இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 37 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 01-06-2024

Total Views: 14808

அபிநந்தன் அருகில் இல்லாத நேரத்தில் இத்தனை நாட்கள் தன் மனதோடு ஓட்டி வைத்திருந்த திட்டத்தை அரங்கேற்ற துவங்கினான் முகில்…

அதன்படி “அபி நீ ப்ரெக்னன்ட்னு சொன்னப்போ நாங்க எல்லாரும் எவ்வளவு சந்தோஷப் பட்டோம்? இப்போ இப்படி ஆயிடுச்சு…” என்று உச் கொட்ட

“பிளீஸ் முகில் இந்த பேச்சை விடு.” என்று விட்டேத்தியாக முடிக்க பார்க்க

ஆனாலும் அபி நீ வீட்டுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணினாலும் உன்னை நல்லா பார்த்துக்கிற ஒருத்தரை தான் தேர்ந்தெடுத்தன்னு நான் சந்தோஷப் பட்டேன். ஆனா உன்னோட இந்த நிலைக்கு உன் புருஷனே காரணம்னு தெரியும் போது எனக்கே உன்னை நினைச்சு பாவமா இருக்கு அபி…” என்று சொல்ல சுகந்தி ரூபவதி அவனின் நடிப்பை வாய்பிளந்து பார்க்க

“முகில் என்ன பேசிட்டு இருக்க? என் நந்தனை பத்தி இப்படி பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..?” அந்த நிலையிலும் கோபம் கொண்டு அபி பேச

“டென்ஷன் ஆகாத அபி… நான் அன்னைக்கே சொன்னேன் உன் புருஷன் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணல ஈகோல கல்யாணம் பண்ணிருக்கான்னு நீ அப்போவே சுதாரிச்சி இருந்திருக்கனும். விட்டுட்டு… ஆனா என்ன இருந்தாலும் எங்க வீட்டு பொண்ணாச்சேனு உன் வாழ்க்கை மேல நான் ஒரு கவனம் வைச்சேன்.” என்று அவன் பீடிகை போட அவனை கூர்ந்து கவனிக்கலானாள் அபிலாஷா.

“அன்னைக்கு நான் சொன்னேன்ல சந்தியாவை அபிநந்தன் பார்க்க வந்து பேசின வீடியோ கூட காட்டினேன்ல அன்னைக்கு இந்த ஹாஸ்பிடல்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வேலை பார்க்குறது தெரிஞ்சு அவர்கிட்ட பேசினப்போ எதார்த்தமா ‘இவரைத்தான் நீ கல்யாணம் பண்ணிருக்க’னு சொன்னதும் அந்த மனுஷன்

‘என்னது இந்த பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இந்த பையன் அடிக்கடி இங்க வந்து இந்த டாக்டர் கூட சிரிச்சு சிரிச்சு பேசுவாரு. ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போவாங்க நான்கூட இவங்க காதலிக்கிறாங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்கனு நினைச்சேன்’னு சொன்னதும் எனக்கு பகீர்னு ஆச்சு… அதான் அவரை இனிமே அபிநந்தன் இங்க வந்தா என்ன பேசுறாங்க என்ன ஏதுன்னு கவனிச்சு சொல்லுங்கனு சொன்னேன். 

அப்படி தான் அவரு நீ ப்ரக்னன்சி கன்பார்ம் பண்ணின அன்னைக்கு சந்தியாவும் உன் புருஷன் அபிநந்தனும் தனியா மீட் பண்ணி பேசிக்கிட்டதாகவும் அதை அவரு கேட்டதாகவும் எனக்கு கால் பண்ணி சொன்னாரு.” அவளின் முகபாவங்களை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே முகில் சொல்ல அவன் நினைத்தது போல உடனே நம்பாமல் ஆனால் இத்தனை நாட்கள் மறந்திருந்த அபிநந்தன் குறித்த கசப்பு நினைவு வந்தவளாக அமர்ந்திருக்க உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் முகில்.

“அவங்க என்ன பேசுனாங்க னு கேட்க மாட்டியா அபி?” என்றான் நீ கேட்டால் தான் சொல்வேன் என்பது போல..

“அதெல்லாம் எதுக்கு முகில் நீ கவனிக்க சொன்ன? நந்தனோட நடவடிக்கையை நீ ஏன் கவனிக்கிற?” அப்போதும் கணவனை விட்டுக் கொடுக்காமல் அபி பேச

“என்ன அபி இது? உன் மேல உள்ள அக்கறைல தானே என் புள்ளை இப்படி பண்ணிருக்கான்.” என்று வக்காலத்துக்கு வந்தார் சுகந்தி.

