இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ- (இறுதி அத்தியாயம்) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 24-05-2024

Total Views: 21881

இதயம் 30

     Standard  Chess, Rapid Chess, Blitz Chess, Bullet Chess, Round Robin Tournaments, Swiss System Tournments, Knockout Tournaments என எல்லா வகைப் போட்டிக்கும் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்தனர் பிரியாவும், சாணக்கியனும்.

     எங்கு விட்டிருந்தானோ அங்கிருந்து புத்தம் புதிதாய் ஆரம்பித்திருந்தான் சாணக்கியன். முன்னிருந்த வேகம் மற்றும் விவேகம் அப்படியே இருந்தது அவனிடத்தில். அவனை விட திறமைசாலி யாருமே இல்லையா என்றால் நிச்சயம் இருந்தார்கள். சாணக்கின் வியக்கும் அளவு, தடுமாறும் அளவு சமார்த்தியமான வியூகங்களை அமைத்து அவனை ஆச்சர்யப்பபடுத்திய எத்தனையோ நபர்களை இந்த இரண்டு வருட பயணத்தில் அதிகமாகவே கண்டான். 

     ஆனால் அவர்களையும் தனக்கு ஏற்றபடி காய் நகர்த்த வைக்கும் திறமை அவனிடம் இருந்தது. ஏதாவது ஒரு முக்கியமான காய்க்கு குறி வைக்கிறாயா? அந்த முயற்சியில் குறைந்தபட்சம் மூன்று காய் நகர்த்துதலையாவது சாத்தியப்படுத்தி இருப்பாய் தானே. அது எனக்குப் போதும். அதற்குள் நான் உனக்கு வேறு ஒரு பக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவேன். 

     என் ராணியை நீ கைப்பற்றினால் கூட அதைத் திரும்ப எடுக்கும் வித்தை எனக்குத் தெரியும். அப்படியே எடுக்க முடியாமல் போனால் கூட மற்ற காய்களைக் கொண்டு என்னால் உன்னை வீழ்த்த முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு விளையாடினான். 

     ஆனால், இருபது வயது மதிக்கத்தக்க தாய்லாந்து இளைஞன் ஒருவனுடன் ஆடிய ஆட்டம் இரண்டு நாள் சாணக்கியனின் உறக்கத்தைப் பறித்து இருந்தது. காரணம் அவன் மீண்டெழுந்த பின்னர் சந்தித்த முதல் தோல்வி அவனுடன் நடந்த போட்டியில் தான்.

     மிகக்குறுகிய காலகட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருந்த அவன் அந்த வெற்றிக்கு தகுதியானவன் தான் என்பது சாணக்கியனின் எண்ணம். ஒற்றை மந்திரி மற்றும் ஒரு குதிரையை வைத்து அவன் தன் ராஜாவைக் கைப்பற்றிய விதம் கண்டு அசந்து போனான் சாணக்கியன். 

     அவன் உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படுவான் என்பது நிச்சயம். அங்கே அவனை வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் பயிற்சி அவசியம் என்று முடிவு செய்து அதற்கான வழியில் இறங்கினான் சாணக்கியன்.

     பயிற்சி என்று அவன் செய்தது மன அமைதி தரும் யோகா, சரியான முடிவை விரைவாக எப்படி எடுப்பது, எடுத்த முடிவை சரியாக எப்படி செயல்படுத்துவது என்பதைப் பற்றிய மனநிலை சார்ந்த புத்தகங்கள் படிப்பது, சிறந்த தலைவர்களின் மோட்டிவேஷனல் ஸ்பீச் கேட்பது போன்றவை தான். இப்படியாக தன்னைச் சுற்றி நாளும் பொழுதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொண்டான். 

     பகீரதன் என்னும் அவன் அடையாளத்தைக் கண்டுகொண்ட சிலர் அவனைக் கேலி பேச முயற்சிக்க அதனை எல்லாம் கண்டும்காணாமல் விட்டவன் மினியை மனதில் கட்டாயமாய் நினைவுக்கு கொண்டு வந்து தன் விளையாட்டில் மட்டும் கவனத்தைச் செலுத்தினான். 

     எழிலுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. நண்பனுக்குத் தன்னால் முடிந்தவரையில் எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தான். மினியைத் தவறாக நினைத்ததற்காக தேடிச்சென்று மன்னிப்புக்கேட்டான். அவள் இல்லை என்றால் இப்போது தன் நண்பன் இல்லை என்பது அவனுக்கும் புரியத்தான் செய்தது.

     மினியும் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினாள். தனக்கு அ, ஆ கூடத் தெரியாத கணினித்துறை என்று இத்தனை நாள்கள் மனம் சுணங்கிப்போய் கிடந்தவள் இப்போது அதில் இருக்கும் யாவற்றையும் தன் விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாள். அவள் உழைப்பு பலன் கொடுத்தது.

     நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த நேரம் கோடிங் எழுதுவதில் கில்லாடியாகிப் போனாள். ப்ராஜெக்ட்டை கூட தனியாகச் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினாள். 

     ஆரம்பத்தில் அவளுக்கான படிப்புச் செலவைத் தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சாணக்கியன் முன்வர, “ஜீவன் அத்தான் கொடுக்கும் பணத்தை மீண்டும் அவரிடம் அவரின் பிள்ளைகளுக்கு நகையாக திரும்பிக்கொடுத்துவிடலாம் என்கிற நினைப்பில் இருக்கிறேன்“ என்க, அத்தோடு வாயை மூடிக்கொண்டான்.

     மினிக்கு பெரிய கம்பெனிகளில் இருந்து வேலை வாய்ப்பு வந்தது. வெளிமாநிலத்தில் இருக்கும் இரண்டு கம்பெனிகளை விடுத்து சென்னையில் இருக்கும் கம்பெனி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள்.

     “ஏன் மா இப்படி, அந்தக் கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்து இருந்தால் உனக்கு வெளிநாடு வாய்ப்பு கூட கிடைத்திருக்குமே. உன் தொழிலில் உனக்கென்று ஒரு முன்னேற்றம் கிடைத்திருக்குமே“ என்று வருந்தினான்.

     “என் விருப்பம், என் மரியாதை, என் சம்பாத்தியம் எல்லாம் முக்கியம் தான். ஆனா அதை நான் வெளிமாநிலம் இல்ல வெளிநாடு போய் தான் சம்பாதிக்கணும் என்பது இல்லையே. எனக்கு இங்கே இருக்க தான் பிடிச்சிருக்கு. யாரும் இல்லாத அநாதை மாதிரி ஹாஸ்டலில் தங்கி இருப்பதற்கு இங்கே சாணக்கியனுடன் இருப்பதில் தான் எனக்கு நாட்டம் அதிகம்“  தன் மனதைச் சொன்னாள் மினி.

     காணாததைக் கண்டது போல் சாணக்கியனை எப்போதும் அவள் உயர்த்திப் பேசுவதைக் கேட்டு வழக்கம் போல் நெஞ்சம் முழுதும் அமிலமாக எரிய, “இதே மாதிரி அந்த பகீரதன் நினைப்பாரா சொல்லு. விளையாடுவதற்காக வெளிமாநிலம் இல்ல வெளிநாடு கூட தனியாப் போவார். அவருக்கு யாரையும் விட விளையாட்டு தான் முக்கியம். நீ தான் உன்னை விட அவரை முக்கியமா நினைக்கிற. பைத்தியக்காரி“ என தங்கையைத் திட்டினாள்.

     பெருமூச்சு விடுவதைத் தவிர்த்து ஜீவனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் புரியவைக்கலாம். ஆனால் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பவளை என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை.

     “எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது அக்கா. எனக்கு, எனக்குப் பிடிச்சவங்களோட இருக்கணும். அதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதுக்காக அவரும் என்னை மாதிரியே யோசிக்கணும் என்று கட்டாயப்படுத்த முடியாதே . எப்படிப் பார்த்தாலும் அவர் வேறு நான் வேறு. எங்கள் இருவருக்குமே ஆசாபாசம் வேறவேற தானே“ கூலாகச் சொன்னாள் மினி.

     “திருந்திடாதீங்க. எப்ப பார்த்தாலும் இப்படியே இருங்க. ஆண்கள் இன்னும் பல காலத்துக்குப் நம்மைப் போட்டு மிதிக்கட்டும்“தன்னை மறந்து கத்தினாள் வதனி.

