இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...43 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 30-05-2024

Total Views: 19200

பூச்செண்டு தவசிபுரம் சென்று இருபது நாட்கள் ஓடி இருந்தன. தினமும் இரவு வேலைகளில் சரியாக 9:00 மணிக்கு தரணியிடமிருந்து அவளுக்கு வீடியோ காலில் அழைப்பு வந்துவிடும்.


“நல்லா சாப்பிடு… நல்லா தூங்கு… டேப்லட்ஸ் கரெக்டா போட்டுக்கோ… தேவையில்லாத எதையும் நினைக்காதே… அப்பத்தா உன்னை நல்லா ரெடி பண்ணி அனுப்புவாங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு…” இவற்றையேதான் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பான்.


பாட்டியின் கை பக்குவமும் அப்படித்தான்… தினமும் காலையில் உளுந்தங்களி அல்லது கேழ்வரகு களியை பதமாக செய்து கொதிக்க தட்டில் வைத்து நடுவில் குழி போட்டு கொதிக்கும் களியில் நிரம்பி வழிய நல்லெண்ணெய் விட்டு பதம் மாறாமல் காய்ச்சிய கருப்பட்டி பாகினை அந்த குழியில் ஊற்றி அவள் அருகிலேயே அமர்ந்து முழுதாக உண்டு முடிக்கும்வரை விடமாட்டார். நல்லெண்ணெய் புண்களை ஆற்றிவிடும். உளுந்தங்களி இடுப்பு எலும்பினை வலுப்பெறச் செய்யும்… என்னதான் மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் ஆரோக்கியமான உணவிற்கு மிஞ்சிய போஷாக்கு இல்லை.


செண்பகம் மல்லிகா பாட்டி மாமன் அப்பா என்று ஆள் மாற்றி ஆள் அவளை தாங்கிக் கொண்டுதான் இருந்தனர்… பார்த்து பார்த்து அவளை கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்… உடலும் மெல்ல மெல்ல தேறித்தான் வந்தது… ஆனால் அவள் மனதில் பெரும் படலமாக ஒரு வெறுமை… கணவனின் அருகாமை  இல்லாததால் அல்ல… அவன்தான் காலையும் மாலையும் தவறாமல் அழைத்து தொலைவில் இருந்தாலும் காதலை குறைவின்றி கொடுத்துக் கொண்டு இருக்கிறானே… இது வேறுவிதமான மனச்சிதைவு… தன்னால் இனி குழந்தையே பெற்றுக்கொள்ள முடியாது என்று ஆழமாக எங்கோ மூளையில் தேவையற்ற ஒரு நெருடல் பதிந்து போனது.


அடிக்கடி கைப்பேசியை எடுத்து பல விஷயங்களை தேடி ஆராயத் தொடங்கினாள்… அவள் தேடலின் பிழையோ கிடைத்த தகவல்களின் வினையோ தெரியவில்லை… தான் கரு  உருவாவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதை தாண்டி நாட்போக்கில் வாய்ப்பே இல்லை என்றே உள்ளுணர்வு உணர்த்தத் தொடங்கியது. தனிமை தேவையற்ற எண்ணங்களை மூளைக்குள் நிரப்பிக் கொண்டிருக்க அடுத்த ஒரு முட்டாள்தனமான முடிவை நோக்கி அவள் மனம் பயணிக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு சொந்தபந்தம் பழக்கவழக்கத்தினர் என்று ஊரில் இருப்பவர்களும் குழந்தை கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்களாக தங்கள் அறிவுக்கு எட்டிய விஷயங்களை கூறி அவளை மேலும் குழப்பி விட்டிருந்தனர்.


ஏதேதோ யோசித்து தனக்குள் ஏதோ முடிவு செய்து கொண்டவள் அடுத்தடுத்த நாட்களில் தரணியின் அழைப்புகளை தவிர்க்கத் தொடங்கினாள். சில நேரங்களில் ஏதோ வேலையில் இருப்பதாக சொல்லி தவிர்ப்பது சில நேரங்களில் அழைப்பையே ஏற்காமல் விடுவது என்று நிராகரிக்கத் தொடங்கினாள். அவளுக்கு அழைத்து அவள் எடுக்காமல் போகும் பட்சத்தில் உடனடியாக மல்லிகாவிற்கு அழைத்து விடுவான் தரணி. அழைப்பு அவனிடமிருந்துதான் வருகிறது என்று அறிந்து வேண்டுமென்றே உறங்குவது போல் நடிக்கத் தொடங்கினாள் பூச்செண்டு. 


