிந்தது. அதனால் தங்கையின் வாழ்க்கையை அவளே பார்த்துக்கொள்ளட்டும் என்கிற முடிவுக்கு வந்தாள்.

     மினி மற்றும் சாணக்கியனின் நாள்கள் வண்ணமயமுடன் நகர்ந்தது. இருவரும் தங்கள் இலட்சியத்தை அடையும் வரை கனவுகளிலும், கற்பனைகளிலும் மட்டுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளலாம் என்று ஒருமித்தமாக முடிவு செய்திருக்க, அதன்படியே நடந்து கொண்டனர்.

     ஒருபக்கம் இருபது வயதுக்கு குறைவானர்களுக்கான உலக சதுரங்கப் போட்டிக்கு பிரியாவைத் தயார் படுத்துவது, இன்னொரு பக்கம் மூத்தோருக்கான போட்டியில் தன்னுடைய சொந்த விளையாட்டு என்று சாணக்கியன் என்கிற பகீரதன் அதிக பிஸியாக இருந்தான். மினியும் படிப்பில் படு பிஸியாக இருந்தாள். 

      நடுவில் திட்டமிட்டபடி குழந்தை மற்றும் கணவனுடன் தாயகம் வந்திருந்தாள் நிலா. அவள் எப்பொழுது வருவாள் என்று காத்திருந்தவன் தான் என்றாலும் அவள் வந்த நேரம் சாணக்கியன் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. அவனைச் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நிலாவுக்கு. தமக்கை பெற்றெடுத்திருந்த ஆசை மருமகனை இரவும் பகலும் தன் மார்பில் சுமந்தான் அன்பு தாய்மாமன்.

      விஷயம் கேள்விப்பட்டு நேரே சதுரங்க இல்லம் வந்தாள் மினி. வந்த அடுத்த கணத்திலேயே அவளுக்காக தன் இல்லத்தில் சாணக்கியன் செய்திருந்த மாற்றம் காணக்கிடைத்தது. கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது. இத்தனை நாள்களாக சாணக்கியன் வீட்டு கூரையின் மீது ஒற்றையாக நின்ற ராஜாவுக்கு ஜோடியாக ராணிக்கு அருகில் இடம் கிடைத்திருந்தது.

     தம்பி மறுவாழ்வுக்குத் தயாரானதே பெரிய சந்தோஷம் என்னும் போது, துணையாக அவன் தேர்ந்தெடுத்திருந்த மினியை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், இனி தம்பியைப் பற்றிய கவலைகளை மறந்துவிடலாம் என்னும் நினைப்பில் ஆனந்தமாய் ஆகாயத்தில் பறந்து, தம்பி மற்றும் தந்தையின் அள்ளஅள்ளக்குறையாத நினைவுகளைப் பொக்கிஷமாக சேகரித்துக்கொண்டு தன் நாடு வந்து சேர்ந்தாள் நிலா.

     பாரிவேந்தனைப் பற்றி நிலா கேட்ட போது, “அவன் என் மகன் என்ற நினைப்பே என்கிட்ட இல்ல. அவன் எப்பவும் ஜீவனோட பையன் தான். அந்த வதனி கூட பசங்களுக்கு நடுவில் வேற்றுமை பார்க்க வாய்ப்பிருக்கு. ஆனா ஜீவன் பார்க்க மாட்டான்“ அருகே இருந்து பார்த்ததைப் போல் சொன்ன தன்னவனை நினைத்து மனம் பூரிக்காமல் இருக்க முடியவில்லை மினியால். நாளும் பொழுதும் வெவ்வேறு காரணங்களால் அவளை தன்னை நோக்கி இழுத்துக்கொண்டே இருந்தான் அவன்.

     

 


Leave a comment


Comments


Related Post