இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 24) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 05-06-2024

Total Views: 13121

உனக்கென்றே உயிர் கொண்டேன் 24

அன்றைய தினம் திருமணத்திற்கு உடை எடுப்பதற்காக இரு வீட்டாரும் கோவையில் பிரசித்தி பெற்ற ஜவுளி கடை ஒன்றில் கூடினர்.

அஸ்வின் மற்றும் பூர்வியிடம் முகூர்த்த ஆடை உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என்றுவிட்டனர்.

"பொண்ணழைப்பு, தாம்பூலம் மாத்த, திருமண முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம்ன்னு நாலு புடவை எடுக்கணும் பூர்வி" என்ற தனம், தேவராஜ் மற்றும் மணியுடன் உறவினர்களுக்கு வைத்து கொடுக்க வேண்டிய ஆடைகளை எடுப்பதற்கு வேறொரு தளம் சென்றனர்.

சண்முகமும், தமிழும் பூர்வி, அஸ்வின் இருந்த தளத்திலே இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க...

வெண்பாவும், வர்ஷினியும் நின்று கொண்டு பார்வையால் அவ்விடத்தை ஆராய்ந்தபடி தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

அகிலாண்டம் தன்னால் அலைச்சல் முடியாதென வராமல் இருக்க... தெய்வானை வேண்டா வெறுப்பாக வந்திருந்தார்.

"ரெண்டு பேரும் என்ன பராக்கு பார்த்துகிட்டு இருக்கீங்க... சட்டுப்புட்டுன்னு எதையாவது எடுங்க? கல்யாணப் பொண்ணே உங்களவுக்கு யோசிக்கல" என்று இரு பெண்களிடமும் வந்தார் தெய்வானை.

"என்ன ட்ரெஸ் எடுக்கலான்னு தின்க் பண்றோம்மா" என்ற வர்ஷினியிடம்,

"விசேஷத்துக்கு புடவை கட்டிக்கிட்டால் தான் அம்சமா இருக்கும்" என்றார் தெய்வானை.

"அப்போ ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை எடுத்துக்கலாம் வெண்பா" என்று வர்ஷி உற்சாகமாக சொல்லிட,

"எதுக்கு... அதெல்லம் ஒன்னும் வேண்டாம். யூனிஃபார்ம் மாதிரி இருக்கும். உனக்கு பிடிச்சதை நீ எடு" என்று வெண்பாவை முறைத்துக்கொண்டே வர்ஷினியிடம் சொல்லியவர், "நான் எனக்கு புடவை பார்க்கப்போறேன். கூட வா. உனக்கும் நானே எடுக்கிறேன்" என்று அவளை கையோடு இழுத்துக்கொண்டு மறுபக்கம் சென்றார்.

வெண்பா தனித்து நிற்க, அவளருகில் தமிழ் வந்தான்.

"கடையை சுத்தி பார்க்க வந்தியா என்ன?"

"தாத்தா எங்க?"

"அவரும் ரிலேட்டிவ்ஸ்க்கு எடுக்கணுமாம். போயிருக்கார்" என்ற தமிழ், "என்ன கன்பியூஷன் உனக்கு?" எனக் கேட்டான்.

"ட்ரெஸ் செலெக்ட் பண்ணதுலாம் இல்லை சீனியர். எப்பவும் அண்ணா தான் எடுப்பாங்க. அண்ணா அண்ணியோட பிஸி. இப்போ கூப்பிட்டால் நல்லாயிருக்காதுல" என்றவள், "நீங்க செலெக்ட் பண்ணி தரீங்களா சீனியர்" என்று ஆர்வமாக வினவினாள்.

"பண்ணிட்டாப்போச்சு" என்ற தமிழ், பட்டு பிரிவில் ஒரு பக்கம் அஸ்வின், பூர்வியும் மறுபக்கம் தெய்வா, வர்ஷியும் பார்த்துக்கொண்டிருக்க,

"நடுவில் தான் காலியா இருக்கு. பார்ப்போம் வா" என்று வெண்பாவை கூட்டிச்சென்றான்.

"சார் இது கல்யாணப்பட்டு. ரேட் கூடுதலா இருக்கும்" என்றார் துணிகளை எடுத்துப்போடும் நபர்.

"இட்ஸ் ஓகே" என்ற தமிழ், மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கால்களை அகட்டி தனக்கு முன் அடுக்கப்பட்டிருந்த பலவிதமான துணிகளில் விழிகளை பத்தித்தவனாக நின்றான்.