“நேரமே தூங்கிட்டா மாப்ள… அந்த மாத்திரை மருந்துக்கு சீக்கிரம் தூக்கம் வந்துடுது போல… வேணா எழுப்பட்டுமா….?” அறையை எட்டிப் பார்த்தபடியே மல்லிகா கேட்கும்போது “இல்லயில்ல… வேண்டாம் அத்தை… அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… பாத்துக்கோங்க… நாளைக்கு பேசிக்கிறேன்…” என்று தொடக்கத்தில் அவனும் எதார்த்தமாகத்தான் நினைத்துக் கொண்டான்.


அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் குளித்து இரவு உணவு முடித்து ரிதனுடன் சிறிது நேரம் விளையாடி உறக்கத்திற்காக அவன் கண்களை கசக்க மீராவிடம் ஒப்படைத்து சோபாவில் சாய்ந்து கண்மூடி அமர்ந்து கொண்டான். சில நிமிடங்களில் அவன் அருகில் வந்து அமர்ந்தான் முகிலன்.


“தூக்கம் வந்தா உள்ளே போய் படுக்க வேண்டியது தானடா…” என்றவனின் குரலில் கண்விழித்து நேராக நிமிர்ந்து அமர்ந்தவன் “தூக்கமெல்லாம் வரலடா… சும்மாதான்…” வெறுமையான குரலுடன் பேசியவனை ஆழ்ந்து பார்த்தான் முகிலன். 


“பூச்செண்டை மிஸ் பண்றியா…?” சிரித்தபடி கேட்க “நாலு நாள் ஆச்சுடா அவ கூட பேசி…” என்ற தரணியின் பதிலில் ஆச்சரியமாய் புருவம் சுருக்கினான் முகிலன்.


“ஏன்டா… அவகூட பேசக்கூட டைம் இல்லாம போச்சா…” மெலிதான கோபத்துடன் கேட்க “அவளுக்குத்தான் என்கூட பேச டைம் இல்ல போல… வெறுமையாய் சிரித்தவனை புரியாமல் பார்த்தான்.


“போன் பண்ணும் போதெல்லாம் எடுக்குறது இல்ல… அத்தைக்கு கூப்பிட்டா தூங்குறதா சொல்றாங்க… 9 மணிக்கு கூப்பிட்டாலும் தூங்குறா... ஏழு மணிக்கு கூப்பிட்டாலும் தூங்குறா… மீறி பகல்ல கூப்பிடலாம்னு ஆபீஸ்ல இருந்து கால் பண்ணினாலும் வேற யாராவது போனை அட்டென்ட் பண்ணி இங்கே போயிட்டா அங்கேயே போயிட்டான்னு சொல்றாங்க. அவளே புரிஞ்சுக்கிட்டு கூப்பிடுவான்னு பார்த்தா கூப்பிடவே மாட்டேங்குறா… ஒண்ணுமே புரியல…” நெற்றியை அழுந்த தேய்த்து இரு கைகளையும் கோர்த்து தொடையில் குற்றியபடி குனிந்து அமர்ந்து கொண்டான். அவன் முகம் முழுக்க கவலையின் ரேகை.


“என்னடா சொல்ற…? டெய்லி மதியம் வீடியோகால் பண்ணி பேசுறதா மீரா சொன்னாளே… நேத்து ரிதனுக்கு தடுப்பூசி போட கூட்டிட்டு போறதுக்காக நானும் மதியம் வீட்டுக்கு வந்தேன். என் கூடவும் நல்லாதானடா பேசினா…” முகிலன் கூற கண்களை நிமிர்த்தி அவனை பார்த்தவன் கசப்பாய் புன்னகைத்து மீண்டும் கண் தாழ்த்திக் கொண்டான்.


