இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -43 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-05-2024

Total Views: 20953

“அண்ணா ஊசி வேண்டாமே.”

“அம்மு... நீ என்ன சின்னக் குழந்தையா?”

“ப்ளீஸ்ண்ணா யோசிச்சாலே பயமா இருக்கு.”

“நீ கண்ணை மூடிட்டு உக்காரு நான் பார்த்துக்கறேன்.“ என அதட்டி தான் உள்ளே அழைத்து வந்திருந்தான்.

அவர்களின் நேரமோ என்னவோ ஒரே ஒரு மருத்துவர் மட்டும் தான் இருந்தார் அவரும் ஏதோ அவசர சிகிக்சையில்  மருத்துவம் செய்துக் கொண்டிருக்க நேரம் 11 யை நெருங்கி விட்டது.

அங்கிருந்த ஏசி வேறு மேலும் குளிறை கொடுத்து நடுக்கத்தை ஏற்படுத்த காய்ச்சல் அதிகமானதே தவிர குறையவில்லை.

அப்படி இப்படி என மருத்துவர் வந்து  பரிசோதிக்கும் போது மணி 11.30 யை தாண்டியிருந்தது. வளவனின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டியிருந்தவளை எழுப்பி தான் மருத்துவரைப் பார்க்க அழைத்துச் சென்றான்.

காய்ச்சல் 104 டிகிரியை தாண்டி இருக்க, “என்ன சார் இவ்வளவு காய்ச்சலை வெச்சுட்டு இப்போ வந்துருக்கீங்க.?”

“நைட் 9 மணிக்கு தான் சார் ஸ்டார்ட் ஆகுச்சி. பார்த்துட்டு கிளம்பறதுக்குள்ள 10 மணி.” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஊசியை எடுக்க, வளவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மருத்துவர் அவரை நெருங்க அழுத்தம் கூடிக் கொண்டே போனது.

“என்னாச்சு.?”

“அது அவளுக்கு ஊசின்னா கொஞ்சம் பயம் டாக்டர்.”

“இந்த வயசுலையா..?” என ஆச்சரியப்பட்டு நிலாவைப் பார்க்க, அவளோ  ஊசியைப் பார்த்ததும் அழுதுவிடுபவள் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க போடுங்க டாக்டர், நான் புடிச்சிக்கறேன்.“

“சின்னக் குழந்தையா இருந்தா பேச்சு குடுத்துட்டே ஊசியைப் போட்டுடலாம் இந்த வயசுப் பொண்ணுகிட்ட என்னத்தைப் பேச..” என்றவாறே ஊசியை இடது கையில் குத்த ஆஆஆஆ என நிலா அந்த அறையே அதிரும்படி கத்தினாள்.

“அவ்வளவு தான்மா இதுக்கு போய் இவ்வளவு கத்து கத்தற? நாளைக்கு நீ எப்படி கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க போறியோ?” என சொல்லியவாறு மருந்து சீட்டை எழுதிக் கொடுத்தார்.

குழந்தை என்றதும் மீண்டும் நந்தன் நினைவு தான். மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்பது போல் இவளுக்கு என்ன செய்தாலும் நந்தனை மட்டும் நினைக்காமல் இருக்க மாட்டாள். 

மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

“பாப்பா டாக்டர் சொல்றதுலையும் தப்பில்ல, யாராவது இந்த வயசுல ஊசிக்கு பயப்புடுவாங்களா? கொஞ்சம் கூட பெரிய பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டிங்கிற, இதுல உனக்கு கல்யாணம் வேற பண்ணி வைக்கணும்னு பேசிட்டு இருக்கோம் அங்க போய் என்ன பண்ணப் போறியோ தெரியல.” என சலித்துக் கொண்டான் வளவன். 

“அண்ணா அப்படியே உன் முதுகுல சாஞ்சிக்கவா?”

“இதுக்குக் கூட கேளு, சாஞ்சித் தூங்கு.” என்றவன் வண்டியை மெதுவாக ஓட்டினான்.

நள்ளிரவு 12 மணியை நெருங்கிக் கொண்டியிருந்தது. செக்போஸ்டில் போகும் போது ஆட்கள் இல்லை   இப்போது திரும்ப வீட்டிற்கு வரும் போது வரிசையாக கார்களும் இருசக்கர வாகனங்களும் நிற்க, காவல் அதிகாரிகள் சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

போலீஸ் ஜீப்பின் பேனட்டில் நந்தன் அமர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

“சை போகும் போது ஆள் இல்லை, இப்போ என்ன இவ்வளவு பேர் நிற்கறாங்க, புடிச்சா ஆயிரம் தண்டம் அழணுமே. இவ வேற காய்ச்சல கடக்கறா என்ன பண்ண?” என்று யோசித்துக் கொண்டே அவர்களை நெருங்க, அப்போதுதான் நந்தனைப் பார்த்தான்.