     “இன்னும் எத்தனை நாள்களுக்குத் தான் இதையே சொல்லிக்கிட்டு இருக்கப்போறீங்க அக்கா. காலம் மாறிப்போச்சு. இன்றைய காலகட்டத்தில் பெண்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கும் பல ஆண்கள் தலையெடுத்துட்டாங்க. இல்லன்னு நீங்க சொன்னா அது துரியோதனன் நகர்வலம் போன கதைன்னு நான் சொல்வேன்.

     நான் இங்க வருவது, உங்ககிட்ட பேசுவது அவருக்குப் பிடிக்காது. ஆனா ஒருமுறை கூட இதைப் பத்தி அவர் என்கிட்ட பேசினது கிடையாது. அப்படியே ஏதாவது சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் அது எனக்குத் தெரியும். நீயா நானான்னு பார்க்கும் பழக்கம் என்கிட்ட கிடையாது. சாணக்கியன் கிட்ட கூட அது கிடையாது.

     வீடு என்று இருந்தால் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். வித்தியாசமான விருப்பு, வெறுப்புகளும் இருக்கும். தம்பதியர்களுக்குள் சின்னக் கருத்து வேறுபாடு வட வரலன்னா, அங்கே சத்தமே இல்லாமல் ஒருவர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதும் இன்னொருத்தர் தன் காதலுக்காக பொறுத்துப் போகிறார் என்றும் அர்த்தம்“ மறைமுகமாக அக்கா அத்தான் வாழும் வாழ்க்கையை குத்திக்காட்டிவிட்டு இல்லம் திரும்பினாள் மினி.

     படிப்பு முடிந்து சாணக்கியன் வீட்டிற்கு மொத்தமாக குடிவந்துவிட்டாள் மினி. அவளைப் பற்றி அக்கம் பக்கம் சிலர் தவறாகப் பேச, அரசன் வெகுண்டெழுந்து, “யாரு டா அது என் மருமகளைப் பத்தி பேசுவது“ என்று சண்டைக்குச் சென்றார்.

     மினி அந்த வீடு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. இந்த நாள்களில் ஒருமுறை கூட சாணக்கியன் சதுரங்க இல்லம் வந்திருக்கவில்லை. உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக புள்ளிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். கூடவே பிரியாவுக்காகவும் அவன் தான் உடன் இருந்தான். எடுத்துக்கொண்ட பணியை இடையில் விட முடியவில்லை அவனால். 

     இரண்டு வருட அவன் தீவிர முயற்சியின் காரணமாக, பிரியாவுக்கு இருபது வயதுக்கு குறைவானவர்களுக்கான சதுரங்க உலகக்கோப்பையிலும், அவனுக்கு ஏனையோர்களுக்கான உலகக்கோப்பையிலும் வாய்ப்பு கிடைத்தது. 

     முந்தைய உலகக்கோப்பையில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்கள், உலக நாடுகள் அனைத்திலும் சேர்த்து அதிக புள்ளிகள் பெற்றவர்கள் என பல நூறு நபர்கள் மோதும் பலசுற்றுப் போட்டியில், ஒருமுறை வாய்ப்பைத் தவறவிட்டால் கூட கனவு கலைந்துவிடும் என்கிற நிலையில் சாணக்கியனுக்கு ஒரு பக்கபலம் தேவைப்பட்டது. அது அவன் காதலியால் அன்றி யாரால் கொடுக்க முடியும். 

     மினியை, ரஷ்யா ஆம் மீண்டும் செஸ் உலகக்கோப்பை ரஷ்யாவில் தான் நடந்தது. என் மருமகளை உன்னுடன் அனுப்ப வேண்டும் என்றால் உடனே திருமணம் செய்து கொள் என்று சொல்லி அவனுக்கு முட்டுக்கட்டை போட்டார் அரசன்.

     பல வருடங்களுக்குப் பிறகு மனதார சிரித்த சாணக்கியன் திருமணத்திற்கான ஏற்பாடை செய்யச்சொன்னான். அத்தனை விமர்சையாக நடந்தது திருமணம். 

