இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 35 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 28-05-2024

Total Views: 16385

இரண்டு மூன்று நாட்களாக அபி நந்தனிடம் சரியாக பேசுவதே இல்லை அலுவலகத்தில் வேலை அதிகம் அதனால் வந்த சோர்வு என்று நந்தனும் பார்வதியும் நினைத்துக் கொண்டு வீட்டில் அவளுக்கு ஆறுதலாக நடக்க அதை விலக்கவும் வழி தெரியாமல் ஒன்றவும் இயலாமல் தவித்து கொண்டு இருந்தாள் அபிலாஷா.


இந்நிலையில் நந்தன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள தனது தோழிகளை தன் மருமகள் வளைகாப்பு விழாவிற்கு அழைக்க வந்த பத்மாவதி அபியையும் பார்வதியையும் பார்த்து செல்லலாம் என்று வந்திருக்க அவரிடம் கூட சரியாக முகம் கொடுத்து பேசாமல் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள் அபிலாஷா.


“பார்வதி அபி ஏன் ஒருமாதிரி இருக்கா?” பத்மாவதி வினவ பார்வதியும் அலுவலக வேலை பளு என்று காரணம் சொல்ல


“ஆனா பார்வதி அபியோட முகத்துல சோர்வை தாண்டி ஒரு பளபளப்பு இருக்கு கவனிச்சீங்களா?” என்று கேட்க புரியாமல் பார்த்தார் பார்வதி.


அந்த நேரம் அபிநந்தன் உள்ளே வர இவர்கள் பேச்சை கவனித்தான். “என்ன பார்வதி நீங்க… பொண்ணுங்க கர்ப்பமா இருக்கும் போது ஆரம்ப காலத்துல சோர்வு அதிகமா இருக்கும் ஆனா அதே சமயம் அவங்க முகம் பொலிவாவும் இருக்கும். இது தாய்மையோட மாயம். நம்ம அச்சுக்கு கூட இப்படி தானே இருந்தது.” என்று பத்மாவதி சொல்ல


தற்போதைக்கு அபியின் நிலை பார்வதிக்கு தெரிந்ததால் அபி கருவுற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அப்படி இல்லை என்றால் இப்போதே இதை குறித்து கற்பனை ஏற்றிக் கொண்டு பின்னால் இல்லாமல் போனால் அனைவருக்கும் வருத்தம் என்று நினைத்த பார்வதி


“அப்படி இருந்தா சந்தோஷம் தான் சம்மந்தி… நான் அவகிட்ட விசாரிக்கிறேன்‌.” என்று பார்வதி சொல்ல அபிநந்தனோ மனதுக்குள்ளேயே அபிலாஷா சென்ற மாதம் வீட்டுக்கு தூரமான தேதியை கணக்கிட்டவன் தங்கள் அறை அலமாரியில் இருந்த அவளின் நாப்கின் பாக்கெட்டை சோதித்து பார்த்தான். மாதாமாதம் அபிநந்தன் தான் அவளின் இத்தகைய தேவையை கூட கவனித்து அனைத்தும் வாங்கி வைப்பான்.


இந்த மாதம் பன்னிரண்டு நாட்கள் தள்ளப் போனதை அறிந்தவன் இதயம் ஒரு பக்கம் தன் மனைவி தன் உயிரை வயிற்றில் சுமக்கிறாள் என்ற மகிழ்விலும் அதனால் அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்திலும் இயல்பை விட இருமடங்காக துடிக்க சில நொடிகள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி தன்னை சமன் செய்து கொண்டவன் உடனே பார்க்க சென்றது தன் தோழி சந்தியாவை தான்…


சென்ற முறை அபிநந்தன் சந்தியா பேசிக் கொண்டதில் இருந்து நந்தன் லாஷா வாழ்வை தெரிந்து கொண்ட முகில் எப்படியும் சந்தியாவை மீண்டும் அபிநந்தன் பார்க்க வரலாம் என்று யூகித்தவன் அவர்களை கண்காணிக்க அந்த மருத்துவமனையில் காசுக்கு விலை போகும் ஒரு கைக்கூலியை கண்டு பிடித்து அவனிடம் நந்தனும் சந்தியாவும் சந்திக்க நேர்ந்தால் அதை வீடியோவாக எடுத்து தனக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தொகையை கையில் கொடுத்திருக்க காசுக்கு ஆசைப்பட்டவனும் நந்தன் சந்தியாவை பார்க்க வந்தது அறிந்து அவர்களை கண்காணிக்க துவங்கினான்.