“இவன் முன்னால அசிங்கப்படணுமா? ச்சை” 

நந்தன் அலைபேசியில் பேசியவாறே காரில் இருந்து குதித்து இறங்கியவன், வளவனின் பின்னால் பார்த்துக் கொண்டே அவன் அருகில் சென்றான்.

“இவன் வேற வரான்.”

“ஹெல்மெட் எங்க?”

“வீட்டுல வெச்சிட்டு வந்துட்டேன்.”

“பைன் கட்டு”

“பில் கொடுங்க கட்டுவோம்.” என்று வளவனும் முறைத்துக் கொண்டே சொன்னான்.

“முதல்ல வண்டியை விட்டு இறங்குடா.”

“மரியாதையா பேசுங்க. பாப்பா தூங்கிட்டு இருக்காள்ல உங்களுக்கு தேவை பணம், எவ்வளவுன்னு சொன்னா கட்டிட்டு போயிட்டே இருப்பேன்.”

“என்ன திமிரா பேசற..? பல்லை தட்டிடுவேன்.” என்றவன் வண்டியை அணைத்துவிட்டு சாவியை எடுத்துக் கொண்டான்.

நந்தனின் குரல் தூக்கத்தில் கூட நிலாவிடம் சரியாக சென்று சேர.. அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா எந்திரிக்கிற?” நந்தனிடம் காட்ட முடியாத கோவத்தை நிலாவிடம் காட்ட நிலா மழுங்க மழுங்க முழித்தாள்.

அண்ணன் தங்கை இருவரையும் உற்றுப் பார்த்தவன். “இந்த நைட் எங்கடி போய்ட்டு வரீங்க?” என்றான் நேரடியாக நிலாவிடம்.

அவளோ நந்தனைப் பார்த்ததும் வண்டியை விட்டு இறங்கி நின்று விட்டாள். உடல்நிலை சரியில்லாத பிள்ளையே இறங்கி நிற்கும் போது தான் எப்படி வண்டியில் நிற்பது என வளவனும் இறங்கிவிட, அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“கேட்ட கேள்விக்கு பதில் வரணும்.”

“அவளுக்கு காய்ச்சல் ஹாஸ்பிடல் போய்ட்டு வரோம், ஒழுங்கா சாவியை கொடு, அவளுக்கு காத்து சேராது.”

“உன்கிட்ட கேட்டனா? காத்து சேராதுன்னு அக்கறை இருக்கறவன் கார்ல கூட்டிட்டுப் போயிருக்கனும்.”

“என்ன என்கிட்ட கார் இல்லைன்னு சொல்லிக் காட்டறீயா?”

“அண்ணா ப்ளீஸ் எதும் பேசாத இல்லனா விடிய விடிய நிற்க வெச்சிடுவாரு..” என நந்தனை சரியாக கணித்து சொன்னாள்.

“ஏய் போய் கார்ல ஏறுடி”

“அம்மு எங்கையும் போகாத.”

“உன்னைய தான் சொன்னேன் போடி.” என்றவன் இந்த முறை அழுத்தமாக சொல்ல.

அண்ணனுக்கும், நந்தனுக்கும்  இடையில் மாட்டிக் கொண்டவள் யார் சொல்வதைக் கேட்பது என தெரியாமல் கையை பிசைந்தாள்.

“அவளை எதுக்கு மிரட்டற? நீ மிரட்டி மிரட்டி தான் அவளுக்கு காய்ச்சலே வந்துடுச்சு. இனி அவ பக்கம் வந்த அப்புறம் நீ யார் என்னன்னு பார்க்க மாட்டேன் மூஞ்சு முகரையை பேத்துடுவேன். ஒழுங்கா எங்களைய விட்டு தள்ளியே இரு.” 

“எங்க மேல கை வெச்சிப் பாரு வைடா.. வைடா..” என வளவனை தள்ளிக் கொண்டேப் போனான்.

தங்கச்சியின் வருங்கால கணவன் என்ற எண்ணமே நந்தனுக்கு துளிக் கூட இல்லை.