     முதல் வாழ்க்கையில் விழுந்த கருப்புப்புள்ளியை இந்த விமர்சையான இரண்டாம் திருமணம் மூலம் மறைக்கப் பார்க்கிறான். சிறிய கோடு அருகில் பெரிய கோடு வரைவதன் மூலம்பெரிய கோடு உசத்தி என்று காட்ட  நினைக்கிறான் எனப் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவன் செய்தது முழுக்க முழுக்க அவன் மினிக்காக.

     பணக்காரன் அவன் உன்னை அவனுடைய விளையாட்டுப் பொம்மையாக தான் வைத்திருப்பான். என்றாவது ஒருநாள் அடிபட்டு மிதிபட்டு என்னிடம் வருவாய் பார் என்று தங்கள் வீட்டுப் பெண் மினி நல்ல வாழ்க்கை வாழ்கிறாளே என்னும் கடுப்பில் வார்தையை விட்டுச்சென்றிருந்த இளவரசு மற்றும் அன்பை நினைத்து தான் இப்படி ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான்.

     சாணக்கியன் என்கிற அடையாளத்தை துறந்து பழைய பகீரதனாக அவன் மீண்டெழுந்ததில் இருந்தே அவனை உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் கண்டபடி எழுதித் தள்ளினர். இரண்டாம் மனைவி முதல் மனைவியின் தங்கை என்னும் போது கற்பனைகளுக்காக பஞ்சம். கண்டபடி கிறுக்கித்தள்ளினார்கள். அதையெல்லாம் அந்தக் காதல் பறவைகள் சற்றும் கண்டுகொள்ளவில்லை.

     உலகக்கோப்பைப் போட்டிக்காக ரஷ்யா கிளம்பும் நாள் நெருங்கிக்கொண்டே வர, அவன் மினி எழில் என மூவருக்கும் டிக்கெட் போட்டிருந்தான் சாணக்கியன். “வேண்டாம் டா“ தடுமாறினான் எழில். 

     “மினியைப் பெற்ற பிள்ளைக்கு இணையாகப் பார்ப்பவன் எழில். ஆனால் கடந்த கால கசடுகளின் விளைவால் என்றாவது ஒருநாள் தன்னையும் மினியையும் அவன் தவறாக ஒரு நொடி நினைத்தால் கூட அது அசிங்கம் என்று நினைத்து மறுத்தான். 

     ஆனால் தெளிவாக இருந்தான் சாணக்கியன், “விளையாட்டில் எதிராளியோட அடுத்த நகர்வு என்னவா இருக்கும் என்பதைக் கணிக்கத் தெரிந்த எனக்கு, அந்த நேரத்தில் என்கூட இருக்கும் நபர்களின் மனதைக் கணிக்கத் தெரியல. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்.

     நீங்க என் மினியும், என் எழிலும். யாரோ இரண்டு பேர் செய்ததற்காக உங்களைச் சந்தேகப்படும் ஈன புத்தி எனக்குக் கிடையாது“ என்க, ஆனந்தமாய் நண்பனைக் கட்டிக்கொண்டான் எழில். 

     ஆனால் கண்டவர்கள் வாயிற்கும் அவலாகக் கூடாது என்னும் நினைப்பில் தேன்மொழியைத் தங்களோடு அழைத்துச்செல்ல அவள் பெற்றர்களிடமும் கூடுதலாக அவளிடமும் அனுமதி பெற்று ரஷ்யா பயணம் நல்லபடியாக ஆரம்பித்தது. 

     கிட்டத்தட்ட முப்பது நாள்கள் நீடிக்கும் அந்த நீண்ட வெளிநாடு பயணத்தில் காதல் பறவைகளின் நெருக்கம் நாளுக்கு நாள் அகிமாகிக்கொண்டே இருந்தது. சாணக்கியன் இறுதி வரை வந்துவிட்டான். 

     ஆனால் அவனோடு விளையாடப் போவது அவன் பயந்த தாய்லாந்து வீரன் தான். என்னும் போது தன்னால் அவனுக்குச் சின்னப் பதற்றம் உண்டானது.

     மினியின் நம்பிக்கையையும் சேர்த்து பெற்று வந்து விளையாடிய இறுதிப்போட்டி யார்பக்கமும் இழப்பு ஏற்படாமல் டையில் முடிய, அடுத்த நாள் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. 