நந்தன் வந்து சந்தியாவை பார்க்க வேண்டும் என்று கேட்க “மேடம் பேஷண்ட் பார்த்துட்டு இருக்காங்க சார் வெய்ட் பண்ணுங்க கூப்பிடுவாங்க” என்று சொல்ல அலைப்புறும் விழிகளோடு வெளியே காத்திருக்க துவங்கினான் அபிநந்தன்.


அபிநந்தனை பார்த்த அந்த கைக்கூலி மூர்த்தி வேறு ஒரு நோயாளி பற்றிய தகவலை கொடுப்பதற்காக செல்வது போல சந்தியா அறைக்கு சென்றவன் சந்தியா குடிக்க வைத்திருந்த ஜூஸை மேலே வேண்டுமென்றே கொட்டிட அவனை ‘வேலையில் கவனம் இல்லையா?’ என்று திட்டிய சந்தியா தன்னை சுத்தம் செய்து கொள்ள அறை உள்ளேயே இருந்த பாத்ரூமிற்கு செல்ல அந்த நேரத்தில் தான் கொண்டு வந்த செல்ஃபோனை யாருமறியா வண்ணம் பதுக்கி வைத்து விட்டு வெளியே வந்தான் அவன்.


அபிநந்தன் உள்ளே வர “என்ன அபி திடீர்னு வந்திருக்க? அபி ஓகே தானே?” என்று கேட்க


“அதை தெரிஞ்சுக்க தான் வந்திருக்கேன் சந்தியா.” என்றவன் வீட்டில் தன் தாயிடம் பத்மாவதி பேசியதையும் தன் சந்தேகத்தையும் கூற சந்தியாவுமே அதிர்வாக பார்க்க


“என்ன சந்தியா? லாஷா ப்ரெக்னன்ட் ஆனா ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே? லாஷாக்கு எதுவும் ஆகாதுல்ல..” தவிப்பாக கேட்க சந்தியா மறுப்பாக தலையசைத்தாள்.


“என்ன சந்தியா தெளிவா சொல்லு…” அவன் பதற


“அபிலாஷாவை டெஸ்ட் பண்ணி பார்க்காம எதுவும் சொல்ல முடியாது அபி. ஆனாலும் இதுவரை அவளோட ரிப்போர்ட் படி ஒரு குழந்தையை தாங்குற சக்தி அவளோட கருப்பைக்கு இல்ல… மேபீ அவளோட உயிருக்கு கூட ஆபத்தா ஆகலாம் அது.” என்று சந்தியா சொல்ல உடைந்து போன நந்தன் விழிகள் இரு துளி நீர் சொரிய


“டேய் அபி… அவளை ஃபர்ஸ்ட் செக் பண்ணலாம் அதுக்கப்புறம் பேசலாம் நீ அழாத அபி” என்று சந்தியா ஆறுதலுரைக்க அடுத்து நந்தன் கேட்ட கேள்வியில் தூக்கி வாரி போட்டது சந்தியாவிற்கு.


“சந்தியா இந்த குழந்தையால லாஷாக்கு ஆபத்துன்னா இந்த குழந்தைய அபார்ட் பண்ண வழி இருக்கா…” தொண்டை அடைத்து குரல் கரகரக்க விழிகள் குளமானது இதனை அவன் கேட்டு முடிப்பதற்குள்…


“டேய் அபி? என்னடா பேசுற? நான் இதை சத்தியமா உன்கிட்ட எதிர்பார்க்கல அபி… ஒரு எறும்புக்கு கூட துரோகம் செய்ய நினைக்காத என் அபியா நீ?” சந்தியா அதிர்ந்து போய் கேட்க


“எனக்கு வேற வழி தெரியலை சந்தியா… என் லாஷா காலம் முழுக்க என் கூடவே இருந்தா போதும்…” என்றான் அழுகையை அடக்கி


