இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 34 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 26-05-2024

Total Views: 17147

“நந்தா சாப்பிட வாப்பா… அபி என்ன பண்றா அவளையும் வரச்சொல்லு ப்பா…” என்று ஃபோனில் அழைத்தார் பார்வதி.

என்னதான் கதவு திறந்து இருப்பது தெரிந்தாலும் ஏற்கனவே அபிலாஷாவின் மனச் சுணக்கம் தெரிந்தவர் நந்தன் எப்படியும் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டு இருப்பான் நேரில் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஃபோனில் அழைத்தார்.

நந்தன் மட்டும் அறையை விட்டு வெளியே வர “அபி எங்கப்பா?” என்றிட

“தலைவலினு சொல்றாம்மா… ஏன்னு தெரியல முகம் பார்த்தே பேச மாட்டேங்குறா…” சோகமாக தலை கவிழ்ந்து கூறிய மகனை பார்த்தவர்

“சரி டிபன் எடுத்து வைச்சிருக்கேன் நந்தா நீ சாப்பிடு. நான் போய் அபியை சாப்பிட வைக்கிறேன்.” என்று அவளுக்கு தட்டில் இட்லியை எடுத்து சென்றார் பார்வதி.

“அபிமா எழுந்திரி சாப்பிட்டு தூங்கு..” அக்கறையான அதட்டலோடு உள்ளே வந்த பார்வதியை தலை நிமிர்ந்து பார்த்தாள் அபிலாஷா. அழுதிருக்கிறாள் என்பது அவருக்கு நன்கு புரிய தட்டை மேசை மீது வைத்து விட்டு

“அபி மா ஆஃபிஸ் பிரச்சினைனு சொன்ன… ஆனா அதுக்கா இப்படி அழுதுட்டு இருக்க? என்னாச்சு மா ஏதாவது பிரச்சினையா? அம்மாகிட்ட சொல்லக்கூடாதா?” என்று ஆதூரமாக கேட்க

“அது… அதெல்லாம் ஒன்னும் இல்ல மா தலைவலி அதோட திடீர்னு அம்மா அப்பா நியாபகம் வந்திடுச்சு அதான்…” என்று தலை குனிந்தே கூற

 “அதுக்காக இப்படி அழுதிட்டு படுத்திருந்தா எப்போவோ இறந்த அம்மாவும் அப்பாவும் திரும்ப வந்திடுவாங்களா அபி? ஏன் நான் உன்னை உன் அம்மா மாதிரி பார்த்திருக்கிறது இல்லையா?” என்று கேட்க

“அச்சோ என்னம்மா இப்படி கேட்டீங்க… எனக்கு ஏதோ திடீர்னு அவங்க இருந்திருந்தா நல்லா இருக்கும் னு தோணுச்சு.. நீங்க என் அம்மா இப்போ இருந்தா என்னை எப்படி கவனிப்பாங்களோ அதைவிட ஒரு படி அதிகமா தான் கவனிச்சுக்கிறீங்க… சாரி ம்மா” என்று அவள் விளக்கம் சொல்ல

‘ம்ம் சரி முதல்ல முகத்தை கழுவிட்டு வா…” என்று சற்றே அதட்டும் தோனியின் சொல்ல எழுந்து முகத்தை கழுவி வந்தாள் அபிலாஷா.

“ம்ம் உட்காரு” என்று அமர்த்தி இட்லியை ஊட்டி விட “வேண்டாம் ம்மா பசிக்கல…” என்று சொல்ல

“ச்ச் நீ இப்போ சாப்பிடலைன்னா வெளியே உன் புருஷன் இன்னமும் சாப்பிடாம தான் இருக்கான். அவனும் சாப்பாடு வேணாம்னு சொல்லிடுவான். பிள்ளைங்க ரெண்டு பேரும் சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுவேன்? அப்பறம் மாத்திரை மருந்தும் சாப்பிட முடியாது..” என்று சொல்ல

“என்னம்மா நீங்க?” என்று சிணுங்கிட

“ம்ம் சாப்பிடு முதல்ல… ஆ காட்டு” என்று கொண்டு வந்த உணவினை ஊட்டிவிட்டவர் “சரி அபி நான் பால் கொடுத்து விடுறேன் குடிச்சிட்டு தூங்கு ஒருவேளை தலைவலி அதிகமா இருந்தா மாத்திரை போட்டுக்கோ” என்று சொல்லி பார்வதி வெளியேறிட பார்வதியின் அன்பு கூட இன்னும் அழுகையை அதிகரித்தது அபிக்கு.