நிமிடங்கள் பல கரைந்தது. அவனுடன் நின்றிருந்த வெண்பா இருக்கையில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, தமிழின் கருவிழி அசைவுக்கு ஏற்ப தன் விழிகளை இயக்கிக் கொண்டிருந்தாள்.

"சார் துணி எடுத்து போடட்டுமா?"

தமிழ் எதுவும் சொல்லாது பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க கடை ஊழியர் கேட்டும் அவனிடம் பதிலில்லை.

"சீனியர்..." வெண்பா மெல்ல அழைக்க,

"ஜஸ்ட் வெயிட் மொழி" என்றான் தன்னிலையில் மாற்றமில்லாது.

"இன்னைக்கு சாரீ எடுத்த மாதிரிதான்" என்ற வெண்பா, வர்ஷியை ஏறிட, அவ்ளோ தெய்வா காட்டும் அனைத்து துணிகளுக்கும் சரியென மண்டையை உருட்டிக் கொண்டிருந்தாள்.

'வர்ஷிக்கும் இதில் ஒன்றை எடுப்போம்' என நினைத்துக்கொண்ட வெண்பா,

அஸ்வினை பார்க்க, அவனோ மும்முரமாக புடவைகளை ஆராய்ந்து கொண்டிருக்க, பூர்வி அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

'அண்ணா செலக்ஷன் எப்பவும் சூப்பரா தான் இருக்கும்' என்று மீண்டும் தமிழிடமே நிலைத்துவிட்டாள்.

"சார் அரை மணியாச்சு. இன்னும் ஒரு புடவையை கூட நீங்க பார்க்கல." தமிழ் அது இதென பலவற்றை எடுத்துப்போட சொல்லியிருந்தாலும் இந்த சலிப்பு அவருக்கு வந்திருக்காதோ?

"பார்த்துட்டு தான் இருக்கேன்" என்ற தமிழிடம் அதன் பின்னர் வார்த்தைகள் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு ஒருவர் குளிர்பானம் கொடுத்துக் கொண்டிருக்க...

"அண்ணா" என்று அருகில் அழைத்த வெண்பா ஒன்றை கையிலெடுக்க, அதனை வாங்கி அவரது ட்ரெயிலே வைத்த தமிழ், "நோ, தேன்க்ஸ்" என்று அவரை அனுப்பி வைத்தான்.

"அது ஃபிரெஷ் ஜூஸ் கிடையாது" என்றவன், தன் பாக்கெட்டிலிருந்து வாட்டர்மெலன் கேண்டி எடுத்து கொடுத்தான்.

"நீங்களும் வாட்டர்மெலன் அடிக்ட் ஆகிட்டீங்களா?" கேட்டவள் வாயில் போட்டு சுவைத்தாள்.

"உனக்காக வாங்கியது."

வெண்பாவினுள் அவளுக்கான அவனது சிறு செயலும் சிலிர்க்க வைத்தது.

மேலும் சில நிமிடங்கள் கடந்திருக்க,

"எனக்கு முடிஞ்சுது" என்று வந்தாள் பூர்வி அஸ்வினுடன்.

"சீனியர் கல்யாணப்பொண்ணே புடவை எடுத்துட்டாங்களாம்!"

அவள் சொல்லிய தோரணையில் கடை ஊழியரே சிரித்துவிட்டார்.

"தமிழ் உனக்கு புடவை எடுக்கத் தெரியுமா தெரியாதா?" அஸ்வின் கேலி செய்ய, "உங்களுக்கு இன்னும் ட்ரெஸ் எடுக்கலை தானே... போய் அந்த வேலையை பாருங்க. ஃபோர்த் ஃப்ளோர்" என்று அனுப்பி வைத்தான்.

"மாமான்னு மரியாதையே இல்லை." செல்லும் அஸ்வினின் முணுமுணுப்பு செவி தீண்டிட, சன்னமாக புன்னகைத்துக் கொண்டான் தமிழ். அதே புன்னகை தான் அஸ்வினிடமும். இருவரின் புரிதலும் மற்றவர்களுக்கு ஆச்சரியம் தான்.

தெய்வானை அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அவரால் தமிழ் வெண்பாவிடம் காட்டும் நெருக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.

"அவளுக்கு இவன் எதுக்கு எடுத்துக் கொடுக்கணும்?"

வர்ஷினிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. 

