இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...44 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 03-06-2024

Total Views: 16995

விடிந்தும் விடியாத அதிகாலையில் அந்த பிரம்மாண்ட கிராமத்து வீட்டிற்குள் நுழைந்திருந்தான் தரணி. வாசலில் வளைத்து வளைத்து பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்த செண்பகம் காரின் ஹாரன் சத்தத்தில் நிமிர்ந்தவர் தரணியை பார்த்து முகம் மலரச் சிரித்தபடி காம்பவுண்டின் மற்றொரு கேட்டை திறந்துவிட தரணியின் கார் உள்ளே நுழைந்து நின்றது.


“வா சாமி… வேலை நெறைய இருக்கிறதுனால நீ வர மாட்டேன்டு முகிலு சொன்னியான்‌... ரிதுக்குட்டி பொறந்தநாளுக்கு நீ மட்டும் இல்லையேன்டு எல்லாருக்குமே வெசனமாத்தேன் இருந்துச்சு‌.. எப்படியோ வந்துட்டியே… சந்தோசம்… உள்ளார வா சாமி…” மகிழ்ச்சி முகமாக அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.


வீட்டினர் ஒவ்வொருவரும் அப்பொழுதுதான் ஒருவர் பின் ஒருவராக எழுந்து கொண்டிருந்தனர். காலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதன் பின்பு குலதெய்வம் கோவிலுக்குசா சென்று பொங்கல் வைத்து அங்கேயே கிடா வெட்டி நெருக்கமான உறவினர்களுக்கு மட்டும் விருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணிக்கவேலுவும் மல்லிகாவும் முதல் நாள் மாலையே அங்கு வந்திருந்தனர். ஒவ்வொருவராக வந்து அவனிடம் பேசத் தொடங்க பாட்டியின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.



“ரவைக்கெல்லாம் தூங்காம விடிய விடிய வண்டி ஓட்டிட்டு வந்திருப்ப… ஒடம்பெல்லாம் வலிக்கும் ராசா… செத்தவடம் படுத்து எந்திரி… ஒம்போது மணிக்கு மேலதேன் கோயிலுக்கு போகப் போறோம்… பூச்செண்டு ஒங்க அறையிலதேன் இருக்கா… இன்னும் எந்திரிக்கல… நீ போ…” அக்கறையான பாட்டியின் பேச்சில் மெல்லிய புன்னகையுடன் எழுந்தவன் தோளில் மாட்டிய பையுடன் மாடி ஏறினான்.


எதிரே முகிலனும் மீராவும் இறங்கி வந்தனர்… மீராவின் கையில் ரிதன்.  “மாமா மா..மா…” என்றபடி தரணியை பார்த்தவுடன் தாவிப் பாய்ந்த பொடியனை ஆசையாய் அள்ளிக் கொண்டவன் அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். முகிலனும் மீராவும் இன்னும் ஆச்சரியத்துடன்தான் நின்றிருந்தனர். முதல் நாள் மாலைகூட தன்னால் வர முடியாது என்று கூறி இருந்தானே.


“எதுக்கு ரெண்டு பேரும் அப்படி பாக்கறீங்க…?” ரிதனின் விரல் பிடித்து விளையாடியபடியே கேட்க “உனக்கு ஒரு தேவைன்னவுடனே வந்துட்ட இல்லையா… அப்ப நாங்க எல்லாம் இரண்டாம் பட்சம் தான்…” முகிலன் கோபமாய் கேட்க விளக்கமா உன்கிட்ட இப்போ எதுவும் சொல்ல முடியாது… அதுக்கான சமயமும் இது இல்ல… ஐ நீட் சம் ரெஸ்ட்… எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்…” அமைதியான குரலில் சொன்னவன் மேலே ஏறினான்.


“அண்ணா… ரிதனை என்கிட்ட குடுங்க… உங்களை பார்த்துட்டான்ல… இனி குதியாட்டமாதான் இருக்கும்… தூங்க விடமாட்டான்… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…” என்றபடியே அவனிடமிருந்து குழந்தையை கையில் வாங்கிக் கொண்டாள் மீரா. தரணியை முறைத்தபடி முகிலன் கீழே இறங்க மீராவுமீ பின் தொடர்ந்து இறங்கிச் சென்றாள்.


