இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 22) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 29-05-2024

Total Views: 16660

உனக்கென்றே உயிர் கொண்டேன் 22

பூர்வி இப்படி பட்டென்று சொல்லிவிடுவாளென வெண்பா எதிர்பார்க்கவே இல்லை. 

வெண்பாவுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

"அது... அது சீனியர்..." என்று நாக்கு தந்தயடிக்க வார்த்தை கோர்க்க முடியாது வெண்பா தடுமாறிட, உள்ளுக்குள் அவளின் தவிப்பை ரசித்து சேமித்தான்.

"அக்கா உன்னை சீண்டிட பொய் சொல்றாங்க தெரியும். ஃபிரியா விடு" என்று தமிழ் சொல்லிய பின்னர் தான் வெண்பாவுக்கு மூச்சே சீரானது. கண்களை மூடி ஆசுவாசமாக அவள் இதழ் குவித்து ஊதிட, தமிழ் பூர்வியை பார்த்து ஒற்றை கண்ணடித்தான். குறும்பாய்.

பூர்வி, "கேடி" என வாயசைத்தாள். சத்தமின்றி சிரித்தான் தமிழ்.

வெண்பா கண்ணை திறந்திட, 

"சரி எதாவது விளையாடுவோமா?" எனக் கேட்டாள் பூர்வி.

"என்னையும் சேர்த்துக்கோங்கடா" என்று அடுக்கலை வேலை முடித்து வந்த தனமும் அவர்களுடன் சேர,

"கேரம் விளையாடுவோம்" என்றான் தமிழ்.

அந்நேரம் மணியுடன் திரும்பி வந்த வர்ஷினி, "நானில்லாம என்ன விளையாடுறீங்க?" எனக் கேட்க,

"அப்போ நீங்களும் வாங்க மாமா கார்ட்ஸ் விளையாடுவோம்" என்றாள் பூர்வி.

"நானும்" என்று வந்தார் தேவராஜ்.

மணி கார்ட்ஸை போட ஆரம்பிக்க...

"எனக்கு போடாதீங்கப்பா. விளையாடத் தெரியாது" என்றாள் வெண்பா.

"அப்போ வேறு விளையாடலாம்" என்று வர்ஷினி சொல்ல...

"ஐஸ் பாய் விளையாடுவோம்" என்றாள் பூர்வி.

"அதெல்லாம் நாங்க வரல" என்று தனம் சொல்ல...

"நல்லாயிருக்கும்மா. என்ஜாய் பண்ணலாம் வாங்க" என்று தமிழ் ஒப்புக்கொள்ள வைத்தான்.

மணியும், தேவராஜூம் கூட ஆர்வமாகினர். 

சிறுவர்களாக இருக்கும்போது மறைந்து, ஓடி விளையாடியது. அதனை நினைக்கும் போது இந்த வயதிலும் ஒருவித உற்சாகம் தோன்றியது.

சா பூ திரி போட வெளியேறியது வர்ஷினி.

"எல்லாரும் ஒளிஞ்சிக்கோங்க. மேல, கீழ எங்க வேணாலும்" என்ற வர்ஷினி, தெய்வானையின் அறையை காண்பித்து, "அந்த ரூம் மட்டும் ரெஸ்ட்ரிக்ட்" என்று சொல்லிக்கொண்டிருக்க, இவர்களின் ஆர்பரிப்பு கேட்டு வெளியில் வந்த அகிலாண்டம் கூட சிறு ஆசை எழ...

"நானும் வரட்டுமா?" எனக் கேட்டிருந்தார்.

எல்லோரும் அவர் கேட்டதை நம்ப முடியாது பார்த்திருக்க,

"வாங்க பாட்டி" என்றிருந்தாள் வெண்பா.

"சரி பாட்டியும் ஒளிஞ்சிக்கட்டும். நானே கண்ணை மூடிக்கிறேன்" என்று சொல்லிய வர்ஷி சுவற்றின் பக்கம் திரும்பி நின்று எண்களை எண்ணிட, ஆளாளுக்கு ஓரிடமென ஓடி மறைந்தனர்.

மணி கூடத்து சோபாவிற்கு பின்னால் மறைய, அகிலாண்டம் வாயில் கதவு பின்னால் மறைந்து நின்றார்.

தனம் மேல் செல்லும் படிகளுக்கு கீழே சென்றார். தேவராஜ் கிச்சனில் ஒளிய, வெண்பா உணவு மேசைக்கு கீழே செல்ல முயன்றாள்.

