இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 35 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 31-05-2024

Total Views: 10249

அத்தியாயம் 35

அழுது அழுது ஓய்ந்து போனாள் அருவி.

இரவும் வர பெண்கள் இருவரும் சமையல் வேலையில் உதவுவதும் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்பதுமாக இருக்க அருவியை பற்றி சிந்திக்க நேரம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மாலை சென்றவள் இரவாகியும் கீழே வரவில்லை.

சுரேனும் அழுதுகொண்டே ஓடும் அவளை பார்த்தவன் தடுக்கும் எண்ணம் இல்லாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

சுந்தரோ அவன் அறையை விட்டு வெளிவராமல் இருக்க ஆண்களில் மற்ற மூவரும் மகிழாவிடம் பேசியபடி இருக்க அருவியை காணும் என தேட அங்கு ஆள் இல்லை.

சுரேனைப்பற்றி நன்றாக தெரியும் அவளுக்கு அவள் செய்த காரியத்திற்கு அவளை குத்தி கிழிப்பான் என ஆனால் தனது குணத்தை தவறாக பேச மாட்டான் என்றே அவள் எண்ணி இருக்க அவனோ வார்த்தையில் விஷத்தை தடவி பேச அதை தாங்க முடியவில்லை பேதை அவளால்.

தன் அன்னை படுத்த படுக்கையாக இருந்த போதும் சரி நன்றாக இருக்கும் போதும் சரி தன் அன்னையின் ஏக்கம் எப்போதும் வந்ததில்லை.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் தன் அன்னையின் பொறுப்பையும் தன் அப்பத்தாவின் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டவள் நிற்க நேரம் இல்லாமல் ஓடினாள் என்றுதான் கூற வேண்டும்.

அவர்களை பற்றி கவலை கொள்ள அவளுக்கு நேரமும் இருந்ததில்லை.

அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவள் மாமன் மட்டுமே.

அவள் ஆசையாக அழைக்கும் இந்தர் மட்டுமே.

வேலை முடிந்து ஓய்ந்து படுப்பவளுக்கு பெரும் ஆறுதலாக இருப்பது அவன் அவளுக்காக வாங்கி கொடுத்த ஆகாய வண்ண தாவணிதான்.

அடிக்கடி அதை எடுத்து அணைத்து கொள்பவள் ஒருநாள் அவள் அப்பத்தாவின் கண்களிலும் பட்டாள்.

பேத்தியின் ஆசையை அறிந்து கொண்டவள் சக்கரவர்த்தியிடம் பேச எண்ணி இருக்க அதற்குள் இந்த பூமியில் நீ வந்த வேலை முடிந்துவிட்டது என காலன் அவரை அழைத்துக்கொள்ள அவளின் ஆசையை மனதிற்குள்ளேயே பூட்டிக் கொண்டாள்.

இடைப்பட்ட காலத்தில் ரொம்ப காலம் கழித்து அவன் ஊர் வந்த விஷயம் அறிந்துதான்  சுசிலாவை அழைத்துக் கொண்டு வேண்டும் என்றே அவன் மாந்தோப்பிற்கு வந்தது.

மாம்பழம் பறிக்கும்போது தெரியாமல் கல் அவன் நெற்றியை பதம் பார்க்க அப்போது அங்கு எதிர்பாராத அவனும் முதலில் திகைத்தாலும் அவளை கண்டு எரிமலையாக வெடிக்க வாசுதான் அவனை சமாதானப்படுத்தினான்.

அவளும் வேண்டும் என்றே அவனை வம்பிழுக்க பழைய கோபம் இப்போது கல்லால் அடித்தது என அத்தனையும் ஒன்றாக சேர்ந்து கொண்டது.

அதன்பிறகு அவளுக்கு அவன் நினைவே அதிகம் தாக்க எவரும் அறியாமல் உள்ளுக்குள் அவன்மேல் ஆசையை வளர்த்து கொண்டாள்.

இதுவரை யாரும் அறிந்து வைத்திருக்கவில்லை.

ஏன் சிறுவயதில் இருந்து உடன் வளர்ந்த சுசிலாவும் அறிந்து இருக்கவில்லை,மகிழாவிடமும் இதை அவள் பகிரவில்லை.

எனவே உள்ளுக்குள் வைத்து அவள் மருகிக் கொண்டுதான் சக்கரவர்த்தி கேட்டதும் மறுக்க முடியாமல் திருமணத்திற்கு சரி என்றது.

ஏதேதோ நடந்து இறுதியாக அவள் ஆசை மாமனின் கையால் தாலி வாங்கிக் கொண்டதை இன்றுமே நம்ப முடியாமல் அடிக்கடி தாலியை எடுத்து பார்த்து மகிழ்ந்து கொள்வாள்.

ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவளுக்கு இருந்தது.

இந்தர் மாறுவான் என்று ஆனால் இன்று அவன் பேசியது சற்று அதிகப்படியாக இருக்க தாங்க முடியாமல் அவனை அடித்துவள் யார் முகத்திலும் விழிக்க விரும்பாமல் மாடி ஏறி தலையை இருகால்களுக்கு இடையில் விட்டு அழுதுகொண்டே இருந்தாள்.

இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் தாய் மடியை தேடினாள்.

அம்மா அம்மா என அழுதுகொண்டே இருந்தவள் ஒருகட்டத்திற்குமேல் தேம்பி தேம்பி அப்படியே மடங்கி படுத்து கொண்டாள்.

அதிகப்படியான வேலை சாப்பிடாமல் இருந்தது என அவளுக்கு உறக்கம் தானாக வர அப்படியே உறங்கியும் போனாள்.

அப்போது வெந்நிறக்கரம் ஒன்று அவள் தலையை தடவியது .

