இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 29-05-2024

Total Views: 11569

அத்தியாயம் 18

அறையே வெறுமையாக இருந்தது. திக்பிரம்மை பிடித்தவள் போல் இருந்தது அவள் தோற்றம். மீண்டுமொரு முறை நடந்ததை நினைத்துப் பார்க்க கூட மனம் மறுத்தது.

முன்னமும் அவளுக்கு ஓர் கனவு வந்தது. அதில் வந்தவன் கந்தவர்வன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கெண்டான். அந்தகன் அவன் பெயர் என்றான். கனவு கலைந்த பின்னரும் அவன் எதிரே நின்றான். அவள் மீது அதீத மையல் என்றுரைத்தான். அதை அவன் கண்களிலால் கடத்தினான். அவளையும் அவன் பக்கம் ஈர்த்தான். இன்றும் கனவு வந்திருக்கிறது. அந்தகன்தான் அவள் வெறுக்கும் எமன் என்பது போல். இதிலெது உண்மை எது பொய் அவளால் இனங் காணவே இயலவில்லை.

அந்தகன், எமன் மாறி மாறி இருவரும் கண்முன் வந்து வந்து போயினர். என்ன எதிர்வினை ஆற்றுவது என்று கூடத் தெரியாமல் அவள் மூளை தன் இயக்கத்தினை நிறுத்தியிருந்தது. அவளைக் குழப்பிவிட்ட மகிழ்ச்சியில் இந்திரன் இருக்க,

"எதையோ சாதித்துவிட்ட திருப்தி முகத்தில் தெரிகிறதே இந்திரா!" இயமனின் மென்மையான குரலில் பிடிபட்ட உணர்வோடு திரும்பினான். எனினும் அவன் முகம் அப்பட்டமான பளபளப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.

"ம்ம்.‌. இந்திரன்.. அழகன்.. உண்மையிலேயே அழகாகத்தான் இருக்கிறாய். ஆனால் செய்யும் வேலையெதுவும் அழகாய் இல்லை" மீண்டும் இயமனே பேசிட, "இயமா! இதுபோல் பேசினால் நான் என்ன செய்வேனென்று தெரியாது" என்றுரைத்தான் அவன்.

"எந்த எதிர்பார்ப்பில் நீ அஞ்சனாவினை குழப்ப முயற்சிக்கிறாய் இந்திரா"

"ஏன் இயமா உனக்குப் பயம் வந்துவிட்டதா?"

"பயமா எதற்கு பயம். அதுவும் இந்த இயமனுக்கு. காலனைக் கண்டுதான் காலமும் அஞ்சும் இந்திரா. அது உனக்குத்தான் புரியவில்லை"

"உன் ஆணவம் எல்லாம் அழிந்துப் போகும் காலம் வந்துவிட்டது காலனே"

"ஆஹ்.. இந்திரா..! அப்படியா சொல்கிறாய். நீ சொன்னால் சரிதான்" அவனது பேச்சில் எள்ளல் மட்டுமே இருந்தது. 

"இயமா! நான் தேவர்களுக்குத் தலைவன். அதை மறந்துவிட வேண்டாம். நீ என்னிடம் அடங்கியிருப்பது தான் நல்லது"

"தேவர்களுக்குத்தான் தலைவன் எனக்கில்லை"

"நீயும் ஒரு தேவன்தான். நினைவில் நிறுத்திக் கொள்"

"முதலில் நீ ஒன்றை நினைவில் வை இந்திரா. அஞ்சனா என் சரிபாதி. அவளை நீ பார்த்தால் கூட உன் கண்ணை நோண்டிவிடுவேன். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு செய்தும் நான் கைகட்டி நிற்பது உனக்கு பயந்தல்ல. இந்த காதலால் தேவலோகத்திற்கும் எமலோகத்திற்கும் இடையே பிளவு வேண்டாம் என்ற நல்லெண்ணத்தால் தான்"

"அப்படியெனில் நாம் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். உங்களின் திருமணம் நடைபெறும் நாள் வரைக்கும் எனக்கு அவகாசம் இருக்கிறது தானே"

"அதனால்?"