திருத்திருத்தபடி... "சும்மா செலெக்ட் பண்ணுவதில் என்னம்மா இருக்கப்போகுது" என்று சொல்ல அவளின் தலையிலே கொட்டினார் தெய்வானை.

"ஏமாந்து நிக்காதடி" என்ற தெய்வானை, "நானும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். தமிழு அவகிட்ட மட்டும் வேற மாதிரி நடந்துக்கிறான்" என்றார்.

"உன் கண்ணுக்குத்தான் எல்லாம் தெரியும். போம்மா" என்ற வர்ஷி, "முதலில் புடவையை எடும்மா" என்று கடுப்பாகக் கூறினாள்.

"சார் இன்னைக்குள்ள புடவை எடுத்திடுவாரா?" ஊழியர் வெண்பாவிடம் கேட்க,

"சீனியர் அவர் உங்களை கிண்டல் செய்யுறார்" என்றாள் வெண்பா.

அதனையெல்லாம் தமிழ் கண்டுகொள்ளவே இல்லை.

மேலும் சில மணித்துளிகள் செலவழித்தவன், புடவை ஒன்றை சுட்டிக்காட்டி...

"எடுங்க" என்றான்.

ஊழியர் தமிழ் காட்டிய புடவையை எடுத்து விரித்து காண்பிக்க, வெண்பாவின் இமை குடைகள் அகல விரிந்தது.

"வாவ் சீனியர்..."

இளஞ்சிவப்பு நிறத்தில், பிஸ்தா பச்சை வர்ண கரையிட்டு, வெள்ளி சரிகை இழைத்த பட்டு புடவை. மார்பு பட்டையில் ஒற்றை மயில் நீண்ட தோகையில் அதற்கேற்ற பச்சை, நீல வண்ணத்தில் கண்களை பறித்தது.

"உனக்கு ஓகேவா?" என வெண்பாவை கேட்ட தமிழ், அவளின் பார்வை புரிந்து "பில்லிங் அனுப்பிடுங்க" என்றான்.

"எப்படி பாஸ்? அண்ணிக்கு செலெக்ட் பண்ணி பழக்கமோ?"

இல்லையென தலையசைத்து "நான் முதன் முதலில் செலெக்ட் செய்தது உனக்குத்தான்" என்றான்.

"அப்படியே வர்ஷிக்கும் ஒன்னு பாருங்க சீனியர். உங்க அத்தை காட்டுவது எதுவும் அவளுக்கு பிடிக்கல நினைக்கிறேன்" என்றாள்.

வெண்பாவை அழுத்தமாக பார்த்த தமிழ்,

"நான் புடவை செலெக்ட் பண்ணணும்னா... அந்த பொண்ணு எனக்கு மட்டுமே உரிமை உள்ளவளா இருக்கணும்" என்ற தமிழ் அலைப்பேசி அழைப்பில் தள்ளிச் சென்றான்.

"என்ன சொல்லிட்டு போறாங்க!  இப்போ எனக்கு எடுத்தது? அப்போ நான் அவங்களுக்கு..." யோசித்து புரிந்த ஒன்றில் இன்பமாய் தமிழை திரும்பி பார்த்தாள்.

'புரிஞ்சிடுச்சுப்போல.' பேசிக்கொண்டிருந்தவன் அவளின் முகம் வைத்தே கண்டு கொண்டிருந்தான்.

"மாமா கூப்பிடுறார்" என்றவன் அஸ்வின் இருக்கும் தளம் செல்ல, அவளும் அவனை தொடர்ந்தாள்.

அதன் பின்னர் எடுக்க வேண்டிய துணிகள் எடுத்து முடிய நகைக்கடைக்கு சென்றனர்.

"தாலி கல்யாண பக்கத்துல நல்ல நாள் பார்த்து செய்திடலாம். இப்போ மத்ததுக்கு போட வேண்டியதை வாங்குவோம்" என்று தனம் சொல்ல, அனைவரும் பூர்விக்கு நகை தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்து போயினர். தெய்வானை கூட பூர்விக்கு இது நல்லாயிருக்கும் அது நல்ல பொருத்தமென ஆர்வமாக ஈடுபட்டார்.

வர்ஷினி தெய்வானைக்கு தெரியாது மணியுடன் தனக்கு ஆரம் வேண்டுமென தனியாக சென்று பார்த்துக்கொண்டிருக்க, தேவராஜ் மற்றும் சண்முகம் பேச்சில் மூழ்கிப்போயினர்.