“சரி என்ன பேசினாரு?” பல் இடுக்கில் அபி கேட்க

“அபி நான் சொன்னா நம்புவியா நீ? ஆனாலும் சொல்றேன்… அபி… உன் புருஷன்.. நீ காதலிச்சு உன்னை சின்னதுல இருந்து வளர்த்த அத்தை மாமா சித்தி சித்தப்பா னு எல்லாரையும் விட்டுட்டு அவன்தான் முக்கியம்னு போனீயே.. அந்த அபிநந்தன் உன் வயித்துல வளருர குழந்தையை கலைக்க வழி இருக்கானு கேட்டிருக்கான்.” என்று சொல்லி முடிக்க விழிகள் தெறிக்க மூச்சு விட மறந்து மூர்ச்சை ஆனாள் அபிலாஷா.

“இல்ல நந்தன் நந்தன் அப்படி சொல்லிருக்க மாட்டாரு.” என்று ஆணித்தரமாக அப்படி தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் புகுத்தி கொண்டு கத்த

“நான் சொல்றது பொய்னு நினைச்சா உன் புருஷன் வந்ததும் நீயே கேளு…” அமர்த்தலாக மொழிந்தான் முகில். அவனை உறுத்து விழிக்க

“என்ன அபி அப்படி பாக்குற? உன் புருஷன் வந்ததும் நந்து நீங்க நம்ம குழந்தையை அபார்ட் பண்றதை பத்தி சந்தியாகிட்ட கேட்டீங்களா.. அப்படினு ஒரே ஒரு கேள்வி கேளு.. உன் புருஷன் என்ன பதில் சொல்றான்னு பாரு‌. அப்போ புரியும்.” அவன் உறுதியாக சொல்ல

“அதுனால நந்தனுக்கு என்ன பயன்? எங்க குழந்தையை நந்தனே ஏன் கொல்ல கொல்லனும்?” அபி கேட்க

“ஆக்சுவலா அவனுக்கும் சந்தியாக்கும் ஒரு லவ் ட்ராக் போய்ட்டு இருந்த டைம்ல அவளை அவ வீட்ல வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு அவளும் அங்க அபிநந்தனை நினைச்சுட்டு சரியா வாழாம அவனை சைக்கோனு சொல்லி டைவர்ஸ் வாங்கிட்டு வந்து இங்க திரும்ப வந்தா அபியோட மனைவியா நீ இருக்க.. விட்ட குறை தொட்ட குறை னு அபி சந்தியா காதல் திரும்ப உயிர் பெற்று அதுக்கு இடைஞ்சலா இருக்கிற உன்னை வெளியேற்ற தடையா இருந்த உன் குழந்தையை கலைச்சுட்டாங்க ரெண்டு பேரும் சேர்ந்து…” என்று ஒரு அழகான திரைக்கதை வடிவமைத்து முகில் சொல்லி முடிக்க அவனை சந்தேகமாக அபிலாஷா பார்க்க சரியாக அபிநந்தனும் சந்தியாவும் அறை நோக்கி வர சாப்பிட போன பார்வதி பத்மாவதியும் உள்ளே வந்தனர்.

நந்தன் முன்பு சென்ற அபிலாஷா “நந்தன் நான் கேட்குற கேள்விக்கு என் முகத்தை பார்த்து உண்மை என்னவோ அதை மட்டும் சொல்லுங்க..‌” என்றிட

“என்ன அபி? ஏன் ஒரு மாதிரி பேசுற?” சந்தியா இடைபுக

“நான் எனக்கு தாலி கட்டின புருஷன்கிட்ட கேள்வி கேட்குறேன். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா?” என வெடுக்கென்று சொல்ல சந்தியாவிற்கு ஒரு மாதிரி ஆகிப் போனது.

“நந்தன் என்னோட ப்ரகன்சி தெரிஞ்ச அன்னைக்கு நீங்க என் வயித்துல வளருர கருவை கலைக்கிறதை பத்தி சந்தியா கூட டிஸ்கஸ் பண்ணீங்களா?” என்று கேட்க ஒரு நொடி சந்தியா நந்தன் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.

இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அமைதியாக நிற்க “அபி என்னம்மா கேட்குற?” என்று பார்வதி பத்மாவதி அதிர்ச்சி ஆக

“கொஞ்சம் பொறுமையா இருங்க ம்மா… உங்க பையன் பதில் சொல்லட்டும்.” என்று கை கட்டி நின்றவள் பதில் வந்தே ஆகவேண்டும் என்பது போல நிற்க அவள் முகத்தை பார்த்து பொய் சொல்லும் திறமை நந்தனிடம் கிடையாதே… அத்தோடு இப்போது இருக்கும் மனநிலையில் இதை சமாளிக்கவும் வழியின்றி திணறினான் நந்தன்

“சொல்லுங்க நந்தன்… நீங்க அதை பத்தி பேசுனீங்களா?” மீண்டும் அழுத்தமாக கேட்க தலை தாழ்ந்தபடி ‘ஆம்.’ என்று தலை அசைத்தான் ஆடவன்.

இத்தனை நேரம் துளி நம்பிக்கையாவது வைத்து ‘தன் நந்தன் தன்னை எப்போதும் ஏமாற்ற மாட்டான்’ என்று எதிர்பார்த்து கேட்ட அபிலாஷா மனதளவில் சுக்கு நூறாக உடைய ‘அப்போ அதற்கு முகில் சொன்னது தான் காரணமாக இருக்கும்.’ என்று மனதில் முடிவேற்றிக் கொண்டாள்.

பார்வதி பத்மாவதி கூட அதிர்ந்து போய் “என்ன நந்தா இது? ஏன் இப்படி பண்ணுன அபிநந்தா..” என்று கேட்டு நிற்க கண்ணீர் ததும்பிய விழிகளோடு 

“அம்மா அது வந்து… லாஷா நான் சொல்றதை பொறுமையா கேளுமா” என்று தன் பக்க நியாயத்தை விளக்க முயல போதும் என்று கை உயர்த்தி நிறுத்திய அபிலாஷா அங்கிருந்த யார் அழைப்பையும் காதில் வாங்காமல் வெளியே ஓடிட “லாஷா லாஷா” என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்தான் நந்தன்.

தன் உடல் நிலை மறந்து மனம் வெறுத்து ஓடியவள் மருத்துவமனை முன்பு இருந்த ஆட்டோவில் ஏற அபிநந்தன் எவ்வளவு கத்தி அழைத்தும் திரும்பவே இல்லை. 

அவன் பின்னால் வந்த சந்தியாவும் பார்வதியும் “அபி எப்படியும் வீட்டுக்கு தான் போவ… அங்க போய் சமாதானம் பண்ணிக்கலாம்.” என்று அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

“எப்படியோ காதல் பறவைகளை பிரிச்சாச்சு… இனி ஆறுதல் சொல்ற மாதிரி தனியா இருக்கிற சோகப் பறவையை நம்ம ஜோடிப் பறவையா மாத்திக்கனும்.” என்று வன்மமாக சிந்தித்த படி முகில் இடத்தை காலி செய்தான்.

ஹாஸ்பிடல் சென்ற பத்மாவதியின் கார் சத்தம் கேட்டு வேகமாக வாசலுக்கு வந்தாள் அக்சயா. தன் அண்ணி இல்லாமல் அண்ணன் அம்மா அத்தை மட்டும் வந்திருக்க குழம்பியவள்

“அண்ணியை தனியா விட்டுட்டு எல்லாரும் வந்துட்டீங்க? என்னாச்சு” என்று கேட்க உள்ளே வந்தவர்கள் “அப்போ அபி இங்க வரலையா?” என்று திகைக்க

“அபி நீங்க இல்லாம எப்படி இங்க வருவா? அம்மா என்னாச்சு?” ப்ரதீப் வர

பார்வதி மகனின் செயலுக்கு காரணம் புரிந்து அழ பத்மாவதி மருத்துவமனையில் தன் முன் நடந்ததை விவரிக்க

“என்ன அபிநந்தன் இது? அம்மா என்னென்னவோ சொல்றாங்க அபிக்கு நீங்க ஏன் அபார்ட் பண்ணனும்?” ப்ரதீப் கேட்க

“அச்சு உன் ஃபோன் கொடு‌.” என்று வாங்கி அதில் இருந்தா அபிலாஷாவின் சித்தப்பா மகள் திவ்யாவிற்கு அழைத்தான் அபிநந்தன். 

அவளிடம் பேசியவன் அடுத்த நிமிடம் ஃபோனை தங்கையிடம் கொடுத்து விட்டு வேகமாக வெளியேற ப்ரதீப் அவனை பின் தொடர்ந்தான்.

