இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நீ மாய நிழல் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK030 Published on 28-05-2024

Total Views: 14745

 நிழல் -1



பாரெங்கும் அழற்கதிரின் ஆட்சி! மூலை முடுக்கெல்லாம் ஊடுருவிப் பயணித்த வெளிச்சமும், திரையிட்டிருந்த அந்த அறையில் மட்டும் நுழைய முடியாமல் வெளியே தேங்கி நின்றது. திரையின் காவலில் முழுதாக அறையைக் கவ்விக் கொண்டிருந்தது இருள்.


 அமளியில் மயக்கத்தில் கிடந்தவளின் இமைகளுக்குள் கருமணிகளின் அலைப்புறுதல். 



 தன் கை, கால்களை மெல்ல அசைத்தாள். அதற்கே உயிர் போகும் வலி. அதை முகத்தில் காட்டினாள். 



 பிரிக்க முடியாமல் பசை போல ஒட்டிக் கிடந்த இமைகளைக் கடினப்பட்டு பிரித்தெடுத்தாள். அறையும் குறையுமாக இமைகளைப் பிரித்து பார்த்தாள் இருட்டைத் தவிர வேறேதும் தெரியவில்லை. 



 மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முழுவதுமாக தன்னிரு நயனங்களை திறந்தாள். இருட்டு தான். உலகமே இருளில் மூழ்கி கிடப்பது போல தோன்றியது அவளுக்கு. 
 வலியினூடே மெல்ல எழுந்து அமர முயற்சித்தாள். வலி உடலெங்கும் ஆட்கொண்டாலும், தன் முயற்சியில் வெற்றிக் கண்டு அமர்ந்து விட்டாள்.
 இச்சிறு முயற்சிக்கு பலனாக வலி பன்மடங்கு கிடைத்தது. பத்து பேர் சேர்ந்து அடித்தது போல ஒவ்வொரு அங்கமும் வலியில் முனங்கியது.
 நாவிலிருந்து தொண்டைக்குழி வரை வறண்டு கிடந்தது. அருகே சிறு மேசையில் தண்ணீர் பொத்தல் கண்டு கரத்தை நீட்டி எடுத்தாள். பாறாங்கல்லை போல மிக கனமாக இருந்தது அவளுக்கு. 



தண்ணீர் தாகம் அடங்கப் போத்தலில் இருந்த நீரை காலி செய்திருந்தாள். உள்ளே சென்ற நீர் உடலுக்கும் சற்றுத் தெம்பு கொடுக்க, ஒரு காலை அகற்றி கீழே ஊன்றி எழுந்து நிற்க முயன்றாள்.
 ஒரு கால் கொடுத்த ஊக்கம் மறுக்கால் கொடுக்கவில்லை... அப்படியே கீழே தடுமாறி விழுந்தாள்.


 "ஆஆஆஆ..." என அந்த அறையே அதிர அலறினாள். தன் இடது காலிலுள்ள கட்டை அப்போது தான் பார்த்தாள். கண்ணீர் தாரைத் தாரையாக வடிந்தது.
 "அம்மா!" என்று மீண்டும் அலறினாள். அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. தரையில் கிடந்து கதறினாள். அவளது அலறலை கேட்டு வேகமாக கதவை திறந்து கொண்டு வந்தான் அவன்.



 மெத்தையில் இல்லாது தரையில் கிடந்தவளைக் கண்டு நெற்றியைச் சொரிந்தவன், வேகமாக அவளை அள்ளிக் கொண்டு மீண்டும் மெத்தையில் படுக்க வைத்து விட்டு தள்ளி நின்றான்.



 தன்னை தூக்கி மெத்தையில் கிடத்தியவனின் முகத்தைப் பார்த்தாள். இதுவரைத் தன் வாழ்நாளில் பார்த்திடாத முகம். ஆனால் பழக்கப்பட்ட முகம் போல இருந்தது.
 அம்முகம் தனக்கு எந்த விதத்தில் சொந்தமென யோசிக்க ஆரம்பித்தாள். 
 அவளது நுதல் சுருங்கி விரிவதிலே தன்னைப் பற்றி தான் யோசிக்கிறாள் என அறிந்து கொண்டவனின் உதட்டில் ஒரு அசட்டைச் சிரிப்பு. வாயில் சுவிங்கத்தை மென்றப்படி அவளை ஒரு கணம் பார்த்து விட்டு கதிர்களை உள்ளே அனுமதிக்காத திரைகளை மட்டும் விலக்கி விட்டான்.
சாளரக் கண்ணாடி வழியே வெளிச்சம் உள்ளே வந்தது, இருளை விழுங்கியது. 
அவனைப் பற்றி யோசிக்க, அவளது தலைக்குள் பூகம்பமே வந்து போனது. தன்னிரு கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டாள்.