மற்றவர்களின் தேர்வை பார்வையிட்டுக் கொண்டிருந்த தமிழின் அருகில் வந்த வெண்பா...

"நீங்க அப்போ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?" எனக் கேட்டாள். மெல்லொலியில்.

"என்ன அர்த்தம்?" அவளையே திருப்பிக் கேட்டான். கன்னக்கதுப்பில் ஒளித்த புன்னகையோடு.

"அதை நீங்க தான் சொல்லணும்?"

"உனக்கு புரியலையா?"

இதற்கு அவள் என்ன பதில் சொல்வதாம். எது சொன்னாலும் அவன் மடக்கி அவளையே அல்லவா பதில் கேட்பான்.

"நான் உங்களை எதுவுமே கேட்கல!" என்றவள் தன்னுடைய அலைபேசியில் தனக்கு வந்த மின்னஞ்சலை காண்பித்தாள்.

"கங்கிராட்ஸ் ஜூனியர்!" என்று மின்னஞ்சலில் அவள் வேலையில் சேர்வதற்காக வந்திருந்த தகவலை படித்துவிட்டு வாழ்த்தியவன், "எப்போ வந்துச்சு?" எனக் கேட்டான்.

"ஒன் ஹவர் முன்னாடி. இப்போ கொஞ்ச முன்பு தான் பார்த்தேன்" என்றாள்.

"ம்ம்ம்ம்... பெரியாளாகிட்டிங்க. வேலைக்கெல்லாம் போகப்போறீங்க ட்ரீட் இல்லையா?" எனக் கேட்டவன், அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

"போங்க சீனியர்... நானே உங்களை பீட் பண்ண முடியாம போச்சேன்னு பீல் பன்றேன். உங்களுக்கு ட்ரீட் வேணுமா?" என முகம் சுருக்கினாள்.

இரு தினங்களுக்கு முன்பு தான் வெண்பாவுக்கு தேர்வு முடிவுகள் வந்திருந்தன. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழின் மதிப்பை முன்னேற முடியாது தவரவிட்டிருந்தால். அன்று அவளின் புலம்பல் கேட்டு தமிழின் செவிகளே கதறிவிட்டன.

"நீ, நான் அப்படின்னு தனித்தனியா பார்த்தா தான் இந்த போட்டியெல்லாம்" என்றவனின் கண்களை அவள் தன் விழிகளோடு சந்திக்க...

"நாம் என்று நினை..." என்று அவளின் பார்வையோடு உறவாடிட மொழிந்தான்.

"என்னவோ சொல்ல ட்ரை பண்றீங்க. எனக்கும் புரியுது. நான் சொல்லி அதில்லைன்னு சொல்லிடுவீங்களோன்னும் பயமா இருக்கு" என்ற வெண்பா, "என்னன்னு நீங்களே சொல்லிடுங்களேன்" என்றாள்.

"சொல்லணும்... சொல்லி ஆகணுமே" என்ற தமிழ் சுற்றி பார்த்துக்கொண்டே தன் இதயத்தில் கை வைத்து விரல்களால் தட்டிக் கொண்டான்.

"வெண்பா..." பூர்வி கூப்பிட்டத்தில் அடுத்து பேசிட முடியாது அவளின் கவனம் அங்கு சென்றது.

'நான் இல்லைன்னு சொல்லிடுவேன்னு உனக்கு தோணுதா மொழி?' பூர்வி காட்டிய நகையை பார்த்துக்கொண்டிருந்த வெண்பா ஒரு நொடி தமிழை பார்த்து திரும்பினாள்.

வெண்பாவின் அப்பார்வையை கவனித்த தெய்வானைக்கு ஏதோவொன்று புலப்பட, தமிழை ஏறிட்டார். அவன் சுற்றம் மறந்து தன்னவளின் மீதே விழி பதித்திருக்க, மனதில் பேயாட்டம் போட்டார்.

'நடக்கக்கூடாதுன்னு நினைப்பது நடந்திடும் போலிருக்கே!' என தனக்குத்தானே சொல்லிக்கொண்ட தெய்வானை அடுத்து இருவரையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். இருவரும் சாதரணமாக பேசிக்கொண்டாலும் மனதில் வேறொன்றை நினைத்து பயந்தார்.

தன் ஆசைக்கு வெண்பா குறுக்கே வந்துவிடுவாள் என்று ஐயம் கொண்டவர், சற்றும் காலத்தை தாமதிக்கக் கூடாதென முடிவெடுத்தார்.

