இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...42 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 28-05-2024

Total Views: 19928

“அண்ணா… பூச்செண்டு எழுந்துட்டாளா…?” கையில் வைத்திருந்த தனது ஒன்பது மாத மகன் ரிதன் யாதவை முகிலனிடம் ஒப்படைத்தபடியே தரணியிடம் கேட்டாள் மீரா.


“இன்னும் இல்லடா… நைட்டெல்லாம் சரியா தூங்கல… இப்போதான் அசந்து தூங்குறா…” சொன்னவனின் முகத்தில் நீக்கமற நிறைந்துபோன வேதனை.


“மாத்திரை போடணுமேண்ணா… சாப்பிட்டாதானே போட முடியும்…” அவளது குரலில் அக்கறை.


“ம்… கொஞ்ச நேரம் தூங்கட்டும்… நான் எழுப்பி சாப்பிட வச்சுக்கிறேன்…” உணர்ச்சி துடைத்த வார்த்தைகள்.


“நீ ஆபீஸ் கிளம்பலையாடா…?” தனது கன்னத்தில் மொட்டுவிட்ட சின்னஞ்சிறு அரும்புப் பற்களால் ஈரமாய் எச்சில் செய்து கொண்டிருந்த மகனின் குறும்புத்தனத்தில் மெல்ல புன்னகைத்தபடியே தரணியின் அருகில் வந்து அமர்ந்தான் முகிலன்.


“மா….மா… மாமா…” கைகளை உதறி தரணியிடம் தாவத் துடித்த குட்டிக் கண்ணனை புன்னகையுடன் கையில் எடுத்தபடியே “கொஞ்ச நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்… தேவைப்படும்போது ஆபீஸ் வரேன்…” பதில் உரைத்தவன் ரிதனுடன் விளையாடத் தொடங்கினான்.


அனைவரின் மனங்களையும் பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும் வேதனைகளுக்கெல்லாம் ஒரே வடிகால் அந்த குட்டி தேவன்தான்… செண்பகம் பக்குவமாய் அரைத்துக் கொடுத்து அனுப்பிய கேழ்வரகு மாவில் கூழ் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் நெருங்கினாள் மீரா.


“குடு மீரா… நானே ஊட்டி விடுறேன்…” தரணி கை நீட்ட “மடியில உட்காரவச்சு ஊட்ட முடியாதுண்ணா… ரொம்ப துள்ளுவான்... கால் நீட்டி படுக்கப் போட்டு ஊட்டினாதான் சாப்பிட வைக்க முடியும்… குடுங்க… நானே ஊட்டிவிடுறேன்…” அவனிடமிருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


சோபாவில் தலையை மேல் நோக்கி சாய்த்து கண்களை மூடி அமர்ந்து கொண்டான் தரணி. சோபாவில் இருந்து எழுந்து கொண்ட முகிலன் தரணியின் அறைக்குள் நுழைந்தான்… கால்கள் இரண்டையும் வயிற்றோடு சுருட்டி முடக்கி குருவிக் குஞ்சாய் துவண்டு போய் படுத்திருந்தாள் பூச்செண்டு. அவள் அருகில் சென்று அமர்ந்தவன் மெல்ல அவள் தலை வருடியபடியே வேதனையாய் அவளைப் பார்த்தான். 


எந்நேரமும் மான் போல் துள்ளி ஓடி குறும்புத்தனமும் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமுமாய் எந்நேரமும் வம்பிழுத்து அலையும் அந்த கிராமத்து அழகு நரிச்சின்னக்கா கண்முன் வந்து போனாள். மனதில் பாரம் அழுத்த கண்களில் மெலிதான கண்ணீர் கீற்று எட்டிப் பார்த்தது… முகிலனுக்கு மூத்த குழந்தை அவள்… அவள் மேல் அளவு கடந்த பாசமும் நேசமும் உண்டு… இன்று உடல்நலம் குன்றி காய்ந்த சருகாய் முடங்கிக் கிடப்பவளை பார்க்கும் போதெல்லாம் மனமெல்லாம் ரணமாய் வலிக்கிறது.


“எல்லாம் சரியாயிடும் அம்மு… உன்னையும் தரணியையும் பழைய மாதிரி நாங்க பார்க்கத்தான் போறோம்… இதுவும் கடந்து போகும்… நிச்சயமா…” சத்தமின்றி மெல்ல முணுமுணுத்துக் கொண்டவன் ஒரு தந்தையின் பாசத்துடன் அவள் உச்சந்தலையில் மிக மென்மையாய் முத்தமிட்டு அரவமின்றி எழுந்து வெளியேறினான்.