 குளியலறையிலிருந்து அவள் பல் துலக்க, ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைத்து எடுத்து வந்தான். பின் பாத்திரத்தையும் எடுத்து வந்து வைத்தவன் தண்ணீர் போத்தலையும் கொண்டு வந்து வைத்தான். அதுவரை அவள் நிமிரவே இல்லை.


 "ரொம்ப யோசிக்காத! என்னை பத்தி எந்தவொரு விஷயமும் உன் ஞாபகத்துல இருக்காது. சோ என்னை நீ ஒரு ஸ்ட்ரேஞ்சராவே பாரு. அண்ட் கால் மீ எக்ஸ்(x)." என்று மொழிந்தவன், ப்ரஷில் பேஸ்ட்டை வைத்து நீட்டினான்.
 அதை வாங்காமல், "உங்க அம்மா உனக்கு ரொம்ப கஷ்டப்பட்டு பேர் வச்சிருப்பாங்க போல!"



 "ம்... அஃப் கோர்ஸ்! ரொம்ப கஷ்டப்பட்டு தான் எனக்கு பேர் வச்சாங்க... பட் நான் எனக்கு இஷ்டப்பட்டு 'x' னு வச்சிக்கிட்டேன்." என்று தோளை அசட்டையாக குலுக்கி விட்டு சொன்னான்.
 அதில் அவளது நெற்றியைப் பிடித்துக் கொண்டவள், "நீ எந்த எழவு பேரைனாலும் வச்சிக்க, ஐ டோண்ட் கேர். பட் ஆன்ஸர் மை கொஸ்டீன். நீ யாரு? நான் எதுக்கு இங்க இருக்கேன்? எனக்கு எப்படி அடிப்பட்டது? என் அம்மா எங்க?" என அடுத்தடுத்த கேள்விகளை அவன் முன் அடுக்கி வைத்தாள்.



 அவனோ பதில் சொல்லாமல் எதையும் அசட்டை செய்யும் தோரணையில் நின்றிருந்தான்.



 அவன் வாயில் பதில் வருமென எதிர்பார்த்தவளுக்கு கிடைத்தது என்னவோ சுவிங்கத்தால் அவன் விட்ட பெரிய முட்டை தான். 
 அவன் செயலில் அனைத்து பாகங்களும் சூடேற கொதித்து போன பெண்ணவள்,


 "இடியட்!" என முகத்தை சுளித்தாள்.



"யா...!" என்றவன் மீண்டும் பிரஷ்ஷை நீட்ட, அவன் முன் கைகளை விரித்து, "வாட் தி ஹெல்? யார் மேன் நீ? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, இப்படி மரம் மாதிரி நிக்கிற? பதில் சொல்லு. யார்? என் அம்மா எங்க?" என்றாள் இந்த முறை கண்களில் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது.



 "லுக்! நீ அழுதாலும் கத்தினாலும் என்கிட்ட இருந்து எந்த பதிலையும் நீ வாங்க முடியாது. சோ, பெட்டர் நான் சொல்றத நீ செஞ்சா மட்டும் போதும். வேணும்னா நான் ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. நான் உன்னை கடத்தி வச்சிருக்கேன். உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. சோ... நான் கொடுக்கிறத சாப்பிட்டு சமத்தா அமைதியா இருக்கணும் என்ன?" என்றவன் அவள் கைகளில் பிரஷ்ஷை திணித்து விட்டு, 
 "ப்ரஷ் பண்ணு! நீ ப்ரஷ் பண்ணினாதான் உனக்கு சோறு! இல்ல பட்டினி தான். நான் போய் ப்ரேக் ஃபாஸ்ட் பண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள ப்ரஷ் பண்ணி இரு." என்று வெளியேறி இருந்தான்.



 அவளோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். ‘என்ன நடக்கிறது?’ என்று அவளுக்கு புரியவில்லை. ‘எப்படி இவன் கையில் மாட்டிக்கொண்டோம்? எப்படி காலில் அடிப்பட்டது?’ என்று தெரியவில்லை. சமீபத்தில் நடந்தது எதுவும் ஞாபகமில்லை. தாத்தா, பாட்டி, அன்னையின் முகம் மட்டும் ஞாபகத்தில் இருந்தது. வேறு யாரும் அவளது நினைவில் இல்லை.



 வயிறு வேறு பசியில் ஓலமிட்டது. வேறு வழியின்றி பல்லை துலக்கி அவன் வைத்து சென்ற பாத்திரத்திலே துப்பி விட்டு வாயை கழுவிக் கொண்டாள்.



 அவனும் ஆவிப்பறக்க இரண்டு இட்லி சாம்பார் என தட்டில் வைத்து கொண்டு வந்து நீட்டினான். பசியில் இட்லி வேகமாக உள்ளே சென்றது. அவனோ அவ்விடத்தை சுத்தம் செய்து விட்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை தனியாக பிரித்து வைத்தான்.
அவள் உண்டு முடிக்க, கை கழுவ உதவினான். தண்ணீர் பொத்தலை நீட்ட, வாங்கி பருகியவள், உடனே அவன் நீட்டிய மாத்திரைகளையும் விழுங்கினாள்.



 "உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் சொல்லு! அம்மா கிட்ட கேட்டு வாங்கி தர்றேன். பிளீஸ் என்னை விட்டுடு! போலீஸ்கிட்ட கூட உன்னை பத்தி சொல்ல மாட்டேன். பிளீஸ் என்னை விட்டுடு!" எனக் கெஞ்சினாள்.
 "ஹா ஹா..." அறையே அதிர சிரித்தான். "யாருக்கு வேணும் உன் பணம்?" என்றான் அசட்டையாக,



 "அப்போ வேற என்ன தான் வேணும்?"
 அவள் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தவன், அவள் கேள்வியில் நின்று அவளை திரும்பி பார்த்தான்.



 அவனிடம் பதிலை எதிர்பார்க்க, அவனோ சிரித்துக் கொண்டே, "எனக்கு என்ன வேணுமோ அதை நானே எடுத்துப்பேன்." என்று அவன் பார்வை அவள் மேல் படிய, வேகமாக போர்வையை கொண்டு தன்னை மறைத்தாள். அவனோ வாய்விட்டு சிரித்து விட்டு வெளியேறி இருந்தான்.



 தப்பிக்க வழி தேடி அறையை நோட்டம் விட்டபடி அமர்ந்து விட்டாள்.
 
***
 வெளியே வந்தவன் அலைபேசியில் யாருக்கோ அழைத்தான். மறுபக்கத்தில் அவனது அழைப்பு ஏற்கப்பட்டது.


 "நீங்க சொன்னது போல கொஞ்ச வருஷத்துல நடந்த நிகழ்வை அவ மறந்துட்டா டாக்டர்! அவளுக்கு அவ அம்மா மட்டும் ஞாபகத்தில் இருக்கு! என்னையும் மறந்துட்டா டாக்டர்..." என்று சொல்லும் போதே அவனது குரல் தழுதழுத்தது. 



 "ம்... ஐ அண்டர்ஸ்டண்ட்! பட் இதுக்கு டிரீட்மெண்ட்டோ, மெடிசனோ எங்க கிட்ட இல்லை. உன்கிட்ட தான் இருக்கு. அவங்களுக்கு பழைய நினைவுகள் திரும்ப பெற உங்களால தான் முடியும்! இப்போ ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருப்பாங்க. அவங்களுக்கு அபார்ட் வேற ஆகிருக்கு. அது கூட அவங்களுக்கு நினைவில் இருக்காது. சோ... நீங்க தான் கேர் பண்ணி பார்த்துக்கணும். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் ஆஸ்க் மீ! வீக் எண்டு வந்து நான் செக் பண்றேன்." என்றதும் போனை வைத்தவன் யோசனையுடன் அமர்ந்து விட்டான்.
 நேரம் செல்ல, கதவை திறந்து உள்ளே வந்தான். உட்கார்ந்தபடி பின்பக்கமாக சாய்ந்து கண்களை மூடி இருந்தாள். 