மேலேறி வந்தவன் வழக்கமான தங்களது அறை வாயிலில் நின்று உள்ளே எட்டிப் பார்க்க மெத்தையில் ஒருக்களித்துப் படுத்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பூச்செண்டு. அவளையே சில நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தபடியே நின்றவன் பின் பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டான். தோளில் மாட்டி இருந்த பையை தூக்கி மேஜையில் போட்டு அப்படியே மல்லாந்த நிலையில் படுக்கையில் சாய்ந்தான். இரவு முழுக்க உறக்கம் இல்லாத கண்களும் உடலும் சோர்ந்துதான் போயிருந்தன. ஆனால் உறக்கம்தான் பிடிக்கவில்லை. 


மனம் முழுக்க பல்வேறு விதமான உணர்வுகள்… வலியுடன் மெல்ல புன்னகைத்தான்… வலது கண்ணின் ஓரம் கீற்றாக ஒருதுளிக் கண்ணீர்…கண்களை சிமிட்டி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவன் வலுக்கட்டாயமாய் கண்களை இறுக மூடினான்… நெடுநேரம் கண்களுக்குள் கருமணிகள் உருண்டு கொண்டே இருந்தன… ஒரு கட்டத்தில் உறங்கிப் போனான்.


மல்லிகாவும் செண்பகமும் இணைந்து காலை உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கி இருந்தனர் மணிவாசகமும் மாணிக்கவேலுவும்  வண்ண வண்ணமான பலூன்களை ஊதிக்கொடுத்துக் கொண்டிருக்க முகிலனும் மீராவும் கொத்தாய் முடிச்சிட்டு ஆங்காங்கே கட்டிக் கொண்டிருந்தனர். ரிதன் வாக்கரில் அமர்ந்து அந்த பரந்து விரிந்த கூடம் முழுக்க வலம் வந்து கொண்டிருந்தான்.


“ஏத்தா மல்லி… பூச்செண்டை எழுப்பி விடலையா…?” கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை சரி பார்த்தபடியே கேட்டார் பாட்டி.


“மருமகே இப்பத்தேன் வந்திருக்காரு… ரெண்டு பேரும் எதுனா பேசிக்கிட்டு இருப்பாக… அவுகளே வரட்டும்… எல்லாத்தையும் ஆக்கி எடுத்து வச்சுட்டுகூட கூப்பிட்டுக்கிடலாம்…” சமையல் அறையில் இருந்து வந்தது மல்லிகாவின் பதில்.


படுக்கையில் இருந்து சோர்வாய் எழுந்து அமர்ந்தாள் பூச்செண்டு. சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தவள் சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்து பின் எழுந்து குளியலறை சென்று தனது வேலைகளை முடித்து வெளியே வந்தவள் கப்போர்டை திறந்து மயில் கழுத்து நிற எம்ராய்டரி வேலை செய்யப்பட்ட டிசைனர் புடவையை கையில் எடுத்தாள். அவளது பிறந்த நாளுக்கு அவளது கணவன் ஆசையாய் வாங்கி கொடுத்த புடவை அது. மெல்லிய புன்னகையுடன் விரல் கொண்டு நீவியவள் அதனை உடுத்திக் கொண்டு தன்னை தயார்படுத்தி கீழே இறங்கி வந்தாள். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்திருந்தன. பெரிய ரெட் வெல்வெட் கேக் மத்தியில் உள்ள பெரிய மேஜையில் வைக்கப்பட்டிருந்தது… உணவு பதார்த்தங்களும் மேஜையில் அடுக்கப்பட்டு இருந்தன… குட்டி ஷெர்வானி சூட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்தான் ரிதன்.


“வந்துட்டியா அம்மு… தரணி கிளம்பிட்டானா…?” என்றபடியே அவளை நெருங்கி வந்தான் முகிலன்.


“ஹான்…” புரியாமல் விழித்தாள் பூச்செண்டு.


“என்னடி முழிக்கிற…? உங்களுக்காகத்தான் வெயிட்டிங்… அவனும் வந்துட்டா கேக் கட் பண்ணி டிபன் சாப்பிட்டு கோவிலுக்கு கிளம்பிடலாம்…”


“என்ன மாமா உளர்ற… ஏதாவது கனவு கண்டியா…?” கேக்கின் அருகில் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து ஸ்டாண்டில் பொருத்தியபடியே கேட்டவளை கண்கள் குவித்துப் பார்த்தவன் “ஏய்… நீதான் இன்னும் கனவில இருந்து வெளியில வரல போல… உன் புருஷன் காலையிலேயே வந்தாச்சுடி… பக்கத்துல படுத்து இருக்கறவனைக் கூட திரும்பிப் பார்க்காம அப்படியே கிளம்பி வந்துட்டியா…” சிரித்தபடியே கேட்டவனை விசுக்கென திரும்பிப் பார்த்தாள் பூச்செண்டு.