சோர்வுகளையும் வேதனைகளையும் தாண்டி அன்றாட வாழ்க்கைப் பணிகள் அனைவரையும் இழுக்கத்தானே செய்யும். மடமடவென குளித்து தயாராகி அலுவலகத்திற்கு கிளம்பும் மும்முரத்தில் முகிலன்… மெட்டர்னிட்டி விடுமுறை முடிந்து வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறாள் மீரா… முகிலனும் தரணியும் மாறி மாறி குழந்தையை பார்த்துக் கொள்வதும் அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதுமாக இருப்பதால் அலுப்பாய் எதுவும் தோன்றுவதில்லை. பூச்செண்டையும் தாய் போல் கவனித்துக் கொள்கிறாள் மீரா… நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.


பூச்செண்டின் உடல்நலத்தில் என்ன குறை…? அவளுக்கு என்னதான் ஆயிற்று…?


மிகப்பெரிய பூகம்பமாய் அவர்களின் வாழ்க்கையில் சிக்கல் தோன்றி அதிலிருந்து வெளியேறி மகிழ்ச்சியாகத்தான் மீண்டும் தங்களின் வாழ்க்கையை தொடங்கி இருந்தனர் இருவரும். முகிலனும் மீராவும் பணி நிமித்தமாக குழந்தையை எடுத்துக் கொண்டு மீண்டும் பெங்களூர் வந்து சேர்ந்திருந்தனர்… கைப்பிள்ளையை வைத்திருக்கிறாள் என்பதால் செண்பகமும் துணையாக உடன் வந்து தங்கிக் கொண்டார்… கிழவிபோல் பல பக்குவங்கள் பூச்செண்டுக்கு தெரியும்… ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து  வளர்த்து இருக்கிறார் பாட்டி. ஆதலால் செண்பகத்தைவிட பூச்சண்டே குழந்தையை அதிகமாக பராமரித்துக் கொண்டாள்.


செண்பகத்தாலும் தொடர்ந்து உடன் தங்க முடியாத சூழ்நிலை. தோட்டம் வீட்டுபா பராமரிப்பு என்று அவரது வேலைகளும் தொடர்ந்து அழைக்க “நான்தான் இருக்கேன்லத்த… கெழவிக்கு நீ கூட இருந்தாதான் சரியா வரும்… அப்பப்போ எல்லாரும் வந்து போங்க… அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்…” பூச்செண்டின் நம்பிக்கை வார்த்தைகளில் செண்பகமும் மீண்டும் ஊருக்கு கிளம்பி இருந்தார்.


தனது முனி மாமாவின் மகன்… தனக்கும் உரிமையான குழந்தை… உற்ற சகோதரியாய் மாறிப்போன மீராவின் வாரிசு என்பதால் இயல்பாகவே குழந்தையின் மீது இணக்கம் ஏற்பட்டது பூச்செண்டிற்கு… மீரா அலுவலக வேலைகளில் ஆழ்ந்துவிடும் நேரங்களில் அவள்தான் குழந்தையை பார்த்துக் கொள்வாள். குட்டிக் குழந்தையின் வரவும் அந்த கொஞ்சு மொழியும் புரியாத பாஷையும் வீட்டில் எந்நேரமும் ரீங்காரமிட்டு கொண்டிருக்க மகிழ்வுடன்தான் அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தனது பார்லர் வேலைகளையும் குறைவின்றி பார்த்துக் கொண்டாள் பூச்செண்டு.


இப்பொழுதெல்லாம் குழந்தையின் ஸ்பரிசமும் வாசமும் அவளுக்கும் நிறைய ஆசைகளை தோற்றுவிக்கத் தொடங்கியிருந்தது. பல இரவுகளில் தரணி நெஞ்சின்மீது ரிதனை படுக்க வைத்துக்கொள்ள அவன் தோளில் படுத்தபடி இருவரும் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருப்பர்.


“இப்பவெல்லாம் சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு மாமு… ரிதனையும் நம்ம குழந்தையையும் இதே ஒற்றுமையோட ஒன்னா வளர்த்தணும்… ரெண்டு குட்டீஸும் பண்ற அட்டகாசத்தை எல்லாம் எல்லாரும் சந்தோஷமா ரசிக்கணும்… எனக்கும் சீக்கிரம் கிடைச்சிடும்ல…” ஏக்கமாய் தனது கணவனிடம் கேட்பாள்.