“இரு… நான் கால் பண்ணி பாக்கறேன்…” உடனடியாக தன் கைப்பேசியை எடுத்து பூச்செண்டிற்கு அழைத்தான் முகிலன்… அழைப்பை ஏற்றது மல்லிகா.


“முகிலு… என்ன சாமி… எல்லாரும் நல்லா இருக்கீகளா… பேரே எப்படி இருக்கியான்…? என் மக எப்படி இருக்கான்…? மருமகன் சொகமா இருக்காரா…? பூச்சேண்டு கிட்ட இல்லேன்டு வெசனமா இருக்கப் போறாரு… நீங்க ரெண்டு பேருந்தேன் பாத்துக்கிடணும்… இப்ப கொஞ்சம் தெப்பு தேறிதேன் இருக்கா… இன்னும் கொஞ்ச நாள் இங்ஙனயே இருக்கட்டும்… நல்லா தேத்தி அனுப்பறோம்…” அவன் பேச ஆரம்பிக்கும் முன் அவரே தொடர்ந்து பேசத் தொடங்கினார்.


“அம்மு பக்கத்துல இல்லையாத்த…”


“அவ வெரசா தூங்கிட்டா சாமி…”


“சரித்த… நான் நாளைக்கு பேசுறேன்… பாத்துக்கோங்க…” போனை வைத்தவன் “நீ தேவை இல்லாம எதையாவது நெனச்சு ஃபீல் பண்ணாதடா… அவ இப்ப கூட தூங்கிட்டுதான் இருக்கா… அத்தைதான் பேசினாங்க…” என்றான் அவன் கையை பிடித்தபடி.


“சரி இப்போ தூங்கறா… முழிச்சிருக்கும்போது அவளே எனக்கு கூப்பிடலாமே…”


‘பகல்ல ஆபீஸ்ல ஏதாவது டென்ஷனோட வேலைல இருப்பேன்னு கூப்பிடாம இருந்திருக்கலாம்…”


“நானே என் வேலையெல்லாம் ஒதுக்கிட்டு கூப்பிடுறேனே… அப்ப கூட அவாய்ட் பண்ணனுமா…?” ஆதங்கமாய் கேட்டான்.


“உன்னை எதுக்குடா அவாய்ட் பண்ணப் போறா…? நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத… நாளைக்கு கால் பண்ணிப் பாரு… பேசுவா… எதையாவது யோசிச்சு மூளையை குழப்பிக்காம நிம்மதியா போய் தூங்கு…” அவனை எழுப்பி அவனது அறைக்கு அனுப்பி வைத்து தானும் உறங்கப் போயிருந்தான் முகிலன்.


‘என்னாச்சுடி உனக்கு...? புதுசா எதையாவது மனசுக்குள்ள ஓட்டி குழப்பி வச்சிருக்கியா… ஒன்னுமே புரியலையே… இந்த வாரம் ஊருக்கு போய் அவளை நேரில் பார்த்துட்டு வரணும்… வரணும்னு பிரியப்பட்டா கூட்டிட்டே வந்துடலாம்… நான் பக்கத்துல இருந்தாலே அவளுக்கு எல்லாம் சரியாயிடும்…’ தனக்குள் ஒரு முடிவு எடுத்தவனாய் உறங்கிப் போனான் தரணி.


அடுத்தடுத்த நாட்களும் அவன் விடாது அழைக்க அவளும் விடாது தவிர்க்க இடையில் ஒருமுறை மட்டும் அழைப்பை ஏற்று “கோவில்ல பூஜைல இருக்கேன்... இப்ப பேச முடியாது அப்புறம் பேசுறேன்…” என்று ஒட்டாத்தன்மையுடன் பேசி வைத்திருக்க இனி தாமதிப்பது சரியல்ல நேரில் செல்வதுதான் சரி என்று முடிவுக்கு வந்தவனாய் அமைதியாக வேலையில் மூழ்கினான் தரணி.