வர்ஷினியை எங்கென்று பார்த்தார்.

அவளோ மணியுடன் சிரித்தபடி தன் கழுத்தில் ஆரத்தை வைத்து அவருக்கு காட்டிக்கொண்டிருக்க...

"இது தேறாது! இவளை நம்பினால் அவ்வளவு தான்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

"அண்ணி உங்களுக்கு எதும் வாங்கலையா?" 

பூர்விக்கு எல்லாம் எடுத்து முடிய தெய்வானையிடம் கேட்டார் தனம். பின்னே வீட்டிற்கு வந்த பின்னர் தனக்கோ தன்னுடைய மகளுக்கோ எதுவும் வாங்கவில்லையென ஒரு ஆட்டம் ஆடிவிடுவாரே!

"எனக்கு எதுக்கு?" என்ற தெய்வானை, "நான் வேணுங்கிறதை கேட்கும்போது மறுக்காமல் கொடுத்தால் போதும்" என நகர்ந்தார்.

தெய்வானை தமிழை மனதில் வைத்து சொல்ல, அவரின் வார்த்தையின் உட்பொருள் தனத்திற்கு கிஞ்சித்திக்கும் விளங்கவில்லை.

"என்னம்மா அப்படியே நிக்குறீங்க?"

"உன் அத்தை என்னமோ சொன்னாங்க தமிழ், புரியல" என்றார் கேட்ட மகனிடம்.

"நிச்சயம் நல்லதா எதுவும் இருக்காது. ரொம்ப யோசித்து குழப்பிக்காதீங்க" என்ற தமிழ், "எல்லாரும் கிளம்பியாச்சு. அப்பா கூப்பிடுறார் வாங்க" என்று அழைக்க,

"தமிழ்..." என பூர்வி அவனை அழைத்திருந்தாள்.

"என்ன பூர்வி?"

"ஒரு செல்ஃபி'டா" என்றவளின் அருகில் அஸ்வின் நிற்க, மற்றைய புறம் வெண்பா நின்றிருந்தாள்.

மூவருமே தமிழ் வெண்பாவின் அருகில் தான் சென்று நிற்பானென எதிர்பார்க்க, அவனோ அஸ்வினின் பக்கம் சென்று நின்றான்.

பூர்வி அவனை அர்த்தமாக ஏறிட, அவனோ தோள்களை உயர்த்தி இறக்கினான்.

"வர்ஷி..." வெண்பா அழைத்திட அவளும் அவர்களுடன் இணைய அக்காட்சி அஸ்வினால் அலைப்பேசியில் நிழலுருவம் பெற்றது.

"என்னோட நிக்கமாட்டிங்களோ?" மற்றவர்கள் கலைய தமிழிடம் கேட்டிருந்தாள் வெண்பா.

"நேரம் வரும்" என்று கூறியவன் அவளிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.

அனைவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கிளம்ப, தெய்வானை தமிழ் இறுதியாக வெண்பாவிடம் இதழோரப் புன்னகையுடன் என்ன பேசினான் என்ற யோசனையோடே வீடு வந்தார்.

"ஒரு பெரும் வேலை முடிந்தது" என்ற தனம், "எல்லாத்துக்கும் சட்டை தைய்க்க கொடுத்திடு பூர்வி. நெருக்கத்துல கொடுத்து புலம்பிட்டு இருக்காதே" என்றார்.

"சரிம்மா" என்ற பூர்வியிடம், வாங்கிய அனைத்தையும் அகிலாண்டத்திடம் காட்டும்படி கண்காட்டினார் தனம்.

வர்ஷி அழைத்தற்காக மணி வழியில் இறங்காது, தேவராஜ் வீடு வந்திருந்தார்.

"தண்ணி கொடுத்தா" என்று தேவராஜ் அமர, அவருடன் மணியும் அமர்ந்தார்.

அகிலாண்டம் கூடத்தில் சற்று தள்ளி அமர்ந்திருக்க, அவரிடம் புடவை மற்றும் நகைகளை பூர்வி காட்டிக்கொண்டிருந்தாள். உடன் வர்ஷி.

தனம் வெயிலின் அலைச்சலுக்கு ஏதுவாக மோர் கொண்டு வந்து கொடுக்க, ஒரே மூச்சில் வாங்கி பருகிய தமிழ் தனது அறைக்கு செல்ல மாடி படிகளில் அடி வைத்தான்.

அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்த தெய்வானை...