     சமபலம் கொண்ட வீரர்கள் இருவர் விளையாடுவதால் யார் பக்கம் போவது என்று தெரியாமல் வெற்றிக்கான தேவி சற்றே குழம்பி விட்டார் போலும் இரண்டாம் நாளும் டையில் முடிய மூன்றாம் நாளுக்கு பயணப்பட்டது இறுதிப்போட்டி.

     கருத்துக் கணிப்புகள் எல்லாம் தாய்லாந்து வீரன் கீசன் தான் வெற்றிபெருவான் என்று சொன்னது. வல்லவனுக்கு வல்லவன் என்றுமே வையகத்தில் உண்டு என்பதன்படி, கீசன் தன்னை விட சிறந்த விளையாட்டு வீரன் என்பதை சாணக்கியன் சூடம் அணைத்து சத்தியம் செய்து ஒப்புக்கொள்வான். அதற்காக அவனை வெல்லவே முடியாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது அவனால். 

     அன்றைய இரவில் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகாமையில் சுற்றி வந்தனர் சாணக்கியன் மினி இருவரும். குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. போட்டிருந்த ஜெர்க்கின் கையுறை எல்லாவற்றையும் தாண்டி குளிர் உடலை ஊடூருவ பாதி அணைத்த நிலையில் மினியைத் தன்மேல் சாய்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் சாணக்கியன். அவன் மார்பில் கையை வைத்து வருடினாள் மினி.

     அந்த நொடி, அவனிடம் வாய்விட்டுக் கேட்க முடியாமல் அவளுள்ளே இருந்த ஏக்கம் யாவும் மெதுவாக சாணக்கியனுக்குப் புரிந்தது. அடுத்த நொடி உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது. புது இரத்தம் பாய்வது போல் உணர்ந்தான். உதடு கடித்து வெட்கத்தை அடக்கியவன் மினியைப் பார்க்க அவளுள்ளும் அதே நிலையே. 

     மினியுடனான திருமணம் அவன் அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. ஆற அமர யோசித்து அவள் இல்லாமல் இனி தன் அணுவும் அசையாது, அவள் தான் இனி எல்லாமே என்ற தன் மனநிலையை உணர்ந்த பிறகு எடுத்த முடிவு தான் என்றாலும் திருமணத்தை தொடர்ந்த வாழ்க்கைக்கு இன்னும் மனதளவில் தான் தயாராகவில்லையோ என்கிற சந்தேகம் இருந்தது அவனுக்கு.

     இல்வாழ்க்கை அவனுக்குப் புதிதா என்று கேட்டால் அவனை நன்கு அறிந்த அவன் நிழலும் மனசாட்சியுமே கேலிசெய்து சிரிக்கும். அவன் ஆசை ஆசையாய் காதலித்த நிலாவுடன் திகட்டத் திகட்ட இல்வாழ்க்கையை அனுபவித்தவன் தான். ஆனால், அந்த நொடிகள் அனைத்தும் என்னைப் பொறுத்தவரை நெருப்பாற்றில் குளித்தற்குச் சமம் என்று சொல்லி அவனை மட்டும் அல்லாது, அவனுக்குள் இருக்கும் ஆசை உணர்வுகளையும் சேர்த்தல்லவா கொன்று போட்டிருந்தாள். 

     அந்த வார்த்தைகளைக் கேட்டு அவமானத்தில் கூனிக்குறுகிப் போனவனுக்கு அதன் பிறகு அம்மாதிரி உணர்வுகள் வந்ததே இல்லை என்பது இப்போது தான் நினைவு வந்தது. உடல் சார்ந்த பிரச்சனை என்று இல்லை, ஆனால் மனம் சார்ந்த தடுமாற்றம் இருந்தது. காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது எந்தளவு உண்மையோட அதே அளவு உண்மை இல்வாழ்வு இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்பது.

      நிலைமை புரிந்த பின்னால் மினியுடனான தனிமை அவனுக்கு அதீத பயத்தைக் கொடுத்தது. என்ன நடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவள் முன் தன் நிலை தரம் இறங்கிவிடுமோ என்ற பயத்தில் தடுமாற ஆரம்பித்தான். 

     அந்த தடுமாற்றத்துடன் நீண்ட நேரமாக சின்ன அசைவு கூட இல்லாமல் மெத்தையில் படுத்திருந்தவன், தனக்குள் இருந்த குழப்பத்தையும் தாண்டி யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வு வர, திரும்பியவன் கண்களில் எழிலோவியமாய்  இருந்த அவனின் மினி தென்பட்டாள். 