மறுநாள் ஒரு முக்கியமான மீட்டிங்கில் அமர்ந்திருந்தபோது அவனது கைப்பேசியில் விடாத அழைப்பு… சைலன்ட் மோடில் போட்டிருந்ததால் அவனும் கவனத்திருக்கவில்லை… மீட்டிங் முடிந்து தனது இருக்கையில் வந்து அமர்ந்தவன் போனை எடுத்துப் பார்க்க விசித்திராவிடம் இருந்துதான் விடாத அழைப்புகள்… வேலை நேரத்தில் இதுபோன்றெல்லாம் விடாது அழைக்கக் கூடியவள் அல்ல அவள்… குழப்பத்துடன் அவளுக்கு அழைத்திருந்தான்.


“ஏன்டா… எத்தனை தடவை கூப்பிடுறது…? ஏன் எடுக்கல…?”


“மீட்டிங்ல இருந்தேன்டி… எதுக்கு நான்ஸ்டாப்பா கால் பண்ணிட்டே இருந்த…?”


“நீ ஆபீஸ்ல அள்ளிக் கொட்டினதெல்லாம் போதும்… முதல்ல ஊருக்குப் போய் அந்த பைத்தியத்தை சங்கிலி போட்டு கட்டி இழுத்துட்டு வா…” சிடுசிடுவென அவள் குரலில் தெறித்த கோபத்தில் ஒன்றும் புரியாதவனாய் “என்னடி உளர்ற…?” என்றான் புருவத்தை கீறியபடி.


“நான் உளறல… நீ கட்டிக்கிட்டியே ஒரு மண்டு… அதுதான் உளறிக்கிட்டு திரியுது…” விசித்ராவின் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.


“புரியிற மாதிரி சொல்றியா…?” பொறுமை இன்றி சீறினான் தரணி. விசித்ரா இழுத்து பெருமூச்சு விடுவது தெளிவாக கேட்டது.


“பூச்செண்டு எனக்கு கால் பண்ணி இருந்தாடா…”


“உனக்கா…? என்னவாம்…? என்கூட பேச நேரமில்ல… உன்கூட பேச நேரம் இருக்கோ…” கோபமான புன்னகையுடன் ஒரு பக்கமாய் இதழ் வளைத்தான்.


“உன் கிட்ட பேச முடியாமதான் என்கிட்ட பேசி இருக்கா…”


“என்னடி…? குழப்பிக்கிட்டே இருக்க…”


“அவளை ஏன் நீ ஊருக்கு அனுப்பி வச்ச…? வேணும்னா அவங்க வீட்டு ஆளுங்களை இங்கேயே தங்க வச்சு இருக்கலாமே…”


“ஷப்பா… பீடிகை போடாம விஷயத்தை சொல்றியா…” பொறுமை இழந்து கத்தினான்.


“அவர் பேசினதை அப்படியே சொல்றேன் கேட்டுக்கோ… அவளுக்கு இனிமே குழந்தை பிறக்காதாம்… நிச்சயமா அவ மலடிதானாம்… சாமிகிட்ட பூ போட்டு கேட்டாளாம்… சாமிதான் அவளுக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொல்லுச்சாம்… ஒரு மலடியை வச்சுக்கிட்டு நீ கஷ்டப்படக் கூடாதாம்… குழந்தை குடும்பம்னு நீ ரொம்ப சந்தோஷமா வாழணுமாம்… உன் அப்பா அம்மாவும் ரொம்ப வருத்தத்தில இருக்காங்களாம்…. இப்படி உபயோகமில்லாத ஒருத்தியா இருக்க பிடிக்கலையாம்…” 


‘அவ செஞ்ச தப்புக்கு கடவுள் தண்டனை கொடுத்துடுச்சாம்… அதனால அதை ஏத்துக்கிட்டு இனிமே தனியா அவ பொறந்த வீட்டிலேயே இருந்துக்கிறாளாம். நீ அவளை மறந்துட்டு ஒரு புது வாழ்க்கை அமைச்சுக்கணுமாம்… முறையா உனக்கு விவாகரத்து கொடுத்துடுறாளாம்… அதுக்கு ஒரு வக்கீலையும் ஏற்பாடு பண்ணி நீ கல்யாணம் பண்ணிக்க ஒரு நல்ல பொண்ணையும் ஏற்பாடு பண்ணி கொடுக்கிற புரோக்கர் வேலையை நான் பார்க்கணுமாம்… எனக்கு காலம்பூரா நன்றிக்கடன் பட்டவளா இருப்பாளாம்… விளக்கம் போதுமா…?”