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அண்ணா" என்றார்.

அவரின் அண்ணா என்ற விளிப்பையே தேவராஜ் அதிசயம் போல் தான் வியந்தார்.

"என்ன அண்ணி?" கணவருக்கு தெய்வானையின் பேச்சு பிடிக்காது என்பதால் தனம் முன்வந்து கேட்டார்.

"உனக்கென்ன காது செவிடா? நான் என் அண்ணகிட்ட பேசணும் தெளிவாத்தானே சொன்னேன்?" என்று தனத்தை ஓரங்கட்டினார் தெய்வானை.

தெய்வானை தேவராஜிடம் பேச வேண்டுமென சொல்லியதுமே நடயை மெல்ல வைத்த தமிழ், அவர் தனத்தை கடிந்ததும் மேல் வைத்த பாத அடிகளை கீழ் வைத்து தெய்வானைக்கு எதிரே இருந்த ஒற்றை கதிரையில் வந்தமர்ந்தான்.

அவனது பார்வையே என்ன பேச வேண்டுமோ பேசுங்க எனும் விதமாக இருந்தது.

தெய்வானைக்கு தமிழென்றால் சிறு அச்சம் தான். அவன் முன்பு அவரின் அதிகாரமெல்லாம் செல்லுபடியாகாது என்கிற பயம் அது. இருப்பினும் தன்னுடைய கெத்தினை விட்டுக்கொடுத்திடாது அவனுக்கு இணையான பார்வை பார்த்தார்.

"எல்லாருமோ சோர்வா இருக்காங்க. பின்னர் பேசலாம்" என்று தேவராஜ் கூறினார். அவருக்கு மகன் வந்தமர்ந்த தோரணையே இன்று எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என அவன் சொல்லாமல் சொல்லியது போலிருக்க... தேவையில்லா சலசலப்பு எதற்கென அந்நேரம் அதனை தடுக்க முயன்றார். ஆனால் தெய்வானை தான் பேச வந்ததை பேசியே ஆக வேண்டுமென அடமாக இருக்க... தேவராஜ் என்னவென்று செவி மடுக்கத் தயாராகினார்.

அகிலாண்டத்தின் கவனம் தங்கள் மீதில்லை என்பதை தாமதமாக உணர்ந்த பூர்வியும், வர்ஷியும் அவரின் பார்வை சென்ற திசையில் திரும்பி பார்க்க... 

"இருக்கு... இன்னைக்கு பெரும் சம்பவம் ஒன்னு இருக்கு" என்று வர்ஷி கூறினாள்.

"என்ன பாட்டி அப்படி பார்க்குறீங்க?"

அகிலாண்டத்தின் அசையா நிலை கண்டு பூர்வி வினவிட,

தன்னுடைய மகளின் தற்போதைய பேச்சு எதைப்பற்றியென யூகித்திருந்த அகிலாண்டம்... "உன் அத்தை சலங்கையே இல்லாமல் ஆடப்போகிறாள்" என்றார்.

"விசயம் ரொம்ப பெருசோ?" பூர்வி ஆர்வமாகக் கேட்டிட...

"ம்ம்ம்... ரொம்பஆஆஆஆ" என்று இழுத்தார் அகிலாண்டம்.

"அவள் இதைப்பற்றி பேசுமுன்ன நான் அவளிடம் பேசிடணும் இருந்தேன். உன் கல்யாணம் முடியும் வரை பொறுமையா இருப்பான்னு நினைச்சேன்" என்றவர், "என்னைக்கா இருந்தாலும் இதுக்காக இரு வாக்குவாதம் நடந்துதான் ஆகும். அது இப்போவே எதுக்குன்னு பார்த்தேன்" என்றதோடு, "உண்மை தெரிந்ததும் உன் அத்தை என்ன பேச்செல்லாம் பேசப்போகிறாளோ?!" என்றார்.

"பில்டப் ஓவரா இருக்கே!"

பூர்வி பார்க்க மட்டுமே செய்தார் அகிலாண்டம். அந்நேரம் தெய்வானை தான் பேச வந்ததை பேசிட, பூர்வி வேகமாக தமிழின் எதிவினை என்னவென்று அவனைத்தான் ஏறிட்டாள்.


Leave a comment


Comments 1

  • A Aathi Sri
  • 4 weeks ago

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr waiting for next ud 👌👌👌👌👍

  • P PMKK024 @Writer
  • 4 weeks ago

    Thank you so much


    Related Post