அபிலாஷா அவளின் பிறந்த வீட்டிற்கு வந்ததை திவ்யா மூலம் உறுதி செய்து கொண்டு அங்கு வந்தான் அபிநந்தன். அவன் பின்னவே ப்ரதீப் வர உள்ளே சென்ற மற்றவர்கள் ஹாலில் இருக்க கண்டு கொள்ளாமல் அபிநந்தன் நேராக அபிலாஷா அறையை சென்று கதவை தட்ட கதவு திறக்கப்படவில்லை.

“இங்க பாரு ப்பா ஏதோ எங்க பொண்ணு விரும்பி கட்டிக்கிட்டாளேன்னு இவ்வளவு நாள் உனக்கு மரியாதை கொடுத்து இருந்த்தோம். இப்போ தான் அவளே உன்னை பத்தி முழுசா தெரிஞ்சு வந்திட்டாளே… இங்கேயும் வந்து தொல்லை பண்ணனுமா?” சுகந்தி கேட்க

“என்னடா கேட்க ஆள் இல்லைனு நினைச்சியா? அபிக்கு குடும்பம்னு நாங்க இருக்கோம்.” என்று திடீர் பாசமழை பொழிந்தார் அவளின் சித்தப்பா

“அங்கிள்… நந்தன் அபியோட ஹஸ்பண்ட் கொஞ்சம் மரியாதையா பேசுங்க. அபி… அபி வெளியே வா ஏன் இப்படி உள்ளேயே இருக்க?” ப்ரதீப் கத்தி அழைக்க

“ம்ம் வாப்பா… உன் ஃப்ரண்ட்க்கு அநியாயம் பண்ணினவனை விட உன் பொண்டாட்டியோட அண்ணன் முக்கியமா போய்ட்டானா?” ரூபவதி கேட்க 

“அநியாயமா? நந்தன் அப்படி என்ன பண்ணினாரு. நீங்களாவது சொல்லுங்க?” ப்ரதீப் பொதுவாக பார்த்து கேட்க

“அதான் கூடவே சுத்துறாளே அந்த சந்தியா அவளை கட்டிக்க அபி இடைஞ்சலா இருக்கக் கூடாதே… அதான் அவ வயித்துல இருந்த கருவை அழிச்சிட்டு அபியை கழட்டி விட்டு அவளை சேர்த்துக்க தான் இத்தனையும் பண்ணிருக்காரு உன் அருமை மச்சான்…” என்று தன் மகன் அபியிடம் கூறிய காரணத்தையே கூற அருகில் இருந்த பூச்சாடியை போட்டு உடைத்திருந்தான் அபிநந்தன்.

“இதோ பாருங்க இப்போவும் லாஷாக்காக மட்டும் தான் பொறுத்து போறேன். என்னை தவறா பேசினாக் கூட கவலை இல்லை நீங்க இப்படி தான்னு போய்டுவேன். சந்தியா பத்தி யாராவது தப்பா ஒரு வார்த்தை பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” இதுவரை சாந்தத்தின் மொத்த உருவமாக இருந்த அபிநந்தன் ரௌத்திர மூர்த்தியாக கத்தி இருக்க மொத்த பேரும் மிரண்டு தான் போயினர்.

பின்னர் அறைப் பக்கம் திரும்பி கதவை தட்டியவன் “லாஷா… உனக்கு என்கிட்ட கேட்கவும் எனக்கு உன்கிட்ட சொல்லவும் நிறைய இருக்கு. ஆனா அதை விட அதிகமா இப்போ உன் மனசுல என் மேல சந்தேகம் இருக்கு. மனசை அமைதிப் படுத்தி பொறுமையா யோசிச்சு என் மேல உள்ள நம்பிக்கை திரும்ப உனக்கு வந்த அப்பறம் நீயே என்னை தேடி வா…” சத்தமாக உள்ளே இருக்கும் அவளுக்கு கேட்கும் படி கத்தி பேசிய அபிநந்தன்

“கண்டிப்பா நீ வருவ லாஷா.. நான் காத்திட்டு இருப்பேன்.” என்று சொல்லி விட்டு யாரையும் நிமிர்ந்து பாராமல் கிளம்பி சென்று விட்டான் அங்கிருந்து…

ஆனால் அபிநந்தனை தேடி வந்ததோ அபிலாஷாவின் விவாகரத்து பத்திரம்… இதுவரை அவள் அருகில் இல்லாத நேரத்தில் விழலாமா வேண்டாமா என்று இமைகளில் பெருகி நின்ற இரு துளி நீர் கண்கள் தாண்டி கன்னம் வந்தடைந்தது அவனின் அனுமதி இன்றியே…

தொடரும்…


Leave a comment


Comments


Related Post