     மூச்சடைப்பது போன்ற உணர்வு, எழுந்து வெளியே ஓடிவிடச் சொல்லி மனம் பிரண்ட அதை செயல்படுத்த முடியாமல் கையாலாகாத தனத்துடன் தலை குனிந்தான்.

     “இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே அசையாது படுத்து இருக்கிறதா உத்தேசம்“ கிண்டலாகக் கேட்டாள். “நீ தூங்கு மினி, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்“ தவிப்போடு சொன்னான்.

     “சாணக்கியன்“ என்று அழைத்தவள் அவனைப் பார்த்து புன்னகைக்க, தடுமாற்றமாய் திரும்பப் புன்னகைத்தான் அவன். 

     “ஒரு விஷயம் நல்லபடியா முடியுமா முடியாதா என்பது ஆரம்பித்ததா தானே தெரியும். வெற்றியில் முடிந்தா சந்தோஷம், தோல்வியில் முடிந்தால் சரியான நேரத்துக்கு காத்திருக்கலாம், என்ன சொல்றீங்க“ குறும்பாகப் புன்னகைத்துக்கொண்டே கேட்டாள்.

     “இல்ல மினி, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு“ ஆரம்பித்தவன், அடுத்ததாக தன் மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல் திணறினான்.

அது புரிய, “நான் மினி, உங்களோட மினி. என்னைக்கும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டேன். அந்த நம்பிக்கை இருந்தால் பக்கத்தில் வாங்க. இல்லாமல் போனால் உங்க இஷ்டம்“ என்க, அதற்குப் பிறகு அவன் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

     மண் நனைத்து, விதை விதைத்து, அந்த விதை செடியாக முளைக்கும் உத்தம வித்தை நிகழும் நேரமதில், தன்னை வந்தடைந்த புது மகரந்தத்தின் விளைவால் புத்தம் புது மணம் வீசியது புதுமலர் ஒன்று. 

     மகரந்தச் சேர்க்கை நடந்தேறும் சமயத்தில் திணறிய வண்டிற்கு, தேன் தந்த பூ செய்த உதவி சொல்லில் அடங்காதது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறி, மது உண்ட வண்டது திசை தெரியாமல் பறந்து கொண்டிருக்க, அதோடு சேர்த்து தானும் மகிழ்வாய் சுற்றித்திரிந்ததது மின்மினிப் பூச்சி ஒன்று.

     “இவ்வளவு தான், இதுக்குப் போய் யாராவது பயப்படுவாங்களா?“ சாதாரணமாகச் சொன்ன பெண்ணை இழுத்து அணைத்துக்கொண்டான் சாணக்கியன். அவன் பயம் கொண்டது போல் வதனியோ அல்லது அவள் வீசிய வார்த்தை திராவகமோ அவனுக்கு சற்றும் நினைவில் இல்லை. அப்படிச் சொல்வதை விட தன்னைத் தவிர வேறு எதுவும் நினைவு வராதபடி அவன் மனைவி பார்த்துக்கொண்டாள் என்று சொல்லலாம். 

     மனைவிக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்த சிவபெருமானைப் போல் தன்னாலும் செய்ய முடியாதே என்கிற ஏக்கம் வந்து தொலைத்தது அவனுக்கு. அத்தனை தூரம் மினியின் மீது பித்துப் பிடித்து அலைந்தான்.

     சாணக்கியனின் பயம், தயக்கம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து சரிசெய்தாள் மினி. சின்னச்சின்ன பிழைகள் நிறைந்த காவியம் அவனை திருத்தி எழுதும் இலக்கணமாய் வந்த அவள், காதலிலும் வாழ்விலும் அவனைப் பூரணத்துவம் அடைய வைப்பாள் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

     அந்த ஆழமான நம்பிக்கையுடன், சதுரங்க உலக நாயகனுக்கான இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக மூன்றாம் நாள் களம் கண்டான் பகீரதன் என்னும் சாணக்கியன். அவன் போட்டியில் வென்றானா இல்லையா என்பதைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விடைபெறலாம்.  

முற்றும்…

 



Leave a comment


Comments


Related Post