அவளின் கையை பிடித்து தடுத்த தமிழ், 

"தலையில் இடிச்சுப்ப" என்க, "வெண்பா மேல வா" என்று படிகளில் ஏறினாள் பூர்வி.

மேலேறிய வெண்பா பூர்வி எங்கு சென்றாளென்று தெரியாது, முதலில் திறந்திருந்த அறைக்குள் புகுந்தாள்.

கீழவே நின்றிருந்த தமிழ்,

"வரப்போறேன்" என்ற வர்ஷினியின் குரலில் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி தன்னுடைய அறைக்குள் நுழைய,

கதவுக்கு பின்னால் ஒளிந்து நின்றிருந்த வெண்பா, வர்ஷினி தான் வருகிறாள் என நினைத்து...

"அவுட்" என்று முதுகில் அடிக்க... அடித்த பின்னரே யாரென்று உணர்ந்தாள்.

"ஷ்ஷ்ஷ்ஷ்... சாரி பாஸ். வர்ஷி நினைச்சிட்டேன்" என்று வெண்பா முகம் சுருக்கி சொல்ல...

"எவ்வளவு நாள் கோபம் உனக்கு" என்று  கேட்டிருந்தான் தமிழ்.

வெண்பாவின் முகம் வாடிப்போனது.

"தெரியாமல்..."

"ச்சூ... இதுக்கெல்லாம் முகம் சின்னதாக்குவியா?" எனக் கேட்டவன்,

"அண்ணி அவுட்" என்று பக்கம் கேட்ட வர்ஷியின் குரலில், வெண்பாவை தள்ளியபடி அவளுடன் சேர்ந்து கதவுக்கு பின்னால் சென்று நின்றான்.

வர்ஷி வருகிறாளா என அதிலே தமிழ் கவனம் வைத்திருக்க, இருவரின் நெருக்கத்தை உணர தவறினான்.

இருவரும் இடித்துக்கொண்டு நின்றிருக்க, வெண்பாவுக்குத்தான் அவஸ்தையாகிப்போனது. அவனது ஸ்பரிசத்தில், நாசி தீண்டும் அவனது வாசனையில் உருகினாள்.

"பாஸ் தள்ளுங்க..." மெல்ல சுதாரித்து அவள் சொல்ல...

"ம்ப்ச்... வர்ஷி வந்துட்டாள்" என்றவனின் பார்வை கதவு இடுக்கின் வழி வெளி நோக்கியே இருந்தது.

"இருக்கட்டும் பரவாயில்லை. விடுங்க நான் போறேன்" என்ற வெண்பா, அவன் நகர்ந்ததில் பெரும் தவிப்புக்கு உள்ளாகினாள்.

'இதுக்கு மேல முடியாது' என நினைத்தவள், "சீனியர் ப்ளீஸ்" என்றிட, அவளின் குரல் கரகரப்பில் தான் தங்களின் நிலை அறிந்தான்.

வேகமாக விலகியவனுக்கு... அப்போது தான் அவள் தேகம் உரசி நின்ற இடமெல்லாம் தீபற்றியது போல் உணர்ந்தான். மின்னல் தீண்டிய அதிர்வு.

பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டே வெளியில் செல்ல,

"அத்தான் அவுட்" என்றாள் வர்ஷி.

"இன்னும் வெண்பா மட்டும் தான்" என்ற வர்ஷி கீழே ஓட,

"வெளிய வா" என்றான் தமிழ்.

அக்கணம் தான் அறையை பார்வையால் சூழல விட்டவளுக்கு அது தமிழின் அறையென தெரிந்தது.

"இது உங்க ரூம்மா பாஸ்?"

"ம்ம்."

"நல்லாயிருக்கு" என்றவளின் பார்வை படுக்கையில் கிடந்த புகைப்படத்தில் பதிந்தது.

அந்த புகைப்படத்தில் கண் விழிப்பது தான் தமிழின் வழக்கம். இன்று காலை எழும்போது கையில் எடுத்ததை, உரிய இடத்தில் வைக்க மறந்திருந்தான்.

வேகமாக சென்று எடுத்து படுக்கைக்கு அருகிலிருந்த மேசையில் சரியாக வைத்தான்.

அவளுக்கு அவன் சொல்லாத ஒன்று புரிந்தது. ஆனாலும், ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.

