இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...45 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 04-06-2024

Total Views: 18884

“யாருப்பா நீ…? என்ன வேணும்…?” வீட்டின் முன்னே உள்ள வராண்டாவில் அமர்ந்து பச்சை மொச்சையை தோல் உரித்து மொச்சை விதைகளை அருகில் இருந்த பாத்திரத்தில் போட்டபடி அமர்ந்திருந்த பாட்டி வாசலில் வந்து நின்ற இளைஞனிடம் கேட்க கையில் கத்தையாய் சில கவருடன் நின்றிருந்தான் அவன். 


“இங்கே பூச்செண்டு இருக்காங்களா…?”


“என் பேத்திதேன்..” என்றபடியே கேள்வியை அவனைப் பார்த்தார்.


“அவங்களுக்கு கூரியர் வந்திருக்கு… வரச் சொல்லுங்க…”


“தபாலா…?”


“ஆமாங்க…”


“ஓஓ‌…” என்றவர் தலையை வீட்டிற்குள் நீட்டியபடி “பூச்செண்டு… உனக்கு தபால் வந்திருக்கு… வந்து என்னன்டு பாரு…” என்று சத்தமாய் குரல் கொடுக்க சமையலறையில் இருந்தவள் வேகமாய் வெளியேறி வாசலை நோக்கி நடந்தாள்.


அனைத்தையும் கூடத்து சோபாவில் அமர்ந்து ரிதனுடன் விளையாடியபடியே கவனித்துக் கொண்டிருந்தான் தரணி. கையெழுத்திட்டு அந்த நீண்ட வெள்ளை கவரை வாங்கியவள் அனுப்புனர் முகவரியில் விசித்ராவின் பெயர் இருப்பதை கண்டு கண்கள் குவித்து குழப்பத்துடன் பார்த்து பின் கண்கள் நிமிர்த்தி தரணியை பார்க்க அவனோ அங்கு ஒருத்தி நிற்கிறாள் என்பதையே கண்டுகொள்ளாதவனாக ரிதனிடம் தீவிரமாக ஏதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தான்.


“யாருகிட்ட இருந்துடி தபாலு…?” மொச்சை விதைகளை போட்டிருந்த பாத்திரத்தை கையில் எடுத்து அவளை கடந்தபடியே கேட்டார் பாட்டி.


“எ..என்னோட பி..பிரண்டு பாட்டி சி..சில டீடெயில்ஸ் கேட்டிருந்தேன்… அனுப்பி இருக்காங்க போல…” பாட்டிக்கு என்ன புரிந்ததோ தலையை ஆட்டி சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.


கவரை வேகமாய் பிரித்தபடி தரணியை கடந்து மாடிப்படியின் அருகில் சென்று நின்றவளை ஓர விழிப் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி. உள்ளே கத்தையாய் இருந்த சில காகிதங்களை கையில் எடுத்து கண்களை ஓட்டி பார்த்தவள் திக்கென்ற அதிர்வுடன் கண்கள் நிலைகுத்தி நிற்க தன்னிச்சையாய் நெஞ்சில் கை வைத்திருந்தாள். கையில் இருந்த காகிதங்கள் அவள் காலடியில் சிதறி விழுந்தன… கைகள் நடுங்க உதடு துடிக்க சட்டென கண்களில் கோர்த்த நீருடன் தலை திருப்பி தரணியை அடிபட்ட பார்வை பார்க்க அவனும் அவளைத்தான் அழுத்தமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.


இறுக்கமான அவனது முகத்தில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை. உடைப்படுத்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் வேகமாய் குனிந்து சிதறிக் கிடந்த காகிதங்களை கையில் எடுத்து அங்கிருந்த பெரிய மர பீரோவின் பக்கவாட்டில் சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தாள். கூடத்தில் இருந்து பார்க்கும்போது அவள் அங்கு ஒடுங்கி அமர்ந்திருப்பது மற்றவர்களுக்கு தெரியாது. குத்துக் காலிட்டு சாய்ந்து அமர்ந்து கொண்டவளை இங்கிருந்தே கண்டு கொண்டவன் ஒரு பக்கமாய் இதழ் வளைத்து சிரித்துக்கொண்டு ரிதனுடனான தனது விளையாட்டை தொடர்ந்திருந்தான்.


முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை அழுந்த துடைத்தபடி அந்த காகிதங்களில் மீண்டும் கண் பதித்தாள் பூச்செண்டு. அதில் ஒன்று விவாகரத்து நோட்டீஸ்… அடுத்ததாக விசித்ரா கைப்பட எழுதிய கடிதம்… மீண்டும் முட்டி நின்ற கண்ணீரை துடைத்தபடி அந்த எழுத்துக்களில் கண் பதித்தாள்.


‘அன்பு தங்கைக்கு… அன்று நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பிடிவாதமாக சில விஷயங்களை செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தினாய்… நானும் நிறைய யோசித்தேன்… உன் பார்வையில் நீ செய்வது சரிதான்.. காலம் முழுக்க நிம்மதியற்ற ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு யாராவது ஒருவர் தியாகம் செய்வது தவறில்லை. புரிதல் இல்லாத வாழ்க்கைக்கு பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்… எனக்கு தெரிந்த வக்கீலிடம் பேசி விட்டேன். மனைவியே மனம் உவந்து கொடுக்கும் மியூச்சுவல் டைவர்ஸ் என்பதால் குழப்பமின்றி விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். இத்துடன் படிவத்தை இணைத்துள்ளேன்… கையெழுத்திட்டு அனுப்பி வை. தரணியிடம் கையெழுத்து பெரும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்…’ 


‘அத்தோடு அவனுக்கு இன்னொரு பொருத்தமான பெண்ணை தேர்வு செய்யும் பணியையும் எனக்கு கொடுத்திருந்தாய். என் நண்பனுக்கு அனைத்து வகையிலும் பொருத்தமான ஒரு பெண்ணை சல்லடை போட்டு சலித்து எடுத்துவிட்டேன். அவளது போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்… பார்த்துக்கொள்… அவளிடம் அனைத்து விபரங்களும் கூறிவிட்டேன். அவளும் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டாள். உங்களுக்கு விவாகரத்து ஆனவுடன் அவர்களுக்கு திருமணம் நடக்கும். அதுவும் எனது பொறுப்பு… அவனிடம் எல்லாம் பேசி விட்டேன்… அவனும் சம்மதித்து விட்டான். இனி நீ குழப்பம் இல்லாமல் நிம்மதியாக இரு… மற்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்… படிவத்தில் கையெழுத்திட்டு இன்றே அனுப்பிவை… தாமதிக்க வேண்டாம்…’


என்றும் உன் நலனில் அக்கறை கொண்ட உன் சகோதரி

விசித்ரா


கடிதம் முடிந்து போய் இருக்க அந்த காகிதத்தை முகத்தில் அழுத்தியபடி சத்தம் வராமல் கதறி அழுதாள் பூச்செண்டு. அந்த காகிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு நான்குக்கு ஆறு சைஸ் புகைப்படம் அவள் மடியில் விழுந்தது. புடவை கட்டி கூந்தலை தோளின் ஒரு பக்கமாக வழிய விட்டு கன்னத்தில் கை வைத்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். பார்க்க மிகவும் லட்சணமாக இருந்தாள். புகைப்படத்தின் கீழே வைஷாலி என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. இவள் சொன்ன வேலையை விசித்ரா சிறப்பாய் செய்து முடித்து அனுப்பி இருந்தாள். ஆனால் இன்றைக்கு இவளது மனநிலை…?


அவசரத்தனமாக இவள் எடுக்கும் காரியங்கள் ஒவ்வொன்றும் வினையாய் தானே மாறி நிற்கின்றன… அந்த புகைப்படத்தை பார்த்தவள் இன்னும் கூடுதலாய் அழுதாள்… தன் மாமுவை இன்னொருத்திக்கு தாரை வார்ப்பதா…? அவரும் சம்மதித்து விட்டாராமே… தன்னவனை வேறு ஒருத்தியின் கணவனாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.


‘ஆனா நீதானே முடிவு எடுத்து விசித்ரா கிட்ட பேசினே… அவங்க வேண்டவே வேண்டாம் பைத்தியக்காரத்தனம் பண்ணிடாதேன்னு எவ்வளவோ கெஞ்சினாங்க… நீ கேட்டியா… உன் புருஷனுக்கு நல்லது செய்யறதா நினைச்சு நீ தேடிக்கிட்ட வினைதானே இது. இப்போ அழுது என்ன பிரயோஜனம்…?’ சாடியது மனசாட்சி.