பார்வதி சொன்னது போல அபி சாப்பிட்டதை அறிந்தபின் தான் அபிநந்தன் சாப்பிட்டான். அறைக்கு செல்லும் முன்னர் “நந்தா இரு அபிக்கு பால் காய்ச்சி தரேன்.” என்று அடுக்களை பக்கம் செல்ல பின்னாலேயே சென்ற அபிநந்தன்

“அம்மா.. லாஷா உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா? ஏன் மா இப்படி இருக்கா?” என்று கேட்க மாலை அலுவலகம் முடிந்து வந்த உடனே அபிலாஷா தன் சோகத்திற்கு கூறிய காரணத்தையும் இப்போது அழுததை கேட்டதற்கு தாய் தந்தை நியாபகம் என்று கூறியதையும் சேர்த்து கூறினார் பார்வதி.

“ஆமாம்மா லாஷாக்கு இப்போ எல்லாம் ரெஸ்ட் இல்லம்மா… நாள் பூராவும் ஆஃபிஸ் வீட்ல வேலைனு இழுத்துப் போட்டுப்பா… கொஞ்சம் ஃப்ரீயா இருந்தாலும் அச்சுவுக்கு இது பண்றேன் அது பண்றேன்னு சொல்லிட்டு அவளை பார்க்க ஓடிடுவா…. ப்ரதீப்கிட்ட இதுபத்தி பேசனும்.” என்று அபிநந்தன் சொல்ல

“ஏன்டா அப்போ நான் நாள் முழுக்க உன் பொண்டாட்டியை வேலை வாங்கி கொடுமை பண்றேன்னு சொல்றியா?” போலியாக கோபம் கொண்டது போல பார்வதி கேட்க

“அம்மா… நான் எப்போ அப்படி சொன்னேன். அதில்ல அம்மா” என்று அவன் விளக்கம் சொல்ல வர 

“நான் சும்மா தான் நந்தா சொன்னேன். நீ போய் அவளை பாரு.” என்று சொல்ல அறைக்கு வந்த நந்தன் கண்டது கண்களை இறுக மூடி படுத்திருந்தவளை தான்…

இருமுறை “லாஷா லாஷா” என்று அவளை அழைத்து பார்த்தவன் எழவில்லை என்றதும் “சரி தூங்கி எழட்டும்.” என்று பாலை டேபிள் மீது வைத்து விட்டு அவளின் பிறை நெற்றியில் இதழ் பதியா மென்முத்தம் ஒன்றை தந்தவன் அருகில் படுத்து கண்ணை மூடிட இந்த பக்கம் திரும்பி படுத்திருந்தவள் கண் திறந்து பார்த்தாள் அபிலாஷா.

மறுநாள் காலை அபிநந்தன் எழும் போது லாஷா குளித்துவிட்டு தலையை அறையின் ஓரத்தில் நின்று துவட்டிக் கொண்டு இருக்க கண் திறந்தான் அபிநந்தன். படுக்கை விட்டு எழாமல் அவளை ரசித்துக் கொண்டு இருக்க இன்னும் தெளியாத மனநிலையோடே தன் டார்க் ப்ளூ புடவைக்கு பொருந்தாத சிவப்பு வளையலை போட

“லாஷா என்ன இது? பேங்கள்ஸ் மேட்ச் இல்லாம போடுற..” என்று எழ

“ஸ்ஸ்… ஏதோ நியாபகத்துல..” என்று கழட்ட போக 

“ஹேய் வேண்டாம் லாஷா…” என்று அருகில் வந்து மீதம் இருந்த வளையல்களை அவள் கையில் மாட்டி விட்டவன் “இதுகூட ஒருமாதிரி கான்ட்ராஸ்டா மேட்ச்சா தான் இருக்கு.” என்றவனை உறுத்து விழித்தவளுக்கு நேற்று முகில் சொன்னது தான் நினைவில் நிற்க

‘உங்களுக்கு என் மேல லவ் இல்லாட்டியும் எப்படி நந்தன் உங்களால இவ்வளவு இயல்பா என்கூட பழக முடியுது?’ என்று தனக்குள்ளே கேட்டு கொண்டாள்.