“அக்கா… முனி என்ன உளறுது…?” மீராவிடம் திரும்பி கேட்க “நிஜமாவே நீ பாக்கலையா பூச்செண்டு… அண்ணன் காலையிலேயே வந்தாச்சு… அங்கே பாரு…” என்றபடி வாசலில் நின்றிருந்த அவனது காரை காட்ட “நா..நான் பா..பாக்கலக்கா எ..என் ரூம்ல இ..இல்லையே…” அவள் திணறலாய் கூற “நீ நல்லா தூங்கிட்டு இருந்திருப்ப… உன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்டு பக்கத்து அறையில போய் படுத்து இருக்கும்…” செண்பகம் கூறி முடிக்கும் முன் வேகமாய் மாடிப்படியை நோக்கிப் பாய்ந்தவளை தடுத்துப் பிடித்தான் முகிலன்‌.


“எங்கே ஓடுற…? இங்கேயே இரு… நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்றபடி மேலே சென்றான்.


இதயத்திற்குள் ஏதேதோ அதிர்வுடன் நிலைகொள்ளாமல் இங்கும் அங்கும் நடந்தபடி மாடியையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. சில நிமிடங்களில் முகிலனும் தரணியும் கீழே இறங்கி வந்தனர்… அவளது கண்கள் தன் கணவன் மீது பசைபோட்டு ஒட்டிக்கொள்ள அவனை உணர்வுகள் பொங்க பார்த்துக்கொண்டிருந்தாள். அவனோ மறந்தும் அவள்புறம் திரும்பவில்லை… மற்றவர்களிடம் சிரித்தான்… பேசினான். ரிதனை தூக்கிக் கொஞ்சி விளையாடினான்… ஆனால் தவிப்புடன் தன்னையே பார்வையால் துளைத்துக் கொண்டிருந்த தன்னவளை திரும்பியும் பார்க்கவில்லை.


மற்றவர்கள் அனைவரும் குழந்தையை சூழ்ந்து நின்று கேக் வெட்டும் தீவிரத்திலும் அதற்குண்டான மகிழ்ச்சியான மனநிலையிலும் இருந்ததால் இவர்கள் இருவரையும் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. கேக் வெட்டி முடித்து குழந்தையை கையில் தூக்கிக் கொண்ட தரணி ஒவ்வொரு துண்டினையும் அவன் கையில் கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஊட்டச் சொல்ல அதன்படியே ஊட்டிக் கொண்டிருந்தான் ரிதன். அடுத்து நெருங்கி வந்த பூச்செண்டிற்கு கேக்கை ஊட்டும்போது ஏதோ பேசுவது போல் முகிலனிடம் திரும்பிக் கொண்டான்.


தன் கணவனின் பாராமுகத்தில் அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. கண்களில் தளுக்கென கண்ணீர் முட்டி நிற்க மெல்ல பின்னே நகர்ந்து சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்‌ தவறுமேல் தவறாக இழைத்துக் கொண்டே இருப்பதின் பலன்தான் இது என்று தெரியும்… அவன் மேல் கோபப்பட முடியவில்லை… தன்மீதுதான் வெறுப்பும் கோபமும்… தான் பேசிய அனைத்தையும் விசித்திரா கூறி இருப்பாள் என்று தெரியும்… நாட்கணக்காய் அவனும் அவளுக்கு அழைப்பதே இல்லையே… இருவருக்கும் இடையே எத்தனை பூசல்கள் வந்தாலும் யாரிடமும் அவன் காட்டிக் கொண்டதே இல்லை… அவளை விட்டுக் கொடுத்ததும் இல்லை… தன்னை சேர்ந்தவர்களிடம் இருந்தும்கூட தன்னை காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறான்.


