இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 25-05-2024

Total Views: 14629

அத்தியாயம் 17

அன்றைய தினம் சங்கரனுக்கு முப்பது கும்பிட வேண்டியிருந்ததால் வீட்டில் சுற்றங்கள் அனைவரும் நிறைந்திருந்தார்கள். லட்சுமி சிவகாமி இருவரும் சில பெண்களுடன் இணைந்து உள்ளே சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இன்ன பிற வேலைகளை திருவும் சாரதியும் சேர்ந்துப் பார்த்துக் கொண்டனர்.

சாரதி மிகவும் சோர்வாக இருக்க "என்னடா என்ன விஷயம்?" என்று வினவினான் திரு.

"எல்லாம் உன்னோட விஷயம்தான். அதை நினைச்சு நினைச்சே நான் களைப்பா ஆகிட்டேன்"

"இது உனக்கு இதா தெரியல. இதைப் பத்தி வருத்தப்பட வேண்டியது நானு. நீ என்னமோ ரொம்ப யோசிக்கிற?"

"உனக்கென்னப்பா நீ தைரியமாத்தான் இருக்க. எனக்குதான் பக்குன்னு இருக்கு"

"ஏன்டா சாரதி"

"நீ அவளை கவனிச்சயா. அப்படியே வேற மாதிரி ஒருத்தியா இருக்காள்ல"

"அவளைப் பார்க்குறதை தவிர எனக்கு வேற என்ன வேலை இருக்கப் போகுது டா. பார்த்தேன். என்ன செய்ய காத்திருக்கான்னு புரியல. எதுக்கு இந்த அமைதின்னும் தெரியல"

"வேற ஏதாவது திட்டம் போட்டுருப்பாளா?" அவன் சொல்லியதும், "அந்த கவலை எல்லாம் உனக்கு வேண்டாம் டா சாரதி. நான் எதுக்கு வேற திட்டம் போட்டு வச்சுருக்கணும். ஏன் கல்யாணத்து அன்னைக்கு ஓடிப் போயிடுவேனோன்னு நினைச்சுட்டயா?" என்றபடி வந்தாள் அஞ்சனா.

"அய்யோ அஞ்சு அப்படிலாம் இல்லை. இதென்ன இப்படிப் பேசுற?"

"நீங்க பேசுனதுக்கு பதில் தான் பேசிட்டு இருக்கேன் டா"

"தப்புதான் அஞ்சு. மன்னிச்சுக்கோ" சாரதி உடனே சரணடைந்தான்.

"அதுலாம் ஒன்னும் வேண்டாம். தலைக்கு மேல வேலை இருக்கு. நீங்க இரண்டு பேரும் ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க. வேகமா வேலையை பாருங்க. அடுத்து கோவிலுக்கு வேற போகணும்ல" அவள் சொல்லிவிட்டு நகர அவளது கையைப் பிடித்துக் கொண்டான் திரு.

"என்ன திரு" இயல்பாக கேட்டவளை கூர்ந்து பார்த்தவன் "என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?" என்று கேட்டான். 

"என்ன கேட்டீங்க திரு"

"சம்மதமா என்னென்னு கேட்டேன்"

"சம்மதம் இல்லாமலே எல்லா வேலையும் நடத்திடுவீங்களே திரு. இப்போ என்ன புதுசா"

"புதுசா நீ தெரியுறதாலே அப்படிக் கேட்கிறேன். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு"

"இப்போ இதுக்கான பதில் சம்மதம்னு வச்சுக்கோங்க திரு. கையை விடுங்க. யாராவது பார்த்தா மாப்பிள்ளை ரொம்ப அவசரக்காரனா இருக்கானேன்னு உங்களைத்தான் கிண்டல் பண்ணுவாங்க" உருவிக் கொண்டு அவ்விடத்தை காலி செய்தாள்.

"டேய் என்னடா நடக்குது" சாரதி ஆவென வாயைப் பிளந்தபடி கேட்க திருவுக்கும் அப்படித்தான் இருந்தது

"டேய் திரு உன்னைத்தான் டா.."