“ப்ளீஸ் யாரும் யாரையும் அடிக்க வேண்டாம். விட்டுருண்ணா நான் நடந்தே வீட்டுக்குப் போயிக்கறேன்.” அவள் வார்த்தையில் முகம் இறுகிய நந்தன் சாவியை தூக்கி வளவனின் கால் அடியில் எறிந்து விட்டு அவனது காருக்குச் சென்று விட்டான்.

"இவனை எதால அடிச்சாலும் என் கோவம் தீராது அம்மு, சாவியை எப்படி தூக்கிப் போட்டுட்டுப் போறான் பாரு.”

“விடுண்ணா சாவியை எடு, பைனை கட்டிட்டு வீட்டுக்குப் போவோம், நான் போய் கட்டிட்டு வரேன்.” என்றவள் வளவனிடம் பணம் வாங்கிக் கொண்டு முன்னால் சென்றாள்.

வண்டி சாவியை வளவன் எடுத்து வண்டியை உயிர்பித்து அந்தப் பக்கம் சென்று நின்றான்.

“சார்.. அந்த வண்டிக்கு ஹெல்மெட் இல்லை அதுக்கு பைன் எவ்வளவுன்னு சொல்லுங்க?” என்றவள் தப்பி தவறிக் கூட நந்தனைப் பார்த்து விடக்கூடாது என திரும்பி நின்றுக் கொண்டாள்.

அவளுக்கு தெரியும் இன்று வண்டியில் ஏற சொல்லியும் ஏறாமல் இருந்ததற்காக கண்டிப்பா நாளைக்கே வந்து தன்னிடம் பிரச்சனை செய்வான் என்று. அதை நினைக்கும் போதே உள்ளம் நடுங்கியது.

அன்று ஸ்கூட்டியை கொண்டு வந்து வீட்டில் விட்ட கான்ஸ்டபிள் தான் இன்றும் இருந்தார். நிலா பணத்தை நீட்டவும் அவர் நந்தனைப் பார்க்க, பணத்தை வாங்க வேண்டாம் என மறுப்பாக தலையசைத்தான்.

“இல்லம்மா வேண்டாம் பைன் எதுவும் போடல.. நீங்க கிளம்புங்க.”

இதுவும் நந்தன் வேலை தான் என அவனைப் பார்க்காமலே கண்டுக்கொண்டாள். அவனின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றும் நன்றாகவே புரிகிறது. புரிந்து என்ன புரோஜனம் அவனை பார்த்தாலே வாங்கிய அடியும் கொட்டும் தான் கண் முன்பு வந்து பயமுறுத்துகிறது.

“சரிங்க சார்” என்றவள் நேராக வளவனிடம் சென்று விட்டாள்.

நந்தன் பார்வை முதுகை துளைக்க, திரும்பி பார்க்க துடித்த மனதை அடக்கிக் கொண்டு வளவனின் வண்டியில் ஏறிப் போய்விட்டாள்.

போறவளை தாடியை தடவியவாறுப் பார்த்தான். அவன் பார்வையை மட்டும் நிலா பார்த்திருந்தாள் மயங்கி கீழையே விழுந்து விடுவாள்.

அன்று இரவு நந்தன் வீட்டிற்கு பின்புறம் அதாவது நிலாவின் வீட்டின் வழியாக வந்தான். காரை விட்டு இறங்கும் முன் அவன் விழி கூர்மையுடன் அந்த வீட்டை அளவிட்டது.

அனைவரும் தூங்கி விட்டார்கள் என இருள் சூழ்ந்த வீடு உணர்த்த, காரை விட்டு இறங்கியவன் வேகமாக சென்று கதவை தட்டினான்.

அன்று முழுவதும் பல அலைச்சல், அலைந்து ஓய்ந்ததால் வீட்டிற்கு வந்ததும் வளவன் நன்றாக உறங்கி விட்டான்.

ஊசிப் போட்டுவிட்டு வந்ததால் நிலாவும் நன்றாக உறங்கிவிட.. மதியம் நடந்த பிரச்சனையை நினைத்துக் கொண்டு ராஜி தான் உறங்காமல் இருந்தார்.

கதவு தட்டும் சத்தத்தில் சட்டென்று எழுந்து அமர்த்தவர்,

“யாரு?” என்றார் மெதுவாக.

நந்தன் எதுவும் சொல்லாமல் இருக்கவும் கதவை திறப்பதா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுந்து வந்து விளக்கைப் போட்டவர், ஜன்னல் வழியாக யார் என்றுப் பார்த்தார்.

