இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 03-06-2024

Total Views: 9451

அத்தியாயம் 19

இந்திரனை எவராலும் நெருங்க முடியவே இல்லை. நெருங்கும் அத்தனை பேரையும் எண்ணையில்லாது கொப்பரையில்லாது வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

வருணன், அக்கினி, வாயு, ஏனையோர் எல்லாம் இந்திரனின் மாற்றத்தில் நடுங்கி தள்ளியே நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளயே கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

"என்னாயிற்று தமையனுக்கு?"

"அதுதான் தெரியவில்லை"

"அவர் வாய்திறந்து சொன்னால்தானே நம்மால் விளங்கிக் கொள்ள இயலும். அவர்தான் எதுவும் பேச மாட்டேன் என்கிறாரே அக்கினி"

"வாருங்கள் நாமே சென்று மீண்டும் கேட்போம்"

"கோபம் கொள்கிறாரே"

"அதற்காக அப்படியே விட முடியாது அல்லவா. அவர் எவ்வளவு சினம் கொண்டாலும் பரவாயில்லை. நாம் சென்று கேட்டுவிடலாம்" முயன்று தைரியத்தினை வரவழைத்துக் கொண்டு இந்திரன் இருக்கும் இடத்திற்கு மூன்று பேரும் சென்றார்கள்.

அங்கே,

"நான் தோற்றுவிட்டேன். அந்த இயமன் முன் தோற்றுப் போய்விட்டேன். அவன் இந்நேரம் அதீத ஆணவத்தில் இருப்பான். இந்த தோல்வி எவ்வளவு பெரிய வலி எனக்கு. தேவர்களின் தலைவன் நான். ஆனாலும் அந்த மரணதேவன் என்னை மண்டியிடச் செய்துவிட்டானே.. காதல் ப்ச் அந்த சொல்லையே நான் அவ்வளவு தூரம் வெறுக்கிறேன். அதுவும் அந்த அஞ்சனா.. அவளை பார்த்திருக்கவே கூடாது. அவளால் தான் இந்த இந்திரன் தலைகுனிந்து நின்றான். இந்த தலைகுனிவு தேகத்தினை சல்லடையிட்டது போல் அத்தனை வேதனையை அள்ளித் தருகிறது. இதிலிருந்து என்னை மீட்டெடுப்பது என்பதே இயலாத காரியமாக இருக்கின்றது. யார் முகத்திலும் விழிக்கப் பிடிக்கவே இல்லை. அன்று சித்திரகுப்தன்.. அடுத்து இயமன் தற்போது அஞ்சனா.. இவர்கள் முன்னிலையில் என் தரம் இறங்கிவிட்டதே. ஏன் அமிர்தம் உண்டேன் என்றாகிவிட்டது. இப்போது இந்த அவமானத்திலிருந்து நான் எவ்வாறு விடுபடப் போகின்றேன். இல்லை நான் சோர்ந்து போகக் கூடாது. நான் ஏன் இவ்வாறு நினைக்க வேண்டும். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தான் அழ வேண்டும். அவமானப்படுத்திவிட்டு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடுவார்களா.. நான் தான் வாழ விட்டுவிடுவேனா.. விடக் கூடாது.. அவர்களிருவரையும் பிரிப்பதுதான் எனது முதல் வேலை" இந்திரன் தனக்குள்ளயே பேசிக் கொண்டிந்தான்.

"தமையனே" அக்கினி விழித்த உடனே, "என்ன?" அக்கினியிடமே எரிந்து விழுந்தான் இந்திரன்.

 "எதற்காக இத்தனை சினம் தமையனே. காரணம் என்னவென்று எங்களிடம் தெரிவியுங்கள். காரணமானவர்களை நாங்கள் உருத்தெரியாமல் அழிந்துவிடுகிறோம்"

 "நான் தோற்றுப் போய்விட்டேன்"

"தமையனே தங்களுக்கு தோல்வியா.. என்ன இது. ஏன் இப்படி? தெளிவாக உரையுங்கள்"

 "இயமனால் நான் தோற்றுப் போய்விட்டேன். ஒரு பெண்ணிடம் நான் தோற்றுப் போய்விட்டேன்"

 "பெண்ணிடம் தோற்றுப் போனீர்களா. தமையனே என்ன நேர்ந்தது என்று விரிவாக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். தங்களை எங்களால் இவ்வாறு பார்க்க முடியவில்லை"

அவர்களின் பாசத்தில் உருகியவன் நேர்ந்த அவமானத்தினை எடுத்துரைத்தான்.

---------------------------

நிதானமாக தன் முன்னே நின்றிருந்த இயமனை அஞ்சனா பார்த்தாள். அவளது பார்வையில் எந்தவித உணர்வுகளும் இல்லை. 