விசித்ரா பேசிய தோரணையில் எரிச்சலுடன் கூடிய நக்கல் அப்பட்டமாய் வெளிப்பட்டது… எதிர்முனையில் பதில் இல்லை.


“ஹலோ… கேட்டுட்டுதான் இருக்கியாடா…” 


அமைதி.


“ஹலோஓஓ…”


அவன்தான் அவன் மனைவி கொடுத்த அடுத்த அடியில் மீண்டும் ஒருமுறை நொறுங்கிப் போனானே… பின் எங்கிருந்து பேசுவது…?


“தரணீஈஈ…” அவளது சத்தமிட்ட அடுத்த அழைப்பில் “ஹான்…” என்றிருந்தான் குரல் அடைக்க.


“அவ ஏன்டா இப்படி எல்லாம் பண்றா...? நல்ல தெளிவான பொண்ணுதானே அவ… ஏன் இப்படி வித்தியாசமா யோசிக்க ஆரம்பிச்சிட்டா…?” விசித்ராவின் குரலில் கவலை தெரிந்தது.


“நீ வை… நான் அப்புறம் கால் பண்றேன்… ப்ளீஸ்…” அவள் பதிலையும் எதிர்பார்க்காது அழைப்பை துண்டித்தவன் இரு கைகளாலும் தலையை அழுந்த பற்றியபடி அமர்ந்து கொண்டான். உலகமே இருண்டு போனதுபோல் ஒரு மாயை. சிறிதுநேரம் அதே நிலையில் அமர்ந்தவன் பின் தாடையை தேய்த்தபடி நெடுநேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பின் ஒரு தெளிவுடன் தன் வேலையை தொடர்ந்தான்.


அதன் பின் வந்த நாட்களில் அமைதியாக தன் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தான் தரணி. முகிலன் மற்றும் மீராவிடம் விசித்ரா கூறிய விபரங்களை சொல்லாது தவிர்த்தான். பூச்செண்டிற்கு அழைப்பதே இல்லை… மீரா மற்றும் முகிலனிடம் அவ்வப்போது அவள் பேசுவது தெரியும்… அது பற்றி கண்டு கொள்வதுமில்லை… நிலத்துக்குள் சீற்றமாய் தகித்துக் கொண்டிருக்கும் எரிமலை மேற்பரப்பில் அமைதியாய் வெறுமையாய் காட்சியளிப்பது போல் இதயத்துக்குள் பெரும் கொந்தளிப்பு எழுந்த நிலையிலும் உணர்ச்சி துடைத்த அமைதியான முகத்துடனே வளைய வந்து கொண்டிருந்தான்.


இதே நிலையில் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன… இரண்டு மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை… ரிதன் யாதவின் முதல் பிறந்தநாளும் நெருங்கி இருந்தது. தரணியும் பூச்செண்டும் பேசிக் கொள்வதே இல்லை என்ற விபரம் முகிலன் மீரா உட்பட குடும்பத்தார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. குழந்தையின் பிறந்தநாளுக்கு அனைவரும் ஊருக்கு வந்தே தீர வேண்டும் என்பது பெரியவர்களின் ஆணை… முகிலனும் அதைத்தான் எண்ணி இருந்தான்.


“தரணி… ரிதன் பிறந்தநாளுக்கு ஊருக்கு போறோம்ல… நாலு நாள் சேர்த்தே நீயும் லீவு போடு… ரிலாக்ஸா இருந்துட்டு வருவோம்…” அன்றைய இரவு உணவிற்குப்பின் கூறி இருந்தான் முகிலன்.