முதலில் புரியாத்தனமாய் ஏதோ செய்துவிட்டாள். இப்பொழுதெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள கொள்ளை ஆசை… அதுவும் தன் ஆசை மாமுவின் ஜாடையை அப்படியே வாங்கி பிறக்க வேண்டும் என்ற கூடுதல் ஆசையும் உண்டு… பாகுபாடோ குழப்பமோ இன்றி நன்றாகத்தான் அவர்களது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன… ஆனால் மாதாமாதம் சரியான தேதியில் வீட்டிற்கு விலக்காகி ஏமாற்றம் ஏற்படத் தொடங்கியது… தரணியைவிட அவள்தான் அதிகம் வருந்துவாள். அடுத்தடுத்து தூரமான சமயங்களில் ரத்தப்போக்கும் அதிகமாகி சில சமயங்களில் 10 நாட்கள்வரை தொடரும் சூழலும் வந்தது. உடல் ரீதியாக மிகவும் சோர்ந்து சற்று இளைத்தும் போனாள் பூச்செண்டு. அடுத்தடுத்த மாதங்கள் தொடர்ந்து இதேபோல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகினான் தரணி.


அவளை முழுமையாக பரிசோதித்து அவளிடம் சில பொதுவான விளக்கங்களை பெற்றுக் கொண்டவர் “ஹெல்த் இஷ்யூவுக்காக ஏதாவது டேப்லட்ஸ் ரெகுலரா எடுத்து இருக்கியாம்மா…” தனது சந்தேகங்களை கேட்கத் தொடங்கினார்.


“ஹெல்த் இஷ்யூ எதுவும் எனக்கு வந்ததில்ல டாக்டர்…”


“ரெகுலரா வேற ஏதாவது டேப்லட்ஸ்…?”


சட்டென்று பொறி தட்ட “கொஞ்ச காலம் கருத்தடை மாத்திரை சாப்பிட்டேன்…” அவள் சொல்லி முடிக்கும் முன் சாந்தமான மருத்துவரின் முகம் கடுமையாய் மாறியது.


“டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனோட சாப்பிட்டியா…?” இல்லை என்று தலையாட்டியவளுக்கு குற்ற குறுகுறுப்பு. 


தரணியையும் பூச்செண்டையும் மாறி மாறி கோபமாய் பார்த்தவர் “நீங்களே டாக்டராயிட்டா அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு…? உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணி வச்சிட்டு அப்புறம் காம்ப்ளிகேட் ஆகி உடம்பை கெடுத்துட்டு இப்படி வந்து உட்கார வேண்டியது… படிச்சவங்கதானே ரெண்டு பேரும்… குழந்தையை தள்ளிப் போடணும்னா எத்தனையோ எளிமையான வழிகள் இருக்கு… ஏன் சார்… குழந்தையை சுமந்து பெத்துக்கிற வலிதான் பெண்களுக்கு இருக்குன்னா இதுபோல பிரச்சனைகளையும் பெண்கள் கிட்டதான் திணிப்பீங்களா… ஏன் நீங்க பாதுகாப்பா இருக்கக் கூடாதா…? உங்களை நீங்க கஷ்டப்படுத்திக்கக் கூடாது… எல்லா கஷ்டங்களையும் பெண்கள்தான் அனுபவிக்கணும்… இந்த ஜெனரேஷனும் இப்படித்தான் இருக்கீங்களா…”தரணியிடம் காச் மூச்சென ஆவேசமாய் சத்தமிடத் தொடங்கினார் மருத்துவர்.


“ஐயோ டாக்டர்… அவர்மேல எந்த தப்புமே இல்ல… நான்தான் தெரியாம பண்ணிட்டேன்… எனக்கு குழந்தை வேணும்… அதுக்கு நான் என்ன பண்ணனும்…?” தன்னால் தன் கணவன் தேவையற்று பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததில் துடித்துப் போனாள் பூச்செண்டு.