"நீ இங்க தான் இருக்கியா?" என்று கேட்டபடி மீண்டும் மேலேறி வந்த வர்ஷி, "எல்லோரும் அவுட். மொத அவுட் அத்தை தான்" என்றிட மேலும் சில பல ஆட்டங்கள் ஆடியவர்கள்,

"இதென்னா வீடா சந்தை கடையா? இவ்வளவு கூச்சல்" என்று வெளியில் வந்த தெய்வானையின் சத்தத்தில் தான் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

தேவராஜ், மணியும் கூட ஆட்டத்தில் சேர்கை என்பதை கண்டு, முகம் சுளித்தவராக திரும்பியவர், வெண்பாவை ஏறிட்டு, "நைட் இங்கவே தங்குறியா?" எனக்கேட்டு உள்ளே சென்றுவிட்டார்.

அவர் கேட்டதன் பொருள் வெண்பாவுக்கு புரியத்தான் செய்தது. வேகமாக தமிழைத்தான் பார்த்தாள். இதற்கும் ஏதும் கோபமாக பேசிவிடுவானோ என்று.

"நல்லா புரியுதுல உனக்கு?" என்ற தமிழ், "நீ இப்படி பார்க்கக்கூடாதுன்னு தான் மௌனமா நிக்கிறேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குன்னு அம்மாவுக்கும் புரியல, உனக்கும் தெரியல" என்றான். அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

"நீங்க இப்போ என்கிட்ட கோபமா பேசுறீங்க?" வெண்பா முறைத்துக்கொண்டு சொல்ல...

"அப்படித்தான் பேசுவேன்" என்று நகர்ந்தான்.

"மனசே லேசான போல இருக்கு மச்சான்." மணி மூச்சு வாங்க இருக்கையில் அமர்ந்தவாறு கூறிட, அகிலாண்டம் ஆமோதித்தார்.

அவரின் சிறு சிறு மாற்றம் அங்கிருப்பவர்களுக்கு புரியத்தான் செய்தது. 

"வீடே கொஞ்ச நேரம் கலகலப்பா உயிர்ப்போடு இருந்தது" என்று தேவராஜ் சொல்ல...

"அப்போ அடிக்கடி இப்படி எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசலாம், விளையாடலாம் மாமா. நல்லாயிருக்கும்" என்றாள் வெண்பா.

"ம்ம்ம்..." தேவராஜ் தலையசைக்க...

கிச்சனிலிருந்து தமிழ் சிறு அட்டை பெட்டியோடு அங்கு வந்தான்.

"என்னதுடா?"

"ஐஸ்க்ரீம் ம்மா..."

"ஃப்ரீசரில் வச்சிருந்தியா நான் பார்க்கவே இல்லை" என்றார் தனம்.

"அதெல்லாம் ஸ்பெஷல் பெர்சனுக்காகம்மா. நெல்லுக்கு பாயுற தண்ணி புல்லுக்கும் பாயுது" என்று கிண்டல் செய்தாள் பூர்வி.

வெண்பா மணியுடன் பேசிக்கொண்டிருக்க, இவர்களின் சம்பாஷணை அவளது காதில் விழவில்லை.

மணி, தெய்வானை காலையும் மாலையும் வெண்பாவை பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

"அவங்க குணம் ஓரளவுக்கு புரியுதுப்பா. நான் தப்பா எடுத்துக்கல" என்று சொல்லியவளின் பக்குவம் அவரை வியக்க வைத்தது. வெண்பாவை பார்த்ததும் விளையாட்டு பெண். அமைதியான பெண் என நினைத்தவருக்கு மனிதர்களை புரிந்துகொள்ளும் அவளின் குணம் வியப்பை அளித்தது.

வாஞ்சையாக அவளின் தலை வருடிய மணி,

"நீ ரொம்ப நல்லாயிருப்பத்தா" என்றார். அவரின் பார்வை தமிழை தொட்டு மீண்டது.

ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் கொடுத்த தமிழ், வெண்பாவுக்கு பிடித்ததை அவளிடம் கொடுத்தான்.