“நானும் வர்றதா சொல்லலையேடா…” டிவியில் கண் பதித்தபடி உணர்ச்சியற்று அவன் பேச “டேய்… நீ வராம எப்படி…? உன் பொண்டாட்டியும் அங்கேதான் இருக்கா… இன்னமும் அவளை அங்கேயே விட்டு வச்சிருக்க போறியா… போயிட்டு வரும்போது அவளையும் கூட்டிட்டு வந்துடலாம்…” முகிலன் பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல் ரிமோட்டினால் ஒவ்வொரு சேனலாக மாற்றியபடி அமைதியாக அமர்ந்திருந்தான் தரணி.


“எதனால வரலேன்னு சொல்ற…?” அவனை ஆழ்ந்து பார்த்தபடியே கேட்டான் முகிலன்.


“நிறைய வேலை இருக்கு… ப்ராஜெக்ட் முடியிற நேரம்… சட்டுனு விட்டுட்டு வர முடியாது…” அவனது முகத்தைக் கூட பார்க்காது பதில்.


“நானும் அதே ஆபீஸ்லதான் இருக்கேன்… கழுத்தை பிடிக்கிற மாதிரி எந்த ப்ராஜெக்ட்டும் இப்போ இல்ல… வீட்ல இருந்துகூட முடிச்சு கொடுக்கக்கூடிய அளவுலதான் எல்லாம் இருக்கு… எனக்கு தெரியும்…”


“ப்ச்… உன் ப்ராஜெக்ட் வேணா அப்படி இருக்கலாம்… எனக்கு அப்படி இல்ல… புரிஞ்சுக்கோ…” 


அவர்கள் பேசுவதை கேட்டபடியே அங்கு வந்த மீரா “நம்ம ஃபேமிலில எல்லாரும் ஒன்னா இருக்கும்போது நீங்க வரலைன்னா எப்படிண்ணா…? ரிதன் உங்களை ரொம்ப தேடுவான்… தெரியுமில்ல…” என்றபடி எதிரில் அமர்ந்தாள்.


“புரியுதுடா… என்னோட வேலை அப்படி… என்னை எதிர்பார்க்காதீங்க…” ஒட்டாமல் பதிலளித்தான்.


“அதுக்கு இல்லண்ணா…”


“ஏய்… விடு… அவன்தான் வர விருப்பம் இல்லைன்னு சொல்றான்ல… எதுக்கு விளக்கெண்ணெய் போட்டு நீவிக்கிட்டு இருக்க…” தரணியின் மேல் உள்ள கோபத்தில் மீராவிடம் பாய்ந்தான் முகிலன்.


“விருப்பம் இல்லேன்னு எப்போடா சொன்னேன்…? வேலை இருக்குன்னுதானே சொன்னேன்… இப்போ எதுக்கு தேவையில்லாம சீன் கிரியேட் பண்ற…” தானும் எகிறினான் தரணி.


“எப்பா சாமி… நீ வா வராம போ… உன் இஷ்டம்… தெரியாம கேட்டுட்டேன்… நாளைக்கு உன் குழந்தைக்கு இதே மாதிரி ஃபங்ஷன் வரும்ல… அப்போ நான் பார்த்துக்கிறேன்…பர்பஸா அவாய்டு பண்றேனா இல்லையா பாரு…” முகிலன் கூற அவனை திரும்பிப் பார்த்த தரணி ஒரு புன்னகையுடன் எழுந்து அறைக்குள் நுழைந்திருந்தான். வலியை மட்டுமே சுமந்த புன்னகை அது என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை.


அடுத்த இரு நாட்களிவ் முகிலன் மீராவும் ஊருக்கு கிளம்பி சென்றிருந்தனர். அடுத்த இரண்டாவது நாள் ரிதனின் பிறந்தநாள்… முந்தைய நாள் மாலை பூச்செண்டின் தந்தை மாணிக்கவேல் தரணிக்கு அழைத்து ஏதோ விபரங்கள் கூறி வைத்திருக்க உடனடியாய் விசித்ராவிற்கு அழைத்துப் பேசினான் தரணி.


“டேய்… ஏன்டா… வேணாம் தரணி…” கவலையாய் பேசினாள் விசித்ரா.


“நான் சொன்னதை மட்டும் செய்…” கட்டளையாய் கூறியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தவசிபுரம் நோக்கி பயணப்பட்டு இருந்தான்.



Leave a comment


Comments


Related Post