"ஆங். எனக்கு சந்தேகமாக இருக்கு. என் மாமன் மகளா இது. இப்படிப் பேசிட்டு போறாளேன்னு"

"எப்படியோ பயந்துட்டே இருந்தோம். இனி நிம்மதியாய் வேலையைப் பார்க்கலாம் டா. இப்பவே கல்யாணம் முடிஞ்ச திருப்தி எனக்கு" சாரதி சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினான். 

தனியறைக்குள் அடைந்துக் கொண்டவள் தன்னை நினைத்து சிரித்துக் கொண்டாள். மனப் பிறழ்வு ஏற்படத் தொடங்கியது போன்ற நிலை அவளது. இருந்தும் சமாளித்துக் கொண்டிருந்தாள். தந்தையின் உடுப்புகளை வைத்து 

சாமி கும்பிடும் நேரம் வந்தது. அனைவரும் வந்து சங்கரனை தெய்வமாக பாவித்து சாமி கும்பிட்டு உணவு அருந்தத் தொடங்கினார்கள். அஞ்சு வேண்டாம் என மறுத்துவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டாள். அன்று அழாததற்கு எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். கண்ணீர் எதற்கு வருகிறது என்று அவளுக்கே தெரியவில்லை. 

மன உளைச்சலில் இருந்தவளை இப்போது உறக்கம் பிடித்துக் கொண்டது. தலையை யாரோ வருட "அந்தகா!" என்று தன்னையும் மீறி அழைத்துக் கொண்டே கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள். 

மூடிய விழிகளுக்குள் அந்தகன் தெரிந்தான். அவள் உதடுகள் விரிய புன்னகை செய்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் அந்த புன்னகை மறைந்து இதழ்கள் நடுங்க ஆரம்பித்தது. அவளது உடலும் சேர்ந்து அதனோடு நடுங்கியது. கண்கள் இமைகளுக்கு உள்ளயே நர்த்தனம் ஆடியது. 

"அந்தகா.. இயமா" என்று அவள் நடுங்கிய உதடுகளோடு சொல்லிக் கொண்டாள்.

அவளது கைகள் காற்றில் பரவியது.. அது யாரையோ தேடி தேடி களைத்து பக்கத்தில் இருந்த மேஜையின் மீதிருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிடத் தொடங்கியது.

சில நொடிகளில் அவள் நடுக்கம் நின்றது. மூச்சு ஆழமாய் வெளிவந்தது. அதனோடு சீற்றமும் கலந்திருந்தது.

அவளின் மாற்றங்களே எல்லாம் ஒருவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அது அவ்வளவு உவப்பானதாக இருந்தது. அவன் வேறு யாருமல்ல சாட்சாத் இந்திரனே தான். அவள் படும் பாட்டினை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். 

சற்று நிமிடங்களில் அவனது பார்வை அவளை ரசனையாய் பார்க்கத் தொடங்கியது. 

அழகி அஞ்சனா நீ.. சாதாரண தோற்றத்தில் இருந்தாலும் நீ என்னை கவர்ந்திழுக்கின்றாய். உனக்கு பொருத்தமான ஆள் நான் தான். இந்த இந்திரன் தான். நான் அழகன் தேவர்களுக்கேத் தலைவன். என்னோடு நீ சேருவதுதான் சரியாக இருக்கும். அந்த இயமன் நிறத்தில் அழகில் என்னைவிட மட்டம். அவனின் மீது உனக்கேன் இந்த காதல். அதெனக்கு பிடிக்கவில்லை. அதுவும் இல்லாமல் அந்த இயமன் உன்னை பார்த்ததற்கே பலி கொடுப்பது போல் பார்த்து வைத்து என்னை அவமானப் படுத்திவிட்டான். அவனை நான் பழிக்குப் பழி வாங்க வேண்டும். என்னிடம் மோதினால் என்ன நடக்கும் என்று அவனுக்குப் புரிய வேண்டும். இனி புரியும் என்று சொன்னவன் ஹ்ஹா ஹ்ஹா என்று அறையே அதிரும் அளவிற்கு சிரிக்கத் தொடங்கினான். 