“டேய் அபி… அதுக்காக அது உன் குழந்தை டா. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அபிலாஷா கன்சீவா இருக்கானு கன்ஃபார்மே பண்ணல அதுக்குள்ள அபார்ட் அது இதுன்னு… டேய் எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம். இவ்வளவு காதல் உன் அபி மேல வைச்சிருக்க… அத கண்டிப்பா அவளை உன்கிட்ட இருந்து பிரிய விடாது.” என்று இன்னும் பல ஆறுதல்களை கூறி அபிலாஷாவை பரிசோதனைக்கு அழைத்து வா என்று வலியுறுத்தி அனுப்பி வைத்தாள் சந்தியா. 


அவன் சென்ற பிறகு மீண்டும் ஏதோ காரணம் சொல்லி சந்தியா அறைக்கு வந்த மூர்த்தி தன் செல்ஃபோனை எடுத்துக் கொண்டு சென்று நந்தன் சந்தியா பேசிக்கொண்டதை முகிலுக்கு அனுப்பி வைக்க அதை முழுவதுமாக பார்த்தவன் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் அபியையும் நந்தனையும் எப்படி பிரிப்பது என்று யோசிக்க தொடங்கினான்.


வீட்டில் அபியிடம் பார்வதி வழக்கமாக கேட்பது போல “நாள் தள்ளி போச்சா அபி?” என்று கேட்கவே அவளுக்கும் அது நினைவு வர ‘இத்தனை நாட்கள் இருந்த குழப்பத்தில் இதை கவனிக்க மறந்து விட்டோமே’ என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் 


“ஆமாம்மா… சரியா ட்வெல் டேஸ் தள்ளி போயிருக்கு.” என்று அபிலாஷா சொல்ல சந்தியாவை பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான் நந்தன். அபி சொன்னதில் முகம் மலர்ந்த பார்வதி


“நந்தா நான் சொன்னேன்ல அபி சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவானு… பாரு அவளுக்கு நாள் தள்ளி போயிருக்கு. நான் கூட கவனிக்கல சம்மந்தி தான் இன்னைக்கு வந்தப்போ அபி முகம் பொலிவா இருக்கு. விசாரிங்கனு சொன்னாங்க.” என்று சொல்ல


அபி தனக்கென்று ஒரு உயிர் தான் இத்தனை காலம் காத்திருந்த நிமிடம் என்று ஆனந்தத்தில் கண்கள் குளம் கட்ட நந்தனை பார்க்க அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தெரியவில்லை.


“அம்மா… அது வந்து லாஷா நாம ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கலாம். வா..” என்று அழைக்க


“ஆமா அதுவும் சரிதான். நந்தா நானும் வரேன்டா” என்று இவர்கள் உடன் கிளம்பினார் பார்வதி.


சந்தியா அபிலாஷாவை பரிசோதித்து விட்டு அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்ய பார்வதி அபிலாஷா இருவரின் மகிழ்வுக்கு அளவே இல்லை. ஆனால் அபிநந்தன் அபிலாஷா நிலை பற்றி முழுதாக தெரியாமல் அவனால் மனதார மகிழ இயலவில்லை.


அவன் மனம் நினைப்பது புரியாவிடினும் தன் கர்ப்பத்தில் தன் கணவனுக்கு முழு மகிழ்ச்சி இல்லை என்று புரிந்த கொண்டாள் அபிலாஷா.


பார்வதி அபிலாஷா முன்பு வழக்கமாக கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லும் அறிவுரையை மட்டும் கூறிய சந்தியா அவர்களோடே நந்தனை செல்லும்படி கண்ஜாடை காட்டி விட்டு அவன் வீடு செல்லும் நேரத்தை கணக்கிட்டு ஃபோனில் அழைத்தாள்.


“அபி கடவுள் மேல நம்பிக்கை வைடா… ஆனா கடைசி நேரத்துல தெரியிறதுக்கு இப்போவே சொல்றேன் அபிலாஷா வயித்துல இருக்கிற குழந்தை மேல இப்போதைக்கு முழு நம்பிக்கை வேண்டாம் டா… ஏன்னா குழந்தை தானாவே அபார்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.” என்று சொல்ல இவனோ தாரை தாரையாக கண்ணீர் விட்டான். 