 கதவு திறக்கும் அரவத்தில் கண்களை திறந்து அவனையே பார்த்திருந்தாள். அவனோ, அந்த அறையிலிருந்த கப்போர்டில் அவளுக்கு தேவையான ஆடையையும், மாதவிடாய் கால அணையாடையும் எடுத்து குளியறையில் வைத்துவிட்டு வெளியே வந்து அவளையே பார்த்தான்.



 அவனது பார்வையின் அர்த்தம் அவளுக்கு விளங்கவில்லை... புருவங்கள் சுருங்க, 'என்னவென்று’ கேள்வியுடன் பார்த்தாள். 
 சட்டையை கை முட்டி வரை மடக்கி விட்டு வேகமாக அவளைத் தூக்க வந்தான்.
 அவளோ பயந்து, "ஏ! என்ன பண்ண போற?" தன்னிரு கைகளை முன் நீட்டி நிறுத்தினாள்.



 "பச்! ஹாஸ்பிட்டல்ல இருந்து நேத்து தான் உன்னை கடத்திட்டு வந்திருக்கேன். ஒரு வாரமா ட்ரீட்மெண்ட்ல இருந்த நீ குளிச்சிருக்க மாட்ட! உன்னை குளிக்க வைக்க தான்..." என அவனிழுக்க, "என்ன?" என அதிர்ந்தாள்.
 "ச்ச... நீ குளிக்கணும். அதான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்." என்று திருத்தி முடித்தான்.



 "இல்ல நானே நடக்க முயற்சி செய்றேன். என்னால முடியும்." என்றாள். அவனோ, "ஓகே." என்று நகன்று நின்றான்.
 காலில் கட்டு போட்டிருப்பதை மறந்தவள், மீண்டும் ஒரு காலை எடுத்து வைத்து, மறு காலை ஊன்ற முயற்சிக்க, முடியாமல் தவறி விழப் போனவளை தாங்கிப் பிடித்தவன், கைகளில் அள்ளிக் கொண்டு குளியறைக்குள் நுழைந்தான்.
 அவள் குளிக்க வசதிகளைச் செய்திருந்தான்.


 நாற்காலியில் அமர வைத்தான். "இது உனக்கு வசதியா இருக்கும். டாய்லெட் வேணும்னாலும் மெல்ல நகர்ந்து யூஸ் பண்ணிக்க! உனக்கு தேவையான ட்ரெஸ் உனக்கு எட்டுற அளவுல வச்சிருக்கேன் எட்டி எடுத்துக்க! டோர் கிளாஸ் பண்ணிருக்கேன் குளிச்சதும் சத்தம் கொடு, வந்து திறக்கிறேன்." என்று வெளியே சென்றவன், ஏதோ சொல்ல வந்தவனாக உள்ளே நுழைய, அவள் கண்களோ தூரமாக இருந்த ஜன்னலில் படிந்தன.
 அவள் முன் சொடக்கிட்டு அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான். 



 "ஜன்னல் வழியா குதிக்கலாம்! இல்லை யாரையாவது கூப்பிடலாம்னு திட்டம் போட்டு தப்பிக்க முயற்சி பண்ணாத! உன்னால முடியாது. பிகாஸ் நாம இருக்கிறது பத்தாவது மாடி. நீ கூப்பிட்டா கேட்காது. நீ குதிச்சா, உன்னை சில்லரையா தான் அள்ளணும். சோ பெட்டர் சமத்தா குளிச்சிட்டு வந்திடு! லேட் பண்ணினால் நான் உள்ள வருவேன். ம் சீக்கிரம்." என்று வெளியே வந்து கதவை தாழ் போட்டான்.



சாளரத்தை ஏக்கத்துடன் பார்த்தவள், ஆடைகளை அகற்றி குளிக்க ஆரம்பித்தாள். வெளியே நாற்காலி போட்டு அமர்ந்தவனோ பாடலை முணுமுணுத்தபடி தன் இருக்கையை அவளுக்கு தெரிவிக்க, பற்களினூடே அவனையும் திட்டி அரைத்தெடுத்தாள்.



 "குளிச்சிட்டேன் கதவை திற!" என உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். கதவை திறந்து உள்ளே சென்றான்.
 "வேஸ்ட் அங்க இருக்கு!" என்றாள். 



"இட்ஸ் ஓகே! நான் பார்த்துக்கிறேன்." என்று அவளை தூக்கி மெத்தையில் அமர வைத்தான். 