"வெறுப்பாக இருக்கிறதா?" அதற்கு அவள் பதில் கூடச் சொல்லவில்லை. 

"அஞ்சனா இந்த வெறித்த பார்வையின் காரணம் தான் என்ன?"

"என்ன செய்யணும்னு நான் கனவுலயே பார்த்துட்டேன். நீ புதுசா எந்தவித விளக்கமும் தர வேண்டியது இல்லை. என்னை சமாதானப்படுத்துறது போல பேச வேண்டியதும் இல்லை. இப்போ நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அதுதானே உன்னோட ஆசை. அது நடந்துட்டா திரு சாரதியை நீ எதுவும் செய்ய மாட்ட இல்லையா?" அவள் பேசியதும் அந்தகனின் இதழில் மந்தகாச புன்னகை உதயமானது.

 "அஞ்சனா எனது வேலையை வெகு சுலபமாக்கிவிட்டாய்" என நெருங்க அவள் கரம் அவன் முன்னே நீண்டு அவனைத் தடுத்தது. ஏனோ அவளது கண்களில் தெரிந்த ஏதோவொன்றில் அவனால் முன்னேறவே முடியவில்லை. 

"அஞ்சனா!" மீண்டும் அதே பார்வை.. இயமன் குழம்பிப் போனான்.

 "நாளைக்கு திரு கல்யாணம் பண்ணுறதுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சு வச்சுட்டான். திருமணல்மேடு கோவில் போகும் போது கல்யாணம். அங்கேயே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சரிதானே"

தலையை அசைக்க "இன்னைக்கு போ நாளைக்கு அங்க வா" என்று அவள் சொல்ல அவளே திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்ட ஆனந்தத்தில் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

வெளியே வந்ததும் அவன் நேராக சென்றது இயமனிடத்தில்.

அவனோ வானில் உள்ள வெண்ணிலவினை இரசித்துக் கொண்டிருந்தான். இதழ்களோ அவனது ப்ரியத்திற்கு உரியவளின் பெயரை மட்டுமே உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தது.

 "இயமா" அவன் மோனநிலையை கலைத்தது இந்திரனின் குரல்.

 "என்ன இந்திரா முகம் மிகவும் பொலிவாக இருக்கிறது"

 "திருமணக்களை"

 "ஓஹோ"

 "எங்களுக்கு இடையேயான பந்தத்திற்குள் எவரும் நுழைய இயலாது. அவள் என்னவள் என்று வார்த்தைகளில் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தாயே இயமா. இப்போது நேர்ந்ததென்ன என்று அறிவாயா?"

 "அறிவேன் இந்திரா" சலனமே இல்லாது இயமன் பதில் அளித்தான்.


 "இப்போதாவது இந்திரனை பற்றி அறிந்துக் கொண்டாயா?"

 "அறிந்து கொண்டேன்"

 "இனி அஞ்சனா என்னவள் இயமா" அதைச் சொன்ன போது மட்டும் இயமன் அசையாமல் பார்த்து வைத்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை. பயந்துட்டான் என நினைத்த இந்திரன் அதீத சந்தோஷத்தோடு மறுநாளை எண்ணிக் காத்திருந்தான்.

திருமணல்மேடு, 

திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே ஈசன் மிருகண்டேஸ்வரர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார். அது இயமனுக்கும் நெருக்கமான ஸ்தலம் வேறு. 

முகம் முழுக்க பிரகாசத்துடன் திரு அங்கே இருக்க லட்சுமி முகத்தில் கவிழ்ந்த பயத்தோடு இருந்தாள். முதலில் அஞ்சனாவிற்கு எமபயம் போக வேண்டும் என்பதால் அதற்கே உரித்தான வழிபாடு நடைபெறட்டும் என்று லட்சுமி சொல்ல, "அது தேவையே இல்லை அத்தை. எனக்கு எமன் மேல எந்த பயமும் இல்லை" என புன்சிரிப்புடன் கூறினாள்.

அந்த சிரிப்பு அவளை அவ்வளவு அழகாக எடுத்துக் காட்டியது. இவளின் முகத்தினை பார்த்த லட்சுமிக்கு உண்மையிலே இவளுக்கு திருவை பிடிச்சுருக்கோ. அதான் இந்த கல்யாணத்துக்கு இவ்வளவு சந்தோஷத்தோட தயாராகி இருக்காளோ என்று அவளும் நடப்பதை மட்டும் வேடிக்கைப் பார்க்கத் தயாரானாள். அங்கேயே மார்க்கண்டேயருக்கு என தனி சன்னதி உள்ளது. அந்த இடத்தில் அவள் சென்று கைகூப்பி நின்றாள். 

