இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 36 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 31-05-2024

Total Views: 13618

அபியை சாதாரணமாகவே கையில் வைத்து தாங்கும் நந்தனும் பார்வதியும் அவள் கருவுற்ற பொழுதில் இன்னும் அதிகமாக தாங்கினர். பார்வதி அவள் சாப்பிட்ட எச்சில் தட்டை கூட கழுவ விடவில்லை. நந்தனோ ஒரு படி மேலாக அவள் குடிக்கும் பாலின் டம்ளர் கூட கனமாக இருக்கும் என்று அவன் கையாலேயே புகட்டினான்.


அபிக்கு நந்தன் மீதான குழப்பம் கூட அவனின் இப்போதைய அக்கறையில் நிவர்த்தி ஆகி இருந்தது. ‘சரி இதுநாள் வரை அவன் என்னை காதலிக்காது போனாலும் இப்போது தங்கள் வாழ்வில் வந்து இணைந்த தங்கள் உயிர் தனக்கான காதலை பெற்று தந்தது’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அபிலாஷா.


அபியை பார்க்க ப்ரதீப் தன் குடும்பத்தோடு வந்திட “அண்ணி கூடவே நான் இருந்துக்கிறேன்” என்று குழந்தையாக அடம் செய்த அக்சயாவை “இன்னும் ஒரு வாரத்தில் வளைகாப்பு முடிஞ்சு உன் அண்ணி கூடவே இரு. அதுவரை உன் வீட்ல போய் இரு” என்று அன்பாகவும் அதட்டியும் கூறி அனுப்பி வைத்தார் பார்வதி.


மறுநாள் செய்தி தெரிந்து ஆற அமர அவளின் பிறந்த வீட்டு சொந்தங்கள் என்று பெயருக்கு இருக்கும் சித்தி சித்தப்பா இருவரும் அபியை காண வர “அம்மா அபிக்கு இந்த குங்குமப்பூ பாட்டிலை உன் பரிசா கொடு.” என்று தாயின் கையில் தந்த முகிலை வித்தியாசமாக பார்த்து வைத்தார் சுகந்தி.


பின் எதையோ யோசித்தவன் “அம்மா இதை நீ கொடுக்க வேண்டாம் அவங்க வீட்ல ஏற்கனவே இது வாங்கி வைச்சிருந்தா யாருக்கும் தெரியாம மாத்தி வைச்சிட்டு வந்திடு. இல்ல அத்தை கையால அபிக்கு கொடுக்க சொல்லு.” என்று உத்தவாக சொல்ல


“ஏன்டா?” என்று கேள்வி கேட்ட அன்னையை “அபி நம்ம வழிக்கு வரனும்ல அப்போதானே சொத்து எல்லாம் நீ அனுபவிக்க முடியும்.” என்று சொல்ல சம்மதமாக தலையாட்டி வைத்தார் சுகந்தி.


அதுபடி ரூபவதியோடு சேர்ந்து பாசமாக பேசுவது போல அழகாக நடித்த சுகந்தி உணவு மேசை மீது காலையில் தான் அக்சயா வாங்கி அனுப்பி இருந்த குங்குமப்பூ பாட்டிலுக்கு பதிலாக தான் கொண்டு வந்தை மாற்றி இருந்தார் யாரும் அறியாமல்.


‘எதுவுமே சாப்பிட பிடிக்கவில்லை’ என்று சொல்லும் அபிக்கு தெம்பு கிடைக்கட்டும் என்று தினமும் இருமுறைக்கு பதில் நான்கு முறை பால் காய்ச்சி தந்த பார்வதி அந்த குங்குமப்பூவை கலந்து காய்ச்சி தர அபிநந்தன் அவன் கையால் அதை குடிக்க வைத்தான்.


ஒருவாரம் தன் மனைவியை தன் உயிரில் வைத்து தாங்க அவள் மனதில் இருந்த குழப்பங்கள் யாவும் விடை பெற்று தெளிந்த முகத்துடன் அபிநந்தனின் அன்பை முழுதாக ரசித்துக் கொண்டு இருந்தாள் அபிலாஷா. 