"நான் அவளுன்னை வெறுக்கும் படி செய்துவிடுவேன்"

"இப்போது நான் சிரித்தால் சினம் கொள்வாயா இந்திரா. ஏனெனில் நான் சிரிப்பினை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்" அவனது அந்த எள்ளல் பேச்சில் வெகுண்ட இந்திரன் "முடியாது என்று நினைக்கிறாயா" என முழங்கினான்.

"முடியும் என்ற எண்ணம் வேறு உனக்கு இருக்கிறதா இந்திரா.. அவளென்ன அகலிகையா.. நீ அடைந்துவிட.." அதனால் அவனைடைந்த விளைவுகள் கண்முன்னே வர ஆங்காரத்துடன்

"தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம் இயமா" என்றான் அவன்.

"அவளென்னவள். அவளை அடைய நினைத்தால் வெறுமனே சாபம் மட்டும் வழங்கும் ரிஷியாய் இருக்க மாட்டேன். என்ன செய்வேனென உனக்கேத் தெரியும்"

"நான் அவளை அடைந்தே தீருவேன். உன்னால் ஆனதை பார்த்துக் கொள் இயமா" விடாப்பிடியாய் அவனும் பேசினான்.

"இதுவரை பெண்களை நினையாத இந்த இயமனும் நீயும் ஒன்றா இந்திரா?"

"இல்லை தான். அதை அவள் முடிவு செய்து கொள்ளட்டும். நான் என் வழியில் செல்கிறேன். நீ எப்போதும் போல் இரு. உங்களின் திருமணம் நடந்து விட்டால் அதன்பின்னர் நான் குறுக்கே வரமாட்டேன் சரியா. அதுவரை நான் அவளை அடைய எந்த எல்லைக்கும் செல்வேன்"

"நீ நினைப்பதை செய்துக் கொள் இந்திரா. அதன்பின்னர் நினைக்க நீ இருக்க மாட்டாய்" சட்டென்று அவன் பேசிவிட அதில் எதுவும் உள் நோக்கம் இருக்கிறதா என்பது போல் பார்த்தான் இந்திரன்.

 "என்ன பார்க்கிறாய் இவன் மறைமுகமாக ஏதாவது செய்துவிடுவானா என்றா? கவலை வேண்டாம் இந்திரா. நானுன்னை போல் அத்தகைய காரியங்களில் ஈடுபட மாட்டேன். நீ தாராளமாக இவனை நம்பலாம். நீ என்ன செய்ய நினைக்கின்றாயே அதையெல்லாம் விரைவாக செய்து கொள் இந்திரா. நான் தற்போதைக்கு உன் செயல்பாடுகளை குறுக்கீடு செய்ய மாட்டேன். அவளை நான் அடைந்தபின் உன் குறுக்கீடு இருப்பதையும் நான் அனுமதிக்க மாட்டேன்" புன்னகை மயமாகவே சொல்லிய இயமனை பார்த்துவிட்டு இந்திரன் சென்றுவிட அவனருகே இருந்த எருமை கேள்வி கேட்டது.

 "பிரபு! தாங்கள் செய்வது சரியில்லை. தேவியின் மனதினை தாங்கள் மறந்துவிட்டீர்களா? அவர்கள் தங்களை நினைத்து இப்போது பயங்கர சஞ்சலத்தில் ஆழ்ந்திருப்பார்கள். இந்த இந்திரன் வேறு என்ன செய்யக் காத்திருக்கின்றான் என்று தெரியவில்லை"

 "இந்திரனை நினைத்து பயம் கொள்கிறாயா? உம் பிரபுவின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"

 "இருக்கின்றது பிரபு"