"தேன்க்ஸ் சீனியர்" என்று வாங்கிக்கொண்டவள், தேவராஜ் ஏதோ கேட்கவும் அவர் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

"என்ன அத்தான், உங்களை பேசவே விடமாட்டேங்கிறாங்களா?" என்று ஐஸ் சுவைத்தபடி வர்ஷினி கேலி பேச முயல... அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளாது,

"மாமா முகத்தில் என்னைக்காவது இந்த சிரிப்பை இவ்ளோ சந்தோஷமா பார்திருக்கியா வர்ஷி?" எனக் கேட்டான்.

"ம்க்கும்... அவர் முகத்தையே அவள் இன்னைக்குத்தானே பக்கம் பார்த்திருக்கிறாள்" என்று நொடித்தாள் பூர்வி.

"ப்ளீஸ் அண்ணி... அல்ரெடி கில்டில் இருக்கேன். அம்மாவுக்கு பயந்தே இருந்துட்டேன்" என்ற வர்ஷினி, மணி மற்றும் தேவராஜுக்கு நடுவில் அமர்ந்து பாப்ஸிகல் சுவைத்தபடி சிரித்து பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவை காண்கையில் தான் எதை இழந்திருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டாள்.

"அப்பா பாட்டியை பார்க்கத்தான் கூட்டிட்டு போனாங்க. அது தான் என் வீடு. ஆனால் இந்த வயசில் தான் முதல்முறை போகணும் இருந்திருக்கு. இப்போ வெண்பா அப்பாகிட்ட பேசுற அளவுக்குக்கூட உரிமையா பேச எனக்கு வரல... நானும் சேர்ந்து அப்பாவை கஷ்டப்படுத்திட்டேன்னு புரியுது. எப்படி சரி பண்றதுன்னு தெரியல" என்றாள். அவளின் முக சோகமே உளமார கூறுகிறாள் என்பதை காட்டியது.

"இன்னைக்கு மாமாகிட்ட பேசின தானே! வீட்டுக்கு போனதானே! இதை தினமும் பண்ணு. அல்டாப்பு எதிரே இருந்தாலும் பேசு. கேட்டால் என் அப்பா நான் பேசுவேன் சொல்லு. அதுக்கு மேல அவங்களால் என்ன செய்திட முடியும். மிஞ்சிப்போனால் திட்டுவாங்களா? வாங்கிக்கோ! உன் அப்பாக்காக. அப்புறம் எல்லாம் சகஜம் ஆகிடும்" என்று மெல்ல தமிழ் எடுத்துக்கூறிட... அவன் சொல்லிய எல்லாவற்றையும் காதில் ஏற்றிக்கொண்டாலும், அவன் தெய்வானையை அல்டாப்பு என்று சொல்லியதை மட்டும் அதி கவனமாக கருத்தில் கொண்டு வினவினாள்.

"அம்மாக்கு அல்டாப்புன்னு பெயர் வச்சிருக்கீங்களா? காமெடியா இருக்கு" என்று சொல்லி அவள் சிரிக்க, தமிழும், பூர்வியும் மாற்றி மாற்றி அவள் தலையில் கொட்டினர்.

"இவ்வளவு நேரம் அவன் மூச்சு பிடிச்சுக்கிட்டு பேசினால் நீ காமெடின்னு சொல்லி சிரிக்கிற! உன்னை வச்சிக்கிட்டு, உங்க அம்மாவை எப்படி உங்க வீட்டுக்கு பேக் பண்றது?" என்ற பூர்வி, "எனக்கு கண்ணை கட்டுது தமிழ்" என்று அவனின் தோளிலே சாய்ந்தாள்.

"பார்த்துக்கலாம் விடுங்க. பெரியவங்க சரிபண்ண மறந்ததை நாம் செய்வோம்" என்றான் தமிழ்.

ஐஸ் முடிந்து குச்சியினை எங்கே போடுவதென பார்க்கையில் தான் வெண்பாவுக்கு ஒன்று புரிந்தது. காலை இங்கு வந்தது முதல் தான் உண்டது எல்லாம் தனக்கு மிகவும் பிடித்தவை என்று. இதெல்லாம் தனக்கு விருப்பமானதென்று எதையும் குறிப்பிட்டு வெண்பா தமிழிடம் சொல்லியதில்லை. ஆனால் அவன் கவனித்திருக்கிறான். அதுவே வெண்பாவினுள் ஒருவித இதத்தை அளித்தது.

இவை யாவும் அவனுக்கு தன்னை பிடிக்கும் என்பதை வெண்பாவுக்கு காட்டினாலும், அந்த பிடித்தத்தின் பெயர் என்ன என்பதை அவளால் கணிக்க முடியவில்லை.