அக்சயா வளைகாப்பும் வர தங்கள் வீட்டு முதல் வாரிசு அதற்கான விழா என்று தங்கள் வீட்டிலேயே கோலாகலமாக ஏற்பாடு செய்தார் மோகன்ராம். பார்வதி அபிநந்தன் செய்யவேண்டிய முறைகள் எல்லாம் சரியாக செய்து அக்சயாவை பிரசவத்திற்காக தங்கள் இல்லம் அழைத்து வர “தினமும் என்னை வந்து பார்க்கனும் இல்லைன்னா நானும் குழந்தையும் கோவிச்சுப்போம்” என்று அன்பாக உத்தரவு போட்டாள் கணவனுக்கும் மாமியாருக்கும்.


இரண்டு கர்ப்பிணி பெண்களை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும் என்று பார்வதிக்கு அடிக்கடி உதவ வந்து விடுவார் பத்மாவதி. இரண்டு தாயுள்ளங்களின் பராமரிப்பு தங்கள் கணவன்களின் பாதுகாப்பு என்று நாட்கள் வண்ணமயமானதாக இருந்தது மசக்கை கண்ட மங்கைகள் இருவருக்கும்.


அன்று காலை முதலே அபிக்கு என்னவோ போல இருக்க நந்தனை இன்று விடுப்பு எடுத்து “கூடவே இருக்கீங்களா?” என்று கேட்க அவனும் மறுப்பேதும் கூறாமல் உடன் தங்கி இருக்க மதியத்திற்கு மேலே அபிக்கு வயிற்றில் வலி ஏற்பட பார்வதியிடம் கூற கை வைத்தியம் ஏதாவது செய்து பார்ப்போம் என்று பார்வதி சொல்ல


“இல்லம்மா… ஹாஸ்பிடல் போகலாம்.” என்று நந்தன் அழைக்க


“இல்ல நந்தா சூடா இருந்தா கை வைத்தியத்துலயே சரி ஆகிடும்.” என்று சொல்ல அசௌகரியம் என்று கழிவறை சென்ற அபிலாஷா ஓடி வந்து பார்வதியை அணைத்துக் கொண்டு


“அம்மா ப்லீட் ஆகுது ம்மா எனக்கு பயமா இருக்கு” என்று அழ நந்தனும் பார்வதியும் பதற 


“அம்மா நான் ப்ரதீப்கிட்ட சொல்லிட்டேன் கார் எடுத்திட்டு வந்திட்டே இருக்காரு. அண்ணி பதட்டப்படாதீங்க…” என்று என்ற அக்சயாவுக்கும் பதட்டத்தில் வியர்க்க


“அபிமா ஒன்னும் ஆகாது டா… அச்சு நீயும் அமைதியா இரு உனக்கு வியர்க்குது பாரு” என்று இரண்டு பெண்களையும் அமைதிப் படுத்த முயன்றார் பத்மாவதி.


ப்ரதீப் வரும் முன்னரே சந்தியாவிற்கு அழைத்த அபிநந்தன் மனைவியின் உடல் நிலை குறித்து கூறி தோழியிடம் தன் கலக்கத்தை வெளியிட அவளும் இவனுக்கு ஆறுதல் கூறி வரச் சொன்னாள் விரைவாக 


ப்ரதீப் கார் ஓட்ட அபிநந்தன் பார்வதி அபிலாஷாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல அக்சயாவிற்கு துணையாக பத்மாவதியை இருக்க வைத்தனர்.


வரும் வழி எங்கும் அழுது கொண்டே இருந்த லாஷாவை நெஞ்சில் சாய்த்து “லாஷா ஒன்னும் இல்ல மா” என்று அவளுக்கு சொல்வது போல தனக்கு தானே சொல்லிக் கொண்டான் அபிநந்தன்.


அண்ணியின் அழுகை கண்டே பயந்த அக்சயா அவளின் நிலை தெரியாது தவிக்க பத்மாவதி மோகன்ராமுக்கு தகவல் சொல்லி தங்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல வருமாறு கூறினார்.


அபிலாஷாவை பரிசோதித்து வந்த சந்தியா கண்ணில் இருந்த ஒரு துளி நீரை துடைத்தபடி வந்தவள் என்ன ஆனதோ என்று பார்த்து காத்துக்கிடந்தவர்களை காண இயலாது தலை குனிய


“அக்கா அண்ணி எப்படி இருக்காங்க? சந்தியா அபிக்கு என்னமா ஆச்சு? லாஷாவை நான் பார்க்கலாமா சந்தியா?” என்று அக்சயா பார்வதி பத்மாவதி நந்தன் என்று மாற்றி மாற்றி கேட்க


“அபி… சாரிடா அபிலாஷாக்கு அபார்ட் ஆயிடுச்சு.” என்று சொல்லி இருக்க இடிந்து போய் அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று விழுந்தான் அபிநந்தன்.