“என்ன லாஷா? ஏன் இப்படி பார்க்குற?” என்று அவளை சிந்தனையில் இருந்து வெளிவர வைத்தவன், “பாரேன் லாஷா நீ கையில போட்டுக்கும் முன்ன சுத்தமா பொருந்தாத வளையல் இப்போ இந்த சேரிக்கு பொருத்தமா தான் இருக்கு.

இப்படி தான் இல்லையா சில நேரங்கள்ல நாம பொருந்தாதுனு விலக்கி வைக்கிற பல விஷயங்கள் ஒன்னுக்கொன்னு ரொம்ப பொருத்தமா அமைஞ்சிடுது…” அவன் அவள் கைகளில் இருந்த வளையலை முன்னும் பின்னும் ஆட்டி ஒன்றோடு ஒன்று மோதி எழுந்த சத்தத்தை ரசித்த படியே எதார்த்தமாக தான் சொன்னான். ஆனால் அவளோ

‘பொருந்தாமல் சேர்ந்த நாம் பொருந்தி விட்டோம்.’ என்று சொன்னதை போல தோன்றியது அவளுக்கு. இதற்கு விடையாக என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க மென்னகை விடுத்தவன்

“லாஷா இன்னைக்கு எனக்கு பெருசா வேலை எதுவும் இல்லை. லஞ்ச் வெளியே போய்ட்டு அப்படியே பீச் சினிமா எங்கயாவது போய்ட்டு வரலாமா?” அவன் ஆர்வமாக கேட்க

“இல்ல நந்தன் எனக்கு இன்னைக்கு முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் இருக்கு. வெளியே போக முடியாது.” என்று அவள் தவிர்க்க அவன் ஆர்வம் மொத்தமாக வடிந்து தான் போனது.

“ஓ.. சரி.. வெளியே லஞ்ச்க்கு போலாமா அப்பறம் நீ ஆஃபிஸ் போய் மீட்டிங்கை பாரு” என்று கேட்க

“இல்லங்க அம்மா இப்போவே லஞ்ச்க்கும் சேர்த்து சமைச்சிருப்பாங்க அது வேஸ்ட் ஆகிடும். நான் கிளம்பறேன் நந்தன் டைம் ஆச்சு.” என்று அவன் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள் அபிலாஷா.

“என்னாச்சு இவளுக்கு?” என்று புரியாமல் பார்த்தவன் “ம்கூம்… அம்மா சொன்ன மாதிரி ஆஃபிஸ் டென்ஷன் தான் ப்ரதீப்கிட்ட பேசனும்.” என்று முடிவு செய்து கொண்டு குளியலறை சென்றான் அபிநந்தன்.

அவன் வெளியே வர அபிலாஷா கிளம்பி இருந்தாள். “நந்தா இன்னைக்கு வீட்ல தான் இருக்கன்னா அபியை கூட்டிட்டு எங்கயாவது வெளியே போய்ட்டு வாப்பா” என்று சாப்பாட்டை எடுத்து வைத்தபடி பார்வதி சொல்ல

“நான் கூப்பிடாம இல்லம்மா… ஆனா இன்னைக்கு முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் இருக்குனு கிளம்பி போய்ட்டா… அம்மா மோகன்ராம் சார் கால் பண்ணினாரு. அச்சு வளைகாப்புக்கு இன்னும் இருபது நாள் தானே இருக்கு. அதுக்காக அவங்க சைட் எதுவும் பண்ணனுமானு கேட்டாரு” என்க