இரண்டாவது முறையாகவும் பெரிய பிழை செய்தாயிற்று… கோபம் தலைக்கு மேல் இருக்கத்தான் செய்யும்… ஆனால் இம்முறை முழுக்க முழுக்க அவர் நலனை மனதில் கொண்டு மட்டுமே செய்தேன் என்று புரிந்து போயிருக்கும்… இனி என் மேல் அவரால் கோபம் கொள்ளவே முடியாது… அதனால்தானே ஓடி வந்திருக்கிறார்… கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்… தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவள் மற்றவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதுகூட அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை தரணி. கோவிலுக்கு கிளம்ப தயாராகினர் அனைவரும்.


“நம்ம ரெண்டு பேரோட காரும் போதும்தானடா… நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ்தானே…” கேட்டான் முகிலன்.


“எலேய்… பூச்செண்டையுமா வண்டியில கூட்டிட்டு போறது…” என்றபடி நெருங்கி வந்தார் பாட்டி.


“நீ வேணா தூக்கி தோள்ல வச்சுக்கிட்டு நடந்து வர்றியா…? வேற எதுல கூட்டிட்டு போறதாம்‌..? கெழவிக்கு குசும்பு…” என்றபடி சிரித்தான் முகிலன்.


“அட கிருசகெட்ட பயலே… கோயிலுக்கு போற பாதை பூரா குண்டும் குழியுமா கெடக்கும்… வண்டி தூக்கிப் போடாதா… அவளை எப்படி கூட்டிட்டு போறது…?”


“அதெல்லாம் அவ புருஷன் நேக்கா வண்டி ஓட்டுவான்… அழுங்காம அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வருவான்... நீ என் கார்ல ஏறு… உன் இடுப்புல விலகி இருக்கிற எலும்பை எல்லாம் கோர்த்து சரி பண்ணி விடுறேன்…” பாட்டியும் பேரனும் மாறி மாறி வம்பளந்து கொண்டிருக்க பூச்செண்டின் கண்கள் தன் கணவனிடம்தான் சென்று நின்றன. அவனோ இறுகிய முகத்துடன் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான்.


“எய்யா… தரணி…” பாட்டியின் கனிவான குரலில் கலைந்து அவரிடம் திரும்பினான்.


“உன் பொறுமைக்கும் நிதானத்துக்கும் அந்த சாமி கண்ணு தொறந்துடுச்சு பாத்தியா… உன் பொண்டாட்டி ஒடம்ப தேத்தி அனுப்பணும்டுதேன் கூட்டியாந்தோம்… ஆனா கருவையும் கூட்டி புள்ளத்தாச்சியா நிப்பாண்டு நாங்களே எதிர்பார்க்கல சாமி… உன் அப்பா அம்மாகிட்டயும் மருமகே கூப்பிட்டு பேசிட்டாரு… அவுகளும் அநேகமா கெளம்பி வந்துட்டு இருப்பாக… முகிலு பையன் பொறந்தநாளும் உன் வாரிசு உருவானது தெரிஞ்ச நாளும் ஒன்னாவே போயிடுச்சு… மனசுக்கு அம்புட்டு சந்தோசம் எங்களுக்கு… நான் நம்பிக்கையை விடவே இல்லையே…” பாட்டி சிலாகித்து பேசிக்கொண்டிருக்க தனக்கு எதிரில் நின்று தன்னையே பார்த்தபடி இருந்த தன் மனைவியை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான் தரணி.


பாட்டி இறுதியாக கூறிய நம்பிக்கை என்ற அந்த வார்த்தையை உள்ளிருத்தி உனக்குத்தானே இல்லாமலே போனது என்று பார்வையால் அவன் கேட்டதை அவளால் புரிந்து கொள்ளாமல் போக முடியுமா…? அழுத்தமான பார்வைதான்… ஆனால் அதில் காதலோ மகிழ்ச்சியில் தோன்றும் கனிவோ சிறிதும் இல்லை. வலி, விரக்தி, ஏமாற்றம் மட்டுமே அந்த கண்களில் தொக்கி நின்றன… அவன் விழி சொன்ன செய்தியில் துடித்துப் போனவளாய் அவனை பார்க்க முடியாமல் கண்களை தாழ்த்திக் கொண்டாள் பூச்செண்டு.