“இப்போ வந்து கேளு… இந்த எண்ணம் ஏன் உனக்கு முன்னாடியே இல்லாம போச்சு…? நீ எடுத்துக்கிட்ட மாத்திரை பெயர் என்ன…?” கோபம் குறையாமல் கேட்டவரிடம் மாத்திரையின் பெயரைச் சொல்ல “எவ்வளவு வீரியமான மாத்திரை சாப்பிட்டு இருக்கே தெரியுமா…? அதனாலதான் இப்போ இவ்வளவு காம்ப்ளிகேட் ஆகி இருக்கு… கர்ப்பப்பை புண்ணா இருக்கு… அதனாலதான் குழந்தை தங்குறதிலும் பிரச்சினையாகி இருக்கு…” இதனைக் கேட்டவுடன் முகத்தில் அடித்துக்கொண்டு அழுதாள் பூச்செண்டு.


“என்னை மன்னிச்சிடுங்க மாமு‌.. இப்படி பண்ணிட்டேனே…” இடம் பொருள் ஏவல் தெரியாது தனது கணவனை கழுத்தோடு கட்டிக் கொண்டு அழ அந்த மருத்துவருக்கே அவளைப் பார்க்க பாவமாய் போனது. இந்த நிலையிலும் தரணிக்கு அவள்மேல் கோபம் எழவில்லை… தன் மனைவியின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ என்ற கலக்கம்தான் எழுந்தது.


“டாக்டர்… குழந்தை மெதுவா கிடைக்கட்டும்… அது பிரச்சனை இல்ல… இவ உடம்பு நல்லபடியா குணமாகணும்… அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க…” அவனது அக்கறையில் மருத்துவரும் மனம் கனிந்து அடுத்த சிகிச்சைக்கான வழிமுறைகளை விளக்கினார்.


அதன்படி சிகிச்சை தொடர்ந்தது… முகிலனுக்கும் மீராவிற்கும் விஷயம் என்னவென்று தெரியாமல் தரணி பார்த்துக் கொண்டாலும் தனது தவறை பொறுக்க முடியாமல் அவர்களிடம் கொட்டி தீர்த்திருந்தாள் பூச்செண்டு கோபத்தில் அவளை அடிக்கவே கை ஓங்கி விட்டான் முகிலன்… மீராதான் தடுத்து பிடித்திருந்தாள்.


‘நம்ம வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா துடிச்சு போயிருவாங்கடி… ஏன் அப்பத்தா ஒரு ஆளு போதும்... உன்னை பேசியே பரலோகம் அனுப்பிடும்… எவ்வளவு பெரிய வேலை பண்ணி வச்சிருக்க… இப்போ எங்கே வந்து நிக்குது பார்த்தியா… வேற ஒருத்தனா இருந்திருந்தா உன்னை நேரம் துரத்தி அடிச்சிருப்பான்… ஆனா என் நண்பன்… அவன் ஒரு ஜெம் தெரியுமா… இப்பகூட உன்னை பைத்தியமாதான் காதலிக்கிறான்…” ஆவேசமாய் தானும் தனது பங்குக்கு கண்டபடி திட்டித் தீர்த்தான் முகிலன். 


முகிலன் கோபம்கூட அவளை பெரிதாக வருத்தம் கொள்ளச் செய்யவில்லை… அவள் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்து இப்பொழுதெல்லாம் தரணி அவளிடம் காட்டும் அந்த எதிர்பார்ப்பற்ற பேரன்பு… குறையாத காதல்… இவைதான் அவளது இதயத்தை அறுத்துக் கொன்றன.


“என்னை அடிங்க மாமு… ஏதாவது வெளிப்படையா மனசு விட்டு திட்டிருங்க… கொஞ்சமாவது வெறுப்பா நடந்துக்கங்க… இப்படி எல்லாம் என் மேல அன்போட இருக்காதீங்க… ரொம்ப கில்ட்டியா இருக்கு…” அவன் மடியில் தலைவைத்து அழுது கரைந்தாள்.


“பைத்தியம் மாதிரி பேசாதடி… குழந்தைக்காகத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனா… எனக்கு நீதான் முக்கியம்… குழந்தை எப்ப வேணாலும் பெத்துக்கலாம்… நீ தெரிஞ்சு எதுவும் பண்ணல… தெரியாமதான் பண்ணிட்டே… விடு… எல்லாம் சரியாயிடும்… நான் இருக்கும்போது நீ எதைப் பத்தியும் கவலைப்படக்கூடாது…” அவள் தலை வருடி அன்றாடம் ஆறுதல் வார்த்தைகளை வழங்குவான்.