“இதுல மாப்பிள்ளை வீட்டுல எதுவும் செய்ய தேவையில்ல நந்தா அவங்களுக்கு வேண்டியவங்க எத்தனை பேர் வருவாங்கனு மட்டும் கேட்கனும். அதுக்கு ஏத்தமாதிரி சாப்பாட்டுக்கு சொல்லனும்.‌” என்று பார்வதி சொல்ல கேட்டுக் கொண்டு இருந்த நந்தன் மனது இங்கு இல்லை என்று புரிந்த பார்வதி

“நந்தா… உனக்கும் அபிக்கும் ஏதாவது பிரச்சனையா ப்பா?” என்றிட

“எங்களுக்குள்ள என்னம்மா பிரச்சினை… ஆனா நேத்துல இருந்து என்கிட்ட சரியா பேசவே இல்லை அவ…” ஹால் ஷோபாவில் அமர்ந்தவன் வருந்த

“நந்தா நான் கேட்குறதுக்கு மறைக்காம பதில் சொல்லுப்பா…” என்று பீடிகை போட அவர் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான் அபிநந்தன்.

“நந்தா அபிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா? இல்ல எனக்கு பீபீ சுகர் இருக்கு அதை செக் பண்ண மாசாமாசம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற.. அபியை ஏன் அடிக்கடி கூட்டிட்டு போற? இன்னமுமா அவளுக்கு அந்த சத்து குறைபாடு இருக்கு?” பார்வதி கேட்க என்ன பதில் சொல்வது என்று அபிநந்தன் விழிக்க 

“எதுவா இருந்தாலும் உனக்குள்ள மட்டும் வைச்சுக்காம என்கிட்ட சொல்லுப்பா…” என்று மீண்டும் வற்புறுத்த சட்டென்று அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் அபிநந்தன்.

ஆதரவாக தலை கோதிய பார்வதி “உனக்குள்ள மட்டும் வைச்சு அழுத்திட்டு இருக்கிறதுக்கு என்கிட்ட சொன்னா அபியை நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கேட்க அவரின் முகம் பார்த்தவன் எழுந்து அமர்ந்து சந்தியா முதல் தற்போது அபியின் நிலை வரை சொல்லி முடிக்க சற்றே அதிர்ந்து தான் போனார் பார்வதி.

“என்ன நந்தா இவ்வளவு நடந்திருக்கு எதுவும் என்கிட்ட கூட சொல்லாம இருந்திருக்க..” என்று ஆதங்கமாக கேட்க

“இல்லம்மா எங்கே இது வெளியே தெரிஞ்சா நீங்க லாஷா எல்லாம் வருத்தப்படுவீங்க… லாஷா ஏதாவது தப்பா முடிவு எடுக்க கூட வாய்ப்பு இருக்கு அதான் ம்மா…” என்றிட 

“சரிப்பா… அதான் சந்தியா அபிக்கு இருந்த கட்டி குணமாகிடுச்சுனு சொல்றால்ல… சீக்கிரம் அவ முழுசா குணமாகிடுவா… நம்பு” என்று ஆறுதலாக பேச “ம்ம்…” என்று தலையாட்டி கேட்டுக் கொண்டான் அபிநந்தன்.

அபிலாஷா தன் மனதில் இருந்த எதையும் யாரிடமும் சொல்லாமல் மனதோடு மறைத்து வைத்து நந்தனோடு சரியாக பேசாமல் அவளின் கண்ணாமூச்சி விளையாட்டை தொடர நந்தன் தான் காரணம் தெரியாமல் தவித்து போனான்.

இந்நிலையில் அபியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்த நந்தனுக்கு சந்தேகம் ஏற்பட அதை நிவர்த்தி செய்ய சந்தியாவை தேடி சென்றவன் அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் அபிநந்தன்.

நந்தனும் சந்தியாவும் பேசிக் கொண்ட அனைத்தும் முகில் ஏற்கனவே அந்த மருத்துவமனையில் ஏற்பாடு செய்து வைத்திருந்த தன் கைக்கூலி மூலம் வீடியோவாக தனக்கு அனுப்பப் பட்டிருக்க இதை வைத்து எப்படி குட்டையை குழப்பி அபிநந்தன் அபிலாஷா இடையே விரிசலை ஏற்படுத்தலாம் என்று தீவிர யோசனையில் மூழ்கினான் முகில்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post