‘அன்னைக்கு நான் இருந்த நிலைமை வேற… ஆனா.. ஆனா இப்போ நான் அவர் குழந்தையை சுமக்கிறேன்… நான் குறையுள்ளவ கிடையாது… எனக்கு என் மாமு வேணும்…’


‘இதை விட்டுக் கொடுக்கறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்… உன் மாமுவும் மனப்பூர்வமா சம்மதிச்சுட்டாரே… அப்புறம் என்ன…? அதனாலதானே நீ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சும் ஒரு சின்ன சந்தோஷத்தை கூட உன்கிட்ட காட்டிக்காம இருக்கார்… நீதானே விலகணும்னு நினைச்ச… விலகிடு… இப்படி நிலையில்லாத குழப்பமான மனப்பாங்கோட வாழற உன்னை வச்சுக்கிட்டு காலம் பூரா கஷ்டப்பட முடியாதுன்னு முடிவு பண்ணித்தான் உன் மாமு எல்லாத்துக்கும் சம்மதிச்சிருக்கார்… ஒதுங்கிடு…’


விடாது மனசாட்சி மண்டையில் அடித்துக் கொண்டே இருக்க ஒரு கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு மறு கையால் வாயை அழுத்தமாய் மூடி சத்தமின்றி அழுது கொண்டே இருந்தாள். ஆனவரை அழுது ஓய்ந்தவள் ஒரு முடிவுடன் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தாள். கூடத்தில் தரணி இல்லை… நிச்சயம் அறையில்தான் இருப்பான் என்று எண்ணியவளாய் கவருக்குள் அனைத்தையும் மீண்டும் போட்டு மாடி ஏறிச் சென்றாள். தனது அறையிலோ பக்கத்து அறையிலோ அவன் இல்லை… சற்றுத் தள்ளி இருந்த முகிலனின் அறையில் பேச்சுக் குரல் கேட்டது… வேகமாக அங்கு சென்று எட்டிப் பார்க்க மீரா குழந்தையை தொட்டிலிட்டு ஆட்டிக் கொண்டிருக்க முகிலனும் தரணியும் படுக்கையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். தரணியின் முகத்தில் கவலைக்கான சுவடு சிறிதும் இல்லை. மிகவும் சாதாரணமாக இருந்தான்.


“என்ன அம்மு…?” முகிலனின் கேள்விக்கு “இ..இல்ல மாமா நா..நான் சு..சும்மா…” அவர்களின் முன்னிலையில் தரணியிடம் எதையும் வெளிப்படுத்த முடியாது தடுமாறிக் கொண்டிருந்தாள்.


“உன் புருஷன்கூட எதுவும் தனியா பேசணுமா…?” சிரித்தபடி அவன் கேட்க இல்லை என்ற தலையசைத்தபடியே அவள் திரும்பி நடக்க “நில்லு…” என்ற தரணியின் கணீர் குரலில் அப்படியே நின்றாள்.


“இனி எங்களுக்குள்ள தனியா பேசுற அளவுக்கு எதுவும் இல்லடா…” பட்டென பானையை உடைத்திருந்தான் தரணி. முகிலனும் மீராவும் குழப்பமாய் பார்க்க இதற்குள் மணிவாசகமும் மாணிக்கவேலுவும் அறைக்குள் நுழைந்திருந்தனர்.


“என்னப்பா…?” முகிலன் புரியாமல் அவர்களைப் பார்க்க “தரணிதான் முக்கியமான விஷயம் பேசணும் எல்லாரும் மாடிக்கு வாங்கன்னு சொல்லுச்சு… உன் அம்மாவையும் அத்தை அப்பத்தா எல்லாத்தையும் வர சொல்லுச்சு…” என்று மணிவாசகம் கூற மற்றவர்களும் அடுத்தடுத்து உள்ளே நுழைந்தனர்.


“என்னடா தரணி… ஒன்னும் புரியலையே…” அவனிடம் திரும்பி முகிலன் கேட்க பூச்செண்டின் மேல் அழுத்தமாய் பார்வையை பதித்தபடியே அமர்ந்திருந்தவன் “உன் அத்தை பொண்ணுகிட்டயே கேளு… தெளிவா சொல்லுவா…” என்று பதிலளித்தான். வேகமாய் எழுந்து பூச்செண்டின் அருகில் சென்றான் முகிலன். 


பொட்டு பொட்டாய் கண்ணீரை தரையில் உகுத்தபடி நின்றிருந்தவளின் நாடியை பிடித்து நிமிர்த்தியவன் “என்னடி ஆச்சு…? திரும்பவும் ஏதாவது சிக்கலை பண்ணி வச்சிருக்கியா… அவன் ஏதோ விட்டேத்தியா பேசுறான்… நீ அழுதுட்டு நிக்கிற… உனக்கு குழந்தை கிடைச்சிருச்சுன்னு நாங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். ஆனா உங்க ரெண்டு பேரோட முகத்திலும் அந்த சந்தோஷம் இல்லையே… என்னடி நடக்குது…? எதுவா இருந்தாலும் சொல்லு…” பதட்டம் குடி கொண்டிருந்தாலும் அமைதியான குரலில் கேட்டான் முகிலன்.