மார்க்கண்டேயர் உயிர் அவனின் பதினாறு வயதில் பிரிய வேண்டுமென்பதே விதி. அதற்காக கடமையைச் செய்ய  இயமன் வந்தான். அங்கே மார்க்கண்டேயனோ ஈசனை கட்டித் தழுவி அடைக்கலமாகியிருக்க இயமன் வீசிய பாசக்கயிறு ஈசனின் மேனியையும் சேர்த்தே இறுக்கியது. சினந்தெழுந்த ஈசன் இயமனை எரித்துவிட்டு மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என்னும் வரத்தினை அளித்திருந்தார். அதன்பின்னர் பூமாதேவியின் பாரம் உணர்ந்து இயமனை உயிர்ப்பித்து எழுப்பினார். அதனாலேயே எமபயம் விலக இத்தலம் வருவது வழமையாக உள்ளது.

திரு கல்யாணத்திற்கான மாங்கல்யத்தினை அங்கிருந்த அந்தணரிடம் கொடுத்துவிட்டு பூசையினை ஆரம்பிக்கச் சொன்னான்.  அந்த வேளையில்தான் அந்தகனும் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் அவள் இமை மூடி அவனை வரவேற்றது போல் பார்வை பார்த்தாளே தவிர வேறு எந்தவித மாற்றமும் அவளிடத்தில் இல்லை. 

அவன் நேராக அவளருகே வந்து நின்றான். அவளுக்கு நெருக்கமாக வந்து நின்றவனைப் பார்த்து சிவகாமி, திரு, சாரதி மூவரும் அதிர்ச்சியாக லட்சுமியோ இவன்தான் அவனா என்ற ரீதியில் பார்த்துக் கெண்டிருந்தாள். 

சிவகாமியைப் பார்த்தவள் "இவன் பேர் அந்தகன் இவனைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்று சொல்ல அவளோ கிட்டே வந்து இவளைப் பிடித்து உலுக்கி "உனக்கென்ன பையித்தியம் பிடிச்சுருக்கா. யாருடி இவன்?" என்று கேட்க அவளோ "அய்யோ அம்மா மரியாதை இல்லாமல் அவன் இவன்னு பேசாதீங்க இவர்தான் எமன்" என்றிட அங்கிருந்தோர்களிடம் அதிர்ச்சியோடு கூடிய அமைதி.

 "எமனா?"

 "எமன் அப்படிங்கிற போர்வையில ஒளிஞ்சு வந்துருக்க இந்திரன்" அதுவரை முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனது. கண்களில் ஏறிய உஷ்ணத்தோடு அவனைப் பார்க்க  அந்தகனாய் வந்தவன் ஒரு நொடியில் ஆடிப் போய்விட்டான்.

 "அஞ்சனா என்ன உளறல் இது. யான் அந்தகன்"


 "எம்பெருமான் ஈசன் இங்கிருக்கிறார். அந்த மிருகண்டேஸ்வர் மேல சத்தியம் செஞ்சு சொல்லு நீ அந்தகன் தான்னு"

நொடியில் அவன் முகம் மாறியது. இந்திரனாய் அவள் முன் அழகு ததும்பும் வதனத்தோடு நின்றான். சாரதி திருவே அவனைப் பார்த்து மெய்மறந்து நின்றனர். ஆனால் அவள் அசூயையோடு ஒரு பார்வை பார்த்தாள் இந்திரன் ஆடிப் போய்விட்டான். அவள் தன் வழிக்கு வந்து விட்டாள் என்ற எண்ணத்தில் இறுமாந்திருந்தவன் அவளது முகம் போன போக்கினைக் கண்டு சிவந்த விழிகளோடு ஏறிட்டான்

 "அஞ்சனா! என்னை அறிந்துக் கொண்டாய் நல்லது. யான் உன் யௌவனத்தின் மீது கொண்ட நாட்டம் காரணமாகவே இயமனையும் மீறி உன்னை நெருங்கியிருக்கேன். உதாசீனம் செய்வதைப் போல் பார்த்து வைக்காதே விபரீதம் நேரிடும்"


 "அந்தகனை மீறி எந்த விபரீதமும் என்னை நேராது" அந்த வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை நிரம்பியிருந்தது.

 "அவன் பேரில் நீ அதீத வெறுப்பு கொண்டிருக்கின்றாய். அவன் மரணத்தின் தேவன். உன் தந்தையின் உயிரைப் பறித்த காலன்.  அவனே விபரீதமானவனாய் இருக்க அவனை மீறி விபரீதம் நேர என்ன இருக்கிறது"

 "அவனை நான் வெறுத்தது உண்மைதான். அது பக்குவப்படாதவளோட நிலை. மரணத்துக்கு காரணம் எமன் மட்டும்தான் அப்படின்னு முட்டாள்தனமா நினைச்சுட்டேன். ஆயுள் முடிஞ்சா அவங்கள எமன் கூட்டிட்டுப் போகணும் இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கும் போது அந்தகன் அவனோட வேலையைத்தானே பார்த்தான். அவனை என்னால எப்படி வெறுக்க முடியும்" தெளிவாக அவள் பேசப் பேச தனது அத்தனை திட்டங்களும் முறியடிக்கப்பட்ட ஆத்திரம் இந்திரனிடத்தில் வெளிப்பட ஆரம்பித்தது.