காதலின் வரையரைக்குள் அடங்கும் செயல்கள் யாவும் நட்பிலும் அடங்கிடுமே! அவளிடம் அதீத குழப்பம் மட்டுமே!

"டஸ்ட்பின் அங்கிருக்கு பாரும்மா!" 

வெண்பா குச்சியை வைத்துக்கொண்டு யோசனையில் இருக்கு அவளை கவனித்த அகிலாண்டம் கை கட்டினார்.

"ஹான்... தேன்க்ஸ் பாட்டி" என்றவள் குச்சியை குப்பை கூடையில் போட்டுவிட்டு, பூர்வியை பார்த்தாள்.

"கிளம்பணும் அண்ணி" என்றாள்.

ஏனோ கதவு பின்னால் தமிழுடன் நெருக்கமாக நின்றது முதல் அவனின் முகம் பார்க்கவே அவளுக்கு தயக்கமாக இருந்தது.

"ம்ம்... ட்ரெயின் ஃபைவ்க்கு தான் வெண்பா. இன்னும் பார்ட்டி மினிட்ஸ் இருக்கே" என்ற பூர்வி, "முகம் கழுவிக்கோ! வா" என்று தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். வர்ஷினியும் அவர்களுடன் செல்ல, தமிழ் தனதறைக்கு சென்றான்.

கதவினை திறந்து மூடியவனின் விழிகளில் வெண்பாவின் நெருக்கம் காட்சி சிதறலாகவும், நெஞ்சத்தில் அவளது வாசனையில் மிச்சமும் எஞ்சி நின்றது.

"சீக்கிரம் சொல்லிடு தமிழ்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

முகம் கழுவி வந்த வெண்பா, கண்ணாடி முன்பு நின்று களைந்து நெற்றியில் சிலுப்பிக்கொண்டிருந்த முடிகளை ஒதுக்கி பூர்வி கொடுத்த பொட்டினை நெற்றியில் ஒட்டி திரும்பிட,

"தலை பின்னலையா?" எனக் கேட்டாள் வர்ஷினி.

"டைம் ஆகிடும் வர்ஷி" என்ற வெண்பா தன் கை பையினை எடுத்திட,

"இவ்வளவு நீளம் மேனேஜ் பண்ண கஷ்டமா இல்லையா?" என பூர்வி வினவிட, 

"ரொம்ப கஷ்டம். எங்கையாவது போகணும் அப்படின்னாலே ஹேர் பிளாட் பண்ணவே அரை மணி நேரம் முன்ன ரெடியாக வேணும்" என்றாள் வெண்பா.

"அப்போ எதுக்கு இவ்வளவு நீளம்? இடுப்புக்கு கீழிருந்தா போதுமில்ல! கட் பண்ணிக்கோ" என்றாள் வர்ஷி.

"எனக்கு பழகிடுச்சு" என்ற வெண்பாவின் கருவிழிகள் திருதிருத்தன.

"வேறென்னவோ சுவாரஸ்யமான பதில் இருக்கும் போலவே! சொல்லு சொல்லு..." அவளின் முகம் வைத்தே பூர்வியும், வர்ஷினியும் சொல்லியே ஆக வேண்டுமென்று வெண்பாவை பிடித்துக்கொண்டனர்.

"அதெல்லாம் எதுவுமில்லை அண்ணி" என்ற வெண்பா, பூர்வி பார்த்த பார்வையில் தான் சொல்லாது விடமாட்டார்களென்று புரிந்து...

"எனக்கு பிடிச்சவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணி" என்றிருந்தாள்.

வெண்பா யாரை சொல்கிறாள் என்பது புரிய, பூர்வியும் வர்ஷியும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.

"மொழி..."
 
விளித்தபடி தமிழ் உள்ளே வர,

'தான் சொல்லியதை கேட்டிருப்பானோ?' என்று படபடத்துப்போனாள் வெண்பா.

"வெண்பா என்ன அப்படியே நிக்குற? தமிழ் கூப்பிடுறான்" என்று பூர்வி அவளை பிடித்த உலுக்கிட,

"சொல்லுங்க சீனியர்" என்றாள்.

"இன்னும் சீனியரா?" வர்ஷினி இழுத்து கேட்டிட,

"இப்போதைக்கு சீனியர் தான்" என்ற வெண்பா, 'பியூச்சரில் வேற' என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாள்.