"அழாதே அருவி... உன் கஷ்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்... அதுக்கப்புறம் உன் மாமன் உன்ன தாங்கு தாங்குன்னு தாங்குவான்..." என கூற பட்டென அதிர்ந்து விழித்தாள் அவள்.

"அம்மா..." என மீண்டும் வாய்ப்பொத்தி அழுக மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

வாசுவின் அறை.

"ஏய்...சுசிய என்னடி பண்ண..?" என வாசு அவள் கழுத்தை பிடித்து நெறிக்க.

"நீ... நான் ஆசைப்பட்டவன்... அவளுக்கு எவ்ளோ தைரியம் எனக்கு சொந்தமானத அபகரிக்க ஆசைப்படுவா.... அதனாலதான் அவள தூக்கிட்டேன்.....இன்னும் உயிரோடதான் இருக்கா... ஆனா அவ உயிரோட இருக்கறதும் அவ உயிர் அவ உடம்ப விட்டு போகறும் உங்கைலதான் இருக்கு...." என்றாள் தெனாவட்டாக.

"அவளே ஒரு பூ மாதிரிடி... அவள என்ன பண்ணுன... ஒழுங்கா உண்மைய சொல்லு... இல்ல... நீ இங்க இருந்து பொணமாத்தான் போவ...." என்க.

"டேய்... இவன் யாருடா பைத்தியக்காரன்... அங்க உன் லவ்வர் உயிருக்கு போராடிட்டு இருக்கான்னு சொல்றேன்... அவள காப்பாத்துவியா... இல்ல இங்க எங்கிட்ட வந்து அவ பூ நாருன்னு கதை பேசிட்டு இருப்பியா....?" என்க.

"ஏய் வேணாம்டி... உனக்கு எங்கக்கூடத்தான பிரச்சனை... அவ உன்ன என்ன பண்ணா... உன்னோட உண்மையான முகம் இன்னுமே அவளுக்கு தெரிஞ்சிருக்காது....யாருக்குமே உண்மையா இல்லாத நீ ஒரு நம்பிக்கை துரோகிடி...." என்க.

அவன் பேச்சில் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டவள் "யாரு சொன்னா... நான் யாருக்கும் உண்மையா இல்லன்னு சின்னவயசுல இருந்தே என் அப்பாவுக்கு நான் உண்மையாத்தான் இருந்தேன்... அவளுங்க ஏமாந்து போனா அது என் தப்பா...."என அவள் பேசி முடிக்கும் முன் சப்பென்ற விழுந்த அடியில் அவள் சுருண்டு விழ ஆண்கள் மூவரும் அங்கு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த சுரேனை பார்த்து அதிர்ந்து நின்றனர்.

சுசிலாவை சுற்றிலும் நான்கைந்து பேர் கையில் டார்ச் லைட்டுடன் நின்றிருக்க அவளோ மயக்கத்தில் இருந்தாள்.

அதில் ஒருவனோ "என்னடா மருந்து கொடுத்த... இன்னும் தூங்கிட்டு இருக்கா...?" என கேட்க.

இன்னொருவனோ "டேய்... அவ தூங்கறதுதான்டா நமக்கு நல்லது... சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு போய்ட்டே இருக்கலாம்...." என்க.

மூன்றாமாவனோ "டேய்.. தடியன்களா... நமக்கு கொடுத்த வேலை ஒன்னு நீங்க பன்றது ஒன்னு... நான் இதுக்கு வரல... இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா.... அந்த திகம்பரன் நம்மள சும்மாவிட மாட்டான்... என்ன சொன்னாங்களோ அத முடிச்சிட்டு காச வாங்கிட்டு போய்ட்டே இருப்போம்..." என்க.

"ஆமா வந்துட்டாரு உத்தமரு... டேய்... வாய மூடுடா வெண்ண... எல்லாம் எங்களுக்கு தெரியும் மூடிட்டு இரு...." என்க.

"என்னமோ பண்ணுங்க.. நான் அந்தப்பக்கம் போறேன் முடிச்சிட்டு கூப்டுங்க... நான் இந்த ஆட்டத்துக்கே வரல..." என்றுவிட்டு அவன் அந்த இடத்தை காலி செய்தான்.

"இவன் என்னடா இந்த தொழில் பண்ணிட்டு பொம்பள மேல கை வைக்க மாட்டேன்னு சொல்றான்...." என அங்கு நின்றிருந்த ஒருவன் கூற மற்றவர்களோ "அவன விடுடா இவள பாருடா லட்டு மாதிரி இருக்கா அதான் அந்த வாசு பையன் இவ பின்னால சுத்தி இருக்கான்..." என்க.

சுசிலாவை கடத்திய ஐவரில் ஒருவன் நகர்ந்துவிட மற்ற நால்வரும் அவள் அருகில் நெருங்கினர் கண்களில் போதையோடு.

வஜ்ரவேல் வீடு

"ஏய்.. காளியம்மா... காளியம்மா... என கத்தியபடி உள்ளே வந்தான் வஜ்ரவேலு.

"என்னங்க... ஏன் இப்படி கத்திட்டு வரீங்க...?"என கேட்க.

"ஏன்னா... உன் மவன் எங்கடி...?" என கேட்க.

"என்னப்பா... ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க...?" என அவனின் இரண்டாவது மகன் வர.

"திகம்பரன பாத்தியா...?" என கேட்டான் அவன்.

"இங்கதான் இருக்கேன்... ஏன் என்ன ஆச்சு...?" என கேட்டபடி அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தான் திகம்பரன்.

அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தான் வஜ்ரவேலு.

மற்ற இருவரும் திகைத்து பார்த்தனர்......



Leave a comment


Comments


Related Post