முதல் நாள் வழக்கம்போல் மதியம் உறங்கி எழுந்தவளுக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வர அடிக்கடி படுத்தே கிடப்பதால் இதுபோல் தலைசுற்றல் ஏற்படுவதாக எண்ணிக்கொண்டாள். சமீப நாட்களாக தலைசுற்றல் சோர்வு சில உணவுகளின் மேல் ஒவ்வாமை என்று முற்றிலும் அவளது உடல் நிலையில் நிறைய மாற்றத்தை உணர்ந்தாள் பூச்செண்டு. வீரியமிக்க மருந்து மாத்திரைகளை விடாது உட்கொண்டு வருவதால்தான் தன் உடல்நிலை மாற்றம் அடைந்துள்ளது என்று எண்ணிக் கொண்டாள்.


ஆனால் முந்தைய நாள் சோர்ந்து மாடியில் இருந்து இறங்கி வந்தவள் கொடகொடவென வாந்தி எடுத்து அங்கேயே மயங்கியும் விழுந்தாள். முகிலனும் அங்கு இருந்ததால் அடித்துப் பிடித்து அவளை தூக்கிக்கொண்டு மதுரைக்கு விரைந்தனர். பரிசோதித்த மருத்துவர் அவள் கருவுற்றிருக்கும் இன்பமான செய்தியைக் கூற முகிலன் உட்பட அனைவரது கண்களிலும் மகிழ்ச்சியில் கண்ணீர். மருத்துவமனை செல்லும்போது ஞாபகமாக பழைய ரிப்போர்ட்டையும் மீரா எடுத்துச் சென்றிருந்ததால் அனைத்தையும் ஆராய்ந்த மருத்துவர் கரு தெளிவாய் தங்கி இருப்பதாகவும் கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் கூறி முழுதாக இரண்டு மாதங்கள் நிறைவடைந்து மூன்றாம் மாதமும் தொடங்கிவிட்ட விபரமும் கூறி தேவையான ஆலோசனைகள் மற்றும் மருந்துகளுடன் அனுப்பி வைத்தார். தேவையற்ற மனச்சுமையினால் வேண்டாதவற்றை எல்லாம் ஆராய்ந்தவள் இரண்டு மாதங்களாக தான் வீட்டுக்கு விலக்காகாமல் இருப்பதை கவனித்திருக்கவில்லை.


மருத்துவமனையில் விபரம் கேள்விப்பட்ட உடனே தரணிக்கு அழைத்திருந்தார் மாணிக்கவேல்… தான் தந்தையான செய்தியை காதில் கேட்டவனுக்கு உடல் முழுக்க சிலிர்ப்பு… சொல்லில் விளக்க முடியாத ஏதேதோ உணர்வுகள்… சிறிது நேரம் கண்மூடி அந்த இன்பத்தை அனுபவித்தவன் ஊருக்குச் செல்லும் முதல்நாள் தனக்கும் தன்னவளுக்கும் இடையே நடந்த கூடலை எண்ணிப் பார்த்தான்… தான் விதை போட்ட நாள் எது என்று புரிந்து போனது..

 தன்னிச்சையாக இதழ்கள் விரிந்தன… சில கணங்கள்தான் அந்த மகிழ்ச்சி. அடுத்த நொடி பூச்செண்டு எடுத்திருந்த தீர்மானங்கள் மனம் முழுக்க விரவின… மொத்தமாக இதயம் முழுக்க ஏமாற்றம் அப்பிக்கொண்டது.


இது நான் அவள் எங்கள் குழந்தை மூவரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இது முடிவு எடுக்க வேண்டிய நேரம்… கண் மூடி யோசித்தான்… ஒரு முடிவிற்கு வந்தான்… விசித்ராவிற்கு அழைத்து விபரங்கள் கூறினான்… அவள் தடுத்தும் தெளிவாக நின்றான்… ஊருக்கு வந்தபின் தனக்குள் தோன்றிக் கொண்டிருக்கும் உணர்வுகளை யாரிடமும் காட்டாமல் அனைவருடனும் இணைந்து கோவிலுக்கு சென்று வந்தான். நெருங்கி வந்த பூச்செண்டிடம் ஒற்றையாய் ஒரே பார்வை… தீர்க்கமான பார்வை… அவனிடம் இருந்து அவளை விலகி நிற்க வைத்த பார்வை… இதோ மாலை வேளையும் நெருங்கி வந்தது. எதையோ எதிர்பார்த்து வாசலை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்… அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.


பூச்செண்டின் தலையில் போடப் போகும் அணுகுண்டு பார்சலில் வந்து வீட்டு வாசலில் நின்றது.




Leave a comment


Comments


Related Post