அவ்ளோ பதில் பேசாது கையில் உள்ள கவரை அழுத்தி பிடித்தபடி நிற்க “என்னடி நடக்குது இங்க… ஒரு எழவும் புரியலையே…” தலையில் கை வைத்துக் கொண்டார் பாட்டி. 


“உன் அத்தை மக கையில ஒரு கவர் இருக்கே… அதை வாங்கி பாரு முகில்… எல்லாமே புரியும்…” வெறுப்புடன் கூறிய தரணியை ஒரு பார்வை பார்த்து அவள் கையில் இருந்த கவரை வாங்கி பிரித்தான் முகிலன். இதற்குள் மீராவும் அருகில் வந்து நின்றிருக்க மற்றவர்களும் குழப்பமும் ஆர்வமுமாய் அங்கேயே பார்வையை பதித்திருந்தனர்.


ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்த்தவனா முகம் இறுகி கண்கள் சிவந்து கோபமாய் பூச்செண்டை பார்த்தவன் “விசித்ராகிட்ட ஃபோர்ஸ் பண்ணி இதெல்லாம் பண்ணச் சொன்னியா…?” பல்லை கடித்தபடி கேட்க அவளும் தயக்கமாய் ஆம் என்று தலையசைத்த அடுத்த நொடி சப் என்று அறையே அதிர அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் முகிலன்.


அடியின் வீரியத்தில் அவள் தடுமாறி விழப்போக அவளை அணைத்து பிடித்துக் கொண்ட பாட்டி “டேய்… காட்டுப்பயலே… புள்ளத்தாச்சி பிள்ளைய இப்படி அடிக்கிறியே… மனுஷனா நீயி… யாத்தே…” அவர் அழத் தொடங்க “என்னைக்காவது நான் இவளை அடிச்சு பாத்திருக்கீங்களா… சொல்லுங்க…” அனைவரிடமும் திரும்பி சத்தமாக கத்தினான்.


அனைவரும் அமைதி காக்க “அவ எந்த மாதிரி ஒரு வேலை பண்ணி இருந்தா அவளை அடிச்சிருப்பேன்…” என்றான் கோபம் தணியாமல்.


“என்னதான்டா பண்ணினா…? சொன்னாத்தானே தெரியும்… யாராச்சும் வெளிப்படையா பேசினாத்தானே புரியும்…” என்றார் செண்பகம். 


இதற்குள் அனைத்தையும் படித்து முடித்திருந்த மீரா “நீ இந்த அளவுக்கு யோசிப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல பூச்செண்டு. அண்ணனை நீ புரிஞ்சு வச்சிருக்கிறது அவ்வளவுதானா…? உன் மனசு இப்படி எல்லாத்தையும் தப்பாவே யோசிக்குதே… இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்ல…” வேதனையுடன் கூறினாள். 


“ஐயோ… இப்ப என்னன்னு சொல்லப் போறீங்களா இல்லையா…?” சத்தமாய் கத்தினார் மாணிக்கவேல்.


அவரிடம் திரும்பிய முகிலன் “உங்க மகளுக்கு விவாகரத்து வேணுமாம்…” அழுத்தமாய் கூற ஐயோ என்று கோரசாய் கூறி அனைவரும் நெஞ்சில் கை வைத்தனர்.


“இன்னும் தெளிவாக தெரியணுமா…?” என்றவன் விசித்ரா கைப்பட எழுதிய கடிதத்தை சத்தமாக வாசித்துக் காட்டி உடன் இருந்த பெண்ணின் புகைப்படத்தையும் அனைவரிடமும் நீட்டினான். தளர்ந்து போய் தரையில் விழுந்த நிலையில் அமர்ந்தார் மல்லிகா. யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று தலையை தரையோடு புதைத்தபடி அழுத நிலையில் நிமிராமல் நின்றிருந்தாள் பூச்செண்டு. அவளை அடிக்க முறுக்கிக் கொண்டு வந்த மாணிக்கவேலை இழுத்துப் பிடித்து தள்ளிச் சென்றார் மணிவாசகம்.