"மனசுக்குள்ள வேறென்னவோ ஓடுற மாதிரி இருக்கே?" பூர்வி கேள்வியாக ஏறிட,

"எதுவுமில்லை... நீங்க ஏதோ நினைச்சிக்கிட்டு என்னை சீண்ட பாக்குறீங்க" என்றாள் வெண்பா.

"என்ன நினைக்கிறோமா?"

"அய்யோ அண்ணி ஆளை விடுங்க" என்ற வெண்பா முதல் ஆளாக அறையை விட்டு வெளியேறி கீழே வந்திருந்தாள்.

"அவளோட சேட்டை பற்றி தெரியாமல் ரொம்ப கலாய்க்கிறீங்க. உங்களை ஓடவிட்டுடுவாள். பார்த்துக்கோங்க" என்று தமிழ் இருவரையும் எச்சரிக்கை செய்தான்.

"பாருடா... ரொம்பத்தான்" என்று பூர்வி மற்றும் வர்ஷி ஒரு சேர சொல்லிட,

தமிழ் தோள்களை உயர்த்தி இறக்கியவனாக கீழே வந்தான்.

அங்கு தனம் வெண்பாவின் கன்னம் பற்றி முத்தம் வைத்துக் கொண்டிருந்தான்.

தமிழ் கண்களில் அப்பட்டமான பொறாமை.

"எங்கையோ வயிறு எரியுற ஸ்மெல் வருதுல வர்ஷி" என்று அவனுக்கு பின்னால் வந்த பூர்வி தமிழின் தோள் மீது கை போட்டவளாக வினவிட,

"ஓவர் எரிச்சல் போல அண்ணி" என்று வர்ஷியும் கிண்டல் செய்தாள்.

"நீ அந்த ரெண்டு பேப்பர்ஸ் எப்போ க்ளியர் பண்ணப்போற?"

தமிழ் கேட்டதும் தலைக்கு மேல் கும்பிட்டவளாக வர்ஷினி ஓடிவிட்டாள்.

"அஸ்வின் மாமாக்கு கால் பன்றேன். நீங்க சின்ன வயசில் பண்ண எல்லாம் சொல்றேன். ஸ்கூலில் உங்க பட்டப்பெயர் என்னன்னு சொல்றேன் இருங்க" என்று தமிழ் அலைபேசியை கையிலெடுக்க...

"இனி உன் லவ்வுல குறுக்க வந்தால் மூஞ்சிக்கு நேரே என்னன்னு கேளுடா" என்று கையின் புஜத்தில் தட்டியவளாக, 'எப்பா தப்பிச்சோம்' என்று பூர்வி தனத்தின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

'இவங்க மத்தியில் லவ் பண்றது ரொம்ப கஷ்டமப்பா!' தமிழ் இருபக்கமும் தலையை ஆட்டிக்கொண்டான்.

"என்னம்மா என் நாத்தனார் மேல உங்களுக்கு பாசம் உருகி ஓடுது?" கேட்ட பூர்வியை பார்த்த தனம், "புடிச்சிருக்கு பூர்வி. நம்ம தமிழுக்கு ஏத்த பொண்ணு" என்று மகளின் காதில் கிசுகிசுத்தார்.

"ரைட்... ரைட்..." என்ற பூர்வி, "விட்டால் என் கல்யாணத்தோடு சேர்த்து இவங்க ரெண்டு பேரு கல்யாணத்தையும் நடத்திடுவீங்க போல?" எனக் கேட்டாள்.

"பண்ணிடலாமா?" தனம் உற்சாகமாகக் கேட்டதோடு, "வெண்பாவை அனுப்பவே மனசில்லை பூர்வி. கூடவே வச்சிக்கணும் தோணுது" என்றார்.

"வச்சிக்கோங்க, என் கல்யாணம் அன்னைக்கே மருமகளா கூட்டிட்டு வந்திடுங்க" என்றாள் பூர்வியும்.

உண்மைக்கும் அதுதான் நடக்கப்போகிறதென்று அவர்கள் இருவர் மட்டுமில்லை சம்மந்தப்பட்ட இருவருமே அறிந்திருக்கவில்லை.

சொல்லிக்கொள்ளாத அவர்கள் காதல் திருமணத்திற்கு பின்பே பகிரப்பட உள்ளது.





    


Leave a comment


Comments


Related Post