“மச்சான்…” என்று ப்ரதீப் அவனுக்கு ஆதரவாக அருகில் சென்று நின்று கொள்ள


அக்சயா பார்வதி இதை கேட்டு கதறி அழ ‘அச்சு நீ அழாத மா உனக்கு ஏதாவது ஆகிடப் போகுது.” என்று பத்மாவதி சொல்ல மோகன்ராம் இருவரும் அவர்களை அமைதிப் படுத்த விருட்டென்று எழுந்த நந்தன் சந்தியா முன்னால் வந்து நின்று


“சந்தியா ப்ளீஸ் டி ஏதாவது பண்ணு லாஷா… லாஷா தாங்க மாட்டா டி எங்க குழந்தையை காப்பாத்து..” என்று கை கூப்பி வேண்ட தர்மசங்கடமாக பார்த்தாள் சந்தியா.


“டேய் அபி.. புரிஞ்சுக்கோ… அவளுக்கு அபார்ட் ஆகிடுச்சு டா கரு கலைஞ்சிடுச்சு‌. இப்போ அதை க்ளீன் பண்ணனும். அதுக்கான ப்ரஜூயூஜர் தான் போய்ட்டு இருக்கு‌. நீதான்டா அவளுக்கு சப்போர்டா இருக்கனும். நீயே இப்படி உடைஞ்சு போனா எப்படி?” என்று கேட்ட சந்தியாவிற்கே அபியை நினைத்து பாவமாக இருந்தது.


இதுவரை பார்வதிக்கு அடுத்து தங்கள் நட்பை சரியாக புரிந்து கொண்டது அபிலாஷா மட்டுமே அப்படி ஒருத்தி தோழனுக்கு மனைவியாக அமைந்ததில் அத்தனை மகிழ்ச்சி சந்தியாவிற்கு. முதல் முறை லாஷா என்று அழைத்த போது கோபமாக “இப்படி கூப்பிடாதீங்க அது நந்தன் மட்டுமே கூப்பிடும் செல்லப் பெயர்” என்று சொன்ன போதே நந்தன் மீது அவளுக்கு இருக்கும் காதல் புரிந்தது. 


அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அபிலாஷா சந்தியா மனதில் ஒரு தங்கையாக இடம் பிடித்து இருந்தாள். தன் தங்கையாக நினைக்கப் பட்டவள் நிலை குறித்து வருத்தம் தோன்றினாலும் கூட இப்போது என்ன செய்திட முடியும். இத்தகைய கடின சூழலில் இருந்து வெளி வருவதை தவிர… என்று மனதை தேற்றிக் கொண்டு தான் தோழனை தேற்ற முயன்றாள் சந்தியா.


அவள் நினைத்தது போலவே ‘அபிக்கு நீ ஆறுதலாக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தை வேலை செய்திருந்தது. “நான் லாஷாவை பார்க்கனும் சந்தியா..” என்றிட


“டிஸ்டர்ப் பண்ணாம பாரு அபி… இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.” என்று சொல்லி விட்டு பார்வதி அக்சயாவை பேசி தெளிய வைக்க அவர்கள் அருகில் சென்றாள் சந்தியா.


அறைக்குள் வாடிய கொடியாக கட்டுப்படுத்த இயலாத கண்ணீரோடு கிடந்தாள் அபிலாஷா நந்தன் உள்ளே சென்று அவளை பார்த்தவன் “லாஷா…” என்று அழைப்பதற்குள் தொண்டை அடைத்தது.


“நந்தூ… சாரி நந்தூ… நான்…” என்று விம்மி அழ


“லாஷா நீ என்னமா தப்பு பண்ணின… வேண்டாம் மா அழாதே” என்று தன் கண்ணில் வழியும் நீரை மறந்து அவளின் விழி நீர் துடைத்தான்.


“நந்து… நம்ம பாப்பா நந்தூ..” என்று கேவியவளை மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான் அபிநந்தன்.


“லாஷா இப்போ இப்படி எமோஷனல் ஆகாதம்மா வேண்டாம் காமா இரு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் டா…” என்று சொல்லி ஆறுதல் படுத்த முயன்றான்.