அவள் கர்ப்பவதி என்ற ஒரே காரணத்திற்காக பொறுமையை இழுத்துப் பிடித்து கோபத்தை கண்களில் மட்டும் தேக்கி நின்றிருந்தனர் மற்றவர்கள். சலசலவென ஆளாளுக்கு ஏதேதோ பேசி அழுது சத்தமிட்டு என்று சிறிது நேரம் அந்த இடமே குழப்பமான ஓசைகளுடன் நிறைந்திருக்க “நான் இப்போ பேசலாமா..?” தரணியின் ஆளுமையான எஃகு குரலில் அனைவரும் அமைதி அடைந்து அவன்புறம் திரும்பினர். தொண்டையை செருமிக் கொண்டவன் நிமிர்ந்து அமர்ந்தான்.


“வளவளன்னு பேச வேண்டாம்னு நினைக்கிறேன்… உங்க பொண்ணு ஆசைப்பட்ட விஷயத்தை நான் பண்ணிடலாம்னு இருக்கேன்…” அவன் சொல்ல ஆரம்பிக்க உடனடியாக ஏதோ சொல்ல வந்த முகிலனை வேகமாய் இடைமறித்தவன் “நான் பேசி முடிச்சுடறேன்… அப்ப அவ இருந்த மனநிலை வேற.. இப்போதான் குழந்தை கிடைச்சுடுச்சே.. எல்லாத்தையும் மறந்துடலாம்னு நீ சொல்ல வர்ற… அப்படித்தானே…” முகிலனிடம் கூறியவன் “ஆனா அப்படி என்னால எடுத்துக்க முடியாது…” என்று நிறுத்தி ஆழ்ந்த மூச்செடுத்தான்.


“கணவன் மனைவிக்கு இடையில அடிப்படையான ஆதாரமே நம்பிக்கையும் புரிதலும்தான். அது இல்லாத இடத்துல எத்தனை குழந்தை கிடைச்சாலும் நிம்மதி இருந்திடுமா…? காலம்பூரா என்னை நான் இவகிட்ட நிரூபிச்சுக்கிட்டே வாழணுமா…? அவ மூளை கோக்குமாக்கா எதை வேணாலும் யோசிக்கும்… என்ன வேணாலும் முடிவு எடுக்கும்… தெரியாம பண்ணிட்டான்னு எத்தனை விஷயத்தை நானும் கடந்து போகட்டும்… இத்தனை நாளா குழந்தை கிடைக்காம போனதுக்கு காரணமே இவதான்… தெரியுமா உங்களுக்கு…?” ஆத்திரத்துடன் சத்தமிட்டவன் அன்று மறைத்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி முடித்தான்.


“ஒரு மனுஷன் தப்பு பண்ணினா திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்… வாழ்க்கை பூரா வாய்ப்பு கொடுத்துட்டே இருக்க முடியுமா…? இவ எப்போ என்ன நினைக்கிறா என்ன யோசிப்பா எப்படி நடத்துகுவான்னு ஒவ்வொரு நாளும் திகிலோடவே என்னால வாழ முடியாது… இவ்வளவு நாள் ஒன்னா வாழ்ந்தும் இவ என்னை புரிஞ்சுக்காமதானே இருந்திருக்கா… இனிமேலும் அப்படித்தான் இருப்பா… இப்பவே நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்… இனிமேலும் என்னால முடியாது… அவ மலடி இல்ல… உலகம் அவளை இனி தப்பா பேசாது… அந்த நிம்மதியோட இங்கேயே இருக்கட்டும்… விவாகரத்துக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்… இது அவளோட நிம்மதிக்காக இல்ல… என்னோட நிம்மதிக்காக…” என்றவன் வேகமாக எழுந்து மேஜையில் கிடந்த படிவத்தில் மடமடவென கையெழுத்திட்டு அவள்புறம் நகர்த்தினான்.


“கையெழுத்து போடு… வக்கீல் விசித்ராவோட கசின்தான்… நீ கர்ப்பமா இருந்தாலும் நம்ம ரெண்டு பேருமே மியூச்சுவலா விவாகரத்து வேணும்னு உறுதியா சொல்லும்போது எப்படியும் வாங்கிக் கொடுத்திடுவார்… உனக்காக இல்லைன்னாலும் எனக்காக கையெழுத்து போட்டு பொசுங்கிப் போன என்னோட நிம்மதியை மீட்டுக் கொடு… ப்ளீஸ்…” கண்களில் வலியுடன் கூறியவன் பேனாவை அவள் கையில் திணித்தான்.






Leave a comment


Comments


Related Post