 "வேற எதுவும் வேணும்ன்னா.."



 'வேண்டாம்...' என்று தலையை மட்டும் அசைத்தாள். "ஓகே." என்று தோளைக் குலுக்கியவன் வெளியே செல்ல எத்தனிக்க, "என்ன ரீசனுக்காக என்னை கடத்திருக்க? பணம் வேணாம் சொல்ற? வேற என்ன வேணும் உனக்கு? எதுனாலும் எங்க அம்மா தருவாங்க! கேட்டு வாங்கி தர்றேன் பிளீஸ் என்னை விட்டுட்டு!" என்று மீண்டும் கெஞ்சினாள்.



 "எனக்கு என்ன வேணும்னு நான் இன்னும் யோசிக்கலை! மே பீ லேட்டர் யோசித்து கேக்குறேன்." என்று சென்று விட்டான். அவளோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.



 மதிய உணவை மறுத்தவளை மல்லு கட்டி உண்ண வைத்தான், அதனுடன் மாத்திரைகளை விழுங்க வைத்தான். மாத்திரையின் உபயோகத்தினால் உறங்கிப் போனாள்.



 இரவில் தான் கண் விழித்தாள். அறை முழுக்க குழல் விளக்கு வெளிச்சம் படர்ந்திருக்க, வெளியே இருள் சூழ்ந்திருந்தது. இரவாகிப் போனது, தானாக பயம் தொற்றிக் கொள்ள கண்களில் பெரிய பெரிய சொட்டுக்களை உதிர்த்தாள் பெண்ணவள்.
கையில் தட்டுடன் வந்திருந்தான்.


உதட்டை பிதுக்கி கண்களில் நீருடன், "என்னை விட்டுட்டு பிளீஸ்." என்றாள். பார்க்க அவனுக்கும் பாவமாக தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை அவள் அவனுடன் தான் இருந்தாக வேண்டும்.



 "சாப்பிடு!" என்று நீட்டினான்.


 அவளோ ஆவேசத்துடன் அதை தட்டி விட்டு, "நீ என்ன பைத்தியமா? எதுக்கு கடத்தின சொல்லாம மூனு வேலை சாப்பாட்டு தட்ட மட்டும் கொண்டு வந்து நீட்ற! நான் சாப்பிடணும் அக்கறை உள்ளவன் எதுக்கு என்னை அடச்சி வச்சிருக்க சொல்லி தொலையேன்?" என கத்தினாள்.



 அவனோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சிதறிக் கிடந்ததை அள்ளி எடுத்து தட்டில் போட்டு விட்டு வெளியே சென்று விட்டான்.
 கண்களை மூடி கைகளுக்குள் முகத்தை மறைத்திருந்தாள். மீண்டும் வந்தான் தட்டுடன். அவள் அருகே அமர்ந்தான்.
 நிமிர்ந்தாள், கையில் தட்டுடன் இருப்பதை கண்டு, 'ஐயோ' என்றானது அவளுக்கு.


 அவனோ மூரலுடன், தன் காந்தக் குரலால் பாட ஆரம்பித்தான்.



"மின்னும் சிலையே அன்னை போல வரவா நானும் சோறூட்ட!
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவா உன்னை சீராட்ட 
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம் தீர்ப்பவர் யாரென கூறடி!" 


அழகாய் பாடி இரண்டு வாய் ஊட்டி விட்டிருந்தான்.



அவளோ குரலைத் தாழ்த்தி, "யார் நீ?" என்றாள். அதற்கு பதில் சொல்லாது பாடலைத் தொடர்ந்து பாடிக் கொண்டு அவளுக்கு ஊட்டி விட்டு உண்ண வைத்து மாத்திரைகளையும் கொடுத்து படுக்க வைத்து விட்டான்.



 கண்கள் சொருக, அவனை பார்த்த படியே நித்திரையில் ஆழ்ந்தாள் அஹானா! அவள் தலையை வருடி, 



"சீக்கிரமே உனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வரும். அது வரைக்கும் கீப் காம் அஹி!" என்று அவளுடன் பேசியவன், போர்வைப் போர்த்தி விட்டு இவன் தரையில் படுத்துக் கொண்டு, நடந்ததை அசைப்போட்டான் மிஸ்டர் x. 
 நிழல் தொடரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Leave a comment


Comments


Related Post