குழந்தையை பார்க்க பெரியவர்கள் ஊரிலிருந்து வந்து தங்கும் சமயங்களில் அவளிடம் குழந்தையைப் பற்றி ஏதேனும் பேச்சு எடுத்தால் ஏதேதோ பேசி சமாளித்து விடுவர் மற்ற மூவரும். நாட்களின் நகர்தலில் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டாள் பூச்செண்டு. தான் பெரிய தவறு இழைத்து விட்டதாக அடி மனதில் ஆழமாக குற்ற உணர்ச்சியும் வேரூன்றத் தொடங்கியது. மருந்து மாத்திரைகள் விடாமல் உட்கொண்ட போதிலும் மாதா மாதம் உதிரப்போக்கும் குறையாது இன்னும் உடல் பாதிப்படைந்தது. தரணி மிகவும் வேதனை அடைந்தான்… அவளது குற்ற உணர்விலிருந்து அவளை வெளிக்கொண்டுவர முகிலன் மீரா தரணி அனைவருமே அவளுக்கு ஆறுதலையும் அன்பையும் அளித்தனர்.


உடல்ரீதியான பாதிப்பைவிட மனரீதியான பாதிப்பினால்தான் அவள் அதிகம் தொய்ந்து போனாள் என்று மருத்துவரும் அறிவுறுத்தி கவுன்சிலிங்கிற்கும் ஏற்பாடு செய்திருந்தார். தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதோ தன்னவனுக்கு தான் அருகதை அற்றவளாக ஆகிவிட்டோமோ என்று சதா சர்வகாலமும் மன உளைச்சலில் புளுங்கியவளுக்கு மன அழுத்தத்தினால் வயிற்றில் உள்ள புண்ணும் ஆறாது உடல் ரீதியாக அதிகமாக பாதிக்கப்பட்டாள் பூச்செண்டு. இரவு நேரங்களில் உறக்கத்தை தொலைக்கத் தொடங்கினாள்.


கணவனின் அன்பிலும் அரவணைப்பிலும் பொறுமையான கவனிப்பிலும் அவ்வப்போது மனம் ஆறுதல் அடையும்… கூடுதலாய் அவள் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் முகிலனின் மகனை அவள் கையில் ஒப்படைத்து விடுவர். குழந்தையின் விளையாட்டுத்தனங்களில் ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் தனக்கும் குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் பெரிதாக மனதில் எழும்… வேதனைகளிலும் சிற்சில ஆறுதல்களிலும் நாட்கள் நகர ஒருநாள் திடுமென ஊரிலிருந்து பெரியவர்கள் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர்.


பாதியாக உருமாறி இருந்த பூச்செண்டினை கண்டு கதறிவிட்டார் மல்லிகா. எதனால் அவளது உடலில் பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கூறாமல் கர்ப்பப்பையில் புண் இருக்கும் விபரத்தை மட்டும் கூறினர் அனைவரும்.


“பெரியவுக நாங்க இத்தனை பேர் இருக்கோம்… ஒரு வார்த்தை தகவல் சொல்ல மாட்டீகளா… உங்க வைத்தியம் எல்லாம் போதும்… கொஞ்ச நாளைக்கு இவ ஊர்ல வந்து இருக்கட்டும்… தெப்பு தேத்தி அனுப்பி வைக்கிறோம்… சின்னப் பிள்ளைக வெள்ளாம வீடு வந்து சேராதுங்கறது சரியாத்தேன் இருக்கு… எல்லாத்தையும் சரி பண்ணி அனுப்பி வைக்கிறோம்…” பாட்டி பிடிவாதமாய் நிற்க தரணியும் வேறு வழியின்றி சம்மதித்தான்.


“மாமு… நாளைக்கு ஊருக்கு போறேன்…” தனது கணவனை இறுக்கி அணைத்தபடி அவன் மார்பிற்குள் புதைந்து கொண்டாள் பூச்செண்டு.


“அத்தை அம்மா அப்பத்தா எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்குவாங்கடி… அந்த தைரியத்துலதான் நானும் ஓகே சொன்னேன்…” தன்னை உடம்புப் பிடியாய் அணைத்திருந்தவளின் தலையில் அழுத்தமாய் நாடியை பதித்துக் கொண்டே கூறினான் தரணி.


“உங்களைப் பிரிஞ்சு எப்படி இருக்கப் போறேன்னு தெரியல…” பேசும்போதே குரல் தழுதழுத்தது.


“உன்னைவிட நான்தான்டி ரொம்ப கஷ்டப்படுவேன்… இந்த அறைக்குள்ள இருக்கவே முடியாது…” அவன் குரலிலும் அத்தனை வருத்தம்.