சில மணி நேரங்கள் முன்பு தன் லாஷாவின் உயிருக்கு ஆபத்து என்றால் அதை கலைத்து விடலாமா? என்று கேட்டவன் அதே குழந்தை தானாக கலைய வாய்ப்பு உண்டு என்று அறிந்த நேரம் தன் உயிர் அறுந்து போகும் வலியை உணர்ந்தான் நந்தன்.


“டேய் அபி எனக்கு தெரியும் உனக்கு கஷ்டம் தான். ஆனா ஒரு வேளை இந்த குழந்தை இப்போதைக்கு நல்லபடியா வளர்ந்தாலும் கண்டிப்பா பிரசவ நேரத்தில இரண்டு உயிர்ல ஏதாவது ஒரு உயிரைத் தான் காப்பற்ற முடியும்ன்ற நிலை வரலாம். இதை அத்தையும் அபிலாஷாவும் இருக்கும் போது சொல்ல முடியாமல்தான் கால் பண்ணினேன். அபியை முடிஞ்ச அளவுக்கு பத்திரமா பார்த்துக்கோ டா..” என்று முடிக்க 


‘கடவுளே ஏன் இப்படி ஒரு நிலை குழந்தையை நினைச்சு லாஷா முகத்துல அவ்வளவு சந்தோஷம்.‌ ஆனா அந்த குழந்தை நிலைக்காதுன்னு நான் எப்படி அவகிட்ட சொல்லுவேன்? எனக்கு என் குழந்தை முக்கியம். அதைவிட என் லாஷா எனக்கு ரொம்ப முக்கியம். ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக்கூடாது…’ என்று அவன் மனதோடு புலம்பி கிடக்க ப்ரதீப் தன் பெற்றோர் மனைவி என்று அனைவரையும் அழைத்து வந்தான் கருவுற்ற தன் தோழியை காண…


நந்தன் இயன்ற அளவுக்கு தன்னை இயல்பாக காட்ட முயன்றான். பத்மாவதி மோகன்ராம் பார்வதி ஆகியோரை விட ப்ரதீப்பும் அச்சுவுமே அபிலாஷா கருவுற்ற செய்தியை கேட்டு உற்சாகமடைந்தனர்.


அச்சுவிற்கு கால் தரையிலேயே இல்லை… அவள் தாயாகப் போவது தெரிந்த போது அடைந்த மகிழ்வை விட அத்தையாகப் போவது அறிந்து அத்துனை மகிழ்ச்சி அவளுக்கு. 


இந்நிலையில் விஷயம் தெரிந்து அபிலாஷாவின் சித்தி அத்தை மாமா சித்தப்பா என்று அவளை காண வர நந்தன் வீட்டில் எப்போதும் போல மரியாதையுடன் நடந்து கொண்டனர்.


அபி கருவுற்றதை அறிந்த முகில் ஏற்கனவே அபிக்கு ஆபத்து என்றால் குழந்தையை கலைத்து விடலாம் என்று அபிநந்தன் பேசியதை வைத்து தனக்கு சாதகமாக காய் நகர்த்த திட்டமிட்டு தான் தன் தாயை இங்கு அனுப்பி வைத்திருந்தான்.


சுகந்தியும் என்ன ஏதென்று மகனிடம் கேட்காமல் அவன் தந்த குங்குமப்பூ பாட்டிலை அக்சயா தன் அண்ணிக்காக வாங்கி வந்திருந்த குங்குமப்பூ பாட்டிலுக்கு பதிலாக மாற்றி வைத்திருந்தார்.


அடுத்து நிகழப் போகும் கொடூரம் தெரியாமல் பார்வதி அந்த குங்குமப்பூவினை பாலில் போட்டு காய்ச்சி கொண்டு வந்து கொடுக்க தன் கையாலேயே வாங்கி ‘வேண்டாம்’ என்று மறுத்த அபிலாஷாவிற்கு தன் கையால் புகட்டி இருந்தான் அபிநந்தன்.



  • தொடரும்… 

Leave a comment


Comments


Related Post