நந்தன் நிற்கவும் பெருமூச்சு விட்டவர், “இந்த தம்பி தானா ஒரு நிமிசத்துல மூச்சே நின்னுருக்கும்.” என சொல்லிக் கொண்டே கதவை திறந்தவர், “என்ன தம்பி இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க?”என்றார் தன்மையாக.

மதியம் தான் மகளை வைத்து பிரச்சனை செய்து அவளை தப்பானவளாக காட்டி விட்டுப் போயிருந்தான், அவனிடம் இப்போ தன்மையாக பேச ராஜி ஒருத்தரால் மட்டும் தான் முடியும்.

“அவ எங்க?” அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டான் காட்டான்.

“தூங்குறா தம்பி காலையில வரிங்களா?”

“நகருங்க”

“தம்பி”

“நகருங்கன்னு சொன்னேன்.” என அழுத்தமாக சொல்லவும், தானாக ராஜி நகர்ந்து நின்றுக் கொண்டார்.

வேகமாக நிலாவின் அறைக்குள்  போனான்.

போகும் அவனை தடுக்க முடியாமல் கையை பிசைந்தவாறு பார்த்தவருக்கு புது பயம் பிறந்தது. நந்தன் வந்ததை யாராவது பார்த்திருப்பார்களோ என்று.

நந்தன் நிலாவைப் பார்க்க அவளோ கழுத்து வரை போர்வையை இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

படுக்கையின் மறுபுறத்தில் நிலாவை தள்ளிவிட்டு அருகில் அமர்ந்துக் கொண்டான். கதவை மூடவில்லை ஒருக்களித்து சாற்றி இருக்க, அவன் செய்வதைப் பார்த்துக்கொண்டே கதவின் ஓரம் நின்றிருந்தார் ராஜி.

நிலாவின் முகத்தையே அரைமணி நேரம் உற்றுப் பார்த்திருப்பான், என்ன பார்க்கிறான்? எதற்கு பார்க்கிறான்? அப்படி அதில் என்ன தெரிகிறது என  தெரியாமல் வாட்ச்மேன் வேலைப் பார்த்தார் ராஜி.

தூக்கம் வேறு கண்ணை கட்டியது, இவ்வளவு நேரமும் தூக்கம் வரமாட்டேன் என்றது. இப்போதோ போக மாட்டேன் என்கிறது அவரும் தான் என்ன செய்வார்.

இன்னைக்கு தூங்குன மாதிரி தான் என்று கொட்டாவி விட, நந்தனின் கண்கள் நிலாவின் நெற்றியில் இவனால் உண்டான காயத்தின் தழும்பிற்கு சென்றது.

சிறு வயதில் செய்த வினை, அழியா வடுவாக தங்கிவிட்டது. அவனின் வலது கை அந்த தழும்பை தடவ.. அவன் பரிசம் பட்டதும் தூக்கத்தில் கூட நெளிய தொடங்கினாள்.

பகல் முழுவதும் அவளை எப்படி ஓட வைப்பது என யோசிக்கிறான் இரவில் அவள் முகம் பார்த்துக் கொண்டே அன்றைய இரவை கழிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, இல்லை அண்ணனுடன் வந்ததற்கு எப்படி பழி வாங்கலாம் என யோசிக்கிறானோ தெரியவில்லை, அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் நிலாவின் தலையை வருடிவிட கையில் இருந்த கடிகாரம் அவள் தலைமுடியில் சிக்கிக் கொண்டது.

தூக்கத்திலையே வலியில் அவள் முகத்தை சுருக்கவும் சிறிதும் யோசிக்காமல் கடிகாரத்தை கழட்டி முடியை விலக்கி விட்டவன், திரும்பக் கையில் கட்டாமல் மேஜையில் வைத்துவிட்டான்.

அதன்பின் எவ்வளவு நேரம் இருந்தானோ, பொறுத்து பொறுத்துப் பார்த்து முடியாமல் படுத்து உறங்கி விட்டார் ராஜி.


Leave a comment


Comments 3

  • A Aathi Sri
  • 1 month ago

    Sarithan da, superrrrrrr sis 👌👌👌👌👌

  • P Priyarajan
  • 1 month ago

    Ena ninaikarane therilaye.... Waiting for nxt ud💕💕💕💕💕💕💕💕

  • F Fajeeha Fathima
  • 1 month ago

    அடிக்கவும் செய்ற அரவணைக்கவும் செய்ற நல்லா தான் இருக்கு


    Related Post