“பேசாம இங்கேயே இருந்துரட்டுமா…” நிமிர்ந்து அவன் முகத்தோடு முகம் உரசக் கேட்டாள்.


‘வேண்டாம்… நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்… டெய்லி வீடியோகால் பேசிக்கலாம்… நீ பழைய பொக்கேவாதான் இங்கே திரும்பி வரணும்… நான் சொல்றது ஹெல்த்வைஸ் மட்டும் இல்ல.. மைண்ட்வைஸும்தான்… பழைய குறும்பு விளையாட்டு சேட்டை இதெல்லாம் உன்கிட்ட நிறைய மிஸ் பண்றேன்டி… எவ்வளவு நாள் வேணாலும் இருந்துட்டு வா… ஆனா பழைய மாதிரி வரணும்…” சொன்னவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட அவள் இதழ்களிலோ வேதனையான புன்னகை.


‘நான் திரும்பி வருவேனான்னு எனக்கே தெரியல மாமு… உங்களுக்கு உபயோகமில்லாத ஒருத்தியா இந்த வீட்ல திரும்ப வந்து இருக்கமாட்டேன்… அது வேணா உறுதி..” உள்ளுக்குள் ஓடிய திடமான எண்ணத்துடன் அவனையே ஆழ்ந்து பார்த்தபடி இருக்க “என்னடி… அப்படி முழுங்கற மாதிரி பார்க்கிற…” செல்லமாய் அவள் கன்னத்தில் பல் படாமல் வாயை மடக்கி கடித்து வைத்தான்.


தன்னவனின் மனைவியாக அதுதான் அவனுடன் கழிக்கும் கடைசி இரவாக இருக்கக்கூடும் என்று அவளது உள்மனம் ஓயாது உணர்த்திக் கொண்டே இருக்க அன்றைய இரவை காலம் முழுக்க அசை போட்டு இன்புற்றுக் கொள்ளும் தனித்துவமான பொழுதாக மனதிற்குள் பதித்துக் கொள்ள நினைத்தவள் அவனது இதழ்களை ஆவேசமாய் பற்றி தனது தேவையை உணர்த்தினாள்‌ தன்னவளை சில காலம் பிரிந்திருக்கும் ஏக்கம் அவனுக்குள்ளும் எழுந்ததால் அவளது தேவையை அறிந்தவன் தனது தேவையையும் போக்கிக் கொள்ள அவளுக்குள் முழுதாய் மூழ்கத் தொடங்கினான்.


மூளை வரை மோகம் ஏறிய போதும் “பேபி… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..” என்றான் அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்தபடி. அவன் தேவையை விட அவள் உடல் நலம் அவனுக்கு மிகவும் முக்கியம். 


“என்னை நோயாளின்னே முடிவு பண்ணிட்டீங்களா மாமு…” அவள் குரல் கமறியது.


“அதுக்கு இல்லடா…” அவன் அடுத்து பேசும் முன் “கணவன் மனைவி உறவுல குழப்பம் இல்லைன்னு டாக்டர்தான் சொல்லிட்டாங்களே…” ஏக்கமாக கூறினாள்.


உண்மைதான்… அவள் மன அழுத்தத்திற்கு கணவன் மனைவிக்குள் ஏற்படும் இணக்கமான உறவும்கூட அவளுக்கு தெளிவை கொடுக்கும் என்று மருத்துவர் கடந்த முறை கூறியிருந்தார் தான். கழுத்தைக் கட்டிக் கொண்டு தனது காதல் மனைவி எதிர்பார்ப்புடன் தன் கண்களை நோக்கும்போது எந்த ஆண்மகன்தான் அதற்குமேல் தாக்குப் பிடிப்பான்… அவளை முத்தமிட்டபடியே அவளுக்குள் புதையத் தொடங்கினான்.


ஏனோ என்றும் இல்லாமல் அன்றைய அவர்களது கூடலில் நெருக்கமும் இணக்கமும் காதலும் காமமும் கூடுதலாகவே ஆட்சி செய்தது. அவன் சோர்ந்த போதும் அவள் விடாமல் நாடியது அவனுக்கே ஆச்சரியமான ஒன்றுதான். மறுநாள் உள்ளுக்குள் வேதனையை மறைத்து பெயருக்கு வெளியில் சிரித்து தன் கணவனை முழுதாக கண்களில் நிரப்பி அங்கிருந்து கிளம்பி இருந்தாள் பூச்செண்டு.






Leave a comment


Comments


Related Post