 "இதுவரை என்னை மட்டுமே பிழை செய்வதனாக இந்த சித்திரகுப்தனும் நாரதனும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரியுமா இந்திரன் செய்வது எப்பேர்ப்பட்ட பிழை என்று. அப்படியே தெரிந்தாலும் அவனை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவன் தேவர்களின் தலைவனாம். விதிகளை மீறி விட்டேன் என்று நொடிக்கு நூறுமுறை கூவும் சித்திரகுப்தன் இவனிடம் அதை சொல்வானா? இவர்களுக்கு எல்லாம் இயமன் என்றால் மட்டும் இளக்காரம் போல"

 "பிரபு அவ்வாறு தாங்கள் பேச வேண்டாம். தாங்கள் இப்போது தேவியினை மட்டும் பாருங்கள்"

 "அவளை மட்டும்தான் என் பார்வை வட்டமிடும் என்பதை நீ அறிந்தும் இப்படிச் சொல்லாமா உல்லாசமாக அவன் சிரித்து வைக்க பிரபு இந்திரன் என்ன அழகன் தாங்கள் தான் பிரபு பேரழகன். இந்த சிரிப்பு இன்னும் தங்களின் அழகினை அதீதப்படுத்திக் காட்டுகிறது. தேவியிடம் தங்களுக்கு சுற்றிப் போடச் சொல்ல வேண்டும்" எனச் சொல்லி இயமனையே வெட்கப் பட வைத்தது எருமை.

 "ஆனாலும் பிரபு தாங்கள் இந்திரனை விட்டிருக்க கூடாது. அவன் ஏக குழப்பங்கள் விளைவிப்பான் போலிருக்கிறது"

 "ஒருவகையில் அவன் குழப்பம் விளைவிக்க வேண்டுமென்றேதான் நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்"

 "பிரபு! தேவி தங்களை இயமன் என்று அறிந்துக் கொண்டால் அதனால் நிகழும் வில்லங்கங்களை நினைவில் கொண்டீர்களா"

 "ஏன் இந்த இயமனை வெறுத்திடுவாளா அந்த தேவி"

 "அதற்கான வாய்ப்பிருக்கிறதல்லவா பிரபு"

 "அவளால் என்ன வெறுக்க இயலாதடா. அவள் நினைவில் சதா சர்வ காலமும் நீந்தும் எனக்கு அவள் மனம் புரியும். அவளால் என்னை நீங்கி ஒருகணமும் இருக்க முடியாது. எனக்கும் அவளுக்கும் இடையே உள்ள பந்தமானது அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமை கொண்டது. அதன்மீது எனக்கு பரிபூர்ண நம்பிக்கை உள்ளது"

 "எனினும் பிரபு இந்த இந்திரன் திருவினை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது"

 "மரணம் என்பது என் அனுமதியோடு நிகழும் ஒன்று என்பதை மறந்துவிட்டாயா ஆயுள் முடியாது எவன் உயிரும் போகாதிங்கே. இந்திரன் பற்றின பேச்சினை இத்தோடு முடித்துக் கொள்ளலாம்" என்ற இயமன் அமைதியாகி விட எருமையும் அமைதியாகிவிட்டது.

-----------------
திரு மறுநாள் திருமணல்மேடு செல்வதால் அதற்கே உரித்தான ஏற்பாடுகளை செய்துவிட்டு அப்போதுதான் வந்து படுத்தான். சட்டென்று திரும்பி ஒருபக்கமாக படுத்தவன் அந்த இடத்தினை வருடியபடி கற்பனையாக பேசத் தொடங்கினான்.

அஞ்சு! நாளைக்கு இந்த இடத்துல நீ இருப்ப. நினைக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எவ்வளவு ஆசையை நான் மனசுக்குள்ள மூடி வச்சுட்டு இருக்கேன்னு நாளைக்கு உனக்கேத் தெரியும். என் வாழ்க்கையில இப்படி ஒரு நாள் வரணும்னு தான் நான் ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு பொழுது மட்டும் கடந்துட்டா போதும். நாளைக்கு விடிஞ்சதும் அஞ்சுவை நான் சொந்தமாக்கிக்க போறேன் அஞ்சுவின் மீதே லயித்திருந்தவனை அடிவயிற்றில் கணன்ற நெருப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரன். 

இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் அந்த பழி இப்போது இயமனைச் சாரும். அஞ்சனா அவன் மீது இன்னும் வெறுப்பினை உமிழுவாள். அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் நான் நினைத்தது எல்லாம் நடந்துவிடும் இதுவே அவனது எண்ணமாக இருந்தது.

----------------------
அறையை விட்டு வெளியே வந்தவள் மையவெளியில் இருந்த தந்தையின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள். அவரின் மடி மீதே அமர்ந்திருப்பதைப் போலிருந்தது. அந்த இதத்தினை மௌனமாக அவள் உணர்ந்துக் கொண்டிருந்தாள். மனதினை அழுத்துக் கொண்டிருந்த பாரங்கள் எல்லாம் தந்தையிடத்தில் இறக்கி வைத்தவளுக்குள் அவ்வளவு வெறுப்பு. அந்தகன்னு பேரைச் சொல்லி ஒருத்தன் வந்து ஏமாத்தியிருக்கது கூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தாள். சாரதி சொன்னது போல் நான் பையித்தியம் தான் என்று தன்னையே சொல்லிக் கொண்டாள். எவன் பெயரை கேட்டால் அஞ்சி நடுங்குவாளோ. எவன் மீது அதீத வெறுப்பினை வைத்திருந்தாளோ அவனை காதலித்தது அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அப்போது அவளது தலையினை ஒரு கரம் வருடியது. 
அந்த வருடலில் பட்டென்று கண் விழித்தவள் எதிரே நின்றிருந்தவனை பார்த்து "அந்தகா" என்றழைத்தாள்.

"அஞ்சனா! நான்தான் நான் வந்துவிட்டேன்" கொஞ்சமாய் கசிந்துக் கொண்டிருந்த அந்த விளக்கின் வெளிச்சத்தில் அவனை கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். அவனே தான். இவன் இயமனா அந்தகனா.. என்பது போல் அவள் பார்த்து வைத்தாள். 

 "ஏனிந்த பார்வை அஞ்சனா"

 "யார் நீ?" நிதானமாக வினவினாள்.

 "அந்தகன்.. உன்னவன்"

 "நான் இல்லைன்னு சொல்லுறேன். உண்மையைச் சொல்லு யார் நீ?"

 "நான் அந்தகன் இல்லையென்றால் எது உண்மையென்று நீயே சொல் அஞ்சனா"

 "எனது வெறுப்போட மொத்த உருவமா நீயா இருப்பயோன்னு சந்தேகமா இருக்கு"

 "திடீரென்று இந்த ஐயம் ஏற்படக் காரணம் என்ன அஞ்சனா? ஏன் உனக்கு அவ்வாறு தோன்றுகிறது"

"என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. நீ என்னை ஏமாத்திட்ட"
 

"அஞ்சனா இவ்வாறு பேசி என் மனதினை நோகச் செய்யாதே. நான் உன்னை ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் இல்லை"

 "நீ மோசமானவன். பொய் சொல்லி என்கிட்ட நெருங்கி வந்துட்ட. நான் இப்போ இந்த நிலைமையில இருக்குறதுக்கு காரணம் நீதான். ஆ...என்னால முடியல. நீ ஏமாத்துனதை நினைக்க நினைக்க அவ்வளவு வெறுப்பா இருக்கு.. என்னை பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை. முட்டாள் தனமா நடந்துக்கிட்டதை நினைச்சா சாகலாம் போல இருக்கு"

 "அதற்கிந்த இயமனின் அனுமதி வேண்டும்" பேசியவனின் தோற்றத்தில் இப்போது மெய்யாகவே அதிர்ந்து நின்றாள் அஞ்சனா.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post