பார்வதி அக்சயா பத்மாவதி மோகன்ராம் ப்ரதீப் என்று அனைவரும் சந்தியா சொன்னதை கேட்டு தங்கள் சோகத்தை மறைத்து அவளுக்கு ஆறுதலாக பேச முயன்றனர்.


சற்று நேரம் கழித்து “அச்சு நீ வீட்டுக்கு போம்மா… சம்மந்தி நீங்களும் மாப்பிள்ளையும் அச்சு கூட இருந்து பார்த்துக்கோங்க நானும் நந்தனும் இங்க அபி கூட இருக்கோம்.” என்று பார்வதி சொல்ல சரி என்று அக்சயாவை கூட்டிக் கொண்டு கிளம்பினார் பத்மாவதி.


கிளம்பும் முன் தன் தோழி அருகில் வந்த ப்ரதீப் “எவ்ரிதிங் வில் பீ நார்மல் சூன் அபிஷா… எதையும் மனசுல போட்டு குழப்பமா இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு நீ வீட்டுக்கு வந்திடுவ… அப்பறம் பேசலாம்.” என்று ஆறுதல் சொல்லி விட்டு சென்றான்.


தனக்கே தனக்கென்று தன் காதலை தனக்கு பெற்று தர வந்ததாக நினைத்து தன் வயிற்றில் உருவான கருவின் மீது தன் வாழ்வின் மொத்த நம்பிக்கையும் வைத்து காத்திருந்தாள் அபிலாஷா. அது கானலாகி கனவாகி போனதில் உயிர் வெறுத்து போனாள் அபிலாஷா.


நந்தனோ முதலில் தன் மனைவியின் உடல் நிலை குறித்து கருவை கலைக்கலாமா என்று கேட்டவன் தான் கருவுற்றதை அறிந்து அவள் அடைந்த மகிழ்வை கண்டு தன்னவளுக்காகவாவது அந்த கரு நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் வேண்டிக் கொண்டு இருந்தவனுக்கு உயிர் அறுந்த வேதனை தான்… இருந்தாலும் தன் வேதனையை விட தன்னவள் வலி கலைவதே இப்போதைய தலையாய கடமை என்று நினைத்து உள்ளுக்குள் வெம்பிக் கொண்டு இருந்தான் அபிநந்தன்.


அன்று முழுக்க அபிநந்தன் பார்வதி இருவருமே உணவை வெறுத்து கிடக்க மறுநாள் ப்ரதீப்பை அக்சயா துணைக்கு விட்டுவிட்டு மருத்துவமனை பத்மாவதி வந்தார். 


அபியின் நலம் விசாரித்து விட்டு இன்னும் சாப்பிடாமல் இருக்கும் தாயையும் மகனையும் அக்கறையாக கடிந்து கொண்டவர் “வாங்க சாப்பிட போகலாம்.” என்று அழைக்க வந்து சேர்ந்தனர் அபியின் சித்தி அத்தை இவர்களோடு முகில்.


வந்தவர்கள் அழுது புலம்பி அழுகையை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபியை மீண்டும் அழ வைக்க “உங்களை யாருங்க இங்க கூப்பிட்டது திரும்பவும் அபியை அழ வைச்சிட்டு இருக்கீங்க…” என்று பத்மாவதி எரிச்சலாக பேச


“அம்மா அத்தை கொஞ்சம் சும்மா இருங்க” என்று அடக்கினான் முகில்.


அந்த நேரம் டிஸ்சார்ஜ் விஷயமாக பேச டாக்டர் அழைத்தாக நர்ஸ் வந்து சொல்ல நந்தன் சென்றான். 


“ஆன்டி நீங்க பார்வதி ஆன்டியை கூட்டிட்டு போய் சாப்பிட வையுங்களேன். பாவம் அவங்க ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்காங்க இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்பு இன்னும் கெட்டுப் போகும்.” என்று அக்கறை போல பேச


“ஆமா பார்வதி வாங்க” என்று பத்மாவதி அழைக்க


“அம்மா ப்ளீஸ் நீங்க சாப்பிட போங்க” என்று அபியும் சொல்ல வேறு வழியின்றி பத்மாவதியோடு பார்வதி கேண்டீன் செல்ல அதன் பிறகு முகில் சொன்னதை எல்லாம் கேட்ட அபி ஆத்திரத்தில் அறிவை இழந்து போனாள்.


  • தொடரும்…



Leave a comment


Comments


Related Post