 "என்னை மீறி இயமனால் எதுவும் செய்ய இயலாது. இக்கணமே உன்னை இந்திரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். எவன் வருகிறான் என்று நானும் பார்க்கின்றேன்" அவளது கரத்தினைத் தொட, "இந்த தொடுகையால தான் நீ அந்தகன் இல்லைன்னே நான் கண்டுபிடிச்சேன். அதை வெளிக்காட்டிக்க வேண்டாம்னு நினைச்சேன். அதுவும் இல்லாமல் நீயும் அந்தகனும் பேசுனதை நான் கேட்டுட்டேன். அவன் எமன்னு சொன்னதும் கோபம் வந்தது. என்கிட்ட பொய்யா நடிச்சுட்டான்னு. ஆனால் அவனோட காதல்ல நான் எந்தவித கலப்படத்தையும் உணர்ந்ததே இல்லை. அவனோட கண்ணுல தெரியுற காதல்.. அட இந்திரா அப்போ அவன் கண்ணை பார்க்கணுமே நீயெல்லாம் அழகன்னு சொல்லிக்கவே மாட்ட. கம்முன்னு ஓடியே போயிடுவ" இந்திரனை வார்த்தைக்கு வார்த்தை வாரினாள் அவள்.


 "நான் நினைத்தால் உன்னை.."

 "ப்ச்.. இது திருமணல்மேடு இந்திரா. இங்கு உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது. நீ போலாம்"

திருமணல் மேடு. இது ஈசனின் திருத்தலம். இங்கே வைத்து எந்தவித திருகுதாளமும் செய்ய முடியாது. தெரிந்தேதான் வரவழைத்து இதைச் செய்திருக்கின்றாள். இயமன் குறுக்கீடு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்தப்பக்கம் அவளிடம் அனைத்தையும் சொல்லியிருக்கின்றான். அனைத்திற்கும் காரணம் இயமன் என்பதை அறிந்தவனின் முகம் அவமானத்தில் சுருங்கியது.

 "என்னைப் பற்றி நீ அறிந்தது என்னவென்று எமக்குத் தெரியாது. தெரிய வரும் அன்று நீ சந்திக்கும் விளைவுகள் எல்லாம் விபரீதமாக உன்னைக் கண்டு சிரிக்கும்" சினத்தில் சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

-------------------
நடந்ததை அறிந்த தேவர்கள் இந்திரனை பரிதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள். இந்திரன் அவர்களை பார்க்கும் முன்பே நொடியில் அதனை மாற்றியவர்கள் "தங்களுக்கு ஒன்றென்றால் அது இந்த தேவலோகத்துக்கும் சேர்த்துதான் தமையனே. விசனம் கொள்ள வேண்டாம். இமயனை நாம் பழி தீர்க்கலாம்" என்றார்கள்.

 "எப்படி?"

 "எவ்வளவோ வழிகள் இருக்கின்றது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" அக்கினி உறுதியாய் சொன்னான்.

 "அக்கினி இயமனை விட எனக்கிப்போது அவள் மீதுதான் அதீத வெறி இருக்கின்றது"

 "விடுங்கள் தமையனே. அவளை இங்கு கவர்ந்து வந்து தங்களுக்கு சேவகம் செய்ய வைக்கிறேன்"

 "இடையூறு செய்வதற்காகவே இயமன் இருக்கின்றான் அக்கினி" வாயு குறுக்கே புகுந்து பேச, "இயமனை என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்றான்.

 "ஆனால் காதலுக்கென்று சக்தி உள்ளது அக்கினி. அதன் முன் சர்வ சக்தி படைத்த இறைவனும் மண்டியிடத்தான் வேண்டும். அவர்களின் காதல் அத்தகையது" வருணன் இப்படிப் பேசியதும் இந்திரன் "அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்று நானுரைத்தும் என் முன்னயே நீ அந்த காதலின் சக்தியை எடுத்துரைக்கிறாய்.. எவனும் எனக்கென்று எதுவும் செய்ய வேண்டாம். இயமனையும் அவளையும் என்ன செய்வது என்று நான் பார்த்துக் கொள்கின்றேன்" சினந்து பேசினான்.


 "கோபித்துக் கொள்ள வேண்டாம் தமையனே நான் நிதர்சனத்தினை உரைத்தேன். மற்றபடி நான் தங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் அதில் சந்தேகம் வேண்டாம்" என்றிட, அங்கே அரங்கேறியது அஞ்சனா அந்தகனுக்கான சதிவேலை.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post