அந்த சிரிப்பில் இமைகளுக்குள் வேகமாய் கருமணிகள் ஓடத் தொடங்கியது. அவளிடம் இருந்து வியர்வை வழியத் தொடங்கியது. 

"யார்.. யாரது?" இதழசையாமேலே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன்னே காட்சி விரிந்தது.

ஹ்ஹா ஹ்ஹா.. மீண்டும் மீண்டும் சிரிப்புதான் அவ்விடம் முழுக்க எதிரொலித்தே தவிர அவளின் கேள்விக்கு எந்தவித எதிர்வினையும் வரவில்லை.

"யாரு.. எனக்கு பயமா இருக்கு.. அந்தகா.. நீ எங்க இருக்க. சீக்கிரம் வா.." அவள் உளறிக் கொட்ட

"நான்தான் உன் முன்னாடியே இருக்கேனே.. கண்ணில் படவில்லையோ‌. நானே உன் அந்தகன்" எனச் சொல்ல அவளோ கண்களைக் கசக்கி நன்றாக பார்க்கத் தொடங்கினாள்.

உண்மை. அவன்தான். அந்தகனே தான். ஆனால் வித்தியாசமான தோற்றத்தில். 

அஞ்சுவின் கண்கள் பயத்தில் விரிந்து பின் வெறுப்பில் சுருங்கியது. அவனது தோற்றம் அவளை நடுங்கச் செய்த அதேநேரம் தந்தையின் மரணத்தினை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

அவள் முன்னே அந்தகன் இருக்கின்றான். அவள் பார்த்து ரசித்த தோற்றத்தில் இல்லை. அவள் பார்த்து மயங்கிய கந்தவர்வனாய் அவனில்லை. அவன் அவனாய் நின்றிருந்தான். அதாவது காலனாய் மாறி நின்றிருந்தான். ஒரு கையில் கதாயுதம் மறு கையில் பாசக்கயிறோடும் காட்சிக்கு தெரிந்தான். பாசக்கயிறு அதில் இருந்து அவள் பார்வை மேலே செல்ல வில்லை. மொத்தத்தில் அவளது முகம் சிவந்து விட்டது அதீத வெருப்பில்.

"என்ன பார்க்கிறாய் அஞ்சனா. நான்தான் உன் ப்ரியத்திற்கு உரியவன். அந்தகன்"

"எமன்னு சொல்லுடா. ஏமாத்துக்காரா!"

"அந்தகனின் அர்த்தம் அதுவே அஞ்சனா. நீ அறியாது இருந்ததற்கு எனக்கு ஏமாற்றுக்காரன் பட்டமா? இது நியாயமா?"

"நியாய அநியாயம் பத்தி நீ பேசுறயா"

"என்னைத் தவிர வேறு எவர்க்கும் அதைப் பேசுவதற்கான தகுதி இல்லை அஞ்சனா"

"நீ என் ஐயாவோட சாவுக்கு காரணமானவன்"

"அவர் ஆயுள் முடிந்துவிட்டது. கவர்ந்து சென்றேன். இதிலென்ன தவறு இருக்கிறது. இதற்காக என்னை வெறுக்கக் கூடாது அஞ்சனா"

"நான் ஏற்கனவே சொன்னனதுதான்‌ நீ எமனா இருந்தால் உனக்கு என்னோட வலியை விட அதிக வலியைக் காட்டுவேன்னு"

"உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது அஞ்சனா. நீ என் வசம்"

"இல்லை நான் உனக்குச் சொந்தமானவ இல்லை‌. எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கலை. இங்கிருந்து போய்டு.. போ.." அருகில் இருந்த பொருட்களை எல்லாம் அவள் அவனின் மீது எறிந்தவண்ணம் பேச்சினைத் தொடர்ந்தாள். 

"என்ன சொன்னாய். போய்விடவா. எங்கே செல்லச் சொல்கிறாய்? வா சேர்ந்தே செல்வோம்"

"அய்யோ அம்மா.. எமன் என்னைக் கூட்டிட்டுப் போகப் பார்க்குறான். என்னை விடு.‌ நான் வரமாட்டேன்‌ காப்பாத்துங்க.." என்று அவள் கத்தியபடி போராட அவளது கரங்களின் மீது பாசக்கயிறினை வீசினான் அவன்.

இறுக்கப் பிடித்துக் கொண்ட பாசக்கயிறின் அழுத்தத்தால் ஏற்பட்ட வலி தாளாமல் அவள் அழத் தொடங்க, "நீ எனக்கு வலி தருவாயா. நான் இயமன் அஞ்சனா. மரணத்தின் தேவன். யாம் நினைத்தால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடும். அழித்தல் தொழிலுக்கான கடவுள் ஈசன் எனக்குக் கொடுத்த அதிகாரம் இது" ஆணவம் தெறித்தது அவனது பேச்சில்.

"என்னை விடு"

"எதற்காக விட வேண்டும். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்"

"எனக்குப் பிடிக்கல"

"என் மீது உனக்கும் மையல் உண்டு என நான் அறிவேன்"

"நான் மையல் கொண்டது அந்தகன் பேரில்"

"எனில் இவனையும் பிடிக்கும்"

"ஐயாவோட உயிரை எடுத்த உன்னை எனக்குப் பிடிக்கல"

"அதென் கடமை"

"விளக்கம் ஏதும் நான் கேக்கல. தயவுசெஞ்சு என்னை விட்டுட்டு போயிடு" கைகூப்பியவளை பாசக்கயிறோடு சேர்த்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான் இயமன்.

திமிறியவளை அடக்கி அவன் காதோரத்தில் இதழ்பதிக்கச் செல்ல அவளது மேனி அருவெருப்பில் நெளிந்தது. அன்று உணர்ந்த ஸ்பரிசம் அல்ல இது. காதல் மேலிட தொட்டால் அதொரு புனிதம். இதுவோ காமம் மேலிட அணைப்பவனின் தொடுகையாய் இருந்து தொலைத்ததில் தேகம் அருவருப்பில் தானே சுருங்கியது.

எங்கிருந்து அவளுக்கு வேகம் வந்ததோ அவனைத் தள்ளிவிட்டு விலகி நின்றாள். 

அவள், அவன், இடையே பாசக்கயிறு.

ஆங்கார காளிபோல் கேசம் கலைந்து கிடந்தவள் கோபத்திலும் அவளைப் போல் இருந்து தொலைந்தாள்.

"என்னைத் தொடுற வேலையெல்லாம் வேண்டாம். யாருடா நீ.. உனக்கு என்ன உரிமை இருக்கு என்மேல. என்னைத் தொட உனக்கு எந்தவித தகுதியும் இல்லை. பொய் சொல்லி ஏமாத்திட்ட இல்ல நீ. விலகிப் போயிடு"

"போகவில்லை என்றால்?"

"நான் எங்க ஐயா போன இடத்துக்கே போய்டுவேன்"

"என் அனுமதி இல்லாமல் உன்னை மரணம் நெருங்காது அஞ்சனா"

எதிரே நிற்பவன் வல்லமை பொருந்தியவன். ஈசனால் காலனெனும் அந்தஸ்து பெற்றவன். அவனை பூலோகத்தில் வாழும் சின்னஞ்சிறு பெண் எவ்வாறு எதிர்த்து நிற்க முடியும். அவளுக்கு நிதர்சனம் புரிந்தது.

"புத்தி தெளிந்தது போல் தெரிகிறது அஞ்சனா. மிகுந்த மகிழ்ச்சி. நாம் மணம் செய்து கொள்ளலாம்"

"நான் முடியாதுன்னு சொன்னா"

"உன்னை மணம் புரிய நினைப்பவனும் உன் பாங்கனும் இன்னும் சற்று நேரத்தில் எமலோகத்தில் இருப்பார்கள். இப்போதே பார்" அவளது கையை இறுக்கிய பாசக்கயிறு தன் பிடியை தளர்த்திட அது திருவையும் சாரதியையும் நோக்கி பறக்கத் தொடங்க "அய்யோ சாரதி திரு" என்றவாறு எழுந்து அமர்ந்தாள் அவள். 

காதலாசை யாரை விட்டது..




Leave a comment


Comments


Related Post